Sunday, November 10, 2013

பேதி மருந்து

மூன்று நாட்கள் தொடர்ச்சியாகப் பள்ளிக்கு விடுமுறையிருந்தால் வீட்டில் கட்டாயம் இந்த உரையாடல் நடக்கும்.

"என்னங்கடா...... எதுவும் படிக்க, எழுத வேண்டியது எதுவும் இல்லையா?" என்று கேட்டால் சட்டென்று மூவரும் ஒரே குரலில் சொல்வார்கள்.

"கிளாஸ் டெஸ்ட் எதுவும் இல்லப்பா"

அன்றும் இன்றும் மாணவர்களைப் பரிட்சைகள் தான் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.

என்னுடன் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த ஒருவனுக்குப் பரிட்சை என்றால் காய்ச்சல் வந்து விடும். மற்றப் பரிட்சைகளில் கண்டு கொள்ளாத ஆசிரியர்கள் காலாண்டு அரையாண்டு சமயத்தில் இழுத்து வந்து உட்கார வைத்து விடுவார்கள். பரிட்சைத்தாளில் ஏதாவது எழுதி வை என்பார்கள்.

‘ஆல் பாஸ்‘ என்கிற ரீதியில் வந்தவன் பத்தாம் வகுப்பில் ஓடியே போய்விட்டான். மாறிய உலகில் இன்னமும் மாறாமல் நமது கல்வித்திட்டம் இப்படித்தான் இருக்கின்றது.

சமீப காலமாகத்தான் தனியார் பள்ளிக்கூடங்களில் பத்தாம் வகுப்பில் முழுமையான தேர்ச்சி போய்விடும் என்ற பயத்தால் கழித்துக் கட்டி வெளியேற்றுவதும் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கின்றது.

+2வகுப்பை எளிதாக ஊதித்தள்ளி கல்லூரிக்குள் நுழைந்தவரா? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம்?தினந்தோறும் பாடங்களை ஆர்வத்துடன் தான் படித்தேன் என்று?

ஆம் என்றால் நீங்கள் கடைசி ஐந்து சதவிகித மாணவர்களில் ஒருவராக இருக்கக்கூடும். நாம் பார்க்கப் போவது மீதி உள்ள 95 சதவிகித மாணவர்களைப் பற்றியே. இந்த 95 ல் நானும் ஒருவன்.

என் குழந்தைகளும் அப்படி இருந்து விடக்கூடாது என்பதற்காகப் பாடத்திற்கு அப்பால் உள்ள விசயங்களைப் பல முறை அவர்களுடன் உரையாடுவதுண்டு. நக்கலாய், நையாண்டியுடன் ஜாலியாய் பேசுவதுண்டு. சுற்றி வளைத்துப் பாடம் சொல்லும் கருத்தை மெல்ல அவர்களுக்குள் புகுத்துவதுண்டு.
படம் கூகுள் ப்ளஸ் சைதை அஜீஸ்
மாறாத ஆசிரியர்களைப் போல நம் பாடத்திட்டங்களும் மாறவில்லை.இங்கே சாபங்கள் தான் மாணவர்களுக்கு வரமாக உள்ளது. இதற்குள் நின்று கொண்டு சிறப்பான தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே இங்கே எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. பிரகாசமென்பது உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடிய துறைக்குச் செல்லக்கூடிய படிப்பில் சேர உதவுவது.

நான் படித்த போது தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், வரலாறு என ஐந்தே பாடங்கள். அறிவியல் பாடத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல். இது தவிர வரலாறு பாடத்தில் தனியாகப் புவியியல். இன்று பாடத்திட்டங்களின் தன்மை மாறியுள்ளது. ஆனால் அதே பழைய கள். ஆனால் ஒழுகும் குப்பிகள்.

பள்ளிக்கூடங்களில் தமிழ்ப்பாடங்களை வெறுத்தவர் எவருமே இருந்திருக்க மாட்டார்கள். நிச்சயம் ஒவ்வொரு தமிழாசிரியர்களும் நல்ல கதை சொல்லிகளாகத்தான் இருந்துருப்பார்கள்.

வரலாற்றுச் சம்பவங்களில் சுவராசியம் இருந்ததோ இல்லையோ, ஆனால் வரலாற்றுப்பாடத்தை நடத்திய ஆசிரியர் சம்பவங்களைத் தொடர்பு படுத்தி ஆர்வமுடன் சொல்லத் தெரிந்திருந்தால் சில சமயம் சுவராசியமாக இருந்துருக்க வாய்ப்புண்டு.

அறிவியலின் மாற்றங்களை உணராதவர்களும், கணக்கு என்பதைக் கல்லில் உரிக்கும் நாறாக மாற்றியவர்களையும் வைத்துப் படித்த பாடங்கள் எதுவும் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டியிருக்கும் என்றா நம்புகின்றீர்கள்.

ஆங்கில வகுப்பு என்பது பேதி வர வைப்பது.

ஷேக்ஸ்பியரைப் பற்றி நடத்தும் போதெல்லாம் டூரிங் டாக்ஸியில் பார்த்த பழைய படங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தது தான் இப்போது நினைவிற்கு வருகின்றது. ஆங்கில இலக்கணமென்பது ஆலகால விஷமாகத் தான் நடத்தியவர்கள் புரியவைத்தார்கள்.

மொத்தத்தில் பத்து மாத கஞ்சியை ஊற வைத்து ஊட்டி விட்டால் எப்படியிருக்கும்? இப்போதும் அப்படித்தான் இருக்கின்றது.

இந்திய தொழில் நுட்பத்தின் சாதனையான செவ்வாய்க்கு ஏவப்பட்ட மங்கள்யான் குறித்து மாணவர்கள் தங்கள் பாடங்களில் படிக்க இன்னும் ஐந்து வருடங்கள் ஆகலாம்.

பாடத்திட்டத்தை எழுதும் ஆசிரியருக்கு அது குறித்து எந்த அளவுக்குத் தெரிகின்றது என்பதை விட அதை எப்படி மாணவர்களுக்குப் புரிய வைப்பது? எதையெல்லாம் சுட்டிக்காட்ட வேண்டும் என்ற சுருக்கத்தில் உணர வாய்ப்பில்லாமல் தயாரிக்கும் போது அதுவும் மதிப்பெண்களுக்ககாகத் தயாரிக்கப்பட்ட பட்சணம் போலத்தான் இருக்கும். ஐந்து அல்லது பத்து மதிப்பெண்களின் இந்தச் சாதனைகள் மனப்பாடத்தில் மறந்தே போய்விடும்.

இதே தவறுகள் தான் இங்கே 25 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றது.

கல்வித்துறை, திட்டங்கள், அதிகாரிகள், வல்லுனர்கள், விற்பனர்கள் என்ற ஏராளமான படைபட்டாளங்கள் இங்குண்டு.ஆனால் இறுதியில் மாணவர்களுக்கு மிஞ்சுவது எரிச்சலும் ஏமாற்றமும் மட்டுமே.

மூன்று நாட்கள் விடுமுறை விட்டாலும் புத்தகப்பைகள் ஏதோவொரு மூலையில் அனாதை போலத்தான் வீட்டில் கிடக்கும். தினந்தோறும் வகுப்பில் வைக்கும் பரிட்சைகளும், பொதுத் தேர்வுகளுக்கும் பயந்தே தான் இங்கே குழந்தைகள் படிக்கின்றார்கள்.

பாடத்திற்கு அப்பால் உள்ள தேடல்களை எந்தப் பாடமும் சொல்லித் தருவதில்லை என்பதை விட அது குறித்த புரிதல்களும் ஆசிரியர்களுக்கே இருப்பதில்லை.

ஆசிரியர்களைக் கேட்டால் ‘எங்கள் சுமை உங்களுக்குப் புரிவதில்லை‘ என்கிறார்கள்.

புத்தகத்தை வைத்தே எழுதும் தேர்வுகளை வெளிநாட்டில் வைத்திருப்பது போல இங்கே பிட் வைத்து எழுதும் ‘தன்முனைப்பு‘ மாணவர்களை நம் கல்வித்திட்டம் தந்துள்ளது. தேர்வு என்ற பெயரில் பயத்தை உருவாக்கி, அதையே வளர்த்து பள்ளிப் பாடங்கள் என்றால் பயம் என்கிற நிலைமைக்கு வளர்ந்துள்ளோம்.

மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களுக்கு அவர்களின் தரம் குறித்து அறிய தேர்வு என்றால் தேறியவர்கள் எத்தனை பேர்கள்? எத்தனை எதிர்ப்பு உருவானது? அவர்களின் தேர்ச்சி சதவிகிதத்தைப் பார்த்த பிறகு தான் நம்முடைய ஆசிரியர்களின் உண்மையான தரமே புரிகின்றது.

இவர்கள் தான் தரமான மாணவர்களை உருவாக்க வரி கட்டும் அளவுக்கு மாத ஊதியம் பெற்று உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தொடரின் மற்ற பதிவுகள்

போரும் அமைதியும்

மதிப்பெண்கள் என்றொரு கிரீடம்

கழிவாகிப் போகின்றோமா?

தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றார்

மொழியே உன் ஆயுள் ரேகை உச்சமா?

9 comments:

saidaiazeez.blogspot.in said...

நல்லா படிச்சா நல்ல வேலை கிடைக்கும்.
நல்லா படிக்கலேன்னா, பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நிறுவனம் கிடைக்கும்.
பள்ளின்னா பயம் ஏற்பட முக்கிய காரணம் வீடுதான் என்பது என்னுடைய கருத்து.
குழந்தை இரண்டு வயதை அடைந்தவுடன் அது செய்யும் சூட்டிகையை புரிந்துக்கொள்ளாமல் பெற்றோர் சொல்லுவது "இரு இரு... இப்படியே பண்ணிக்கிட்டுயிரு, அடுத்த வருஷம் உன்ன ஸ்கூல்லே சேர்த்துவிட்டுர்ரேன். அங்கே டீச்சர் பின்னி எடுத்துடுவாங்க இப்படியெல்லாம் செஞ்சா"
அல்லது
"இரு நாளைக்கு உங்க ஸ்கூலுக்கு வந்து டீச்சர்கிட்டே நீ செய்றதை சொல்றேன்"
இப்படி சொல்லும்போதே அக்குழந்தைக்கு பள்ளி என்பது ஏதோ போகக்கூடாத இடம் போன்றும் டீச்சர் என்பது ராக்ஷஷன்/ஷி என்றும் மிரண்டுவிடுகின்றனர்.
இப்படி உள்ளே ஏன் வந்தோம் என்றே தெரியாமல் வந்துவிட்டு, பின்னர் புரியும் காலத்தில் மார்க் எனும் ஒரு வேதனையை அனுபவித்து, வெளியில் வந்து பார்த்தால், சொல்லித்தந்த வாத்தியாரே சொன்னதற்கு எதிர்மறையா வாழறாரே என்பதை அறிந்து, ஓ நாம் படித்ததே வேஸ்ட் போல என்ற எண்ணம் மேலோங்கும் போது மீண்டும் வீட்டில் பெற்றோர் "இவன பெத்ததுக்கு ஒரு செங்கல்ல பெத்திருந்தால் வீடு கட்டவாவது பிரயோஜனம் ஆகியிருக்கும்" என்பதை கேட்கும்போது...
ஓ எல்லாமே வணிகமாகிவிட்டது!!!!

ராஜி said...

பத்தாவது வகுப்பு கணக்கு பாடத்துல 80 மார்க் எடுத்த என்னை, 12வதுல 73மார்க் எடுத்து ஜஸ்ட் பாசாக்கின பெருமை என் நசீமா டீச்சரையே சாரும். கணக்கு பாடத்தை விரும்பி படித்த என்னை ஓவர் டாமினேஷன் பண்ணி இப்படியாக்கிட்டாங்க.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தற்போது கல்வித் திட்டத்தில் பயன்படுத்தப் படும் செயல்வழிக் கல்வி, படைப்பாற்றல் கல்வி, முழுமை மற்றும் தொடர் மதிப்பீடு முறை மிகவும் அற்புதமானது. இதன் பயனை அனுபைக்க நாம் விரும்பி சேர்க்கும் தனியார் பள்ளிகள் தயாராக இல்லை. குடும்ப சூழல் காரணமாக பள்ளிக்கு சரியாக வாராத,பெற்றோரின் அக்கறை சிறிதும் இல்லாத பிள்ளைகள் படிக்கும் அரசு / உதவி பெறும் பள்ளகளில்தான் இந்த முறை பயன் படுத்தப் படுத்தப் படுகிறது. மாற்றுக் கல்வி முறை வேண்டும் என்று சொல்கிறார்களே தவிர மிக சிறப்பான கல்வி முறையை எந்த வல்லுனர்களாலும் வகுத்துக் கொடுக்க முடியவில்லை. . வேலை வாய்ப்புக்காக கல்வி என்ற நிலையே இதற்கு காரணம் . வெறும் அறிவுத் தேடல் வாழ்க்கையில் பயனளிக்காது என்று சமூகமும் பெற்றோரும் நம்புவதும் இன்னொரு காரணமாகும், கல்வி என்பது ஆசிரியர்கள் மட்டுமே தருவது என்பது பலரின் எண்ணம். தகுதித் தேர்வு மட்டும் ஆசிரியர்களின் தரத்தை நிர்ணயித்து விடும் என்பதும் சரியானதல்ல. குழந்தை உளவியலை பற்றிய கேள்விகளுக்கு சரியான பதிலை தேர்ச்சி பெற்ற ஆசிரியர் அவற்றை வகுப்பறையில் பின்பற்றுவார் என்பதும் கூற இயலாது. இன்னும் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் பல உள்ளன.இதைப் பற்றி எழுதவேண்டும் என்று பல நாட்களாக நினைத்து வருகிறேன். சோம்பல் காரணமாக எழுத முடியவில்லை.

”தளிர் சுரேஷ்” said...

நானும் 95 சதவீதத்தில் ஒருவன் தான்! இப்போதைய சமச்சீர் கல்வி முறை கொஞ்சம் மாறியுள்ளது! ஆனாலும் இந்த கல்வி முறை வெறும் சக்கையாக சாறில்லாமல் இருப்பதாகவே எனக்குத்தோன்றுகிறது! எட்டாம் வகுப்பு வரை செய்முறைகளுக்கு 40 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது! செய்முறையில் அனைத்து மாணவர்களும் அரைத்த மாவையே அரைக்கிறார்கள். தமிழ் அறிஞர்களை பற்றி எழுது என்றால் எல்லோருமே வள்ளுவர், பாரதியார், கம்பன், என்று ஒரே மாதிரியாக எழுதி வெட்டி ஒட்டுகிறார்கள். நம் கல்வி முறை இன்னும் மாற வேண்டும்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

ஜோதிஜி said...

எப்படி பதில் எழுதுவது என்று திகைக்க வைத்த விமர்சனமிது அஜிஸ். ஆனால் இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று.

யாரை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு நாம் வாழ வேண்டும் என்று இங்கே யோசித்துப் பார்த்தால் மிஞ்சுவது எதுவுமே இல்லை.

ஜோதிஜி said...

ஒவ்வொரு பள்ளியிலும் இது போன்ற சைக்கோ ஆசிரியர்கள் நிறையவே உண்டு. இன்று இதன் பரிணாமம் வேறு விதமாக மாறியுள்ளது.

ஜோதிஜி said...

குழந்தை உளவியலை பற்றிய கேள்விகளுக்கு சரியான பதிலை தேர்ச்சி பெற்ற ஆசிரியர் அவற்றை வகுப்பறையில் பின்பற்றுவார் என்பதும் கூற இயலாது. இன்னும் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் பல உள்ளன

உங்களைப் போன்ற ஆசிரியர்கள் நினைத்தால் நிஜ விசயங்களை தற்போது எதார்த்தமாக என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதைப் பற்றி நிறையவே எழுத முடியும்.

ஜோதிஜி said...

தமிழிலில் பி.ஹெச்டி செய்பவர்கள் கூட கடமைக்காகத்தான் இன்று செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று ஒரு பிரபல கல்வியாளர் சொல்லிய ஒரு கட்டுரையை சமீபத்தில் படித்த ஞாபகம் உங்கள் விமர்சனத்தைப் படித்ததும் மனதில் வந்து போகின்றது.

Paramasivam said...

60களில் பள்ளிக் கல்வி படித்தவன் நான். அச் சமயம் எனது ஆசிரியர்கள் அனைவருமே மிகுந்த கடமை உணர்வுடன் பாடம் நடத்தினார்கள். ஒரு ரைடர் சரியாக வரவில்லை அல்லது புரியவில்லை எனில் எவ்வளவு, ஆம், எவ்வளவு தரம் வேண்டுமாயினும் எழுந்து கேட்டுப் புரிந்து அக்கணக்கை சரியாக செய்யலாம். ஆம். அது அக்காலம். இப்போதும் இது போன்ற ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது என் எண்ணம்.
பரமசிவம்