Thursday, August 01, 2013

காசு, பணம், மணி, துட்டு

ஐந்து விதமான நிலங்களில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது பழைய வரலாற்றுச் செய்தி. ஆனால் தற்போது தமிழர்கள் எங்கே வாழ்ந்தாலும் மூன்று வித மனோநிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

எந்த மதம்? எந்த சாதி? எந்த கட்சி?

இந்த மூன்றில் ஏதோவொன்று தினந்தோறும் தாக்கிக் கொண்டேதானிருக்கும். மத வெறி மனிதத்தைக் கொன்றது. ஆனால் சாதி வெறியே சகலத்தையும் கொன்று விட்டது. இந்த இரண்டையும் இன்று வரையிலும் அழியாமல் காத்துக் கொண்டிருப்பது கட்சியே.

இது குறித்து நான் எழுதும் போது உருவாகும் உணர்ச்சிகளை விட ஒவ்வொரு இடத்திலும் நான் படிக்கும் கட்டுரைகளை அதற்கு வரும் விமர்சனங்கள் தான் ஆச்சரியமாக பயமுறுத்துவதாக உள்ளது.

இவர்கள் படித்தவர்கள், எல்லாவற்றையும் அறிந்தவர்கள் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது.

நடிக்கின்றார்களா? அல்லது நயவஞ்சகத்தனம் என்பதை இயல்பான குணமாகவே மாற்றிக் கொண்டு விட்டார்களா? என்று யோசிக்கத் தோன்றுகின்றது. 

விலங்குகளை பலிகொடுத்தது மாறி தற்போது மனிதர்களை பலிகொடுக்கும் அளவிற்கு நாம் வளர்ந்துள்ளோம். திரைப்படங்களில் வெட்டப்படும் தலையும், பீச்சியெடிக்கும் ரத்தத் துளிகளும் அகன்ற திரை முழுக்க பரவும் போது மயங்கி விழுந்தவர்கள் அந்தக்காலம். ஆனால் இப்போது சரியா போட்டான்டா......... என்று கைதட்டி ஆராவாரம் செய்ய அடுத்து ஐந்து படங்களுக்கும் அறுவாளே கதாநாயகனாக வருகின்றது. 

கடந்த ஐந்தாண்டுகளில் வந்த வெற்றி பெற்ற படங்களை எடுத்துக் கொண்டால் ஒவ்வொன்றிலும் ஒரு சாதியின் பெருமை பேசப்பட்டு இறுதியில் அருவாள் பேசியிருக்கும். .

சங்கை அறுத்துருவேன் என்று வசனமாக பேசியது மாறி இன்று மனித குரல்வளையை நறுக்குவது தான் வெற்றிக்கு அச்சாரமாக இருப்பதால் அம்மாக்கள் கூட காய்கறி போல சங்கை அறுத்து மகனை காப்பாற்றுகின்றார்கள்.

மக்கள் ரசிக்கின்றார்கள் என்பதை விட இந்த ரசனையை ஊடகங்கள் வளர்த்தது. இயக்குநர்கள் நாட்டில் நடப்பதைதான் எடுக்கின்றோம் என்று இந்த கலையை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இது போன்ற செய்திகளும், படங்களும் வெற்றியடைந்த காரணத்தால் அதன் நீட்சியில் இன்று வலைபதிவுகள், முகநூல் எங்கும் ரத்தக்கவுச்சியே பிரதானமாக உள்ளது.  சாதிப் பிரச்சனை அமுங்கும் போது மதப்பிரச்சனை எழுந்து விடுகின்றது.

இரண்டுக்கும் பின்னால் எப்போதும் இருப்பதும் கட்சியே.

என்ன நடந்தது? ஏன் நடந்தது? என்று யோசித்து முடிப்பதற்குள் அப்பாவியின் உயிர் அய்யோ.... என்ற கதறலுடன் காற்றில் கரைந்து போனாலும் அடுத்தவரும் சாதிக்காக மதத்திற்காக சாகத் தயாராகவே இருக்கின்றார் என்பது தான் இன்றைய சமூகம் தரும் ஆச்சரிய செய்தி.  .

இன்று எவருடன் பேசினாலும் மேலே சொன்ன  மூன்றுக்குள் நின்றே பேச வேண்டியுள்ளது.  பொதுவாக பேசினாலும் சந்தேகப் பார்வையை வைத்துக் கொண்டு தான் பேசுகின்றார்கள். நம் சாதியை உறுதிப்படுத்திக் கொண்டு விடுகின்றார்கள். விமர்சனப் பார்வையாக பேச நல்லா நடிக்கிறானப்பா? என்றொரு அம்போடு சாதி வெறி பிடித்தவன் என்ற வார்த்தைகளும் தொடர்ந்து வந்து தாக்குகின்றது.

என்ன இருந்தாலும் அவன் மதம் அப்படி தான் பேச வைக்கும் என்றொரு நக்கலும் விடாமல் தாக்க தப்பித்தோம் பிழைத்தோம் என்றே ஓட வேண்டியுள்ளது. விஷத்தை உள்ளே வைத்துக் கொண்டு கக்குவதில் சூரனப்பா என்று சொல்ல எந்தப் பக்கம் நகர்வது என்று தெரியாமலேயே ஒவ்வொரு நாளும் கழிகின்றது.

"நீங்கள் எங்களுக்கு ஆதரவாக இல்லாவிட்டால் நீங்கள் எதிரியின் பக்கம் இருப்பதாக அர்த்தம் "

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஈராக் போரின் போது முழங்கினாரே அதைப்போலத்தான் நாம் ஏதோவொரு பக்கம் நின்றே ஆக வேண்டிய சூழ்நிலையை இங்கே ஒவ்வொருவரும் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றார்கள்.   

மதங்களை தாண்டி வந்து விட்டேன்.  சாதிப் பார்வையை விட்டொழித்து விட்டேன்.  கட்சி அரசியலை விட கொள்கை அரசியலே இனி தேவை என்று சொல்லும் போது திட்டுவதும் வசதிக்கு தகுந்தபடி வார்த்தைகளைக் கொண்டு சிலம்பாட்டம் நடத்துவதையும் சமீப காலமாக அதிகம் பார்க்கின்றேன்.

சாதி, மதம் இது இரண்டையும் தவிர்த்து சமூக அவலத்தை சுட்டிக்காட்ட ஆண்ட ஆண்டு கொண்டிருப்பவர்களைப் பற்றி பேசத் தொடங்கினால் தனி மனித தாக்குதல் என அத்தனையும் அணிவகுத்து வந்து விடுகின்றது.  இங்கு இந்த மூன்றுக்கும் தனித்தனியே ஆதரவாளர்கள்.

ஆனால் சாதி, மத ஆதரவாளர்கள் கடைசியில் ஏதோவொரு கட்சிக்குள் அடைக்கலமாகி இருப்பதை கவனமாக பார்த்தால் தெரியும். கட்சி வளர்க்க மதம் சாதி என்ற உரம் தேவை என்பதை தலைவர்கள் உணர்ந்திருப்பதை விட தொண்டர்களும் அப்படி இருப்பதைத்தான் விரும்புகின்றார்கள்.

ஏனிந்த மாற்றம்?

19 ஆம் நூற்றாண்டில் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியில் உருவானவன் தான் மனிதன் என்று டார்வின்  சொன்னதற்குப்பிறகு இரண்டு நூற்றாண்டுகளை கடந்து வந்துள்ளோம்.

இப்போது மாற்றங்கள் என்பது வருடத்திற்கொருமுறை என்பது மாறி மாதம் ஒரு முறை மாற்றம் என்கிற நிலைமைக்கு உயர்ந்துள்ளோம். மொத்த சமூகத்தையும்  புரட்டிப் போட்டு விட்டு சென்று கொண்டேயிருகின்றது. இதுவும் கடந்து நாள் கணக்கு மாற்றங்கள் என வரத் தொடங்கியுள்ளது.

மாறிப்போன உலகில் எல்லாமே பழசாகிப் போய்விட தமிழர்கள் மனதில் உள்ள இருட்டு மட்டும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றது. விடாது துரத்தும் கருப்பு என்பது சமீப காலமாக பூதாகாரமாக மாறிக் கொண்டே வருகின்றது.

இருட்டுக்குள் வேண்டுமானாலும் இருப்பேனே தவிர என் மதம் என் சாதி என் கட்சியை விட மாட்டேன் என்பவர்களை எப்படி அழைப்பீர்கள்?

எந்த விமர்சனத்தையும் இங்கே எழுப்பக்கூடாது.?
  
எழுதத் தொடங்கினால் எதிர்ப்புகள் உருவாகின்றதை விட எழுதுபவன் அடுத்து எழுதாதபடி செய்யக்கூடிய அத்தனை விசயங்களையும் ஆதரவாளர்கள் செய்ய தயாராக இருப்பதால் பயம் மனதில் இயல்பாக உருவாகிவிடுகின்றது. நமக்கு எதுக்கு வம்பு? என்ற ஆதங்கம் தற்போதும் உனக்கேன் இந்த வேண்டாத வேலை என்ற அறிவுரையாக மாறியுள்ளது

பொதுவாக யோசித்துப் பார்த்தால் இந்த மதத்தில் பிறந்தேன் என்பதையும் இந்த சாதியில் தான் வளர்ந்தேன் என்பதையும் நாம் தீர்மானிக்க முடியாது. இயல்பிலேயே உருவான ஒன்று.  ஆனால் இந்த கட்சியில் இருக்கின்றேன் என்பது நாம் ஏதோவொரு காரணத்தால் தீர்மானிக்க கூடியதாகவே உள்ளது. 

கட்சித் தலைவரை பிடிக்கலாம். பல சமயம் அவர் சொன்ன கொள்கைகளை பிடித்திருக்கலாம். ஆனால் கட்சியின் தலைவரும், கொள்கைகளும் கடைசி வரைக்கும் இருப்பதில்லை.

மாற்றத்தின்படியே மாறிக்கொண்டே தான் வருகின்றது.

கட்சி வளர்கிறதோ இல்லையோ அவரும் அவர் குடும்பமும் கால மாற்றத்தில் நன்றாகவே வளர்ந்துவிடுகின்றார்கள். பணம், பதவி, அதிகாரம், அந்தஸ்து, செல்வாக்கு என அனைத்தும் அவருக்கு கிடைத்து விட அவர் குடும்பத்திற்கு இயல்பாகவே மாறிவிடுகின்றது. 

சொந்த வாழ்க்கையை பலிகொடுத்து தலைவரை நம்பிக் கொண்டே வாழும் தொண்டர்களைப் பார்க்கும் போது தான் இவன் நடிக்கின்றானா? இல்லை இவன் மனநோயின் தாக்கத்தில் இருக்கின்றானா? என்று யோசிக்கத் தோன்றுகின்றது. 

சாதாரண தொண்டனுக்கு கட்சியின் கட்டமைப்பு என்பது எப்படி இருக்கும் என்று தெரியுமா? 

கட்சி உருவாக்கும் கொள்கைகள் ஆட்சியில் இருக்கும் போது எத்தனை சமரசங்களை தாண்டி வர வேண்டும் என்பதாவது புரியுமா?

தற்போது கட்சி என்றால் குடும்பம் என்று அர்த்தம்.

அதுவொரு திட்டமிட்ட பரிபூரண உணவு.  எந்த இடத்தில் எவரவர் இருக்க வேண்டுமோ ஒவ்வொரு இடத்திலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கமும் இருந்து கொண்டேயிருக்கும்.  கட்சி அதிகாரத்தில் இருக்கும் போது  அதன் செல்வாக்கு அதிகமாகவும் இல்லாத போதும் குறைவாகவும் இருக்கும். ஆட்சி மாறினாலும் தமிழ்நாட்டில் பல சமயம் காட்சிகள் மாறாமல் இருப்பதற்கு இதுவே முக்கிய காரணம்.

தலைவனின் குடும்பத்தினர் சுவைத்து எச்சமும் மிச்சமும் இருப்பது அடுத்த கட்டத்திற்கு நகர்கின்றது.

அடுத்த கட்டத்தில் உறவுக்கூட்டம், உறவுக்கூட்டத்தின் தொடர்பு கூட்டங்கள், இதனைச் சார்ந்துள்ள அதிகாரவர்க்க கூட்டங்கள் என அனைத்தையும் தாண்டி வந்த பிறகே கட்சியில் உள்ள இரண்டாம் கட்ட தலைகளுக்கு கொஞ்சம் கிடைக்கின்றது. 

மூன்றாம் கட்டத்திற்கு வருவதற்குள் அரசு நிதிக்கு பேதியாகி விட திறக்கும் கல்வெட்டுக்கள் மட்டுமே இங்கே சாட்சியாக நிற்கின்றது. போட்ட சாலைகள் ஒரே மழையில் மல்லாந்து நிற்பதும் இதுவே காரணமாகும்.

ஆனால் இங்கே மற்றொரு வினோத முரண்பாடுகளை பார்க்க முடியும்.  

நீ அந்த கட்சிகாரன் விசேடத்தில் கலந்து கொண்டால் உன் பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தின் காரணமாக பெத்த ஆத்தாளுடன் வருடக்கணக்கில் பேசாத மகனும் உண்டு. நீங்கள் இருவரும் சம்மந்தி என்றாலும் வெவ்வேறு கட்சியென்பதை மனதில் வைத்து செயல்படு என்ற அறிவுரையினால் கட்டிக் கொடுத்த மகளை விட பதவி தரும் கட்சியே இங்கே பலருக்கும் தேவையாக உள்ளது.

ஆனாலும் மதம், சாதி, கட்சி என்ற மூன்றையும் அழித்து விளையாடுபவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழில் அதிபர்களாகவே இருக்கின்றார்கள். அவர்களுக்கு பணம் என்பதைத் தவிர வேறு எந்த வேறுபாடுகளும் முக்கியமில்லை.

இவர்களுக்கு ஒரு பெரிய அங்கீகாரத்தை ஒவ்வொரு கட்சியும் கொடுத்தே ஆக வேண்டியுள்ளது.  .

காரணம் தொண்டர்கள் கட்சிக்கு உழைக்கப் பிறந்தவர்கள். கட்சித்தலைவர்கள் தொழில் அதிபர்களிடம் அண்டிப் பிழைக்க வேண்டியவர்கள்.

அம்பானி காங்கிரஸ்க்கு கொடுப்பதைப் போல பாரதிய ஜனதா கட்சிக்கும் தான் நன்கொடை கொடுக்கின்றார்.  மல்லையா ஜெயலலிதாவின் ஆதரவாளர் என்று எல்லாருக்கும் தெரியும்? ஆனால் கலைஞர் அவர் வங்கிக்கு கட்டாத பணம் குறித்து பேசி இருக்கின்றாரா?

தொழில் அதிபர்கள் என்பவர்கள் நாட்டின் தொழில் வளர்ச்சியை பெருக்குபவர்கள் மட்டுமல்ல. இரண்டு வெவ்வேறு கோடுகளில் பயணிக்கும் கட்சி அரசியலை தங்கள் கவட்டிக்குள் வைத்திருப்பவர்கள்.

அதனால் என்ன?

பணத்தாளில் கப்பெடுத்த வாடை வருகின்றது என்பதற்காக அதை வெறுப்பவர்கள் யாராவது இருக்கின்றார்களா என்ன?

பணம் வந்தால் பத்தும் பறந்து போய்விடும் என்பது பழமொழி
பணம் இருந்தால் எதையும் மாற்றலாம் என்பதே இன்றைய சமூகமொழி.

இந்தியா - பணக்காரர்களின் உலகம்

23 comments:

Avargal Unmaigal said...

உங்கள் பதிவை படிக்க ஆரம்பித்து பாதியில் நிப்பாட்டி மூச்சு வாங்கி வர வெளியே செல்லுகிறேன். மீண்டும் வந்து படிக்க்கிறேன்.

ஆமா எனக்கு ஒரு சந்தேகம் நீங்க எதாவது பதிவு எழுத ஒரு மிஷின் வைத்திருக்கிறீர்களா என்ன? நீங்கள் சிந்திப்பதை எல்லாம் அப்படியே ஒரு பெரிய பதிவாக வந்துவிடுகிறதே....

Siva said...

பாரம்பரியமாக பார்த்தால் சாதி என்பது ஒருவர் செய்யும் தொழில் மூலம் ஏற்படும் தொடர்புகளின் அடிப்படையில் நிலைபெறும் ஒரு சமூக குழுமம். இதில் அகமணமுறை மற்றும் குடியிருப்பு பகுதி, கலாசார ஆன்மிக பழக்கம் போன்றவற்றின் பொது நிலையும் அடங்கும்.

இன்று படித்தவர்கள் என்று எனபடுபவர்கள் தங்களது சாதி சார்ந்த தொழில் செய்வது இல்லை. ஆனால் இவர்களிடம் தான் சாதிய உணர்வு அதிகமாக மேலோங்கி இருப்பதைக் காணலாம். குறிப்பாக சென்னை கோவை போன்ற பெரு நகரங்களில் வசிப்போரிடம் இதை பார்க்கமுடியும். ஏன் அப்படி?

கிராமத்தில் இல்லாத சாதி உணர்வு எப்படி நகரங்களில் படித்தவர்களிடம் அதிகம் தென்படுகிறது? நன்றாக யோசித்தால் சாதி எனபது நகரங்களில் படித்தவர்களிடத்தில் தனி நபர் அடையாளமாக பார்க்கபடுகிறது. அதனால் தான் சாதி சார்ந்த அல்லது வேர் சார்ந்த பெருமை ஊடகங்களின் தூக்கலாக தெரிகின்றது.

அப்படியானால் சாதி சாராமல் ஒருவர் அல்லது பலர் புதிய அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியுமா? ..இதற்கு பதில் முடியும். தான் சார்ந்த துறை அல்லது கலை அறிவியல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தனித்துவத்தை காட்ட வேண்டும். அதன் மூலம் ஒருவர் அல்லது பலர் அந்த புதுமையின் மூலம் அறியபடுவார். (உ -இளையராஜா, அப்துல் கலாம் போன்றோர்).

இன்றைய படித்த வர்க்கம் புதுமையை செய்யும் வண்ணம் இல்லை. எனவே சாதியின் மூலம் பெருமை தேடுவது தானாகவே நடக்கிறது.

சிவா
சென்னை

திண்டுக்கல் தனபாலன் said...

ஒரு நாள் விவசாயி ஒருவன் தன் ஊரின் பக்கத்தில் உள்ள காட்டின் வழியாகப் போய் கொண்டிருந்தான். அங்கே மிகவும் பெரிய மரம் ஒன்று இருந்தது. அவன் மரத்தின் நிழலை அடைந்ததும், "பணம் வேண்டுமா...பணம்...?" என்று ஒரு குரல் கேட்டது.

விவசாயி சுற்றும் முற்றும் பார்த்தான். மேலும் கீழும் பார்த்தான். அவன் கண்ணுக்கு ஒருவரும் தென்படவில்லை. ஆயினும் மீண்டும் குரல் ஒலித்தது. "பணம் வேண்டுமா...பணம்...?" என்று கேட்டது. அது மாயக்குரல். உருவமற்ற ஒருவனுடைய குரல் அசரீரி.

ஏழை விவசாயி வியப்பு மிகுந்து விழித்தான். மிரள மிரளப் பார்த்தான். ஒருவரும் இல்லை என்றாலும் குரலோசை உண்மையாகவே இருந்தது.

"பணம், ஏழு பெட்டி நிறைய என்னிடம் இருக்கிறது. உனக்கு வேண்டுமா? உடனே சொல்," என்று கொஞ்சம் அதிகாரமாகவே கேட்டது குரல்.

பணம் வேண்டாமென்று சொல்ல மனம் வருமா? அதுவும் ஏழு பெட்டி பணம்!

"வேண்டும்!" என்று மறுகுரல் கொடுத்தான் விவசாயி. உடனே அசரீரி சிரித்தது.

"அப்படியென்றால் வந்த வழியே திரும்பிப் போ. உன் வீடு போய் சேர். ஏழு பெட்டிகளையும் நான் வைத்தாயிற்று," என்று கூறியது.

விவசாயி திரும்பினான். வீடு நோக்கி ஓடினான். நிற்காமல், குடல் தெறிக்க ஓட்டம் பிடித்தான். அங்கே கண்ட காட்சி அவனை மெய்சிலிர்க்க வைத்தது. மாயக்குரல் பொய் சொல்லவில்லை என்பதை உணர்ந்தான்.

திண்டுக்கல் தனபாலன் said...

அவனுடைய வீட்டுக் கூடத்தில் ஏழு பெட்டிகள் ஒன்றையடுத்து ஒன்று வரிசையாக இருந்தன. கண்களைக் கவரும் ஒளி வீசின.

விவசாயி முகத்திலும் புன்முறுவல் படர்ந்தது. மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. அவன் மெதுவாக அடியெடுத்து வைத்தான். பெட்டிகளை நெருங்கி அவற்றை திறந்து திறந்து பார்த்தான். ஆனால், ஏழாவது பெட்டியைப் பார்த்ததும் அவன் மனம் திடுக்கிட்டது. ஏனென்றால் அதில் பாதியளவு தான் பணம் இருந்தது.

"ஆறு பெட்டியும், அரைப்பெட்டி பணமும் ... இது என்ன கணக்கு?" என்று நினைத்தான் விவசாயி. அந்த அரைப்பெட்டி நிறைந்தால் தானே, ஏழு பெட்டி பணத்துக்கும் அவன் உரியவன் ஆவான்? ஆகவே, அவன் ஆறு பெட்டிகளை மறந்தான். அரைப்பெட்டியையே நினைக்கத் தொடங்கினான். அதை நிரப்புவதே தன் முதல் வேலையாகக் கருதினான்.

அடுத்த விநாடி, அவன் தன் நகைப் பெட்டியைத் திறந்தான். அதிலிருந்த ஆபரணங்களை எல்லாம் எடுத்தான். தன் மனைவியையும் அழைத்து, அவள் அணிந்திருந்த கம்மல், வளையல், அட்டிகை ஆகியவற்றையும் கழற்றிக் கொடுக்கும்படி ஆணையிட்டான்.

விவசாயி அவற்றை உருக்கினான். பணமாக மாற்றி அந்த பெட்டியில் போட்டான். பெட்டி நிறையவில்லை.

விவசாயி சிந்தித்தான். வீட்டிலிருந்த நெல் முழுவதையும் விற்றான். பாத்திரங்களை விற்றான். பண்டங்களை விற்றான். தொழுவத்தில் கட்டியிருந்த பசுவும் கன்றும் அவன் கண்களில் பட்டன. உடனே அவற்றை அவிழ்த்துக் கொடு போய் சந்தையில் விற்றான். எல்லாவற்றையும் பணமாக மாற்றி பெட்டியில் போட்டான். பெட்டி நிறையவில்லை.

விவசாயிக்கு ஆத்திரம் வந்தது. அவனுக்கு வேலை மீது நாட்டம் செல்லவில்லை. உண்ணவும் தயங்கினான். அவன் உண்ண நினைத்தாலும், ஏமாற்றமே அடைந்திருப்பான். சமையல் செய்ய ஒரு பிடி அரிசியும் இருக்கவில்லை. பாவம் அவன் மனைவியும் பட்டினி கிடந்தாள்.

திடீரென்று, அவனுக்கு மற்றோர் எண்ணம் தோன்றியது. தான் வேலை செய்த பண்ணையாரிடம் ஒடினான். கை கட்டி நின்றான். கூலி போதவில்லை என்று முறையிட்டான்.

பண்ணையார் மிகவும் நல்லவர். குறை கேட்டதும் மனம் இறங்கி அவனுக்கு இரு மடங்கு கூலி அளந்தார். ஆயினும் விவசாயியின் வீட்டில் பட்டினி தாண்டவம் ஆடிற்று. அதிகமாகக் கிடைத்த தானியத்தையும் விற்று பணமாக மாற்றி பெட்டியில் போட்டான். பெட்டி நிறையவில்லை.

விவசாயியும் அவன் மனைவியும் எலும்பும் தோலுமாக இளைத்துப் போயினர். உடுத்திக் கொள்ளக் கந்தல் துணியும் இல்லாமல் திண்டாடினர். என்றாலும் விவசாயி தன் ஆசையைக் கை விடவில்லை. பிச்சை எடுக்கவும் துணிந்தான். ஊரார் சிரித்தனர். மனைவி புலம்பி அழுதாள்.

பிச்சையெடுத்த பணத்தையும் சிறுகச் சிறுகச் சேமித்து, அந்த அரைப்பெட்டியில் போட்டான். பெட்டி நிறையவில்லை.

விவசாயி நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே போனான். காலம் நகர்ந்தது. வாரங்கள் மாதங்கள் ஆயின.

ஒரு நாள் பண்ணையார் அவனை அழைத்தார். அவனுடைய துயரத்துக்கு காரணம் கேட்டார். "ஒரு மடங்கு ஊதியம் பெற்ற போது நீ மகிழ்ச்சியாக இருந்தாய். இப்போது இரு மடங்கு ஊதியம் அடைகிறாய். ஆனால், ஏன் இளைத்துத் துரும்பாகி விட்டாய்?" என்றார்.

தலை குனிந்து நின்றான் விவசாயி. மீண்டும் பண்ணையார், "நீ அந்த மரத்தின் அசரீரியின் ஆசை வார்த்தைக்கு அடிமைப்பட்டாயா? அதன் சொல்லைக் கேட்டு ஏழு பெட்டி பணத்தையும் வாங்கிக் கொண்டாயா?" என்று வினவினார். தன்னுடைய ரகசியம் எப்படி தெரிந்தது என்று தலையை சொறிந்த விவசாயியைப் பார்த்து, பண்ணையார், " உன்னிடம் கேட்டதை போல என்னிடமும் அந்த மரம் கேட்டது. ஆனால் நான், 'பணமும் வேண்டாம்... சங்கடமும் வேண்டாம்.' என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டேன்." என்று தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறினார்.

பண்ணையார் மற்றொரு விபரத்தையும் எடுத்துக் கூறினார். "அந்த பணம் மாயமானது. ஏன்னென்றால் அந்த பணம் இலவசமாக வந்த பணம். அதை செலவிட ஒருவராலும் இயலாது. மேலும் மேலும் சேர்க்கத் தூண்டுமே தவிர, நல்ல வழியில் ஓர் எள்ளத்தனையும் செலவிட அது இடம் கொடுக்காது."

விவசாயி கையைப் பிசைந்தான். தன் அறியாமையை நினைத்து வருந்தினான். உடனே பண்ணையார்அவனை நோக்கி," ஓடு, ஓடு," என அவசரப்படுத்தினார்.

எங்கே ஓடுவான் அவன்?

மாயக்குரல் ஒலித்த மரத்திற்கு சென்று பண்ணையார் சொல்லிக் கொடுத்தபடியே, "எனக்கு ஏழு பெட்டி பணம் வேண்டாம்" என்று கூவினான். அசரீரியும் "சரி" என்றது.

விவசாயி வீடு திரும்பினான். அவன் மனதில் இருந்த சுமை எங்கேயோ பறந்து போயிற்று. கூடத்தில் இருந்த ஏழு பெட்டிகளும் மாயமாய் மறைந்தன. அவற்றைப் பின்பற்றி அங்கே குடி கொண்டிருந்த ஆசையும் துன்பமும் ஒழிந்தன.

உண்மையாக உழைக்க ஆரம்பித்தான் விவசாயி. இழந்து போன எல்லா செல்வங்களும் அவனை வந்தடைந்தது.

திண்டுக்கல் தனபாலன் said...

பணம். பணம்.. பணம்...

http://dindiguldhanabalan.blogspot.com/2011/10/blog-post_29.html

Avargal Unmaigal said...

மிக நல்ல படிப்பினை தரும் கதை. இதை பதிவாகாவே போட்டு இருக்கலாமே

எம்.ஞானசேகரன் said...

மிக மிக அருமையான பதிவு. இந்த ஜாதியும் மதமும் மனிதர்களிடையே நிகழ்த்தும் சித்துவிளையாட்டை விரிவாக எழுதியிருக்கிறீர்கள். எப்படி , எப்போது, எந்த நேரத்தில் இவ்வளவு பெரிய பதிவை கொஞ்சம் கூட சலிப்பே இல்லாமல் எழுத முடிகிறது உங்களால்?

நடுநிலைமை என்ற வார்த்தையை அகராதியிலிருந்து எடுத்துவிட்டால் உத்தமம் என நினைக்கிறேன். சரி தவறு என்றேல்லாம் சொல்லக்கூடாது. எப்படிப் பார்த்தலும் நமது கருத்து என்பது ஒரு தரப்புக்கு ஆதரவாக வந்துவிட்டது என்றால் அது நியாயமாக இருந்தாலும் கூட நாம் அந்த ஜாதியனாக பார்க்கப்படும் அவலம் அல்லது கைக்ககூலி என்கிற பட்டப்பெயர் என்பதெல்லாம் சாதாரணமாகிவிட்டது. மாற்றுக்கருத்து என்பதை மரியாதைக்காகக் கூட யாரும் மதிப்பதாக இல்லை.

திண்டுக்கல் தனபாலன் போகுமிடமெல்லம் கலக்குகிறார்.

இராய செல்லப்பா said...

திரைப்படங்களில் சாதி சார்ந்த வன்முறைகள் பெரிதும் முக்கியத்துவம் பெற்று விட்டன. குறிப்பாக, மதுரைக்குத் தெற்கிலிருந்து வரும் திரைக்கதாசிரியர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தாம் பெரும்பாலும் இத்தகைய போக்கினை வளர்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (2) கிராமத்தில் இருந்த சாதி வெறியர்கள் இன்னும் கிராமத்தில் தான் இருக்கிறார்கள். நகரத்திலிருந்து வரும் அரசியல் தூண்டுதல்களுக்காகவும், பணத்திற்காகவும் அவர்கள் எடுபிடிகளாகச் செயல்படுகிறார்கள் என்பதை தான் தினந்தோறும் பத்திரிகைகளில் பார்க்கிறோமே!

indrayavanam.blogspot.com said...

மத வெறி மனிதத்தைக் கொன்றது. ஆனால் சாதி வெறியே சகலத்தையும் கொன்று விட்டது.... அருமையான வரிகள் . நன்றி

ஜோதிஜி said...

நகரத்திலிருந்து வரும் அரசியல் தூண்டுதல்களுக்காகவும், பணத்திற்காகவும் அவர்கள் எடுபிடிகளாகச் செயல்படுகிறார்கள்

தெளிவான புரிதல்

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

மாற்றுக்கருத்துக்கு வலையுலகம் வைத்துள்ள பெயர் நட்டநடு சென்டர்.

ஜோதிஜி said...

தனபால் கதை அற்புதம்.

ஜோதிஜி said...

சாதி எனபது நகரங்களில் படித்தவர்களிடத்தில் தனி நபர் அடையாளமாக பார்க்கபடுகிறது. அதனால் தான் சாதி சார்ந்த அல்லது வேர் சார்ந்த பெருமை ஊடகங்களின் தூக்கலாக தெரிகின்றது.

இந்த தனி நபர் அடையாளம் என்பது நகரங்களில் பணம் மூலம் பல சமயம் அழிக்கப்படுகின்றது. ஆனால் கிராமங்களில் அது பொறாமையை வளர்த்து மேலும் மேலும் சிக்கலை உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றது.

ஜோதிஜி said...

உங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே.

தி.தமிழ் இளங்கோ said...

மன்னிக்கவும்! இந்த கட்டுரையை மூன்று தடவை படித்து விட்டேன். காசு, பணம், மணி, துட்டு – என்று தலைப்பைச் சொல்லி விட்டு, கட்டுரையில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. எதையோ நினைத்து எழுதத் தொடங்கி எங்கேயோ சென்று விட்டாற் போலத் தெரிகிறது.

ஜோதிஜி said...

மேலே உள்ள விமர்சன வரிகள் சில வற்றை சொல்லி இருக்குறாங்களே?

காசு இருந்தால் இந்தபிரிவினைகள் இருந்தால் நம்மை தாக்காது அல்லது மறைக்கப்பட்டு விடும்..

minnal nagaraj said...

பணம் படைத்தவன் வீட்டிலும் பிரபலம் ஆனவன் வீட்டிலும் சதியோ மதமோ எதுவுமே ஒரு பொருட்டல்ல.அவன் வீட்டில் நடக்கும் திருமணங்களையும் விசேஷங்களையும் பாருங்களேன்,கூடி கும்மியடிப்பவர்கள் சாதீயம் பார்கிறார்களா என்ன? அங்கே அந்தஸ்துக்கு மட்டுமே மரியாதை கிடைக்கிறது நகரங்களில் அந்தஸ்து ஒன்றே அளவுகோல். உங்கள் பதிவு பல உண்மைகளை போட்டு உடைக்கிறது .

புதுகை.அப்துல்லா said...

// மாற்றுக்கருத்துக்கு வலையுலகம் வைத்துள்ள பெயர் நட்டநடு சென்டர். //

இல்லை. உண்மையான நடுநிலைவாதிகளுக்கு இணையத்தில் இந்தப் பெயர் இல்லை. நான் நடுநிலைவாதி என்று சொல்லிக்கொண்டு கலைஞரை மட்டுமே திட்டும், மறந்தும் அந்த அம்மாவைப் பற்றி மூச்சுகூட விடாத நல்லவர்களுக்கு மட்டுமே "நட்டநடு சென்டர்" என்ற பட்டப்பெயர்.

ஜோதிஜி said...

அம்மாவுக்கு சும்மா ஒரு கடிதம்
http://deviyar-illam.blogspot.in/2012/11/blog-post_21.html

புதுகை.அப்துல்லா said...

then u r not nattanadu center :)

ஜோதிஜி said...

அடேங்கப்பா எப்படியெல்லாம் நீரூபிக்க வேண்டியதாக உள்ளது.)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

காரசாரமான அலசல்!
//தொழில் அதிபர்கள் என்பவர்கள் நாட்டின் தொழில் வளர்ச்சியை பெருக்குபவர்கள் மட்டுமல்ல. இரண்டு வெவ்வேறு கோடுகளில் பயணிக்கும் கட்சி அரசியலை தங்கள் கவட்டிக்குள் வைத்திருப்பவர்கள்.// இது உச்சம்.