Wednesday, July 17, 2013

தென்பாண்டி சீமையிலே


பிறந்த ஊருக்கருகே சாக்கோட்டை என்றொரு சிறிய ஊர் உண்டு. பழமைவாய்ந்த ஒரு பெரிய கோவிலும் அதனைச்சுற்றிலும் கிராமங்களும்  உண்டு.   

முக்கியமாக வருடந்தோறும் நடக்கும் தேர்த்திருவிழா.  ஒரு வாரம் முழுக்க சிறிய, பெரிய கோவில் என்று விசேடத்தில் சுற்றியுள்ள அறுபதுக்கும் மேற்பட்ட கிராமவாசிகளை ஒன்று சேர்க்க வைக்கும்.  எங்கள் வீட்டிலிருந்து இந்த கோவிலுக்கு வரும் வழியில் தான் கருமான் பட்டறைகள்  இருந்தன.  காலப்போக்கில் இதுவே தற்போது லேத் என்கிற நிலைக்கு மாறியுள்ளது.

ஊருக்குள் அரிசி ஆலைகள் அதிகமாக இருப்பதால் சுற்றியுள்ள அத்தனை கிராமத்தில் உள்ள விளைந்த நெல்லுக்குரிய சந்தை இந்த இடத்தில் உள்ள பொட்டலில் தான் நடக்கும். காலை நான்கு மணியளவில் சென்று பார்த்தால் நூற்றுக் கணக்கான வண்டிகள் நெல்மூட்டையோடு நின்று கொண்டிருக்கும். 

அதிகாலையில் தொடங்கும் வியபாரம் காலை ஏழுமணிக்குள் விலை பேசப்பட்டு குறிப்பிட்ட அரிசி ஆலைகளில் இறக்கி வைத்து விட்டு சென்று விடுவர். இந்த பொட்டலுக்கு அருகே இருக்கும் ஆலமரத்திற்கு கீழே தான் சில கருமான் பட்டறைகள் இருந்தன. 

மாட்டுக்கு லாடம் கட்டுபவர் முதல் இளைப்பாறி விட்டு செல்பவர் வரைக்கும் அத்தனை பேர்களையும் இந்த இடத்தில் பார்க்க முடியும்.  இந்த பகுதியை கடந்து செல்லும் போதெல்லாம் இரும்பை பழுக்க காய்ச்சி அடித்துக் கொண்டிருக்கும் சப்தம் இடைவிடாது கேட்டுக் கொண்டேயிருக்கும். யாரோ ஒரு சிறுவன் துருத்தியை இடைவிடாது இயக்கிக் கொண்டிருப்பான்.  

நவீனங்கள் இல்லாத காலத்தில் ஒரு கம்பி வழியே கட்டப்பட்ட துணி குழாய் போல மாற்றப்பட்டு நெருப்பின் அருகே சென்று சேரந்திருக்கும். துணியின் முடிவில் ஒரு சிறிய தகர வடிவில் காற்றைத் தள்ளும் எந்திரமும் இருக்க இதை இயக்கத்தான் அந்த பையன் ஒரு கயிற்றை மேலும் கீழே இழுத்தபடியே இருப்பான்.  

இதை பலமுறை பார்த்துள்ளேன்.  

ஆனால் அங்கேயிருந்து வரும் சப்தமென்பது காதுச் சவ்வை கிழிக்கும்படி இருக்கும்.  ஐந்து நிமிடங்கள் இந்த இடத்தில் இருந்தாலே நமக்கு தலைவலி வந்து விடும்.  கடந்து செல்லும் போது பலமுறை யோசித்துள்ளேன்.

எப்படி இவர்களால் ஒரு நாள் முழுக்க இந்த சப்தத்தில் இருந்து கொண்டே வேலை செய்ய முடிகின்றது?

காரைக்குடி பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்னால் பல இடங்களில் சில்வர் பட்டறைகளும், சொம்பு, குடங்கள் தயாரிக்கும் வெங்கல பட்டறைகளும் நிறைய இருந்தன.  இப்போது மிக குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளது. இந்த சந்தின் உள்ளே நுழைந்து வெளியே வந்தால் பல மணி நேரம் நம் காதில் ணங் ணங் என்று சப்தம் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அங்கே வேலை செய்து கொண்டிருப்பவர்களிடம் எந்த மாறுதலும் இருக்காது.

எப்போதும் போல ஒவ்வொருநாளும் அதே பணியை இடைவிடாது செய்து கொண்டிருப்பதை பார்த்துள்ளேன்.

ஆச்சரியமாய் பார்த்துள்ளேன்.

திருப்பூருக்குள் நுழைந்த தொடக்கத்தில் நவீனங்கள் உள்ளே வராத சூழ்நிலையில் அறவு (நிட்டிங்) எந்திரங்கள் ஓடிக் கொண்டிருக்கும் இடங்களில் சப்தங்களுடன் பலரும் உள்ளே பணிபுரிந்து கொண்டிருப்பர். அந்த இடத்தில் பறந்து கொண்டிருக்கும் பஞ்சுப் பொதிகளையும்,அதை சுவாசித்துக் கொண்டே பணிபுரியும் வேலையாட்களையும் பார்த்த போது மனதில் இனம் புரியாத சோகமும் பயமும் உருவாகும். . 

இன்று பலவிதமான பெரிய எந்திரங்கள், அது தரும் காதை பதம் பார்க்கும் ஒலிகள் என்று எத்தனையோ பார்த்துப் பார்த்து அத்தனையும் பழக்கமாகிவிட்டது.

சாலை போக்குவரத்தில் முன்னும் பின்னும் துரத்தும் ஒலிகளும் சப்தமும் நடுக்கத்தை உருவாக்கி வீடு வந்து சேரும் வரையிலும் உடம்பில் ஒருவிதமான படபடப்பை உருவாக்குவது வாடிக்கையாக மாறிவிட்டது.

ஏறக்குறைய சப்தமே வாழ்க்கை.  நாம் வாழும் வாழ்க்கை முழுக்க இது போன்ற இரைச்சலோடு தான் வாழ்ந்தாக வேண்டும் என்று சூழ்நிலையை மனம் இயல்பாக ஏற்றுக் கொண்டு விட்டது. 

ஆனால் சமீபகாலமாக பணத்தேடல்களை விட மனம் சார்ந்த தேடல்களும் பழக்கத்தில் வந்து விட இரைச்சல் இல்லாத இடத்திற்கு செல்ல வேண்டும் என்று மனதில் ஒவ்வொரு சமயமும் தோன்றிக் கொண்டேயிருக்க சென்ற மாதத்தில் தென் மாவட்ட சுற்றுப்பயணம் இயல்பாக அமைந்தது.

கல்லூரி படிக்கும் வரையிலும் மதுரைக்கு ஒரு முறை வந்துள்ளேன். தேர்வு தாள் குளறுபடிக்காக வந்த அனுபவம் மட்டுமே இருந்தது.  திருப்பூரிலிருந்து ஊருக்குச் செல்ல மதுரை வழியே சென்றால் கூடுதலாக ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் அந்த வழியே பயணிப்பதில்லை.  

ஆனால் கடந்த பத்தாண்டுகளில் பல தடவை பல்வேறு காரணங்களாக மதுரை சென்றபோதிலும் மதுரையை தாண்டியுள்ள எந்த ஊருக்கும் சென்றதே இல்லை.  

குறிப்பாக தென் மாவட்டங்கள் என்று சொல்லப்படுகின்ற வத்தலக்குண்டு தொடங்கி அந்த பக்கம் உள்ள எந்த ஊரும் எனக்கு அறிமுகமே இல்லை.  செய்திதாள்களில் படிப்பதோடு சரி.  

தொழில் நகரங்களில் ஞாயிறு மட்டுமே சற்று சுதந்திரமாக சுவாசிக்க முடியும். அதுவும் பலசமயம் மறுக்கப்படும் அபாயமும் உண்டு. நமது தனிப்பட்ட தேவைகள் தான் இது போன்ற பயணத்தை தீர்மானிக்கின்றது.  தனிப்பட்ட முறையில் ஆசைகளுக்காக என்று எந்த ஊருக்கும் செல்ல சமய சந்தர்ப்பங்கள் அமைவதில்லை. நானும் ஆசைப்படுவதும் இல்லை.  

தொடக்கத்தில் கோவில்கள் மேல் இருந்த ஆசையும் பற்றும் பல ஊர்களுக்கு பயணிக்க வைத்தது. அதுவும் முடிவுக்கு வந்தது.

ஊர்கள், நாடுகள் குறித்து பலவற்றையும் படிக்க படிக்க தமிழ்நாட்டில் உள்ள இதுவரையிலும் பார்க்காத ஊர்கள் மேலிருந்த ஆசைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தென் மாவட்டத்தில் தேனியில் தொடங்கி ஏழெட்டு ஊர்களுக்கு நண்பரோடு இரண்டு சக்கர வாகனத்தில் சுற்றி வந்த போது இயற்கையோடு வாழும் அவர்களின் வாழ்க்கையை ஒரளவு புரிந்து கொள்ள முடிந்தது.

சாலை ஓரத்தில் இருந்த மரங்களை வெட்ட அனுமதிக்காமல் பல இடங்களில் இரண்டு பக்க சாலைகள் மட்டுமே போடப்பட்டுள்ளது.  இதன் காரணமாக பல இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினர் கரணம் தப்பினால் மரணம் என்கிற ரீதியில் அளவோடு பணிபுரிந்து விட்டு பணிவோடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சாலை வசதிகள் சிறப்பாகவே உள்ளது.

இரண்டு நாள் பயணத்தில் முழுமையாக இந்த ஊர்களை உள்வாங்க முடியவில்லை என்ற போதிலும் சுற்றிய ஒவ்வொரு மணி நேரத்திலும் உடம்பில் உள்ளூற ஊடுருவிய காற்றும் மழையும், பனியும் சாரலும், நரம்பு மண்டலத்தை தாக்கிய சுகம் அடுத்த ஒரு வாரத்திற்கு போதுமான சக்தியை தந்தது. 

சக்கையாக மாறியிருந்த மனதில் இனம் புரியாத எதிர்ப்பு சக்தி  உருவாகி இருந்ததை உணர்ந்து கொள்ள முடிந்தது. 

சில மாதங்களுக்கு முன்னால் நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்ட போது அவர் மகனை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

மகன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா நாட்டு மக்களின் வாழ்க்கையைப் பற்றி உரையாடும் போது சொல்லிக் கொண்டே வந்தார்.  அங்கே சுரங்க தொழிலில் உள்ளவர்களும், மற்ற குறிப்பிட்ட துறைகளில் இருப்பவர்களும்  வருடத்தில் நான்கு மாதங்கள் தாங்கள் பணிபுரியும் வேலையை விட்டுவிட்டு நாடு நாடாக சுற்றும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி சொன்ன போது நமது இந்தியச் சூழலை நினைத்துக் கொண்டேன். 

வாழ்க்கையில் பாதி தூரம் வந்து விட்ட பயணத்தில் தமிழ்நாட்டின் பாதி பகுதிகளைக் கூட இன்னமும் முழுமையாக பார்க்காத இந்த வாழ்க்கையில் இந்தியாவின் முழு விஸ்தீரனத்தை எங்கே எப்படி உணர்ந்து கொள்ள முடியும்?

கடந்து வந்த பாதை



27 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பல வருடங்கள் 2000 விசைத்தறிக்கும் மேற்பட்ட கூடத்தில் தினமும் குறைந்தபட்சம் 2 மணி நேரம் பணிபுரிந்தது ஞாபகம் வந்தது... 8 மணி நேரம் பணி செய்பவர்களை நினைத்தால்....!

முழுவதும் உணர வயதும் நேரமும் பத்தாது தான்...

எம்.ஞானசேகரன் said...

அப்போ உலகம் சுற்ற கிளம்பிட்டீங்க!? நம்ம வீட்ல இருக்கிறவங்களும் இப்படி கிளம்பறேன்னு சொன்னா எப்படி இருக்கும் நம் மனநிலை. வெளிநாட்டு வாழ்க்கை முறையும் வருமானமும் வேறு. யாருக்கும் சேர்த்து வைக்க வேண்டிய அவசியமில்லை. படிக்க வச்சுட்டா போதும். நாம அப்பிடியா? வாழ்த்துக்கள் ஜோதிஜி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இயந்திரங்களின் இரைச்சல் மட்டுமல்ல இசையின் இரைச்சலும் நமக்கு பழகி விட்டது. ரயில் பாதைக்கு அருகில் வசிப்பவர்கள் அடிக்கடி செல்லும் ரயில்சப்தத்தை எப்படி தாங்கிக் கொள்கிறார்கள் என்று எனக்கும் ஆச்சர்யமாக இருக்கும். செல்போன்களின் அழைப்பு ஒலிகள்மெல்லியதாக இருந்தாலும் காதை துன்புறுத்துவதாகவே உள்ளது.

நாம் வாழும் இடத்திற்கு அருகிலுள்ள புகழ பெற்ற இடங்களைக் கூட முழுமையாக பார்த்திருப்போமா என்பது சந்தேகம்தான்.

தி.தமிழ் இளங்கோ said...

//ஏறக்குறைய சப்தமே வாழ்க்கை. நாம் வாழும் வாழ்க்கை முழுக்க இது போன்ற இரைச்சலோடு தான் வாழ்ந்தாக வேண்டும் என்று சூழ்நிலையை மனம் இயல்பாக ஏற்றுக் கொண்டு விட்டது.//

நமக்குள் திணிக்கப்பட்ட வாழ்க்கை.

//வாழ்க்கையில் பாதி தூரம் வந்து விட்ட பயணத்தில் தமிழ்நாட்டின் பாதி பகுதிகளைக் கூட இன்னமும் முழுமையாக பார்க்காத இந்த வாழ்க்கையில் இந்தியாவின் முழு விஸ்தீரனத்தை எங்கே எப்படி உணர்ந்து கொள்ள முடியும்?//

எனக்கும் நாலு இடங்கள் சென்றுவர ஆசைதான்.உடலில் வலுவும், ஊர் சுற்ற மனமும் இருந்த போது, கையில் காசும் இல்லை சந்தர்ப்பங்களும் அமையவில்லை. இப்போது கையில் காசு இருக்கிறது குடும்பச் சூழ்நிலை, உடல்நிலை எங்கும் போக இயலவில்லை

'பரிவை' சே.குமார் said...

ரசிச்சு அனுபவிச்ச பகிர்வு....
வாழ்த்துக்கள் அண்ணா....

நீங்க சாக்கோட்டைப் பக்கமா? நான் தாங்கள் திருப்பூர் என்று நினைத்திருந்தேன்....
நான் தேவகோட்டைக்கு அருகில் சிறிய கிராமம்...

Avargal Unmaigal said...

//வெளிநாட்டு வாழ்க்கை முறையும் வருமானமும் வேறு. யாருக்கும் சேர்த்து வைக்க வேண்டிய அவசியமில்லை. படிக்க வச்சுட்டா போதும். நாம அப்பிடியா? ///

வெளிநாட்டில் High School வரை படிப்பு இலவசம் அது வரை குழந்தைகளுக்கு உணவு கொடுத்து வளர்த்தால் மட்டும் போதும் அதன் பின் காலேஜ் வரும் போது பிள்ளைகள் தனியாக சென்று விடுவார்கள் அவர்களாகே உழைத்து கல்லூரி பீஸ் புத்தகம் உணவு உடை இருப்பிடம் எல்லாவற்றிர்கும் வழி ஏற்படுத்தி கொள்வார்கள் கல்லூரிகளில் ஸ்டுடெண்ட் லோலன் கிடைக்கும் அதை அவர்கள் வாழ்க்கை முழுவதும் மெதுவாக அடைத்து கொண்டிருப்பார்கள்

மேலும் இங்குள்ள மக்கள் ரொம்ப selfish அவர்கள் தாயானாலும் பிள்ளையானலும் வாயும் வயிறும் வேறு என்பது போலதான் நடந்து கொள்வார்கள் அதனால் அவர்கள் ஊர் என்ன உலகம் முழுவதும் சுற்றிவர தயங்க மாட்டார்கள் ஆனால் நாமோ குழந்தைகள் கல்யாண வயது வரை ஏன் நம் குழந்தைகலுக்கு பேத்திவரும் வரை நாம் கவலைப்பட்டு அதற்காக பணம் சேர்து கொண்டிருப்போம்.

துளசி கோபால் said...

நாளையைப் பற்றிய கவலையில் இன்றைத் தொலைக்கும் மக்கள் நாம்:(

அக்கடான்னு போட்டது போட்டபடி நாலுமாசம் எல்லாம் சுற்றமுடியுதா சொல்லுங்க?

ஆனாலொன்னு சின்னதோ பெருசோ பயணம் என்பது மனசுக்கு நல்ல வளம் கொடுக்கும் சமாச்சாரம்தான்.

நல்லதைப் பார்த்தால் மகிழ்ச்சி கூடுதல். கெட்டதைப் பார்த்தால்..... நம் நிலையே மேல் என்று சின்னதா ஒரு ஆசுவாசம்.

பயணத்தில் மட்டும் எப்போதும் கண்டது கடுகளவு காணாதது உலகளவு தான்!

வத்தலகுண்டு என்று பார்த்ததும் மனசு துள்ளியது. போடி என்றதும் கோபாலுக்கு மகிழ்ச்சியா இருக்கும்.

மாட்டுக்கு லாடம் அடிப்பதைக் கண்கொட்டாமல் பார்த்து நின்ன காலம் நினைவுக்கு வருது!

saidaiazeez.blogspot.in said...

எனக்கும் மிகவும் பிடித்தது பயணம்.
அதிலும் நீர் நிலைகள் எனில் இரட்டிப்பு சந்தோஷம்.
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரம் தவிர almost எல்லா இடங்களுக்கும் சென்றுள்ளேன். விரைவில் அதையும் பார்த்துவிடுவேன்.
பிறகு இன்னொண்ணு!
என் அக்கா வீட்டுக்காரர் மாவு அரைக்கும் தொழில் செய்கிறார். சப்தம் எப்படி இருக்கும்?
அங்கும் நான் நன்றாக தூங்கி சாதனைபடைத்துள்ளேன்!!

ஜோதிஜி said...

எட்டு மணி நேரமா? அறவு எந்திரங்கள், சாயப்பட்டறைகள் என்பது பெரும்பாலும் 18 மணி நேர வேலைகள். எனக்குத் தெரிந்து பத்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த தொழிலாளர்களை நான் எங்கேயும் பார்த்ததே இல்லை.

ஜோதிஜி said...

சுயநலம் என்று சொல்ல முடியாது. அவரவர் வாழ்க்கை என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும் என்று நினைக்கின்றேன். நீங்களாவது அங்கே உள்ள கல்வி சார்ந்த நடைமுறைகளை எழுதுவீர்களா?

படிக்க வச்சுட்டா போதும். நாம அப்பிடியா?

இனி வரும் காலங்கள் நாம் அப்படித்தான் வாழ முடியும் என்று நினைக்கின்றேன்.

ஜோதிஜி said...

செல்போன்களின் அழைப்பு ஒலிகள்மெல்லியதாக இருந்தாலும் காதை துன்புறுத்துவதாகவே உள்ளது.

சரியான வார்த்தை.

ஜோதிஜி said...

எனக்கும் நாலு இடங்கள் சென்றுவர ஆசைதான்.உடலில் வலுவும், ஊர் சுற்ற மனமும் இருந்த போது, கையில் காசும் இல்லை சந்தர்ப்பங்களும் அமையவில்லை. இப்போது கையில் காசு இருக்கிறது குடும்பச் சூழ்நிலை, உடல்நிலை எங்கும் போக இயலவில்லை

இது இந்தியர் ஒவ்வொருவருக்கும் உண்டான நடைமுறை வாழ்க்கை. ஆனால் மத்திய அரசாங்கத்தின் தற்போதைய கொள்கையான கடன் வாங்கி செலவளி என்ற பழக்கத்தினால் விரைவில் மாறும் என்றே நம்புகின்றேன்.

ஜோதிஜி said...

ஒவ்வொரு பதிவும் தொடர்ந்து படித்துக் கொண்டு வர்றீங்க. இப்ப ஆச்சரியமா கேட்குறீங்க? நீங்க தேவைகோட்டை என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் குமார்.

ஜோதிஜி said...

நீங்கள் எழுதிய முதல் வரியை வைத்து ஏற்கனவே ஒரு பதிவு எழுதி வைத்துள்ளேன்.

ஜோதிஜி said...

நீங்கள் சொல்வதும் உண்மைதான். பழகி காதுகளுக்கு சப்தம் எந்த உறுத்தலையும் தராது போல. நானும் ஆச்சரியப்பட்டுள்ளேன். உங்கள் ரசனை தான் எனக்கும். திருநெல்வேலிக்கு அந்தப்பக்கம் உள்ள பகுதிகளை சுற்ற வேண்டும் என்பது என் தற்போதைய எண்ணம்.

”தளிர் சுரேஷ்” said...

அமைதியை தேடி ஒரு பயணம்! இயற்கையோடு இயைந்த ஊர்களை பார்த்ததில் ஒரு திருப்தி கிடைத்திருக்கும்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

Ranjani Narayanan said...

//பழகிய சத்தம் காதுகளுக்கு எந்த உறுத்தலையும் தராது// ரொம்பவும் உண்மை. எதுவுமே தினசரி வாழ்க்கை என்றால் பழகி விடுகிறது.

நிறைய ஊர்களுக்கு பயணம் செய்வது எனக்கும் மிகவும் பிடித்த ஒன்று. என் விருப்பத்திற்கு ஏற்ப சுற்ற முடியாது! சில இடங்களில் இன்னும் சில நாட்கள் இங்கேயே இருக்க மாட்டோமா என்று தோன்றும்.திருக்கண்ணபுரம் என்றுமே என் விருப்பமான இடம்.

ஜோதிஜி said...

அமைதியை தேடி ஒரு பயணம்!

தலைப்பு போலவே இருக்கிறது.

ஜோதிஜி said...

.திருக்கண்ணபுரம்

இது எங்கே உள்ளது?

Unknown said...

//வாழ்க்கையில் பாதி தூரம் வந்து விட்ட பயணத்தில் தமிழ்நாட்டின் பாதி பகுதிகளைக் கூட இன்னமும் முழுமையாக பார்க்காத இந்த வாழ்க்கையில் இந்தியாவின் முழு விஸ்தீரனத்தை எங்கே எப்படி உணர்ந்து கொள்ள முடியும்?//

தமிழ்நாட்டின் நடுத்தர மக்களில் பெரும்பாலானவர் வாழ்க்கை இப்படித்தான் முடிந்துவிடுகிறது!

'பரிவை' சே.குமார் said...

சாக்கோட்டைக்கு அருகில் என்பது இப்போதுதான் படிப்பது போன்ற ஞாபகம்??????

ஜோதிஜி said...

கடன் இல்லாமல் செத்துப் போனார்கள். இப்போது ஆசைகள் அதிகமாக உள்ளதால், சிந்தனைகள் சற்று மாறிக் கொண்டிருப்பதால் கடன் என்பது ஒட்டிப்பிறந்தது போலவே ஆகியுள்ளது.

Ranjani Narayanan said...

நாகப்பட்டினம் அருகே. திருவாரூரிலிருந்து, அல்லது கும்பகோணத்திலிருந்து செல்லலாம்.
என்னுடைய மூன்று பதிவுகள் படித்துப் பாருங்கள் இணைப்பு இதோ:
http://wp.me/p244Wx-n9 கணபுரத்தென் கருமணியே!
http://wp.me/p244Wx-nn என்னுடைய இன்னமுதே!
http://wp.me/p244Wx-nq ஏமருவும் சிலைவலவா, ராகவனே தாலேலோ

பேருந்து வழி எல்லாம் சொல்லியிருக்கிறேன். போய்விட்டு வாருங்கள் ஒருமுறை

Rathnavel Natarajan said...

வாழ்க்கையில் பாதி தூரம் வந்து விட்ட பயணத்தில் தமிழ்நாட்டின் பாதி பகுதிகளைக் கூட இன்னமும் முழுமையாக பார்க்காத இந்த வாழ்க்கையில் இந்தியாவின் முழு விஸ்தீரனத்தை எங்கே எப்படி உணர்ந்து கொள்ள முடியும்?

நிஜம் தான்.
அருமையான பதிவு. நன்றி.

ஜோதிஜி said...

நிச்சயம்.

ஜோதிஜி said...

உங்களுக்கு இப்போது வாய்ப்புள்ளதே?

கிரி said...

இரைச்சல் எனக்கும் பிடிக்காது. சில பாடல்களை சத்தமாக வைத்து கேட்கப் பிடிக்கும் ஆனால், எப்போதும் அல்ல.

பேசும்படம் படத்தில் கமல் சத்தம் உள்ள இடத்தில் இருப்பார். ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்குவார் அங்குள்ள அமைதி சொகுசு அவரை தூங்க விடாமல் இருக்கும் உடனே இவர் பகுதிக்கு சென்று அந்த சத்தத்தை பதிவு செய்து வந்து அதை இங்கு போட்டு அந்த சத்தத்துடன் தூங்குவார் :-) அது மாதிரி ஒரு சிலருக்கு அமைதியாக இருந்தால் அந்த இடத்தில் இருக்கவே முடியாது.

சத்தம் எப்படி கொடுமையோ அது போல மயான அமைதியும் எனக்கு வெறுப்பையே தரும்.

பல இடங்களுக்கு போவது எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஆனால், எனக்கு அது போல சுற்ற ஏனோ வாய்ப்பு கிடைக்கவில்லை / சந்தர்ப்பம் அமையவில்லை. வட மாநிலங்களில் பல இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பது என் விருப்பம்.