இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பும், பெற்ற பின்பும் சிங்கள குடியேற்றங்களை பெருவாரியான பகுதிகளில் நீக்கமற உருவாக்கிக்கொண்டிருந்த சிங்களர்களின் தந்தை டான் ஸ்டீபன் சேனநாயகா தன்னை முதலாம் பராக்கிரமபாகு என்று அழைப்பதைப் பெருமையாகக் கருதினார்.
தமிழர்களை வீழ்த்தி, சிங்கள ராஜியத்தை உருவாக்கி உருவாக்கிய மன்னனாக இருந்தவனை தன்னுடைய குருவாக கருதி செயல்பட்டார். அப்போதும் வெள்ளை சால்வை அணிந்து பௌத்த சின்னங்கள் முன் வணங்கி, புனித சின்னங்கள் அடங்கிய பெட்டியை சுமந்து சென்று புத்தபிக்குகளிடம் ஆசி வாங்கினார்.
52 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ராஜபக்ஷே.
கண்டியில் தலதா மாளிகை.கண்டி ராஜ்யத்தை ஆண்ட மன்னர்களின் அரண்மணை வளாகத்தில் அமைந்து இருக்கும் இந்த பௌத்த ஆலயத்தில் புத்தரின் பல் இருப்பதாகவும், புனித சின்னமாகவும் கருதப்படுகிறது. பதவியேற்கும் ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளர்களும் தங்களுடைய புனித பயணத்தை இங்கிருந்தே தொடங்குகிறார்கள். ஆனால் அவர்களின் அரசியல் விளையாட்டின் முடிவு மட்டும் வேறு எங்கேயோ முடிந்து விடுகிறது.
ஆனால் இந்த விருது வாங்கவும், விருந்தில் கலந்து கொள்ளவும் ராஜபக்ஷே கொடுத்த விலைக்கான பட்டியல் சற்று நீளமானது.
மொத்தத்தில் முள்ளிவாய்க்கால் என்றொரு இடம் இலங்கை தமிழனத்தின் செங்குருதி ஓடி நந்திக்கடல் பகுதியை ரத்த வாய்க்கால் போல் மாற்றி விட்டது. உலக சரித்திர பக்கங்களில் இரண்டாம் ஹிட்லர் என்ற பட்டத்தை பெற்றுக் கொண்டு தான் நினைத்து வைத்திருந்த குறிக்கோளைத் அடைந்தே விட்டார். இதைத்தவிர வேறு எதிலும் சிந்தனை செலுத்த முடியாத அளவிற்கு தொடக்கம் முதல் அத்தனை முன்னேற்பாடுகளையும் உருவாக்கியிருந்தார்.
நவம்பர் 2005 அன்று மகிந்த ராஜபக்ஷே ஆட்சிப்பொறுப்புக்கு வந்த போது அப்போதே ராணுவ செலவு திமிறிக்கொண்டுருந்தது. இது இலங்கையில் இயல்பான நிகழ்ச்சி. சர்வதேச உலகில் இன்று பாகிஸ்தான் எப்படி பாவமாகத் தெரிகிறதோ இலங்கையும் ஏறக்குறைய அப்படித்தான் இருக்கிறது. ஆனாலும் இலங்கைக்கு வேறொரு வகையில் இயற்கை ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பை உருவாக்கியிருந்தது.
மேலாதிக்கம் செலுத்த விரும்பும் வளர்ந்த நாடுகள் தாங்கள் விரும்பக்கூடிய முதல் பத்து துறைமுக வரிசையில் திருகோணமலை இயற்கை துறைமுகம் இருப்பதால் எப்போது ஒரு கனிவான பார்வை இலங்கையின் மேல் உண்டு. உள்ளே எந்த அக்கப்போர் நடந்தாலும் அது குறித்து கவலையில்லை. அடுத்தவர் உள்ளே நுழையாத வரைக்கும் நீ ஆடு ராஜா ஆடு என்ற உசுப்பேத்தல் தான். பங்களாளிகளும், சகலை நாடுகளும் தீவுக்கு வெளியே நின்று விசில் அடித்து ரசிப்பதோடு சரி.
இந்த இடத்தில் இந்தியாவுக்கு எப்போதுமே தீராத பிரச்சனை. வயித்து பிள்ளைக்காரி அடிவயிற்று மேட்டை தடவிப்பார்ப்பது போல் ஒரு கவலை.
நாடு திவால் என்ற நிலைமை குறித்தோ, உள்ளே செய்ய வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்தோ ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷேவுக்கு முக்கியம் இல்லை. காரணம் சந்திரிகா ஆட்சியின் போது இதைவிட கேவலமெல்லாம் நடந்து முடிந்து இருந்தது. அரசாங்க அடிப்படை செலவீனங்களுக்கே ததிங்கிணத்தோம் போட்டுக்கொண்டுருந்தார்கள். ஆனால் அதைவிட வந்து அமரும் சிங்கள தலைவர்களுக்கு கொள்கை ஒன்று இருக்கிறதே? விட்டுக்கொடுக்க முடியுமா?
அமைதிக்கான முயற்சி எடுப்பேன் என்று உள்ளே வந்த ராஜபக்ஷே முயற்சித்து ஆரம்பித்தது தான் இறுதிப்போர் என்றழைக்கப்படும் இந்த யுத்தம். இதற்கான ஆயுத கொள்முதல் காரணமாக மேலும் மேலும் ராணுவச் செலவு வீங்கி பெருக்கத் தொடங்கியது.
குறிப்பாகச் சொல்லப்போனால் 2006 இலங்கை ராணுவத்திற்கான செலவிடு 700 மில்லியன் அமெரிக்கா டாலர். ஆனால் இதுவே 2007 ஆம் ஆண்டு 1 பில்லியன் அமெரிக்கா டாலரானது.
உள்ளே வாழ்ந்து கொண்டுருக்கும் மக்கள் நல்வாழ்வு இரண்டாம் பட்சமானது.
அன்று ஜே.ஆர். ஜெவர்த்னேவுக்கு பாதுகாப்புக்கு, ஆட்சிக்கு என்று அமைந்திருந்த அவரது சகோதரர் போலவே ராஜபக்ஷேவுக்கு தனது குடும்ப கூட்டணியை வெற்றிகரமாக அமைத்த பிறகு ஆயுதக் கொள்முதல் அதிகாரபூர்வமாக கோத்தபாய ராஜபக்ஷே நேரிடைப் பார்வையில் நடந்தேறத் தொடங்கியது. மற்றொரு சகோதரர் பசில் ராஜபக்ஷே. . விட்டதையும் தொட்டதையும் இறுதி வடிவத்திற்கு கொண்டு வருவது. முக்கோண கூட்டணி.
விடுதலைப்புலிகளின் வீரத்தை மட்டுமே நம்பிய போராட்டங்கள் இவர்களின் விவேகத்திற்கு முன் நொறுங்கத் தொடங்கியது. கண்ணில் விழுந்த தூசியாக உறுத்திக் கொண்டுருந்தவர்களை நீக்கமுடியாமல் தவித்தவர்கள் கண்களையே நோண்டி விடலாமென்று முடிவெடுத்தது ஆச்சரியமல்ல.
ஹிந்துஸ்தான் டைம்ஸில் பத்திரிக்கையாளர் பி.கே. பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளபடி,
"தெற்காசியாவிலேயே இலங்கையில் உள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகமாகி விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தலை சமாளிக்க வேண்டிய நெருக்கடியான நிலைமையில் அரசாங்கம் இருந்தது ".
ஆனால் சகோதர கூட்டணி மிகத் தெளிவாக இருந்தனர். முடிவுக்கு கொண்டு வந்து விடவேண்டும். முற்றிலும் துடைத்து விட வேண்டும். சொன்னபடியே செய்து காட்டியும் விட்டார்கள்.
அரசியல் என்பது ஒரு கலை. கற்றுக்கொடுத்து வருவதல்ல. கற்று வைத்திருப்பதை, தருணம் பார்த்து நடத்திக் காட்டுவது. ஏணியின் தொடக்கமா? இல்லை பாம்பின் வாயிலா என்பது ஆட்ட களத்தில் இருப்பவர்கள் மட்டுமே அறிந்த ரகஸ்யம்.
மற்ற நாடுகளில் இருந்து வாங்கும் ஆயுத கொள்முதலை மற்றவர்களுக்கு கொடுத்து விடமுடியுமா? ராஜபக்ஷே குடும்ப லங்கா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமே கையாளத்தொடங்கியது.
2006 ஏப்ரல் முதல் போணி சீனாவிடம் இருந்து. 37.6 மில்லியன் டாலர். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான். லண்டனில் இருந்து வெளியாகும் ஜேன்ஸ் டிபென்ஸ வீக்லி இலங்கை கொள்முதல் செய்து கொண்டுருக்கும் பட்டியலை வெளியிட்ட போது அன்று சர்வதேச தமிழர்கள் மத்தியில் எப்போது போலவே விடுதலைப்புலிகள் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை.
எத்தனையோ பேர்கள் வந்து விட்டார்கள். அதில் ராஜபக்ஷேவும் ஒருவர். இவரின் முடிவு இன்றோ நாளையோ?
படித்து விட்டு மறந்து போயிருப்பர்.
ஆனால் தமிழனம் மற்க்க முடியாத கோரங்களை இந்த உலகமே அமைதியாய் பார்க்கப்போகின்ற நாள் வந்து சேரும் என்று எவரும் நினைத்துருப்பார்களா?
ஆடிக்காற்றில் பறந்த அம்மியைப் போலவே பறந்து வந்து விழுந்த நவீன கண்டு பிடிப்பு குண்டுகள். ரசாயனக் குண்டுகள், கொத்துக் குண்டுகள், பல்குழல் எறிகணைகள், 33 மாதங்களாக தினந்தோறும் நிகழ்த்தப்பட்ட வான்வெளித் தாக்குதல்கள், வந்து விழுந்து கொண்டேயிருந்த குண்டு மழைகள். கண்ணீர் வற்றிப் போகும் அளவிற்கு நினைத்துப் பார்க்க முடியாத கோரங்களை உருவாக்கியிருந்தது.
இரண்டு புறமும் வாழ்வா சாவா என்று முட்டிக்கொண்டு முடிவே இல்லாமல் போய் கொண்டே இருந்தது.
ஐ.நா வின் சார்பாக பணிபுரிந்தவர்களும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளும் கூட, தப்பித்தோம் பிழைத்தோம் என்று நாட்டை விட்டு ஓடத் தொடங்கினர், இலங்கை நாட்டின் அச்சுறுத்தல்களையும் மீறி ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த அறிக்கை மூலம் தான உள்ளே என்ன நடந்து கொண்டுருக்கிறது என்பதை தமிழர்கள் அறிந்து கொள்ள முடிந்தது, உள்ளே நடந்து கொண்டுருந்த கோரத்தை அதன் மூலம் தான் பலருக்கும் புரியத் தொடங்கியது,
காரணம் கோத்தபாய நிர்வாகம் என்பது அந்த அளவிற்கு அச்சுறுத்தல்களை தீவு முழுக்க உருவாக்கியிருந்தது.
’கடைசி கட்ட போரினால் 40,000 மக்கள் உயிர் இழந்திருக்கக்கூடும்’ வெளியே தப்பித்து வந்த ஊடகம் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்தவர்வக்ள் சொன்ன கணக்கு இது. .
இலங்கைத் தீவின் நான்கு புறமும் நீர் என்பது போல தீவைச் சுற்றிலும் அணிவகுத்து நின்ற நாடுகளின் கப்பல்களும், உள்ளே, முடிந்தவரையிலும் முற்றுகையை நெருக்கிக்கொண்டே உள்ளே வந்தது. இந்த போர் முடிவுக்கு வந்தே ஆக வேண்டும்!
வராமல் இருந்தால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது ராஜபக்ஷேவுக்கும் தெரியும்!
விடுதலைப்புலிகளைப் போலவே வேறொரு புதிய எதிரி சர்வதேச சமூகத்தில் இருந்து உருவாகக்கூடும்.
அவரே சொன்னது போல் ஆறடி மண்ணுக்குள் கொண்டு போகக்கூட அவரது உடல் கிடைத்து இருக்காது. முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே கழுகுப் பார்வையாய் பார்த்துக்கொண்டுருக்கும் வணிகம் சார்ந்த நாடுகளின் பேராவல் நிறைவேறும்.
இறுதிக்கட்ட நாட்களில் வன்னிப் பகுதியில் மட்டும் 20,000 அப்பாவி பொதுமக்கள் வீதியெங்கும் இறந்து கிடந்தனர்.
போருக்கு எப்போது தர்ம நியாயங்கள் முக்கியமல்ல. வெற்றி மட்டுமே முக்கியம்.
குழந்தைகள் முதல் மொத்த குடும்பங்கள் வரைக்கும் அத்தனை பேர்களும் அனாதை பிணமாக காணும் இடங்களிலெல்லாம் சிதறிக் கிடந்தார்கள். எந்த பாரபட்சமும் இல்லை. இலங்கை இராணுவத்தின் நோக்கமென்பது விடுதலைப்புலிகளை அழிப்பது என்பதாக இருந்தாலும் வான்படை தாக்குதல்கள் மூலம் தொடர்ச்சியாக வீசப்பட்ட கொத்து குண்டுகள் குடியிருப்பு பகுதிகளை சர்வநாசப்படுத்தியது. பூமியை துளைத்து ஊடுருவிய ரசாயன குண்டுகள் மொத்த இடத்தையும் அழிவுப் பிரதேசமாக்கியது.
சர்வதேசம் பார்த்து விடக்கூடாது என்பதற்காக உடனடியாக ஒவ்வொரு கட்டத்திலும் உருவான தடயங்களையும் அழித்து முன்னேறிக் கொண்டுருந்தார்கள்..
தடைசெய்யப்பட்ட பகுதி என்பதோ, பயன்படுத்தக்கூடாத ஆயுதங்கள் என்பதோ இறுதிக்கட்ட பரபரப்பில் இலங்கை ராணுவத்திற்கு பொருட்டே அல்ல.
கடைசிக்கட்ட தாக்குதல்களில் ஈடுபட்ட வீர்ர்களுக்கு வழங்கப்பட்ட போதைவஸ்துகளைப் போலவே அவர்களின் நடவடிக்கைகளும் மிக்க் கொடூரமாக இருந்த்து. அப்பாவி மக்கள் கதறக்கூட நேரமின்றி கண நேரத்தில் பிணமாக மாற்றினர்.
விடுதலைப்புலிகளின் கரும்புலி தாக்குதல்களினால் உயிர் இழந்த சிங்கள இராணுவ வீரர்களின் கணக்கை எப்போதும் அவர்கள் வெளியிடப்போவதில்லை.
வெற்றி ஒன்று மட்டுமே குறிக்கோள். இறந்தவர்களின் கணக்கு என்பது போருக்கு தேவையில்லாதது.
ஈழத்தில் இலங்கை இராணுவம் பயன்படுத்தும் பல்குழல் எறிகணைகள் நிமிடமொன்றுக்கு சுமார் 40 எறிகணைகள் வெடிக்கும் தன்மை உடையது. மழை போல் பொழிந்து கொண்டே சென்றனர். இரசாயனக்குண்டுகள், விழும் ஒவ்வொரு இடத்திலும் துளைத்து உள்ளே நுழைந்து 50 சதுரமீட்டர் பரப்பளவை பொசுக்கும் தன்மை உடையது.
சர்வதேச போர் விதிமுறைகள் அன்று தீவுக்கு வெளியே காற்று வாங்கிக்கொண்டுருந்தது.
திடுக்கிடும் திருப்பம் போல் ஒற்றுமையாய் நின்று பெரிய அவலத்தை மே 17 2009 அன்று முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.
உச்சி மாநாட்டில் இருந்து வந்து இறங்கியதும், ராஜபக்ஷே பாதுகாப்பு செயலாளராக இருந்த சகோதரர் ராஜபக்ஷேவை உச்சி முகர்ந்திருப்பார். தங்களுக்குள் வெளியே தெரியாத பரஸ்பர நல்லிணக்கத்தை பறிமாறி கூட்டல் கழித்தலுக்குப் பிறகு எச்சமும் சொச்சமாய் தப்பி பிழைத்து வந்த தமிழ், இனத்தை கூடார மக்களாகவும் மாற்றியாகி விட்டது.
இராமாயண காவியத்தில் வரும் ராமனுக்கு பிரச்சனையை உருவாக்கிய மாயமான் போலவே பிரபாகரன் விரும்பிய தனித் தமிழீழம் என்பது கைகளில் சிக்காமல் ஒரு இனமே சிதறடிக்கப்பட்டாகிவிட்டது.
வரலாறு எப்போதும் போலவே இதையும் அமைதியாய் தனக்குள் பதிவு செய்து கொண்டு விட்டது.
உலக அமைதிக்கான பாதுகாவலர்கள் அமைதி காக்க, இலங்கையின் உள்ளே கடந்த 50 ஆண்டுகளாக நடந்து கொண்டுருந்த இன துவேஷச அரசியல் என்பது மாறி இன்று தீவிரவாதம் என்பதாக மாற்றப்பட்டு உள்ளது.
நடத்தப்பட்ட அத்தனை கொடூரங்களையும் தடுத்து நிறுத்த எவருக்கும் தகுதியில்லை. தகுதியிருந்தவர்களும் தரமானவர்களாகவும் இல்லை.
உலக தமிழினத்தை வெறும் வேடிக்கையாளர்களாக பார்க்க வைத்துவிட்டது.
தமிழர்களின் பண்பாட்டு பக்தியும் உதவிக்கு வரவில்லை. விடுதலைப்புலிகள் இறுதி வரைக்கும் போராடிய சக்திக்கும் பலனில்லாமல் போய்விட்டது.
"இலங்கையின் இறையாண்மையில் இந்தியா தலையிடாது. அதிபர் ராஜபக்ஷே என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்பதை சொல்ல வேண்டிய அவஸ்யம் இந்தியாவிற்கு இல்லை" - சிவசங்கர மேனன்.
"இந்த நூற்றாண்டின் இணையற்ற படைத்தளபதி சரத் பொன்சேகா" - எம். கே. நாராயணன்.
"ஈழ நான்காம் யுத்தம் முடிவுக்கு கொண்டு வர உதவிய இந்தியாவின் பங்கு மகத்தானது" - இலங்கை
"ஐ. நா பான் கி மூன் உடன் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுருந்த முகாமை பார்வையிட்ட போது சரித்திரத்தில் படித்த ஹிட்லரின் வதை முகாமை நினைவு படுத்துவதாக இருந்தது" - டைம்ஸ் ஆப் இந்தியா
இன்றைய தினத்தில் மொத்தமும் வெற்றி பெற்றவர் பார்வையாக சரித்திரம் திரும்பி விட்டது.
உலக அதிகார வர்க்கத்தின் பார்வையில் பிரபாகரன் ஒரு தீவிரவாதி. நடத்தப்பட்ட போரினால் வாழ்க்கை இழந்தவர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை, உடல் உறுப்புகளை, வாழ்வாதாரங்களை இழந்தவர்கள் குறித்து சர்வதேச அரசியலுக்கு அக்கறையில்லை.
காரணம் இதுவொரு அரசியல் விளையாட்டு
உலகில் பதவி ஆசை என்பது அனைத்தையும் விட மேலானது. பதவி கொடுக்கும் பணம், புகழ், அந்தஸ்த்து முன்னால் எதுவும் வந்து நிற்க முடியாது. உலகில் தர்ம நியாயங்கள் அனைத்தும் வணிகம் சார்ந்தே இயங்குகின்றது.
மனிதர்கள் அன்றும் இன்றும் என்றும் வெறும் பொம்மையே. சிலர் வேடிக்கை காட்ட, பலர் வேடிக்கைப் பார்க்க.
தொடர்வோம்............
ஆரம்பம் இங்கே.
முதல் பகுதி இங்கே.
முற்றுகைக்குள் இந்தியா தொடர்.
ஈழம் குறித்து எழுதத் தொடங்கிய தலைப்புகள் இங்கே
6 comments:
விடுதலை புலிகளின் ஒரு பிரிவு ராஜபக்சாவிடம் விலை போனதை குறிப்பிட்டு இருக்கலாம், ரணில் வெற்றி பெறும் சூழல் இருந்தும், தமிழர்களை வாக்களிக்க விடாமல் பண்ணி ராஜபக்சேவை வெற்றிப் பெறச் செய்தது முதல் புலத்தில் திரட்ட பட்ட நிதிகளை புலத்திலேயே ஆஸ்திகளாக மாற்றியது, போருக்கு பின் முன்னாள் புலிகளான கருணா, பிள்ளையான், கேபி எனப் பலரும் ராஜபக்சாவோடு கைக்கோர்த்தது வரை ஒன்றை மட்டும் சொல்கின்றது சிங்களவன் மோடையரல்ல, தமிழர்கள் சுயநலவாதிகள் என்பது தான். வன்னியில் செத்தவர் எல்லாம் தலித்கள் என்பதை மறுத்துவிட்டு மீண்டும் பேசும் தமிழீழ முழக்கங்கள் மக்டோனால்ட் கடைகளில் உண்டபடி . :'(
சுருக்கமாக, தெளிவாக சொல்லிவிட்டீர்கள். இருந்தாலும் நாம் தமிழர்கள் என்பதால் சில விஷயங்களை விட்டு விட்டீர்கள்.
இன்றைய உலகத்துக்கு வீரம் தேவை இல்லை விவேகம்தான் தேவை. அது பிரபாகரனிடம் இல்லை.தாயாய் பிள்ளையாய் இருந்தாலும், வாயும் வயிறும் வேறு என்பதுபோல், ஒவ்வொரு நாடும் தன் நலன் சார்ந்துதான் முடிவெடுக்கும் என்ற எதார்த்தம் அவர்களுக்கு புரியவில்லை.
இங்கே தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் ராமதாஸ் கிங் மேக்கராக இருந்தார். அவருடைய பலம் சொற்பம்தான். ஆனால் ஓட்டுக் கணக்கில் அவர் கொடுக்கும் சதவிகிதம் உங்களை பலசாலியாக மாற்றும் என்பதால் அவருக்கு அந்த மரியாதை. அதேபோல் உள்ளுக்குள் விஷத்தை வைத்துக் கொண்டு கலைஞரும்- வைகோவும், அம்மாவும் -கேப்டனும் தேர்தலில் கூட்டணி வைத்தார்கள்,வெற்றிகளை பறித்தார்கள்.
இதை சுயநலம் என்று கூறினாலும் ராஜதந்திரம் இதுதான். இந்த அரசியல் பிரபாகரனுக்கு தெரியவில்லை. அவருக்கு ஆதரவாக இங்கே இருந்தவர்களும் அரசியல் தெரியாத அரசியல்வாதிகளாக இருந்தார்கள். எல்லாம் காலத்தின் கோலம்.
வருத்தமான உண்மைகள்.
இருவரின் விமர்சனமும் வெவ்வேறு பேசு பொருளைப் பேசினாலும் இரண்டும் ஒரே புள்ளியில் இருப்பதாக எனக்குத் தெரிகின்றது.
//சர்வதேச போர் விதிமுறைகள் அன்று தீவுக்கு வெளியே காற்று வாங்கிக்கொண்டுருந்தது.
மிகக் கொடுமை.
பிரபாகரனின் தலைமை ஒரு கேள்விக்குறி தான். தன் பின்னால் ஒரு இனமே இருக்கையில் அதற்கான பொறுப்பை அவர் உணரவில்லை என்றே தோன்றுகிறது. இனத்தின் மீது அக்கறை கொண்டவர் எத்தனையோ வெளியுறவு உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம். தீவிரவாதம் என்ற முத்திரை தமிழீழக் கொள்கையின் ஆதாரக் கவர்ச்சியைக் கொன்று விட்டதாகவே நினைக்கிறேன்.
அருமையான கட்டுரைத் தொடர். breathtaking read.
கட்டுரை எழுதத் தொடங்கிய ஒவ்வொரு முறையும் குறிப்பாக ஈழம் சார்ந்த கட்டுரைகளின் போது உங்கள் நினைப்பு தான் வருகின்றது அப்பாதுரை. எனக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகார வார்த்தைகள் உங்களுடையது.
Post a Comment