Thursday, February 21, 2013

வட்டத்திற்குள் சிக்காத மனிதர்கள்


எவரிடமும் வேண்டுமானாலும் பேசிப்பாருங்கள்.  

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நான்கு திசைக்குள் தான் அடங்கியிருக்கும். 

தனது வாழ்க்கை, தன் குடும்பம், தங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்கள்

இந்த நான்கும் தான் ஒவ்வொருவரின் வாழ்க்கை வாழ வைக்கின்றது. மேலும் வாழ வேண்டுமென்ற ஆசையை ஒவ்வொரு நிலையிலும் தூண்டிக் கொண்டேயிருக்கின்றது.

இதனை தாண்டி வந்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கும். அல்லது மாறுதலாக வாழ்ந்து பார்க்கலாம் என்று யோசித்தவர்களின் வாழ்க்கையும் பாதியில் அதோகதியாக மாறியிருக்கும். 

எதார்த்தம் என்பது எவரும் நினைத்துப் பார்க்க முடியாது. அது எப்போதும் போல உண்மையாகவே இருக்கும்.  நாம் தான் புரிந்து கொள்வதே இல்லை.

ஆனாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த சொற்ப எண்ணிக்கை தான் இந்த சமூகம் வளர்வதற்கு காரணமாக இருந்து இருக்கின்றார்கள் என்பதையாவது ஏற்றுக் கொள்வீர்களா? நீங்களும் நானும் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மகிழ்ச்சிக்குப் பின்னாலும் கண்களுக்குத் தெரியாத ஆயிரக்கணக்கான மனிதர்களின் தன்னலமற்ற உழைப்பு இருந்தது என்பதை உணர்வீர்களா?

அரசியல் தலைவர்கள், தனிப்பட்ட சமூகத் தலைவர்கள்,  ஆன்மீகத்தின் மூலம் வழிகாட்டியாக இருந்தவர்கள், தங்கள் கருத்துக்கள் மூலம் சமூகத்தை வேறொரு பாதைக்கு கொண்டு சென்றவர்கள், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உலகத்திற்கு தந்தவர்கள் என்று வாழ்ந்தவர்கள் கடைசிவரைக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்து இருப்பார்கள் என்று நினைக்கின்றீர்களா?

மகிழ்ச்சி என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான அளவு கோல் இருக்கின்றது.  பெட்டி நிறைய பணம், மனைவி விரும்பும் அளவிற்கு நகை, குழந்தைகள் பாதுகாப்புக்கு இடங்கள், வங்கிக் கணக்கில் நிறைந்துருக்கும் பணம் என்று இந்த அளவுகோலுக்கு எல்லையே இல்லை.
ஆனாலும் அனைத்தையும் தாண்டி பலரும் இந்த சமூகத்தில் வாழ்ந்து மறைந்திருக்கின்றார்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.

நாம் எத்தனை தத்துவங்கள் பேசினாலும் பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்றொதொரு வாக்கியத்திற்குள் அத்தனையும் அடிபட்டு போய்விடும். 

ஆனால் இதையும் தாண்டி சிலர் ஜெயித்து மேலேறி வந்து விடுகின்றார்கள். நம் கண்களுக்கு அவர்கள் கடைசி வரைக்கும் தென்படுவதே இல்லை. அது போன்ற நபர்கள் நம் கண்களுக்கு தெரிந்த போதிலும் நம் சூழ்நிலை அவர்களை பொருட்படுத்தாது அடுத்த நிலைக்கு கடந்து செல்ல தினந்தோறும் உழைத்துக் கொண்டேயிருக்கின்றோம்.

என்னுடைய வாழ்க்கையிலும் பணத்தை மட்டுமே தேடி அலைந்த காலமும் இருந்தது.  ஆனால் சூழ்நிலைகள் உருவாக்கிய சதிராட்டத்தில் சேர்த்த பணம் கை கழுவி சென்ற போது மனம் முழுக்க வெறுமையாக இருந்தது. மறுபடியும் பணத்தை துரத்தத் தொடங்கிய போது கைக்குள் வராமல் பழிப்பு காட்டி பாடங்கள் நடத்தத் தொடங்கியது. அது போன்ற காலம் நடத்திய பாடங்களில் ஒன்று தான் இந்த எனது எழுத்துப் பயணம்.

பணத்திற்கு அப்பாற்பட்ட இந்த உலகில் உள்ள ஒவ்வொன்றும் எனக்கு அறிமுகமானது. இன்று வரையிலும் எத்தனையோ விசயங்கள் நாள்தோறும் அறிமுகமாகிக் கொண்டேயிருக்கின்றது. நினைத்துப் பார்க்க முடியாத மனிதர்களின் தொடர்பு கிடைத்துக் கொண்டேயிருக்கின்றது.  நிச்சயம் பணம் என்ற ஒரு காகிதத்தால் சாதிக்க முடியாத பல விசயங்கள் இந்த உலகில் அதிகம் உண்டு என்பதை உணர வைத்தது இந்த எழுத்துப் பயணமே.

திருப்தி என்ற வார்த்தைக்கு மட்டும் முடிவே இல்லை. ஆனாலும் திருப்தியடைய என்ற வார்த்தைக்காக நாம் பல முயற்சிகளில் இறங்கி ஓயாமல் போராடிக் கொண்டேயிருக்கின்றோம். 

ஆனால் சென்ற வருடம் செப் 25 2012 அன்று புதுக்கோட்டையில் உள்ள சகோதரி குடும்பத்திற்கு செல்ல வேண்டிய கடமையிருந்தது.  

நான் உறவுகள் அழைப்புக்கு எளிதில் சென்று விடுவதில்லை. ஆனால் ஏதோவொரு சமயத்தில் அத்தனை பேர்களையும் சந்தித்துவிடுவதுண்டு. மனைவி குழந்தைகளை வாய்ப்பு கிடைத்தால் அனுப்பி விடுவதுண்டு.  இன்னமும் கூட்டுக்குடித்தன வாழ்க்கை முறையில் இருப்பதால் குடும்பத்தில் யாரோ ஒருவர் என் குடும்பம் சார்ந்த விருப்பங்களை என் சார்பாக (திட்டிக் கொண்டே) நிறைவேற்றி வைத்து விடுகின்றார்கள்.  தப்பி பிழைத்து மகிழ்ச்சியாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

அப்போது தான் 20 வருடங்களுக்கு பிறகு அக்கா மகன் பயன்படுத்தும் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு புதுக்கோட்டை திருக்கோர்ணம் பகுதியில் உள்ள ஞானாலயா ஆய்வு நூலகத்திற்கு (செப்டம்பர் 26 2012) அன்று சென்றேன். என் உடல் சார்ந்த ஆரோக்கியத்தை அந்த நான்கு கிலோ மீட்டர் மிதிவண்டி பயணம் உணர்த்தியது.

மூச்சு வாங்கினாலும் திருப்திகரமாகவே இருந்தது.

நாம் ஏன் வாழ வேண்டும்? எதற்காக வாழ வேண்டும்? எப்படி வாழ வேண்டும்? போன்ற என்னுள் இருந்த கேள்விகளுக்குள் இருந்த தூசிகளை அந்த ஆலயத்தில் தான் கழுவிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது?

ஞானாலயா பயணம் தொடரும்......................

டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில் ஞானாலயா ஆய்வு நூலகம் நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி உரையாற்றிய காணொளி (27.01.2012)

முந்தைய பதிவு.



4 comments:

துளசி கோபால் said...

நிறைவான வாழ்க்கை என்று கொண்டாட முடியாதபடிக்கு எதாவது ஒரு சின்னக்குறையாவது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கத்தானே செய்யுது:(

கவலைகளை மறக்க எழுதுவது(ம்) ஒரு போதைதான்!

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு இனிய பாராட்டுகள்.

நிகழ்காலத்தில்... said...

ஞானாலயாவை நோக்கிய முதல் பயண அனுபவமா ? நல்ல ஆரம்பம் வாழ்த்துகள்..

ஜோதிஜி said...

நீங்கள் சொல்வது சரிதான். பாரங்களை இறக்கி வைக்க உதவும் இந்த வலைதளத்தை கண்டுபிடித்தவர்களையும் சேர்த்து பாராட்டத் தோன்றுகின்றது.

ஜோதிஜி said...

நன்றி சிவா