Wednesday, February 13, 2013

டாலர் நகரம் (இனி) கனவு தேசமா? கண்ணீர் தேசமா?



டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா மலருக்காக நான் எழுதிய கட்டுரை.

வணக்கம்.

இந்த விழா மலரின்  வாயிலாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.  

நீங்கள் திருப்பூரின் மண்ணின் மைந்தரா? பிழைப்பு தேடி வந்தவரா? பக்கத்து ஊரில் இருந்து வந்து இங்கே வாழத் தொடங்கியவரா? தொழில் அதிபரா? அதிபராக மாறும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுருப்பவரா? ஏற்றுமதி நிறுவனங்களில் மேலாளார் பதவியில் இருப்பவரா? மேலான உழைப்பை காட்டி விட்டேன். ஆனால் என்னால் இன்னமும் முன்னேற முடியவில்லை என்று புலம்புவரா? 

வாருங்கள் நானும் உங்களைப் போலத்தான். 

புலம்பியிருக்கின்றேன். மற்றவர்களை குறைத்து மதிப்பிட்டு இருக்கின்றேன். என்னை என் திறமையை உணராமல் பல காலம் வாழ்ந்தும் இருக்கின்றேன். அதன் பாதிப்புகளை பக்குவமாக மனதில் சுமந்து வைத்திருந்தேன்.  இன்று இந்த டாலர் நகரம் புத்தகத்தில் இறக்கி வைத்துள்ளேன்.

இது நீங்கள் வாசிக்க வேண்டிய நூல மட்டுமல்ல. சுவாசிக்க வேண்டிய கருத்துக்களும் அடங்கிய நூலும் கூட. கருத்து கந்தசாமி கணக்காக உங்களின் தற்போதைய வேதனைகளை ரணமாக்கும் முயற்சி அல்ல. அந்த ரணத்திற்கு மேல் மருந்து போடும் நூல் இது.  வாழ்ந்து கெட்டவனின் வீட்டுச் சுவற்றில் காதைக் கொண்டு போய் வைத்தால் கூட கதை சொல்லுமாம்.  ஆனால் நான் உங்கள் காதை கேட்கவில்லை. உங்கள் கண்களை இரவலாக கேட்கின்றேன்.  அந்த கணகள் வாசிக்கும் வார்த்தைகள் உங்கள் மனதை மாற்றும் அல்லது புதிய நம்பிக்கைகளை உருவாக்கும்.  நம்பி கை வை என்பதன் மற்றொரு பெயர் தான் நம்பிக்கை என்பதை நீங்கள் அறிவீர்களா?

உங்களைப் பற்றித்தான் எழுதியிருக்கின்றேன். உங்களில் ஒருவனாக நானும் இந்த கட்டுரைகளில் கதைகளில் கற்பனை வடிவத்தில் வாழ்ந்து இருக்கின்றேன். 

கண்ணீர் சிந்தாமல், ஏராளமான உழைப்பை இந்த ஊரில் பிழைப்பதற்காக சிந்தியிருக்கின்றேன். ஒரு முறை வாசித்துப் பாருங்கள். உங்களின் ஆன்மா பல கேள்விகளை எழுப்பும். அட நானும் இப்படித்தான் என்று உங்கள் மனம் குதுகலிக்கும். அட இதை நாம் கவனித்தது இல்லையே? என்று பார்வை விரியும். பக்கவாட்டு மனிதர்களை கண்டுகொள்ளாமல் இத்தனை நாளும் இங்கே வாழ்ந்து இருக்கின்றோமோ? என்ற கேள்விகள் இயல்பாக எழும். 

சாயத்தண்ணீரை கடந்து வந்து இருப்போம். நள்ளிரவில் ஆடைகளுக்கிடையே பல நாட்கள் படுத்து உறங்கியிருப்போம்.  வாகனத்தில் பெட்டிகள் ஏறும் வரைக்கும் உண்டான பிரசவ வேதனை அனுபவித்து இருப்போம்.  ஆனால் ஜெயித்த திருப்தியில் பல நாட்கள் மனம் முழுக்க மகிழ்ச்சியில் திளைத்திருப்போம். இந்த ஆடைத் தொழிலில் அடிப்படைகள் என்னவென்று தெரியாமல் உள்ளே வந்து அத்தனையும் கற்று நாமும் ஒரு நிர்வாகத்தின் உயர்பதவியில் வந்துள்ளோம் என்று ஊர்முழுக்க பறைசாற்றியிருப்போம்.

காரணம் நம் உழைப்பு. அந்த உழைப்பு உருவாக்கிய திறமை. திறமை உருவாக்கிய விடாமுயற்சி. 

முயற்சித்தவர்கள் அத்தனை பேர்களும் இங்கே ஜெயித்தவர்களின் பட்டியலில் தான் இருக்கின்றார்கள். அதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உண்டா? ஆனால் ஜெயித்தவர்கள் உருவாக்கிய பாதை, இன்று நாம் வந்து சேர்ந்த பாதை தான் நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்து கொண்டிருக்கிறது. இறுகிய முகமாய், குழப்ப ரேகைகளை முகத்தில் வைத்துக் கொண்டு முயற்சித்துக் கொண்டேயிருக்கின்றோம்.

நானும் நம்பிக்கையோடு இந்த திருப்பூருக்குள் வந்தேன்.  ஆனால் என் கனவுகள் காட்டிய பாதையின் முடிவு மட்டும் எனக்கு புலப்படவில்லையே? என்று யோசிப்பவரா? 

அதன் பின்னால் உள்ள காரணங்கள் என்ன? விதியா? மதியா? அரசாங்கமா? நிறுவனமா? என்று உங்களை யோசிக்க வைக்கும். உழைப்பதற்கு மேலும் இந்த உலகில் கவனிக்கப்பட வேண்டிய விசயங்களை எத்தனை இருக்கிறது என்பதை உங்கள் மனம் பட்டியலிட்டு பார்க்கும். 

பட்டியலின் இறுதியில் உங்கள் மனதிற்குள் பயம் வருகின்றதா? இல்லை நம்பிக்கை பிறக்கின்றதா? என்பது போன்ற பல கேள்விகளை இந்த புத்தகம் உங்களுக்கு உருவாக்கும்.

நம்பிக்கை என்ற விதைகளை இங்கு வாழ்ந்த மூத்த தலைமுறைகள் விதைத்து விட்டு சென்றார்கள். நம்பிக்கை நாணயத்தை இரு கண்களாக பாவித்தார்கள். ஆனால் நாம் நாற்றை வளர்த்து இறுதியில் மரமாக்கினோமா? இல்லை மரம் வளர்வதற்குள் அவசரத்தில் உலுக்கி மரத்தை பாழாக்கினோமா? என்பது பல விசயங்களை உங்களுக்கு எளிதாக புரியவைக்கும்.

படித்தவன் மட்டும் தான் வாழ்வில் முன்னேற முடியுமா? இங்கே வாழ்ந்த படிப்பறிவு இல்லாதவர்கள் இங்கே அனுபவத்தை துணை கொண்டு அது தந்த பாடங்களை வைத்து எப்படி இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களை நடத்தினார்கள்? எப்படி வளர்த்தார்கள்? 

ஆனால் வளர்த்து தந்து விட்டு சென்றவர்களிடம் வாங்கியவர்களின் முரண்பாடான புரிதலில் எங்கே தவறு நிகழ்ந்தது? என்ன காரணங்கள் போன்றவற்றை உங்களுக்கு புரியவைக்கும்.

பணம், மனம் இந்த இரண்டுக்கும் எல்லை என்பது இல்லை என்பதை உங்களுக்கு உணர்த்திக் காட்டும். ஆனால் பணம் மட்டுமே பிரதானம் என்று வாழும் வாழ்க்கையில் தனி மனிதன் எவற்றையெல்லாம் இழக்க வேண்டியிருக்கிறது? நம்மை சுற்றியுள்ளவற்றை எப்படியெல்லாம் மாற்ற முடிகின்றது என்பதையும் உங்களுக்கு உணர்த்திக் காட்டும் நூல் தான் இந்த டாலர் நகரம்.

டாலர் கொட்டுகின்றது? வந்தால் அள்ளிக் கொண்டு ஊருக்கும் திரும்பலாம் என்று தொழிலாளியும் திருப்பூருக்குள் வருவதில்லை. வாழ்ந்தே ஆக வேண்டிய வாழ்க்கைத் தேடி தான் இங்கே தினந்தோறும் பலரும் வந்து இறங்கிக் கொண்டிருந்தார். ஆமாம் இது இறந்த காலம்.  ஆனால் தற்போது?

இங்கே வாழ வந்தவர்கள் இனி இங்கே பிழைக்க வழியில்லை என்பதாக கருதிக் கொண்டு தங்கள் அத்தனை ஆவணங்களையும் மாற்றிக் கொண்டு திருப்பூரை விட்டு நகர்ந்து கொண்டே இருக்கின்றார்கள். காரணம் என்ன?

வார நாட்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து சின்னாபின்னமாகி நிறுவனத்திற்குள் வந்து சேர்ந்த காலம் மலையேறி போய்விட்டது. தினந்தோறும் ஞாயிற்றுக் கிழமையோ? என்று தான் இன்றைய திருப்பூர் யோசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது?

ஏனிந்த மாறுதல்?

காரணங்களை தேடுவதை விட அதைப் பற்றி பேசியே புலம்பிக் கொண்டுருப்பதை விட இனி இந்த திருப்பூர் வாழ்க்கை என்பது டாலர் நகரம் என்ற பெயரை தக்க வைக்குமா? இல்லை கண்ணீரில் மிதக்கும் ஏற்றுமதி நிறுவனங்களில் பாதையில் மறுமலர்ச்சியை உருவாக்குமா? கொஞ்சம் யோசிக்க என் அனுவத்தை வாசிக்க வாருங்கள்.

இது என் அனுபவம் மட்டுமல்ல. இங்கே வாழ்ந்த ஒவ்வொருவரின் அனுபவத்திற்காக என்னை நான் இங்கே முன்னிறுத்திருக்கின்றேன்.  உங்கள் வாழ்க்கையை, உங்கள் பாடுகளை நான் பாட்டாக, வார்த்தையாக, வாக்கியமாக இந்த புத்தகத்தில் எழுதியிருக்கின்றேன். .

இன்று உலகமே சுருங்கி விட்டது என்று நம்பிக் கொண்டு இருக்கின்றோம். உலகத்தில் உள்ள எந்த நாட்டின் மூலைக்கும் நவீனம் தந்த தொழில் நுட்பத்தில் நொடிப் பொழுதியில் பேசி, ஒப்பந்தங்களை உருவாக்கிய நாம் ஓரமாய் விழுந்து கிடக்கின்றோம். ஆனால் உழைப்பது என்பது என்னவென்றே தெரியாதவர்களும், இந்த ஆடைத் தொழிலைப் பற்றி அறியாதவர்களும் எப்படி இந்த தொழிலை முடக்கினார்கள் என்பதை உங்களுக்கு படம் போட்டுக் காட்டும்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு உயர்வைக் காட்டுகின்றோம் என்று சொல்லிவிட்டுச் சென்றவர்களும், உறுதி மொழிகள் தந்தவர்கள், தந்து கொண்டு இருப்பவர்களின் வார்த்தைகளில் உள்ள நம்பகத்தன்மை நமக்குத் கிடைத்ததா? அதன் பலனை நாம் அனுபவிக்கின்றோமா?

இனி அவலம் தான் இங்கு நாம் வாழப் போகும் வாழ்க்கையா? இருண்டு கிடக்கும் மனதில் ஒளி விளக்கை ஏற்றப் போவது யார்? சர்வதேச நிறுவனங்கள் நம்மை வாழ் வைத்தார்கள். நாம் முறையாக பயன்படுத்திக் கொண்டோமா? 

இதுவரைக்கும் நான் (நாம்) என்ன கற்றுக் கொண்டோம்? என்ற கூட்டல் கழித்தல் பெருக்கல் வாய்ப்பாடுகளை உங்களுக்காக நான் இந்த நூலில் போட்டுப் பார்த்து இருக்கின்றேன்.

இதன் விடைகளைக் காண இந்த புத்தகத்தை படிக்க வாருங்கள் என்று உங்களை அன்போடு அழைக்கின்றேன்.

நட்புடன்
ஜோதிஜி

டாலர் நகரம் புத்தகம் முதல் பல புத்தகங்களை வாங்க 4 தமிழ் மீடியா தளம் தனியாக ஒரு தளத்தை உருவாக்கியுள்ளார்கள்.  இங்கே சொடுக்கவும்.








டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில் 


டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில் 


டாலர் நகரம் நூல் விழாவில் 

7 comments:

துளசி கோபால் said...

உண்மையைச் சொல்லணுமுன்னா.....வரவர உங்கள் எழுத்தில் மெருகு கூடி வருகிறது.

ஒருவேளை........ உண்மையை (உரக்க) சொல்வதால் இருக்கலாம்!!!!!

இனிய பாராட்டுகள்.

இராஜராஜேஸ்வரி said...

நம்பிக்கை என்ற விதைகளை இங்கு வாழ்ந்த மூத்த தலைமுறைகள் விதைத்து விட்டு சென்றார்கள். நம்பிக்கை நாணயத்தை இரு கண்களாக பாவித்தார்கள்.

உழைப்பின் ஆணிவேரை பெருமைப்படுத்தும் வரிகள்..பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..

ஜோதிஜி said...

பெருமைக்கும் சிறுமைக்கும் தத்தம் ....................



சரிதானே டீச்சர்.

ஜோதிஜி said...

நன்றிங்க.

Rathnavel Natarajan said...

மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
டாலர் தேசம் புத்தகம் ஒன்று உங்கள் கையெழுத்திட்டு எனக்கு அனுப்புங்கள். எனது முகவரி உங்களிடம் இருக்கும். இன்றேல் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புகிறேன்.
நன்றி.

அகலிக‌ன் said...

நீங்கள் சுட்டிக்காட்டிய சுட்டிகள் தலை சுற்றவைக்கின்றன, சென்னையில் கிடைக்குமிடம் பற்றிய விவரம் தந்தால் எனக்கு எளிதாக இருக்கும்.

AP said...

வாழ்த்துக்கள் திரு.ஜோதிஜி,
நானும் ஒரு திருப்பூர்காரந்தான். நீங்கள் குறிப்பிட்டவற்றை நேரிலேயே பார்த்தவன். ஒரு காலத்தில் திருப்பூரில் பேருந்தில் பயணிப்பதை நினைக்கவே களைப்படைந்துவிடுவேன். ஆனால் இப்போதைய நிலைமை...??? எங்கே எல்லோரும்... ஏனிந்த மாற்றம்... நீங்களும் இந்த கேள்விகளையே கேட்டிருப்பீர்கள், இதற்கான பதில்களை உங்கள் புத்தகத்தில் தேடுப்போகிறேன் என நினைக்கிறேன்...