Sunday, February 10, 2013

டாலர் நகரம் - விழா புகைப்படத் தொகுப்பு

கடந்த நாலைந்து வருடங்களாகத் தான் புகைப்பட கலை முதல் மற்ற கலைகளின் மீது எனக்கு தீரா ஆர்வம் உருவானது 

கலைகளை ரசிக்கத் தொடங்கினால் நாம் வாழ்வில் சில மாறுதல்கள் உருவாகியுள்ளது என்று அர்த்தம். குறிப்பாக வாழ்க்கையை ரசிக்கத் தொடங்கியுள்ளோம் என்று அர்த்தம். எழுதத் தொடங்கிய பிறகே பலவற்றையும் கவனிக்கத் தொடங்கினேன். 

கவனித்த போது தான் ஓடி வந்த வேகமும், கவனிக்காமல் விட்ட பல விசயங்களுக்குப் பின்னால் உள்ள உண்மைகளும் எனக்குப் புரியத் தொடங்கியது. 

சில வருடங்களுக்கு முன் தெக்கிகாட்டான் பிரபாகரன் என்னை திடீரென்று கூடலூர் பக்கம் அழைத்துக் கொண்டு சென்ற போது தான் உண்மையிலேயே இந்த புகைப்பட கலை மீது இயல்பான ஆர்வம் உண்டானது. ஒரு சிறிய பூச்சியை படம் எடுக்க தவம் போல பிரபா காத்திருந்த பொறுமையும், அவரின் காசுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையில் மேல் கொண்ட பற்றும் பல கேள்விகளை முதன் முதலாக என்னை நோக்கி தாக்கியது. 

அப்போது அவர் என்னை எடுத்த படங்கள் தான் திருப்பூர் வாழ்க்கையில் திருமணத்திற்கு அப்பாற்பட்டு நான் எடுத்த அதிகபட்ச படங்கள். நிறுவனங்களில் முதல் பத்தாண்டுகளில் படம் எடுக்க வாய்ப்பு எதுவும் அமைந்தது இல்லை. 

வாய்ப்புகள் அமைந்த போது அதனை புறக்கணித்து நகர்ந்து போயிருக்கின்றேன். காரணம் வாழ்வின் மீது இருந்த வெறுப்பும் அவநம்பிக்கைகளும் அப்படி செய்ய வைத்தது. வாழ்க்கை முழுக்க சந்தித்த நபர்கள் நாகப்பாம்பு போல படம் எடுத்து ஆட்டம் காட்டும் தினசரி காட்சிகளை பார்த்து வந்த காரணத்தாலும், இது போன்ற பலரின் படத்தை பார்த்தே பழகி விட்டதால் அது எனக்கு அதுவே இயல்பான வாழ்க்கையாகவே தெரிந்தது. 

இன்று வரையிலும் அப்படித்தான் ஒவ்வொருவரும் இருக்கின்றார்கள்.

ஆனால் இன்று என் மனோநிலையில் நிறைய மாறுதல்கள் வந்து விட்ட காரணத்தால் மனசுக்குள் அவற்றை அனுப்பாமல் வெளியே இருந்து ரசிக்கக்கற்றுக் கொள்ள முடிந்துள்ளது. 

கடந்த ஐந்தாண்டுகளாகத்தான் பணிபுரியும் நிறுவனங்களில் பல்வேறு கூட்டங்கள், கருத்தரங்கம் என்று எத்தனையோ படங்கள் எடுக்கின்றார்கள்.  சென்ற வாரத்தில் டெல்லியில் உள்ள ஏஈபிசி என்ற மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள இந்தியா முழுக்க உள்ள (அப்பேரல் எக்ஸ்போர்ட் பிரமோஷன் கவுன்சில்)  ஒரு அமைப்பின் சார்பாக பேச அழைத்தார்கள். மறுத்து விட்டேன்.  காரணம் நிறுவனங்களில் உள்ளவர்களின், நிறுவனர்களின் தனிப்பட்ட செயல்பாடுகள், குணங்களை நன்றாக உணர்ந்து வைத்திருக்கும் காரணத்தால் இது போன்ற விசயங்களில் நான் என்றுமே கவனம் செலுத்துவதில்லை. திருப்பூர் என்பதும், இங்குள்ள நிறுவனங்கள் என்பதும், இங்கேயுள்ள உள்ள தொழில் முறை கொள்கைகள் என்பதும் எத்தனை எழுதினாலும் எவராலும் புரிந்து கொள்ள முடியாத சூட்சும ரகசியங்கள். 

காரணம் பணம் என்பது கஷ்டப்பட்டு நம்மிடம் தேடிவந்தால் மற்றவர்களை மதிக்கத் தோன்றும்.  ஆனால் திடீரென்று வந்து விட்டால் அதற்கு பெயர் வளர்ச்சியல்ல. வீக்கம் என்றே பெயர். 

நிச்சயம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இடத்திலும் பல்வேறு விதமான மாறுதல்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. 

திருப்பூரிலும் ஏதோவொரு சமயத்திலும் மாறுதல்கள் நடக்கும் என்றே நம்பிக் கொண்டு இருக்கின்றேன்.

ஒவ்வொரு நிறுவனங்களின் நிர்வாகத்திற்கும் எனக்கும் இடையே அகழி போன்ற இடைவெளி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு நிலையிலும் எனக்கென்று ஒரு தெளிவான வரையறை வைத்துக் கொள்வதுண்டு. திடீரென்று சூறாவளி, சுனாமி போன்றவை தாக்கும் அப்போது பலருக்கும் மிகப் பெரிய பாதிப்பாய் இருக்கும். ஆனால் நான் அந்த சமயத்தில் அடுத்த படியில் ஏறிக் கொண்டிருப்பேன். 

அது போலத்தான் கடந்து வந்தது தான் இந்த வாழ்க்கை. 

தெக்கிகாட்டான் வீட்டில் இருந்த போது தேவியர்கள் மூன்று பேரையும் அன்று எடுத்த படங்கள் என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாது. 

வீட்டில் ஒருவர் உள்ளார். இரட்டையரில் இரண்டாவது நபர். 

மூன்று பேரில் அவரை புகைப்படம் எடுப்பது என்று புகைப்படக் கலையில் உள்ள உயரிய விருதான புலிட்சர் பரிசு பெற்றதற்கு சமமாகும். அவரை முதல் வயது முடிந்து பிறந்த கொண்டாட்டத்தின் போது எடுக்கத் தொடங்கியது முதல் இன்று வரை அவரை வைத்து எடுப்பது என்பது கண்ணில் தண்ணீர் வரவைக்கும் சமாச்சரமாகும். அவரின் ஒத்துழைப்பு என்பது நொடிப் பொழுது தான். அதற்குள் தான் புகைப்பட கலைஞன் தன் திறமையை காட்டிக் கொள்ள வேண்டும். 

தொடக்கத்தில் தேவியர்களை வைத்து புகைப்படங்கள் எடுக்க குறிப்பிட்ட புகைப்படங்கள் எடுக்கும் கடைகளுக்குச் சென்று விட்டு திரும்பும் போது பல நாட்கள் கடைகளுக்கு வெளியே உட்கார்ந்து ஓய்வெடுத்து, நன்றாக மூச்சு வாங்கி விட்டு அதன் பிறகே அந்த இடத்தில் இருந்து நகர்வோம். அந்த அளவிற்கு ஒருவர் அந்த இடத்தையே ரணகளப்படுத்தியிருப்பார். 

ஆனால் 4 தமிழ்மீடியா குழும நிறுவனர், ஆசிரியர் திரு. மலைநாடன் வீட்டுக்கு வந்திருந்த போது அத்தனையும் தலைகீழாக நடந்தது. 

மூன்று பேரும் பெட்டிப்பாம்பாக மகுடிக்கு கட்டுப்பட்டவர்கள் போல அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். பிரபாவுக்கு பிறகு மலைநாடன் தேவியர்களை எடுத்த படம் என்பது திரைப்படத் துறையில் எடுக்கும் படம் போல அமைந்தது. திரு. மலைநாடன் மின் அஞ்சல் வாயிலாக அதனை அனுப்பிய போது அவர் அருகில் இருந்து இருந்தால் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து இருப்பேன். 

டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவில் கூட அவர் கலந்து கொள்ள முடியாதவாறு அவரின் சொந்த வேலைகள் அவரை இந்தியாவில் இருந்து விரைவாக ஸ்விட்ர்லாந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். எனக்கு அங்கீகாரம் கொடுத்தவர் எப்போதும் சொல்லும் வாசகம் எனக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் பொருத்தமான வாசகமாக தனது தளத்தில் மனமே வசப்படு மூலம் பகிர்ந்தார். 

அவர் சமீப காலமாக மனமே வசப்படு பகுதியில் போடும் ஒவ்வொரு படமும் எனக்கு சொல்லும் அறிவுரையாகவே கருதுகின்றேன். 

இப்போது டாலர் நகரம் புத்தகம் வெளியீட்டு விழாவில் எடுத்த புகைப்படங்கள். 

இதனை சிறப்பான மென்பொருள் மூலம் கொண்டு வர வேண்டும் என்று முதன் முதலாக வீடு சுரேஷ் குமார் மூலம் முயற்சித்து இந்த மென்பொருள் (ப்ளாஸ் ரீடர்) மூலம் கொண்டு வந்தோம். ஆனால் சவாலாக இருந்தது. 

வீடு சுரேஷ் குமார் ஒதுங்கிக் கொள்ள எனது நண்பர் டெக் மீடியா நிறுவனர் திரு. விஜய் ஐந்து நாட்களாக என்னுடடைய ஓய்வு நேரம் பொறுத்து அவர் வேலைகளுக்கிடையே ஒத்துழைப்பு வழங்கியதோடு இதற்கென்று ஒரு தளம் ஒன்றை உருவாக்கி அதில் இந்த மென்பொருள் இயங்கும் வண்ணம் செயல்படுத்திக் காட்டினார். 

இது என்னுடைய ஆர்வக் கோளாறு என்பதாக எடுத்துக் கொள்ளுங்க. 

கூகுள் ப்ளஸ் ல் பலரும் பாராட்டினார்கள். மனதுக்கு  மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி நண்பர்களே. 

 பெரும்பாலான படங்கள் பார்க்க 


இந்த மென்பொருள் மூலம் ஏறக்குறைய 60 அமெரிக்கன் டாலர் கட்டும் போது தான் நமக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கும். இதன் காரணமாக இலவசமாக பயன்படுத்தும் போது சில இடைஞ்சல் உருவாகும். சில விட்டுப் போன படங்கள் பார்க்க கீழே உள்ள தளங்களை பயன்படுத்திக கொள்ளலாம்.



இந்த புகைப்படத் தொகுப்பு சாதாரண ப்ளாஷ் ரீடர் மூலம் வீடு சுரேஷ் குமார் உருவாக்கியது. தமிழ்நாட்டு இணைய வேகத்திற்கு இது இயல்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன். 

சோத்தித்துப் பாருங்க. 


குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்ற பாடலை வேறு சேர்த்துள்ளார். உங்கள் கணினியின் சப்தங்களை குறைத்து வைத்து விடுங்க. அலுவலகத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு பிரச்சனையாகி விடக்கூடும்

விழாவில் பரிசு கொடுப்பவர்கள் பற்றி 

என் வாழ்வில் எனக்கு மிகச் சிறந்த அங்கீகாரத்தை கொடுத்த என் மாமனார் 

திரு. சங்கரலிங்கம்

என்னை முதன் முதலாக சந்தித்த அந்த நொடி முதல் இன்று வரையிலும் என் ஏற்றத்தாழ்வு அத்தனையும் சந்தித்து என்னால் பல இடைஞ்சல்களையும் சந்தித்த போதிலும் அளவுக்கு அதிகமான அன்பும் மரியாதையும் இன்று வரையிலும் என் மேல் வைத்திருப்பவர். 

என்னுடைய வாழ்வின் நான் அடையப்போகும் உயரம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதனை பத்தாண்டுகளுக்கு முன்பே பலரிடமும் சொன்னவர். இவரைப் பார்த்தே என் குணங்கள் பலவற்றையும் மாற்றிக் கொண்டே வருகின்றேன். இவர் குடும்பத்தில் எங்கள் குடும்பம் பெண் எடுத்தது என்பதனை விட இவரைப் போன்றவர்கள் எனக்கு மாமனாராக வாய்த்தது நான் செய்த புண்ணியம்.  

இது நான் சொல்லவில்லை. என் அம்மா அடிக்கடி சொல்லும் வசனம் இது.

என் மனைவி என்னைப் பற்றி அவரிடம் ஏதாவது குறை சொல்ல முற்பட்டாலும் மாப்பிள்ளைக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் உனக்கும் இல்லை எனக்கும் இல்லை என்று மகளை மட்டுமல்ல, சொல்பவர்களின் வாயை அடைத்து விடுவார் என்பது கூடுதல் தகவல். 

அடுத்தவர், என் தனிப்பட்ட எனது சொந்த ஏற்றுமதி நிறுவனத்தின் தொழில் வாழ்க்கையில் என்னோடு சக பயணியாக பயணித்த எனது இரண்டாவது 

அக்கா திருமதி மீனாட்சி

என்னால் இவர்கள் அடைந்த துன்பம் அளவில்லாதது. ஆனால் இன்று வரையிலும் தன்னுடைய மகள்கள் மற்றும் புருஷன் முக்கியமா? தம்பி முக்கியமா? என்றால் உடனே என் பக்கம் தான் கையைக் காட்டுவார்.

விழாவில் கலந்து கொண்டவர்களைப் பார்த்து, அவர்களின் பின்புலம் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டு மிரண்டு போய்விட்டார். தனது சொந்த வாழ்க்கையில் கோடீஸ்வரியாக வாழ்ந்த போதிலும் இன்று வரையிலும்  பொது இடங்களில் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது இல்லை. இவருக்கு இது போன்ற நிகழ்ச்சி என்பது முதல் முறை. 

புத்தகத்தை முழுமையாக படித்து விட்டேன். குடும்பத்தை கலக்கி எடுத்து இருப்பாய் என்று நினைத்தேன். பரவாயில்லை. நாம் தொடக்கத்தில் படித்த எழுத்தாளர்கள் போல நன்றாகவே எழுதியிருக்கின்றாய் என்று பாராட்டினார் என்பது கூடுதல் தகவல். 

மற்றபடி இந்த விழா என்பது இரண்டு பேர்களுக்காக நடத்தினேன். 

ஒன்று. புதுக்கோட்டை ஞானாலயா திரு. கிருஷ்ணமூரத்தி அவர்களுக்கு. மற்றொன்று திருப்பூரில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் திருப்பூர் தாய்த்தமிழ் பள்ளி மாணவர்களுக்கு. 

மொத்தமாக காணொளி காட்சிகளை நீங்கள் பார்க்கும் போது உங்களுக்கே புரியும். 

இப்போது தான் ஒவ்வொன்றாக 4 தமிழ் மீடியா தளம் வெளியீட்டுக் கொண்டு வருகின்றார்கள். இது குறித்து அறிய



மீதி நான் உங்களுக்கு தர வேண்டியது விழாவில் நாங்கள் வெளியீட்ட மல்ர் குறித்து எழுத வேண்டும். அது அடுத்த பதிவில் தருகின்றேன். 

டாலர் நகரம்

4தமிழ் மீடியா வெளியீடு (www.4TamilMedia.com)

விலை : 190.00





திருப்பூரில் புத்தகம் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்.

திரு. ஈஸ்வரன் சீனிவாசன் அலைபேசி எண் 98 94 86 76 43 (காங்கேயம் சாலை)
திரு. வரதராஜன் அலைபேசி எண்  98 422 08 330 
(பெருமாநல்லூர் சாலை)
திரு. பிரகாஷ்.. அலைபேசி எண்  97 89 477 979 
(அவினாசி சாலை)
திரு. ராஜேஷ் அலைபேசி எண்  98 94 777 278 
(பெருமாநல்லூர் சாலை)
திரு கிருஷ்ணகுமார் அலைபேசி எண்  944 26 39 703 
(பல்லடம் சாலை)
திரு. மகேஷ்குமார் அலைபேசி எண்  97 89 311 666 
(பல்லடம் சாலை)

சென்னையில் இருப்பவர்கள் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் 99 40 22 99 34. மற்றொரு நண்பரும் உள்ளார். அவர் குறித்த தகவல்கள் அடுத்த பதிவில் தருகின்றேன்.

கோவை குறித்து அடுத்த பதிவில் வெளியிடுகின்றேன்.

14 comments:

வவ்வால் said...

ஜோதிஜி,


படம் எல்லாம் நல்லா வந்திருக்கு,
பியூட்டிப்பார்லர் எல்லாம் போய் முகப்பொலிவை ஒரு இன்ச் ஏத்திக்கிட்டாப்போல தெரியுதே :-))

அப்துல்லா அண்ணன் யூத்த் ராதாரவி போல ஜொலிக்கிறார் :-))

ஞாநி வரிக்குதிரைப்போல ஜிப்பாவுல கலக்குறார்,நீங்களும் ஞாநியிடம் ஒரு ஜிப்பா கேட்டு வாங்கிப்போட்டு இருந்திருக்கலாம்,எழுத்தாளர் ஆகியாச்சுல்ல :-))

வடுவூர் குமார் said...

பிளாஸுடன் கூடிய படங்கள் அருமையாக இருக்கு.இன்னும் இது போல பல விழாக்களை காண வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன். யாருக்கிட்டேயும் சொல்லிடாதீங்க. அப்படியோ காதை கொஞ்சம் கிட்ட கொண்டு வாங்க.

விழாவின் முதல் நாள் உடம்பு அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டது. விழாவிற்கு வந்த உறவினர்கள் கூட்டம். மாமனார் மட்டும் என்னை கவனித்துக் கொண்டேயிருந்தார். காரணம் அன்றைக்கும் மட்டும் 500 அழைப்புகள் தொடர்ச்சியாக வரமுடியாதவர்கள் அத்தனை பேர்களுக்கும் வெவ்வேறு நிறுவனங்கள், தொழில் தொடர்பாளர்கள் அழைத்துப் பேசிக் கொண்டேயிருந்தார்கள். விழா ஏற்பாடு குறித்து இரவு வானம் சுரேஷ் ஒரு பக்கம், நிகழ்காலத்தில் சிவா மறுபக்கம். நடுவில் வெயிலான் ரமேஷ். மூவரும் ரவுண்டுகட்டி ஒரு சடுகுடு ஆட்டம் காட்டி என்னை ஏறு கோட்டில் வைத்து ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தார்கள்.

கவனித்துக் கொண்டேயிருந்த மாமனார் என் அருகே வந்து சொம்பில் தண்ணீர் எடுத்துக் கொண்டு என் அருகே வைத்து விட்டு தண்ணீரை குடித்து விட்டு பேசுங்க. மயங்கி விழுந்துடப் போறீங்க என்று நக்கல் செய்ய மனைவி சிரித்துக் கொண்டேயிருந்தார்.

ராத்திரி தூக்கியது அதிகபட்சம் மூன்று மணி நேரம். ஞாநி அவர்களுக்கும், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் காலை நேர டிபன் அயிட்டங்கள் வீட்டில் தயாராகிக் கொண்டிருந்தது. வெகு விரைவாக அதிகாலை வேலையில் நடந்து கொண்டிருந்தது. அப்துல்லா ரவி, ஜோசப் க்கு தான் கொடுத்து விட முடியல.

தூக்கமே இல்லாமல் விழாவில் போய் உட்கார்ந்தவனை அழகாக காட்டிய உபயம் யாரோ கண்டுபிடித்த அந்த லென்சு தான் காரணம் என்பதற்காக இந்த சிற்றுரை.

போதுமா ராசா. (பசங்க இறையன்பு மாதிரி இருக்கீங்க என்று கலாய்த்தார்கள். நேர்ல பார்த்தால் தான் வண்டவாளம் தெரியும் என்று என் மைன்ட் வாய்ஸ் சொன்னது உங்களுக்கு மட்டும் திருப்தியளிக்க இந்த தகவல். போதும்மா சாமி. போய் நிம்மதியா தூங்குங்க)

ஜோதிஜி said...

நீங்க கொடுத்து வச்ச ஆளுங்க குமார். இங்கே இணைய வேகம் கழுதை வேகம்.

Avargal Unmaigal said...

உங்களின் எழுத்தும் ஆழந்த பார்வையும் & சிந்தனையும் , உங்களை நன்கு புரிந்த மாமனார் திரு சங்கரலிங்கம் மற்றும் உங்கள் குடும்பத்தினர், மற்றும் நண்பர்கள் அனைவரும் உங்களை வெற்றிப் பாதையில் அழைத்து செல்வதை கண்டு மிகப் பெருமையாக இருக்கிறது...வாழ்த்துக்கள் ஜோதிஜி.... வாழ்க வளமுடன்

Anonymous said...

மிகவும் அருமையான பதிவு .. டாலர் நகரம் புத்தகம் வெளிவந்தமைக்கும் வாழ்த்துக்கள், அமேசான் ஊடாக வாங்கி வாசிக்க முனைகின்றேன். .. படங்களும், பதிவும் கூட அருமை. மேன்மேலும் பற்பல படைப்புக்களை தருமாறு வேண்டுகின்றேன் .. :)

ஜோதிஜி said...

நன்றி நண்பா. தேவியர் இல்லம் இடுகை மற்றும் டாலர் நகரம் தொடருக்காக தாங்கள் உருவாக்கி கொடுத்த வடிவமைப்பு சம்மந்தப்பட்ட அத்தனை படங்களுக்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பாக என் மனமார்ந்த நன்றி.

ஜோதிஜி said...

படித்து முடித்தவுடன் உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கின்றேன்.

ராசின் said...

வாழ்த்துகள்!இன்னும் பல நல்ல நூல்கள் எழுதி தமிழுக்கு ஆக்கம் சேர்க்க வெண்டும்.உங்கள் வலைப்பதிவில் தொடர்ச்சியாக வாசித்துவிட்டாலும் புத்தகமாக வாங்கிவிடுகிறேன்!இல்லத்தில் இருக்க வெண்டிய நூல்!.ஒரு நகரின்... தொழிலின்...வாழ்க்கையின் வரலாறாகத்தான் இந்நூலை நான் பார்க்கிறேன்.

Anonymous said...

பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்ததுன்னு சொல்வாங்க. அந்த குரங்கு மாதிரி இருக்கீங்க ஜோதிஜீ

ஜோதிஜி said...

ஜெய் ஆஞ்சனேயா.

ஜோதிஜி said...

நன்றி ராசின். தமிழ்மணம் திரட்டியை உருவாக்கிய திரு. காசி ஆறுமுகம் தனது விமர்சனத்தில் இப்படித்தான் குறிப்பிட்டுள்ளார். அடுத்த பதிவில் அதை வெளியிடுகின்றேன்.

Ranjani Narayanan said...

புகைப்படங்கள் விழாவிற்கு வராத குறையைப் போக்கின.
இன்னும் பலநூறு நூல்கள் எழுதி எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்க வாழ்த்துகள்!

Unknown said...

நொய்யல் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் தமிழ் இளங்கோ அருண் கலந்து கொண்டார்..