வாரத்தில் வருகின்ற ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையும் என்னைப் பொறுத்தவரையில் ஒரு யுத்தத்திற்கு தயாராகும் படைத்தளபதி
போல் செயல்பட வேண்டியிருக்கிறது. குடும்பத்திற்காக குறிப்பாக குழந்தைகளுக்காக வரும்
வாரத்தில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளின் முன்னோட்டத்திற்கு நம்மை தயார் படுத்திக்
கொள்ள வேண்டியிருக்கிறது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரைக்கும் அலுவலகம் சார்ந்த பணிகளினால்
சக்கையாக பிழியப்படும் மனமும் உடலும் ஓய்வெடுக்க விரும்பும் அதே தருணத்தில் குடும்ப
வாழ்க்கை கடமைகள் என்ற பெயரில் நாம் செய்தே ஆக வேண்டிய விசயங்கள் நாம் முன் ஏராளமாக
இருக்கிறது என்பதை நினைவு படுத்தும் தினம் தான் ஞாயிற்றுக்கிழமை. வெள்ளிக்கிழமை மதியம்
என்றாலே 90 சதவிகித தொழில் தொடர்பில் இருக்கும் மேலைநாட்டு மக்கள் மின் அஞ்சலுக்கு
கூட பதில் அளிக்க விரும்பாமல் ஓட்டமாக ஓடி மறைந்துவிடுகிறார்கள்.
மேலைநாட்டில் வீக் எண்ட்
என்ற பெயரில் சனி, ஞாயிறு
என்பதை விடுமுறை தினமாக வாழும் சூழ்நிலையில் இருக்கிறார்கள். தத்தமது குடும்ப உறுப்பினர்களுடன்
விசேட நிகழ்ச்சியில் பங்கெடுப்பது முதல் சுற்றுலா என்பது வரைக்கும் போன்ற மனதிற்கும்
உடலுக்கும் வலு சேர்க்கும் விதமாக தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் இந்தியாவில் ஓரளவுக்கு வருமானத்திற்கு வழிவகையில்
வாழ்க்கை நடத்தும் நடுத்தரவர்க்கத்தினர் கூட முழுமையாக இந்த ஞாயிற்றுக் கிழமை தினத்தை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்களா என்பதே சந்தேகம்
தான்.
அதிகபட்சம் ஞாயிற்றுக் கிழமை என்ற ஒரு
நாள் ஓய்வில் மதிய உணவாக அசைவம் என்ற ஒரு விசயத்திற்குள் தங்களை மகிழ்ச்சியாக வைத்துக்
கொள்ள முயற்சிக்கின்றார்கள் என்பது தான் உண்மை. இதற்கு மேலே இருக்கவே இருக்கு இத்துப்
போன தொல்லைக்காட்சிகள். பெரும்பாலும் இரண்டு மடங்கு ஊதியம் கிடைக்கின்றதே என்ற பெயரில்
ஞாயிற்றுக் கிழமையைக் கூட வீணடிக்க விரும்பாமல் தங்கள் வருமானத்திற்காக வேலையில் தங்களை
அடகு வைத்துக் கொள்பவர்கள் ஏராளமான பேர்கள்.
ஒவ்வொரு ஞாயிறன்றும் வீட்டில்
குழந்தைகளுடன் நடைபெறுகின்ற விவாதங்கள் ஒரு விதமான இன்பமான போராட்டமாகவே இருக்கிறது.
வாக்குவாதம், விவாதம், பிடிவாதம் கலந்த கலவையாக வீடே ரணகளமாக மாறி விடுகின்றது. குழந்தைகள் தங்களின் தேவைகள் குறித்து வெள்ளி முதலே
அபாய சங்கை ஊத தொடங்க விடுகிறார்கள். இது குறித்த நினைவூட்டல்களை சமயம் கிடைக்கும்
போதெல்லாம் தொடங்கி விடுகிறார்கள். இது போன்ற சமயத்தில் தான் வீட்டுக்குத் தேவைப்படும்
அவசியமான சாமான்கள் முதல் குழ்ந்தைகளுக்கு பள்ளியிலிருந்து கொடுக்கபடும் செய்முறை பயிற்சி
(ப்ராஜெக்ட்) வரைக்கும் எளிதாக நம் தலையில் சுமத்தப்படுகின்றது.
இந்த முறை பள்ளிக்கூடம்
திறந்ததிலிருந்து என்னடா எந்த பஞ்சாயத்தும் நம்மை நோக்கி வரவில்லையே? என்று நினைத்துக்
கொண்டிருந்தேன். சரியாக கொண்டு வந்து சேர்த்தார்கள்.
அப்பா, பட்டம் செய்ய வேண்டும். ஒரு மலை அமைப்பை உருவாக்கி கொண்டு வரச் சொல்லியிருக்கிறார்கள்
என்றார்கள். மூன்று பேருக்கும் மூன்று விதமான
செய்முறைகள். பெரிதான செலவில்லை என்றாலும்
அரை நாள் பொழுதை அதில் நாம் கவனம் பிசிறாமல் ஈடுபடுத்திக் கொண்டால் மட்டுமே அந்த வேலை
முழுமையடையும்.
இதைவிடக் கொடுமை என்னவென்றால் ஒவ்வொன்றாக செய்து கொண்டு வரும் இடையிடையே
ஒவ்வொருவரும் கொடுக்கும் ஆலோசனைகளை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காது கொடுத்து
கேட்டே ஆக வேண்டும்.
இல்லாவிட்டால் பஞ்சாயத்து
தொடங்கி கடைசியில் வீடே ரணகளமாக போய்விடும் அபாயமுண்டு. அடி வாங்குவது முதல் கடி படுவது
வரைக்கும் நடந்து முடிந்து செய்த சமாச்சாரங்கள் கலைந்து மறுபடியும் தொடக்கம் முதலே
தொடங்க வேண்டியிருக்கும். இதற்கு பயந்து கொண்டே
நாம் அமைதி காக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தே ஆகவேண்டும்.
பெரிய
அலுவலக நிர்வாகத்தை
கட்டி மேய்க்க கண்டிப்பு என்ற வார்த்தையை கையாண்டு ஒரு கட்டுக்குள் கொண்டு
வந்து விடலாம். ஆனால் குடும்பத்தில் அவையெல்லாம் செல்லுபடியாகுமா? கதை கந்தலாகி விடும்.
நாம் வெளியே புலியாக இருந்தாலும்
இல்லாவிட்டாலும் வீட்டுக்குள் எலியாகத்தான் வாழ்ந்தாக வேண்டும். இது மனைவிக்கு அடங்கியவன் என்ற சொல்லுக்கு வழு சேர்ப்பது
என்ற போதிலும் பல விசயங்களில் மனைவியிடம் குழந்தைகள் சமாச்சாரத்தை ஓப்படைத்து விட வேண்டும்
என்று நினைப்பவர்களுக்கு இதைவிட அருமருந்து வேறெதும் இல்லை.
உன் அளவுக்கு எனக்கு பொறுமை
போதாது? என்று சொல்லியே நான் பல சமாச்சாரங்களை
நான் ஒப்படைத்து விட்டு ஒதுங்கிவிடுவதுண்டு. இது போன்ற சமயங்களில் வாங்கி கட்டிக் கொள்வது வாடிக்கை என்ற போதிலும்
விடுடா சூனா பானா என்றே நகர்ந்து போய்விடுவதுண்டு. என்னை எப்படி எந்த விசயத்திலும் எளிதில் திருப்தி
படுத்திவிடமுடியாது என்பதைப் போலவே என் குழந்தைகளை திருப்திபடுத்திவிடுவதும் அத்தனை
சாதாரண விசயமாக இல்லை.
குழந்தைகளுக்கு வயசு அதிகமாக அதிகமாக நம்முடைய எந்த ஜிகர்தண்டா
வேலையும் எடுபட மாட்டேன் என்கிறது.
இந்த
முறை கொண்டு வந்த பட்டம்
மற்றும் மலை அமைப்பு சமாச்சாரத்தை செய்து கொண்டுருக்கும் போது
குழந்தைகளுடன் பொறுமையாக
உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. குழந்தைகளின்
ஏராளமான கேள்விகளை எதிர் கொள்ள நேர்ந்தது. ஒருவரின் கேள்விக்கு பதில்
சொல்லி முடிப்பதற்குள்
அடுத்த கேள்விக்கணை நம்மை நோக்கி வரும் போது ஒரு விளையாட்டு வீரரின்
லாவகத்தோடு தான்
எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
மும்முனை தாக்குதலினால் நாம் எந்த அளவுக்கு
தகுதியாக
நம்மை வைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதே அப்போது தான் நமக்கு புரியத்
தொடங்குகின்றது.
என் குழந்தைகளைப் போல என் அப்பா அம்மாவிடம் பேச
முடியாத வாழ்க்கை வாழ்ந்த அனுபவம் என் மனக்கண்ணில் வந்து போனது. அப்பாவிடம்
பேசிய விசயங்கள்
மிக மிக குறைவு. நான் மட்டுமல்ல. குடும்பத்தில்
உள்ள அத்தனை பேர்களும் அப்படித்தான் இருந்தார்கள். கடைசி வரைக்கும் அவர்
ஒரு தனித்தீவாகத்தான்
இருந்தார். அதுவே சரி என்பதாக நினைத்துக் கொண்டு
அந்த தனிமை கவசத்தை கெட்டியாக மாட்டிக் கொண்டு இறப்பு வரைக்கும்
அப்படித்தான் இருந்தார்.
அம்மாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
அவர் உலகம் ஒரு மிகச்சிறிய வட்டம். அந்த வட்டத்திற்குள்
அவர் மட்டுமே நிற்க முடியும். இன்னும் சொல்லப்போனால்
அந்த வட்டத்திற்குள் வாழ்க்கை முழுக்க அவர் ஒற்றைக்காலில் தான் நின்று கொண்டு வாழ்ந்து
கொண்டிருக்க வேண்டும். அப்பாவின் இறப்புக்குப் பிறகு தான் அவர் சுவாசித்த சுவாசக் காற்றில்
சுதந்திரம் என்ற வாடையே வந்துருக்கும். ஆனால்
என் குழந்தைகள் பேச்சு கற்றுக் கொண்ட நாள் முதல் தினந்தோறும் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.
அன்பாக, மிரட்டலாக, கெஞ்சலாக, கொஞ்சலாக என்று பல்வேறு பரிணாமத்தில் தங்களின்
தேவைகளை புரியவைத்து தங்களது காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள்.
மூவரிடமிருந்தும்
எப்போதும் போலவே கேள்விகள் தொடர்ச்சியாக வந்து கொண்டேயிருக்கிறது. தெரிந்தது, புரிந்தது,
புரியாதது, புரிந்து கொள்ள முயற்சிப்பது போன்ற
பல கலவையான கேள்விக்கணைகள் நம்மை தாக்கிக் கொண்டேயிருக்கிறது. ஏறக்குறைய அந்த ஒரு நாள் வாரத்தின் மொத்தமாக அணை
திறந்த வெள்ளம் போல பாய்ந்து நாம்மை பிறாண்டி எடுக்கிறார்கள்.
உலகத்திலே தியானத்தை
விட பொறுமையான சமாச்சாரம் ஒன்று உண்டெனில் குழந்தைகளை எதிர்கொள்வது தான். அதுவும் துளிகூட கோபப்படாமல் உரையாடலை கொண்டு செலுத்துவது
தான் முக்கியமான சாதனையாக நான் கருதுகின்றேன்.
இது போன்ற சமயங்களில் தான்
தற்போதையை கல்வியின் உண்மைகளை உணரமுடிந்தது.
இந்த முறை அக்கா மற்றும்
அண்ணன் குடும்பத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். மூன்று பேரில் இரண்டு பேர்கள் 473 மதிப்பெண்கள்
பெற்று இருந்தார்கள். அண்ணன் மகன் 420 பெற்று
இருந்தான். மாநில அளவில் உள்ள மதிப்பெண்களை
ஒப்பிட்டு பார்க்கும் போது அக்கா மகள்கள் பெற்றுருந்த மதிப்பெண்கள் எனக்கு பிரமிப்பாகத்தான
இருக்கிறது. காரணம் நான் படிக்கும் போது
400 என்பதே உலக சாதனை போல இருந்தது. 400 மதிப்பெண்கள்
பெற்ற எனது வகுப்புத் தோழர்கள் மூன்று பேரும் தொழில்நுட்ப பயிற்சி (பாலிடெக்னிக்) படிப்புக்குச்
சென்றார்கள்.
நான் அண்ணாந்து பார்த்துக் கொண்டு
இருந்தது இப்போது நினைவுக்கு வருகின்றது.
இப்போது
எல்லோரும் ஒரே வாக்கியத்தை
கிளிப்பிள்ளை போல ஒப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த காலத்து
பிள்ளைங்க அத்தனை பேர்களும் படிப்பில்
கில்லியாக இருக்கிறார்கள் என்கிறார்கள். பிறந்த
குழந்தைகள் கூட நல்ல புத்திசாலியாக இருக்கிறார்கள் என்ற பேச்சு எல்லா
இடத்திலும் பரவியுள்ளது.
நாம் ஒன்றை மறந்து விடுகின்றோம். சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள், வாய்ப்புகள் போன்றவற்றை
நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. மீடியா என்ற உலகம் இன்று எல்லாவற்றை புரிய வைக்கின்றது.
கற்றுக் கொடுக்கின்றது. வேறென்ன வேண்டும்.
நல்லது, கெட்டது என்று கலவையாக ஒவ்வொருவரையும் தாக்கிக்
கொண்டேயிருக்கிறது.
கற்றுக்
கொண்டு தேர்ச்சி
அடைபவர்களின் சதவிகிதத்தில் எத்தனை பேர்கள் உருப்படியான வாழ்க்கை வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். கல்விக்கு அப்பாற்றபட்ட பல விசயங்கள் இருக்கிறது
என்பதை நாம் எவரும் புரிந்து கொள்ள முயற்சிப்பதே இல்லை.
காரணம் சென்ற வாரத்தில்
உறவினர் வீட்டு திருமணத்தில் பத்தாம் வகுப்பில் அக்காக்கள் தங்கள் மகள்கள் பெற்ற மதிப்பெண்
சாதனையை பீற்றிக் கொள்ளும் வண்ணம் பரஸ்பரம் பேசிக் கொண்டிருந்தார்கள். சாதனைக்குரியவர்களிடம் நான் தனிப்பட்ட முறையில்
பேசிக் கொண்டிருந்தேன். வெறும் மண்ணாக இருக்கிறார்கள். படித்தார்கள்.
மன்ப்பாடம் செய்தார்கள். அப்படியே எழுதியிருக்கிறார்கள். மதிப்பெண் வாங்கியிருக்கிறார்கள். அவ்வளவு தான். ஆங்கில வழிக்கல்வி, தமிழ்வழிக்
கல்வி என்ற எந்த பாகுபாடும்
இல்லை. பொதுப்படையான விசயங்களில் எந்த தெளிவும் இல்லை. எதிர்காலம் குறித்த
எந்த நோக்கமும் இல்லை. வெளி உலகம் எப்படி இயங்குகின்றது என்பதை
யோசிக்கக்கூட
தெரியவில்லை.
எந்த பாதையின் பயணம் இது என்பதை
சுட்டிக் காட்டி பேசும் அளவுக்கு அவர்களிடம் எந்த பக்குவமும் இல்லை.
அதிகபட்சம் டாக்டர் ஆக வேண்டும்.
இஞ்சினியர் ஆக வேண்டும் எந்த இரண்டு ஆசைகளில் அடங்கி விடுகின்றது. இன்னும் கொஞ்சம்
அழுத்திக் கேட்டால் கம்யூட்டர் படிப்பு முடித்தால் உடனடியாக நல்ல சம்பளத்தில் வேலை
கிடைத்து விடும் என்று அவர்களுக்கு ஊட்டப்பட்ட நம்பிக்கையை அடைகாத்துக் கொண்டு அடுத்த
அடியில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். நான் பெரிதாக அவர்களிடம் காட்டிக் கொள்ளவில்லை என்ற
போதிலும் பல விசயங்கள் என் மனதில் நிழலாடிக்கொண்டேயிருந்தது.
காரைக்குடியில் இருந்து திருப்பூர் வரைக்கும் ஏறக்குறைய
300 கிலோ மீட்டர் வழித்தடத்தில் நான் பார்த்த ஏராளமான பொட்டல் காடுகளில் எத்தனை பாலிடெக்னிக்
கல்லூரி,இஞ்சினியர் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி பள்ளி பார்த்து இருப்பேன் என்று என்னால் கணக்கு கூட வைத்துக்
கொள்ள முடியவில்லை. புற்றீசல் போலவே கல்லூரி
திறந்து பலரும் இங்கே கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசியல்வாதியாக எந்த தகுதியும்
தேவையில்லை என்பதைப் போலவே எந்த கல்லூரி வேண்டுமானாலும் எவர் வேண்டுமானாலும் எந்த இடத்திலும்
வேண்டுமானாலும் திறந்து கொள்ளலாம் என்கிற ரீதியில் நான் கல்வித்துறையில் வெற்றிக் கொடி
நாட்டியிருக்கின்றோம்.
ஆனால் கம்பத்தில் பறப்பது கிழிந்து போன கொடி என்பதை எல்லோரும்
எளிதாக மறந்து போய்விட்டோம்.
இன்று செய்திதாளை படித்துக்
கொண்டிருந்த போது ஒரு செய்தி கண்ணில் பட்டது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகவே
இருந்ததாம். காரணம் பெயர்ச்சொல், உரிச்சொல்
போன்ற அடிப்படை விசயங்களே
தெரியவில்லை என்பதோடு அதை அவர்களுக்கு புரிய வைப்பதற்கு நாக்கு வறண்டு
விட்டதாம். எப்படி நம்முடைய குழந்தைகளுக்கு அறிவுக்கண்களை திறக்கப்
போகும் ஆசியர்களின் லட்சணம்?
31 comments:
அப்படியே விழுங்கி வாந்தி எடுத்தால் போதும் என்ற அளவில்தான் தேர்வு மதிப்பெண்கள் இருக்கு:(
தனி மடல் பார்க்கவும்.
நல்ல கருத்துகள்.
மிகச் சரியான வார்த்தை
சாயம் போய் கிழிந்த என்றும் சேர்த்துக் கொள்ளலாம்
தெளிவான விரிவான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
//அதிகபட்சம் டாக்டர் ஆக வேண்டும். இஞ்சினியர் ஆக வேண்டும் எந்த இரண்டு ஆசைகளில் அடங்கி விடுகின்றது.//
வணக்கம் ஜோதிஜி,
மேற்குறிப்பிட்டிருக்கும் இரு வரியிலேயே அடங்கிவிட்டது நம் மனநிலையும், கல்வி முறையும். மற்ற எந்த அறிவும் தேவையே இல்லை என்ற நிலைக்கு மாறி வெகுநாட்களாகி விட்டது.
//உடனடியாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து விடும்//
இதுவே இன்றைய இளைய தலைமுறையை இழுக்கும் தூண்டில் வார்த்தை. நமக்குதான் வாய்க்கவில்லை.நமது குழந்தை(கள்)யாவது படிக்கட்டுமே என்று வாய்ப்பிழந்தவர்களும் வாய் பிளந்து படையெடுப்பதால் வந்த வினை இது.
நீங்கள் சொல்வது நூறுக்கு நூறு உண்மை தான். இரண்டு நாட்கள் லீவு என்றால், பெற்றோர்களுக்கு தான் வேலை அதிகம். எத்தனை செய்முறை பயிற்சிகளை செய்யச் சொல்கிறார்கள்... அப்பப்பா... இதோ இப்போது தான் கணினி பக்கமே வர முடிந்தது. இருந்தாலும் திங்கள் அன்று பள்ளிக்கூடம் முடித்து வரும் குழந்தைகளின் முகத்தில் (+நமக்கும்) அவ்வளவு சந்தோசம் இருக்கும். (நாம் செய்து கொடுத்த ப்ராஜெக்ட்டால்). ஆசிரியர்களுக்கு தெரியாத விசயங்களை வீட்டுப்பாடம் என்கிற பெயரில் கொடுத்து விடுகிறார்கள். அதை நாம் தான் செய்ய வேண்டும். குழந்தைகளிடம் என்னால் முடியாது / தெரியாது என்று சொல்ல முடியமா ?
நல்ல வேலை சார், "நாம் எல்லாம் அந்தக் காலத்திலேயே பிறந்து படித்து விட்டோம்" என்று சொல்லாத நபர்கள் இல்லை. நன்றி !
அருமையான பதிவு.
கசப்பான உண்மைகள்.
மிக்க நன்றி.
வழக்கம் போல் கலக்கல் சார். இங்கே இரண்டு பேரை சமாளிக்க முடியவில்லை, அங்க மூன்று பேர் அதுவும் கிடைப்பது ஒரே ஞாயிற்றுக் கிழமை, உங்க நிலைமை புரிகிறது.
:)
திரு நேதாஜீ அவர்களே,
எனது வாழ்க்கையில் நடந்ததை, நடப்பதை சொன்னதை போல் உணர்கிறேன், உண்மைதான் நடுத்தரு வர்கத்தின் வார இறுதி நாட்களின் நகர்த்தல்களை அருமையாக விளக்கியிருக்கின்றீர்கள்.
நீங்கள் குறிப்பிட்ட வார்த்தகளை கோடிட்டுக் காட்ட வேண்டுமென்றால் 90% ஹைலைட்டாகிவிடும்.
நன்றாக தொடரட்டும் உங்களின் கலைப்பணி.
//...ஒரு செய்தி கண்ணில் பட்டது. ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகவே இருந்ததாம்..//
ஜி... என் மனைவி ஆசிரிய பயிற்சி படிக்கும்போது உடன் வந்த மாணவி பெயர் சொல் வினை சொல் எது என தெரியவில்லை. இவரும் ஆங்கில வழி கல்வியில் 12 படித்தவர் தான்.
ஆனால் இலக்கணத்தில் ஆசிரியர் உயிர் மெய் எழுத்து பற்றி பாடம் நடத்தும்போது உயிருடன் மெய் சேர்தல் புணர்ச்சி விதி என ஆசிரியர் கூறும்போது ...
உடலோடு உடல் சேர்தல் உணர்ச்சி விதி என தெளிவாக கமண்டடிக்க மட்டும் தெரிகிறது....
ஆசிரிய பயிற்சியில் ஆண்டுக்கு 50 ஆயிரம் பணம் வாங்குவதுடன் சரி. மற்ற எல்லாம் காப்பியடிப்பதில் திறமையால் ஆசிரியராகிறார்கள்...
அவரின் ஆதிதிராவிடர் சான்றிதளால் 2010ல் பயிற்சி முடித்தவர்க்கு இந்த ஆண்டு அவரின் 21ம் வயதில் வேலை வரும் 25000 சம்பளத்துடன் வருகிறது.
25000 சம்பளத்துடன் ஆசிரியை வேலை வருவதால் பி டெக் படித்த 65000 வாங்கும் மாப்பிளையுடன் மணம் முடித்து இப்போது சென்னையில் இருக்கிறார்.
இதிலிருந்து அறியப்படும் நீதி என்னானா...
...
...
...
ஒன்னும் பிரியல....
ஒன்று மட்டும் புரியவில்லை சார், நமது நாட்டின் கல்விச்சூழல் நன்றாக இல்லை, மாணவர்கள் மனப்பாடம் செய்யும் மக்குகளாகவே ஆகிவிட்டார்கள் என திரைப்படம் வரைக்கும் எடுத்து எல்லோரும் கல்லா கட்டிவிட்டார்கள், ஆனால் தீர்வினை நோக்கி யாரும் பயணப்பட்டதாகவோ, அதை மாற்றக்கூடிய முயற்சிகளை பட்டியலிட்டதாகவே தெரியவில்லை, குறைந்தபட்சம் வலைத்தளத்திலாவது பதியலாமே, பின்னால் வரும் யாராவது ஒருவர் தீர்வினை கொண்டுவந்தால் சந்தோசமாக இருக்கும்
விலை கொடுத்து வாங்கும் கல்வி இப்படி தான் இருக்கும். இந்த முறை சமச்சீர் கல்வியில் 460 மதிப்பெண்கள் மிக அதிகம். பெற்றோரும் மிக பெருமிதத்தில் உள்ளனர்.குழந்தைகளின் உண்மை நிலையினை பெற்றோர் ஆராய்வதில்லை. ஒரே பாசாங்கு.
most people does not know other courses which are valuable than engineering or medical or computer science. this is a curse for our children.
every child has a talent. parents have to find it out and should take personal care for growing it as it may prove as a good career
Good Post
//உன் அளவுக்கு எனக்கு பொறுமை போதாது? என்று சொல்லியே நான் பல சமாச்சாரங்களை நான் ஒப்படைத்து விட்டு ஒதுங்கிவிடுவதுண்டு. இது போன்ற சமயங்களில் வாங்கி கட்டிக் கொள்வது வாடிக்கை என்ற போதிலும் விடுடா சூனா பானா என்றே நகர்ந்து போய்விடுவதுண்டு.///
Same blood :)))
ஆனாலும் நேற்று பையனோட “History of Tamil Nadu" Project நான்தான் செய்யவேண்டும் என்ற ஆர்டர் வந்தது. Google ஆண்டவர் உதவியுடன் சக்சஸ்:))
நம் கல்வி முறையையின் குறைகள், சமுதாயத்தின் பார்வைகள் பற்றி நிறைய பேசலாம். நேற்று நீயா/நானா பார்தீங்களா?
வணக்கம் டீச்சர்.
ஒவ்வொரு முறையும் ரொம்ப ஆச்சரியப்படுத்துறீங்க. ரொம்பவும் பயப்பட வைத்து வீடுறீங்க. கூர்மையான அவதானிப்பு உள்ள உங்கள் பார்வை என் மேல் பட்டுருப்பது என்னுடைய வரம். பார்த்தேன் தனி மடலை. ரொம்ப நேரம் யோசிக்க வைத்தமைக்கு நன்றி.
வாங்க பழனி கந்தசாமி. ரொம்ப எளிமையாக சொல்லிட்டீங்க. உங்க பார்வையில் வலைதளத்தில் உருப்படியாக எழுதுகின்றேன் என்பதே என்னைப் பொறுத்தவரையில் ஒரு நல்ல அங்கீகாரம்.
வாங்க ரமணி. அமுதா கிருஷ்ணன் சொன்னது தான் முற்றிலும் சரி. பெரும்பாலும் நம்முடைய தற்போதை வாழ்க்கை முழுவதும் ஒரு விதமான பாசாங்கு தான்.
சத்ரியன் எம்பிஏ முடித்தவர்கள் 4000 முதல் 6000 ரூபாய் சம்பளத்திற்கு வரிசை கட்டி நிற்கும் போது தான் அதிகம் வருத்தம் கொள்ளச் செய்கின்றது.
சேக்காளி. உங்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி. ஆங்கில வழிக்கல்வியில் படிக்க வைத்துக் கொண்டிருப்பவர்களும், தங்கள் குழந்தைகள் மம்மி டாடி என்று அழைப்பதை பெருமையாக கருதிக் கொள்ளும் பெற்றோர்களும் சொல்லும் வார்த்தை தான் நம் குழந்தைகளாவது படிக்கட்டுமே. ஆனால் நிதர்சன்ம் என்பது வேறு.
உண்மைதான் தனபாலன். வருகைக்கு நன்றி.
வாங்க ரத்னவேல் அய்யா.
கண்ணன் ஒவ்வொரு ஞாயிறும் கடைசியில் ஒரு பஞ்சாயத்தில் தான் முடிகின்றது. சாயங்கால வேலையில் வெளியே கூட்டிக் கொண்டு சென்றால் தான் அதுவும் முடிவுக்கு வருகின்றது. எழுத உட்காரலாம் என்றால் கொன்று விடுகிறார்கள்.
ரவி வாங்க.
உங்கள் ஆழ்ந்த வாசிப்புக்கு நன்றி. மகிழ்வாய் உணர்கின்றேன். எனது பெயர் ஜோதி கணேசன் (ஜோதிஜி)
வினோத் இதனால் அறியப்படும் நீதி யாதெனில் படிப்பை விட நம் நாட்டில் சாதி முக்கியம். அரசாங்கம் சொல்லியபடி ஒதுக்கீட்டில் அத்தனை பேர்களையும் ஒதுக்கிவிட்டு மேலே வந்து விடலாம்.
சுரேஷ்
இந்த கட்டுரை சிறகு தளத்திற்கு எழுதிக் கேட்ட கட்டுரை. அவர்களும் நீங்க சொன்ன மாதிரியே தற்கால கல்வியின் நிறை குறைகளை பட்டியலிட்டு கேட்டுள்ள காரணத்தால் இந்த கட்டுரையை வலைதளத்தில் வெளியிட்டு விட்டேன். அவர்களுக்கு தனியாக சுயவிசயங்கள் இல்லாதவாறு தனியான கட்டுரை வேண்டுமென்று கேட்டுள்ளார்கள். ஒரு வேளை எழுத நேரம் கிடைத்தால் நீங்கள் எதிர்பார்க்கும் விசயங்களை அலச முடியும். பார்க்கலாம்.
மிக அற்புதமான விமர்சனம் தந்த அமுதா கிருஷ்ணனுக்கு என் நன்றி. நான் மனதில் வைத்துள்ள விசயங்கள் உங்கள் வார்த்தைகளில் வந்துள்ளது.
அருள் நீங்கள் சொல்வது தான் முற்றிலும் உண்மை. எனக்கு ஒவியம் என்றாலே அலர்ஜி. பள்ளிக்கூடத்தில் என் அக்கா தான வரைந்து கொடுப்பார். ஆனால் என் மகள் இயல்பாக இந்த ஒவிய விசயங்களில் ரொம்பவே ஆச்சரியப்படுத்துகிறார். நிமிட நேரத்தில் வரைந்து தள்ளிக் கொண்டேயிருக்கிறார்.
ரவி நானும் நீயா நானா பார்கக விரும்புகின்றவன் தான். ஆனால் போட்டு கொன்று எடுத்து விடுகிறார்கள். பயந்து கொண்டு போவதே இல்லை. உங்க வீட்டுக்காரம்மா ஏற்கனவே ஒரு பதிவில் கடைக்கு போய்விட்டு மொத்தமாக உள்ளே நுழைய நீங்க ஹாயாக இருந்த சம்பவத்தை விவரித்து இருந்தார். படித்த போதே அப்போதே நினைத்துக் கொண்டேன். இவரும் நம்மளைப் போலத்தான் தான் என்று.
வருகை தந்த அணைவருக்கும் நன்றி.
நேற்றைய நீயா/நானா தலைபு - நாமக்கல் பள்ளிகளின் கல்வி போதிக்கும் முறை பற்றியது. நன்றாக இருந்தது.
http://www.tubetamil.com/tamil-tv-shows/vijay-tv-shows/neeya-naana/neeya-naana-02-07-2012-vijay-tv-neeya-naana-neeya-naana-02072012-neeya-naana-02-07-2012.html
கடந்த ஞாயிறு, தங்கை மகளின் 4ம் வகுப்பு புராஜெக்ட்காக, தொடர்ந்து உங்கள் பதிவு பல விஷயங்களை யோசிக்க வைக்கிறது.
உண்மைதான் அண்ணா...
இன்று புரிந்து படிப்பவர்கள் குறைவு...
மார்க் ஒன்றுதான் குறிக்கோள் என்பதால் பொட்டை மனப்பாடம்தான்.
நிறைய பள்ளிகள் ஒராண்டு பத்தாம் வகுப்பை ஒண்ணே முக்கால் வருடம் நடத்துகிறார்கள்... இதே நிலைதான் பிளஸ் டூவிலும்...
இன்றைய குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பல நேரம் பதில் சொல்ல முடியாமலும் போவதுண்டு.
postingan yang bagus.....
அப்ப நான் ஏழாவது படிக்கும் போதே...கவிதை போட்டி நடத்தினாங்க ஒரு சோப்பு டப்பா பரிசா கொடுத்தாங்க...ஓவியப் போட்டி கட்டுரை எல்லா விசயமும் இருக்கும்...!செய்திதாளில் உள்ள விசயத்தைப் பற்றி வாரம் ஒரு பீரியட் விவாதம் நடக்கும்....இப்ப கவிதையின்னா என்னன்னு என் பையன் கேட்குறான்....
ஆடிட்டர் நண்பர் ஒருவர் குளத்தில் இறங்கி ஆகாயத் தாமரை எடுக்கிறார். 7வது படிக்கும் என்பெண் பட்டாம் பூச்சி புடிச்சு குடுக்க சொல்றா...வீட்டுக்கு வீடு இந்த மாதிரி ப்ராஜெக்ட் பொருட்களை யார் செய்து கொடுப்பாங்கன்னு தேடறாங்க. சில பொருட்களை செய்யும் ப்ராஜெக்ட் அவசியமான்னே தெரியல. லிக்விட் அளக்கும் கண்ணாடி குடுவை அதேமாதிரி அட்டை போடும் பாலிதீன் பேப்பரில் வேண்டுமாம். பூமிக்குள் உள்ள அடுக்குகள்,பட்டுபுழுகூடு,நில அதிர்வை அளக்கும் கருவி, இப்படி நீளுது. நம்மள மாதிரி கிரியேட்டீவ் ஆசாமிக எளிதா செஞ்சு கொடுத்திடுரோம். பட்டம் எத்தனை பெட்ரோருக்கு செய்ய தெரியும். வாத்தியார்களுக்காவது தெரியுமா ? எப்படியோ ஸ்டேசனரி கடைகள்,dtp நல்லா ஓடுதுன்னு நினைக்கிறேன்.
படிச்ச பசங்களுக்கு பேங்க் செலான், தந்தி பார்ம், எம்.ஓ இப்படி எதையும் எழுத தெரியாத கல்வி..? யோசிக்க வேண்டிய விசயம்.
நல்லதொரு பதிவு. இன்றைய குழந்தைகள் தலைக்காட்சி, கணணி, இணையம் போன்றவற்றின் மூலம் நிறைய விடையங்களை அறிந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு பாடசாலை மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் மூலம் பரீட்சைகளுக்கும் நன்றாக தயார்படுத்தப்படுகிறார்கள்.
அதே நேரம், அவர்களுக்கு நண்பர்களுடன் விளையாடவும் இயற்கையுடன் உறவாடவும் நேரம் கிடைப்பதில்லை. ஒரு பறவையைக்காட்டி இது என்ன பறவை என்று கேட்டால் பலரிடம் பதில் கிடைக்காது. அரிசி எங்கிருந்து கிடைக்கின்றது என்று கேட்டால் 'ரைஸ் மில்லி'லிருந்து கிடைக்கிறது என்றும் சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
அவர்கள் பெற்றதும் பல, இழந்ததும் பல.
I admire the valuable information you offer in your articles. I will bookmark your blog and have my children check up here often. I am quite sure they will learn lots of new stuff here than anybody else!
Fastest Way to Lose Belly Fat,,,,,,,,,,,,,
உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.
விஜய் , கலாகுமரன்
உங்கள் முதல் வருகைக்கு நன்றி.
கலாகுமரன் நீங்க சொன்னது தான் இங்கே நடந்துகிட்டு இருக்குது.
சுரேஷ்
விடுங்க உங்க பையனை கவிதை வலைதளத்தினை பார்க்கச் சொல்லுங்க. கவிதையை மறக்கடிக்க இது தான் சிறப்பான வழி.
I can see that you are putting a lots of efforts into your blog. Keep posting the good work.Some really helpful information
Sadap BBM
in there. Bookmarked. Nice to see your site. Thanks!
Sadap BBM said...
வணக்கம், உங்கள் அக்கறைக்கு நன்றி,
Post a Comment