Sunday, May 08, 2011

நூலாகிப் போனவர்கள் - நூறு நாட்கள்

"அம்மா திருப்பூருக்கு வருகிறாயா?" என்று கேட்டுவிட்டு தம்பி குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்க அம்மா "எத்தனை மணிக்குடா கிளம்பனும்?" என்ற போது எனக்கே சற்று ஆச்சரியமாக இருந்தது. 

எங்கும் கிளம்பாத மனுசி டக்கென்று சொன்னதும் எனக்கு சற்று வியப்பாக இருந்தது. கிளம்பும் வரைக்கும் பேசாமல் இருந்தவர் பேரூந்தில் அமர்ந்த போது தான் கேட்டார்.

"என்னடா திருப்பூர் கம்பெனியெல்லாம் மூடி விட்டார்களாமே?" என்றார்.
ஆமாம்..... என்று பொதுப்படையாகச் சொல்லிவிட்டு ஜன்னலின் வெளியே ஓடிக்கொண்டிருந்த காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தேன்.  அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பவில்லை என்பதை விட ஆர்வத்துடன் வந்தவரிடம் திருப்பூர் குறித்த விசயங்களை இந்த சூழ்நிலையில் சொல்லி பயமுறுத்த விரும்பவில்லை. . 

அவசரமாய் கிளம்பி வரவேண்டுமென்று ஊரிலிருந்து அழைப்பு வந்த போது அடுக்கடுக்கான ஆச்சரியங்கள் என்னை தாக்கிக் கொண்டிருந்தது.  

முன்பதிவு இருக்கை இருக்கிறதா? என்று நண்பரிடம் அழைத்து கேட்ட போது முதல் ஆச்சரியம் தொடங்கியது. காரணம் 15 நாளைக்கு முன் கேட்டாலே இல்லை என்று பதில் வரும்.  ஆனால் இப்போது 6 மணி நேர இடைவெளியில் இருக்கை இருக்கிறதா?  என்று கேட்டால் என்ன சொல்வார் என்று யோசித்துக்கொண்டு தொலைபேசியை காதில் வைத்திருந்த போது " அண்ணே ஒண்ணு போதுமா இல்லை நாலைந்து சீட்டு தேவைப்படுமா? என்றார்.  காரணம் கடந்த மூன்று மாதங்களாக அரசாங்க பேரூந்துகளே காத்தாடிக் கொண்டு தான் செல்கின்றது. .


திருப்பூர் பழைய பேரூந்து நிலையத்தில் அரைமணி நேர இடைவெளியில் திருச்சி, மதுரை மார்க்கத்திற்கு செல்லும் எந்த பேரூந்திலும் இடம் பிடித்து உட்காருவது என்பது அத்தனை சுலபமாக இருக்காது.  ஒவ்வொரு பேரூந்தும் பேரூந்து நிலையத்திற்குள் உள்ளே நுழையும் நேரத்தில் வழியில் காத்திருப்பவர்கள் ஓடும் வண்டியில் உயிர்பயம் மறந்து இடம் பிடித்து விடுவார்கள். முடியாதவர்கள் நின்று கொண்டே பயணிப்பதும் வாடிக்கையான காட்சியாகும். ஏதோவொரு வழியில் பேரூந்தின் உள்ளே இடம் கிடைத்தால் போதுமானது என்று பயணிக்கும் தொழிலாளர்கள் இன்று திருப்பூருக்குள் யாருமில்லை. 

திருப்பூருக்குள் தொழில் ரீதியாக வந்து போய்க் கொண்டிருக்கும் கூட்டமும் குறைந்து விட்டது. திருப்பூரை நம்பி இன்று பயணிப்பவர்கள் எவருமில்லை.   மதுரை திருச்சியிலிருந்து வரும் வாகனங்கள் கூட பல சமயம் பாதி காலி இருக்கையோடு வந்து போய்க் கொண்டிருக்கிறது. .

ஜனவரி 28 2011

உச்சநீதி மன்றம் 'மொத்த சாயப்பட்டறைகளையும் மூடி விடவும்' என்ற தீர்ப்பு வந்த நாள் திருப்பூர் என்ற ஊரின் அஸ்திவார முண்டுக்கல் உருவப்பட்டு இன்று மொத்த ஊரும் முக்காடு போடப்பட்ட ஊராக மாறிவிட்டது. 

திரைப்படங்களுக்கு மட்டும் தான் நூறு நாள் கொண்டாட்டம் கொண்டாட முடியுமா? இங்கும் நீதிமன்ற தீர்ப்பு வந்து நூறு நாளைக்கு மேல் ஆகிவிட்டது. ஆராவாரத்துடன் அடுத்தடுத்த இலக்குளை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தவர்களின் வாழ்க்கை அய்யோ பாவம் என்று முடிவுக்கு வந்து விட்டது. இனி இங்கே வாழ முடியாது என்று உணர்நத் உழைப்பாளர்களின் எண்ணிக்கை நூறில் தொடங்கி ஆயிரங்களில் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களில் லட்சக்கணக்கான மக்கள் வெளியே சென்றுவிட்டனர். எங்கே சென்றார்கள்? கேட்பவர் யாருமில்லை என்பதோடு இவர்களை கிளப்பினால் போதும் என்ற நிறுவனங்களே அதிகம்.

மாறிவரும் விஞ்ஞான மாற்றத்தை தங்கள் தொழிலில் கொண்டு வர முடியாதவர்களும், விரும்பாதவர்களும் சேர்ந்து செயல்பட்ட திருப்பூர் உலகம் இப்போது திருட்டு உலகமாக மாறிக்கொண்டிருக்கிறது.  " வாகனங்களை வெளியே நிறுத்தும் போது கவனமாக பார்த்து சரியான இடத்தில் நிறுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்க" என்றார் நண்பர்.  காரணம் தினந்தோறும் பத்து முதல் இருபது வாகனங்கள் கொத்து கொத்தாக திருட்டு போய்க் கொண்டிருக்கிறது.  பெரும்பாலான வீடுகளில் வாடகைக்கு விடப்படும் என்ற வாசகம் அடங்கிய அட்டை நிரந்தரமாக பல மாதங்கள் தொங்கிக் கொண்டிருக்கிறது.  ஆயிரம் ரூபாய் கூட குறைத்துக் கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்த வீட்டு முதலாளிகள் காலியாக இருக்கும் வீடுகளுக்கு ஏதாவது ஒரு வழியில் ஆட்கள் வந்து விடமாட்டார்களா? என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

முக்கிய சாலைகளில் பகல் நேரங்களில் ஊர்ந்து கொண்டு தான் போக்குவரத்து நெரிசலை கடந்து செல்ல வேண்டும்.  ஆனால் இப்போது அத்தனையும் தலைகீழ்.  பல சமயம் ஞாயிறு போலவே சில சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றது.  ஓடாத நிறுவனங்கள், ஓட்ட முடியாத நிறுவனங்களின் பட்டியல்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்க பெரிய நிறுவனங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் வெகு துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. முப்பதாயிரம் சம்பளம் வாங்கி நடுத்தர வர்க்கத்திற்கு சற்று மேலாக வாழ்ந்து கொண்டிருந்தவர்களின் சமூக வாழ்க்கை இப்போது சங்கட வாழ்க்கையாக மாறிவிட்டது.  சிறு,குறு நிறுவனங்களை வைத்து வாழ்ந்த பெரு நிறுவனங்களின் வாழ்க்கை பெரும்பாடாகி விட்டது. இறக்குமதியாளர்கள் விரும்பியபடி உருவாக்கப்பட்டிருந்த நவீன வசதிகள் இன்று நாதியத்து கிடக்கின்றது. ஒவ்வொன்றுக்கும் வங்கியில் வாங்கிய வட்டி கட்ட முடியாத நிலைக்கு மாறி நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க முடியாத கடன் தொகைகள் வங்கி அதிகாரிகளை படுத்தி எடுத்திக் கொண்டிருக்கிறது. 

அரசாங்கம் நீதி மன்ற தீர்ப்பை காட்டி ஒதுங்கி விட வேறு வழியே தெரியாமல் எடுத்த ஒப்பந்தங்களை அனுப்பியே ஆக வேண்டும் என்று நடந்து கொண்டிருக்கும் நிறுவனங்களின் சாயமேற்ற வேண்டிய துணிகள் பாகிஸ்தான் அருகே உள்ள பஞ்சாப் மாநிலத்த்தில் உள்ள அந்த சிறிய கிராமங்கள் வரைக்கும் போய் வந்து கொண்டிருக்கிறது. தாமதமாய் தயாராகும் ஒப்பந்தங்கள் விமானம் வழியே பறக்க இருக்கும் நட்டத்தில் உருவாகும் நட்டங்கள் நடுத்தெருவுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. ஈரோடு, சேலம், என்று சுற்றுவட்டார பகுதியில் திருட்டுத்தனமாக சாயப்பட்டறைகளை உருவாக்கி செயல்பட்டுக் கொண்டிருந்தவர்களையும் அடக்கி ஒடுக்கிவிட ஒலமாய் ஒலிக்கும் குரல் பல இடங்களில் ஒப்பாரியாக மாறிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடடே வரப்போகும் தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் திருப்பூர் முதலாளிகள் வந்து உட்காரப்போகும் ஆட்சியாளர்கள் எடுக்கப் போகும் கொள்கை முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். கொள்கைகள் சரியான முறையில் அமையாவிட்டால் திருப்பூர் என்பது கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிடும் போலிருக்கு.


சட்டம் முக்கியம்.  அதைவிட சமான்யர்களின் வாழ்க்கை முக்கியம் என்பதை உணராத அதிகார கூட்டம் எப்போதும் போல தங்களது பதவிக்கு அடித்துக் கொண்டு சாக இங்கே செத்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையை கவனிப்பவர் எவருமில்லாமல் எங்கே செல்லும் இந்தப் பாதை என்பதாக போய்க் கொண்டிருக்கிறது. ஒப்பாறி வீட்டில் கிடைத்தது வரைக்கும் லாபம் என்ற நோக்கில் இந்த சூழ்நிலையில் பெரும் பணம் படைத்த கூட்டம் மறைமுகமாக அடுத்த கட்ட நகர்வுக்காக பெரும் முதலீடுகளை தூத்துக்குடி கடலூர் பகுதிகளில் முடக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேகத்தைப் பார்த்தால் மொத்த திருபபூரையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இவர்களுக்கு என்னமோ திட்டமிருக்கு? என்று எண்ணத் தோன்றுகின்றது.  

நூலை நம்பி மட்டுமே வாழ்ந்தவர்களின் வாழ்க்கை இன்று நொந்து நூலாகிப் போனது தான் மிச்சம். திருப்பூருக்குளே இன்று கூட ஒற்றுமையில்லாமல்  தங்களது சொத்துக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்கிற நோக்கில் எது குறித்தும் அலட்டிக் கொள்ளாதவர்கள் சங்கப் பொறுப்பில் இருக்கும் முதலாளி வர்க்கத்தினர் இருக்கும் வரைக்கும் இன்னும் நிறைய காட்சிகள் அரங்கேற இருக்கின்றது என்பதே எதார்த்தம்.

18 comments:

saarvaakan said...

மிக தேவையான பதிவு,
அரசாங்கம் வேலை வாய்ய்ப்பை உருவாக்குவது இல்லை.பஞ்சம் பிழைக்க திருப்புருக்கு இடம் பெயர்ந்தவர்கள் அனேகம்.தொழில் நடத்துவற்கு ஏதுவான சூழ்நிலை நிலவிய திருப்பூர் இந்த நிலைமைக்கு வந்திருப்பது பல குடும்பங்களை பாதிக்கும்.13ஆம் தேதிக்கு பின் நிலைமை மாறும் என நம்புவோம்.
நன்றி.

தாராபுரத்தான் said...

பெரும் பணம் படைத்த கூட்டம் மறைமுகமாக அடுத்த கட்ட நகர்வுக்காக பெரும் முதலீடுகளை தூத்துக்குடி கடலூர் பகுதிகளில் முடக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேகத்தைப் பார்த்தால் மொத்த திருபபூரையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இவர்களுக்கு என்னமோ திட்டமிருக்கு?
கேள்வி பட்டது உண்மையா...

தமிழ் உதயம் said...

கண் முனனே அழிந்து கொண்டிருக்கும் ஒரு தொழில் வளத்தை காப்பாற்ற அக்கறை இல்லை - அரசுக்கு. படித்தவர்களுக்கு ஆயிரமாயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். சாமானியர்களுக்கு? புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க தெரியாத போது, இருக்கின்ற வேலை வாய்ப்புகளில், தீர்க்க முடியக்கூடிய குறைகளை தீர்க்க வேண்டாமா?

தமிழ் உதயம் said...

கண் முனனே அழிந்து கொண்டிருக்கும் ஒரு தொழில் வளத்தை காப்பாற்ற அக்கறை இல்லை - அரசுக்கு. படித்தவர்களுக்கு ஆயிரமாயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். சாமானியர்களுக்கு? புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க தெரியாத போது, இருக்கின்ற வேலை வாய்ப்புகளில், தீர்க்க முடியக்கூடிய குறைகளை தீர்க்க வேண்டாமா?

Unknown said...

இன்னும் சில சாயப்பட்டறைகளை தாங்களே வைத்துக் கொண்டுள்ள பெரிய நிறுவனங்களின் முதலாளிகளே இந்த பிரச்ச்னையை தீர்க்க விரும்பாமல் முட்டுகட்டை போடுவதாக கேள்விபட்டேன், பின்னாளில் இப்பிரச்ச்னை தீரும்போது திருப்பூரில் அவர்கள் மட்டுமே தொழில் அதிபர்களாகவும், அவர்களின் நிறூவனங்களில் மட்டுமே அனைவரும் பணிபுரிய வேண்டும் என்ற நிலைமை ஏற்படும் போல இருக்கிறது, இப்பொழுது உள்ள நடுத்தர மற்றும் ஜாப் ஒர்க் செய்யும் நிறுவனங்களை நிரந்தரமாக இழுத்து மூட செய்ய சதி நடக்கிறது என்று நினைக்கிறேன், இதன் மூலம் பின்னாளில் அத்தகைய பெரிய நிறுவன்ங்களே திருப்பூருக்கு ஏகபோக அதிபதியாக இருப்பார்கள், பண்ம்தான் என்னென்ன வேலை செய்கீறது பாருங்கள், அடுத்த மனிதனின் கஞ்சியை கூட தடுக்கும் அளவிற்கு :-(

http://rajavani.blogspot.com/ said...

பெரும்பண முதலைகள் தூங்குவதற்கான நேரம் இது. சாமான்ய மனிதர்களைபற்றி அவர்களுக்கு என்ன கவலை. கையில் சாதம் (காசு) வச்சிருக்கோம் கூரையில தூக்கி எறிஞ்சா சாப்பிட பத்து காக்கா...அது
எந்த காக்காவா இருந்தா என்ன அன்பின்.

இப்பொழுது அவர்கள் திட்டம் எல்லாம் வரப்போகும் ஆட்சி யாருடையது என்ற வட்டமேஜை மாநாடுகளில் தங்களுடைய பொழுதை கழிக்கிறார்கள் . புதிய்வர்களாக இருந்தால் யார் காலைப்பிடிப்பது போன்ற பேச்சுகளும் அடங்கும்.

யாருக்கும் கட்டுபடாத ஒரு நேர்மையான தொழில நாம நடத்துவோம் என்பதை விடவும் நமக்கு சாதகமாக எப்படி வளைக்கமுடியும் என்பதே திட்டமாய் உள்ளவர்கள் இருக்கும் வரை சாமான்ய மனிதர்கள் வாழ்க்கை அதோகதி தான் அன்பின். ஏனென்றால் அவர்கள் ஏழைகள்.

சென்னை பித்தன் said...

நிலைமை மாற வேண்டும்.திருப்பூர் மீண்டும் சிறப்பூர் ஆக வேண்டும்!

கிரி said...

//கடந்த மூன்று மாதங்களில் லட்சக்கணக்கான மக்கள் வெளியே சென்றுவிட்டனர். எங்கே சென்றார்கள்?//

எனக்கும் இந்த கேள்வி இருந்து கொண்டு இருக்கிறது? என்ன செய்வார்கள்? இவை அல்லாமல் ஏகப்பட்ட கேள்விகள் மனதினுள்.. லிஸ்ட் போடவே சிரமமாக இருப்பதால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

இதற்கு உங்கள் தலைப்பு "காலியாகும் திருப்பூர்" என்று இருந்து இருக்க வேண்டும் போல என்று தோன்றியது.

மனிதரில் எத்தனை நிறங்கள் :-(

Unknown said...

...........

எண்ணங்கள் 13189034291840215795 said...

திருப்பூர் முதலாளிகள் வந்து உட்காரப்போகும் ஆட்சியாளர்கள் எடுக்கப் போகும் கொள்கை முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.//

வேதனையாகத்தான் இருக்கிறது.. எப்படி தாங்கும் பல குடும்பம்..?.:((

நல்ல முடிவுகள் வரட்டும்...

a said...

கஷ்டமா இருக்கு...

சி.பி.செந்தில்குமார் said...

>>>நூலை நம்பி மட்டுமே வாழ்ந்தவர்களின் வாழ்க்கை இன்று நொந்து நூலாகிப் போனது தான் மிச்சம்.

டச்சிங்க் லைன்ஸ்

ஜோதிஜி said...

செந்தில் வருத்தப்படாதீர்கள். ஒரு சிலரைப் போல வாசகத்தை கோர்த்து எடுத்துப் போட்டு விமர்சிப்பதை விடுங்க. இது உள்ளேன் ஐயா பாணி.

வருக யோகேஷ்.

நல்ல முடிவுக்காக நாளை காத்துக் கொண்டிருக்கின்றேன் சாந்தி.

வினோத் ஆயிரம் அர்த்தங்கள்.

கிரி நீங்க சொல்வது உண்மை. இன்னும் நிறைய எழுத உள்ளது. அத்தனை சீக்கிரம் காலியாகி விடாது கிரி. இரவு வானம் சுரேஷ் சொல்வதும் உண்மை தான் கிரி. அதைப்பற்றி இன்னும் தெளிவாக எழுத நிறைய விசயங்கள் உள்ளது.

சென்னை பித்தன் நீங்க சொல்ற சிறப்பூர் வார்த்தை நல்லாயிருக்குது.

ஜோதிஜி said...

தவறு தெளிவான அற்புதமான விமர்சனம். உண்மையும் கூட.

தமிழ் உதயம் திமுகவின் பல சாதனைகளில் திருப்பூரை அழித்ததும் ஒன்று.

உண்மைதான் தாராபுரத்தான் அய்யா.

சார்வாகன் நாளை 13. மாறுமா? மீளுமா?

bandhu said...

உங்கள் பதிவுகளை படித்தவுடன் எனக்கு தோன்றிய ஒன்று..


http://eliyavai.blogspot.com/2011/05/blog-post.html

Thenammai Lakshmanan said...

கண்முன்னே ஒரு ஊரே அழிந்து விட்டதே.. அவர்கள் எல்லாம் பிழைப்புக்காக எங்கு சென்றிருப்பார்கள்.. ஜோதிஜி

ம.தி.சுதா said...

நல்ல பதிவு... படம் மிகவும் என்னை கவர்ந்து விட்டது..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. ?

Unknown said...

நீங்க சொல்வது உண்மை தான்
நிலை சீக்கிரம் மாறும் என நம்புவோம்.