Wednesday, June 23, 2010

நம்பி கை வை

மதுரைக்கு தூங்கா நகரம், கோவில் நகரம் என்பது போலவே திருப்பூருக்கும் பல பெயர்கள் உண்டு.   நிட் சிட்டி (KNIT CITY), டாலர் சிட்டி (DOLLOR CITY), பின்னாலாடை நகர், பனியன் நகரம் என்று உங்களுக்கு பிடித்த எந்த பெயரில் வேண்டுமென்றாலும் அழைக்கலாம். முழுக்க முழுக்க ஆய்த்த ஆடைகளின் (HOSIERY GARMENTS) உற்பத்தியை நம்பி மட்டுமே இந்த நகர் இயங்கிக்கொண்டு இருக்கிறது.  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி அல்லது உள்நாட்டுக்கு தேவைப்படும் ஆடைகள்.  ஏதோ ஒன்றை பின்பற்றி உழைத்துக் கொண்டுருப்பவர்களுக்கு தினந்தோறும் தூக்கம் என்பது சற்று குறைவாகவே இருக்கும். பணம் சம்பாரிக்க என்பதெல்லாம் மீறி உழைப்பு என்பது ஏறக்குறைய ஒவ்வொரு  மனிதர்களுக்கும் போதையை போலவே உடம்பில் ஊறிவிடக்கூடியதாய் இங்குள்ள சூழ்நிலை உருவாக்கியிருக்கும்., தினந்தோறும் எட்டு மணி நேரம் தான் என்னால் உழைக்க முடியும்? என்பவர்கள் இந்த ஊர்ப்பக்கம் எட்டிப்பார்க்காமல் இருப்பது நலம்.  தினந்தோறும் 16 மணிநேர உழைப்பு என்பது சர்வசாதாரணம்.  இங்கு இன்றுவரையிலும் வேறு எந்த தொழிலுக்கும் வாய்ப்பும் இல்லை.  வளர்ந்ததாக தெரியவும் இல்லை. ஆடைகளைச் சார்ந்து, ஆடைகளுடனேயே பயணிக்கும் ஒவ்வொரு சார்பு தொழில்களும் ஏதோ ஒரு வகையில் சம்மந்தம் உள்ளதாக இருக்கிறது.   அவ்வாறு இருக்கும் தொழில் மட்டுமே இங்கு நீண்ட காலம் தாக்குப் பிடித்து நிற்க முடியும்.  

நூல் என்பது ஆடையாக மாறுவதற்குள் எத்தனை துறைகள்?.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகம். இந்த ஒவ்வொரு துறைகளுக்குள் நூற்றுக்கணக்கான துறைகள். தினந்தோறும் ஆயிரம் ரூபாயை முதலீட்டை வைத்துக் கொண்டு தூங்கி எழுபவர்கள் முதல் லட்சத்தை வைத்துக் கொண்டு லட்சிங்களை துரத்தும் நபர்கள் வரைக்கும் இந்த தொழிலில் உண்டு. நூல் முதலில் துணியாக மாற (KNITTING MECHINES) அறவு எந்திரங்கள் உள்ள பகுதிக்கு செல்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் உள்ளவர்களின் மார்பு அளவிற்கு ஏற்றபடி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட பல வித உருளைகள் (CYLINDERS) மூலம் துணியாக வெளியே வருகிறது.  இதுவொரு தனியுலகம். 

தொடக்கத்தில் நூல் பைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல ஏராளமான மாட்டு வண்டி உலகம் ஒன்று இருந்தது.  காலச்சக்கர சுழற்சியில் அத்தனையும் மறைந்து போய் இன்று நவீன நான்கு சக்கரங்கள் தெரு முழுக்க அலைந்து கொண்டுருக்கிறது.  மாடுகளுக்கு உணவாக கொடுக்கக்கூடிய தட்டை என்ற பசும்தாவரம் என்பது அதுவொரு மிகப்பெரிய லாபத் துறையாக எளியவர்களுக்கு இருந்தது.  இன்று தட்டையும் இல்லை.  தட்டை விளைந்த பூமிகளும் இல்லை.

கோயமுத்தூரில் தயாராகும் உள்நாட்டு அறவு எந்திரத்தின் விலை 50,000 முதல் இவை தொடங்குகிறது.  அதுவே கால வளர்ச்சியில் ஜெர்மனியில் இருந்து வந்து இறங்கிக் கொண்டு இருக்கும் அதிகபட்ச நவீனங்களைக் கொண்ட இரண்டு கோடி ரூபாய் வரையில் வரைக்கும் இன்று இந்தத் துறை வளர்ந்துள்ளது. ஒவ்வொரு வகையான துணிக்கும் பல விதமான எந்திரங்கள். நீங்கள் உடுத்தும் ஆடையில் உள்ள காலர் (COLLOR) பகுதிக்கென்று ஒரு எந்திரம்.  அதுவே கையில் உள்ள சதைப்பற்றை தனியாக காட்டும் அளவிற்கு புடைப்பாக தெரியவேண்டும் என்று விரும்பும் மன்மதர்களுக்கென்று உடுத்திய ஆடையில் CUFF என்ற பகுதிக்குக்கென்று தனியான ஒரு எந்திரம்.

ஒரு ஆடையை முழுமையாக்க பல விதமான அறவு எந்திரங்கள் ஒன்று சேர்ந்து செயல்படுகின்றது. இங்கு 24 மணிநேரமும் இடைவிடாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது.  பனியன் அல்லது ஜட்டி என்பதாக இருந்த இந்த தொடக்க கால திருப்பூரில் பெரிய தொகையிலான முதலீடும் எதுவும் தேவையாய் இருக்கவில்லை.  மிகப் பெரிய முதலீடு என்பது உழைப்பு மட்டுமே.  ஆனால் இன்று உழைப்பு சிறியதாகவும் கொட்டும் பணத்தின் அளவு மிகப் பெரிய அளவாகவும் இந்த துறை வளர்ச்சி அடைந்துள்ளது. தொடக்கத்தில் கையால் இயக்கப்பட்டுக் கொண்டுருந்த எந்திரங்கள் இன்று கணிணி கட்டுப்பாட்டில் இயங்கிக்கொண்டுருக்கிறது.  சாலையில் நடந்தால் கண்களை கவரக்கூடிய ஆடைகள், பெண்களை ஆச்சரியப்படுத்தும் ஆடைகள் என்று இன்று பலவிதமான வளர்ச்சி அடைந்த ஆடைகள் உலகமிது. விதவிதமான பல்வேறு நிற வண்ண ஆடைகளின் வடிவமைப்பில் துணியாக இறங்கும் அந்த நேரம் ஏறக்குறைய ஒரு குழந்தையின் பிரசவத்தை நீங்கள் காண்பது போலவே இருக்கும்.

அறவு செய்த துணியை கோராத் துணி ( CORA CLOTH ) என்கிறார்கள்.  உங்களுக்கு வெள்ளை வேண்டுமென்றாலும் அல்லது வானவில் நிற மென்றால் இந்த துணிகள் செல்லுமிடம் ( BLEACHING & DYEING) சாயப் பட்டறைகள்,  அன்றாடம் நீங்கள் படிக்கும் செய்தித்தாளில் இன்று துணுக்குச் செய்திகள் போலவே இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டுருக்கும் இந்த பிரச்சனைகள் குறித்து தனியாக பார்க்கலாம். இவர்கள் எங்கள் மண்வளத்தை பாழக்கி விட்டார்கள் என்று விவசாயிகளும், அரசாங்கம் எங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று சாயப்பட்டறை முதலாளிகளும் இன்று வரையிலும் இரண்டு பக்க மஞ்சுவிரட்டு நடந்து கொண்டே இருக்கிறது.  முடிவு மட்டும் எட்டாமல் பல்லாயிரக்கணக்கான விவசாய பூமிகள் பாழானது தான் மிச்சம்.
வீட்டுக்காரம்மா துவைத்த ஆடை களை இஸ்திரி போடாமல் வைத்து இருந்தால் நாம் அதை உடுத்த மனம் வருமா?   சாயப்பட்டறைகளில் இருந்து வரும் இந்த ஆடைகளையும் இஸ்திரி செய்து விருப்பமான அளவிலும் தருகிறார்கள். அந்த துறைக்கு COMBACTING என்கிறார்கள்,  வெள்ளையோ அல்லது நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட நிறமோ துணியாக அளவு பார்த்து வெட்டித் தைக்க தொழிற் கூடங்களுக்குள்  உள்ளே வந்த பிறகு தான் இதன் மற்றொரு பரிணாம வளர்ச்சி உருவாகத் தொடங்குகிறது. குரங்கில் இருந்து வந்த மனிதன் போல துணிகளில் இருந்து ஆடைகள் வரைக்கும் தொழிற்சாலையின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று இறுதியாக மனதை கவரும் ஆடைகளாக அட்டகாசமாக மாறுகிறது.  

இப்போது இந்த டாலர் சிட்டிக்கு பெருநகரகங்களைப் போலவே தனி மாவட்டம் என்பதுடன் மாநகராட்சி என்ற தனி அந்தஸ்த்தும் வந்துள்ளது. 6 நகராட்சி, 17 பேரூராட்சி, 73 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய இந்த உழைப்பாளர் மாவட்டத்தில் ஏறக்குறைய 19 லட்சத்து 33 ஆயிரம் மக்கள் (முந்தைய கணக்கின்படி) வாழ்கிறார்கள். கொங்கு மண் மக்களை விட வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வாழ்வது தான் மிக அதிகம்.  டெல்லி முதல் கன்யாகுமரி வரைக்கும் உள்ளே அத்தனை இந்தியர்களையும் உள்ளே வைத்திருப்பது இதன் மற்றொரு சிறப்பு.

தொழில் நகருக்கு இயல்பான மற்றொரு பிரச்சனையும் உண்டு.  தினந்தோறும் பிழைப்புத் தேடி உள்ளே வந்து கொண்டுருப்பவர்களுடன், எப்போதும் வந்து போய்க்கொண்டுருக்கும் மக்களால்(FLOATING POPULATION) என்று இரண்டு புறமும் அரசு நிர்வாகத்திற்கு சவாலாக இருக்கும்.  பணப்பட்டுவாடா முதல் வாரச் சம்பளம் வரைக்கும் நடக்கும் ஒவ்வொரு சனிக்கிழமை நாட்களிலும்  காலை முதல் நடு இரவு வரைக்கும் நசுங்கிக் கொண்டு தான் நகர வேண்டும். இத்தனை சிறப்புக்களைப் பெற்ற இந்த தொழில் நகரில் நாளுக்கு நாள் குற்றத்தின் குறியீடகளும் ஏற்றுமதி குறியீடுகளைப் போலவே ஏறிக்கொண்டே இருக்கிறது. 

சென்னையில் இப்போது உருவாகியுள்ள கோயம்பேடு சந்தை என்று உருவாவதற்கு முன்பு பாரிஸ் கார்னர் பகுதிகளில் காலை நேரம் முதல் இரவு வரைக்கும் உள்ளே உள்ள ஒவ்வொரு பகுதியையும் சுற்றி வந்தால் பல வித அனுபவங்கள் கிடைக்கும்.  சில பழங்கள் நாம் கேள்விபட்டுருக்கக்கூட மாட்டோம்.  அந்த பழங்கள் அங்கு விற்க்கப்பட்டுக் கொண்டுருக்கும்.  இந்தியாவில் உற்பத்தியாகும் எந்த பொருட்களும் கண நேரத்தில் அங்கு விற்பனைக்கு வந்து விடும்.  காரணம் வாங்கும் திறன் உள்ள பகுதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்வு இது.  அதைப்போலவே திருப்பூரிலும் எது தான் கிடைக்காது? என்கிற அளவிற்கு எல்லாமே கிடைக்கிறது.  எய்ட்ஸ் வரைக்கும்.

திருப்பூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள அவிநாசியை நீங்கள் தொட்டு விட்டால் தேசிய நெடுஞ்சாலையில் உங்களை இணைத்துக் கொண்டு ஊத்துக்குளி வெண்ணெய் போல் வழுக்கிக் கொண்டு கோயமுத்தூர் வழியாக கேரளாவிற்குள் ஒரு மணி நேரத்திற்குள் நுழைந்து விடலாம். பெரியாரை பார்த்தது இல்லை.  அவர் வாழ்ந்த ஈரோட்டுக்குள்ளாவது செல்ல வேண்டும் என்பவர்களுக்கு ஒரு மணி ஒதுக்கி ஒட்டமாக பறந்து விடமுடியும். சுற்றிலும் கடல் இல்லாத குறை மட்டும் தான். ஆனால் இத்துப் போன மாநகராட்சி பூங்காவில் கடலை போடுபவர்களையும் கண்டு களிக்கலாம். இங்கு காலை முதல் மாலை வரைக்கும் எங்கு பார்த்தாலும் உழைப்பாளர்களின் தலைகளையும், களைத்தவர்கள் கூடும் டாஸ்மார்க் கூட்டத்தை ஆசை தீர பார்த்துக்கொண்டு உபி வாலா தரும் சமோசாவை உண்டு மகிழலாம்.

உலக நாடுகளில் உன்னத இடத்தை பிடித்து இருக்கும் இந்த திருப்பூர் இன்று வரையிலும் இந்தியாவிற்கு தேவைப்படும் அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் மரியாதையான ஊர்.  ஆனால் கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு பல்லடம் தாலூகாவில் இருந்த இந்த சிறிய கிராமம் தான் இன்றைய அசுர வளர்ச்சி பெற்றுள்ள ஏற்றுமதி நகரம். இன்றைய சூழ்நிலையில் அதிக பாதிப்பு அடைந்துள்ள இந்த திருப்பூர் இன்றைய சூழ்நிலையில் 11,500 கோடிகளை வெளிநாட்டுக்கும் 6000 கோடிகளை உள்நாட்டு வர்த்தகத்தின் மூலமாகவும் ஈட்டித்தந்து கொண்டுருக்கிறது.  தனி மனிதனுக்கு வாழ்க்கையில் இலக்கு மிகவும் முக்கியம் என்பது போல இந்த நகரத்திற்கும் மேதைகள் ஒரு இலக்கை தீர்மானித்து இருந்தார்கள். 2010 ஆம் ஆண்டு திருப்பூர் ஏற்றுமதியின் இலக்கு 20 ஆயிரம் கோடியை தாண்ட வேண்டும் என்றார்கள்.  ஆனால் தடை தாண்டிய ஓட்டப்பந்தயத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாமல் இன்று மூச்சு வாங்கிக்கொண்டு இருக்கிறது.  இதற்குப் பிறகும் ஒரு இலக்கு உண்டு.  2015 ல் 40 ஆயிரம் கோடியை தொட வேண்டும் என்ற ஆசை நிராசையாக போகாதுருக்க அண்ணமார் சாமிக்கு படையல் வைத்து பிரார்த்தனை செய்து உழைத்துப் பார்க்கலாம் என்று ஓடிக்கொண்டுருக்கிறார்கள். 

சிறிதும் பெரிதுமான 2500 ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ள திருப்பூருக்குள் மாவட்ட ஆட்சியர் என்று பொறுப்புக்கு வந்தவர் முயற்சியால் உருவாக்கிய வலைதளம் இது.  15 ஆண்டுகளுக்கு முன்பு உறவினர்கள் உள்ளே வரும் போது ஒவ்வொரு முறையும் " இன்னோரு முறையும் இங்கு வரவேண்டும் போல் உள்ளது " என்பார்கள்.  காரணம் அவர்கள் வந்து இறங்கும் அந்த அதிகாலை வேலையில் குளிராக இருக்கும்.  அல்லது மனதில் கவிதைகளை உருவாக்கும் சாரல் போல பருவ நிலை அத்தனை கிளர்ச்சிகளைத் தூண்டும்.  பல மாதங்கள் இதே இந்த தட்பவெப்ப நிலை மதியம் வரைக்கும் இருக்கும்.  ஒவ்வொரு முறையும் கரூர் தாண்டி திருச்சியைத் தொடும் போதெல்லாம் அடிவரைக்கும் உஷ்ணம் படுத்தி எடுத்து விடும்.  அந்த அளவிற்கு குளிர்சாதன வாழ்க்கை போல இந்த திருப்பூர் இதமாக இருந்தது.  ஆனால் வளர்ந்த மக்கள் தொகையில் இப்போது சூடு வாட்டி வதக்கி எடுத்துக் கொண்டுருக்கிறது. பத்து கிலோ மீட்டர் சாலையில் கடந்து செல்வதற்குள் ஊரில் உள்ள அத்தனை தெய்வங்களையும் வேண்டிக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. புகையே வாழ்க்கையாய், புழுதியே சுவாசமாய் மாறி பல வருடங்கள் ஆகி விட்டது.  மூடாத சாக்கடைக்குழிகளும், முடிவே தெரியாமல் தொடர்ந்து கொண்டுருக்கும் சாலை மராமத்து பணிகள் என்று அத்தனையும் தாண்டி ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள வாகனங்களில் பறந்து கொண்டே இருக்கிறார்கள். 

ஒரு வகையில் இது வினோத கலவையான நகரம்.  கோயம்புத்தூர் என்றால் கல்விக்கு உள்ள முக்கியத்தும் போல் பணிபுரியும் வேலைவாய்ப்புகளும் முன்னால் நிற்கிறது. அதுபோலவே  மருத்துவம் என்று தொடங்கி கண்களுக்கு கருத்துக்கும் பிடித்த அத்தனை விசயங்களும் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து உள்ளது. தேர்ந்தெடுப்பவர்கள் பொறுப்பு. அடித்தட்டு மக்கள் முதல் அன்றாடங்காய்ச்சி வரைக்கும் கையில் உள்ள காசுக்கு ஏற்றபடி வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும் ஆனால் இங்கு உழைப்பவர்களுக்கும் உழைப்பை வாங்கிக் கொண்டுருப்பவர்களும் ஒரே ஒரு வாய்ப்பு தான் இருக்கிறது. நடுசாமம் வரைக்கும் உழைக்க மட்டும் தான் முடியும்.  வேறு எந்த வசதிகளோ, வாய்ப்புகளோ இல்லை.  திரைஅரங்கம், டாஸ்மார்க்,இதையும் வேண்டா மென்றால் வீட்டுக்குள் வந்து தொலைக்காட்சி.  இந்த மூன்றுக்குள் ஏதோ ஒன்றுக்குள் தான் உங்களை பொருத்திக்கொள்ள வேண்டும்.  புத்தகங்கள் என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. இங்கு அவ்வவ்போது நடக்கும் பொருட்காட்சிகளும், கூட்டம் கூடாத சர்க்கஸ் கூடாரங்களும் வந்து வந்து போய்க் கொண்டே இருக்கிறது.  

உழைப்பவர்களின் அன்றாட தேவைகளுக்கும் தள்ளுவண்டி கலாச்சரம் எல்லா துறைகளிலும் உள்ளது. சட்டி முட்டி பாத்திரம் விற்பனை முதல் சமோசா வரைக்கும் அத்தனையும் இங்கு உண்டு.  அத்தனையும் தொழிலாளர்களை குறிவைத்து இயக்கும் அடித்தட்டு விற்பனை. ஆனால் இதற்கெல்லாம் மேல் திருவாளர் நடுத்தர வர்க்கத்திற்கு இப்போது வயிற்றில் உள்ள அதிக சதையை உறிஞ்சி உங்களை அடுத்த உலக அழிகியாக/அழகனாக மாற்ற உதவும் கருவிகள் உள்ள கடை வரைக்கும் வந்து விட்டது. , கடன் வாங்கியாவது தங்கள் ஆடம்பரத்தை காட்டிக் கொள்ள விரும்பும் திருவாளர் நடுத்தர வர்க்கத் திற்காகவும் பல துறைகள் தினந்தோறும் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. முதலாளிமார்கள் மட்டும் எப்போதும் போல அன்றும் இன்றும் எப்போதும் போல் கோயம்புத்தூரை தான் தேடிச் சென்று கொண்டுருக்கிறார்கள்.  20 வருடமாக தினந்தோறும் 12 மணி நேரம் கால்கடுக்க நின்று உழைத்து மாதம் 6000 வாங்கும் உழைப்பாளர்கள் முதல் அதே ஒரு மாதம் 2,50,000 வரை வாங்கும் அலுவலகப் பணியாளர்கள் வரைக்கும் உள்ள கலவையான ஊர் இது. இருவரின் உழைப்பும் பொறுப்பும் வெவ்வேறு. 
வெளிநாட்டுக்கு வேலை தேடி சென்றவர்கள் கூட வாங்க முடியாத சம்பளம் இங்கு வெளியே தெரியாமல் வாங்கிக் கொண்டுருப்பவர்கள் அதிகம். தொழிலாளர் முதல் பணியாளர் வரைக்கும் நிறுவனத்தின் வளர்ச்சி செங்குத்தாக ஏறிக்கொண்டுருக்க உதவும் வரைக்கும் மட்டும் தான் இங்கு எல்லாமே நிரந்தரம். குறியீடு தலைகுப்புற விழத் தொடங்கினால் அடுத்த வேளைக்கு நான் சிங்கா நீ சிங்கி என்ற புதிய தத்துவம் தான்.  நம்பிக்கையுடன் உழைத்த முதலாளிகளைப் போலவே நம்பி இந்த தொழில் மேல் கை வைத்த நம்பிக்கையாளர்களும் வீழ்ந்து போனதாக தெரியவில்லை. அப்படி கீழே விழுந்து இருந்தா லும் காரணம் வேறாக இருக்கும். 

16 comments:

Unknown said...

சென்னையைவிட பரபரப்பான நகரம் திருப்பூர்

ஹேமா said...

நிறைவான அலசலுடன் எப்போதும்போலச் சொல்லியிருக்கிறீர்கள்.அமைதியாக
வாசித்துவிட்டுப் போகிறேன் ஜோதிஜி.

இங்கு சாதாரண கடைகளில் அதாவது மலிவு விலையில் என்று சொல்லக்கூடிய கடைகளில் இந்தியாவில் தைக்கப்பட்ட பருத்தி உடைகள் எங்களுக்குக் கிடைக்கிறது.அதுவும் நாங்கள் போடக்கூடிய மாதிரி அமைப்போடு.சாதரண ஒரு பனியன் 30Sfr என்றால் பாருங்களேன்.இந்தியப் பணத்தால் பெருக்கி....!

geethappriyan said...

தலைவரே,
அருமையான தொடர்ச்சி.
பேரே தூள்.நம்பி கை வை
எவ்ளோ செய்தி சொல்லுது?:)

தமிழ் அஞ்சல் said...

ஜி

திருப்பூர .. அச்சுப்பிசகாம பதியறீங்க..!

தமிழ் உதயம் said...

தொழிலாளர் முதல் பணியாளர் வரைக்கும் நிறுவனத்தின் வளர்ச்சி செங்குத்தாக ஏறிக்கொண்டுருக்க உதவும் வரைக்கும் மட்டும் தான் இங்கு எல்லாமே நிரந்தரம். குறியீடு தலைகுப்புற விழத் தொடங்கினால்


எந்த தொழில் செய்பவராக இருந்தாலும், எவ்வளவு சம்பாதிப்பவராக இருந்தாலும் - இந்த நிரந்தர மற்ற தன்மையை உணர வேண்டும். சம்பாதிப்பது என்பது நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு. அதையே வெற்றியாளன் என்பதற்கான அடையாளமாய் கருதி விடக்கூடாது.

ராம்ஜி_யாஹூ said...

nice post, But I heard that employees are not properly treated/recognised by employers.

They say 100's of saravana stores (angaadi teru) are there in Tirupur. Is that true.

வடுவூர் குமார் said...

திருப்பூரை முழுவ‌துமாக‌ சுவாசித்திருக்கிறீர்க‌ள்‍ -அருமை.

ஜோதிஜி said...

செந்திலுக்கு வணக்கம். பரபரப்பான ஊர் என்பதோடு பணத்தை தேடி அலையும் படபடப்பான ஊரும் கூட.

ஹேமா உங்கள் வருகைக்கு நன்றி. தனிப்பட்ட முறையில் இதன் பின்னால் சூட்சுமத்தை உணர வைக்க முயற்சிக்கின்றேன். நன்றி.

கார்த்திகேயன் மணி விமர்சனத்திற்கு நன்றி.

ரமேஷ்

சம்பாரிப்பது என்பது ஒரு வாய்ப்பு. மிக நல்ல பார்வை..........

ராம்ஜி யாகூ உங்கள் முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாசிக்கும் போது சில புரிதல்கள் உங்களுக்கு கிடைக்கும். நல்ல முதலாளிகளும் உண்டு. மோசமான தொழிலாளிகளும் உண்டு. கலந்து கட்டிய மரத்துப் போன உலகம் இது.

நன்றி குமார். சுகமான சுவாசம் இது.

ராஜ நடராஜன் said...

நீங்கள் கேட்ட "இங்கு நான் பார்த்தவரைக்கும் எவரும் கால்பந்து ஆட்டத்தை ஒரு விளையாட்டாகக்கூட மதிக்க தயாராய் இல்லை. கிரிக்கெட் அளவிற்கு இதன் தாக்கம் இங்கு குறைவு. ஏன்?" என்ற கேள்விக்கு இடுகை வெளியிட்டுள்ளேன்.

மீண்டும் வருகிறேன் உங்கள் எழுத்தின் நட்புக்கு.நன்றி.

கோவி.கண்ணன் said...

தலைப்புக்கு ஒரு பாராட்டு, சொல்விளையாட்டு அருமை.

உங்கள் கட்டுரைகள் தன்முனைப்புகளை தூண்டுகிறது. திருப்பூர் பற்றிய தகவல்களை நூலாக்கலாம்

Thenammai Lakshmanan said...

வெளிநாட்டுக்கு வேலை தேடி சென்றவர்கள் கூட வாங்க முடியாத சம்பளம் இங்கு வெளியே தெரியாமல் வாங்கிக் கொண்டுருப்பவர்கள் அதிகம்//

அப்படியா ஜோதிஜி..!!!

ராஜ நடராஜன் said...

மீள் வாசிப்புக்கு மீண்டும் ஒரு முறை.

மாடுகள் தட்டையை தின்னும் போது காலகட்டத்தில் குறையவேண்டும்.மாறாக மாடே இல்லாத போது தட்டையும் இல்லை என்பது வாழ்வியல் முரண்.

டெல்லி முதல் கன்னியாகுமரி வரை சரி.ஆனால் ஈழப்போரின் காலகட்டத்தில் சிங்களவர்கள் பற்றிய குரல்கள் எழும்பியது.அநேகமாக தமிழச்சி திருப்பூர் சென்ற நாட்கள் என்று நினைக்கின்றேன்.இது எப்படி?

2010ல் 20 ஆயிரம் கோடி இலக்கு தோல்விக்கு உலக பொருளாதார சரிவுடன்,இன்னும் தளர்த்தப்பட வேண்டிய ஏற்றுமதி பீரோகிராட்டிக் தடைகள்,syncronization of banking,shipping மேலும் எந்த உற்பத்திக்குமான ஏற்றுமதி பற்றிய பொது அறிவு போன்றவைகள் இன்னும் குறைவு என்றே தெரிகிறது.வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட கம்பெனி,நிறுவனத்தின் வங்கி கணக்கின் தொகை என்ற முக்கிய இரண்டு நிலைகளை கடந்து விட்டால் இறக்குமதி செய்வதற்கான அத்தனை வசதிகளும்,காகிதப் பணிகள் (Certificate of origin,chamber of commerce attestation,Ministry of external stamping,shipping agent contact,Bill of Lading,customs clearance etc)செய்து தரவென வழிமுறைகளும் உதவிகளும் அதிகம்.

பல்லடம் பற்றி சொல்லும் போது கோழிப்பண்ணைகள் பற்றியும்,திருப்பூரை சுற்றிலும் உள்ள கோழிக்கடைகளையும் குறிப்பிட்டிருக்கலாம்.

திருப்பூருக்கு இடம் பெயர்தல் என்ற புதிய கலாச்சாரம்,பொருளாதாரம் குறித்த உங்கள் ஆழ்ந்த பட்டறிவு,சமூக அலசல் போன்ற பகிர்வுக்கு நன்றி.

ஜோதிஜி said...

நன்றி கண்ணன். இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும்.

உண்மை தேனம்மை. வருகைக்கும் தொடர் வாசிப்புக்கும் நன்றி.

ஜோதிஜி said...

தமிழச்சி குறித்து சொன்ன விசயங்கள் எனக்கு புதிது நடராஜன்.

இங்கு அங்கீகாரம் என்பது எவருக்கும் தேவையாய் இருக்கவில்லை என்பது முற்றிலும் உண்மை. அதிகபட்சம் EXPORT HOUSE என்பது இவர்கள் பெறும் சந்தோஷ அங்கீகாரம்.

முக்கியமாக வெளிப்படையான நிர்வாகமும், உண்மையான எதிர்காலம் குறித்த அக்கறையும் குறைவு. ராகவன் நைஜீரியா சொன்னது போல் நூறு கோடி வருடாந்திர வரவு செலவு செய்பவர்கள் கூட மனதளவில் குடிசைச் தொழில் போல ஏறி மிதித்து வருவதைத் தான் கடமையாகச் செய்து கொண்டுருக்கிறார்கள். கடைசியில்?-?-?

பல்லடம் கோழிப்பண்ணைகள் குறித்து அதிகமாக தெரியாது. இங்குள்ள கோழிக்கடைகள் மற்றும் மக்களில் அசைவ உணவு விருப்பங்கள் சற்று நிமிடத்திற்கு முன் பார்த்து விட்டு வியந்து கொண்டே இதை எழுதுகின்றேன்.

உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி.

அது ஒரு கனாக் காலம் said...

பதிவு அருமையா போகுது... நம்பிக்கையை கொடுக்குது .

வெளிநாடுகளில் , முக்கியமாக அமெரிக்காவில் எந்த மாநிலம் எந்த துறையில் சிறப்பாக உள்ளதோ , அதை மேன்மேலும் வளர்த்து கிட்டத்தட்ட ஒரு branding மாதிரி ஆக்கி விடுவார்கள் என்று கேள்வி , ( அதாவது நிறைய ஆரஞ்சு விளையும் ப்ளோரிடா மாநிலத்தில் ,,,ஆரஞ்சை பயிர் செய்வது, அந்த ஜூசை நிறைய வியாபாரம் செய்வது என்பது போல் ) .. அதுபோல் திருப்பூர் இன்று வளர்த்து, பனியன் என்றாலே திருப்பூர் என்று ஆகிவிட்டது, இது கூட அரசாங்கமும் இன்னும் ஏதாவது செய்தால் ( நிச்சயம் கொஞ்சமாவது செய்து கொண்டிருப்பார்கள் ) நல்லது ....

உலக கோப்பை கால்பந்து அல்லது கிரிக்கெட்... சமயத்தில் திருப்பூர் தொழில் அதிபர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு 5,000 or 10,௦௦௦௦௦௦000 டி ஷர்ட் வினயோகம் செய்தால் இன்னும் திருப்பூர் பற்றிய செய்திகள் ( தரம் , விலை , லாபம் ) வெளியில் போகும் ...

ஜோதிஜி said...

புரிந்துணர்வோடு தொடரலுக்கு நன்றி சுந்தர்.

ஏராளமான வெளிநாடுகளில் உள்ள நிகழ்வுகளை உள்ளும் புறமும் நீங்கள் ஊன்றி கவனித்துப் பார்த்து இருப்பதால் இடுகையில் உள்ள விசயங்களை எளிதில் ஒப்பிட்டுக் கொள்ள முடிகிறது. அதன் தாக்கம் படிப்பவர்களுக்கும் பல புரிதல்களையும் உருவாக்கும். நன்றி.

இந்தியாவின் அரசாங்கம் என்பது கொள்கையளவு மட்டுமே. போடக்கூடிய திட்டங்கள் மொத்தமும் கடைசியில் திட்டக்கூடியதாகத் தான் இருக்கிறது. 90 சதவிகிதத்தை தின்று கொளுத்த பெருச்சாளிகளைத் தாண்டி சிதறம் நெல்மணிகள் போலத்தான் ஒவ்வொன்றும் கடைசியில் வந்து சேர்கிறது.

திருப்பூரைப் பொறுத்தவரையிலும் எந்த அளவிற்கு அரசாங்கத்தை குறை சொல்ல முடியுமோ அந்த அளவிற்கு உள்ளே வாழ்ந்து கொண்டுருக்கும் பல புனிதர்களையும் நோக்கி எளிதாக கைகாட்டலாம்.

வளர்ந்தவர்கள் கூட்டம் கூட்டுகிறார்கள். உரையாடுகிறார்கள். தலைவர்கள் பல விருதுகள் வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இன்று வரைக்கும் உலக அளவில் என்ன மாறுதல்கள் நடந்து கொண்டு இருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன உருவாகும். உள் கட்டமைப்பு எவ்வாறு மாற்றம் பெற வேண்டும். என்பது போன்ற விசயங்களை விட அவரவர்க்கு உண்டான ஏறிமிதித்தல் தான் இங்கு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. கடைசியில் அவர்களே அதற்குள் சிக்கிக் கொண்டு விடுவதும் அந்தோ பரிதாபம். பல உதாரணங்கள் கண் முன் நடந்து கொண்டுருக்கிறது.

சந்தைப்படுத்துதல் என்றால் இங்கே உள்ளவர்களுக்கு கிலோ என்ன விலை? என்பதாகத்தான் புரிந்து வைத்து இருக்கிறார்கள். காரணம் அவரவர் சுயநலம். அமைப்புகள் என்பதெல்லாம் நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு தெரியாத ஒன்று.

நெதர்லாந்தில் சிபிஐ என்றொரு அமைப்பு இருக்கிறது. அவர்கள் பணிக்கு இங்க வந்தால் கூட அந்த குளிர்சாதன அறைக்குள் அடைத்து வைத்து பேசி முடித்து விடடு செல்ல வைக்க கூட்டம் தான் இங்கு இருக்கு. இதற்கெல்லாம் மேல் கண்காட்சி, கூட்டம், இது போன்ற பலதும் நடக்கும். சிலவற்றுக்கு சராசரி மக்கள் உள்ளே நுழைய முடியாத படி கட்டுப்பாடுகளும் கட்டணமும்..........

இதெல்லாம் மீறி நீங்கள் சொன்ன உண்மை நேர்மை உழைப்பு என்பதாக ஒரு கூட்டம் இன்னமும் உழைத்து ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.