Saturday, June 19, 2010

இடைத்தங்கல் முகாம்

குறுகிய காலத்தில் நட்பையும் மரியாதையையும் பெற்ற தோழர் அழைத்து இருந்தார்.  சென்ற இடுகையில் கம்யூனிஸ்ட் தலைவர் வரதராஜன் படம் அந்த இடத்தில் தேவையா? என்றார்.  வில்லிவாக்கத்தில் மிக அதிக வித்தியாசத்தில் ஜெயித்து மக்கள் மனதில் இடம் பிடித்த அவரின் போராட்ட குணம் முதல் ஜெரி ஈசானந்தா கவிதையாய் அவரைப்பற்றி எழுதிய உண்மையான புரிதல் வரைக்கும் நான் உணர்ந்து கொண்டது பலப்பல. அவருக்கு மரியாதை செலுத்தக்கூடிய அந்த வாய்ப்பில் அந்த படத்தை அந்த இடத்தில் பொருத்தி இருந்தேன். 

திருப்பூரில் ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமைகளுக்காக ஒரு சங்கத்தின் சார்பாக எவரோ ஒருவர் உள்ளே வந்துள்ளார் என்றால் தொடக்க காலத்தில் முதலாளி வர்க்கத்திற்கு சற்று ஜுரம் வந்தது போல் இருக்கும். காரணம் உரிமையையும் உணர்வுகளையும் ஒரே மாதிரி வைத்துப் பார்த்தவர்கள். ஆனால் இவை அத்தனையும் இன்று கடலில் கரைத்த பெருங்காயம் போல மாயமாகிவிட்டது.   எப்போதும் போல இங்கு சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் இயக்க தோழர்களின், மக்களின் தாக்கம் மிக அதிகமானது.  ஆனால் எல்லா கட்சிகளிலும் என்ன நடக்குமோ?  நடந்து கொண்டு இருக்கிறதோ அதுவே தான் இங்கும் நடந்து கொண்டுருக்கிறது.  இரண்டு பக்க உதாரணங்கள்.

அவரின் இலக்கியப் பேச்சை கேட்க இரவு நேரத்தில் வெகு நேரத்தில் காத்து இருந்த காலமெல்லாம் உண்டு.  கம்யூனிஸ்ட் தலைவராக இருந்தாலும் வெகுஜன ஆதரவை எல்லா பக்கங்களிலும் இருந்து ஒருங்கே பெற்று இருந்தார்.  நிறைய புத்தகங்களும் எழுதி உள்ளார். அவரின் போராட்ட குணம் பிரசித்தமானது.  வாரிசு ஆஸ்திரேலியா படிக்கச் சென்றது முதல் அவரின் பாதையும் திசை திரும்பியது. கேள்விகள் அத்தனையும் கேலியாகப் போனது.  இப்போதும் கட்சியில் வாழ்ந்து கொண்டுருக்கிறார்.  தோழராக அல்ல.  சராசரி மனிதனாக.

இவரைப் போலவே மற்றொருவரும் உண்டு. முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு தொழிலாளிகளின் வேலை நேரத்தை எட்டு மணியில் இருந்து 12 மணிநேரமாக மாற்ற வேண்டும் என்று டெல்லிக்கு படையெடுத்தார்.  கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக என்று விமர்சனங்கள் வரத் தொடங்கியது. திருப்பூருக்கு அருகில் உள்ள ஊரில் 300 ஏக்கர் நிலம் வாங்கியதில் இருந்து ஊருக்கு வெளியே கட்டப்பட்டுக் கொண்டுருக்கும் ஆடம்பர மாளிகை முதல் அவரின் வாழ்க்கை மற்றவரின் விமர்சனத்திற்கு உள்ளானது. எதற்கும் அசராமல் அடித்த பந்தை திருப்தி அடித்து தன்னுடைய அடிப்படை பதவிகளை தக்க வைத்துக் கொண்ட மற்றொரு தோழர்.

இன்றும் தோழர் நல்லக்கண்ணு போல பல தலைவர்கள் இந்தியா முழுக்க இருந்து கொண்டும் இருக்கிறார்கள்.  உள்ளே இருப்பவர்கள் நல்லவர்கள் போல் நடித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.  இது அவர்களின் தவறல்ல.  மேலே இருப்பவர்கள் எடுக்கும் முடிவுகளும் நடக்கும் தேர்தலில் சேரும் கூட்டணிகள் மூலம் தான் அத்தனையும் இங்கு தீர்மானிக்கப்படுகிறது.   அரசியலில் கொள்கை என்பதை விட இருப்பு மிக முக்கியம்.  இருந்தால் தான் பேசவே முடியும்.  இருக்க வேண்டுமென்றால் ஏதோ ஒரு கட்சியுடன் உறவு வேண்டும்.  உறவு இருந்தால் தான் உளுத்தம் பருப்பு போன்ற கொள்கைகளை வேக வைக்க முடியும்.  

ஈழம் கடைசி கட்ட போராட்டத்தின் போல வெகுஜன ஊடகத்தில் வந்த அத்தனை நிகழ்வுகளையும் ஊன்றி கவனித்து படித்து இருப்பவர்களுக்கு ஒன்று புரிந்து இருக்கும்.  நாங்கள் ஆதரவு கொடுக்கக்கூடியவர்கள் என்றவர்கள் செய்த திரைமறைவு வேலைகளும், கட்சி கட்டுப்பாட்டை எதிர்க்க முடியாமல் அதே போலவே திரைமறைவில் முடிந்த வரைக்கும் நல்லவிதமாக ஒத்துழைப்பு கொடுத்த தலைவர்களும் உண்டு.  ஆனால் வெகுஜனம் தெரிந்து கொள்ள முடியாதவர்கள்.  கட்சி தலைவர்களும் அவர்களின் தன்னலமற்ற சேவைகளும் இங்கு ஒரு கட்சி முத்திரையாக பார்க்கக்கூடிய கேவல சூழ்நிலை தான் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கிறது. 

சமீபத்தில் நடந்த பெண்ணாகரம் இடைத்தேர்தல் நாம் அறிந்ததே.  ஒவ்வொரு கட்சியும் விளையாடிய கரன்ஸி கபடி ஆட்ட விளையாட்டுக்களை ஊடக வாசிப்பின் மூலம் ஒவ்வொருவரும் பாதியாவது தெரிந்து கொண்டு இருப்பீர்கள்.  ஆனால் இதே இந்த பெண்ணாகர மக்கள் குளிப்பதற்கும், தங்கள் உடைகளை துவைத்துக் கொள்வதற்கும் வாரத்தில் ஒரு நாள் அருகில் உள்ள ஓகேனக்கல் சென்று கொண்டு இருப்பவர்கள்.  காரணம் தண்ணீர் பஞ்சம்.  இடைத்தேர்தல் வந்த காரணத்தால் பெண்ணாகரம் பொன் நகரம் போல் ஆனது.  அடிப்படை வசதிகள் இல்லாத இது போன்ற எத்தனையோ கிராமங்கள் தமிழ்நாட்டில் உள்ளதோ?  தேர்தல் களத்தில் இருந்த எந்த கட்சித் தலைவர்களுக்கும் அது குறித்து அக்கறையில்லை.  காரணம் அன்றைய தினத்தில் உள்ளே வாழ்ந்த அத்தனை மக்களும் எந்த கட்சி எவ்வளவு பணம் தருவார்கள் என்ற நோக்கத்தில் இருந்த காரணத்தால் அவர்களின் கப்பு வாடை கூட கப்சிப் ஆனது. காரணம் கொடுத்து பழக்கிய கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் கூட இனி வரும் தேர்தலில் தர முடியாது என்றாலும் மக்கள் விட மாட்டார்கள்.

நீங்கள் எவரை குற்றம் சாட்ட முடியும்? முறையற்ற வழியில் கட்சிகள் செலவழித்த பணத்தில் தொகுதிக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்து இருக்க முடியும்.  ஆனால் மக்களும் அடிப்படைத் தேவைகள் குறித்து எதையும் கேட்கவில்லை. அன்றைக்கு கிடைக்கும் பணமே அவர்களுக்கு பிரதானமாக இருந்தது. மூவாயிரம் ரூபாய் கிடைத்த குடும்பங்களுக்கு ஒரு மாத அடிப்படை செலவினங்களுக்குப் போதுமானது.  ஓட்டு வாங்கியவர்கள் அடிக்கும் கோடிகள் குறித்து அவர்களுக்கு தெரிய வேண்டிய அவஸ்யமில்லை. அவர்களின் கடந்த கால கஷ்டங்கள் கூட எந்த மாற்றத்தையும் அவர்கள் மனதில் எதையும் உருவாக்கவில்லை.  இது தான் இன்றைய அரசியல்வாதிகளின் பலம். இல்லாவிட்டால் மிக குறுகிய காலத்தில் ஐந்து தொலைக்காட்சி ஒலிபரப்பை கலைஞரால் உருவாக்கியதோடு மிகச் சிறந்த ஊடகத் தலைவராக வியாபாரியாக வெளியே வந்து இருக்க முடியாது. தேர்தலில் நிற்கும் தனிப்பட்ட மனிதர்களின் குணாதிசியங்கள் செல்லுபடியாகாமல் கட்சி சார்பாகவே வேட்பாளர்களை பார்க்கும் மக்களின் மனோபாவத்தின் அடிப்படையே இவ்வாறு உருவாக்கப்பட்ட செய்தி தொடர்பு சாதனங்கள் தான் முக்கிய பங்கு  வகிக்கிறது.  திரும்ப திரும்ப சொல்லப்படும் பொய்கள் தான் மக்களிடம் வந்து சேர்கிறது. 

உனக்கு அவரைப் பிடிக்குமா?  அப்படி என்றால் நீ எனக்கு எதிரி என்பதாக அர்த்தம் கற்பிக்கப்பட்டு ஒவ்வொருவரையும் ஒதுக்கும் சூழ்நிலை. இதுவே இந்த இடுகை வரைக்கும் வந்து நிற்கிறது.  படிப்பறிவு இல்லாத பாமரனின் மூடத்தனம் இறுதியில் வேற வழியே தெரியாமல் பக்தியில் போய் முடிந்து விடுகிறது.  படித்தவர்களின் மூடத்தனம் என்பது மூர்க்கத்தில் கொண்டு போய் சமூக சீரழிவுக்கு மறைமுக காரணமாக இருக்கிறது. நான் விரும்புபவர்களை ஏதோ ஒரு வகையில் என் இடுகையில் அவர்களைப் பற்றி சிறு குறிப்பாக எழுத விரும்புகின்றேன் அத்தனையும் என்னுடைய பார்வை. அது எந்த கட்சி கட்டுப்பாடுகளுக்கும் அப்பாற்பட்டது.  நண்பர் சொல்லியிருந்தபடி அதிகபட்சம் தமிழ் வலையுலகத்தை பத்தாயிரம் பேர்கள் படித்தால் ஆச்சரியம் என்றார்.  ஆனால் வினவு எழுதிய ஒரு தலைப்புக்கு 13,000 பேர்கள் பார்வையிட்டு இருந்தார்கள்.  ஆறு கோடிக்கு மேல் அதிகம் உள்ள மாநிலத்தில் 15000 பேர்கள் என்பதும் அதில் நான்கில் ஒரு பங்கு கூட தமிழ்நாட்டில் இருப்பவர்கள் தொடர்ந்து படிப்பார்களா என்பது ஆச்சரியமே? இங்கு தேநீர் விடுதிகளில் பணிபுரியும் மலையாள மக்கள் கூட மொத்த வேலைகளுக்கு மத்தியிலும் அவர்கள் கையில் அன்றைய அவர்களின் செய்திதாள் இருக்கிறது. தமிழர்களுக்கு எப்போதும் ஒரு போதை தேவையாய் இருக்கிறது. ஊடகமும் வரிந்து கட்டும் திரைச் செய்திகளுக்குள்ளே உழன்று கொண்டுருக்க அதுவே மொத்த படிப்பவர்களின் விருப்பமாகவும் மாற்றப் பட்டு விடுகின்றது. அனுபவிப்பவர்களுக்கு எப்போது அதை முடித்துக்கொண்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை. மழுங்கடிக்கப்பட்ட சிந்தனையில் எத்தனை ஆணிகள் குத்தினாலும் ஒன்றும் ஆகிவிடப்போவது இல்லை.  இங்கு எந்த மாறுதல்களும் நடந்து விடாது என்று யோசிப்பதைப் போலவே ஏதாவது நடக்காதா? என்று எண்ணிப்பார்த்தால் தவறில்லை.

எழுதத் தொடங்கிய முதல் இடுகை முதல் இன்று வரையிலும் சர்ச்சையை உருவாக்கும் அளவிற்கு தரமில்லாமல் இகழ்ந்து எதையும் எழுதியது இல்லை. மாற்றுக் கருத்து என்றபோதிலும் அதை நாகரிகமாகத்தான் முன் எடுத்துச் செல்ல விரும்புகிறேன். கற்றுக் கொடுத்தவர்களும் விமர்சனம் மூலம் என்னை வளர்த்தவர்களும் அவ்வாறு தான் என்னை உரமூட்டி உள்ளார்கள்.  நண்பர் சொன்னது போல இது வெறும் திருப்பூர் குறித்தோ அல்லது ஜவுளித்துறை என்பதற்கான சாதக பாதகங்கள் குறித்தோ அல்ல.  ஜவுளித்துறை என்பது ஒரு குறியீடு.  நம் தலைவர்கள் இந்திய தொழில் துறைகளை எவ்வாறு தங்கள் சுயலாபத்துக்காக கெடுத்துக் கொண்டுருக்கிறார்கள் என்பதை பகிர்தல் தான் என்னுடைய நோக்கம்.  வளர நினைப்பவர்களுக்கு ஒரு விதமான மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால் வந்து கொண்டுருக்கும் பெரும்பாலான ஊடக செய்திகளும் மறைமுகமாக எதிர்மறை எண்ணங்களைத்தான் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. எல்லாமே இந்த நாட்டில் சிறப்பாக இருக்கிறது.  எல்லா வளமும் இங்கு உள்ளது என்பதைப் போலவே 120 கோடி உள்ள நாட்டில் 55 கோடி பேர்கள் இன்று வரைக்கும் ஒரு வேளை சோற்றுக்கு திண்டாடிக்கொண்டு தான் தங்கள் வாழ்க்கையை தினந்தோறும் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள் என்பதும் உண்மை.  முக்கிய காரணம் சுயநல தலைவர்கள்.

சிந்திப்பது என்பது மனிதனுக்கு மட்டுமே உண்டான தனிப்பட்ட குணாதிசியம்.  ஆனால் விலங்குகள் கூட தங்களை காத்துக்கொள்வதற்காக எத்தனையோ வகையில் நம்மை விட சிறப்பாக நம் முன்னால் வாழ்ந்து காட்டிக்கொண்டு இருக்கிறது. அடிப்படை கட்டமைப்புகள் மெதுமெதுவாக செல்லரித்துக் கொண்டுருக்கும் இந்த ஜனநாயக அமைப்பில் ஏதாவது ஒரு நல்ல தலைவர் மூலம் இந்த நாடு சுபீட்சம் அடையாதா என்று ஏங்கிங்கொண்டுருக்கும் சராசரி மனிதனாகத்தான் இந்த வாழ்க்கை அமைந்துள்ளது.  இந்த நாடு வளரவில்லையா? என்று கேட்பவர்களுக்கு சந்தோஷப்படும் அளவிற்கு தெற்காசியாவில் உள்ள பணக்காரர்களின் எண்ணிக்கை சென்ற போர்ப்ஸ் பத்திரிக்கையின் அடிப்படையில் இரண்டு மடங்கு அதிகமாகி உள்ளது.  முந்தைய வருடத்தை விட கடந்த வருடத்தில் இந்திய பணக்காரர்களின் எண்ணிக்கையும் அவர்களின் சொத்து மதிப்பும் அதிகரித்து உள்ளது.  இதை விட வேறு என்ன பெருமை வேண்டும்? இவர்கள் அத்தனை பேர்களும் வேர்வை சிந்தி உழைத்து இந்த அளவிற்கு உழைத்தவர்கள். 

ஆனால் திருப்பூருக்குள் போர்ப்ஸ் பத்திரிக்கைக்கு தெரியாத பல மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.வங்கிகளில் வாங்கிய பணத்தை கட்டாமல்,கருப்பு பண பதுக்கல் இல்லாமல், வரி ஏய்ப்பு செய்யாமல் முழுமையான ஆடம்பர வசதிகள் எதையும் விரும்பாமல் தங்களாலும் நேர்மையுடன் வாழ முடியும் என்று இந்த சமூகத்திற்கு உணர்த்தி காட்டிக் கொண்டு  உழைப்பின் மூலம் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் அவருக்கு நீங்கள் திருவாளர் அப்பாவி பொதுஜனம் என்று கூட பெயர் வைக்கலாம்.  கோடிகளும் இல்லாமல் தெருக்கோடிக்கும் செல்லாமல் வாழந்து கொண்டுருக்கும் நடுத்தரவர்க்கம். உள்ளே இருக்கும் ஏற்றுமதி தொழில் தொடர்பான மற்ற விசயங்களுக்கு செல்வதற்கு முன் தனிப்பட்ட மிகச் சாதாரண மனிதர்கள் தங்கள் வாழ்க்கைக்காக போராடி ஜெயித்த விசயங்களையும், எந்த முறைப்படியான கட்டமைப்பு இல்லாத இந்த ஊரில் அத்தனையையும் தங்கள் வாழ்க்கைக்கு ஏற்றபடி சாதகமாக மாற்றிக் கொண்டவர்களையும் பார்க்கலாம்.  காரணம் நாம் முதலில் திருப்பூரைப்பற்றி புரிந்து கொள்ள வேண்டும். நூல் உள்ளே வருகிறது.  ஆடையாக பெட்டிக்குள் கப்பல் துறைமுகத்துக்கோ விமான நிலையத்திற்கோ செல்கிறது.  பல நூற்றுக் கணக்கான துறைகளும் உள்ளே இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது. எப்படியாவது வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்று வாழ ஆசைப்பட்டு தேடி வந்த மக்கள் இங்கு எப்படி வாழ்கிறார்கள்?   நூலுக்கும் ஆடைகளுக்கும் இடையே உள்ள சார்பு தொழில்கள்,  பலரையும் வாழ வைத்துக் கொண்டு தான் இருக்கிறது.

23 comments:

Unknown said...

தோழர்கள் மாறி வெகு காலம் ஆகிவிட்டது .. நீங்கள் சொல்வது மாதிரி மற்ற இயக்கங்களிலும் நல்லக்கண்ணு மாதிரியான ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள்..
திருவாளர் பொதுஜனம் பற்றி இங்க யாருக்கு கவலை .. நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க கடந்த பத்து தினங்களாக வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்க் கொண்டனர். அத்துணை ஊடகங்களும் அந்த செய்திய இருட்டடிப்பு செய்துவிட்டன.

பின்னோக்கி said...

பல தளங்களைத் தொட்டு இந்தக் கட்டுரை, திருப்பூர் வாழ்க்கை ஒரு எளிய அறிமுகமாகப் படுகிறது. அருமை

கண்ணகி said...

தொடர்கிறேன்....

தமிழ் உதயம் said...

வாரிசு ஆஸ்திரேலியா படிக்கச் சென்றது முதல் அவரின் பாதையும் திசை திரும்பியது.//////

இது தான் யதார்த்தம். வரதராசன் மட்டும் விதிவிலக்காவாரா.


இன்றும் தோழர் நல்லக்கண்ணு போல பல தலைவர்கள் இந்தியா முழுக்க இருந்து கொண்டும் இருக்கிறார்கள்.///

அவர்கள் எத்தனை நல்லவர்களாக இருந்தால் என்ன.அயோக்கியர்களோடு தானே கூட்டணி வைக்கிறார்கள். நல்லபாம்பு என்பதற்காக அவை கொத்தாமல் இருக்க போவதில்லை. நல்ல அரசியல்வாதி என்பதற்காக, அவர் பொய் அரசியல் பண்ணாமல் இருக்க போவதில்லை

///அரசியலில் கொள்கை என்பதை விட இருப்பு மிக முக்கியம். இருந்தால் தான் பேசவே முடியும். இருக்க வேண்டுமென்றால் ஏதோ ஒரு கட்சியுடன் உறவு வேண்டும். உறவு இருந்தால் தான் உளுத்தம் பருப்பு போன்ற கொள்கைகளை வேக வைக்க முடியும்.

இதற்கு மேல் நாம் சொல்ல என்ன இருக்கிறது.

தமிழ் உதயன் said...

அன்பரே,

நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான். (தப்பாக அர்த்தம் கொள்ள வேண்டாம், இ(ஈ)னத்தலைவர் சொல்லுவது போல சொல்லவில்லை) நான் உறுப்பினராக இருக்கும் கட்சியில் எம்.பி யாக இருந்தவருக்கு ஒரு ஸ்பின்னிங் மில் இருப்பதாக இப்போதும் கேள்வி. இதுதவிர தன்னுடைய மகனை லண்டனில் படிக்கவைத்துள்ளார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தன்னிடம் உள்ள பணம் வெறும் 1000 ரூபாய் என்று குறிப்பிட்டார். அதே கட்சியில் இருக்கும் எனக்கு மனம் நெருடலாக இருந்தது.

ஆனால் என்ன செய்வது இருப்பதிலேயே குறைவான மோசமான இயக்கத்தைதான் இன்று பின்பற்ற வேண்டியுள்ளது. என்னை பொறுத்தவரை நடுத்தர மக்களின் பொது புத்தியால்தான் இன்றைக்கு அரசியல் நாராசமாகிவிட்டது என்று சொல்லுவேன்.

தேர்தல் அன்று விடுமுறை தினமாக எண்ணி இன்றைக்கும் வாக்களிக்க செல்லாத மக்களின் விழுக்காடு என்பது 25% இருக்கும். இந்தமாதிரி இருக்கும் மக்களின் செயல்பாடுகள் அரசியல்வாதிகளின் செயல்களை கேள்வி கேட்க என்ன தகுதி வளர்க்கும்? நீங்களே யோசித்துபாருங்கள்...

ஒன்று சேர் said...

அன்பார்ந்த ஜோதிஜி

தங்களின் பஞ்சு முதல்...இடுகையில் தீபாவளிக்கு முதல் மாதம் தொழிற்சங்க (போனஸ் பேச்சுவார்த்தை நாடகம்) வியாபாரம் தொடங்குவது முதல் "புரிந்துணர்வு ஒப்பந்தம் - கண்ணும் கருத்துமாய்" என்கிற வகையில் தற்கால தொழிற்சங்க வியாபாரங்களை நையாண்டி செய்யும் விதமாக அமைந்திருந்ததால் தங்கள் எண்ணம் போலவே மதிக்கத்தக்க சிலரில் ஒருவரான அதுவும் இறந்தவர் படத்திற்கு பதிலாக தற்கால படாடோப கட்சி தொழிற்சங்க தலைவரின் படம் இருந்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என உங்கள் தோழர் எண்ணியிருக்கலாம் என நினைக்கிறேன்.
மேலும் அனைத்து இடுகைகளுக்கும் பாராட்டுக்கள் மட்டுமே வரவேண்டும் என்று நினைப்பவர்களில் ஒருவராக உங்களை கருத முடியாது என எண்ணுகிறேன். ஏனெனில் ஒவ்வொரு இடுகையிலும் சமூக சீர்கேட்டில் ஏதாவது ஒன்றிரண்டு விஷ‌யங்களை பொருத்தமாக சாடி எழுதுகிறீர்கள். தோழர்களில் மரியாதைக் குரியவர்களாக இன்னும் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டுமே இருக்கிறார்கள். அதிலும் ஒரு மறுமொழி நண்பர் சொல்லியபடி அவர்களும் விரும்பாத கூட்டணியில் இணைகிறார்கள் - அங்கு பூவோடு சேர்ந்த நார் என்பதற்கு பதிலாக வேறு மாற்றித்தான் சொல்ல வேண்டும். தொடரட்டும் உமது முற்போக்கு எழுத்துப்பணி
தோழமையுடன் - சித்திரகுப்தன்

ஜோதிஜி said...

முதல் முறையாக இதுவொரு வினோத அனுபவம். ஒவ்வொரு முறையும் அக்கறையாய் புரிந்துணர்வுடன் விவாதத்தை விமர்சனத்தை தொடங்கி வைக்கும் செந்திலுக்கு நன்றி.

ரமேஷ் கண்ணகி உங்கள் இருவரின் தொடர் வாசிப்புக்கு நன்றி.

எப்போது போல தமிழ் உதயம் தன்னுடைய விமர்சனம் மூலம் ஒரு பெரிய இடுகையில் எழுத வேண்டிய விசயத்தை எளிதாக புரிய வைக்க முயற்சித்தமைக்கு நன்றி.


நடுத்தர மக்களின் பொது புத்தியால்தான் இன்றைக்கு அரசியல் நாராசமாகிவிட்டது என்று சொல்லுவேன்.

முற்றிலும் உண்மை. சீமானை சந்திக்கச் சென்று விட்டு வந்த நண்பர் சீமான் சொல்லியதாக தொலைபேசியில் சொன்னது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.

" இயக்கத்தில் சேர்வதும் இல்லை. சேர விரும்புபவர்களை ஆதரிப்பதும் இல்லை. வெளியே நின்று கொண்டு இன்னும் எத்தனை நாளைக்கு தான் இவன் நடத்துகிறான் என்று பார்க்கலாம்" என்கிறார்கள்.

நீங்கள் யோசிக்க வைக்கச் சொன்னதும் வந்து ஞாபகம்.........


ஒன்று சேர்.........

வியப்பாய் இருக்கிறது. இன்று அலுவல் வேலையாக தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருக்கிறீர்கள் என்பது நினைத்துப் பார்க்கக்கூடிய முடியவில்லை. உங்கள் புரிந்துணர்வைப் பற்றி தனியாக எழுத வேண்டும். தவறான வழியில் இந்த இடுகையின் எழுத்து சென்று விடும் மனதில் சிறிய அச்சம் இருந்தது.

உங்களின் நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது.

வந்தவர்கள்,படித்தவர்கள்,குத்தியவர்கள் அத்தனை பேருக்கும் நன்றி.

துளசி கோபால் said...

அரசியல்வியாதிகள் எல்லாம் எரியும் கொள்ளிகள்.

அதுலே எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?



'தான்' அதிகமான குழம்பே, குழம்பிரும்.

ப்ச்........:(

ராஜ நடராஜன் said...

ஆழ்ந்து வாசித்தேன்.அருமையான நடையோடு சமூக அக்கறையை வெளிப்படுத்தும் எழுத்துக்கள்.

இந்த மாதிரியான சிந்தனைகளும்,ஆக்கபூர்வங்களும் எப்படி சத்தமில்லாமல் ஒளிந்து கொள்கிறதோ அதேமாதிரிதான் அனைத்து துறைகளிலும் ஆட்சி பீடத்திலும்.

மத்திய தர வர்க்கம் இந்தியாவின் பலமா?அல்லது பலவீனமா என்பது விவாதத்திற்கு முன் வைக்கப்பட வேண்டிய ஒன்று.நாட்டின் வளர்ச்சி மற்றும் பிற்போக்குத் தனத்திற்கு இதன் பங்கு மிக அதிகம்.தராசு தட்டில் வளர்ச்சி ஒரு பக்கம் உயர்ந்து நிற்பதால் உயர்வு என்று சொல்ல முடியாத தாழ்ச்சி.

இரு கழகங்களும் இயல்பாகவும்,சமூகத்திற்கு தேவையில்லாத மூப்பின் நிலைக்கு வந்து விட்டதென்றே தோன்றுகிறது.ஆனால் அவற்றின் வேர்கள் மிக ஆழமாக பதிந்துள்ளதாலும் மாற்றங்களை மக்கள் மனது அவ்வளவு எளிதாக உள்வாங்கிக் கொள்ளாத மனநிலையை உருவாக்கி வைத்திருப்பதாலும் இவற்றின் ஆதிக்கம் இன்னும் தொடரும் போலவே தெரிகிறது.

சீமான் பற்றிய தயக்கம் எல்லோருக்கும் இருப்பதற்கு காரணம்,வை.கோ,ராமதாஸ்,திருமா போன்றவர்களின் இரட்டை நிலை பயம் என்று தோன்றுகிறது.மக்களிடம் இவரது கருத்துக்கள் மனதில் படிவதைப் பொறுத்தும்,உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கும் அப்பால் ஆக்கபூர்வமாக மக்கள் பிரச்சினைகளை கையாள்வதைப் பொறுத்துமே இவரது இயக்கத்தின் வளர்ச்சி உள்ளது.

போர்ப்ஸ் பற்றியும்,போபர்ஸ் பற்றியும் பெருமை கொள்ளும் நாடு இந்தியாவாகத்தான் இருக்க முடியும்.இரண்டுமே தங்களை மாற்று பெயர்களுடன் முன்னிறுத்திக் கொள்ள தவறுவதே இல்லை.

கம்யூனிஸ்ட்டுகள் கடைநிலை மக்களுக்கு குரல் கொடுக்கும்,சமூக அக்கறை கொண்டவர்கள் என்பதோடு யாராவது முதுகிலேயே சவாரி செய்பவர்கள்.அரசியலமைப்பின் மொத்த விழுக்காட்டில் 20 சதம் அவர்களுக்குரியது என்பது தவிர மேலும் போகாத கீழேயும் சறுக்காத அரசியல் பங்காளர்கள்.

மீண்டும் வருவேன்.நன்றி.

ஜோதிஜி said...

டீச்சர் நீங்கள் சொன்ன வார்த்தையைத் தான் கடல் தாண்டி ஒருத்தர் என்னை கண்டிப்புடன் திட்ட முடியாமல் தவித்துக் கொண்டுருக்கிறார். மேலும் எழுதுபவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதுடன் தங்களுடைய அனுபவங்களை வேறு எப்படித் தான் தெரிவிப்பது? நானே சற்று குழம்பிப் போய்த்தான் இந்த ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டேன். ஆனால் விமர்சன மக்களைப் போலவே ஓட்டுடன் ஒதுங்கிக்கொண்டவர்களின் ஆதங்கமும் இவ்வாறு தான் இருக்கும் போல?

நடராஜன் எந்த தளத்திலும் இத்தனை புரிந்துணர்வுடன் பெரிதான விமர்சனம் நீங்கள் கொடுத்துப் பார்க்கவில்லை. நிறைய விசயங்களை யோசிக்க வைக்கவும், உங்கள் எழுத்தாற்றல் குறித்து வியக்கவும் வைத்தீர்கள். நன்றி நண்பரே.

உண்மைத்தமிழன் said...

தோழர்கள் என்றைக்கு முதலாளிகளுடன் கூட்டணி வைக்கத் துவங்கினார்களே அன்றைக்கே அவர்களிடமிருந்த எளிமை விடைபெற்றுச் சென்றுவிட்டது..!

மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கு மேற்கு வங்க மாநிலத்தில் வசதி, வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்க கடிதம் எழுதத் துவங்கியதுதான் நமது மாநில தோழர்கள் ஆரம்பித்த முதல் முதலாளித்துவம்..!

அது இப்போது கேரளாவரையிலும் பரவி.. கண்ணுக்குத் தெரியாமல் பல தோழர்கள் இப்போது முதலாளிகளாக இருக்கிறார்கள்..!

ஜோதிஜி said...

தமிழா நீண்ட விடுமுறைக்குப் பிறகு உள்ளே வந்து உள்ளீர்கள். என்னுடைய நோக்கம் தோழர்களுக்கு மட்டும் அல்ல. இன்றைய அரசியலின் எதார்த்தம்.

கொள்கையை விட தன்னை முன் நிறுத்திக்கொள்ளும் கலாச்சாரம் தான் காலச்சக்கரத்தை முன்னோக்கி பின்னோக்கி பார்க்க வைக்கிறது.

மற்றொரு சின்ன சந்தேகம்?

இதென்ன இந்த இடுகைக்கு மட்டும் விமர்சனம் (?) தந்துள்ளீர்கள்,

geethappriyan said...

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டு கட்சியில் தான் மிக எளிமையான தோழர்களை நாம் நிகழ்காலத்தில் கைகாட்ட முடியும்,மற்ற மாநிலங்களை பற்றி ப்ரீட்சயமில்லை,நல்ல கண்ணு அவர்கள் இன்னமும் 4000ரூபா வாடகை வீட்டில் வசிப்பதாய் கேள்வி,தனக்கு வந்த மிகப்பெரும் தொகையான பணமுடிப்பையும் கட்சிக்கே கொடுத்தவர்,நல்ல பதிவு ஜோதிஜி.

geethappriyan said...

நீங்கள் பிடிக்கும் படங்கள் பாந்தம்,விகடனில் வந்தமைக்கு வாழத்துக்கள் தலைவரே.

Anonymous said...

i know a person who is in the same party and been in the big position with honesty and now he resigned everything. and he is in the home, and party leaders are totally forget him. all tirupur old people knows him for his honesty

Anonymous said...

tata

அன்புடன் நான் said...

தோழர்கள் கூடவா இப்படி.....?

உங்க மற்ற விளக்கங்களும் தெளிவுகளும்.... உண்மையை உணர்த்துகின்றன. தொடருங்க

அன்புடன் நான் said...

சில உண்மைகள் கசக்கவே செய்கிறது.

ஜோதிஜி said...

நன்றி கார்த்திகேயன். கருணாராசு.

அனானி நீங்கள் சொல்வது உண்மை. புரிகிறது.

அது ஒரு கனாக் காலம் said...

தாமதமாய் வந்ததுக்கு மன்னிக்கவும் .

நல்ல பதிவு , உங்கள் உணர்வுகள் வார்த்தைகளாய் வந்திருக்கிறது. என்னுடைய பார்வை அவ்வளவு விசாலம் இல்லை என்றாலும், ஓரளவுக்கு நல்ல மனிதர்கள், சம்பவங்கள் , நிகழ்ச்சிகள் கண்ணில் பட்டு கொண்டிருந்தது , ... ஆனால் , இப்போது ( இந்தியாவில் ) நடப்பதை பார்த்து , அயர்ச்சியே மிஞ்சுகிறது.

இருந்தாலும் நம்பிக்கை துளிர் விடுகிறது ... மற்ற நாடுகளுக்கும், நமக்கும் உள்ள மிக பெரிய வித்யாசம், கல்வி ... கல்வி மட்டுமே ( நன்றி ... காமராஜர் என்ற மாமனிதனுக்கு) , நான் ஸ்பெயின் போன்ற இடங்களுக்கு போன பொழுது, அங்கு கவனித்தது, பெரிய கலவி நிலையமோ , கல்லூரிகளோ சுத்தமாக இல்லை ( நான் போனது மார்பியா மற்றும் மயோர்கா என்ற இடங்கள் ) ... ஆனால் நம் ஊரில் , சென்னை ஆகட்டும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகட்டும் எத்தனை எத்தனை கல்லூரிகள் ... ஆரம்பகல்வி ஓரளவுக்கு எல்லாருக்கும் எட்டக்கூடிய தொலைவில் தான் உள்ளது ... உயர் படிப்பு எட்டா கனியாகி கொண்டுவருகிறது.

கல்வியும் , உழைப்பும் , நேர்மையும் இருந்தால் நிச்சயம் முன்னே செல்லலாம் ...

ஜோதிஜி said...

கணிணியை கட்டிக் கொண்டு தினந்தோறும் வாழும் வாழ்க்கையில் சோர்வும் எரிச்சலும் மிகுந்த இன்றைய தினத்தில் நீங்கள் தந்த இந்த விமர்சனம் புத்துணர்ச்சியை தந்தது சுந்தர்.

ராஜ நடராஜன், உங்கள் கருத்துக்களைப் பார்த்துவிட்டு தளத்தின் நோக்கத்தின் பார்வையை வேறு திசையில் கொண்டு போகலாம் போல் இருக்கிறது. காரணம் வந்துள்ள விமர்சனங்கள், அதிக நம்பிக்கை அளித்துக் கொண்டுருக்கிறது.

கல்விக்கூடங்கள் அதிகமாக உள்ளது. ஆனால் கற்றவர்கள் பெற்ற அறிவு?
நடுத்தரவர்க்கத்தின் வாங்கும் திறன் அதிகமாகி விட்டது? ஆனால் ஒவ்வொருவரின் ஆசைகளின் எல்லைகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஆனால் தனக்குள் வைத்துருக்கும் ஆசைகளுக்குண்டான உழைப்பை விரும்பாமல் ஊடகம் தரும் போதையை நம்பி கலாச்சார சீரழிவை தன்னை அறியாமலேயே ஒவ்வொருவரும் நகர்த்திக்கொண்டே இருக்கிறோம்.
விவசாயம் என்பது ஒரு கேவலம் என்பதாக மாற்றப்பட்டு, வந்து விற்பனை செய்பவர்களிடம் வாங்குவது கூட நாகரிக குறைவாக கருதிக்கொண்டு தூசியையும் சேர்த்து நிறுத்தித்தரும் வணிக வளாக ஜாம்பவான்களிடம் போய் வரிசையில் நின்று வாங்கிக்கொண்டுருக்கிறோம்.

அவஸ்யமான ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்ளாமல் அடிப்படையான தமிழையும் உணர்ந்து கொள்ளாமல் கும்மி போல் மொழி வரலாறு தொடரும் தலைமுறைகளை படுத்தி எடுத்திக்கொண்டு இருக்கிறது.

நம்பிக்கை வெளிச்சம் சிறு கீற்றாக அவநம்பிக்கைகள் தீப்பந்தமாக எறிந்து கொண்டுருக்கிறது.
இராகவன் நைஜீரியா சொன்ன எந்த கர்மவீரர் சராசரி மனிதர்களின் கர்ம வினையைக் காக்க வருவாரோ?

Priya said...

Hi

i have seen your blog [i have made the comments also] and about the communists

And i would like tell you one communist who is my friend's father and i know their when i was in Tirupur. He was one of the popular union leader in 1980s and he was in many key posts and he became a district secretary also five years back. He is known for his honesty. even his enemies will accept.

When he was in the powerful positions he never earned anything. and his family was run by his wife and now his son is going for job and running the family. He could have used his power and could have earned lots of property since the persons who where in junior positions to him all are now well settled, [you now in tirupur even small level politicians also earning a bunch of sum], Even i had never seen his son or his family used his name anywhere.

but now he left everything and sitting in home. And when i reached tirupur last week i have seen his son is alone fighting to run the family.

Since you have written about communist, i would request you enquire about and write it your blog.becoz few truths has to documented

The person name is - i know it is easy for you to find out - i dont want to mention.

Regards
Priya

ஜோதிஜி said...

ப்ரியா

திருப்பூரில் தொடக்க காலத்தில் ஒரு இஸ்லாமிய நபரால் உருவாக்கப்பட்ட ஒரு எளிமையான நிறுவனம். அதன் பெயர் கூட வானத்தில் தெரியுமே அதைப் போலத்தான். அவர் இறந்த போது அத்தனை நிறுவனங்களும் கடை அடைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மதமாச்யர்ம் இல்லாத உண்மையான முசல்மானாக வாழ்ந்த வாழ்க்கை. அது போலத்தான் இந்த தோழர்களின் வாழ்க்கையும்.

இங்கு தோழர்கள் நடத்தும் பின்னல் புத்தகாலயத்தில் ஒரு பெண்மணி பணிபுரிகின்றார். புத்தகங்கள் வாங்கும் போதெல்லாம் அவரின் கடந்த கால போராட்டங்கள், இயக்கத்தில் பங்கெடுத்த அத்தனை நிகழ்வுகளையும் கேட்டுக் கொண்டு வருவேன். குழந்தைகள் அத்தனை பேர்களும் வாழ்க்கையில் அவரவர் பாதையில் போய்விட்டனர்.

இன்னமும் இயக்கம் சார்ந்த பணிகளில் முடிந்தவரைக்கும் காசு பணம் எதிர்பார்க்காமல் உழைத்துக்கொண்டுருக்கிறார்.

சுந்தருக்கு சொன்னது தான்.

நம்பிக்கைகள் தூரத்தில் கீற்று போலவும் அவநம்பிக்கைகள் தீப்பந்தம் போலவும் தெரிகிறது.

தனிப்பட்ட மின்அஞ்சலுக்கும் உங்கள் அக்கறைக்கும் நன்றி.