Monday, January 25, 2010

பிரபாகரன் ராஜீவ் காந்தி சந்தித்த வேளையில்

கானக வாழ்க்கை.  ஒவ்வொரு நாளும் உயிர் எப்போது வேண்டுமானாலும் போகும் என்று நிஜத்தை மட்டும் தின்று வாழ்ந்து கொண்டுருந்தவர்.  சராசரி இளைஞனின் வாழ்வில் இல்லாத மொத்தமான ஒவ்வொரு கணப்பொழுதும் அழுத்தங்களுடன் வாழ்ந்த கடந்த 16 வருடங்கள் தந்த பாடங்கள். கடந்த நான்கு வருடங்களாக போராளி வாழ்க்கையோடு குடும்ப பாத்திரம் என்பதையும் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து கொண்டுருப்பவர். துரோகத்தையும், தூங்காத கண்களுமாய் தான் சுமந்த தனி ஈழம் என்ற ஒரே கனவை அடைகாத்து வாழ்ந்தவரை அடைப்புக்குள் நிறுத்தியிருந்தது இந்திய அதிகார வர்க்கம்.
ஆன்டன் பாலசிங்கத்தை இறுதிவரைக்கும் அண்ணா என்ற ஒற்றைச் சொல்லில் பிரபாகரன் அழைத்து வந்தாலும் அவருக்கும் பிரபாகரனுக்கும் மொத்தமாக வெளியில் தெரியாத இடைவெளி இருந்தது என்பதும் உண்மை.  பின்னாள் வரப்போகும் பல வீரஞ்செறிந்த விடுதலைப் போராளிகளின் சமரில், அதன் சாதக பாதக அம்சங்களை பிரபாகரன் சொல்வது வரைக்கும் ஆன்டன் பாலசிங்கம் தானாக முந்திக்கொண்டு அறிவுரையாக ஆலோசனையாக எதையும் பிரபாகரனிடம் கேட்பதும் சொல்வதும் இல்லை என்பதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.  காரணம் அது தான் பிரபாகரன்.  அதனால் தான் நன்றாக புரிந்த ஆன்டன் பாலசிங்கத்தின் ஆளுமை இறுதிவரைக்கும் எந்த கீறலும் இல்லாமல் நகர்ந்தது.

இப்போது பாலசிங்கத்தின் வேலை மொழிபெயர்ப்பாளர்.  மொத்தமும் தெரிந்தாலும், துரோகம் என்று புரிந்தாலும் தீட்சித் மற்றும் பிரபாகரன் இடையில் அவர் ஒரு மொழிபெயர்ப்பாளர் மட்டும்.  காரணம் வீரம் மட்டும் அதிகம் உள்ளவருக்கும், கோப்புக்களை வைத்துக்கொண்டு மட்டும் முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றவருக்கும் இடையில் இருக்கும் இவரின் நிலைமையை உற்றுக் கவனித்துப் பார்த்தால் பிரபாகரன் கொண்ட பதட்டத்தை விட இவரின் தர்மசங்கடம் தான் அன்று அதிகமாக இருந்து இருக்கும்?

திணிக்க வேண்டும் என்பவருக்கும் நீ திணித்து விடுவாயா? என்பவருக்கும் இடையே நடந்த உரையாடல் இது. கற்பனை அல்ல.  பாலசிங்கம் முதல் எதிர்ப்புகளை மட்டும் கொண்ட கூட்டங்கள் பதிந்துள்ளவைகளை முழுமையாக புரிந்தால் தான் பிரபாகரன் கொண்ட தொடக்க மன அழுத்தம் எவ்வாறு உருமாறியது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

இலங்கையில் வந்த அமைதிப்படையில் அட்டகாசங்கள் தான் ராஜீவ் காந்தி மரணத்திற்கு காரணம் என்ற ஒரு காரணமும், மீண்டும் ராஜீவ் காந்தி பிரதமராக வந்தால் தான் நிணைத்து வைத்துருக்கும் தனி ஈழம் என்ற கனவு சிதைந்து போய் விடும் என்று எத்தனை சாத்தியமான காரணங்களை அடக்கிப் பார்த்தாலும் இந்திய அதிகாரவர்க்கத்தினர் கொடுத்த மறக்க முடியாத பாடங்களும், அவமானங்களும், அவர்களின் ஆளுமையும் பிரபாகரன் போன்ற சமூக வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து கொண்டுருந்தவருக்கு எத்துணை ஆவேசத்தை உள்ளே உருவாக்கி உருக்குலைத்து தூங்காத இரவுகளை அளித்துருக்கும்?

இதன் தொடர்ச்சி கிழக்கு மகாண சபை தேர்தலில் நடந்த EPRLF பொம்மை அரசாங்கமும் பின்னால் உள்ள துரோகமும்.  தொடக்கத்தில் இந்தியாவில் இருந்து வந்த அமைதிப்படையை வரவேற்ற பொதுமக்களே பிறகு ஆளுக்கு ஆள் கிடைத்ததை எடுத்து அடிக்க கிளம்பியதும், படு பயங்கர பாதக செயல்களை செய்த அமைதிப்படை வீரர்கள்.  எம் நாடு, எம் மக்கள், எம் தமிழீழம் என்று வாழ்ந்து கொண்டுருந்தவருக்கு ஒவ்வொன்று ஓயாத அலைகள் போல் உழன்று கொண்டே இருக்க எந்தவிதமான மனோரீதியான தாக்கத்தை உருவாக்கியிருக்க முடியும்?

பேசியபடி மறைமுக பணமும் வரவில்லை.  இதற்கிடையே தான் ஆண்டு கொண்டுருந்த ஆளுமையையும் நிறுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை.  மொத்த சாதக பாதக அம்சங்களை குறிப்பிட்டு அனுப்பும் கடிதங்களுக்கும் பதில் இல்லை.  கடிதங்கள் எழுத எழுத தாங்கள் இந்தியாவின் தயை எதிர்பார்த்து காத்து இருப்பது போல அதிகாரிகள் உருவாக்கிய மாயையில் இருந்த ராஜீவ்காந்தியின் நம்பிக்கைத் துரோகம் மறுபக்கம்.

பின்னால் வரப்போகும் பிரேமதாசா கூட " இனி உங்கள் படை இங்கு இருக்கக்கூடாது " என்ற போது " அப்படித்தான் இருக்கும் உன்னால் முடிந்ததைப் பார் " என்று கொக்கரிக்கும் அளவிற்கு இதை ஒரு கௌரவப்பிரச்சனையாக எடுத்துக்கொண்டதும், " விட்டதடி ஆசை விளாம்பழ ஓட்டோடு " என்று ஓட்டையாண்டி ஆன போதும் கூட ஈகோ தடுக்க அதுவே பல பிரச்சனைகளை உருவாக்க இறுதியில் " நீங்கள் இருந்தால் உங்கள் கூடாரத்திற்குள் இருந்து கொள்ளுங்கள் " என்று பிரோமதாசா எச்சரிக்கும் அளவிற்கு மாறிப்போனது தான் சோகத்தின் உச்சம்.

வல்லரசின் மானம் போனது மட்டும் அல்லாது எதற்கு போர்?  எவரை நோக்கி போர் என்று தெரியாமல் மடிந்த அப்பாவி இராணுவ வீரர்கள்?  கொடுமையின் உச்சம்? இதற்கு மேலும் வேறொன்றும் நடந்தது.  இராணுவ கட்டமைப்பில் இருக்கும் எந்த வீரருக்கும், அதிகாரிகளுக்கும் அவருக்கு மேலே இருக்கும் அதிகாரி கொடுக்கும் கட்டளை தான் வேதவாக்கு.  நேரிடையாக மேஜர் வந்து சொன்னாலும் கூட அடிபணிவார்களா என்று சந்தேகமே.  ஆனால் இறுதியில் தீட்சித் தலையிட்டு கட்டளை பிறப்பித்த போது மறுத்த இந்திய ராணுவ வீரர்களும், சினத்துடன் சீற்றத்துடன் சொன்ன வார்த்தைகளையும் பின்னால் பார்க்கலாம்.

பிரபாகரன் தான் விரும்பாவிட்டாலும், ராஜீவ் காந்தி உருவாக்கிய ஒப்பந்தத்தை எதிர்க்காமல் ஒத்துழைத்தும் அமைதிப்படையின் மூலம் நிகழ்ந்த கோரமான கலவரங்கள், பின்னாளில் ராஜீவ் காந்திக்கு பிரபாகரனால் எழுதப்பட்ட பல கடிதங்கள் டெல்லியில் குப்பைக்கூடைக்கு போன போது வளர்ந்த வெஞ்சினம் எந்த எல்லைக்கு அவரைக் கொண்டு போயிருக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்? இப்போது இவர்களின் அறைக்குச் செல்வோம்.

" இந்த மொத்த ஒப்பந்தத்தை மொழிபெயர்த்து பிரபாகரனிடம் தெரிவியுங்கள்.  இரண்டு மணி நேரம் கழித்து வரும் போது நல்லதொரு முடிவை தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன்"  இப்படித்தான் தீட்சித் தொடங்கி விட்டு அறையை விட்டு வெளியேறினார். இடம் டெல்லியில் உள்ள மேல் தட்டு மக்கள் செல்லும் அசோகா நட்சத்திர உணவு விடுதி.

திரும்பி வந்தவரிடம் தீர்மானமாக சொன்னது.  "  பாதகமான அம்சங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.  தமிழர்களின் நலன் என்பதைவிட இலங்கை இந்தியா நலன் மட்டுமே மொத்தமாக மேலோங்கியிருக்கிறது.  அமைதி தீர்வின் இறுதி நிலைமைக்கு எட்டுவதற்கு முன்பே 72 மணிநேரத்திற்குள் போராளிக்குழுக்கள் தாங்கள் போராடிச் சேர்த்த மொத்த ஆயுதங்களையும் இந்தியாவிடம் ஒப்படைப்பது என்பது கனவில் கூட நிணைத்துப் பார்க்க முடியாது"

இயல்பிலேயே முன்கோபியான தீட்சித்க்கு அவருடைய அகங்கார ரௌத்திரம் பொங்கியதில் ஆச்சரியம் இல்லை.  அவரைப் பொறுத்தவரையில் ஒப்பந்த நகல் அடிக்கப்பட்ட போது இலங்கையில் பரிபூரண அமைதி வந்துவிட்டாத நினைத்துக்கொண்டவர்.

" இனி உங்களுக்கு ஆயுதங்கள் தேவைப்படாது.  மொத்த அமைதியையும் இங்கிருந்து வரும் அமைதிப்படை வீரர்கள் பார்த்துக்கொள்வார்கள். பிறகென்ன கவலை ?"

வாக்குவாதங்கள் தொடர வார்த்தைகள் எல்லை மீறியது.  தீட்சித் பணிந்தார், நெகிழ்ந்தார், புன்னகையுடன் வார்த்தைகளை மாற்றிப் போட்டு இறைஞ்சலாக பேசிப்பார்த்த போது பணியாத பிரபாகரனிடம் சொன்ன வார்த்தைகள்.

" நீங்கள் ஏற்றுக்கொள்ளாமல் போனாலும் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றியே தீருவோம்.  இதை எதிர்க்கும் பட்சத்தில் பாதகமான விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்..  இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் வரைக்கும் இந்த தடுப்புக்காவல் நீட்டிப்பு இருக்கும்"  என்று இறுதி மிரட்டலில் இறங்கினார்.

சீற்றத்துடன் மட்டுமே வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருந்த பிரபாகரன் " நீங்கள் வருடக்கணக்கில் இங்கேயே வைத்துருந்தாலும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்போவதும் இல்லை.  ஆயுதங்களை திருப்பிக் கொடுக்கும் எண்ணமும் இல்லை"

" நீங்கள் ஆயுதங்களை திருப்பிக்கொடுக்காவிட்டால் என் சுருட்டின் சாம்பல் போல் இந்தியா தட்டி துடைத்து விடும்"  என்று தட்டிக்காட்டிய போது சீற்றத்துடன் பிரபாகரன் "  உங்களால் என்ன செய்ய முடியுமோ? அதை நீங்கள் செய்து கொள்ளலாம்.  என் முடிவு மாறாது"  என்று வேறுபக்கம் திரும்பிக்கொண்டார் பிரபாகரன்.

இந்த உரையாடலின் இறுதியில் தீட்சித் ஆத்திரமாக அந்த அறையை விட்டு வெளியேறிய போது இறுதியாக பிரபாகரனை நோக்கி ரௌத்திரமாக கூறினார்  "  ஏற்கனவே நீங்கள் நான்கு முறை இந்தியாவை ஏமாற்றி இருக்கிறீர்கள்"  என்ற கேள்விக்கு " அப்படியென்றால் நான் நான்கு முறையும் எம் மக்களை காப்பாற்றியிருக்கின்றேன் என்று அர்த்தம்"

டெல்லி அதிகாரவர்க்கத்தினருக்கு மொத்தமாக புரிந்து விட்டது.

இது போக எம்.கே.நாராயணம், தூதர் பூரி, வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் என்று ஒன்றன் பின் ஒன்றாக வந்து மந்திரித்துப் பார்த்தார்கள்.  பூஜ்யம் தான் பரிசாகக் கிடைத்தது.

எந்த அழுத்தமும் இனி பயன்படாது.  வேறு வழியில்லை தகப்பன்சாமியை வரவழைக்க வேண்டியது தான்.  வேறு யார்?

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் வரவழைக்கப்பட்டு புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.  உணர்ந்தவர், உள்வாங்கியவர்.  பிரபாகரன் பேச அமைதியாக கேட்டுக்கொண்டவருக்கு முழுமையாக மொத்த வலைபின்னலையும் புரிந்து கொண்டார்.  எம்.ஜீ.ஆருடன் பேசிக்கொண்டுருந்த போது இடையில் வந்த தீட்சித் " மற்றவர்கள் அத்தனை பேர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.  " இவர்கள் விரும்பும் தனி குடியரசு கனவு எந்த காலத்திலும் நிறைவேறப்போவது இல்லை.  நீங்களாவது நல்ல முறையில் புத்தி சொல்லுங்கள்"  என்று பொருமினார். உயர்ந்த குரலைக்கண்டு பிரபாகரன் உடன் இருந்த யோகிக்கு வந்த ஆத்திர வார்த்தைகளால் வாக்குவாதம் உச்சத்தை எட்டியது.

கட்டளையிட்டு பழக்கப்பட்டவருக்கு இவர்களின் அடிபணிய மாட்டேன் என்ற வார்த்தைகள் அவரின் தனிப்பட்ட ஈகோவை சீண்டிப்பார்ப்பதாக இருக்க பேச்சின் சாரம் இலங்கைப் பிரச்சனையைவிட தனி மனித காழ்புணர்வை நோக்கி நகர எம்.ஜீ.ஆருக்கு தர்மசங்கடம்.  மென்மையாக பேசி அவரை வெளியே அனுப்பிவிட்டு உரையாடலை தொடர்ந்தார்,  அப்போது உடன் இருந்தவர் அமைச்சர் பண்ட்ருட்டி ராமச்சந்திரன்.

மொத்தமாக இந்தியா விரும்பும் கேந்திர நலன் தவிர வேறொன்றுமில்லை என்பதாக புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர் மௌனமாக வெளியே நகர்ந்த போது முதலில் தீட்சித், எம்.ஜி.ஆர் பிரபாகரனை வழிக்கு கொண்டு வந்து விட்டார் என்று தான் நம்பினார்.  மொத்தமும் தெரிந்த போது இறுதியில் பந்தை,  அடித்து ஆடுபவர் கைக்கு மாற்றப்பட்டது.
1987 ஜுலை 28 ஆம் நாள்.  அதிகாலை 2 மணி.  ராஜீவ் காந்தி பிரபாகரன் நேருக்கு நேர் சந்தித்த தினம்.  சந்திப்பு ராஜீவ் காந்தியின் அதிகாரப்பூர்வமான இல்லத்தில் நடந்தது.  ராஜீவ் காந்தி அந்த நேரத்திலும் வெள்ளை உடையில் மலர்ச்சியாக இவர்களை வரவேற்றார்.

பொறுமையாக மொத்தத்தையும் கேட்ட ராஜீவ் காந்தி இறுதியில் சொன்ன வாசகம்.

" உங்கள் கூற்று உண்மை தான்.  ஆனால் ஒரே சமயத்தில் அத்தனையும் உறுதிப்படுத்த முடியாது.  உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.  இதுவொரு தொடக்கம் தான்.  இதுவே முடிவல்ல.  இந்த அளவிற்கு அவர்கள் வந்துருப்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.  நீங்கள் முழுமையாக ஆயுதங்களை ஒப்படைக்க தேவையில்லை.  உங்களுக்குத் தான் ஏற்கனவே இந்தியா வழங்கிய ஆயுதங்கள் மேல் நம்பிக்கையில்லை தானே?  அதில் சிலவற்றை ஒரு கண்துடைப்புக்காக ஒப்படையுங்கள்.  நீங்கள் வரி வசூல் செய்வதை நிறுத்தி விடுங்கள்.  அதற்காக தனிப்பட்ட முறையில் இந்தியா மாதம் 50 லட்சம் தரும்.  இது போக உங்களுக்கும் எனக்கும் ஒரு தனிப்பட்ட வெளியில் தெரியாத "ஒப்பந்தம்" ஒன்று இருக்கட்டும். தேர்தல் நடக்கும் போது உங்கள் சார்பாளர்கள் அதிகமாக இருக்கும் அளவிற்கு நான் பார்த்துக்கொள்கின்றேன். எப்போதும் என்னுடைய தொடர்பில் இருங்கள்.  நீங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பராவாயில்லை.  எதிர்க்காமல் இருங்கள்.  அதுவே எங்களுக்கு போதுமானது.   பிரதேச சுயாட்சியை உருவாக்க சற்று காலம் பிடிக்கும்.  அது வரைக்கும் நீங்கள் பொறுமையாக இருந்து தான் ஆக வேண்டும். "

அந்த அதிகாலைப் பொழுதிலும் சோர்வற்று இருந்த ராஜீவ் காந்தி பரபரப்பாக இருந்தார்.  காரணம் அன்று பிற்பகல் கொழும்பு செல்ல வேண்டும்.  கையெழுத்துயிட வேண்டும் என்ற அவசரத்தில் இருந்தார்.  இடையே தமிழில் பேசிய உரையாடல்களை பண்ட்ருட்டி ராமச்சந்திரன் மொழிபெயர்த்து ராஜீவ் காந்தியிடம் சொல்லி அவர் பங்குக்கு " மேதமை தாங்கிய பாரதப் பிரதமர் உருவாக்கிய இந்த "ஜென்டில்மேன் அக்ரிமெண்டை" நீங்கள் ஏற்றுக்கொண்டால் உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்" என்றார்.

வயித்துகடுப்புடன் இருப்பவரிடம் போய் வகைவகையான பட்சண சுவையை சொல்லிக்காட்டுவது போல் அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பினார்கள்.  ராஜீவ் காந்தியைப் பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ள வைத்தாகி விட்டது என்ற திருப்தி.  எம்.ஜீ.ஆருக்கு இந்த ஆட்டத்தில் என்னைச் சேர்க்காதீர்கள் என்ற தப்பித்தோம் பிழைத்தோம்.  பண்ட்ருட்டிக்கு இதில் நாமும் கலந்து கொண்டோம் என்ற பலாப்பழ சுவை.  ஆனால் பிரபாகரன் இறுதியில் கேட்டது தான் மொத்தத்திலும் அனைவரையும் குறிப்பாக பண்ட்ருட்டியை அதிர்ச்சியடைய வைத்தது.

"  நாம் பேசிய மொத்த விசயங்களையும் ஒப்பந்தமாக போட்டுக்கொண்டு கையெழுத்து இடலாமா?"   பண்ட்ருட்டி வியர்த்து போயிருந்தார். மொத்த குழுவினரையும் நகர்த்திக்கொண்டு வெளியே செல்ல அப்போது பிரபாகரன் ஆன்டன் பாலசிங்கத்திடம் சொன்ன வார்த்தைகள் "  அண்ணா இது கரை சேரும் என்ற நம்பிக்கையில்லை"

நிச்சயார்த்தம் குறிக்கப்பட்ட " ராஜீவ் காந்தி ஜெயவர்த்னே ஒப்பந்தம் " என்ற திருமணம் மணமகள் விருப்பம் இல்லாமல் தாலி கட்டும் வைபவத்துக்கு அன்று மதியம் ராஜீவ் காந்தி கொழும்பு சென்றடைந்து ஆடம்பரமாக ஊடகம் முன் காட்சியளித்து சமாதானப் புறாவை பறக்க விடுவது போல ஆட்டத்தை தொடங்கி வைத்தார். அழைத்து வந்த இந்திய இராணுவ வானூர்தி பிரபாகரன் குழுவினரை (1987 ஆகஸ்ட் 2) யாழ்பாணத்தில் கொண்டு வந்து சேர்த்தது.

23 comments:

M.Thevesh said...

பாகம்:ஒன்று.
பிரச்சினை சிங்களத்துக்கும்தமிழ்ஈழத்துக்குமாக இருக்
கையில் நடுவரின் பணி இருவரையும் ஒரு ஒப்பந்தம் மூலம் கட்டுப்பட்வைப்பதுதானே.
அப்படியிருக்கையில் ஒருதரப்புடன் நடுவர்
ஒப்பந்தம் செய்வது எந்த அரசியல் அடிப்படையில்
நடைபெற்றது.இது இந்தியாவிட்ட இமாலயத்
தவறு அல்லவா.

ஜோதிஜி said...

தவறு தான். அத்தனை பேருக்கும் தெரிந்தது தான். பிரபாகரன் தெரிந்து கொள்ள முடியாத, விரும்பாத, பிடிக்காத " அரசியல்" என்பதும் இங்கு தான் தொடங்குகிறது.

M.Thevesh said...

பாகம்:இரண்டு.
இந்தியாவைச்சுற்றிப் பலநாடுகள் இருக்கின்றன.எந்த
ஒரு நாடாவது இந்தியாவின் நட்பு நாடு என்று கூற
முடியுமா.இதில் இருந்து தெரிவது இந்தியாவிடம் ஏதோ ஒரு பிழை இருந்துகொண்டு வருகிறது.காந்தி
கனவுகண்ட இந்தியா இது இல்லை.இப்ப இருக்கிற
தேசம் நேருவால் கட்டமைக்கப்பட்டஒன்று.
அடிப்படையிலேயே தவறு ஏற்பட்டுவிட்டது.

Anonymous said...

very good

ஜோதிஜி said...

தவேஷ்

தவறு ஏற்படுத்தப்பட்டு விட்டது.

அமர்ஹிதூர் said...

"ஒருவன் எதை நினைகிறானோ அதை அடைதேதீருவான்" - சுவாமி விவேகானந்தா
இலங்கை தமிழனனின் நினைப்பு மற்றும் சுவாசம் "தமிழீழ தாயகம்".
எத்தனை ஆண்டுகளானாலும்,இந்த உலகே எதிர்த்து நின்றாலும்,எத்தனை கடவுள்கள் தடுத்தாலும் இலங்கை தமிழன் தமிழீழ தாயகத்தை அடைதேதீருவான்.

Unknown said...

துவேஷ் தவறு ஏற்படுத்தப்பட்டு விட்டது. உண்மையே.
நேருவை புரிந்துகொண்டவர்கள் யாரும் இல்லை. அவரின் அமைச்சர்களேகூட அவரை புரிந்து கொள்ளவில்லை. இந்திய கலச்சரத்தின் மீது ஆழ்ந்த மரியாதை கொண்டவர் நேரு.மூட நம்பிக்கைகளை கண்டித்தார். அவரின் சிஷ்யர்கள், இந்திய கலாச்சாரத்தை எதிர்ப்பது நேருயிசம் என்றாக புரிந்து கொண்டனர்.
2 ம் உலக போரில் அமெரிக்கவுக்கு ஜப்பான் எதிரி, ரஷ்யா நண்பன், ஆனால் சில ஆண்டுகளில் இது தலைகீழானது. காரணம் பிரந்திய நலம். இதுபோல் இந்திய வெளியுறவு கொள்கையும் தேவைக்கு ஏற்ப மற்றப்பட வேண்டும். அனால் அவ்வாறு நடப்பதில்லை. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் சுயநலத்துகாக திர்மானிக்கப்ட்டல் இப்படி தான் இருக்கும்.

ராஜிவை கொன்றது புலிகள் இயக்கமானலும், கொல்ல துண்டியது கேஜிபி/சிஐஎ என்று ஒரு தகவல் உள்ளாதே ?

ஜோதிஜி said...

ஒருவர் எதை நிணைக்கின்றாரோ அதை அடைந்தே தீரவேண்டும்

அடையாத பட்சத்தில் காலம் காத்திரு அதற்கான நேரமும் தகுதியும் இன்னும் வரவில்லை என்று சொல்வதாக அர்த்தம்

ஜோதிஜி said...

இந்திய வெளியுறவு கொள்கையும் தேவைக்கு ஏற்ப மற்றப்பட வேண்டும். அனால் அவ்வாறு நடப்பதில்லை.

தமிழ் உதயம் said...

இந்தியாவுக்கு மூன்று பக்கம் கடல், நான்கு பக்கம் எதிரிகள்... இது தான் இந்திய அரசின் செயற்கரிய பெருமை, 71ம் ஆண்டு, இந்தியாவால் உருவான வங்காளதேசத்தை இலங்கை பல வருஷங்களாக அங்கீகரிக்கவே இல்லை, இந்தியாவின் செயலை கண்ணை திறந்து கொண்டு கூட இலங்கை ஆதரிக்க தயாராக இல்லை. ஆனால் இந்தியா , இலங்கை விஷயத்தில் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறது. நீங்கள் சொன்னது போல் இந்திய வெளியுறவு கொள்கையும் தேவைக்கு ஏற்ப மற்றப்பட வேண்டும்.இன்றைய தினம் நேபாளம் கூட இந்தியாவுக்கு எச்சரிகை விடுத்து இருக்கிறது. நமது ஆட்சியாளர்கள் இது வரை எந்த பாடத்தையும் கற்று கொண்டதாகவே தெரியவில்லை

ஜோதிஜி said...

இந்தியா , இலங்கை விஷயத்தில் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறது.

ஜோதிஜி said...

கண் போல் இருந்தவர் இன்று கவர்னர்.

மண்ணாக போய் விட வேண்டும் என்றவர் இன்று புதிய பதவியில்?

பின்னோக்கி said...

சில நேரங்களில் இந்திய அரசியல்வாதிகள் எடுக்காத கடினமான முடிவுகள், நண்பனே சுற்றி இல்லை என்ற நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கிறது. சோவியத்திலிருந்து அமெரிக்கா மட்டுமே சரியாக செய்யப்பட்டிருக்கிறது.

பின்னோக்கி said...

மிகவும் கடினமான, விவரிப்பது சுலபமில்லாத களம். ஆனால், நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தியது, எழுத்தாளுமையின் வெற்றி. வாழ்த்துக்கள்.

M.Thevesh said...

ஆசியஜோதி சர்வதேசத்தலைவர் என்ற பட்டங்களுக்
காக உள் நாட்டில் தீர்க்கவேண்டியவற்றைத்தீர்க்காமல்
அடுத்ததலைமுறைக்குக்கொண்டுசென்ற நிர்வாகத்தி
றன் அற்ற தலைவர் நேரு என்று ஒரு குற்றச்சாட்டு
நிலவுகிறதே அதை மறுக்கமுடியுமா.தவறான நிர்வா
கத்தால் பல்லாயிரம் சதுரமைல் நிலப்பரப்பை சீனாவி
டம் பறி கொடுத்ததை மறக்கத்தான் முடியுமா.

ஜோதிஜி said...

நன்றி பின்னோக்கி

கடினமாக இந்தியாவில் எந்த முடிவும் எவரும் எடுக்க வேண்டும் என்ற அவஸ்யம் இல்லை. இருப்பதை வைத்து நேர்மையான முறையில் சுயநலம் இல்லாமல் எடுத்தாலே போதும் அல்லவா?

ஜோதிஜி said...

பின்னோக்கி உங்கள் பெருந்தன்மையான வார்த்தைகளுக்கு நன்றி.

ஜோதிஜி said...

நேரு என்பவர் விமர்சனத்துடன் கூடிய இந்தியாவிற்கு கிடைத்த மாமனிதர். தற்காலத்தை ஒப்பிட்டு நீங்கள் செய்ய வேண்டியது குணம் நாடி குற்றமும் நாடி?

அமர்ஹிதூர் said...

எந்த மக்கள் சுதந்திரத்திற்காக முதலில் அஹிம்சையை பின்பற்றினர் ? அனைவருக்குமே முதலில் அஹிம்சை பிடிக்காது. அடி வாங்கிய பின் தான் அஹிம்சையின் பலம் தெரியும். இதற்கு இலங்கை தமிழனும் விதி விலக்கல்ல. இலங்கை தமிழனிடமும் காந்தியை போல் ஆயிரம் மடங்கு வலிமை கொண்ட அஹிம்சாவாதி, அரசியல்வாதி பிறப்பான். இவளவு அடி வாங்கியது அதற்குதானே. யூதனுக்கு ஒரு அமெரிக்கன் இருந்தான், இலங்கை தமிழனுக்கு நாதி இல்லை. ஆகவே அவனுள்ளே ஒரு மாபெரும் அஹிம்சா சக்தி உருவாகதனே செய்யும்.

ஜோதிஜி said...

அடி வாங்கிய பின் தான் அஹிம்சையின் பலம் தெரியும். இதற்கு இலங்கை தமிழனும் விதி விலக்கல்ல.

யூதனுக்கு ஒரு அமெரிக்கன் இருந்தான், இலங்கை தமிழனுக்கு>>>>>>>>>>>???????????????>>>>>>>>

M.Thevesh said...

" இந்திய கலச்சரத்தின் மீது ஆழ்ந்த மரியாதை கொண்டவர் நேரு"இது ஒரு தவறான கருத்து.மோதி
லால் நேரு தொடக்கம் அவர்கள் குடும்பம் மேற்கத்தி
ய கலாச்சரத்தில் ஊறித்திளைத்தவர்கள்.நேரு இந்து
மதத்தைக்கடுமையாக எதிர்த்தவர்.மவுண்பேட்டனின்
மனைவியுடன் தகாத உறவு கொண்டவர்.பழைய புதி
னப்பத்திரிகள் பார்த்தால் இன்னும் பல அறியமுடியும்.

ஜோதிஜி said...

உலகம் தோன்றியது முதல் உங்களால் உத்தமன் என்று சொல்லக்கூடிய ஒரு தலைவரைக் காட்ட முடியுமா?

காமராஜர் மேல் கூட குற்றம் சொல்பவர் உண்டு. இடுகையில் பதில் அளிக்காமல் பிரபாகரன் குறித்து பல மின் அஞ்சல் அனுப்பிக்கொண்டுருப்பவர்களும் உண்டு.

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி கண்டு உணர மாட்டீர்களா?

மோதிலால் நேரு அன்றைய காலகட்டத்தில் வாதாட வாங்கிய தொகை என்னவென்று தெரியுமா? அவர்கள் வாழ்ந்த மேல்தட்ட வாழ்க்கை என்பது இன்றைய திடீர் அரசியல் பணக்காரர்கள் கூட இன்னும் சம்பாரிக்க முடியாதது.

நேரு இறக்கும் போது என்ன கொண்டு போய்ச் சேர்த்தார்?

மொத்தமாக எல்லாவற்றையும் படியுங்கள். மொத்தப்பார்வையில் சமகாலத்தை ஒப்பிட்டு மேம்பட்டதை எடுத்துக்கொள்ளுங்கள் நண்பரே?

J.P Josephine Baba said...

சிறந்த எழுத்து நடை!