Thursday, November 19, 2009

கூலியில் இருந்து வேலி வரைக்கும்

"என்னை கண்டித் தமிழன் என்று அழையுங்கள்.  அதைத் தான் பெருமையாக கருதுகிறேன்”

ஒரு இலங்கையில் வாழ்ந்த தமிழ் தலைவர் ஜெயவர்த்தனே கூட அனல் பறக்க நடந்த விவாதத்தில் வரும் ஒரு உரையாடல் இது.

வியப்பாக இருக்கிறதா?

தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவில் ஜாதியால், மதத்தால், இனத்தால் பிளவுபட்டு தன் நாட்டை அந்நியர்களிடம் ஓப்படைத்ததைப் போல இலங்கையில் தமிழர்களிடம் இருந்த தங்களுக்கு தானே பெருமையாய் சூட்டிக்கொண்ட அடையாளம் பல உண்டு.

ஏன் பிரபாகரன் ஆயுதம் எடுத்தார்?  கடைசி வரைக்கும் ஆயுதம் தான் சரியான வழி என்று எதன் மூலம் உணர்ந்தார்?  பிரபாகரன் வந்த பிறகு உருவான ரத்தச் சகதிகள் தவறு என்றால் அதற்கு முன்னால் வாழ்ந்தவர்கள் சக்தியுடன் என்ன தான் செய்தார்கள்?

பிரபாகரன் ஒரு ஹிம்சைவாதி என்றால் முன்னால் வாழ்ந்த அஹிம்சைவாதிகள் என்ன சாதித்தார்கள்? 

எல்லாவற்றையும் ஒரு மதிப்பெண் கேள்வி போல் மொத்த இலங்கை மக்களின் வாழ்வுரிமையையும் தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் பார்ப்பது இரண்டே பார்வையில்.

சரி.  தவறு.

சரி என்றால் என்ன காரணம்?  தவறு என்றால் அதன் பின்னால் உள்ள விசயங்கள் என்ன?

இந்தியாவை இன்று வரைக்கும் டெல்லியில் இருந்து ஆட்சி புரிந்து கொண்டுருப்பர்கள் பார்வையில் "தமிழன் என்பவன் தேர்தல் சமயத்தில் மட்டும் நினைவில் வருபவன்" .  டெல்லிக்காரர்கள் என்பவர்களே நம்மை அவ்வப்போது கிள்ளிக்கொண்டு கிலுகிலுப்பை காட்டிக்கொண்டுருப்பவர்கள்.

அவர்கள் மேல் எந்த தவறும் இல்லை.  தகுதியானவர்கள் இன்றைய தினத்தில் மிகுதியாக இல்லாத போது தமிழன் என்பவன் வடிவேல் சொல்லும்                        " கைப்புள்ள " தானே.

இலங்கை வாழ்வுரிமை பிரச்சனைகளை வைத்துக்கொண்டு இதுவரையிலும் தமிழ்நாட்டில் நடந்த அத்தனை நிகழ்வுகளுமே என்ன தான் உணர்த்தியது?  இங்குள்ள தமிழர்கள் எப்போதுமே உணர்ச்சிப் பொம்மைகள் தான்.

இப்போது மட்டுமல்ல எப்போதுமே உணர்ச்சித்தமிழன் எவராவது கேள்விகளை தனக்குள் கேட்டுக் கொள்ள துணிவுண்டா?  அவர்களிடம் கேட்பதுண்டா?  உணர்ச்சிகளை வைத்து ஒப்பேற்றி ஓட்டுக்காக உங்கள் வீட்டுக்கு முன்னால் வந்து நிற்கும் போது உங்கள் எச்சில் உள்ளே தான் இருக்கும்.  காரணம் கொடுக்கும் கவர் கண்களை மட்டுமல்ல சுரப்பிகளையும் திறக்க விடாது.

உள்ளடங்கிய கிராமங்கள் மலட்டு வயல் வெளிகளுடன் மன்றாடிக் கொண்டுருப்பார்களா?  கண்ணி வெடி பூமியைக் கண்டு கலங்கத் தோன்றுமா?

இந்தியாவில் வாழும் திபெத் அகதிகளின் ஓய்வு நேரம் உள்ளத்தை மகிழ்ச்சி படுத்த உன்னதமான ஏற்பாடுகள்.  அவர்களுக்கு நம்மை விட உண்டு உறங்க  நலமான வசதிகள்.  ஆனால் இலங்கையில் இருந்து இங்கு வந்து இருப்பவர்களை 30 வருடங்களுக்குப் பிறகு தான் இன்று கண் திறந்து இருக்கிறது.

ஆமாம்.  "அவர்களை அகதி என்று சொல்லாதீர்கள்.  தமிழர்கள் என்றே அழையுங்கள்?"

சிரிப்பு சிரிப்பா வருது.  இப்போது தமிழன் என்று அழைக்கப்பட்டவர்கள் இனி அடுத்த 30 ஆண்டுகளில் மனிதன் என்று மதிக்கப்படுவார்கள். அதற்குப் பிறகு தான் திபெத் அகதிகள் பெற்ற அத்தனை உரிமைகளையும் இவர்கள் பெறக்கூடும்?  பெறும்போது உயிருடன் இருப்பார்களா?

மொத்த இலங்கை மக்களின் வாழ்வுரிமை பிரச்சனைகளை, மேலை நாட்டினர் பார்ப்பது அவர்களின் சுய ஆதாயத்திற்காக.  ஆனால் இந்தியாவில், தமிழகத்தில் பார்த்துக்கொண்டுருப்பது பதவி சுகத்திற்காக.  ஆதாய அரசியலுக்காக.

என்ன பெரிதான வித்யாசங்கள்.

பிரபாகரன் விவேகத்துடன் செயல்பட்டுருக்க வேண்டும் என்று சொல்லும் அறிவுரைகளை அப்படியே திருப்பி இலங்கை தமிழர்களுக்காக கூட்டத்தின் வாயிலாக முன் மொழிந்த தீர்மான உரைகளையும் படிக்க வாய்ப்பு இருப்பவர்கள் படித்துப் பாருங்கள்.

மனிதரில் இத்தனை நிறங்களா?

இந்திய" இறையாண்மை" யில் உள்ள சட்ட திட்டத்தின் படி பிரபாகரன் ராஜிவ் காந்தி படுகொலையில் முக்கிய குற்றவாளி பட்டியலில் படி பல பெயர்கள் தாண்டி ஒருவராக வருகிறார்.  ஆனால் இலங்கையில் வாழ்ந்த பிரபாகரனை பிடிக்காத தமிழ் மக்களுக்கு இன்று முக்கிய குற்றவாளியாக வருகிறார்.

பிரபாகரன் மட்டும் முக்கிய குற்றவாளி என்றால் முன்னால் வாழ்ந்த அத்தனை விலைபோன தலைவர்களும் தானே முதன்மை குற்றவாளிகள்? பிரபாகரன் பிறப்பதற்கு முன்னே இவர்கள் சரியாக இந்த தமிழர்களை வழி காட்டி இருந்தால், வழி நடத்தி இருந்தால் இன்று பிரபாகரன் ஏதோ ஒரு நிறுவனத்தில் ஓய்வு பெறும் வயதுக்கு வந்து தொலைத்து இருப்பார் அல்லவா?

கரை கடந்து வாழ்பவர்களின் அத்தனை பிரச்சனைகளும் இன்று வரைக்கும் நம்மை விட்டு கடந்து போய், கடந்து போய் கடைசியில் இன்று தமிழகத்தில் கசந்து போயும் விட்டது .  ஆதனால் தான் இன்றைய தினத்தில் " சிங்களர்களை கோபப்படுத்தாமல் வாழ பழகிக் கொள்ளுங்கள் "  என்று தொடக்க ஆத்திச்சூடியை  அவசரமாய் சூடி மகிழ்கிறோம்.

தெளிவான புரிதல் இல்லை.  உணர்ந்தவர்கள் சொல்வது மேலே வருவதும் இல்லை.  புரிந்து கொள்ளாமல் தேடிக்கொண்டு இருக்கும் பல கேள்விகளுக்கு இன்று வரையிலும் சரியான பதில்கள் இல்லை. பாதி மட்டும் வரும்.  மீதி?

ஓட்டு வாங்கி முடிந்தது மீதி அவர்களின் செயல்பாடுகள் மூலம் உணர்ந்து கொள்ள முடியும்.

கைபர் கணவாய் முதல் இன்று காவேரி முல்லை பெரியாறு வரைக்கும் நதிகள் தான் நமக்கு பல பாடங்களை மறைமுகமாக கற்றுக் கொடுத்துக்கொண்டு இருக்கிறது.

மனிதர்களை, அவர்களின் தகுதிகளை, அத்தனையும் நமக்கு உணர்த்துகிறது.

ஆனால் நாம் தான் புரிந்து கொள்வதில்லை.  "குறுக்கிடாதே" என்று அன்பாய் எச்சரிக்கும்.  தனிநபர்களின் அரிப்பை தீர்த்துக்கொள்ள செயல்படுத்தும் காரியங்கள் மொத்த மக்களின் வாழ்வாதாரத்தை குறுக்கலாய் செய்து விட்டு அதன் பாட்டுக்கு ஜீவனுள்ள பாட்டை பாடிக்கொண்டே அந்த ஜீவநதிகள் பயணித்துக்கொண்டு இருக்கிறது.

உள்ளே இறங்காமல் கரையில் நின்று ஊடகத்தின் வாயிலாக பார்த்துக்கொண்டு  இருக்கிறோம். ஆனால் அங்கோ அக்கரையில் ஐயோ அம்மான்னு இன்று கத்த வைத்துக்கொண்டுருக்கிறது.

இதுவரைக்கும் மொத்த இலங்கையும் ஒரே நாடு, அதில் உள்ள மொத்த தமிழர்களையும் சிறுபான்மையினராக உருவாக்கப்பட்ட முதல் நதியைப் பார்த்தோம்.  ஆனால் இன்று வரையிலும் தீர்க்கப்படாமல், இன்றும் தீர்ந்து போகாமல் இருக்கும் உள்ளே பயணிக்கும் பல கிளைநதிகளிலும் நாம் பயணித்தால் தான் அங்கு உள்ளே உள்ள பல வாழ்வியல் அவலங்களையும் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.
பூர்வகுடி இலங்கை தமிழர்கள் என்பது நூறு சதவிகிதம் உண்மை.  காரணம் விஜயன் மரக்கலத்தில் பயணித்து உள்ளே நுழைந்து தொடங்கிய சிங்களர்களின் வரலாற்றுக்கு முன்பே தமிழினம் தழைத்தோங்கி வாழ்ந்து உள்ளது.  அறிவியல் பூர்வமாக , வரலாற்று பூர்வமாக உள்ள உண்மைகள் அது.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்த பிறகும் கூட, ஈழத்தில் யாழ்பாண அரசு முற்றிலும் அழிந்ததற்கு பிறகும் கூட (1803) வன்னி குறுநில மன்னன் பண்டார வன்னியன் ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்றான்.  திரை கேட்டு வந்த ஆங்கிலேயர் அமில்தார் என்ற அதிகாரியின் தலையை சீவி எறிந்து தனித்தன்மையோடு அதே வீரத்தோடு அடுத்த 9 ஆண்டுகளும் ஆட்சி புரிந்தான். இறுதியில் (1811)  போரிட்டு வீர மரணமடைந்தான்.
தமிழர்கள் அந்த அளவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்கள்.  இந்த அளவிற்கு தமிழர்களை பார்த்து பயந்து கொண்டுருந்த ஆங்கிலேயர்கள் ஏன் இறுதியில் சிறுபான்மை என்ற கோட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார்கள்?

மொத்த தமிழர்களின் வாழ்வியல் உண்மைகளை ஆங்கிலேயர்கள் உணரத் தவறியது ஏன்?  அல்லது அவர்களை உணரும் விதமாக அப்போது வாழ்ந்த தமிழ் முன்னோர்கள் உருவாக்கத் தவறியது ஏன்?

தொடக்கத்தில் சொன்னது போல் தமிழன் என்பவன் ஒருவன் தான். எங்கு வாழ்ந்தாலும்?  மணம், திடம், குணம் சேர்ந்த கலவை. இது இந்திய, இலங்கைத் தமிழன் என்ற எந்த பாகுபாடும் இருப்பதாக தெரியவில்லை.

இங்கு கிளை நதியாக பிரியப்போகும், இந்தியாவில் இருந்து தனது வாழ்வுக்காக இலங்கைக்கு பயணித்த தமிழர்கள்?

இலங்கையில் உள்ள நிலத்தை தேயிலைக் காடாக மாற்றிய தோட்டத் தமிழர்கள்? மலைகள் முழுவதும் இன்று மயக்கும் பச்சையாக இருக்கிறதே?  யார் இந்த மலையகத் தமிழர்கள்?  உருவாக்கியவர்கள் உன்னதமாகத் தான் வாழ்ந்தார்களா?  உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த மற்ற தமிழர்கள் இவர்களுக்கு உதவினார்களா?

ஏன் தமிழ்நாட்டிலிருந்து பயணித்தார்கள்?

தமிழனுக்கு கண்ணீர் சுரப்பி ஒன்று உண்டு என்பது உண்மையானால் அவை வற்றிவிடும் அளவிற்கு இவர்களின் வாழ்வியல் அனுபவங்கள்.

பூர்வகுடி தமிழர்களுக்கு ஒரு பக்கம் மட்டும் அடி.  இவர்களுக்கோ இரண்டு பக்கமும் இடி.

அமெரிக்காவில் அடிமை ஒழிப்புக்கு என்று பெரிய போராட்டங்கள் நடந்த காரணங்கள் உருவாக்கிய தாக்கத்தில் பிரிட்டன் (1833) நாடாளுமன்றத்தில் அடிமை ஒழிப்பு சட்டமாக இயற்றப்பட்டது.  அடிமைகள் இல்லையே தவிர அதற்கு பிறகு உருவான கூலி என்ற சொல் உருவானதும் அழைக்கப்பட்டதும் அவர்களின் ராஜதந்திரம்.

கருப்பின மக்கள் அடைந்த அத்தனை துயரத்தைப் போல உலகமெங்கும் கூலிக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அத்தனை உடம்புகளும் பெற்றது.  ஆமாம் கூலிகள் என்பவர்கள் உயிர் உள்ள ஜடம்.  அப்படித் தான் நடத்தினார்கள்.

ஆங்கிலேயர்கள் படிப்பதற்காக எழுத்தப்பட்ட முதல் தமிழ் நூல் எது தெரியுமா?  கூலித் தமிழ்.  வியப்பாக இருக்கிறதா?  நம்முடைய ச(த)ரித்திரம் அப்படித் தான் சொல்கிறது.  1927 ஆம் ஆண்டு தமிழகத்தில் மத பிரச்சாரம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட கிறிஸ்துவ அமைப்புக்கு பெயர் தமிழ் கூலி மிசன்.

பல நாடுகளுக்கும் கூலி என்ற பெயரில் தமிழகத்தில் இருந்து தான் அதிகமாக சென்றார்கள்.  18, 19 ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்கள் உள்ளே இருந்த போது தொடர்ந்து 24 பஞ்சங்கள் தாக்கியது.  பல லட்ச மக்கள் உருக்குலைந்து இறந்தும் போனார்கள்.

பிரிட்டன் நிர்வாகத்தின் சுரண்டல்கள் முழுமையும் அடித்தள மக்களையே அதிகம் போய் தாக்கியது.    மன்னர்கள் ஆட்சி புரிந்து கொண்டுருந்த போது விளையும் நிலத்தில் 6ல் ஒரு பகுதி அல்லது 3ல் ஒரு பகுதி சமய சந்தர்ப்பங்கள் போல் வரி வசூலிக்கப்பட்டது.

ஆனால் ஆண்டு கொண்டுருந்த ஆங்கிலேயர்கள் மொத்த நில அளவை வைத்து அத்தனை பேர்களின் வாழ்வுரிமையையும் சூறை காற்றாக மாற்றி திசைக்கொன்றாக ஒவ்வொருவரையும் பயணிக்க வைத்து பெருமை பெற்றார்கள்.

காலம் அத்தனை இனப் போராட்டங்களையும், அவர்களின் வழிமுறைகளையும் உணர்த்தி குன்றின் மேல் உட்கார வைத்து இருக்கிறது.  நம் தமிழர்களின் வாழ்க்கை மட்டும் கூலியில் தொடங்கி இன்றும் வேலிக்குள் அடைத்து வைத்து உள்ளது.

உணர்வோடு பயணிக்கும் பாதை முழுக்க பரவசம் இருக்காது. உணர்ச்சிகள் கூட முழுமையும் வற்றி விடும்.  ஆனால் விசம் இல்லாத வீர்ய செடி உருவாக்க, வளரத் தேவையான வாய்ப்புகள் எதிர்காலத்தில் உருவாகலாம். உருவாக்கும்.

6 comments:

vasu balaji said...

வரலாற்று ஆவணம் மாதிரி தொகுக்கிறீர்கள் ஜோதிஜி. தொடருங்கள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

மிக நுட்பமான ஆய்வு ஜோதிஜி.. வரலாறை நீங்கள் தொகுக்கும் வண்ணம் சிறப்பு.

ஹேமா said...

எத்தனை வலிகளைச் சுமைகளைத் தாங்கி நடக்கிறது இந்தத் தமிழினம் !

thiyaa said...

அய்யய்யோ உதெல்லாம் பேசப்படாது
மனதுக்குள் பூட்டி மௌன வழியாக மட்டும் வைத்திருங்க வேண்டும்

நல்ல தொடர் எழுதுங்கள் வாழ்த்துகள்

தமிழ் உதயம் said...

முழுமையாக உங்கள் இடுகையாக படிக்க முடிவதில்லை. வாழ்ந்த கதையும், வீழ்ந்த கதையும் மனதை கவ்வி பிடிக்க முழுமையாக படிக்க முடிவதில்லை.

பின்னோக்கி said...

தொடருங்கள் தொடருகிறோம்