Saturday, October 31, 2009

வெயிலான்

எந்த இடத்தில் வாழ்ந்தாலும் சரி தமிழர்கள் என்பவர்கள் எடுப்பார் கைபிள்ளை தான்.  இரண்டு தமிழர்களுக்குள் ஒற்றுமை என்பது வரவே வராது.  ஆனால் மூன்றாம் நபர் அவனை கையாளும் போது அப்படியே பெட்டி பாம்பாய் அடங்கி அவர் சொன்ன சொல் பேச்சு கேட்பதில் தமிழனை விட வேறு எவரையாவது எந்த இன மக்களையாவது நம்மால் சிந்தித்து பார்க்க முடியுமா?

தமிழனை ஆண்ட, ஆள வந்த, ஆள்கின்ற தலைவர்களும், தமிழனை ஆளுமைபடுத்தும் கொள்கையாளர்களும் மாற்றம் பெற்றதாக இருந்து கொண்டே இருக்கும்.  ஆனால் "தமிழன் உணர்வுகள்" என்பது சங்ககாலம் முதல் இன்று வரையிலும் ஒரே மாதிரி இருப்பது உலகத்தில் ஒரு விதமான சாதனை தான்.  சந்தேகமே இல்லை.

தனக்குள்ள தாழ்வு மனப்பான்மையை எப்போதுமே அவன் களைவது இல்லை. குறிப்பாக அவன் தன்னுடைய இனத்தின் நிறம் குறித்து தமிழன் அடையும் கவலை அளவிடற்கரியது.

அதிகமான வெயிற்கதிர்களை தாங்குவதற்காக மெலனின் என்ற நிறமிகள் தோலில் உள்ளன.  மிகுதியாக ஒளி உள்வாங்கப்படும் போது மெலனின் அதிகமாக உற்பத்தியாகி தோலை கருப்பாக மாற்றி விடுகிறது.  ஆனால் இந்த இயற்கை செய்யும் விந்தையை புரிந்து கொள்ளாத தமிழனுக்கு எப்போதுமே சிவப்பு மேல் தான் அதிக அலாதி பிரியம் தான்.

சங்க காலம் முதல் வழிபாடு என்பது தமிழனின் வாழ்வியலோடு பின்னிப்பினைந்த ஒன்று.  ஆனால் அவன் வணங்கும் தெய்வம் கூட நல்ல புத்தியை இன்று வரை கொடுக்கவில்லை.  கும்பிடும் கிருஷ்ணன், சிவன், திருமால் ஏன் கிராமத்து அத்தனை தெய்வங்களும் கருப்பு நிறத்தில் தான் இருக்கிறார்கள்.  நாம் படிக்கும் எழுத்துக்கள் கருப்பாக இருந்தால் தான் அது எழுத்து.  பார்க்கும் பார்வையில் கருப்பு விழிகள் இருந்தால் தான் அதற்குப் பெயர் நல்லக்கண்ணு.

கருப்பு உலக அழகி கிளியோபாட்ரா, உலகத்தில் உள்ள அத்தனை விளையாட்டுகளிலும் முதன்மை இடத்தை பிடிக்கும் நீக்ரோ இன மக்கள் கருப்பு நிறம் தான்.  ஆனால் இத்தனை விசயங்களையும் தமிழன் என்றுமே ஊன்றிப் பார்ப்பதே இல்லை.  காரணம் ஊன்றுகோலுடன் வாழ்ந்து பழக்கப்பட்டவன் தமிழன்.

உலகம் எத்தனை தூரம் விஞ்ஞானம், மெய்ஞானம் மாற்றம் அடைந்தாலும் வெளியே என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் அன்றாடம் தன்னுடைய கடமைகளில் மட்டுமே கண்ணும் கருத்துமாய் ஆத்மார்த்தமாய் வாழ்ந்து கொண்டுருக்கும் அத்தனை கடைக்கோடி படிப்பறிவு இல்லாத கிராமத்தானும் கருப்பு நிறம் தான்.  அவன் உழைப்பில் தங்களிடம் வந்து சேரும் அத்தனை பொருட்களை உண்டு தின்று செரித்து வாழ்ந்தாலும் தமிழன் புத்தி மட்டும் செறிமானம் ஆவதில்லை.

கருப்பு என்பது ஒரு நிறத்தின் கதை அல்ல. ஒரு இனத்தின் கதையும் அல்ல.  இயல்பாக தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றாற் போல் உருவாவது.  உருவானது.

உள்ளுக்குள் எந்த வஞ்சகமும் இல்லாமல் ஆண்டவன் யார்? ஆள்பவன் யார்? என்று தெரியாமல் வாழ்ந்த அத்தனை தமிழன மக்களின் பெரும்பான்மையான தமிழர்களின் நிறம் இந்த கருப்பு தான்.

பழங்கால இலக்கிய பாடல்களில் வர்ணிக்கப்படும் அத்தனை சமாச்சாரங்களிலும், தலைவன் தலைவி ஊடல்களிலும் இந்த கருப்பு தான் பிரதானமாக வருகிறது.  சிலாக்கியமாக வர்ணிக்கப்படுகிறது.  சிவப்பு என்று கூட சொல்லப்படுவதில்லை.  சிவப்பு என்று சொன்னீர்கள் என்றால் வெளுப்பு என்ற அர்த்தத்தில் வந்து விடும்.  உடலில் வெளுப்பு வந்து விட்டது என்றால் நவீன விஞ்ஞான அறிவு வரைக்கும் சோகை என்ற அர்த்தத்திலும் வந்து தொலைத்து விடுகிறது.  ஆனாலும் இந்த சிவப்பு ஆசை தமிழனுக்கு விட்டபாடு இல்லை.

இன்று வரையிலும் ஆணாக, பெண்ணாக இருந்தாலும் சிவப்பு கணவன், சிவப்பு மனைவி, காட்சியில் வரும் கதாநாயகன், கதாநாயகி சிவப்பாக இருந்தால் தான் ரசிக்கின்றோம்.  பிறக்கும் குழந்தை கூட சிவப்பாக இருந்தால் பெற்றவளுக்குக்கூட பெருமூச்சு இயல்பான மூச்சாக மாறுகிறது?

ஆண்ட சிவப்புத்தோல் பின்னால் போன அத்தனை தமிழர்களுக்கும் எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், "ஐயா, சாமி,தொரை"  என்று அலைந்து திரிந்தாலும் "சிவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்" என்ற நகைச்சுவை வசனம் கூட உண்மையாக இருந்து தொலைக்கலாம்.

வளர்ந்த நாடுகளில் பிச்சை எடுப்பவர்கள் கூட ஒரே இடத்தில் நின்று கொண்டு, தனக்குத் தெரிந்து இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டு நாகரிகமாகவே நின்று கொண்டு யாசகம் கேட்பார்கள். ஆனால் இங்கு மட்டும் அதற்கென்று ஒரு மொழி, வேடம்.  பிறந்த குழந்தைகள் கூட இந்த தொழிலுக்கு மூதலீடு தான்.  என்ன செய்வது?  தாழ்வு மனப்பான்மை என்பது 3000 வருடத்தின் எச்சமும் மிச்சமுமாய் இருக்கும் போது?  மரபு மூலக்கூறை உடைக்கும் விஞ்ஞானிகள் கைக்குத்தான் தமிழனின் மூலக்கூறை ஓப்படைக்க வேண்டும்?

தனது இனத்தை, மொழியை, பண்பாட்டை, காலச்சாரத்தை போற்றி புகழவேண்டாம். புழுதி வாறி தூற்றாமல் இருந்தால் போதாதா? அவ்வப்போது வந்து தோன்றும் திடீர் தலைவர்களையாவது காரண காரியத்தோடு "பார்க்கத் தெரிந்த" வனா தமிழன்?    இல்லை இல்லை வளர்ந்து விட்டோம்?  வளர்ந்து கொண்டுருக்கிறோம் என்ற கணக்கும் ஒரு பக்கம் இருக்கட்டும்!

அக்கரையில் போய் வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் கட்அவுட் கலாச்சாரத்தை, விரும்பியவர்களின் வினோத கோலத்தை தாங்குவதும், அலங்கோலம் என்று தெரிந்தும் அசராமல் பின்பற்றுவதும் எந்த வளர்ந்த நாகரிகமாக கருத முடியும்.  எப்போதும் இடங்கள் மட்டும் வேற்றுமையாக இருக்கும்.  இது போன்ற அத்தனை பழக்கவழக்கங்களும் அட்டகாசமாக அனைத்து தமிழர்களுக்கு பொருந்தி போய்விடும்.  அது தான் தமிழனின் தனித்தன்மை.

திரையில் உள்ளவரை நேரில் பார்க்கும் பரவசமும், அவரின் உரைக்கு முந்திச் செல்லும் ஆர்வமும், திகட்டாமல் திரும்பி பார்க்கும் பரம திருப்தியும் கொண்டவர்கள் தமிழர்கள்,

சிந்தனையாளர்கள் கூட்டும் கூட்டத்தை பார்த்ததும் சிறகடித்து பறந்து விடுவது ஏன்?  ஆமாம் உணர்ச்சியால் தூண்டப்பட்டு உருவம் இருந்தும் முண்டமாக வாழ விரும்புவன்.

உணர்ந்து கொள் என்றால் உதைக்க வந்து விட மாட்டானா?  தெளிவாக புரிந்தவர்கள் தான் ஆட்சியாளர்கள்.  புரிந்த காரணத்தால் தான் டெல்லியில் இருப்பவர்கள் எப்போதுமே புன்கையுடன் இருக்கிறார்கள்.

எதைக்கொடுத்தால் மாறுவான்?  எதைப்பேசினால் மறப்பான்?  எதைத்தொட்டால் சீற்றம் பெறுவான்?  எங்கு தொடங்கினால் நம்மை வந்தடைவான்?  இப்போது புரியுமே?  ஆள்பவர்களுக்கு அறிக்கை என்பது எத்தனை அற்புதமாக தயாரிக்க உதவிய காரணிகள் இவை என்று?

மேடைப்பேச்சு என்றாலும் அலங்கார நடை வேண்டும்.  கன்னியர் நடந்தாலும் அலங்கார ஆடை வேண்டும்.  நிறம் என்ற காரணத்தால் உயர்ந்த பதவிக்காக உச்சத்தை தொட முடியாமல் எச்சமாய் போய் நொந்து போனவர்களின் வரிசை மிக நீளம்.  அன்றும் இன்றும் என்றும்?

தாழ்வு மனப்பான்மை தமிழனின் பிறவிக்குணம்.  பாட்டிலில் அடைப்பட்ட நண்டுக்கதையின் மேலேறி வரும் கதை தெரிந்தாலும், நம்மவர்களின் அத்தனை புத்தி மாறாது.  ஏன் உரைக்காது.  மீறிப் பேசினால் நீ ஓழுங்கா என்று ஐயன் திருவள்ளுவரை இழுத்து கதறவைத்து விடுவான்.  தெரிந்தாலும் நாம் எப்போதும் போல அமைதியாக அத்தனையையும் பொறுமையாக சகித்துக்கொள்வோம்.

இந்த ஆட்டத்தில் தொடர்ந்தது தான், நீயும் வேண்டாம்?  நானும் வேண்டாம்?  மூன்றாம் நபரை ஆதரிப்போம் என்று மூப்பனார் பிரதமர் பதவி போகாத வரைக்கும்?

தமிழனின் தாழ்வு மனப்பான்மை என்பது பாரபட்சம் இல்லாதது.    படித்தவருக்கும், பாமரனுக்கும் பொதுவானது,  இடம், சூழ்நிலை மட்டும் மாறியதாய் இருக்கும்.  இக்கரையில் இருந்தால் என்ன?  கடல் தாண்டி வாழும் அக்கரையில் இருந்தால் என்ன?

எதிலும் அக்கறையில்லாமல் ஆள்பவர்களையும், ஆடுபவர்களையும் ரசித்துக் கொண்டு நசுங்கிப்போய்க்கொண்டுருக்கிறோம் என்பது தெரியாமலேயே பயணிப்பவன் தமிழன்.

7 comments:

geethappriyan said...

கருப்பு என்பது ஒரு நிறத்தின் கதை அல்ல. ஒரு இனத்தின் கதையும் அல்ல. இயல்பாக தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றாற் போல் உருவாவது. உருவானது.//

அருமையான விளக்கம்.
நாம் எல்லோருமே வெயிலோன்கள் தான்.

மேடைப்பேச்சு என்றாலும் அலங்கார நடை வேண்டும். கன்னியர் நடந்தாலும் அலங்கார ஆடை வேண்டும். நிறம் என்ற காரணத்தால் உயர்ந்த பதவிக்காக உச்சத்தை தொட முடியாமல் எச்சமாய் போய் நொந்து போனவர்களின் வரிசை மிக நீளம். அன்றும் இன்றும் என்றும்?//

நல்ல கேள்விதான்.
மக்கள் உணர வேண்டும்

எதிலும் அக்கறையில்லாமல் ஆள்பவர்களையும், ஆடுபவர்களையும் ரசித்துக்கொண்டு நசுங்கிப்போய்க்கொண்டுருக்கிறோம் என்பது தெரியாமலேயே பயணிப்பவன் தமிழன்.//

சரியான வார்த்தை வீச்சு.

அருமை ஜோதிஜி,
இதுவும் உங்களிடமிருந்து ஒரு அருமையான ஆக்கம்.

பின்னோக்கி said...

நீங்க சொல்றது சரிதான். சிவப்பு பார்த்து ரசிப்பவனில் ஒருவன் நான் கருப்பாய் இருப்பதால். ஏன் என்பது புரியவில்லை. சிவப்புக்கு நம் சமூகம் மரியாதை குடுப்பதை மறுக்க இயலாது

vasu balaji said...

/தமிழனின் வாழ்வியல் தடங்கள் மூலத்தில் இருந்து இன்று நிர்மூலமாகிக்கொண்டுருக்கும் ஈழம் வரைக்கும்./

மொத்த இடுகையின் சாரம். அபாரம்.

velji said...

அருமை!
ஆதங்கம் தொனிக்க எழுதியிருக்கிறீர்கள்.இன்றைய நிலைக்கு என்ன காரணம் என்று மூலம் தேடும் எழுத்துக்கள்.தொடருங்கள்.

வெண்ணிற இரவுகள்....! said...

//தமிழனின் தாழ்வு மனப்பான்மை என்பது பாரபட்சம் இல்லாதது. படித்தவருக்கும், பாமரனுக்கும் பொதுவானது, இடம், சூழ்நிலை மட்டும் மாறியதாய் இருக்கும். இக்கரையில் இருந்தால் என்ன? கடல் தாண்டி வாழும் அக்கரையில் இருந்தால் என்ன?

//
கருப்பு என்பது ஒரு நிறம் ......ஒரு நிறம் எப்படி இன்னொரு நிறத்தோடு தாழ்வு ஆகும் ......
நல்ல பதிவு....................கருப்பு தான் எனக்கு பிடிச்ச " பாடல் கேட்கிறதா

அது ஒரு கனாக் காலம் said...

கறுப்பும் / சிவப்பும் படுத்தும் பாடு .....???!!!!!

ஜோதிஜி said...

பகிர்ந்து கொண்ட, முன்னெடுத்துச் சென்ற, தொடர்ந்து கொண்டுருக்கும், வாசித்துச் சென்ற அத்தனை உள்ளங்களுகளுக்கும் நன்றி,

சுற்றிக்கொண்டு சென்று எங்களின் பொறுமையை சோதிப்பது ஏன்? என்ற கேள்வி புரிகிறது.

இலங்கையில் நமக்குத் தெரியாத ஜாதிய வர்ண பேதங்கள், இருந்ததை விட தமிழர்களில் இலங்கை பூர்வகுடி தமிழர்கள், வாழ்க்கை தேடிச் சென்ற இந்திய தமிழர்கள் என்ற வேறுபாடு எத்தனை வினோத பிரச்சனைகளை தொடக்கத்தில் உருவாக்கியது தெரியுமா?

ஒரு தலைவர் ஜெயவர்த்தனே கூட பேசிய வாக்குவாதத்தில் "நான் கண்டித்தமிழன்” என்று பெருமையாய் பேசி தன்னுடைய தகுதியை, தமிழனின் மாறாத குணத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார். பின்வரப்போகும் நிகழ்வுகளுக்கு அது அடிப்படை முண்டுக்கல். ஆமாம், அஸ்திவாரம்.

அப்போது தான் ஆயுதம் தாங்கித்தான் ஆக வேண்டும் என்று எழுந்த இளைஞர்களை அவர்கள் நோக்கங்களை தெளிவாக உங்களால் புரிந்து கொள்ள முடியும்? ஆயுதம் ஏந்தியவர்கள் (?)என்று தெரிந்த போதிலும்?