நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும் போது நம் தகுதிகள் புரிபடத் துவங்கும். நேரம் காலம் மறந்து தொடர்ந்து வேலை செய்து கொண்டேயிருந்தாலும் நமக்கு சோர்வு வருவதில்லை.
அதுவும் மற்றவர்களால் சாதிக்க முடியாதவற்றை நாம் சாதித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் செயல்படும் போது நம்முடைய வேகம் அசாத்தியமானதாக இருக்கும். அதுவரையிலும் இனம் கண்டு கொள்ளாமல் நமக்குள் இருக்கும் அத்தனை திறமைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெளி வரும். அப்படித்தான் எனக்கும் இந்த நிறுவனத்தில் நடந்து கொண்டிருந்தது.
உழைக்கும் எண்ணம் கொண்டவனுக்கு அடுத்தவன் குறைகள் குறித்து யோசிக்க நேரம் இருக்காது. அடுத்தடுத்த வேலைகள் என்னவென்றே மனம் ஓடிக் கொண்டேயிருக்கும். வேலையில்லாதவர்களுக்கும், வேலை செய்ய மனமில்லாதவர்களின் மனமும் தான் பிசாசு போல செயல்படும். பழிவாங்குதல், கடமைகளில் இருந்து தப்பித்தல், காரணம் சொல்லுதல், காரணங்களை தேடிக் கொண்டே இருந்தல் என்று தொடங்கி தான் வாழ எவரை வேண்டுமானாலும் பழிகிடா ஆக்கி விடலாம் என்று எண்ணத்தில் கொண்டு வந்து நிறுத்தும்.
ஒரு நிர்வாகத்தின் வளர்ச்சி வீழ்ச்சியடைய பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கியமான முதன்மையான காரணமாக இருப்பது மனித மனங்களை கையாளத் தெரியாத பட்சத்தில் வீழ்ச்சி விரைவாகும்.
நாகரிகம் வளராத காலகட்டத்தில் மனிதர்களின் தேவைகள் குறைவாக இருந்தது. இன்று ஒவ்வொரு மனிதனையும் தேவைகள் தான் இயக்குகின்றது. அவரவர் தேவைக்கேற்றபடி தான் இன்றைய உலகம் இயங்குகின்றது. ஆனால் இங்கே என் தேவை என்பது என்னை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தது. அந்த நோக்கத்திற்காக என்னை நானே வளைத்துக் கொண்டேன். அடுத்தவர் கௌரவம் பார்த்து நுழையத் தயங்கும் ஒவ்வொரு இடத்திலும் புகுந்து வெளியே வந்து கொண்டிருந்தேன்.


