Showing posts with label Corruptions.Lanjam.லஞ்சம். Show all posts
Showing posts with label Corruptions.Lanjam.லஞ்சம். Show all posts

Sunday, October 24, 2010

மானங்கெட்ட மனிதர்களும் மரியாதையான பதவிகளும்

நீங்க போனஸ் வாங்கீட்டீங்களா?   

தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதம் இருக்க திருப்பூருக்குள் வாழ்ந்து கொண்டுருக்கும் ஒவ்வொரு தொழிலாளியும் மற்றவர்களை சந்திக்கும் போது கேட்கும் கேள்வி இது.  பணிபுரியும் நிறுவனங்களில் சம்பளம் குறைவு, வாரம் முழுக்க வேலை இல்லாத கொடுமை தொடங்கி அலங்கோலமான நிர்வாகத்தில் சிக்கித்தவித்துக்கொண்டுருக்கும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் இது போன்ற பண்டிகைகள் மிக முக்கியமானது. 

காரணம் அந்த ஒரு வருடம் முழுக்க உழைத்த உழைப்பின் வேர்வைக்கு கிடைக்கும் எச்சமும் சொச்சமுமாய் இந்த போனஸ் பணமென்பது ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் மிக முக்கியமான ஒன்று.  ஊரில் உள்ள கடன் முதல் உள்ளூரில் கொடுத்தே தீர வேண்டிய பூதாகர வட்டி வரைக்கும் தீர்ப்பதற்கு உதவும் சர்வரோக மருந்தாக இந்த ஊக்கத் தொகையே உதவுகிறது. 

சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரைக்கும் இன்றைய சூழ்நிலையில் இதுவொரு சவாலான நேரமாகும். பஞ்சு ஏற்றுமதியை இன்று வரைக்கும் நிறுத்த எந்த தலைவர்களுக்கும் மனமில்லை. நூல் ஏற்றுமதிக்கு அச்சாரம் போடும் பெரிய தலைகளின் திட்டங்கள் தினமும் முன்னேறிக் கொண்டேயிருக்கிறது. ஆனால் வாரந்தோறும் இந்த பிரச்சனையை வைத்துக் கொண்டு இங்கு கூட்டம் நடத்தும் ஒவ்வொரு அரசியல் தலைகளின் சித்து விளையாட்டுகளும் ஏதோவொரு வழியில் நடந்து கொண்டேயிருக்கிறது. 

இங்கே முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் கூட தாங்கள் கட்டியுள்ள கோவணத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் எவரிடம் போய் முறையிடமுடியும்? பாலும் தேனும் ஓடுவது போல் ஊர் முழுக்க முரசறிவித்துக் கொண்டுருப்பவர்களின் ஒவ்வொரு வருகைக்குப் பின்னாலும் ஒவ்வொரு காரணங்கள். இன்றைய சூழ்நிலையில் அதிக பாவம் செய்தவர்கள் சாயப்பட்டறை முதலாளிகள். அவர்களும் வந்து போய்க் கொண்டுருக்கின்ற மக்கள் தலைவர்களுக்கு எத்தனை சூட்கேஸ்களைத் தான் கொடுத்துக் கொண்டேயிருக்க முடியும். 

ஏற்கனவே உள்ளே அட்டைப்பூச்சியாய் உறிஞ்சிக் கொண்டுருக்கும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முதல் உள்ளூர் அரசியல் தாதாக்காளின் வசூல்களும் நின்றபாடில்லை. உள்ளேயிருக்கும் தொழில் நடந்தால் என்ன? இல்லை விவசாய பூமிகள் நாசமானால் என்ன? அதுவா இப்போது முக்கியம்? உள்ளேயிருப்பவர்களுக்கு கொடுக்க மின்சாரம் இல்லாத போதும் கூட வந்து இறங்கிக் கொண்டுருக்கும் பன்னாட்டு நிறுவனங்களை விரட்டிவிட முடியுமா?  சாலைகளை மறைத்துக் கட்டும் ஒவ்வொரு ப்ளக்ஸ் போர்டுகளில் சிரிக்கும் தலைகளின் முகத்தில் துப்ப முடியாத எச்சிலை வாயில் அடக்கிக் கொண்டே ஒவ்வொருவரும் வேகமாக ஓடிக்கொண்டுருக்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டுருகிறார்கள்.

சாயப்பட்டறைக்காக மத்திய அரசு ஒதுக்கிய முதல் கட்ட தவணை நிதி வந்து சேர்வதற்கு முன்பே அதற்கான பங்கு சதவிகிதம் குறிப்பிட்ட தலைமைக்கு கொடுத்தாகி விட்டது.  இது போக வரப்போகும் தீர்ப்புக்காக ஒன்று, மத்திய அரசு அடுத்து ஒதுக்கப் போகும் நிதிக்காக என்று ஒவ்வொரு காரணங்களுக் காகவும் திட்ட முடியாமல் திரட்டி கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.  காரணம் தேர்தல் நாள் மிக அருகில் இருப்பதால் திரட்டும் வழிகளை இப்பொழுதே கண்கொத்திப் பாம்பாக பார்த்துக் கொண்டுருப்பதால் இங்குள்ள ஒவ்வொரு நிறுவனங்களின் வாழ்க்கையும் நிரந்தர இருளை நோக்கி நகர்ந்து கொண்டுருக்கிறது. இதற்கிடையே இந்த தீபாவளிப் பண்டிகை.

எந்த நிர்வாகமும் தொழிலாளர்களிடம் தொழில் நட்டம் என்றோ, பணமில்லை என்றோ ஒதுங்கி சென்று விடமுடியாது. அழுது கொண்டே கொடுக்க வேண்டிய பணம்.

சில நிறுவனங்கள் பண்டிகைக்கு ஒரு மாதம் முன்பே கொடுத்து விடுவதுண்டு.  பல இடங்களில் கடைசி வரைக்கும் எத்தனை சதவிகிதம் தருவார்கள்? எப்பொழுது தருவார்கள் என்று ஒவ்வொரு நாளும் கவலையுடன் காத்துக் கொண்டுருக்கும் சூழ்நிலையைத் தான் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு பெரிய நிர்வாகத்திலும் இது போன்ற சமயத்தில் மிகப் பெரிய மாறுதல்கள் நடைபெறும்.  சில புத்திசாலியான நிர்வாகங்கள் பண்டிகை வரப்போவதற்கு முன்பே தேவையில்லாத நபர்கள் என்று காரணம் காட்டி கழித்துக்கட்டி விரட்டிவிடுவதுண்டு.  

அடிப்படைத் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய இது போன்ற ஊக்கத் தொகையை விட வேறொரு கொடுமையையும் ஒவ்வொரு நிறுவனங் களும் கடந்து வர வேண்டும்.  பண்டிகை தொடங்க முப்பது நாட்களுக்கு முன்பே அரசாங்கத் துறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறுவனங்களாக முறைவைத்து ஏறி இறங்கிக் கொண்டுருக்கும் கொடுமையை பார்க்க சகிக்காது. சமீபத்தில் உயர்பொறுப்பில் இருக்கும் நண்பருக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது.

குசலம் விசாரித்தபிறகு அழைத்த அதிகாரி விடுத்த கோரிக்கை "கட்டிக் கொண்டுருக்கும் வீடு மாடி வரைக்கும் கட்டி முடித்தாகி விட்டது.  மீதி செங்கல் வாங்க வேண்டும்.  பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அனுப்புங்க". இதில் ஆச்சரியம் என்னவென்றால் அழைத்த அதிகாரி அவர் வாங்கும் சம்பளத்தில் பிடித்தம் போக ரூபாய் 40000 வாங்கும் பதவியில் இருப்பவர்.  அவருக்கு கீழ் 300 நிறுவனங்கள உண்டு. ஒவ்வொரு நிறுவனங்களின் தொழிலாளர் நலவாழ்வு என்பது அவர் கையில் தான் இருக்கிறது.  

நம்முடைய இந்திய ஜனநாயகத்தில் சகிப்புத்தன்மையென்பது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் எந்த அளவிற்கு தேவையாய் இருக்கிறதோ அதே அளவிற்கு நிறுவனங்களுக்கும் தேவையாய் இருக்கிறது.  அடிப்படைவசதிகள் முதல் அன்றாட நிகழ்வுகள் வரைக்கும் ஒவ்வொன்றும் இந்த அரசியல் விளையாட்டுக்குள் அடக்கப்பட்டுவிடுகிறது. 

இயல்பான காரியங்கள் கூட எவரோ ஒருவரின் தயவுக்காக காத்துருக்கும் சூழ்நிலையை இந்த மக்கள் தலைவர்கள் உருவாக்கி விட்ட காரணத்தால் கரம் சிரம் புறம் பார்க்காமல் சென்றால் தான் பயணத்தின் இறுதிப் பகுதிக்கு நம்மால் செல்ல முடியும். அதிகபட்சம் 50 லட்சம் வரைக்கும் கப்பம் கட்டி உள்ளே வரும் ஒவ்வொரு துறை சார்ந்த அதிகார வர்க்கமும் அவரவர் இருக்கையில் வந்து அமர்வதற்கு முன்பே ஒரு கணக்கோடு தான் தங்கள் மக்கள் சேவையை தொடங்குகிறார்கள். 

இது போன்ற அதிகாரிகளை சரியான முறையில் நிறுவனங்களுக்கு கையாளத் தெரியாவிட்டால் நாலும் நடந்து விடும். நடுத்தெருவுக்கு கொண்டு வநது நிறுத்திவிடக்கூடும். திருப்பூருக்குள் பணிமாற்றம் கேட்டு வருவது என்பது இன்று அரசாங்கத் துறையில் மிகப் பெரிய பம்பர் லாட்டரி கிடைத்ததற்கு சமமானது.  

வணிகவரித்துறை, காவல் துறை, பத்திரப்பதிவுத்துறை, மின்சாரத்துறை வரைக்கும் ஒவ்வொரு உயர்பதவிகளும் நல்ல விலை போய்க் கொண்டுருக்கிறது. ஆனால் இந்த மானங்கெட்ட அரசியல் விளையாட்டின் எல்லை எதுவரைக்கும் சென்று கொண்டுருக்கிறது தெரியுமா? 


நாம் தினந்தோறும் தொலைக்காட்சியில் உயர்ரக வெளிச்சத்தில் பார்த்து வாயை பிளந்து கொண்டுருக்கும் பட்டுப் புடவைகள் நெய்யும் நெசவுத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் இறுதியாக 18 சங்கங்கள் இருந்தது. ஒரு புடைவைக்கு ரூபாய் 3000 கூலியாக ஏற்கனவே உருவாக்கப்பட்டுருந்த உள்ளூர் கூட்டுறவு சங்கம் மூலமாக வழங்கப்பட்டுக் கொண்டுருந்தது.  

வெற்றிகரமாக நம் தலைகள் அதிலும் நுழைந்து இன்று சங்கங்களை உடைத்து ஜாதி, அரசியல் கட்சி என்று மாற்றி நெசவாளர்களின் வாழ்க்கையை சாயம் போன பட்டுப்புடவைப் போல மாற்றி விட்டனர். பாதிக்கப்பட்ட எவரும் ஒன்று சேரமாட்டார்கள்.  காரணம் வருமானம் இல்லாத குறையைவிட ஒவ்வொரு வருக்கும் அரசியல் சாயம் முக்கியமானது.  அதை விட தன்னுடைய ஜாதி அந்தஸ்து அதி முக்கியமானது.  இடையே உள்ளே நுழைபவர்களுக்கு இதை விட வேறென்ன வேண்டும்.

இந்திய நாடு மற்ற நாடுகளுக்கு மக்கள் ஆட்சிக்கு வழிகாட்டியாக இருக்கிறது.  வெற்றிகரமாக அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயகத்தை பறை சாற்றிக் கொண்டுருக்கிறது என்று நம்மை நாமே தேற்றிக் கொள்ள எத்தனையோ பெருமையான விசயங்கள் நம்மிடம் உண்டு. 

 எந்திரன் விளம்பரங்களுக்கு இடையே நம் பார்வையில் படாமல் இருந்த மற்றொரு சமீப நிகழ்வுகளை இந்த இடத்தில் யோசித்துப் பார்த்தால் தவறில்லை.  பத்து நாட்களுக்கு முன்பு பிரான்ஸில் 80 சதவிகித மக்கள் தெருவுக்கு இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை நிகழ்த்தி ஆள்பவர்களை கதிகலக்க வைத்துள்ளனர். 

60 வயதில் வழங்கப்படும் ஓய்வுதிய நிதியை 62 வயதுக்கு மாற்றியதால் மொத்த மக்களும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்த உருவாக்கிய அச்சத்தை உருவாக்கிய ஒற்றுமை நம் மக்களுக்கு தேவையில்லாத ஒன்று. 

ஆனால் இந்தியாவில் இருக்கும் பல சிறப்புகளுடன் மற்றொரு பெருமை யையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். டிரான்ஸ்பேரன்ஸி இன்டர் நேஷனல் மற்றும் சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் லஞ்சம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவின் படி ஓர் ஆண்டில் மட்டும் ரூ.883 கோடி லஞ்சம் கொடுக்கப் படுகின்றது. 

கணக்கெடுத்தவர்கள் அதிகாரவர்க்கத்தினரை வைத்து தான் எடுத்துருக்க முடியும்.  அரசியல்வியாதிகள் பக்கம் போயிருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? 


அரசுத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள மூன்றில் ஒருவர் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. லஞ்சம் செழித்து வளரும் தர வரிசைப்பட்டியலில்  இந்தியாவுக்கு 19 வது இடம் கிடைத்துள்ளது. நாம் நல்லவற்றை நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நமக்கு முன்னால் 18 நாடுகள் இருக்கிறார்கள் என்பதை நினைத்து ஆறுதல் பட்டுக் கொள்வோம்.