Thursday, November 10, 2022

தலைமுறைக்கு உணர்த்துங்கள்

கணவன், மனைவி, வயதான பாட்டி, மகள் என்று நான்கு பேர்கள் பக்கத்து வீட்டில் வசிக்கின்றார்கள்.  கழிப்பறை சென்று விட்டு வரும் போது என்று தொடங்கி வெளியே உள்ள விளக்குகள் வரை ஒரு முறை போடுவார்கள். அதற்குப் பிறகு அணைக்கவே மாட்டார்கள்.  நான் மறந்து போய் விடுகின்றார்கள் என்று பலமுறை ஞாபகப்படுத்தி ஸ்விட்ச் களை ஆஃப் செய்ய வைப்பேன்.  வீட்டில் திட்டுவார்கள்.  

அவர்கள் எப்போதும் அப்படித்தான்.  விளக்கு எறிந்து கொண்டே இருக்கும் என்றார் இல்லத்தரசி. 

இதற்கு மேல் அறிவுரை சொன்னால் பிரச்சனையாகி விடும் என்று சென்ற வாரம் வரைக்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டே  நொந்து போய் கடந்து செல்வதுண்டு.

சில தினங்களுக்கு முன் அவர்கள் வீட்டில் ஒரே சண்டை. சப்தம் எங்கள் வீடு வரைக்கும் கேட்டது.  வீட்டில் கேட்ட போது கடந்த இரண்டு மாத மின்சாரக் கட்டணம் பார்த்து அலறுகின்றார்கள் என்றார்.  மிகப் பெரிய தொகையைத் தீட்டியிருக்கின்றார்கள்.  அதாவது மாறிய மின் கட்டணம் குறித்து நானே முன்பே தெரிவித்தேன்.  கவனமாக சிக்கனமாக மின்சாரத்தைப் பயன்படுத்துங்கள் என்றேன்.  என்னை அலட்சியப்படுத்தினார்கள். 

*****

வீட்டுக்கு அருகே இருந்த தந்திக் கம்பத்தில் உள்ள ட்யூப் லைட் அவ்வப்போது எறியாமல் இருக்கும்.  நானே பலமுறை வரவழைத்துச் சரி செய்து கொடுத்து இருக்கின்றேன்.  அந்த விளக்கு வெளிச்சத்திற்கும் எங்கள் வீட்டுக்கும் தொடர்பில்லை.  ஆனால் அந்த விளக்கு எறிந்தால் நான்கு புறமும் இருட்டு இல்லாமல் அச்ச உணர்வு இல்லாமல் கல்லூரி சென்று வரும் மாணவிகளுக்கு வசதியாக இருக்கும்.  பலமுறை கோவை சென்று படித்து வருகின்றவர்கள் எட்டு மணி போல வீட்டுக்கு வரும் போது இருட்டைக் கடந்து வருவதைப் பார்த்து மனதிற்குள் பயமாக இருக்கும்.  அந்த தந்தி கம்பம் அருகே இருப்பவர்கள் உயர் நடுத்தர வர்க்கம். ஒரு முறை கூடப் பிரச்சனை வரும் சமயங்களில் வெளியே வருவதில்லை. விளக்கு எறிந்தாலும் எறியாவிட்டாலும் கண்டு கொள்வதில்லை. 

மகள் ஒரு முறை சொன்னார்.  அப்பா அடுத்தமுறை எதுவும் செய்யாதீர்கள்.  அவர்களுக்கு சில பாடங்கள் அனுபவப்பூர்வமாக கிடைத்தால் தான் புரியும் என்றார்.  அப்பவும் மனம் கேட்காமல் எறியாமல் இருந்த விளக்குக்கு அருகே இருந்த வீட்டில் வசிக்கும் பெரியவரிடம் மாநகராட்சி அழைத்து சொல்லலாமே என்றேன். அலட்சியமாகப் பேசினார்.  அதாவது என்னுடன் பேசுவதே பாவம் என்பது போலத் தெரிந்தது. 

மகளிடம் வந்து சொன்னேன்.  காத்திருங்கள். அடுத்த வாரத்தில் தெரியும் என்றார்.  

காரணம் அப்போது தண்ணீர் குழாய்க்குப் பள்ளம் தோண்டு சாலையைக் கொத்துக்கறியாக்கி வைத்திருந்தார்கள்.  இரவில் வந்த அவரின் மகள் தடம் தெரியாமல் உள்ளே விழுந்து  கோவைக்குத் தூக்கிக் கொண்டு சென்றார்கள்.

••••

எங்கள் சந்து வார்டு கவுன்சிலர் ஒவ்வொரு இடத்திலும் தெளிவாக அழகாக தண்ணீர்க் குழாய் மாட்டி மக்கள் சேவையைச் சிறப்பாகவே செய்துள்ளார்.  ஆனால் மக்கள் அதன் லீவரைப் பிடுங்கிப் போட்டு தண்ணீர் வரும் ஆறு போலத் தரையில் பாயும்.  நான் நடந்து செல்லும் போது துணி வைத்து கட்டை வைத்து அடைப்பதுண்டு. கவுன்சிலரிடம் சொன்னால் வேறொரு லீவர் கொண்டு வந்து மாட்டுவார்.  அடுத்த சில வாரங்களில் நிலைமை பழையபடி மாறும்.  இப்போது தான் வீட்டுக்கு வீடு தண்ணீர் பைப் மாட்டி தயாராக வைத்துள்ளார்கள். இனி இந்த திட்டம் தொடங்கும் போது காசுக்குத்தான் தண்ணீர்.  ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

•••••

நான் மின்சார ஒழுங்கு முறை ஆணையம், உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணம், புத்திசாலித்தனத்துடன் கிரிமினல் கலந்த மின்சாரக் கட்டணத்தை உருவாக்கிய  மக்காபுருஷர்களை திட்டவே மாட்டேன்.  பலரும் கடந்த இரண்டு நாட்களாக ஏறிய கட்டணம் குறித்து எழுதுவதால் என்னைச் சுற்றியுள்ள சமூக மனோநிலையை எழுத வேண்டும் என்று தோன்றியது.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் செய்யும் அயோக்கியத்தனம் என்பது பத்து சதவிகிதம் தான்.  ஆனால் அவர்களை 90 சதவிகிதம் செய்யுங்கள் என்று ஊக்குவிப்பது பலரின் கள்ள மௌனம் மற்றும் எவன் செத்தால் எனக்கென்ன என்ற மனோபாவமும் தான்.

•••••

மோடி அவர்கள் இதைத்தான் அனுபவப்பூர்வமாகச் சொன்னார்.  

பதினேழு டிகிரி செல்சியஸ் ல் குளிர்சாதன வசதியை வைத்துக் கொண்டு நன்றாக போர்வையை இழுத்துப் போர்த்து மூடிக் கொண்டு படுப்பது தவறு என்றார்.

••••

மகன் மகளிடம் மனைவியுடன் சொல்லுங்கள்.

மின்சாரம், தண்ணீர் எத்தனை லட்சம் கோடி இருந்தாலும் நாம் உருவாக்கவே முடியாது. இயற்கை வழங்கிய கொடையை நாம் கவனமாக பயன்படுத்தப் பழகுவோம். பிறகு அடுத்தவர்களைக் குறை சொல்வோம் என்பதனை நான் என் வீட்டில் சொல்லிக் கொண்டே இருப்பதைப் போல நீங்களும் சொல்லுங்கள்.No comments: