Thursday, January 13, 2022

பல்கலைக்கழகங்களை அபகரித்து கழக குடும்பச் சொத்தாக்கத் திட்டமா?

துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர்களை அகற்றி விட்டு,

பல்கலைக்கழகங்களை அபகரித்து கழக குடும்பச் சொத்தாக்கத் திட்டமா?




’தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கும் பங்கு இருக்க வேண்டும்; அது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களும், மு.க.ஸ்டாலின் அவர்களும்  கடந்த 06.01.2022 அன்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார்கள். உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதல்வரின் இந்த அறிவிப்புகளை எளிதாகக் கடந்து செல்ல முடியாது.  ஏனெனில், அந்த அறிவிப்பு இலட்சோபலட்சம் உயர்கல்வி பயிலும் ஏழை, எளிய, கிராமப்புற தமிழக மாணவர்களின் வாழ்க்கையோடு சமந்தப்பட்டது.

துணைவேந்தர்கள் நியமனம் ஆளுநர்கள் மூலமாக நடைபெற்று வந்தாலும் நடைமுறையில் மாநிலத்தில் ஆட்சியில் இருப்பவர்களுடைய விருப்பமே அதில் இறுதி வடிவம் பெறுகிறது. துணைவேந்தர்களை நியமிக்க மூன்று பேர் கொண்ட தேர்வுக்  கமிட்டியை (select committee) நியமிக்கும் பொறுப்பைக் கூட ஆளுநர்கள் சுயமாக நியமிக்க முடியாமல் மாநில அரசுகள் கொடுக்கும் பெயர்களை மட்டுமே ஆளுநர்கள் பரிந்துரைக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சூழல்களும் உண்டு.

தமிழகத்தில் 50 வருடங்களாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனங்கள் சாதி, மத, ஊழல், சொந்த பந்த சகதிகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. ஏலத்தில் எடுப்பதைப் போல அதிக தொகை தர முன் வருவோருக்கே துணை வேந்தர் பதவிகள் வழங்கப்பட்டு வந்தன. துணைவேந்தர் நியமனத்திற்கு ரு 10 கோடி முதல் ரூ15 கோடி வரையிலும் பேரம் பேசப்பட்ட காலம் உண்டு. சிறந்த கல்விமான்களைப் புறந்தள்ளிவிட்டு ஆட்சிக் கட்டிலிலிருந்தவர்களின் உற்றார் உறவினர்கள், சொந்தங்கள் அல்லது சாதி, மத அபிமானங்களுக்கு மட்டுமே துணைவேந்தர்கள் பதவிகள் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. அதனால் தமிழகத்தின் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் ஊழல் கழகங்களாகவே பரிணமித்தன.

ஆராய்ச்சியின் இருப்பிடமாக இருக்க வேண்டிய பல்கலைக்கழகங்கள் உறுப்புக் கல்லூரி மாணவர்களுக்கு ’பட்டம்’ அளிக்கும் ஒரு சாதாரண நிறுவனமாகவே குறுகிப் போய்விட்டன. ’வேலியே பயிரை மேய்ந்தது’ என்பதற்கு இணங்க கல்வியின் கோபுரமாக விளங்கக்கூடிய பல்கலைக்கழகங்களே ஊழல் குப்பை மேடுகளாக மாறின. பெரும்பாலும் பல பல்கலைக்கழகங்களில் எந்த நியமனத்திலும் இட ஒதுக்கீடு முறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. தொலைத்தூரக் கல்வி மற்றும் வினாத்தாள் திருத்துதல் போன்றவற்றிலும் ஊழல்கள் தலை விரித்தாடின.  பி.எச்.டி பட்டங்களையும், டி.லிட் பட்டங்களையும் கூட வேண்டியவர்களுக்கும், காசு பணத்திற்கும் வழங்கினார்கள். பல கல்லூரி பேராசிரியர்களே பாலியல் புகார்களுக்கு ஆளாகினார்கள். துணைவேந்தர்களில் பலர் தங்களுடைய பதவிக் காலத்தில் தங்களுடைய வருமானத்திற்கு அதிகமாக பன்மடங்கு சொத்து சேர்த்தார்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகி தங்களது பதவிகளையும் இழந்தார்கள்; வழக்குகளிலும் சிக்கினார்கள்.



தமிழக பல்கலைக்கழகங்களில் நடந்து வந்த இதுபோன்ற மிதம் மிஞ்சிய முறைகேடுகளைக் கண்டித்து நாம் சட்டமன்றத்திலும் பேசியிருக்கிறோம்;  மக்கள் மன்றத்திலும் போராடி இருக்கிறோம்; நீதிமன்றங்கள் வரையிலும் சென்று இருக்கிறோம். இந்த அவல நிலைகள் மாறி, கடந்த 2 வருடங்களாகத் தான் பெரிய அளவிற்கு எந்த குற்றச்சாட்டுகளும் எழாமல் பல துணைவேந்தர்களை ஆளுநர்கள் நியமித்து வருகிறார்கள். துணைவேந்தர் நியமனங்கள் நேர்மையான பாதைக்குத் திரும்பியுள்ளதை ஸ்டாலினின் கூடாரத்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது. அதன் காரணமாகத்தான் சம்பந்தமில்லாமல் ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கேள்வி கேட்க வைத்து துணைவேந்தர் நியமனங்களில் மாநில அரசுக்கு பெரும் பங்கு இருக்கும் விதத்தில் சட்டம் கொண்டுவரச் சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

பெரும் பங்கு என்ன? துணைவேந்தர் நியமனத்தில் முழு பங்கையும் கடந்த 50 வருடங்களாக தமிழகத்தை ஆண்ட கட்சிகள் தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். கடந்த இரண்டு வருடங்களாக மட்டும்தான் அந்த நிலை முற்றாக மாற்றப்பட்டு இருக்கிறது. ஊழலற்ற, நேர்மையான முறையில் நல்ல கல்விமான்களைத் துணைவேந்தர்களாக நியமிக்கும் சரியான பணியைத் தமிழக ஆளுநர்கள் சுயமாகச் செய்து வருகிறார்கள். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இன்றைய திமுக அரசு துணைவேந்தர் நியமனங்களைச் சீர்குலைத்து அதையும் அபகரிக்கத் திட்டமிடுகிறது.

திமுக அரசின் நோக்கங்கள் தெளிவாகத் தெரிகிறது. தங்கள் குடும்பத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக இல்லாத எஞ்சி இருக்கக்கூடியவர்களை இது போன்ற உயர் பதவிகளில் அமர வைக்க வேண்டும்; இரண்டாவது, மீண்டும் துணைவேந்தர் நியமனங்களைப் பொன் முட்டையிடும் வாத்துகளாக மாற்றி அதில் கோடி கோடியாக வாரிக்குவித்து ஊழல் குப்பை மேடுகளாக பல்கலைக்கழகங்களை மாற்ற வேண்டும் என்பதுதான்.

சட்டப்படியும், நியாயப்படியும் துணைவேந்தர் நியமனங்கள் ஆளுநர் முழுக் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும். பெரும் பங்கு என்ன? ஒரு சிறு பங்கு கூட மாநில அரசுக்கு இருக்கக்கூடாது என்பதே நம்மைப் போன்ற பெரும்பாலான கல்வியாளர்களின் கருத்தாகும்.

ஆளுநர்களை  அகற்றிவிட்டு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை திமுக அரசே தன் வசப்படுத்திக் கொண்டு ஸ்டாலின் அவர்களின் சொந்த பந்தங்களையும், உற்றார் உறவினர்களையும், தனது கட்சிக் காரர்களையும், சொம்பு தூக்குபவர்களையும் துணைவேந்தர்களாக தாங்களாகவே நியமனம் செய்து கொண்டால் கோடான கோடி தமிழக ஏழை, எளிய, கிராமப்புற, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.

இந்தியாவில் எந்த பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டாலும் அந்த பல்கலைக்கழகங்களுக்கு இந்திய அரசின் மனித வள மேம்பாடு மற்றும் கல்வித்துறையின் அங்கீகாரம் இருக்க வேண்டும். அந்த பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர்கள் வேந்தர்களாக அதிகாரப்பூர்வமாக இல்லை என்றால் பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் கிடைக்காது. அதேபோன்று இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அங்கீகாரம் அளிக்கும் University Grants Commission அங்கீகாரம் அளிக்காது. பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம் அளிக்கவில்லை எனில் எந்த பல்கலைக்கழகத்திற்கும் UGCயின் நிதி கிடைக்காது. பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் UGC அளிக்கும் நிதியிலிருந்தும், ஆராய்ச்சிக்காக வெளிநாட்டிலிருந்து பெறக்கூடிய நிதிகளிலிருந்தே பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பளம் பெறுகிறார்கள். இவைகள் அனைத்துமே தடைப்பட்டுப் போய்விடும். மத்திய அரசு மற்றும் UGC அங்கீகரிக்காத எந்த பல்கலைக்கழகங்களையும் உலகத்தின் பிற எந்த நாடுகளும் அங்கீகரிக்காது.

இதேபோன்று தான்,  UGC விதிமுறைகளுக்கு மாறாக, எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதால், 10 ஆண்டுகளுக்கு மேலாக UGCயின் நிதி கிடைக்காமல் இருந்தது. 2005 ஆம்  ஆண்டு, அப்பொழுது UGC சேர்மனாக நியமிக்கப்பட்ட சுகதேவ் தோரட்- Sukhadeo Thorat  அவர்களுக்கு சென்னையில் உள்ள நியூ கல்லூரியில் நாம் ஒரு பாராட்டு விழா கூட்டத்தை நடத்தினோம். அந்த பாராட்டு விழா கூட்டத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பத்துக்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் பங்கு பெற்று, வாழ்த்துரை வழங்கினார்கள். அப்பொழுது எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர் டாக்டர் மீர் முஸ்தஃபா உசேன் அவர்கள். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்திற்கு பத்தாண்டுகளாக UGCயின் எந்தவிதமான நிதி உதவியும் இல்லாமல் இருப்பதைச் சொன்னார். அவற்றை நாம் UGC சேர்மன் தோரட் அவர்களிடம்  எடுத்துச் சொல்லி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு UGCயின் நிதி கிடைக்க ஏற்பாடு செய்தோம். அதன் பின்பே மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவின் நிதியும் தொடர்ந்து வந்து சேருகிறது.

பல்கலைக் கழக துணைவேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து பறிக்கும் திமுக அரசின் இந்த மோசமான உள்நோக்கத்தை அறிவார்ந்த தமிழ் சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது என்று நிச்சயமாக கருதுகிறேன். அரசியல் கூட்டணி என்பது தவிர்க்க இயலாதது தான். ஆனால், கூட்டணி என்பதற்காக எந்த தவறுகள் செய்தாலும்; முறைகேடுகள் செய்தாலும் அவற்றை நியாயப்படுத்துவது என்பது ’அரசியல் பிழைத்தோருக்கு அறமே கூற்றாகும்’ என்பதற்கு இணங்க திமுகவின் இதுபோன்ற தவறுகளைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு அது கேடாகவே முடியும்.

ஒரு காலத்தில் அனைவருக்கும் ஆரம்பக் கல்வியும், 14 வயது  வரை பள்ளிக் கல்வியும்  வழங்குவதுமே மத்திய, மாநில அரசுகளின் இலக்காக இருந்தது. அவை எல்லாம் மாறி இப்பொழுது உயர்கல்வி கொடுப்பது மட்டுமல்ல; வாழ்க்கைக்குத் தேவையான திறன்மிக்க கல்வியையும் சேர்த்து கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் வந்திருக்கிறது.

எனவே, பல்கலைக்கழகங்கள் நாணயமாக நடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் நேர்மையாகச் செயல்பட வேண்டுமென்றால் அதை நிர்வகிக்கக் கூடிய துணைவேந்தர்கள் நியமனங்கள் நேர்மையாக  நடைபெற வேண்டும். அவர்களுடைய நியமனங்கள் நேர்மையாக இருந்தால் மட்டுமே, அவர்கள் நேர்மையானவர்களாக இருப்பார்கள்.

எனவே, இதையெல்லாம் புரியாமல் மக்கள் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன ’மாநில சுயாட்சி’ என்ற பெயரில் துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர்களின் அதிகாரங்களைப் பறித்து பல்கலைக்கழகங்களை கழக குடும்பச் சொத்தாக மாற்ற எத்தனிப்பார்களேயானால் அதுவே திமுக அரசை தமிழக மக்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றி அவர்களை வீட்டுக்கு அனுப்பும் பணிகளுக்கான துவக்கமாக அமையலாம்.

ஸ்டாலின் அவர்களே.!

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர்களை அகற்றி விட்டு அவற்றை அபகரிக்க எண்ணாதீர்கள்.!

பல்கலைக் கழகங்களை குடும்பச் சொத்தாக்கி ஊழல் குப்பை மேடாக்காதீர்கள்.!

இலட்சோபலட்சம் ஏழை, எளிய, கிராமப்புற தமிழக மாணவர்களின் வாழ்க்கையைச் சீரழிக்காதீர்கள்.!

தவறான பாதையைத் தேர்ந்தெடுக்காதீர்கள்.! எச்சரிக்கை செய்கிறோம்.!

- டாக்டர் கிருஷ்ணசாமி. எம்.டி

   நிறுவனர் & தலைவர்,

   புதிய தமிழகம் கட்சி.

   10.01.2022


No comments: