1 மதுக்கடைக்கு அருகே புத்தகக் கடை வைத்திருக்கும் கடைக்காரர் முகத்தில் எல்ஈடி பல்பு வெளிச்சம் தெரிந்தது. காரணம் கேட்டேன். உள்ளே நின்று கொண்டே பாரில் குடிக்கின்றார்கள். கூட்டம் அதிகமாக வருகின்றது. எனக்கும் வியாபாரம் பரவாயில்லை என்றார்.
2, அழைக்க மறந்த நண்பர்களைத் திடீரென்று அழைத்துப் பேசலாம் என்று அழைக்கும் போது அவர்கள் தொடர்ந்து எடுக்காமலிருந்தால் மனதில் பயம் வருகின்றது. சென்னையில் உள்ள நண்பர் ஒருவர் குடும்பமே கொரானாவில் தாக்கி அப்பா இறந்த தகவல் ஒரு வாரம் கழித்துத் தான் தெரியவந்தது. வேறு யாருடனுமாவது தொடர்பு கொண்டு அவர்கள் குடும்பத்தில் அனைவரும் நலம் தானே? என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியதாக உள்ளது.
3. நேற்று தம்பி கணேஷ் உடன் பேசிக் கொண்டிருந்த போது மயிலாடுதுறை மாவட்டமாக மாற்றி உள்ளார்களே? என்ன மாற்றம் என்று கேட்டேன். சிரிக்காமல் சொன்னார். "ஓட்டு வீட்டில் ஏசி போட்டது போல உள்ளது".
4. புத்தகங்கள் படிக்க ஆசை போய் விட்டது. மகள்கள் தொடர்ந்து நான் வாசித்த ஒவ்வொரு புத்தகமாகப் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். மகள்கள் பார்க்கும் படங்கள் பார்க்கவும் விருப்பமில்லாமல் கிடைத்த ஓய்வு நேரத்தில் நான் சேர்த்து வைத்து முப்பது வருடச் சொத்தை பரணிலிருந்து எடுத்தேன். வீட்டில் திட்டு வாங்கப் பயந்து கொண்டு வெளியே போய் ஒவ்வொன்றாக அடுக்கி வைத்து தூசிகளைத் துடைத்து விட்டுப் படித்துக் கொண்டு வருகின்றேன். திமுக வை தொடங்கிய அண்ணா ராபின் சன் பூங்காவில் பேசிய பேச்சின் முழுமையும், எம்ஜிஆர் அதிமுக தொடங்கிய போது திருக்கழுக்குன்றத்தில் பேசிய பேச்சும் முழுமையாகக் கிடைத்தது. 30 வருடக் கட்டுரைகள், கத்தரித்த செய்திகள் என்று எல்லாமே சேர்ந்து தமிழக அரசியல் வரலாறு எழுத உதவியாக இருந்தது. 50 பக்கங்களுக்குள் முடித்து இலவசப் பதிப்பாகக் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். கால வெள்ளம் இழுத்துக் கொண்டே சென்று சுழலில் சிக்கியது போல உள்ளது. 1921 ல் தொடங்கி இப்போது எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்து நிற்கின்றது. பாரபட்சமின்றி அனைத்தையும் ஆவணப்படுத்தியுள்ளேன். அங்கங்கே வாசித்ததை ஒரே இடத்தில் ஒரே மூச்சில் அதுவும் தொடர்ச்சியாகச் சம்பவக் கோர்வையுடன் வாசித்துப் பாருங்கள். கால எந்திரத்தில் பயணித்தது போலவே இருக்கும். இது என் வாழ்வின் அடையாளமான படைப்பாக வரும்.
5. Long Walk என்றொரு சமாச்சாரத்தை மகள்களுக்கு அறிமுகம் செய்து வைத்து திருப்பூரின் ஒவ்வொரு பகுதியாக மாலை வேளையில் ஒரு மணி நேரம் நடக்க வைத்து உள்ளே கொண்டு வந்து சேர்க்கின்றேன்.
6. 7.மகள்கள் செயலிகள் மூலம் அவரவர் கணவர்களுடன் வாழ்க்கை நடத்தி ஆப்படிக்கப் போகின்றார்கள் என்று தான் சில மாதங்களுக்கு முன்பு வரைக்கும் நம்பிக் கொண்டிருந்தேன். கொரானா காலம் யூ டியூப் அவர்களுக்குள் என்ன மாற்றத்தை உருவாக்கியதோ நட்சத்திர அந்தஸ்து உள்ள கடைகளில் வழங்கும் தரமான ருசியான உணவு எங்களுக்கும் சமைக்கத் தெரியும். முடியும் என்று(ம்) நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
7. தன்னை அரசியலுக்குக் கொண்டு வந்தவர், தன்னை தொடக்கக் காலத்தில் முக்கிய நெருக்கடியிலிருந்து காப்பாற்றியவர், தன் சாதியைச் சேர்ந்தவர், அவருக்குக் கிடைக்க வேண்டிய முதல்வர் பதவியை நாம் பெற்றோம், கட்சியில் மூத்தவர் என்பது போன்ற பல காரணங்களால் செங்கோட்டையன் வசமிருக்கும் செயல்படாத கல்வித்துறையை எடப்பாடி விட்டு வைத்துள்ளாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. நம் அறிவுக்கு எட்டாத ஒன்றை அருகே இருப்பவர்கள் மூலம் கற்றுக் கொள்ள முடியும். ஆலோசனைகளையும் பெற முடியும். அடித்தட்டு மக்களின் குழந்தைகளின் இந்த வருடக் கல்வியென்பது கேள்விக்குறியாக உள்ளது. எல்லாவற்றையும் கொரானா மேல் பழியைப் போட்டு விட்டு கல்வித்துறை சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது.
இரண்டாவது டேர்ம் பீஸ் தனியார் பள்ளிக்கூடங்கள் வசூலித்துக் கொண்டிருக்கின்றார்கள். சிபிஎஸ்சி 30 சதவிகித பாடங்களை ஒரே அறிவிப்பில் ஆர்ப்பாட்டமில்லாமல் குறைத்து விட்டார்கள். ஆனால் தனியார்ப் பள்ளிகள் முதலில் அந்தப் பாடங்களைத்தான் நடத்தியிருப்பார்கள். தமிழகக் கல்வித்துறைக்கும் அப்படியொரு திட்டம் இருப்பதாகவே தெரிகின்றது. ஆனால் முதல் பருவத் தேர்வு புத்தகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வந்து சேர்ந்து விட்டது. அது இனிமேல் குப்பைக்குப் போய்விடும். அடுத்த குறைந்த பாடத்திட்டம் கொண்ட புத்தகங்கள் அடித்துக் கொண்டிருப்பதாகத் தகவல் வருகின்றது. ஒப்பந்தங்கள் கொடுக்க பக்கவாட்டில் காசு கொட்டிக் கொண்டேயிருக்கும்.
ஆசிரியர்கள் வீடு வீடாகக் கொண்டு போய் சேர்ப்பார்கள் என்று வேறு பீலா விட்டார் செங்கஸ். மற்ற துறைகளை விட அரசியலில் மட்டும் கடைசிக் காலத்தில் கூடப் பதவிக்காகச் சம்பாதிப்பதற்காகத் திருந்தவே வாய்ப்பில்லாமல் தன்னை தக்க வைக்க ஓடிக் கொண்டிருக்க வேண்டியதாக இருக்கும் போல. என்னவொன்று கடைசிக் காலத்தில் நொந்து வெந்து இந்த உயிர் எப்போது பிரியும் என்று காத்திருக்க வேண்டிய சூழலையும் காலம் உருவாக்கும். அப்படி உருவாக்கித்தான் நமக்கு முன்னால் இருந்தவர்கள் போய்ச் சேர்ந்துள்ளார்கள் என்பதனையாவது உணரக்கூட முடியாதா?
8. கடந்த ஒரு மாதமாக தமிழக மின்சார வாரியத்தை வசூலிக்கும் தொகை பார்த்து திட்டாதவர்களே இல்லை. ஆனால் 15 வார நீண்ட கொரானா ஊரடங்கில் மின்சார நிறுத்தமென்பது மிக மிக குறைவு. சில தினங்களுக்கு முன்பு மாதாந்திர நிறுத்தம் என்று 12 மணி நேரம் பகல்பொழுதில் மின்சாரம் இல்லை. சந்து முழுக்க தெருவிற்கு வந்து தூற்றிக் கொண்டிருக்கின்றார்கள். முக்கியப் பிரசச்னை செல்போனுக்கு சார்ஜ் போடமுடியவில்லை என்பதே.
3 comments:
நல்ல தொகுப்பு. பல விஷயங்களைச் சொல்லி இருக்கிறீர்கள். நன்று.
கல்வித்துறை - என்ன செய்யப் போகிறது என்பது புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது.
ஆறாவது(ம்) முக்கியமான விசயம்...
knowworldnow.com
Post a Comment