Sunday, January 12, 2020

ஸ்ரீ சரஸ்வதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி

ஊரில் நடந்த கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழாவிற்கென விழா மலர் ஒன்றைக் கொண்டு வந்தனர்.  அதற்காக நான் எழுதிக் கொடுத்த சிறப்புக் கட்டுரையிது.  விழா மலரில் வெளியாகியுள்ளது.

 யான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரத்
தான்பற்றத் தலைப்படுந் தானே.

திருமந்திரம் - 85

வாழும் வரைக்கும் காதலிக்க முடியும். உங்கள் மனம் விசாலமாக இருந்தால். வாழ்நாள் முழுக்க நினைத்துப் பார்க்க முடியும். நீங்கள் பிறந்த ஊர் உங்களுக்குப் பெரிய தாக்கத்தைக் கொடுத்து இருந்தால்.  நீங்கள் வணங்கிய தெய்வத்தை நாள்தோறும் எங்கிருந்தாலும் பூஜிக்க முடியும்.  

உங்கள் வாழ்நாளில் திருப்பு முனையை உருவாக்கியிருந்தால்.

உங்கள் ஊர் சிறிதாக, வளராத கிராமமாக இருக்கலாம். கால மாற்றத்திற்கேற்ப புதுப்பிக்காத வித்தியாச சூழலில் இருக்க வாய்ப்புண்டு.  ஆனால் ஊருக்குள் வந்து இறங்கியதும் உங்களுக்குள் ஒரு அதிர்வு உள்ளுற ஓடுமே? நீங்கள் ஓடித்திரிந்த தெருவும், படித்த பள்ளிக்கூடங்களும், பழகிய, பார்த்த மனிதர்களும் உங்கள் கண்களில் பட்டு பலவித நினைவுகளைக் கிளறுமே?  அதற்கு உங்களால் ஏதேனும் விலை வைக்க முடியுமா? நீங்கள் அமெரிக்காவில் ஐரோப்பாவில் வாழக்கூடியவராக இருக்கலாம்?  உச்சக்கட்ட தொழில் நுட்ப வசதிகளை அனுபவித்து வாழ்ந்து வரக்கூடியவராக இருந்தாலும் உங்களின் வேரின் ஆழமும், அதன் வீரியத்தின் தன்மையையும் உங்களின் சொந்த ஊர் தான் உணர்த்தும்.  உணர்த்தும் எண்ணங்களை உங்களால் மொழி பெயர்க்க முடியாது. அது நீங்கள் ஊரின் உள்ளே வந்து இறங்கும் போது உணரத் தான் முடியும்.


நான் உணர்ந்துள்ளேன். உணர்வதற்காகவே ஒவ்வொரு முறையும் வந்து கொண்டிருக்கின்றேன். புதுவயல் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தை நினைக்கும் போது மறைந்த என் அப்பாவின் நினைவு தான் எனக்கு வருகின்றது.  மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் நான்காவது இடத்தில் தான் விநாயகர் வருகின்றார்.  ஆனால் எனக்கு முதல் மூன்று இடங்களிலும் உள்ளவர்களின் வழியாகவே என் இஷ்ட தெய்வமான கணேசனைத் திருப்பூரிலிருந்து யோசித்துப் பார்க்கிறேன்.

புதுவயல் என்பது காரணப் பெயரின் அடிப்படையில் உருவானதா? வயலிலிருந்து வரும் குளுமை போன்று இங்கு வாழ்பவர்களுக்கு புதிய சிந்தனைகளை உருவாக்கக் காரணமாக இருக்குமா? என்று யோசித்ததுண்டு. பலவித நம்பிக்கையின் அடிப்படையில் தான் நான் பிறந்த புதுவயலை எப்போதும் உள்வாங்கியதுண்டு.

காவேரி பூம்பட்டணத்திலிருந்து காலமாற்றத்தில் நகர்ந்த வந்த நகரத்தார் சமூகம் செய்த முக்கியமான இரண்டு பணிகள். ஒன்று கல்விக்கூடங்களை உருவாக்கி அறிவை விசாலமாக்கியது. வளர்த்துக் கொண்ட  அறிவில் எந்த காலத்திலும் ஆணவம் தலைதூக்கக்கூடாது என்பதற்காக உருவாக்கப் பட்ட ஆலயங்கள்.

ஒன்று உடம்பு. மற்றொன்று உயிர். இரண்டையும் வாழ்ந்த, வாழும், வாழப் போகும் சமூகத்திற்குத் தந்தவர்கள் நகரத்தார் சமூகம். நான் கற்ற விலையில்லா கல்விக்கும், இன்று நான் வாழும் ஆரோக்கிய வாழ்க்கைக்கும் நகரத்தார் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அதிக கடமைப்பட்டுள்ளேன். எங்கள் குடும்பத்தின் சார்பாக எழுதித் தீர்க்க முடியாத நன்றிகளை இங்கே எழுதி வைத்திட விரும்புகிறேன்.

புதுவயலில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து, கற்ற கல்வியை மனதில் ஆழப் பதிந்து உச்சம் தொட்ட லட்சக்கணக்கானவர்களின் சார்பாக மலருக்கு எழுத வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.

என் அப்பா இராமநாதன் அவர்கள் காலையில் செய்யக்கூடிய முதல் பணி கற்பக விநாயகர் கோவிலுக்கு  வந்து வணங்கி விட்டு அதன் பிறகே கடை திறப்பார். விநாயகர் வினைகளை மட்டும் தீர்ப்பவர் அல்ல. நம்முடன் பழகும் நெருங்கிய தோழன் போன்றவர். விரும்பிய வகையில் கையாள முடியும். வணங்க, வாழ்த்த பெரிய அறிவு தேவையில்லை. அதிகமான சாஸ்திர சம்பிரதாயங்களும் அவசியமில்லை. விலையில்லாத பொருட்களைக் கொடுத்தால் போதும். அளவில்லாமல் அருளாசி வழங்கக்கூடியவர். இந்து மதம் காட்டும் கடவுள்களில் கருணை நிறைந்தவர். அலங்காரமின்றி, அகங்காரமின்றி வாழ்க்கைத் தத்துவத்தைப் போதிப்பவர்.

வணங்கும் முறையில், விநாயகர் காட்டும் வழிபாட்டு முறைகளில் எவ்வித ஆர்ப்பாட்டமும் இருக்காது. எளிமையான வாழ்க்கையே நம் வாழ்க்கையை உயர்த்தும் என்று கொள்கையால் உணர்த்தி வாழ்ந்து காட்டியவர் மகாத்மா காந்தியடிகள். ஆனால் மிக எளிமையான வழிபாட்டு முறைகளால் அனைவரும் தோழனாக, ஆசானாக இந்து மதத்தில் குறியீடாக இருப்பவர் நம் விநாயகர்.

பொறுமை, சகிப்புத்தன்மை, நிதானம் போன்ற வார்த்தைகள் இன்றைய நவீன காலகட்டத்தில் அனைவருக்கும் தேவையாய் உள்ளது. ஆனால் இதனை ஆண்டாண்டு காலம் உணர்த்திய ஒரே கடவுள் விநாயகர் என்றால் உங்களால் மறுக்க முடியுமா?

புதுவயல் கற்பக விநாயகர் ஆலயமும் அமைதியின் வடிவாய் இருப்பதை என் பள்ளிக் காலங்களில் கண்டுள்ளேன். கூட்டமும் ஆர்ப்பாட்டம் இன்றி முழு தரிசனத்தை எந்த சமயத்திலும் எளிதில் காணக்கூடியவரை  இன்று வரையிலும் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊரிலும் தினமும் நினைத்துப் பார்ப்பதுண்டு.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஊடகங்கள் அறிவுறுத்தாமல் இருந்த நடைப்பயிற்சி கோவிலுக்கு வரக்கூடிய என் அப்பாவைப் போன்றவர்கள் முடித்து இருப்பார்கள். அப்பா பட்டை போல அவர் நெற்றியில் வைத்த திருநீறு உணர்த்திய தூய்மை என்பது அவர் வாழ்ந்த வாழ்க்கையில் கடைப்பிடித்த வாழ்க்கை தத்துவத்தைக் கண்டுள்ளேன். அதனை எங்களுக்குக் கடத்திய விதத்தை அனுபவப்பூர்வமாக இன்று உணர்ந்துள்ளேன். என் மகள்களுக்கு நாங்கள் வழிகாட்டியாக இருக்கும் அளவிற்குக் கற்பக விநாயகர் எங்கள் மூன்று தலைமுறைக்கும் நிரந்தர முதல்வர். உடலும் மனமும் செம்மையான பிறகு மருத்துவம் எதற்கு?

மனமது செம்மையானால் மந்திரம் எதற்கு? என்ற தத்துவமும் வழிகாட்டக்கூடியதாக விநாயகர் இருந்தார். இருப்பார். ஆலயம் இருக்கும் இடத்தில் அமைதியிருக்கும். அமைதியிருக்கும் இடத்தில் ஆசைகள் குறைவாகவே இருக்கும் என்ற வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்திய கோவில் இது.

வாழ்க்கையின் கடைசி வரைக்கும் பக்தியின் அர்த்தமும் புரியாமல் மனம் அமைதி பெறும் வழியையும் அடையப்பெறாமல் வாழும் நாள் முழுக்க முனங்கிக் கொண்டே வாழ்ந்து முடிப்பதே நம்மவர்களின் கொள்கையாக உள்ளது.

"இப்படி இருப்பதற்கு நீ தான் காரணம்" இது பௌத்தம் சொல்லும் தத்துவம்.

"தன்னுடைய கர்மத்தைச் செய்து இறைவனை அடைவது கர்ம மார்க்கம்"

"அறிவைப் பயன்படுத்தி இறைவனை அடைவதற்குப் பெயர் ஞான மார்க்கம்"

ஆனால் இந்த மூன்றையும் விட எளிய பாமரத்தனமான பக்தி மார்க்கத்தையே தான் மத வேறுபாடுகள் இன்றி அனைவரும் விரும்புகின்றார்கள். ஆலயத்திற்குள் சென்று அனைத்தையும் கொட்டி விட்டு விட்டால் போதும் என்று நினைக்கின்றார்கள்.

இதைத்தான் "ஆத்ம திருப்தி" "பூரண மகிழ்ச்சி" என்கிறார்கள்.

கடமையும் பக்தியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.  இரண்டும் ஒன்றோடு ஒன்று சேரும் போது தான் உன்னதமான வாழ்க்கை நமக்கு அமைகின்றது. ஒன்று பிரிந்து ஒன்றை மட்டும் உணர்ந்தால் கூட உங்களைச் சமூகம் பார்க்கும் பார்வை வேறு விதமாகவே இருக்கும்.  அதற்குக் கடவுள் காரணமில்லை. உங்கள் உள்வாங்குதலில் உண்டான குறைபாடுகள் தான் காரணம் என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடமையென்பது நாம் வாழும் வரைக்கும் செய்தே ஆக வேண்டிய அடிப்படை மனிதப் பண்புகளில் ஒன்று. உறவினர்களுக்கு, உடன் பிறந்தவர்களுக்கு, நம்மை நம்பியிருப்பவர்களுக்கு, நாள் தோறும் சந்திப்பவர்கள் எதிர்பார்க்கும் நியாயமான காரணங்களுக்கு நாம் செய்தே ஆக வேண்டிய கடமைகள் இங்கு ஏராளம் உண்டு. புதுவயல் கற்பக விநாயகர் இதைத்தான் எனக்கு உணர்த்தியுள்ளார்.  இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

ஜோதிஜி திருப்பூர்
(அக்டோபர் 2019 அன்று எழுதியது)


ஸ்ரீ சரஸ்வதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவியர்களுக்கு விளையாட்டுப் போட்டி நடந்தது.  விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கு போட்டி ஒன்று நடத்தப்பட்டது.  இந்தப் போட்டியில் முதல் பரிசு பள்ளியின் தாளாளர் பழ. முத்தப்பன் அவர்கள் பெற்றார்.  இரண்டாவது பரிசினை சிலைகள் செதுக்கும் சிற்பி ஒருவர் பெற்றார்.  மூன்றாவது பரிசினை நான் பெற்றேன்.  நண்பர் எடுத்த காணொலிக் காட்சியிது.  

நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காக.பள்ளி விளையாட்டு விழா


29 comments:

 1. சிறப்புக் கட்டுரை மிகவும் சிறப்பு...

  ReplyDelete
 2. சிறப்பான கட்டுரை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  போட்டியில் பரிசு பெற்றதற்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகள் வெங்கட்.நன்றி.

   Delete
 3. மகிழ்ச்சி. வாழ்த்துகள்

  ReplyDelete
 4. அருமையான கட்டுரை. மகிழ்ச்சி. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. ***வாழும் வரைக்கும் காதலிக்க முடியும். உங்கள் மனம் விசாலமாக இருந்தால்.***

  பொதுவாக மனது சுருங்கிக்கொண்டேதான் போகுது. இதை சொல்றவருக்கும்தான்.

  ***வாழ்நாள் முழுக்க நினைத்துப் பார்க்க முடியும். நீங்கள் பிறந்த ஊர் உங்களுக்குப் பெரிய தாக்கத்தைக் கொடுத்து இருந்தால்.***

  உண்மைதான் தலித்தாக பிறந்து தன் குடும்பம்படும் அவஸ்தையை பார்த்து இருந்தால், பெரிய தாக்கத்தைத்தான் உருவாக்கி இருக்கும். ஊர் ப்க்கம் திரும்பிப் பார்க்கவே பிடிக்காது.

  மேட்டுக்குடிக் கெல்லாம் இதை புரிந்து கொள்ள ஞானமோ அறிவோ கிடையாது. ஏதாவது உளற வேண்டியது- இது போல்.


  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் தலித்தாக பிறந்து தன் குடும்பம்படும் அவஸ்தையை பார்த்து இருந்தால், பெரிய தாக்கத்தைத்தான் உருவாக்கி இருக்கும். ஊர் ப்க்கம் திரும்பிப் பார்க்கவே பிடிக்காது.

   இது முற்றிலும் உண்மை. இதனையும் இந்த முறை தான் முதலில் உணர்ந்து கொண்டேன். இது குறித்து ஒரு செல்பி சமூகத்தின் ஊர்க்கதைகள் என்ற மின்னூல் வழியாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.

   Delete
  2. பொதுவாக மனது சுருங்கிக்கொண்டேதான் போகுது. இதை சொல்றவருக்கும்தான்.

   எனக்கு சுருக்கமோ விரிவோ நான் அப்படியே என் முகத்தோடு முகவரியோ நான் தற்போது நம்பும் கொள்கைகளை அப்படியே வெளிப்படுத்து நேர்மை உள்ளதே? எதையும் எங்கேயும் மறைக்கவில்லையே? நான்மாறுவேன். என் கொள்கை இன்னமும் மாறும். அப்போதும் என் முகத்தோடு தான் வருவேன். கம்பீரம் தன்மானம் என்பது என்னோடு கூடப்பிறந்த பங்களாளிகள். எப்போது என்னோடு இருப்பார்கள். உயிர் உள்ள வரைக்கும்.

   Delete
  3. நான் உங்களை சொல்லலைங்க. நம்ம சொல்றது எல்லாமே எங்கோ யாரோ சொன்னதுதான். திரு மந்திரத்டிலேயோ அல்லது திருக்குறளீலோ ..அந்த ஒரிஜினல் சோர்ஸ் பத்திதான் விமர்சிச்சேன். நான், நீங்கள் என்கிற சிறிய வட்ட விமர்சனம் எல்லாம் அர்த்தமற்றது.

   நான் பார்த்தவரைக்கும் மனிதன் சிறுவனாக இருக்கும்போது திறந்த மனதாகவும் தாராளமாகவும்தான் இருக்கிறான். காதல், கல்யாணம், குழந்தை குட்டி என்று நாட்கள் கடக்கக் கடக்க, அவன் மனதில் சுயநலம் அதிகமாமி விசாளம் குறைந்துகொண்டேதான் போகிறது. இதுதான் நான பார்த்த, பார்க்கும் பார்க்கப் போகிற உலகம். இதுபோல் மாறுவதை உணர்ந்து அதை தவிர்க்கத்தான் புத்தர் போதி மரத்துக்கு ஓடிப்போயிட்டாரு.

   மனிதம் என்பததெல்லாம் வெட்டி பேச்சுங்க. வயதாக ஆக மனிதன் பண்படுறான்னு சொல்வீங்க. அதுக்கும் சுயநலம்தான் காரணம். தான் எதை எதை, யாரை யாரை எல்லாம் ஏலனமாக விமர்சிச்சானோ, வயதாகும்போது, காலம் கடக்கும்போது, தானும் தான் நகைத்த, கேலி செய்த ஆளாக ஆகிவிடுகிறான். அப்போத்தான் உணருகிறான் பிறரின் இயலாமையை கேலி செய்யக்கூடாதுனு (ஏன் இன்றல் இவன் நிலைமையே அப்படி ஆயிப் போயிடுது), உடனே, மனிதாபிமானம், மனிதம் எல்லாம் இவனிடம் தொத்திக் கொள்கிறது. அடிப்படையில் இவன் கற்றுக் கொண்டது தன்னைப் பற்றிதான். தன் சுயநலட்திகாகத்தான் தான் மனதை விசாளமாக்கிக்கிறான், "பெரிய மனித"னாக "பண்பட்டவனாக" ஆகிறான்.

   Delete
  4. மனிதர்கள் பலவிதம். நாம் தான் ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் புறக்கணித்து ஒதுங்கி விடுவதும்.

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. ***"தன்னுடைய கர்மத்தைச் செய்து இறைவனை அடைவது கர்ம மார்க்கம்"

  "அறிவைப் பயன்படுத்தி இறைவனை அடைவதற்குப் பெயர் ஞான மார்க்கம்"***

  இறைவன் என்பதே மனிதனின் கற்பனை. அவனை அடைய முயல்வதென்னபது சுத்தமான அபத்தம். பெளத்த மத்தில் இப்படி எல்லாம் அபத்தம் சொல்லி இருக்காங்களா என்ன?!!

  ReplyDelete
  Replies
  1. எண்ணங்கள் தான் கற்பனை. கற்பனை தான் எண்ணங்கள். எண்ணங்கள் மனித உளவியல். மனித உளவியல் தான் எண்ணங்களாக மாறுகின்றது. எண்ணம் போல வாழ்க்கை என்பது ஆன்மீகம். ஆழ்மன எண்ணங்களை மேம்படுத்துங்கள். அது உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்பது அறிவியல்.

   Delete
 8. ***வாழ்க்கையின் கடைசி வரைக்கும் பக்தியின் அர்த்தமும் புரியாமல் ***

  மனிதன் தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டுதான் வாழ்கிறான். தன் வசதிக்கேற்ப.."பக்தி" என்பது ஒரு மாதிரியாக மனிதன் தன்னைத் தானே "மடமை"யில் மூழ்கிக்கொள்வது. அதற்கு பெரிய அர்த்தம் எல்லாம் எதுவும் கெடையாது.


  ***மனம் அமைதி பெறும் வழியையும் அடையப்பெறாமல் வாழும் நாள் முழுக்க முனங்கிக் கொண்டே வாழ்ந்து முடிப்பதே நம்மவர்களின் கொள்கையாக உள்ளது****

  வாழ்றவரைக்கும் பக்திமானும் பகவனிடமும் பலரிடமும் முனங்கிக் கொண்டுதான் வாழ்கிறான். பக்தி is NOT an universal solution.

  ReplyDelete
  Replies
  1. பக்தியை வியாபாரமாக பார்ப்பவர்கள், பக்தியை சுய திருப்திக்கு பயன்படுத்துபவர்கள், பக்தியை பேஷனாக பயன்படுத்துவர்கள், பக்தியை சமூக அங்கீகாரத்திற்காக பயன்படுத்திக் கொள்பவர்கள், பக்தி என்பது வேறொன்றும் இல்லை. அது மனித உளவியல்சார்ந்தது என்பதனை உணர்ந்தவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. அது தான்உண்மை. அந்த உண்மையை நானும் உணர்ந்துள்ளேன். அனுபவம் தான் ஆசான்.

   Delete
  2. உங்களுக்கு பக்தி உதவுகிறதா? தப்பே இல்லை. பிரச்சினை எங்க வருகிறதென்றால், கடவுளை வணங்காதவன் "ஆடு மாடுக்கு சமம்"னு உளறுகிறான் பாருங்க சில அரைவேக்காடுகள். அவனை நாலு அறை அறையாமல் வேடிக்கை பார்க்கிறது போன்ற "பெரிய மனதுத் தன்மைதான்"
   நான் மேலே சொல்லியிருப்பது பதிவு உலகில் நடந்த ஒரு நிகழ்வு. இதுபோல் கீழ்த்தரமான சிந்தனைகள் வைத்துக் கொண்டு அலையும் பக்திமான்கள்தான் அடி முட்டாள்கள். சிந்திக்கவே பயப்படுகிறார்கள் பக்தர்கள். அதுதான் பிரச்சினை.

   Delete
  3. மிகத் தெளிவாக மெய்ப்பொருள் காண்பதறிவு என்கிற ரீதியில் வாழ்கின்றவர்கள் கோவில் தேவைப்படாது. இயல்பான எதார்த்தமான வாழ்க்கையை வாழ்ந்து மகிழ்ச்சியோடு தான் வாழ்கின்றார்கள். நம்மவர்கள் புனிதம் என்ற பெயரில் தங்களைத்தானே ஏமாற்றிக் கொண்டு வாழ்கின்றார்கள். ஆனால் மேற்கித்திய சமூகம் கடமை என்கிற ரீதியில் கடைசி வரைக்கும் வாழ்கின்றார்கள்.

   Delete
 9. எனக்குத் தெரிய ஒரு பக்திமான் இருந்தாரு. அவருக்கு டயபட்டிஸ் பிரச்சினை இருந்தது. என்ன செய்யணும்? கொஞ்சமா சாப்பிடனும். சாப்பிட்ட காலரிஸை எரிப்பதற்கு ஒழுங்கா எக்சர்சைஸ் பண்ணனும். இவர் என்ன பண்ணுவார்னா, கட்டுப்பாடு எதுவும் கெடையாது. ஆனால் பக்தி அதிகம், தினமும் ஒரு 4 மணி நேரம் பகவானுக்கு ஆராதனை, பாட்டுப் பாடி குளிர்ச்சிப் படுத்துவாரு. சரியா? பக்திக்கு மட்டும் எந்த கொறச்சலும் கெடையாது. சமீபத்தில் போய் சேர்ந்துட்டாரு - பகவானிடம்.

  எனக்குத் தெரி இன்னொருத்தரு இருக்காரு சைனீஸ், இவரை விட 10 வயது அதிகம். அவருக்கும் டயபட்டீஸ். பக்தியெல்லாம் கெடையாது. டெய்லி பைசக்கிள் ஓட்டுவாரு, நடப்பாரு, எக்சர்சைஸ் பண்ணுவாரு- தான் சாப்பிடுவதுக்கு அதிகமாகவே காலரிஸ் பர்ன் பண்ணுவாரு. தன் வாழ்க்கையை மாத்தி அமைத்து, சாப்பாடுவை குறைது எக்சர்சைஸை அதிகமாக்கி வாழ்கிறார்.

  பக்திமான்கள் என்ன சொல்லப்போறீங்க?

  பக்தர் நிம்மதியா பகவானிடம் போய் சேர்ந்துடாரு..(பக்தி முத்தியதால்)

  பிந்தைய இவர் பகவான் அருள் இல்லாததால் இந்த பாழாப்போன உலகத்தில் குப்பைகொட்டுகிறார் (பக்தினா என்னனு சகேட்கிறவர்)னு தானே? :)

  ReplyDelete
  Replies
  1. அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.

   Delete
 10. ஐயா வணக்கம்
  http://www.rlnarain.com/?m=1
  மேற்கண்ட ப்ளாக் தற்போது செயல் படுகிறதா செயல் பட்டால் எந்த முகவரியில் வருகிறது உங்கள் பின்னூட்டம் அதில் இருந்தது ஆகையால் உங்களுக்கு தெரியும் என நினைத்தேன்

  ReplyDelete
  Replies
  1. நரேன் இப்போது எதுவும் எழுதுவதில்லை. இணைய தளத்தில் இருந்து விலகி இருக்கின்றார்.

   Delete
 11. தகவல் அந்த தளத்தில் அருமை யாக இருந்தது

  ReplyDelete
 12. அதே கருத்தை கொண்டு வேறு யாராவது எழுதியதை எனக்கு தெரியப்படுத்தினால் மிகவும் சுவையாக இருக்கும் என நினைக்கிறேன்

  ReplyDelete
 13. எனக்கு மிகவும் பயனுள்ளதாக

  ReplyDelete
 14. தகவலுக்கு மிக்க நன்றி

  ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.