Monday, August 26, 2019

உதயநிதி ஸ்டாலின்



வாசித்த செய்தி:


திமுக இளைஞரணியின் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று முதல் கூட்டம் பெரும் பொருட் செலவில் 5 ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றிருக்கிறது.

ஏற்கனவே முரசொலி பவளவிழா மலரை ரூ.3000 விலை வைத்து வெளியிட்டவர் அதன் நிர்வாக இயக்குனர் உதயநிதி. அந்த பவளவிழா மலரை திமுகவினரில் 99.9 சதவிகிதத்தினர் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள். (அதே ஆண்டு பவளவிழா கொண்டாடிய தினத்தந்தி, பவளவிழா மலரை வெறும் ரூ.75க்கு வெளியிட்டு ஒரு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்பனையானது)

மிட்டா மிராசுதாரர்களின் கட்சியாக இருந்த நீதிக்கட்சி, ஒரு கட்டத்தில் வெகுமக்களால் புறக்கணிக்கப்பட்டு, தலைமையேற்க ஆளில்லாமல் தத்தளித்து, குத்துயிரும் கொலையுயிருமாக பெரியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பெரியாரும் அண்ணாவும், பஞ்சப்பறாரிகளைக் கொண்டு அந்தக் கட்சிக்கு புத்துயிர் கொடுத்தனர் என்பது வரலாறு.

ஆடம்பரத்தை குறைத்துக்கொண்டு , இளைஞரணியினருக்கு இந்த வரலாற்றை கற்றுக்கொடுக்க வேண்டியது இன்றைய காலத்தின் அவசியம் !!!

**************

எதைச் செய்தாலும் நம்மவர்களுக்குக் குறை காண்பதே அன்றாடக் கடமையாக ஆகி விட்டது குறித்து வருத்தமாக உள்ளது. குறிப்பாக உதயநிதி குறித்து தீவிர அபிமானிகள் கூட வருத்தப்படுகின்றார்கள்.

காசு விசயத்தில் குறியாக இருப்பதாகக் கவலை தெரிவித்து எழுதுகின்றார்கள்.

அவர் அடிப்படையில் ஒரு முதலாளி. "கஷ்டப்பட்டு முதலீடு போட்டு" ஸ்னோபவுலிங் தொடங்கினார். அது லாபமா? நட்டமா? அது நமக்குத் தேவையில்லை.

தொழில் முனைவோர். தன் காலில் நிற்க வேண்டும் என்ற உந்துதல் தான் இன்று அவரை திரைப்பட உலகில் உள்ள வினியோகஸ்தராக, தயாரிப்பாளராக, நடிகராக, இடையிடையே பெரிய நடிகர்களின் படங்களுக்கு நிதி கொடுத்து (வட்டிக்குத்தான்) உதவும் கண்ணியமிக்க மனிதராக சமூகத்தில் அடையாளம் காட்டியுள்ளது.

ஏற்கனவே முரசொலியில் சின்னக்குத்தூசி அய்யாவுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று நினைத்துச் சென்றவர்களுக்குக் கரியைப் பூசினார் என்று வேறு வருத்தப்பட்டார்கள். அதன் பிறகு முரசொலி மலர் விற்பனை, அதன் விலை குறித்து கவலையுடன் சொல்கின்றார்கள். கடைசியில் தற்போது ஐந்து நட்சத்திர விடுதியில் கூட்டத்தை நடத்துகின்றார் என்று புழுதிவாரி தூற்றுகின்றார்கள்.

தொழில் முனைவோர் என்பவர்களுக்கு, ஒரு தொழில் நிறுவனத்தை நடத்துபவருக்கும் முதன்மையான எண்ணம் என்னவாக இருக்கும்? லாபம். ஆமாம் ஊரில் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். எதைத் தொட்டால் லாபம் வரும்? எங்கிருந்து அந்த லாபம் வரும்? என்பதனை நன்றாக அனுபவம் வாயிலாக உணர்ந்தவர் உதயநிதி. அதற்குக் கட்சி தான் கிடைத்ததா? என்று பெரியாரில் இருந்து கருத்துரையாளர்கள் கவனமாகச் சொல்லிக் கவலைப்படுகின்றார்கள்.

வீரமணி குறித்தே பெரியார் கவலைப்படாமல் மேலே இருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்? அண்ணாவுக்கு இது குறித்தெல்லாம் அதிக அக்கறையிருக்காது. அவர் உடல் நலம் குன்றி அமெரிக்கா செல்லும் போதே அவருக்குப் புரிந்து விட்டது. எல்லாமே கை மீறி விட்டது என்பதனை வருத்தத்துடன் பதிவு செய்தது வரலாற்றுப் பக்கங்களில் உள்ளது.

ஆனால் உதயநிதி குறித்து கலைஞர் நிச்சயம் மகிழ்ச்சியடையத் தான் செய்வார்.

காரணம் கலைஞருக்கு மட்டும் தான் தெரியும். கொள்கை எல்லா இடங்களிலும் செல்லாது. ஆனால் காசு சகல இடங்களிலும் செல்லும் ஆயுதமென்பது.

உதயநிதியை வாழ்த்துவோம்.

காட்சியில் பார்க்க









11 comments:

KILLERGEE Devakottai said...

ஒன்றும் பயன் இல்லாத முரசொலி பவளவிழா மலர் ரூ.3000 விலை.

நான் முழுக்க, முழுக்க நகைச்சுவையை மட்டுமே எழுதி வைத்த நூலை 100 ரூபாய் கொடுத்து வாங்க ஆள் கிடைக்கவில்லை.

இது ஆதங்கமோ, பொறாமையோ அல்ல உள்ளத்தின் வேதனை.

Rathnavel Natarajan said...

அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

கட்டு... கட்டு... கட்டுக்கோப்பான குடும்பம்...!

ஸ்ரீராம். said...

வருங்கால முதல்வர் (வேட்பாளர்)

வெங்கட் நாகராஜ் said...

லாபம் தானே ஒரு முதலாளிக்கு முக்கியமான ஒன்ற்.

வருண் said...

தமிழ்மணம் என்ன ஆச்சு? உங்க விசாரனைக்கு எதுவும் பதில் வந்ததா, ஜோதிஜி?

ஜோதிஜி said...

நானும் அவர்களிடம் பேசிப் பார்த்து விட்டேன். இங்கு நண்பர்கள் கவனிக்க கண்காணிக்க ஆட்கள் இருக்கின்றார்கள் என்று சொல்லிப் பார்த்து விட்டேன். பேசி விட்டு சொல்கிறேன் என்று சொன்னார்கள். இன்னமும் பதில் அளிக்கவில்லை.

வருண் said...

நன்றி, ஜோதிஜி.

ஏன் இப்படி ஆகிவிட்டார்கள்னு தெரியவில்லை? ஹார்வார்ட் தமிழ் இருக்கைனு கோடிக்கணக்கில் கலக்ட் செய்றாங்க. இதுபோல் ஒரு சாதாரண தளத்தைக்கூட நடத்த முடியவில்லை இவர்களால்! :(

ஜோதிஜி said...

இங்கு நண்பர்களிடம் பேசி குழுவாக இலவசமாக அவர்கள் நடத்தியதைப் போல இதை முன்னெடுக்க தயாராக வைத்துள்ளேன். தகவலும் கொடுத்து விட்டேன். பதில் அளிக்காமல் இருக்கின்றார்கள். வருத்தமாக உள்ளது. தமிழ்மணம் என்பது அடையாறு ஆலமரம்.

வருண் said...

நான் பார்த்தவரைக்கும்தமிழ்மணம் நிர்வாகிகள் யார் சொல்றபடியும் கேட்க மாட்டார்கள். முன்னாளில் ஒரு நாலு பேர் இருப்பாங்க..சுடலைமாடன், தமிழ்சசி இப்படி பெரயரில். கால வெள்ளத்தில் இவங்கல்லாம் என்ன ஆனாங்களோ தெரியவில்லை.

வேற யாரையும் நடத்தவெல்லாம் விடமாட்டாங்க. பல குப்பைத் தளங்களையும் வடிகட்ட மாட்டாங்க. இப்படியே ஒருவழியா தமிழ்மணத்தை தலைமுழுகிட்டு போக வேண்டியதுதான். நாள் ஆக ஆகப் பழகிடும்னு நினைக்கிறேன். நடத்தினால் ஒழுங்கா நடத்தனும் இல்லைனா முட்டிட்டுப் போயிடனும். சமீபத்தில் நடதுதுவதுபோல் சும்மா குப்பைத் தளங்களை வளர்ப்பதுக்கு மூடிட்டுப் போனால் நிம்மதிதான்.

ஜோதிஜி said...

கவலை வேண்டாம். குழுவில் ஒருவரை தொடர்பு கொண்டு பேசியாகி விட்டது. பிரச்சனைகளை களைய நடவடிக்கை எடுத்தாகி விட்டது. நண்பர் இதற்காக களம் இறங்கி உள்ளார். அவர் சரியான நபரை தேர்ந்தெடுத்து முழுமையாக இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்ததும் உங்களுக்கு முழு விபரம் தருகிறேன்.