Tuesday, February 06, 2018

மனிதம் பேசும் மனிதர்இந்த வருடம் அழகிய மரம், பிரெஞ்ச் இந்தியா என்ற இரண்டு புத்தகங்கள் மட்டுமே வாசிக்க முடிந்தது. கடந்த 200 ஆண்டுகளில் நம் நாட்டில் கல்வி சார்ந்த நடைமுறைகள், வளர்ச்சிகள் எப்படி இருந்தது என்பதன் தேடுதலின் விளைவாக நண்பர் பரிந்துரைத்த புத்தகமிது.

ஆனால் கடந்த காலத் திராவிட வரலாற்றைத் தெரிந்து கொள்ள முயற்சித்து நேரம் கூடி வராத காரணத்தால் அதிக அளவு வாசிக்க முடியவில்லை. ஆனால் சுப.வீரபாண்டியன் ( Suba.Veerapandian ) காணொலி பேச்சுகளை அதிக நேரம் கேட்டேன்.

தினமும் இரவில் ஒரு மணி நேரம் என்று கணக்கு வைத்து அவரின் பல தலைப்புகளில் அடங்கிய பேச்சுகளைக் கேட்டேன். திமுக ஆதரவு ஏன்? என்பதற்கு ஒரு பேச்சில் பதில் அளித்துள்ளார்.

மற்றபடி பேராசியர், சிந்தனையாளர், நிதானமானவர் என்று பட்டியலிட்டுக் கொண்டே சென்று கொண்டேயிருக்கலாம். சில இருட்டுகள் அகன்றது. மனக் கதவு திறக்கக் காரணமாகவும் இருந்தது. ஒரு பேச்சில் அனுமன் ஜெயந்தி யை முன்னெடுக்கும் சன்டிவி குறித்துப் பேசினார். தமிழர்களின் வாழ்க்கையில் சன்டிவி முக்கியமானது. ஆனால் அவர்களின் கொள்கை எளிமையானது. கொள்கை தேவையில்லை. வியாபாரத்தில் லாபம் முக்கியம். தமிழர்களுக்கு எது தேவை? எப்போது தேவை? என்பதனை அவர்களின் ஒவ்வொரு வீட்டுக்குள் புகுந்து நாடிபிடித்துப் பார்க்காத குறையாக அவர்களின் தொழில் நிறுவன கொள்கைகளை எப்போதும் வியந்து பார்ப்பதுண்டு. இன்று தமிழர்கள் சன்டிவி யில் காலை நேரத்தில் வரும் ஜோதிட நிகழ்ச்சியைப் பார்க்காமல் தங்கள் வேலையைத் தொடங்குவதே இல்லை என்கிற நிலைக்கு பெரியார் கொள்கைகள் தமிழகத்தில் பரவியுள்ளது.

இதனை அப்படியே தற்போது இது திராவிடப் பூமி என்று சிலாகிப்பவர்களை, அவர்களின் எழுத்துக்களையும் மற்றொரு தட்டில் வைத்துப் பார்த்தால் தட்டுக் காலியாக இருப்பதை உணர முடியும். கொள்கை பின்னுக்குப் போய்விட்டது. கொள்ளை முன்னுக்கு வந்து விட்டது. நீர்த்துப் போன கொள்கைகளை இன்னமும் தொங்கிக் கொண்டிருப்பதை விமர்சித்தால் யாருக்கு முதலில் கோபம் வரும். அந்தக் கொள்கைகளை முன்னிறுத்தி தங்களை வளப்படுத்திக் கொண்டவர்கள், வளப்படுத்திக் கொள்பவர்களின் அருகே இருப்பவர்கள், நமக்கும் அந்த வாய்ப்பு வரும் என்று வரிசைப் பட்டியலில் காத்திருப்பவர்கள் அத்தனை பேர்களுக்கும் இவர் எதிரியாகத் தெரிகின்றார்.

இவரை மனநலம் குன்றியவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் சொல்கின்றார்கள். இந்த வருடம் புதிதாக இஸ்லாமிய பெயரையும் சூட்டியுள்ளனர்.

மிகப் பெரிய வாசக பரப்பைக் கொண்டிருப்பவர்களி்ல் இவரும் ஒருவர். இவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகின்றார் என்ற அந்தச் சின்னத் தகவலை படித்ததும் மனதில் இனம் புரியா சோகம். வெளியே வந்த போது மனம் முழுக்க மகிழ்ச்சியாக இருந்தது. அந்தச் சில நாட்களில் இவரைப் பற்றி எழுதிய மாற்றுக் கருத்துக்களை ஒவ்வொன்றாக உள்வாங்கிக் கொண்டேயிருந்த போது ஒற்றை வார்த்தையில் மகிழ்ச்சி என்று கொண்டாடினார்கள்.

கொள்கைவாதிகளின் மனநலத்தை அவரவர் வார்த்தைகளின் மூலம் என்னால் அளவிட முடிந்தது.

இவர் நோக்கம் வெறுமனே விருப்பக்குறியீடு என்பதனை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டிருந்தால் மற்ற சமூகச் செயல்பாடுகளில் கவனம் செலுத்தாமல் பிழைப்பு வாதியாக இருந்திருக்கக்கூடும்.

எல்லோருக்குமான பொறுப்பு, கடமைகள் அனைத்தும் உண்டு. உலகை நேசிக்கப் பணத்திற்கு அப்பாலும் ஒரு உலகம் உள்ளது என்பதனை தீர்மானமான கொள்கையாகக் கொண்டிருப்பவர்களைப் பெரும்பான்மையினர் பொறாமையின் வடிவமாகப் பார்ப்பார்கள். வெளியே பாராட்ட மனமில்லாது வன்மத்தைக் கொட்டுவார்கள். ஏனைய பிற பட்டங்களையும் சமயம் பார்த்துத் தந்து உதவுவார்கள்.

அனைத்தையும் கடந்து வந்து கொண்டேயிருக்கின்றார். ஒரு முறை சந்தித்துள்ளேன். சில முறை பேசியுள்ளேன். நெருக்கமாக உணர்ந்துள்ளேன். இவரின் செயல்பாடுகள் எனக்கு எப்போதும் ஆச்சரியம் அளிக்கும். பிடிவாதக் கொள்கைகளைக் கரைத்து விட்டு ஏன் சராசரி வாழ்க்கைக்கு இவர் திரும்பி விடக்கூடாது? என்ற எளிய நடுத்தர வாழ்க்கை ஆசை எனக்கும் உண்டு.

அந்த வாழ்க்கை வாழும் நாம் என்ன பெரிதான சாதனைகள் செய்ய முடிந்தது? என்ற கேள்வியும் உடனே வரும். நிச்சயம் இந்த வருடம் இவருக்கும் ஏராளமான கேள்விகளுக்குப் பதிலும், உண்மையான நட்புகளையும் அடையாளம் காட்டியிருக்கும்.

உறவுகளை, நட்புகளை மதிக்கும் இவர் சமரசமில்லா கொள்கைவாதியாக இருப்பது என்னளவில் பெரிய ஆச்சரியமே? பெருநகரம் இன்னமும் விழுங்காமல் கிராமத்து வாசி எண்ணங்களுடன் வாழும் இவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு என் வாழ்த்துகள்.

வரும் ஆண்டுப் பொருளாதார ரீதியாக உயர்ந்த நிலைக்கு, பாதுகாப்பு வட்டத்திற்குள் செல்ல வேண்டும் என்ற வாழ்த்துகளுடன்.

#2017 மனிதத்தை நேசிக்கத் தெரிந்தவர். கொள்கை என்ற பெயரில் உள்ள கொள்ளைவாதிகளை அடையாளம் காட்டியவர். Bala G

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்

Amudhavan said...

பிறரைப் பேசி, அல்லது பிறவற்றைப் பற்றி மட்டுமே பேசிவந்து கடைசியில் இரண்டொரு பாராக்களில் குறிப்பிட்ட நபரைப் பற்றிச் சொல்லி அமைவது என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் பிரபலமானவராக மட்டுமே அறியப்பட்ட திரு பாலாவின் அறியப்படாத விஷயங்கள் நிறைய இருக்கும்போது அதனைப் பற்றிச் சொல்லி அவரை மேலும் அறிந்தவராகத் தருவதற்கான முயற்சிகளை நீங்கள் செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. பாலாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.

Rathnavel Natarajan said...

அருமை. நன்றி.

ஜோதிஜி said...

அவரை ஒரு முறை சந்தித்துள்ளேன். அவர் குறித்த குடும்ப விபரங்கள் ஓரளவுக்குத் தெரியும். அவரின் தொழில் வாழ்க்கை பயணம் கொஞ்சம் தெரியும். வேறு எதுவும் தெரியாதே?