Friday, April 21, 2017

அரசியல் செய்து பழகு



டைபயில்வோம் தொடர் பதிவைக் கூடத் தொடர்ந்து எழுத முடியவில்லை. அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் பள்ளி விடுமுறையில் இருக்கும் மூன்று பெண்களின் உலகத்தைத் தாண்டி எழுத முடிவதில்லை. பகல் முழுக்கப் பஞ்சாயத்துச் செய்து ஓய்ந்து போன மனைவியின் நிலை பார்த்து நானும் சில மணி நேரம் நீதிபதியாக மாறியாக வேண்டிய தருணமாக உள்ளது. எனக்கான ஞாயிறு எனக்கானது இல்லை என்பதனை வீட்டின் மூத்தவர் உணர வைத்து விடுகின்றார். காரணம் அவர் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் கால்பந்து மைதானத்தில் கொண்டு போய் விட்டு வரும் காவல்காரனாக மாற வைத்துள்ளது. அப்புறம் எங்கே எழுதுவது? 

தமிழ்நாட்டு அரசியல் களம் மிக மிகச் சூடாக இருக்கிறது? நீங்கள் ஏன் எதுவும் எழுதாமல் இருக்கின்றீர்கள் என்று நண்பர் அழைத்து உரிமையுடன் கேட்ட போது பல விசயங்கள் நினைவில் வந்து போனது. பதிவில் எழுதமுடியவில்லையே தவிர முகநூலில் தோன்றும் போதெல்லாம் எழுதி வைத்து விடுகின்றேன். குறிப்பாகச் சமீபத்தில் பட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்து வழக்குரைஞர் திரு பாலு அவர்களின் முயற்சியால் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடிய விவகாரம் பற்றி எழுதிய ஆச்சரியப்படத்தக்க வகையில் பல ஆயிரம் பேர்களின் பார்வைக்குச் சென்றது. முகநூலில் எழுதிய பலவற்றை இங்கே எழுதிவைக்க வேண்டும். 

காரணம் எனக்குத் தெரிந்த பல பேர்கள் முக நூல் என்பதனை தேவையற்ற ஒன்றாக இன்னமும் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். நாம் ஒன்றை எப்படிப் பயன்படுத்த கற்றுக் கொள்கின்றோம் என்பதனைப் பொறுத்தே அதற்கு நாம் கட்டுப்பட்டு இருக்கின்றோமோ? அல்லது அதனை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றாமோ? என்பதனை புரிந்து கொள்ள முடியும். 

••••••••••


ர் விட்டு ஊர் வந்து கை நிறையச் சம்பாரிக்கும் லட்சக்கணக்கான திருப்பூரில் வாழ்ந்து கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு மறைந்த ஏ1 குற்றவாளி ஜெயலலிதா ஆணவத்தால், பிடிவாதத்தால் உருவான டாஸ்மாக் கலாச்சாரம் என்பது எந்த எழுத்தாலும் எழுத முடியாத துயரங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. இன்று பா.ம.க. வழக்குரைஞர் திரு பாலு அவர்களின் இடைவிடாத போராட்டத்தின் காரணமாகத் தமிழ்நாட்டில் உள்ள 3400 மதுக்கடைகள் மூடப்பட்டது என்ற செய்தியை நானும் படித்து விட்டு இயல்பாகக் கடந்து வந்து விட்டேன். 

ஆனால் கடந்த சில மணி நேரமாக நண்பர்கள் ஒவ்வொருவரும் அழைத்துப் பேசிய பின்பு நான் வசிக்கும் பகுதியில் மதுக்கடைகள் இருந்த பகுதிகளுக்கு நடைபயிற்சி போலப் பல இடங்களுக்குச் சென்று பார்த்து விட்டு இதனை எழுதியே ஆக வேண்டும் என்பதால் எழுதுகிறேன். 

இது குறித்த செய்திகளை நான் வாசித்த போது தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் உள்ள கடைகள் மட்டும் தான் மூடியிருக்கின்றார்கள் என்றே நினைத்தேன். ஆனால் மாநில சாலைகள் உள்ள (500 மீட்டர் அளவுக்குள் உள்ள ) கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்பதை நேரில் பார்த்த பின்பே உணர்ந்து கொண்டேன். 

நான் பணிபுரியும் நிறுவனத்தில் நேற்று மதியத்திற்கு மேல் பாதி டைலர்கள் வர வில்லை. சாப்பிடச் சென்றவர்கள் அப்படியே சென்று விட்டார்கள். முக்கிய வேலைகள் அனைத்தும் நின்று விட்டது. 

தொழிற்சாலைக்குள் டெக்னிஷியன் சம்மந்தப்பட்ட துறை சார்ந்த எவர் வந்தாலும் அதிகபட்சம் நான்கு வாரங்களுக்கு மேல் தாக்குப் பிடிப்பதில்லை. காரணம் அவர்கள் உடம்பு ஒத்துழைப்பதில்லை. எட்டு மணிக்கு ஷிப்ட் முடிகின்றது என்றால் அவர்கள் கைகள் ஆறு மணிக்கு மேல் நடுங்கத் தொடங்கி விடும். 

பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பு இழப்பு விவகாரத்திற்குப் பின்பு ஒவ்வொரு வாரச் சம்பளமும் வங்கி வழியே தான் பரிவர்த்தனை செய்ய வேண்டியதாக உள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு சனிக்கிழமை வங்கி விடுமுறை என்பதால் நிரந்தரமாக வெள்ளிக்கிழமையே அவரவர் கணக்குக்கு சம்பளம் சென்று விடும். பணம் வந்ததும் சனிக்கிழமை முன் அறிவிப்பு இன்றி காணாமல் போய்விடுவார்கள். வாங்கிய பணத்தை சனி, ஞாயிறு அத்துடன் திங்கள் கிழமை வரை அழித்து முடித்து விட்டு செவ்வாய் கிழமை தான் உள்ளே வருவார்கள். 

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இதனால் ஏற்படும் இழப்பு என்பது கணக்கில் அடங்கா. காரணம் இந்த மதுக்கடைகள். 

தொழிலாளர்கள், பணியாளர்கள் பாரபட்சமின்றிக் காலையில் வேலைக்கு உள்ளே வந்ததும் அருகில் நின்று பேசும் நிலை உருவானால் தொடர்ந்து பேச முடியாத அளவுக்கு முதல் நாள் அருந்திய மது வாடை கெட்ட நாற்றமாக நம் குடலை புரட்டச் செய்யும். 

ஆனால் இதனை, இந்தச் சூழ்நிலையை இனி மாற்றவே முடியாது என்று தான் நம்பிக்கொண்டிருந்தேன். காரணம் மது லாபி என்பதும், இதன் மூலம் வருவாய் பார்த்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் எவரும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் பா.ம.க பாலு அவர்கள் எப்படிச் சட்டப் போராட்டத்தின் மூலம் சாதித்தார்? என்பது ஆச்சரியமாகவே உள்ளது. இதனை நீடிக்க லாபி அரசியல் விடுமா? என்ற சந்தேகம் உருவாகிக் கொண்டேயிருக்கின்றது. 

திருப்பூரில் 100 கடைகளுக்கு மேல் 31ந் தேதி இரவோடு மூடியிருக்கின்றார்கள். அவினாசி ஊர் எல்லை தொடங்கும் பகுதி முதல் பல்லடம் ஊர் வரைக்கும் ஏறக்குறைய 20 முதல் 30 பேருந்து நிறுத்தம் உண்டு. இந்த 20 கிலோமீட்டர் பகுதியில் உள்ள அத்தனை கடைகளும் தூக்கப்பட்டு உள்ளது. நான் பார்த்த நாலைந்து இடங்களில் சாவுகளைப் போல ஆரவாரம் அனைத்தும் அடியோடு இல்லாமலே போய்விட்டது. நான் அங்குள்ள சிலரிடம் விசாரித்த போது பம்மிக் கொண்டு பதில் அளித்தார்கள். வேறு எங்கேயாவது வைத்து விற்கின்றார்களா? என்று பார்த்தேன். கப் சிப். இடையிடையே யார் யாரோ? வந்து விசாரித்துக் கொண்டேயிருக்கின்றார்கள். 

ஒவ்வொரு குடிமகன்களும் பைத்தியம் பிடித்து வண்டியில் அலைந்து கொண்டேயிருக்கின்றார்கள். சிலர் பேருந்து வழியே விசாரித்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள். 

பா.ம.க கட்சி மகத்தான சாதனை செய்துள்ளது. எங்கே அடித்தால் என்பதனை உணர்ந்து அங்கே அடிக்க வேண்டும் என்பதனை மிகச் சரியாகச் செய்துள்ளார்கள். உணர்ச்சியைத் தூண்டி அரசியல் செய்பவர்கள் இனியாவது மூளையைப் பயன்படுத்தி அரசியல் செய்தால் வருங்காலத் தமிழகம் பிழைக்கும். 

#வாழ்த்துக்கள் வழக்குரைஞர் பாலு


•••••••••••••••

னக்குத் தட்டெழுத்துப் பயிலகத்தில் ஆசிரியையாக இருந்தவரை ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்களின் மணி விழாவில் ஏறக்குறைய 25 வருடத்திற்குப் பிறகு திடீரெனச் சந்தித்தேன். இருவருக்கும் அதே ஆச்சரியம் ப்ளஸ் பரவசம். காரணம் திருக் கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்களின் வீட்டுக்கருகே அவரின் வீடும் உள்ளது என்பதனை அன்று தான் கேட்டுத் தெரிந்து கொண்டேன். பலமுறை ஞானாலயா சென்ற போதும் எப்படி இவர்களை இத்தனை நாளும் கண்டு கொள்ளாமல் இருந்தேன் என்று ஆச்சரியமாக இருந்தது. 

இப்போது விசயம் இதுவல்ல. 

ஆசிரியையின் கணவர் புதுக்கோட்டையில் சுற்றியுள்ள அத்தனை கிராமங்களிலும் கிராம நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருமணத்தின் போது அவரைச் சந்தித்தது. மீண்டும் அன்று தான் மீண்டும் சந்தித்தேன். அன்று தான் அறிமுகம் செய்து கொண்டு ஏறக்குறைய இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தேன். 

இந்த உரையாடல் நடந்து இரண்டு வருடங்களுக்கு மேலிருக்கும். அன்றைய அவரின் முழு உரையாடலும் இன்றைய ஹாட் டாப்பிக்கில் இருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் லீலைகளைப் பற்றியது. 

காரணம் விஜயபாஸ்கர் மருத்துவக்கல்லூரியில் நுழைவதற்கு முன்பு முதல் அவரின் ஒவ்வொரு நிகழ்வையும் அருகே இருந்து அவர் ஊருக்கருகே, இருந்து பார்த்தவர். குடும்பம், பின்னணி போன்ற அனைத்தும் தெளிவாகத் தெரிந்தவர். இன்று பத்திரிக்கையில் வந்து கொண்டிருப்பது நூறில் ஒரு மடங்கு மட்டுமே. அன்று அவர் சொன்னதை எழுத வேண்டுமென்றால் பத்து அத்தியாயங்கள் எழுதினாலும் போதாது. 

சுற்றியுள்ள கிராமங்கள் வளைக்கப்பட்ட விதம் முதல் திமுக ஆட்சியில் கூட விஜயபாஸ்கர் நடத்தி வரும் கிரஷர் முதல் பல தொழில்களின் எவரெல்லாம் பங்குதாரராக இருந்தார்கள் போன்ற அனைத்தும் புள்ளி விபரங்களோடு சொன்ன போது எனக்கு அதிக ஆச்சரியம் அளிக்கவில்லை. 

இவர் கிராம நிர்வாக அதிகாரியாக இருந்த காரணத்தால் ஒவ்வொரு நிகழ்வும் இவர் பார்வைக்கு வந்தே போகும் என்பதால் இவர் நேர்மையை அவர்களால் கடைசி வரைக்கும் விலை பேச முடியவில்லை. 

ஆனால் அமைச்சர் மற்றும் குடும்பம் மொத்த புதுக்கோட்டை சார்ந்த அத்தனை அரசுத் துறை சங்கங்களையும் விலைபேசி வைத்திருந்த காரணத்தால் இவரை எவருமே கண்டு கொள்ளவும் இல்லை. இவரும் கடைசி வரைக்கும் சகாயம் போலவே வாழ்ந்து முடித்து விட்டு வெளியே வந்து விட்டார். 

ஆனால் இவை அனைத்தும் புதுக்கோட்டைப் பகுதியைச் சார்ந்த அத்தனை திமுகப் பிரமுகர்களுக்கும் தெரிந்தாலும் எவரும் வாய் திறக்க மாட்டார்கள். காரணம் உனக்கு நான். எனக்கு நீ என்ற கூட்டணி தத்துவம் தமிழக அரசியலில் என்றுமே மாறாது. நாமும் இரண்டு வாரங்களுக்குக் காசு கொடுத்துக் கவர் ஸ்டோரி வாங்கிப் படித்து விட்டு அடுத்த அமைச்சரின் ஊழல் பற்றிப் படிக்கத் தயாராக இருப்போம். 

வாழ்க ஜனநாயகம்.

April 12 2017 

•••••••••••••

திமுக என்ற கட்சியின் வீழ்ச்சியும், அந்தக் கட்சியில் இருந்த கொள்ளைக்கூட்ட நபர்கள் நாள் தோறும் செய்து கொண்டிருக்கும் வேலைகளைப் பற்றி நானும் சராசரி வாக்காளன் என்ற முறையில் பார்த்துக் கொண்டே வருகின்றேன். 

தொலைக்காட்சியில் அதிமுகச் சார்பாகப் பேசுபவர்கள் ஏ1 குற்றவாளியை ஆதரிப்பதில் நியாயமுண்டு. காரணம் திருடனுக்குத் திருடன் உறுதுணையாய் இருக்க முடியும். இதைப் போலப் பத்திரிக்கைகள் இன்று வரையிலும்  நடந்சத தவறுகள் அனைத்துக்கும் காரணம் சசிகலா தான் என்று அவர் மேல் காட்டக்கூடிய வன்மம் கலந்த வெறுப்புணர்பில் கூட ஒரு தர்மம் உள்ளது. காரணம் பணத்திற்காக மலத்தை எடுத்து உண் என்று சொன்னாலும் செய்யக்கூடியவர்கள் பத்திரிக்கை நடத்தும் போது அது தான் சரி என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது. 

ஆனால் நான் சமீபத்தில் திருப்பூரைச் சுற்றிலும் உள்ள கிராமங்களின் உள்பகுதியில் சென்று வந்த போது மக்களின் மனதில் ஜெ. குறித்த வெறுப்புணர்வைப் பார்க்க முடியவில்லை. இன்னமும் அவர்கள் மனதில் உள்ள திமுகக் குறித்த கசப்புணர்வு மாறவில்லை. தமிழ்நாட்டில் இன்னமும் பல கட்சிகள் உள்ளது என்பதனைக் கூட உணரத் தயாராக இல்லை. இவர்களுக்கு நல்லவர்களை விடத் திருடர்கள் தான் ஆளச் சரியான நபர்கள் என்பதனை மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டேன். 

•••••••••••••••••••••

றைந்த முன்னாள் பாரதப் பிரதமர் நரசிம்மராவ் முதல் மன்மோகன்சிங் வரைக்கும் இடையில் இந்தியா பல பிரதமர்களைக் கண்டது. சந்து கேப்பில் தேவகௌடா கூடப் பிரதமராக இருந்தார். இவர்கள் அத்தனை பேர்களுக்கும் ஒரே ஒற்றுமை உண்டென்றால் எவருமே களத்தில் இறங்கிப் பணியாற்றக்கூடியவர்கள் அல்ல. மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களாக இருந்தார்கள். எல்லோருமே காகிதப் புலிகள். ஆனால் தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி அடித்தளம் வரைக்கும் இறங்கி ஆடி அடிப்பவராக இருக்கின்றார். அமைதிப்படை அம்மாவாசைப் போலவே செயல்படுகின்றார். அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்ற, அதனைத் தொடர்ந்து தக்கவைக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற கொள்கைக்குச் சொந்தக்காராக இருக்கின்றார். 

அதன்படியே தொடர்ந்து வெற்றிக் கோடுகளைத் தாண்டி வந்து கொண்டேயிருக்கின்றார். 

தேசிய அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் சர்வதேச அரசியலின் பாலபாடங்கள் தெரிந்து இருக்க வேண்டும். மாநில அரசியலில் ஜொலிக்க வேண்டுமென்றால் தேசிய அரசியலைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்டு கொண்டே வரவேண்டும். இன்றைய சூழ்நிலையில் ஒரு நாட்டின் அதிபர், பிரதமர், எவராக இருந்தாலும் சர்வதேச அழுத்தங்களை மீறி அவர்களால் தொடர்ந்து பதவியில் தொடர்ந்து இருக்க முடியாது. இதைப் போலவே இந்தியாவில் ஒரு மாநிலத்தின் முதல்வர் மத்திய அரசாங்கத்தைப் பகைத்துக் கொண்டு நீண்ட நாட்கள் காலம் தள்ள முடியாது. மக்கள் செல்வாக்கு மிக்க எம்.ஜி.ஆராக இருக்கட்டும், கலைஞர் என்று இரு ஆளுமைகளும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வளைந்து நெளிந்து தான் வாழ்ந்தார்கள். 

உள்ளுரில் மக்களிடம் பேச வேண்டிய மொழி வேறு. மத்திய அரசாங்க அதிகாரத்திடம் பேச வேண்டிய மொழி வேறு. தனக்கு அந்தத் திறமை இல்லாத போது அதற்குண்டான நபர்கள் மூலம் தங்கள் அதிகாரத்தைத் தொடர்ந்து வைத்துக் கொள்ளும் கலையை இருவரும் கற்று வைத்திருந்தனர். ஆனால் தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் காட்சிகள் மொத்தத்திலும் வினோதமானது. அதிலும் சசிகலா தோற்றுப் போனது முதல் டிடிவி தினகரன் நான் ஒதுங்கிக் கொள்கிறேன் என்பது வரைக்கும் உள்ளே என்ன நடக்கின்றது? எதனையும் பொதுமக்கள் எவரும் அறிந்திருக்க நியாயமில்லை. 

இவர்களைப் பொறுத்தவரையிலும் எப்போதும் போல "டில்லிக்காரன் ஆப்பு மேல ஆப்பு சொறுகுகிறான்ப்பா" என்ற ஒற்றை வார்த்தையில் கடந்து சென்று விடுகின்றார்கள். சமயம் வரும் போது இதனைப் பற்றி விரிவாக எழுதுகின்றேன். 

சசிகலா குறித்து நிலைத்தகவலில் (பிப்ரவரி 12, 15) எழுதிய இரண்டு விசயங்கள் இப்போது பொருத்தமாக இருப்பதால் அதனை மட்டும் இங்கே மீண்டும் எழுதி வைக்கின்றேன். 

•••••••• 

திரைக்குப் பின்னால் செயல்படுவர்கள், செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்குப் பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற எதுவும் தேவையிருக்காது. நினைத்த காரியம் நினைத்தவாறு முடியவேண்டும் என்ற நோக்கம் மட்டுமே பிரதானமாக இருக்கும். 

ஆனால் அதிகாரவட்டத்திற்குள் உள்ளே நுழையும் போது ஆயிரம் தடைகள், அதிகாரத்தடைகள், கடைபிடித்தே ஆக வேண்டிய ஒழுங்கு முறைகள் இருந்தே ஆகும். ஜெ. வுக்குக் கடைசிவரைக்கும் அதைக் கற்றுக் கொள்ள எண்ணமும் இல்லை. அதை எந்த ஊடகமும் பெரிதுபடுத்திக் கொள்ளவும் இல்லை. ஆனால் சசிகலா கற்றுக் கொள்கிறாரோ இல்லையோ? அவர் பின்னால் இருந்து இயக்கும் எவருக்கும் இது குறித்த அடிப்படை அறிவு இருப்பதாகத் தெரியவில்லை. அடியாள் வேலை மட்டும் பார்த்துப் பழகியவர்களுக்கு அது மட்டும் தான் சரியாக இருக்கும் என்பது வரலாறு சொல்லும் பாடம். 

•••••••••

இனியாவது சசிகலாவிற்குப் பின்னால் உள்ள உறவுகள் அரசியல் பால படங்களைக் கற்றுக் கொள்ளப் பழக வேண்டும். "புத்தி மட்டுமே செயல்படும் இடம்" என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும். ஊடகங்களைக்கூட எளிதில் மிரட்டிப் பணிய வைக்கக்கூட முடியும். ஆனால் உள்ளங்களை வாங்குவது அத்தனை எளிதல்ல என்பதனை உணர வேண்டும். இல்லாவிட்டால் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களும் கைவிட்டுப் போய்விடும் வாய்ப்புள்ளது. 

ஆத்திரம் அறிவுக்குச் சத்ரூ.


தொடர்புடைய பதிவுகள்



7 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா

RAVINDRAN MARIAPPAN said...

ஊடகங்களைக்கூட எளிதில் மிரட்டிப் பணிய வைக்கக்கூட முடியும். ஆனால் உள்ளங்களை வாங்குவது அத்தனை எளிதல்ல என்பதனை உணர வேண்டும். இல்லாவிட்டால் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களும் கைவிட்டுப் போய்விடும் வாய்ப்புள்ளது.

ஆத்திரம் அறிவுக்குச் சத்ரூ.
Arumai.Arumai. Nanbare. Kudos.

ராஜி said...

உள்ளங்களைலாம் வாங்கல. அப்பிடி ஒரு மாயையை உருவாக்கி வெச்சிருந்தாங்க. உண்மையான தொண்டர்களை சம்பாதிரிச்சு வச்சிருந்தா அப்பல்லோவில் இருக்கும்போதும், செத்தப்பிறகும் மர்மத்தை தேடி கண்டிப்பிடிக்க போராடி இருப்பாக. இதுலாம் பணத்தை கொண்டும், மீடியாவை கொண்டும் உருவாக்கிய கூட்டம்.

ராஜி said...

டாஸ்மாக் மூடுனது ரொம்ப நல்ல விசயம்தான். ஆனா, எங்க ஊரு பக்கம் எந்த கடையும் மூடினதா தெரில

Rathnavel Natarajan said...

அரசியல் செய்து பழகு - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி திருப்பூர்

Thulasidharan V Thillaiakathu said...

டாஸ்மாட் மூடுறாங்களா? இங்கு எங்கள் ஏரியா பக்கம் மூடினதாகத் தெரியவில்லையே!!

கீதா

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

புத்திசாலித் தனமான முயற்சி மேற்கொண்ட பாலு அவர்களுக்கு வாழ்த்துகள்