Wednesday, January 28, 2015

குறிப்புகளின் குறிப்புகள்


ஒருபுறம் பலகோடி ரூபாய்கள் புரளும் போட்டியும் சவாலும் நிறைந்த துறையில் மிக முக்கியப் பதவி, மறுபுறம் குடும்பத்தோடு போதிய நேரம் அளிக்கும் பொறுப்பான குடும்பத்தலைவன். மீதி இருக்கும் நேரத்தில் கடினமான பல விசயங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் ஒரு தீவிரமான பதிவர். இப்படிப் பல அவதாரம் எடுக்கும் நண்பர் ஜோதிஜியின் அடுத்த படைப்பு "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" என்ற மின்னூல்.

ஜோதிஜி பொழுதுபோக்காக எழுதுவது இல்லை, அப்படிப் படிப்பவர்களுக்காக அவர் எழுதுவதும் இல்லை. அவர் எழுதுவது எல்லாம் மிகுந்த ஆராய்ச்சியும், கடுமையான உழைப்பையும் கேட்கின்ற களங்கள்.

அவருக்கு மிகவும் பழக்கப்பட்ட களம்தான் - திருப்பூரும், ஆயத்த ஆடைகள் சார்ந்த உலகமும். டாலர் நகரத்தின் தொடர்ச்சி என்றே இந்த நூலை எடுத்துக் கொள்ளலாம். குடிசைத் தொழில் போல ஆரம்பித்து, இன்று பல்லாயிரம் கோடி புழங்கும் அளவிற்கு வளந்த தொழில், அதோடு வளர்ந்த நகரம், பணப் பரிமாற்றம் நடக்கும் போது மாறும் மனித மனம், அதில் நடக்கும் நாடகங்கள் என்ற பலவிதப் பரிணாமங்களைக் காட்டிச் செல்கிறார் ஜோதிஜி.

அளவுக்கு மீறிய பணம் புழங்கும்போது, ஏற்படும் கலாசார அதிர்வுகள், வாழ்க்கைமுறையின் மாற்றங்கள், அதனால் ஏற்படும் உறவுச் சிக்கல்கள் இவை எல்லா இடத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான பாதிப்பு. வளரும் பருவத்தில் சரியான முறையில் வளர்க்கப்படுபவர்கள் இந்தச் சிக்கல்களை எளிதாக எதிர்கொண்டு வென்று விடுகின்றனர். ஆனால் பலர் இந்தச் சூழலில் சிக்கி வரைமுறை இல்லாது மாட்டி சீரழிந்து சின்னாப்பின்னம் ஆகிவிடுகின்றனர்.

எத்தனை எத்தனை மனிதர்கள், அதில் அவர்கள் காட்டும் முகங்கள் - எல்லாப் பெருமையையும் தனக்கென ஆக்கி, எல்லாத் தோல்விக்கும் அடுத்தவர்களைப் பலிஆடாக்கும் மனிதர்கள், கிடைக்கும் இடத்தில எல்லாம் வழிமுறை பற்றிய சிந்தனையே இல்லாது பணத்தை மட்டுமே துரத்தும் ஆட்கள், எப்போதோ அடைந்த வெற்றியின் வரலாற்றில் வாழும் மனிதர்கள் - அநேகமாக நாம் தினம் தினம் காணும் மனிதர்கள் தான். இவர்களை ஆவணப் படுத்தும் முயற்சியில் வெற்றி அடைந்து இருக்கிறார் நூலாசிரியர்.

நான் அறிந்து தொழில் சாம்ராஜ்யங்களின் வரலாறு எழுதப்பட்டு இருக்கிறது. வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் வரலாறும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு தொழில்நகரின் வரலாறு என்று பார்த்தால் அநேகமாக அதன் முதல் பெயராக ஜோதிஜியின் பெயர்தான் இருக்கும் போல.

வாழ்த்துகள் ஜோதிஜி

ramachandranwrites (பிகேஆர்)

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

குறிப்பு சிறிது என்றாலும் சிறப்பு...

UmayalGayathri said...

குறிப்பு நன்று

'பரிவை' சே.குமார் said...

தங்கல் கட்டுரை பற்றி சிறப்பான பகிர்வு..
வாழ்த்துகள் எழுதியவரும் தங்களுக்கும் அண்ணா.