Sunday, August 17, 2014

தொட்டுப் பார்த்து விடவும்

மரங்கள் அமைதியாக இருந்தாலும் காற்று விடுவதில்லை. இலைகள் அசைந்தபடியே தான் இருக்கும். இதுவே தான் எழுதிக் கொண்டிருப்பவர்களும் நடக்கும் போல. கடந்த மாதத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளை இங்கே அதன் சுருக்கத்தையும், வெளியான தளத்தையும் இங்கே தந்து விடுகின்றேன். வேலைப்பளூ, கடினமான பணிச்சூழல் என்று எத்தனை காரணங்கள் சொன்னாலும் எழுதிய பின்பு கிடைக்கும் அங்கீகாரம் நம் சோர்வை துரத்தி விடுகின்றது.  

அப்படித்தான் எழுத்துலகம் இன்று வரையிலும் என்னை இயக்கிக் கொண்டிருக்கின்றது.  வாசிக்க விரும்புவர்கள் இணைப்பை தொட்டு பார்த்து விடவும்.

வலைத்தமிழில் தற்பொழுது  நான் தொடராக எழுதிக் கொண்டிருக்கும் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.............."


1. பஞ்சபாண்டவர்கள் 

“சார்… உங்களைப் பஞ்சபாண்டவர்கள் அழைக்கின்றார்கள்” 

என் அறையின் கண்ணாடிக் கதவை பாதித் திறந்தபடி உள்ளே நுழையாமல் தலையை மட்டும் நீட்டியபடி என் உதவியாளர் பெண் குறும்பாகச் சிரித்துக் கொண்டே ஆங்கிலத்தில் சொன்னபோது அந்த வாரத்தில் முடிக்க வேண்டிய கோப்புகளோடு போராடிக் கொண்டிருந்தேன். 

இருபது வயதுக்குரிய இளமையும், அழகும் உள்ள இளைஞிக்கு இயல்பாகவே குறும்புத்தனம் அதிகம். அவரின் இயல்பான கலாய்த்தல் என்பதாக எடுத்துக் கொண்டு அடுத்து முடிக்க வேண்டிய கோப்புகளை எடுக்கத் துவங்கினேன். 
“சார்… உண்மையிலேயே உங்களை அழைக்கின்றார்கள். இப்பொழுது தான் மேலேயிருந்து தகவல் வந்தது” என்றார். 

வாரத்தின் துவக்க நாளில் இதென்ன கொடுமை? என்று மனதில் நினைத்துக் கொண்டே புருவத்தைத் தூக்கி “ஏதும் பிரச்சனையா?” என்று சைகையால் கேட்டேன். அவரும் அதே புருவ மொழியில் “தெரியலையே?“ என்று சொல்லிவிட்டு “இன்றைக்கு மாட்டிக் கொண்டீர்களா?” என்று ஒரு விதமாகச் சுழித்துச் சிரித்தபடியே வேறுபக்கம் நகர்ந்தார். 

“பஞ்சபாண்டவர்கள்” என்றால் நான் பணிபுரிந்த நிறுவனத்தில் பலருக்கும் பேதி வரவழைக்கும் சமாச்சாரம்.   தொடர்ந்து வாசிக்க


2. என் கேள்விக்கு என்ன பதில்?

"அத்துவானக்காடு. ஆள்நடமாட்டம் கூட அதிகமாக இருக்காது. அந்த நிறுவனத்தைச் சுற்றிலும் உள்ள இடங்களை நாம் பார்க்கும் போது சுடுகாடு போலவே தெரியும். அந்தப் பகுதியில் அந்த நிறுவனத்தின் கட்டிடம் மட்டும் தனியாகத் தெரியும். ஊருக்குள் இருந்த கட்டிடத்தில் இருந்து மாறி இரண்டு வருடத்திற்கு முன் தான் அங்கே மாறியிருக்கின்றார்கள். ஒரு இறக்குமதியாளர் (BUYER) எதிர்பார்க்கும் அத்தனை வசதிகளும் உள்ளே உள்ளது. அந்த நிறுவனத்தின் பக்கத்தில் வீடுகள் கூட எதுவும் கிடையாது. இப்போது தான் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கின்றது. தூரத்தில் சாலையில் இருந்து நாம் பார்த்தால் அந்த நிறுவனத்தின் மேலே உள்ள வடிவம் மட்டும் தெரியும். அந்த கூரை வடிவம் பச்சை நிறத்தில் இருக்கும். காரணம் இயற்கைக்கு தொந்தரவு இல்லாத அமைப்பில் உருவாக்க வேண்டும் என்ற நிலையில் அந்த நிறுவனத்தை அமைத்துள்ளனர்"

என் நண்பர் எனக்கு முதல்முறையாக பஞ்சபாண்டவர்கள் குறித்து அறிமுகம் செய்து வைத்த போது அந்த நிறுவனத்தைப் பற்றி அடையாளம் என்று இப்படித்தான் சொன்னார். அப்பொழுது திருப்பூருக்குள் இப்படிப்பட்ட நிறுவனமும் உள்ளதா? என்ற ஆச்சரியம் என் மனதில் உருவானது. 



3. பணமே பயம் போக்கும் மருந்து

"நீங்கள் தொழிலாளர்கள் நலன் குறித்துச் சிந்திப்பது இருக்கட்டும். முதலில் உங்கள் நிறுவனத்தின் தற்போதைய நிதி சார்ந்த செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கின்றதா?"

நான் இப்படியொரு கேள்வியைக் கேட்பேன் என்று அந்த அறையில் இருந்த பாஞ்ச் கூட்டம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வேலை தேடி வந்தவன் வேலை கொடுப்பவர்களிடமே தைரியமாகவே கேட்டு விட்ட போதிலும் எனக்குள் சின்னக் குறுகுறுப்பு இருக்கத்தான் செய்தது.

அதையும் மீறியும் கேட்கக் காரணம் ஒரு நிறுவனத்தின் நிர்வாக முறைகள் பாராட்டத்தக்கதாக இருக்கலாம். ஆனால் ஆதாரம் என்பது பணம் மட்டுமே. காசு தான் கடவுள். பணம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் வல்லமை கொண்டது. வாரச்சம்பளம், மாதச்சம்பளம், துணை மற்றும் சார்பு நிறுவனங்களுக்கு அந்தந்த சமயத்தில் கொடுக்க வேண்டியது என ஒவ்வொன்றும் சரியாக இல்லாவிட்டால் இரத்தம் இல்லாத உடம்பு போலக் களையிழந்து ஜீவனற்று இருக்கும். 

கோமா நிலையில் இருப்பவரை வைத்து என்ன செய்ய முடியும்? பலருக்கும் சுமையாகத்தான் தெரியும்.


16 comments:

”தளிர் சுரேஷ்” said...

பகிர்வுக்கு நன்றி சார்! சென்று படிக்கிறேன்!

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. நன்றி.

Rathnavel Natarajan said...

இந்த பதிவில் 3 கட்டுரைகள் இருக்கின்றன. தொழில் பற்றி அக்கறை இருப்பவர்கள், நேரம் இருப்பவர்கள் - ஒவ்வொன்றாக திறந்து ஆழ்ந்து படித்து, கற்றுக் கொள்ள வேண்டுகிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி & வாழ்த்துகள் திரு ஜோதிஜி.

'பரிவை' சே.குமார் said...

அண்ணா... ஒவ்வொன்றாய் வாசிக்கிறேன் அண்ணா...

மகிழ்நிறை said...

இது நல்ல முயற்சி அண்ணா! இப்போ முதல் கட்டுரை படிச்சுட்டேன் ! இனி தொடர்ந்து கருத்து தெரிவிக்கிறேன்! எப்படித்தான் டைம் மானேஜ் பண்ணுறீங்களோ?!!

கரந்தை ஜெயக்குமார் said...

பதிவிற்கு நன்றி ஐயா
ஒவ்வொரு கட்டுரையாகச் சென்று படிக்கின்றேன்
நன்றி

nerkuppai thumbi said...

மிக நல்ல விதமாகச் எளிமையாகவும் படிக்க வேண்டும் என்ற ஆவலை தணியாமலும் சொல்லுகிறீர்கள்.


********************* இது பதிப்புக்கு அல்ல: மின்கடிதம் தனியாக அனுப்ப வேண்டிய விஷயம். இதைப் பிரசுரிப்பதற்காக எழுதவில்லை.


உங்களிடம் நீண்ட காலமாக கேட்டுக்கொள்ளவேண்டும் என்று ஆவல் : தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும் இல்லை என்றால் புது தொழிலகள் தொடங்க இயலாது என்று பெரிய தொழில் நிறுவனர்கள் சொல்கிறார்கள். இதற்கு முந்தைய அரசு ஒன்றும் சொல்லவில்லை; செய்யவில்லை. இந்த அரசோ மாற்றங்கள் வேண்டும், கொண்டு வருவோம்; ராஜஸ்தானில் அம்மையார் துவங்கி விட்டார்; அதே போல் நாடு முழுவதற்குமான மாற்றங்கள் வரும் என்று சொல்லப் படுகிறது. கம்யூனிஸ்டு கட்சிகளோ (தொழிலாளர் நலம் பற்றி பேச மொத்தக் குத்தகை எடுத்தவர்கள்) இது முதலாளிகளுக்கு அடிபிடிப்பது; தொழிலாளர் நலம் காற்றில் விடப்படும்; ஒப்பந்த ஊதியம் என்று ஒன்று இருக்கவே கூடாது. என்றெல்லாம் கூறுகின்றனர். தாங்கள் அடிமட்டத்திலிருந்து (shop floor -மேலாண்மையிலிருந்து நிர்வாகத் தட்டுக்கு மேலேறியவர் என்று நினைக்கிறேன். ( அடியேன் தொழிற் சங்ககளின் அணுகுமுறையை ஒரு தொழிலில் (வங்கித் துறை) பார்த்தவன். அது உண்மையான தொழிற்சாலைகளில் சங்கங்களின் செயல் முறையை காட்டும் சாம்பிள் அல்ல. ). வினவு போன்ற தளங்கள் படிப்பவன். பின்னோட்டங்களும் போட்டிருக்கிறேன். ஆனால் நடு நிலைமையுடன் கருத்து சொல்ல உங்களால் தான் முடியும் ).

தாங்கள் தொழிலாளர் சட்டங்களைப் பற்றிய ஒரு பொது நோக்கு பதிவு ஒன்று இட வேண்டும் என்று தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன். ************************

Thulasidharan V Thillaiakathu said...

மூன்று பாகங்களையும் வாசித்தோம். அருமையான எழுத்து நடை. அருமையான விவரணமும். தங்கள் உறுதியும், தன்னம்பிக்கையும் தான் உங்களை வழிநடத்திச் செல்கின்றது. ஆளுமைத் திறனும் பளிச்,தொடர்கின்றோம். வாழ்த்துக்கள்!

கிரி said...

ஜோதிஜி இன்று தான் ஐந்து பாகங்களையும் படித்தேன். மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள். ஐந்து பாகங்களையும் தொடர்ச்சியாக சலிப்பில்லாமல் படிக்க முடிந்தது. இதில் நீங்கள் சேர்த்து இருந்த சூழ்நிலை விவர முறையும் ரசிக்கும்படி இருந்தது. நிச்சயம் உங்களின் எழுத்தில் முன்னேற்றம் பல மடங்கு கூடியுள்ளதை உணர முடிகிறது.

இதில் நீங்கள் தவிர்க்க வேண்டியது.

கூறிக்கொண்டு இருக்கும் செய்தியில் இருந்து வேறு ஒரு பிரிவிற்கு செல்வதை உணர முடிகிறது. இதை நாங்கள் உணர முடியாத படி இயல்பாக கொண்டு செல்லுங்கள்.

உங்களின் திறமை உங்களை முன்னிறுத்துவதை பற்றிக் கூறுவதை குறைத்துக் கொண்டால் இந்தக் கட்டுரை இன்னும் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் இது தொழிற்சாலையின் குறிப்பு என்பதில் இருந்து உங்களின் வாழ்க்கை குறிப்பு என்பதாக மாறி விடக் கூடாது. உங்களின் அனுபவம் தான் என்றாலும் நம்மை பின்னுறுத்தி அனுபவங்களை முன்னிறுத்தினால் படிப்பவர்கள் இன்னும் கூடுதலாக ரசிப்பார்கள்.

ஜோதிஜி said...

நன்றி கிரி. கதைகள் என்றால் நீங்க சொல்வது சரி தான். அனுபவங்கள் சார்ந்த விசயங்கள் வழியே ஒரு துறையைப் பற்றிச் சொல்லும் போது நம்மைத்தான் வேறு வழியே இல்லாமல் முன்னிலைபடுத்தியாக வேண்டியுள்ளது.

இது பலசமயம் படிப்பவர்களுக்கு சற்று உறுத்தலாகத்தான் தெரியும். முடிந்தவரைக்கும் முயற்சிக்கின்றேன். உள்ளார்ந்த விமர்சனத்திற்கு நன்றி.

ஜோதிஜி said...

தங்கள் உறுதியும், தன்னம்பிக்கையும் தான் உங்களை வழிநடத்திச் செல்கின்றது.

இது தான் இன்று வரையிலும் இந்த ஊரில் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது.

ஜோதிஜி said...

நான் ஏற்கனவே நினைத்து வைத்தது தான். நிச்சயம் எழுதுகின்றேன். மிக்க நன்றி.

ஜோதிஜி said...

ஆப்பு எடுத்து தானாக சொருகிக் கொண்ட பிறகு வேறென்ன செய்வது? நீங்க சொல்வது உண்மை தான். திண்டாடி தடுமாறிக் கொண்டிருக்கின்றேன்.

ஜோதிஜி said...

நன்றி குமார்

ஜோதிஜி said...

நன்றி அய்யா

ஜோதிஜி said...

வருகைக்கு நன்றி சுரேஷ்