Sunday, March 03, 2013

கடுகு சிறிது. காரம் அதிகம்

பிரபல பதிவர்களைப் படிக்கும் பிற பல  பதிவர்களில் நானும் ஒருவன். திடங்கொண்டு போராடு  என்னும் தலைப்பில் எழுதி வருகிறேன். 

தேம்பி அழும் குழந்தை நொண்டி - நீ  
திடங்கொண்டு போராடு பாப்பா  

என்று பாரதி சொன்ன வரிகளை தலைப்பாக மாற்றிக் கொண்டேன்.

பெரிதினும் பெரிது கேள், 

ரௌத்திரம் பழகு 

போன்ற பாரதியின் தலைப்பை மற்ற நண்பர்கள் எடுத்துக் கொண்டதால் நான் திடங்கொண்டு போராடுகிறேன்.

திடங்கொண்டு போராடு சீனு (டாலர் நகரம் புத்தக விமர்சனம்)

முன்குறிப்பு

டாலர் நகரம் புத்தகத்தில் இடம் பெற்ற ஜோதிஜியின் எழுத்துக்கள் நீல நிறத்தில் 

டாலர் நகரம். இருநூறுக்கும் அதிகமான பக்கங்களை உடைய சற்றே பெரிய புத்தகம். முதலில் புத்தகத்தைப் பார்த்த பொழுது சற்றே மலைப்பாய் இருந்தது. 

பொழுது போக்கிற்காகப் படிக்கும் புத்தகங்களுக்கும்,'குறிப்பிட்ட ஒரு விசயத்தைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்' என்பதற்காகப் படிக்கும் புத்தகங்களுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.

ஜோதிஜி எழுதி இருக்கும் டாலர் நகரம் இரண்டாவது ரகம்.

உண்மையை சொல்லவேண்டும் என்றால் முதலில் படிக்கும் பொழுது ஒரு சில இடங்களில் சலிப்பு தட்டியது என்னவோ உண்மை, 

ஆனால் புத்தகத்தை மீண்டும் ஒருமுறை புரட்டும் பொழுது தான் அதில் ஜோதிஜியின் உழைப்பு மிக தெளிவாக தெரிந்தது. 

திருப்பூர், திருப்பூர் சார்ந்த தொழிற்சாலைகள், அதிகார வர்க்கத்திற்கும், அரசியல் வர்க்கத்திற்கும் இடையில் பலிகடாவாகும் திருப்பூர் சார்ந்த மக்கள் என்று அனைத்து தளங்களிலும் இந்தப் புத்தகம் பயணிக்கிறது. 
  
கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஒரு சாதாரண மனிதனாக திருப்பூருக்குள் நுழைந்தவர், தன் அசாதாரணமான உழைப்பின் மூலம் திருப்பூர் உற்பத்தி உலகத்தின் மிக முக்கியமான சக்தியாக உருவெடுத்துள்ளார். அவர் கடந்து வந்த பாதைகளின் மூலம் டாலர் நகரத்தை முழுமையாக சுற்றிக் காட்ட முயன்றுள்ளார்.

"சுற்றிக் காட்ட முயன்றுள்ளார்" என்று நான் கூற காரணம் வீடு சுரேஷ் அவர்களின் விமர்சனம் தான், 

ஒருவேளை அவரது விமர்சனத்தை படிக்காமல் டாலர் நகருக்குள் நுழைந்திருந்தால் "சுற்றிக் காட்ட முயன்றுள்ளார்" என்பதற்குப் பதிலாக சுற்றிக் காட்டியுள்ளார் என்று தான் எழுதியிருந்திருப்பேன். 

ஜோதிஜியின் ஆரம்பகட்ட வாழ்க்கை தோல்விகளை மட்டுமே அடித்தளமாகக் கொண்டு ஆரம்பித்ததால், புத்தகம் முழுவதுமே சில தன்னம்பிக்கை வார்த்தைகளை ஆங்காங்கே பதிவு செய்துள்ளார்.  

என்னுடைய திட்டமிடுதலும், விருப்பங்களும் நிறைவேறாத ஆசையாகவும், கனவாகவும் தான் தொடர்ந்தது. ஆனால் விடா முயற்சிகளை மட்டும் நான் பத்திரப்படுத்தி வந்தேன். 

திருப்பூர் பற்றி நான் அறிந்தது, கொடிகாத்த குமரன், உள்ளாடைகள் உற்பத்தியாகும் இடம், சாயக் கழிவால் நொய்யலாறை முடமாக்கி விவசாயிகளை நடக்க விடாமல் செய்த மற்றும் செய்து கொண்டிருக்கும் இடம், தமிழகத்தின் முக்கியமான ஏற்றுமதி நகரம் மற்றும் தொழிற்களம் தளத்தின் இயங்குதளம். 

ஓட்டுமொத்த தமிழகமும் தற்போது இந்தியாவும் திருப்பூரை தேடி வருவதற்கான முக்கியமான காரணம்,"முக்கால்வாசிப் பேர்கள் தங்களுடைய குடும்பக் கடன் தொல்லைகள் பொறுக்க முடியாமற் தான் திருப்பூருக்கு வருகிறார்கள்." என்று ஜோதிஜி குறிப்பிடுவது நானும் நேரிடையாக அறிந்து கொண்ட உண்மை., 

குடும்ப சூழலும், திருப்பூர் வேலை வாய்ப்புகளும் ஒரு குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் வேலை கொடுத்து விடுவதால் திருப்பூர் முழுவதும் ஒரு அசாதரணமான சூழல் நிலவுவதை இந்தப் புத்தகம் தெளிவாகக் காட்டுகிறது.

உழைப்பிற்குப் பெயர் போன திருப்பூரின் மற்றொரு முகம் சோகமும் கொடூரமும் சமவிகிதத்தில் கலக்கப்பட்ட, விடைதெரியா வாழ்வாதாரக் கேள்விகளை சுமந்து கொண்டு நிற்கும் நகரமாக இருக்கிறது.     

பெண்களும் குழந்தைகளும் வேலைக்குச் செல்வதால் குடும்பத் தலைவனின் குடும்ப பாரம் சற்றே குறைகிறது, ஆனால் அவனோ புகை மது மாது என்று தடம் மாற அவன் மனைவியின் தலையில் மொத்த பாரமும் விழுகிறது. 

காலை எட்டு மணி வேலைக்குச் செல்வதற்கு முன், குடும்பத்திற்கு, குழந்தைகளுக்கு தேவையான முன்னேற்பாடுகளை அதிகாலையிலேயே எழுந்து செய்தாக வேண்டும். மூன்றுவேளைக்குமான உணவு, குழந்தைகள் பள்ளி செல்வதற்கான ஏற்பாடுகள் அத்தனையையும் செய்திருக்க வேண்டும். இவற்றைக் கடந்து வேலைக்கு சென்றால் அங்கே ஆண்வர்க்கம் தரும் காம தொல்லைகள். தேவைபட்டால் பின்னிரவு வரையிலும் வேலை பார்க்க வேண்டிய சூழலில் சிக்கித் தவிக்கும் பெண்கள். பின்னிரவு கடந்து வீடு வந்தாலும், அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து அதே போன்ற மற்றுமொரு நாளில் சிக்கித் தவிக்க வேண்டிய சூழல் தான் திருப்பூர் வாழ் பெண்களுக்கு.

அப்பா அம்மா இருவரும் வேலைக்கு செல்வதால், அரவனைக்கப்பட வேண்டிய குழந்தைகள் தறிகெட்டுசெல்ல நேர்கிறது, பின் அவர்களும் வேலைக்கு செல்ல, கிடைக்கும் வருமானத்தை என்ன செய்வதென்று தெரியாமல் தவறான வழிகளில் செலவிடுகிறார்கள். 

திருப்பூரில் வேலைக்கு செல்லும் பெண்களின் நிலைமை நினைத்துப் பார்க்கவே கஷ்டமாய் இருக்கிறது. 

ஜோதிஜியின் எழுத்துக்களில் திருப்பூர் பெண்கள்,

சில சமயம் வேலை முடித்து ஒன்பது மணிக்கு உள்ளே நுழையும் அம்மாவின் குரலை, பாதி தூக்கத்தில் காதுகள் கேட்கும்.. குழந்தைகளின் மூளை உணராது. 12 மணி நேரமும் நின்று கொண்டே பார்த்த வேலையின் காரணமாக வீட்டுக்கு திரும்பி வரும்பொழுது பாதி உயிருடன் தான் வந்து சேர முடியும். 

வீட்டுக்குள் நுழையும் போது மூலைக்கொன்றாய் புரண்டு கிடக்கும் குழந்தைகளின் பாசத்தை விட, அவளின் உயிர் கேட்கும் பசியே, பிரதானமாய் இருக்கும். குழந்தைகள் கொட்டி கவிழ்த்து இருந்தால் கூட திட்ட முடியாமல், இருப்பதை உண்டு ஓரமாய் சுருள வேண்டும். காலையில் எழும் போது, காதுக்குள் கேட்கும் இரைச்சல் காணமல் போய் இருக்கும்.                

வாரத்தில் எந்த நாளில், பொதுக் குழாயில் குடிதண்ணீர் வருமென்று இங்குள்ள மாநகர மேயருக்கும் தெரியாத ரகசியமாய் இருக்கிறது. உடைபட்ட குழாய்கள் தாண்டி, ஒழுகிய தண்ணீர் போக, வரக்கூடிய தண்ணீர் வாராவாரம் என்பது மாறி சிலசமயம் மாதம் கூட ஆகலாம். 

அதனால் என்ன?

நாலு சந்து தாண்டி போனால், நடு சாமத்தில் அமைதியாய் பிடித்து வர, வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு தெம்பு இருக்கிறது. இவர்களிடம் ஓட்டு வாங்கி அடுத்த முறையும் ஆட்சியைப் பிடித்து விடலாமென்று ஊரெங்கும் கழுதை கூட திங்க முடியாத பிளக்ஸ் போர்ட் கட்ட அரசியல்வாதிகளிடம் பணமும் இருக்கிறது. 

காமப் பார்வைக்கு பலியாகும் பெண்களின் நிலை குறித்து 

எவருக்கும், எந்த குற்ற உணர்வும் தோன்றாத அளவிற்கு, சராசரி சிந்தனைகளுடன் கலந்துவிட்டது. தற்போது பாலுணர்வு என்பது பண்டமாற்று மிறை போல் ஆகிவிட்டது. 

பணிபுரியும் படித்த பெண்கள், தாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இது போன்ற நரக வேதனையை தாண்டி தான் வர வேண்டும். பலர் தாண்டி வருகிறார்கள். சிலர் ஆசைகளுக்காக தங்களை மாற்றிக் கொண்டு விடுகிறார்கள். பெண்களை தங்கள் இச்சைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும் சில முதலாளி அம்மாக்களும் இதில் அடக்கம்

முறையான நிர்வாகமின்மை, தரகர்கர்கள் தரும் தொல்லை, குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க ஏற்படும் இடையூறுகள், குடும்ப உறுப்பினர்களின் நிர்வாக தலையீடல், தொழிலாளர்களுக்குள் நடைபெறும் உள் அரசியல் என்று தொழிற்சாலைகளுக்குள்ளும் அசாதாரணமான சூழலே நிலவுகிறது.   

பல லட்சங்கள் முதலீடு மற்றும் பல தொழிலாளர்களை நிர்வாகம் செய்து தொழிற்சாலை நடத்தும் நிர்வாகம் கூட மூளையையும், ஆங்கில அறிவையும் மட்டுமே மூலதனமாக கொண்டு செயல்படும் தரகர்கள் முன் அடிபணிந்து போக வேண்டிய ஒரு வித்தியாசமான சூழல் நிலவுகிறது. அத்தகைய தரகர்கள் பற்றி ஜோதிஜி குறிபிடுவது 

அவருக்கு மெசர்மென்ட் டேப் பிடித்து ஆடைகளை அளக்கத் தெரியாது. துணிகளுக்கு இடையேயான வித்தியாசம் தெரியாது. மொத்தத்தில் இந்தத் தொழில் குறித்து எந்த அறிவும் இல்லை. கற்று வைத்துள்ள ஆங்கில அறிவின் மூலம் இரண்டு மாதத்தில் நான்கு லட்ச ருபாய் கிடைத்து இருக்கிறது. நான் இந்தத் தொகையை சம்பாதிக்க வேண்டுமென்றால் குறைந்தது இரண்டு வருடங்களாவது உழைக்க வேண்டும். இது தான் இந்த தொழிலின் சாபக் கேடு. 

தொழிற்சாலைகளுக்கு தேவையான பல லட்சம் லிட்டர் தண்ணீர் பூமியில் இருந்து உறிஞ்சப்படுகிறது, நிலத்தடி நீர் வற்ற வற்ற ஆழ்துளைக் குழாய்கள் இன்னும் இன்னும் ஆழமாய் சென்று கொண்டுள்ளன. விவசாயம் படுத்துவிட்டது, விவசாயத்திற்கு தேவையான குடிநீர் முற்றிலும் சாய நீராக மாற்றப்பட்டு விவசாய பூமி முழுமையான சாய பூமியாக மாற்றப்பட்டுவிட்டது.

சாயப்பட்டறைகளை மூடும்படி விவசாயிகள் போராடுகிறார்கள், சாயநீர் சுத்திகரிகபட்டு மீண்டும் உபயோகப்படுத்தும் படியாக மாற்றப்படுகிறது என்று நிர்வாகம் உறுதி கூறினாலும் அவர்கள் எப்படியெல்லாம் அரசாங்கத்தை ஏமாற்றுகிறார்கள் அல்லது வளைத்துப் போட்டுள்ளார்கள் என்பதை தெளிவாக எழுதியுள்ளார்.   

தொழிற்சாலை கழிவுகள் மொத்தமாக திருப்பூரை பாழ் செய்துவிட்டது. அதுபற்றி 

பல நாட்கள் கழித்து மழை பெய்ய, மழை நீருடன் சாயக் கழிவு நீரும் ஒன்றாக சேர்ந்து விட, நீரனைத்தும் பாழாகிப் விடுகிறது. ஒரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் 20 அடி உயரும் சாயக் கழிவு கலந்த நீரால், யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.

மத்திய அரசாங்கத்தின் பொறுப்பில்லாத வர்த்தக மற்றும் ஏற்றுமதிக் கொள்கைகள் திருப்பூரை நலிவடைய செய்து கொண்டே உள்ளது என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளார். உலக சந்தையில் போட்டி நாடுகள் நம்மை போட்டி போட்டு முந்திக் கொண்டிருக்கும் வேளையில் சிங் அரசு இன்னும் சைலண்ட் மோடிலேயே இருப்பது வருங்கால திருப்பூருக்கும் இந்தியாவிற்கும் ஆபத்து, தனது மொத்த கோபத்தையும் ஒற்றை வரியில் வெளிப்படுத்தி இருக்கிறார் ஜோதிஜி. 

ஜட்டி போடாமல் இருக்க பழகிக் கொள்ளுங்கள் அது பின்னால் உங்களுக்கு உதவக்கூடும். 

எவ்வளவு தொழிற்சாலைப் பிரச்சனைகள் இருந்தாலும் பிழைக்க தெரிந்த முதலாளிகள், அரசியல் தெரிந்த முதலாளிகள் பிழைத்துக் கொண்டு தான் இருகிறார்கள்.

"இன்றைய திருப்பூர் ஏற்றுமதியில் முதன்மை இடத்தில் இருக்கும் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 700 முதல் 800 கோடிக்குள் உங்களுக்குப் பிடித்த எண்களை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வருத்தப்பட மாட்டார்கள்." என்று ஜோதிஜி குறிப்பிடும் இந்த வார்த்தைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.    

மேலும் அந்த பணம் தின்னும் முதலாளிகள் விரும்புவது கீழ்க்கண்ட வார்த்தைகளைத் தான் 

நீ உழைத்துக் கொண்டே இரு. இரவு பகல் பாராமல் உன்னால் உழைக்க முடியுமா? முழு இரவும் முழித்து வேலை பார்த்துவிட்டு மறுநாள் காலை  எட்டு மணிக்கு வந்து நிற்க முடியுமா? நீ தான் முதல் தகுதியாளன். நாளை செத்துவிடப் போகிறாயா? நல்லது? உன் தம்பியை கொண்டு வந்து சேர்த்து விட்டு செத்துப் போ. எட்டு மணி நேர நிர்வாக அமைப்பா? அது எதற்கு? சொன்னதை செய். சட்ட திட்டங்கள், அரசு அதிகாரிகள்? அவர்கள் கிடக்கிறார்கள். அவர்கள் வந்து இறங்கும் பொது பார்த்துக் கொள்ளலாம்.             

ஜோதிஜியிடம் சில கேள்விகள் அல்லது வேண்டுகோள்கள் 

இது விறுவிறுப்பான கதை சொல்லும் புத்தகம் அல்ல. விசயங்களை தெரிந்து கொள்வதற்கான புத்தகம் அதனால் சில இடங்களில் மீண்டும் மீண்டும் வரும் சில பகுதிகளை வெட்டி இருக்கலாம்.

ஆங்கிலப் பள்ளியும் அரை லூசுப் பெற்றோரும் என்னும் பகுதி சிறப்பான கட்டுரையாக இருந்தாலும் அந்தக் கட்டுரைக்கும் டாலர் நகரத்திற்கும் தொடர்பு இல்லை, புத்தகம் படிக்கும் பொழுது அதன் வேகத்தை இது தடுப்பது போல் இருந்தது. அதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். 

திருப்பூர் பஞ்சாலை நூற்பாலை நிட்டிங் செக்சன் போன்றவற்றை புத்தகம் மூலம் சுற்றிப் பார்த்துவிட்டேன், நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா. (இது சற்றே தனிப்பட்ட அவா)...  

திருப்பூர் உங்களை இனிதே வரவேற்கின்றது. டொங்...டொங்...

என்னுடைய பார்வையில் 
   
டாலர் நகரம் - நம்மைத் தொட்டுக் கொண்டிருக்கும் உள்ளாடைகளைப் பற்றிய புத்தகம் அல்ல இது, ஆடை உற்பத்திக்காக உழைக்கும் மக்களின் வாழ்வியலை தொட்டுச் செல்லும் புத்தகம். திருப்பூர் பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் தைரியமாக வாங்கிப் படிக்கலாம்.   

டாலர் நகரம் புத்தகம் வாங்க நினைக்கும் நண்பர்கள் ஜோதிஜியின் எண்ணையும் 94431 71966, சென்னையை சேர்ந்த நண்பர்கள் எனது 99402 29934 எண்ணையும் தொடர்பு கொள்ளவும். 

டாலர் நகரம் - ஜோதிஜி - 4தமிழ்மீடியா வெளியீடு- விலை 190   

புத்தக விமர்சனங்கள்



1 comment:

Unknown said...

விமரிசனம் அருமை . அந்த நூலை படிக்க தூன்றுகின்றது