Wednesday, November 14, 2012

மின்சாரக் கனவு - 8 ப.சிதம்பரம் குடும்ப சேவை





1999 ஆண்டில் மத்திய மின்துறை அமைச்சராக சுரேஷ் பிரபு இருந்த போது மின்வாரியங்கள் தங்கள் சுய உற்பத்தியைப் பெருக்கிக் கொள்வதற்கு ஏற்றவாறு மத்திய மின் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டு வந்தார். 

1999 ஆம் ஆண்டில் மினவாரியத்தின் நிதி நிலை புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்குவதற்கு ஏற்றதாகவே இருந்தது என்றாலும் கூட அது தன் சுய உற்பத்தியைப் பெருக்கிக் கொள்ள எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை.  தமிழகத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த தனியார் மின் நிலையங்களின் மீது நம்பிக்கை வைத்து தமிழ்நாட்டின் மின்வாரியததின் எதிர்காலத்தை அதன் அன்றைய மாநில அரசும் பலிகொடுத்து விட்டன. 

அன்று ஆட்சியில் இருந்தவர்கள் புள்ளி வைத்தார்கள்.தற்போது கட்டுக்கு மீறி  இன்று அலங்கோலமாய் வந்து நிற்கிறது. ஆனால் தினந்தோறும் பத்திரிக்கைகளில்  நாங்கள் தான் செய்தோம் ஆனால் அதை நடைமுறைக்கு கொண்டு வரவில்லை என்று சொல்லி லாவணி கச்சேரி செய்து கொண்டிருக்கிறார்கள்.

மின்சாரத்துறையில் இந்தியாவில் பல நல்ல நோக்கத்திற்காக  தனியாரின் முதலீட்டை ஈடுபடுத்துவதற்காகவே மத்திய அரசானது 15.10.1991 அன்று மின்சாரக் கொள்முதல் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. மின்சாரச் சட்டம் (2003)  பிரிவு 9  தனியார்களைப் பற்றி பேசுகிறது.  

இந்த சட்டத்தின் மூலம் இந்தத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு பல விதங்களில் பல வகைகளில் நிறைய முன்னுரிமைகளையும் அது அளிக்கிறது.  இவ்வாறு வழங்கப்பட்டதற்கு காணம் தனியார்கள் இந்த துறைக்கு அதிக அளவு வரவேண்டும். அதிக அளவில் மின் உற்பத்தியில் ஈடுபடுவார்கள் என்ற நம்பிக்கையில் உருவாக்கினார்கள் என்று சொல்லப்படுகின்றது.. 

பொதுவாக ஒரு அரசாங்கம் என்பது ஒரு பறவை போன்றது.  தேவையில்லாத சுமைகளை சுமக்கும் பட்சத்தில் இயல்பாக பறக்க முடியாது.  இதன் காரணமாகவே பல நாடுகளில் பல துறைகளை தனியார் வசம் ஒப்படைக்கவே விரும்புகின்றது.  தவறில்லை.  

ஆனால் எங்கே தவறு?

கல்லில் கூட நார் எடுக்கக்கற்றுக் கொண்ட ஒரு கேடு கெட்ட அரசியல் தரகர்களை வைத்துக் கொண்டு வாழும் நமது இந்திய ஜனநாயகத்தில் இப்போதைய முழுங்கிப் போன சூழ்நிலையில் நீங்கள் எது குறித்து பேசினாலும் புரிந்து கொள்வது சிரமமே.

இது போன்ற மக்களின் அன்றாட வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட திட்டங்கள்  ஊழலற்று ஜெயிக்க இன்னமும் நமக்கு 50 ஆண்டுகளாவது தேவைப்படும். 

இந்திய நாடு அடிபட்டு, மிதிபட்டு லட்சக்கணக்கான பேர்கள் உயிர் இழந்து சுதந்திரம் பெற்ற கதையைப் பற்றி தெரியாதவர்கள் தான் இன்றைய சூழ்நிலையில் நமக்கு தலைவர்களாக இருக்கிறார்கள்.

உலகவங்கிக்கு கணக்குபிளையாக இருந்தவர்கள் தான் இன்றைக்கு இந்தியாவின் திட்டங்களை உருவாக்கும் இடத்தில் இருக்கிறார்கள். உங்களால் என்ன சொல்ல முடியும்?

மக்களின் உண்மையான சுதந்திரத்தின் அருமையை தெரிந்து கொள்ள மனம் இல்லாது இருப்பவர்களின் கையில் தான் தற்போதைய ஆட்சியும் அதிகாரமும் குவிந்து கிடக்கின்றது. 

பணம் என்பதை தேவை என்பதைத் தாண்டி வெறி என்ற நோக்கில் சேர்த்துக் கொள்ள விரும்பும் இந்த தரங்கெட்ட அரசியல் தலை(மை)முறைகள் அழியும் போது தான் அதற்குண்டான உண்மையான வாய்ப்புகள் நமக்கு உருவாகக்கூடும்.  

மின்சாரத்தை பிரத்யோகமாகத் தன் சொந்த மின் தேவைகளை நிறைவு செய்திட மின் நிலையம் ஒன்றை நிறுவிக் கொள்பவர் அல்லது தன் உறுப்பினர்களின் மின் தேவையை நிறைவேற்றிட மின் நிலையம் ஒன்றை நிறுவிடும் குழு ஆகியோரையே மின்சாரச் சட்டத்தின் பிரிவு 2 (8) ஆனது சுய உற்பத்தியாளர்கள் என்று அழைக்கின்றது.

இந்த சட்டப் பிரிவுகளை நடைமுறைப்படுத்துவற்காக 8.6.2005  ஆம் தேதியன்று மத்திய அரசு சில விதிகளை உருவாக்கியது. அவற்றின்படி சுய மின் உற்பத்தி நிலையமாக ஒரு மின் நிலையம் கருதப்பட வேண்டுமென்றால்

1. அந்த மின் நிலையத்தில் 26 சதவிகித்திற்கு குறையாமல் சுய உற்பத்தியாளர்கள் முதலீடு செய்திருக்க வேண்டும்.

2. அந்த மின் நிலையத்தின் ஆண்டு உற்பத்தியில் 51 சதவிகிதத்திற்கும் குறையாமல் சுய உறப்த்தியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த விதியின்படி ஒரு மின் நிலையத்தின் மூலதனத்தில் 26 சதவிகிதத்தை மட்டும் வைத்திருப்பவர்கள் 51 சதவிதிதம் மின் உற்பத்திக்கு உரிமையாளராகி விடுகிறார்கள். மூலதனத்தில் உள்ள எஞ்சிய 74 சதவிதிகம் பங்குடையவ்ர்கள் 49 சதவிகிதம் மின் உற்பத்தியின் உரிமையாளர் என்றாகிறது.

இந்த சுய உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கத்தால் அளிக்கபடும் பல சலுகைகளை ஒரு மின் உற்பத்தி நிலையம் முழுமையாக அனுபவிக்க முடியம். இதன் மூலம் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு கொடுக்க முடியும்.

மாநில மின்வாரியங்களிடமோ, மத்திய நிதி ஆதாரங்களிலோ மின் உற்பத்திக்காக இனி வரும் காலங்களில் முதலீடு செய்ய நிதி செய்ய கைவசம் எதுவும் இல்லை. எனவே தனியாரை இந்த மின் உற்பத்தியில் ஈடுபடுத்துவதே சிறந்து என்று மத்திய அரசு கூறியது.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்று சொல்வார்களே அதைப் போல மத்திய அரசின் அண்டப்புளுகு என்பதை குருடன் கூட கண்டு பிடித்து விட முடியும். காரணம் அரசின் பணம் தனியாரின் மூலதனத்திற்காகவே வாரி இறைக்கப்பட்டது. 

மின் நிலையத்திற்காகத் தனியார் செய்யும் 30 சதவிகிதம் முதலீட்டினை அந்த மின் நிலையம் அமைக்கத் தேவைப்படும் நான்கு ஆண்டு காலகட்டத்தில் அவர்கள் முதலீடு செய்கிறார்கள்.  அதாவது மொத்த முதலீட்டில் சராசரியாக 7.5 சதவிகிதம் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் முதலீடு செய்கிறார்கள்.  மொத்த பணத்தையும் வைத்துக் கொண்டு தொழில் செய்ய வேண்டியதில்லை. 

ஆண்டு தோறும் என்று கணக்கு வைத்துக் கொண்டு  படிப்படியாக நான்கு ஆண்டுக்குள் கொண்டு வருகின்றார்கள். 

எங்களிடம் பணம் இல்லை என்று சொல்லும் மத்திய மற்றும் மாநில மின்சார வாரியங்களோ ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தனியார்களிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்காக மட்டுமே 24.7 சதவிகிதம் கட்டாயம் தர வேண்டும் என்பது தான் இங்கு ஆச்சரியமானது.

மொத்த முதலீட்டின் அடிப்படையிலேயே மின்சாரக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிற்து.  ஆனால் ஒவ்வொரு தனியாரும் தாங்கள் தங்களின் மொத்த முதலீட்டுக் கட்டணத்தை ஒப்பந்தம் செய்யப்பட்ட அளவை விட 30 சதவிதிகத்தை மேலாகவே உயர்த்திக் காட்டுவது தான் வழக்கம்.

இதனால் தனியார் மின் மின்சாரத்தினை மத்திய அரசு மாநில மின் வாரியங்களின் மேல் வலுக்கட்டாயமாக திணித்தது. இதன் காரணமாகவே தனியார்கள் தமிழகத்திற்கு ஓடோடி வந்தனர். 

ஆனால் நாம் ஏற்கனவே பார்த்த ஐந்து நிறுவனங்கள் மட்டுமே இறுதியில் மின் நிலையங்களை அமைத்தன. இவற்றின் மொத்த உற்பத்தித் திறன் 988 மெகாவாட்டாகும். 

தமிழ்நாடு மின்வாரியம் இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூலதனக் கட்டணமாக 1,006 கோடி ரூபாயை செலுத்தியது.  ஒவ்வொரு ஆண்டும் இந்த ஐந்து தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின்வாரியம் செலுத்திய ரூபாயின் காரணமாகத் தான்  மின்சார வாரியம் இந்த அளவுக்கு கடன் சுமையில் மாட்டிக் கொண்டது. சுய சார்புகளை கொண்டு வந்திருந்தால் இப்போதுள்ள  மின்வெட்டும் வந்திருக்காது. . 

ஒரு வேளை இந்த தொகையை இங்கேயே முதலீடு செய்திருக்கும்பட்சத்தில் ஆண்டுக்கு 7.50 மெகாவாட் திறனுள்ள சொந்த மின் நிலையங்களே உருவாக்கி இருக்க முடியும்.  கடந்த பத்து ஆண்டுகளில் மின் வாரியத்தின் உற்பத்திறனும் சுமார் 7500 மெகாவாட் என்ற அளவில் உயர்ந்திருக்கும்.  ஆனால் இன்று அது தனியார் கையை எதிர்நோக்கியிருக்கும் பரிதாப நிலைக்கு மத்திய அரசால் தள்ளப்பட்டு நிற்கிறது.  

இந்த இடத்தில் சில விசயங்களை உங்கள் மனதில் கொண்டு வர வேண்டும்.

புதிய பொருளாதாரக் கொள்கை. இதன் காரணமாக மத்திய அரசு கொண்டு வந்த கொள்கை ரீதியான முடிவுகள். இதற்காக உருவாக்கப்பட்ட மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.  இதுவரைக்கும் நாம் வேறொருவரை குற்றம் சாட்ட முடியும்.  

ஆனால் உள்ளே தனியார் வந்து விட்டால் அவரை வாரி அனைத்து உச்சி முகர்ந்து, அவருக்கு தேவைப்படும் வசதிகள் செய்து கொடுப்பது முதல் அவர் நிர்ணயிக்கும் கட்டணம் வரைக்கும் பின்னால் மறைமுகமாக இருப்பது இங்குள்ள அரசியல் தலைவர்களே. 

இதைப்பற்றி விரிவாக இங்கே பேசினால் பல விபரீதமான புலனாய்வு கட்டுரைகள் போல எழுத வேண்டியிருக்கும். இந்த இடத்தில் இதை குறிப்பிட்டு எழுதக் காரணம் தினந்தோறும் ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் இந்த மின்சாரம் குறித்து அறிக்கை விடுவதும், லாவணி கச்சேரி நடத்திக் கொண்டு இருப்பதையும் நீங்கள் அன்றாடம் பத்திரிக்கையில் படித்துக் கொண்டு இருப்பீங்க தானே? 

ஆனால் நடந்த, நடந்து கொண்டிருக்கும் உண்மையான நிலவரங்கள் என்பது வேறு?

2001 ஆம் ஆண்டு  தொடங்கி கடந்த 10 ஆண்டு காலத்தில் இந்த தனியார் நிறுவனங்களின் உற்பத்தித் திறனில் 46 சதவிகிதத்தை மட்டுமே மின் வாரியம் பயன்படுத்தி உள்ளது.  அநத நிறுவனங்களின் பயமுறுத்தும் மின் கட்டணம் காரணமாக எஞ்சிய உற்பத்தித் திறனான 54 சதவிகிதத்தை மின் வாரியம் உபயோகப்டுத்தவில்லை.

ஒப்பந்ததின்படி தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்திக்குத் தயாராக இருந்தால் மட்டுமே போதும்.  அப்படி இருந்தாலே அவற்றை நிலைக் கட்டணமான 68.49 க்கு உகந்தவை என்று கருதிக் கொள்ள வேண்டும் என அந்த ஷரத்துக்கள் கூறுகின்றது.

தனியார் நிறுவனங்களுடைய  நிலைக்கட்டணம் மின்சாரத்தின் விலையைக் கடுமையாக கூட்டி விட்டது என்பது தான் கடந்த பத்தாண்டு வரலாறு.

இந்த ஐந்து நிறுவனங்களைத் தவிர வேறு இரண்டு தனியார் நிறுவனங்கள் தமிழ்நாட்டு மின்வாரியத்துடன் நீண்ட கால ஒப்பந்தம் போட்டு இருந்தது. 

அந்த நிறுவனங்கள் 1.அபான் மற்றும் பென்னா. போன்ற நிறுவனங்களே.

இந்த சமயத்தில் ஒரு ஆச்சரிய தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.  

2007 2008 ஆம் ஆண்டு தனியார் கொடுத்துக் கொண்டிருந்த மின் கட்டண விலையை பார்த்து விடுவோம்.  இந்த கட்டணம் ஒரு யூனிட்டின் ரூபாய் விலை.

ஜி எம் ஆர் 6.58 
பி.பி.என் 17.78
மதுரை பவர் 8.63
சாம்பல்பட்டி 8.74
நெய்வேலி எஸ்டிசிஎம்எஸ் 3.52

இதே போல் மற்ற இரண்டு நிறுவனங்களான

அபான் 2.31
பென்னா 2.58

2006 ஆம் ஆண்டில் பிபிஎன் நிறுவனத்திடமிருந்து 244 மில்லியன் யூனிட்டை (24.4 கோடி யூனிட்) மின்வாரியம் வாங்கியது. இது இந்த நிறுவனத்தின் வெறும் 35 நாள் உற்பத்தித் திறனுக்கு சமமானது.  ஆக எஞ்சிய 330 நாளுக்கும் இந்த மின் நிலையம் எந்த உற்பத்தியையும் செய்யவில்லை என்றாகிறது.  ஆனால் அந்த ஆண்டில் இது பெற்ற நிலைக்கட்டணம் 3330.04 கோடி ரூபாயாகும்.  அதாவது உற்பத்தியே மேற்கொள்ளாத 330 நாட்களுக்கும் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வீதம் அந்த நிறுவனம் தமிழ்நாட்டு மின்வாரியத்திடமிருந்து பணத்தைப் பெற்றுக்  கொண்டது என்றாகிறது.

இதுதவிர உற்பத்தி செய்த 24.4 கோடி யூனிட்டுக்களுக்காக மின்சாரக் கட்டணமாக 103.78 கோடி ரூபாயையும் அது மின்வாரியத்திடம் வசூலித்தது.  இந்த நிலையத்தின் மாறும் கட்டணம் மட்டுமே யூனிட் ஒன்றுக்கு 4.25 ரூபாயாக இருந்தது.  அதே நேரத்தில் மற்ற நிறுவனங்களின் மொத்த மின் விலையே (மூலதனக் கட்டணம் ப்ளஸ் மாறும் கட்டணம்) பி.பி.என் நிறுவனத்தின் மாறும் கட்டணத்தைவிடக் குறைவாக இருந்தன என்பதும் தான உண்மை.  எடுத்துக் காட்டாக நெய்வேலியின் எஸ்டிசிஎம்எஸ் மற்றம் அபான் மின் நிலையங்களின் மொத்த மின் விலையை கவனித்தாலே புரியும் தானே.

தனியார் மின்சாரத்தின் விலை தமிழ்நாட்டின் மின்சார வாரியத்தின் நிதிக் கட்டமைப்பை சீர்குலைத்து வருகிறது என்பதோடு அது மொத்த அரசின் நிர்வாகத்தையும் பாதிக்கின்றது. கடன் சுமை அதிகமாகின்றது. மக்களுக்கு தேவைப்படும் அன்றாட நடைமுறையில் உள்ள எந்தவொரு நலத்திட்டத்தினையும் செயல்படுத்த முடியாது. இது அத்தனையும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு தெரியும் தானே?


மற்றொன்றையும் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஐந்தாவது தனியார் நிறுவனமான எஸ்டிசிஎம்எஸ் மூலம் விற்கப்படும் மின்சாரத்தின் விலையானது ஒப்பீட்டளவில் விலை குறைவாக இருந்தாலும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் மேலே இருப்பதால் அவர்களுக்கு உண்டான அடிப்படைச் செலவுகள் மிகவும் குறைவு. இவர்கள் நிர்ணயிக்கும் விலை என்பது ஒரு பொதுத் துறை வழங்கும் மின்சாரத்தின் விலையைக் காட்டிலும் அது இருமடங்காக உள்ளது என்பதையும் நாம் மறக்கக்கூடாது. 

ஆனால் எந்த அரசியல் தலைவர்களும் இது குறித்த அக்கறையை காட்டத் தயாராக இல்லை என்றாலே உங்களுக்கு என்ன காரணம் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

ஆனாலும் இந்த இந்தியா இன்னமும் நல்ல முறையில் நகர்ந்து கொண்டிருப்பதற்கு அங்கங்கே ஏதோ சில நல்ல அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் இருப்பதால் தானே?  

தனியார் மின்சார உற்பத்தியாளர்களின் இந்த கொள்ளை விவகாரங்களை வெளியே கொண்டு வந்து இந்த ஒப்பந்த ஷரத்துக்களை நீக்கியே ஆக வேண்டும் என்று ஒருவர் போராடத் துணிந்தார்.

இந்த ஐந்து தனியார் நிறுவனங்களின் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களையும் மாற்றி அமைத்திட வேண்டுமென்று 2001 ஆம் ஆண்டு முதலே கோரிக்கைகள் எழுந்து வந்துள்ளன. 

மாநில அரசும், ஒழுங்குமுறை ஆணையமும் இது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை.  ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட சமயங்களில் கொள்முதல் விலையைக் குறைக்கும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் மாற்றப்பட வேண்டுமென பலரும் கருத்து தெரிவத்துள்ளனர்.

ஆனால் எதையும் ஆணையம் கண்டு கொள்ளவில்லை.

2002 ஆம் ஆண்டில் திரு நெல்லிக்குப்பம் வீ கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இந்த முறையற்ற கொள் முதல் விலையினைக் குறைக்க வேண்டி ஒழுங்கு முறை ஆணையத்திடம் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.  இவர் முன்னாள் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறப்பினர். வழக்குரைஞரும் கூட. 2003 ஆம் ஆண்டில் மேலும் ஒரு மனுவினைத் தாக்கல் செய்தார்.  

கொடுமை கொடுமை என்று கோவிலுக்குச் சென்றால் அங்கே ஒரு கொடுமை நின்று ஆடினால் எப்படியிருக்குமோ அப்படி ஒரு கொடுமையும் அப்போது நடந்தது. 

ஆமாம்.

இந்த ஐந்து தனியார் நிறுவனமும் சேர்ந்து எங்களுக்கு இந்த விலை போதாது. கொஞ்சம் கூட்டிக் கொடுங்க சாமிகளா? என்று அவர்கள் பங்குக்கு ஒரு மனுவை ஆணையத்திடம் தாக்கல் செய்தனர். 

நிறுவனங்களின் சார்பாக வாதாட வந்தவர்கள் யார் தெரியுமா? 


தற்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவர் மனைவி திருமதி நளினி சிதம்பரம்.  

முந்தைய அத்தியாயத்தில் ப.சிதம்பரம் இதே போல் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக வாதாடி ஜெயித்துக் கொடுத்த கதையையும் படித்தோம் அல்லவா?

கிருஷ்ணமூர்த்தி கொடுத்த மனுவுக்கு ஆரம்ப கட்ட விசாரணைக்கு அனுமதி கிடைத்தபோதிலும் அதையும் ப. சிதம்பரம் குடும்ப வழக்கின் மூலம் தடை உத்தரவை பெற்றுக் கொடுத்தனர். அப்படியே வழக்கு பாதியில் தொங்கி விட்டது.

கடைசியில் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி ஒரு தனி நபர் என்று காரணங்கள் கூறி தனியாருக்குச் சாதமாக மங்களம் பாடிவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள ஆண்ட கட்சி, தற்போது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, எதிரிக்கட்சிகள், சாதிக்கட்சிகள் என்று உங்கள் மனதில் உள்ள அத்தனை தலைவர்களையும் இப்போது உங்கள் நினைவில் கொண்டு வர வேண்டும். 

இவர்கள் அத்தனை பேர்களும் நம் நலத்திற்காகவே பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நம் குழந்தைகளுக்கு இருட்டறைக்குள் நின்று கொண்டு பேசி புரியவைக்க வேண்டும். 

18 comments:

எம்.ஞானசேகரன் said...

எத்தனை தகல்கள்? அனைத்தின்கும் நன்றி தோழரே!

Anonymous said...

சிதம்பரம் நான் நம்பிக்கை வைத்த நபர்களுள் ஒருவர்...ஹ்ம்ம்...

எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று சொல்றீங்க...


BTW,தொடர் மின்வெட்டின் சில நன்மைகள்...

நம் குழந்தைகள் தொலைக் காட்சி இருட்டறையில் இருந்து பூமிக்கு வந்துவிட்டார்கள்...

குடும்பங்கள் பேசத்தொடங்கி உள்ளனர்...


குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...

ஜோதிஜி said...

இதைப்பற்றித்தான் காரைக்குடி உணவகம் (தீபாவளி விருந்து) பதிவில் எழுதியிருக்கின்றேன்.

ஜோதிஜி said...

வருக. நன்றி.

வவ்வால் said...

ஜோதிஜி,

ஆஹா இப்போ தான் சூடு பிடிக்கவே ஆரம்பிக்குது.

உங்க பதிவை முன்னரே படிச்சிட்டேன், உங்க பின்னூட்டமும் பார்த்தேன், மின் தடை, அதான் இப்போ பின்னூட்டம் போடுகிறேன்.

என்ரான் காலத்தில் 5 ரூ என யூனிட்டுக்கு விலை வைத்ததையே கொள்ளை விலை என எதிர்த்தார்கள் ஆனால் 17.80 காசு என விலை நிர்ணயம் செய்த மகானுபவனை என்ன செய்யலாம், இதை தான் நான் எனது பதிவிலும் சொல்லி இருப்பேன்.

தனியாரிடம் அதிக விலைக்கு வாங்கி ,மீண்டும் தனியார் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் விற்றதே மின்வாரியத்தினை வீழ்த்தியது.

சுமார் முப்பதாயிரம் கோடி மதிப்பிலான மின்சாரம் சில ஆயிரங்கோடிகள் விலையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை போகிறது ஆனால் அவர்களால் வரும் வருமானத்தால் மாநில அரசின் வரி வருவாய் உயர்வதே இல்லை என்பதே உண்மை.

சட்ட மன்றத்திலேயே பதில் சொல்லியிருக்கிறார்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு 7 ஆண்டுகள் டாக்ஸ் ஹாலிடே கொடுத்திருப்பதால் இது வரை வருமானம் எதுவும் இல்லை என,

பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதியும் செய்வதில்லை ,அப்படியே செய்தாலும் சிறிய அளவே ஆனால் நிறைய தயாரித்து உள்நாட்டில் விற்கிறார்கள் எனவே டாலர் வருமானமும் அதிகமில்லை.

வேலை வாய்ப்பு பெருகியதே எனலாம், அதிலும் தமிழ்நாட்ட்டினருக்கு கொஞ்சம் தான் ,எல்லா மாநிலத்தவரும் தான் வேலை செய்கிறார்கள் ஆனால் சில ஆயிரங்கள் தான் அவர்கள்,அரசு சொல்வது போல லட்சக்கணக்கிலும் வேலை வாய்ப்பு பெருகவில்லை.

மேலும் பல பன்னாட்டு நிறுவனங்கள் completely knocked down units(ckd) spares இறக்குமதி செய்து இங்கு அசெம்பிள் மட்டுமே செய்கின்றன ,இதனால் பலவகையிலும் இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைகிறது, நிறுவனங்களுக்கு லாபம் அதிகம் ஆகிறது.

அதிக மின்சாரத்தினை வாங்கி கழிவறை முதல் ஏசி போட்டுக்கொள்கிறார்கள்.

அரசு மின்சாரம், இன்ன பிற வரி இழப்புகளை பன்னாட்டு மற்றும் பெரும் நிறுவனங்களுக்காக தாங்கிக்கொண்டாலும் அதனால் பலனே இல்லை.

------------
ப.சி போன்ற சுயநலமான அரசியல் வியாபாரிகளுக்கு நாட்டைப்பற்றி என்ன கவலை ஆனால் பேசும் போது பார்த்தால் நாட்டின் பொருளாதாரத்தையே தோளில் சுமப்பது போல ஒரு பில்ட் அப் :-))

அதிகம் பேசப்போய் முட்டை மந்திரம் வச்சுட போறாங்க :-))

Sivakumar said...

திருவாளர் சிதம்பரம் மனைவி திருமதி நளினி - இவர்கள் இருவரும் நாட்டு மக்களின் பணம் எவ்வளவு இருக்கிறதோ கடவுளுக்குத் தான் வெளிச்சம்.
தங்க காசு திட்டம் மிகச் "சிறப்பாக" நடைபெற்றதற்கு இருவருடைய பங்களிப்பு அதிகம்.

bandhu said...

தமிழகம் முழுவதும் இப்பொழுது தலைவிரித்தாடும் மின்வெட்டு குறித்து தெளிவான புரிதல் எத்தனை பேரிடம் இருக்கிறது? மக்கள் இப்படிப்பட்ட பச்சோந்திகளை பார்த்து பொங்கி எழ வேண்டாமா? ஏன் இப்படி இருக்கிறோம்? எவ்வளவு நாள் இப்படி இருப்போம்?

குறும்பன் said...

என்ன சொல்றதுன்னே புரியலை. திட்ட தான் தோணுது.

priyamudanprabu said...

Nothing to say ...:(

Anonymous said...

இதெல்லாம் பார்த்து பொங்கி எழுந்தா தீவிரவாதி னு சொல்லிடுவானுங்க ... சும்மா இருந்தா மக்களுக்கு சொரணை இல்லை .... எவ்வளோ பேர் தமிழ்நாட்டுல வைக்கோ மாறி நல்ல தலைவருக்கு ஓட்டு போடுறாங்க? எவளோ பேரூ கேஜ்ரிவால் க்கு ஓட்டு போட போறாங்க?

MANI said...

மிக நுணுக்கமான விபரங்களுடன் எழுதப்பட்ட பதிவு. ஆனாலும் மாற்றம் வரும் வரை பொறுத்து தான் ஆக வேண்டும் போல

ஜோதிஜி said...

இந்த தொடரில் என் பதிவை விட உங்கள் விமர்சனங்கள் தான் பலருக்கும் உதவியாக இருக்கும்.

ஜோதிஜி said...

இதைப் பற்றி சற்று விபரமாக சொல்லுங்களேன். வாசிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

ஜோதிஜி said...

இதற்கு அடுத்த பதிவில் பதில் உண்டு

ஜோதிஜி said...

யாரை எத்தனை பேர்களை திட்டுவது?

ஜோதிஜி said...

பகிர்ந்து கொண்ட அக்கறைக்கு நன்றி.

ஜோதிஜி said...

சமூக அக்கறை என்பதை விட தற்போது கட்சி விசுவாசி தான் ரொம்ப முக்கியமாக தேவைப்படுது. ஒரு முறை கூகுள் ப்ளஸ் வந்து பாருங்க. பலரின் வார்த்தைகளை அவர்களின் எண்ணங்களை படிக்கும் போது அரசியல்வாதிகள் பரவாயில்லை என்று தோன்றும்

ஜோதிஜி said...

எத்தனை நாளைக்கு மணி?