Monday, August 27, 2012

நீயும் பொம்மை நானும் பொம்மை

நன்றி.... தமிழ் பேப்பரில் வெளியான கட்டுரை

ஈமு கோழி விளம்பரங்களுக்கு நடிகர்கள் சிரித்துக் கொண்டே நடித்து நம்பிக்கை கொடுத்தார்கள், நம்பி கையில் வைத்திருந்த காசை கொண்டு போய் கொட்டியவர்கள் மட்டும் சிரிக்க முடியாமலும் வெளியே சொல்ல முடியாமலும் நொந்து கொண்டுருக்கிறார்கள்,  

ஒவ்வொரு முறையும் இது போன்ற பரபரப்பு பத்திரிக்கைகளுக்கு தேவைப்படுகின்றதோ இல்லையோ நமக்கு முக்கியமாக தேவைப்டுகின்றது, பத்திரிக்கைகளுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்,  தொடங்கும் போது விளம்பரத்திற்கான காசு, முடியும் போது பரபரப்பு செய்திகள்,

நம்பியவ்ர்களுக்கு?


ஒன்றை மறக்க மற்றொன்று, அதை மறக்க இன்னொன்று என்று மாறி மாறி நமக்கு ஏதோவொன்று சூடாக தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கிறது,  தொடக்கத்தில் திண்டபங்களுக்குத் தான் கொறிக்க சுவைக்க என்று விளம்பரப்படுத்துவார்கள், இப்போது ஊடகங்களுக்கும் தேவையாய் இருக்கிறது,  இது போன்ற செய்திகளை விரும்பத் தொடங்க அதுவே இறுதியில் திணிப்பது போல மாறிவிடுகின்றது, 

வாங்கிவிட்டீர்களா? என்று கத்தி நமது செவிப்பறையை கிழித்து செவிடர்களாய் மாற்றிக் கொண்டுருக்கிறார்கள்,

வலைதளம் முதல் செய்திதாள்கள் வரைக்கும் அத்தனைக்கும் இப்போது லைட் ரீடிங் என்பதே தாரக மந்திரமாக இருக்கிறது,  கடினமான விசயத்தை கொடுத்தால் பக்கத்தை நகர்த்தி சென்று விடுவார்கள் என்று நடிகை கிசுகிசுக்களைப் போட்டு நமக்கு சந்தனம் பூசிக் கொண்டுருக்கிறார்கள்.  அவளின் காண முடியாத மார்பை கனவுகளில் தேடிக் கொண்டுருக்கின்றோம், நமக்கும் அதுவே தான் தேவையாய் இருக்கிறது,  திரை அரங்கத்திற்குள் சென்றால் மூன்று மணி நேரம் கவலைகளை மறக்க என்ற போதை ஊட்டப்படுவதால் படம் எடுப்பவர்கள் என்ன கருத்து கந்தசாமி கணக்காக கைக் காசை செலவழிப்பார்கள் என்றா நம்ப முடியும்,  கலை என்பது பணம் சம்பாரிக்க என்ற பிறகு அங்கு கலைக்கு வேலையில்லை.  சதைக்குத் தான் வேலை.

ஒரு செய்தியை முக்கியத்துவப்படுத்த வேண்டுமானால் நமது பத்திரிக்கைகள் கொடுக்கும் வார்த்தைகளை கவனித்துப் பார்த்தாலே நமக்கு நன்றாக புரியும்,  கிரானைட் ஊழல் என்று சொன்னால் அதில் ஒரு கிக் இருக்காது என்பதால் கிரானைட் மாஃபியா என்று ஏதோவொரு நோய்க்கான ஃபோபியா போலவே புனைக்கதைகளை சுருட்டி சுருட்டி சூறாவளியாக்கி மக்கள் கவனத்தை திசை திருப்பத் தொடங்கி விடுகிறார்கள்.  நாலைந்து வாரமாக அன்றடாட பத்திரிக்கையில் வந்து கொண்டுருக்கும் பி.ஆர்,பி, நிறுவன அதிபர் பழனிச்சாமி கதையும் திடுக் திடுக் என்று மர்மகதைகளைப் போலத்தான் போய்க் கொண்டுருக்கிறது,  இப்போது தான் மக்களுக்கே டாமின் என்றொரு அரசாங்க நிறுவனம் இதற்கென்று இருக்கிறது என்பதே தெரிய வருகின்றது,  

முன்பிருந்த இருந்த தியோனேஸ்வரன் தொட்ங்கி இன்று வரைக்கும் உள்ள அதிகாரிகளின் சொத்து பட்டியலைப் பார்த்தாலே சொர்க்கம் என்பது இந்த கனிம வள துறை தான் என்பதை புரிந்து கொள்ள முடியும்,  சில துறைகளின் ஊழல்கள் வெளிப்படையாக மக்களுக்கு தெரியும்,  ஆனால் அரசாங்கத்தில் உள்ள பல துறைகளில் நடந்து கொண்டிருக்கும் ஊழல்கள் இன்று வரைக்கும் பலருக்கும் தெரிய வாய்பில்லாமலே கடந்து போய்க் கொண்டுருக்கிறது, 

அருண்ஷோரி மத்திய அமைச்சராக இருக்கும் போது அலைக்கற்றை ஊழல் என்பது இத்தனை பிரமாண்டமானதாக இருக்கும் என்பதை எவராவது கற்பனை செய்து பார்த்து இருப்பார்களா?  இல்லை தயாநிதி மாறனுக்குத் தான் காமதேனு பசு மேல் நாம் ஏறி உட்கார்ந்து கொண்டுருக்கின்றோம் என்று நம்பியிருப்பாரா?  ராசா தான் கறவை மாடு கணக்காக மாற்றப் போகின்றோம் என்று கனவு கண்டுருப்பாரா?  அமைச்சராக வந்தாலே போதும்?  கற்றுக் கொடுப்பவர்கள் சுற்றியிருக்கும் போது களவு என்பது புத்திசாலிதனத்தின் வெளிப்படாக மாறிவிடுகின்றது, 

இன்று சூறாவளியாக செய்தித் தாள்களில் ஓடிக் கொண்டிருக்கும் கிரானைட் ஊழலைப் பற்றி கலைஞருக்குத் தெரியாதா?  இல்லை இப்போது நடவடிக்கை எடுத்துக் கொண்டுருக்கும் ஜெ, வுக்குத்தான் தெரியாத விசயமா? கடந்த பத்தாண்டு ஆண்டுகளாக இந்த கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழ்ந்து கொண்டுருக்கும் அத்தனை கிராம மக்களும் அரசாங்கத்திற்கு அனுப்பிய மனுக்களும், நினைவூட்டல் கடிதங்களும் அரசாங்க அதிகாரிகளுக்கு கிடைக்காமல் தபால் துறை ஏதும் சதி செய்து இருக்குமோ?  இல்லை கிராம நிர்வாக அதிகாரி முதல் கோட்டையில் இருக்கும் துறை சார்ந்த அத்தனை கோமகன்களுக்கும் இது குறித்த அக்கறை இல்லாமலா போயிருக்கும்,  ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு விதமான படையல் செய்யும் உலகத்தில் இருக்கும் போது அமைச்சர் முதல் அதிகாரிகள் வரைக்கும் எப்படி கவனிக்க வேண்டும் என்று கூடவா பழனிச்சாமிக்கு தெரியாமலா போயிருக்கும்,

ஒருவர் வளரும் போது குடிசையில் இருந்து கோபுரத்திற்கு உயர்ந்தவர் என்று நான்கு பக்க விளம்பரங்களை வாங்கிக் கொண்டு வாழ்த்தும் அதே பத்திரிக்கைகள் தான் வீழும் போது மாஃபியா உலகத்தில் அவிழும் மர்ம முடிச்சுகள் என்று சிறப்புக்கட்டுரையாக எழுத முடிகின்றது, 

உலகமெங்கும் அரசியல் செய்வதற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதொவொரு பலியாடுகள் தேவையாய் இருக்கிறது,  அதிலும் இந்தியாவில் இந்த பலியாடுகளை நம்பித்தான் அரசியலே நடக்கின்றது, 

திருவிழா காலத்தில் அடிக்கப்படும் கோழி, ஆடுக்களைப் போல ஒவ்வொரு சமயத்திலும் இதற்கென்று குறி பார்த்து காத்துக் கொண்டுருப்பவர்கள் அநேகம் பேர்கள்.  அது அமைச்சராக இருக்கலாம், ஆட்சிக்கு ஜீவநாடியாக உதவிக்கொண்டுருக்கும் அதிகாரியாகக்கூட இருக்கலாம், 

மாவட்ட ஆட்சியர் சகாயத்தை மாற்றியவர்கள் தான் அவர் அனுப்பிய கோப்பின் நகலை படிக்கவே பல மாதங்கள் ஆகியுள்ளது,  காரணம் தேவையைப் பொறுத்தே அதிகாரங்கள் பிரயோகிக்கப்படுகின்றது,  அவசரங்கள் கருதி அரசியலில் எதுவும் செய்யப்படுவதில்லை,  அவசியங்கள் கருதியே இங்கு ஒவ்வொன்று நடைபெறுகின்றது,  காரணம் ஜனநாயகத்திற்கு நாம் கொடுக்கும் விலையென்பது இதுவே தான்,

ஊழல் என்றறொரு வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் போன உலகில் மீண்டும் மீண்டும் இதில் ஊழல் அதில் ஊழல் என்று சொல்லும் போது படிப்பவர்களும் துணுக்கு செய்திகளைப் போல படித்து விட்டு நகர்ந்து போய் விடுகின்றனர்,  மறுநாளும் படிக்கும் போது எரிச்சல் தான் உருவாகின்றது,  காரணம் படிப்பவர்களும், பார்ப்பவர்களும் நமக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்ற ஏக்கத்தில் இருப்பவர்களாக இருப்பதால் மூச்சடைக்கும் ஊழல் என்பது கூட இன்று எளிதாக மாறிவிட்டது, நல்லொழுக்கம் என்ற வார்த்தை என்பதே நாற்றம் பிடித்த வார்த்தையாக சமூகம் பார்க்கத் தொடங்கிய போதே நல்ல விசயங்கள் என்பது நம்மைச்சுற்றி அரிதாகத்தான் நடக்கும், நான்காயிரம் அதிகாரிகள் இருக்கும் இடத்தில் நாலு அதிகாரிகள் செய்யும் செயலால் சிலருக்கும் இன்னமும் தர்ம புண்ணியத்தின் மேல் நம்பிக்கை வருகின்றது, 

நாம் தான் வாழ்வில் பாதி நாட்கள் ஏக்கத்திலும், மீதி நாட்கள் எரிச்சலிலுமாய் கழிக்கும் போது இறுதியில் நமக்கு மிஞ்சப்போவது கழிவிரக்கம் மட்டுமே,  நுகர்வு கலாச்சாரம் என்பது நுகத்தடி பூட்டப்பட்ட மாடுகள் போல ஒரே நேர்கோட்டில் போய்க் கொண்டுருக்கிறது,  நமக்கு எது தேவை என்பதை விட மற்றவர்கள் பார்வையில் நாம் சிறப்பாக தெரிய எதுவெல்லாம் தேவை என்பதாக கலாச்சாரம் மாறியுள்ளதால் நமக்கே நமக்கான தேவைகளை புரிந்து கொள்ள முடியவில்லை,  ஃபேஷன் என்ற வார்த்தையை நாம் நோண்டிப்பார்த்தால் நம் பணத்தின் தேவையை அதிகப்படுத்தும் அசிங்கம் என்பதை யோசிப்பதே இல்லை, அவர்கள் முன்னால் நாம் கௌரவமாக தெரிய வேண்டாமா? என்று யோசித்து யோசித்து கடைசியில் கடன் என்ற பெயரில் பிச்சை எடுக்கும் அளவுக்குப் போய் கடனாளியாக மாறி இங்கு பாதிப் பேர்களின் வாழ்க்கை தெருவுக்கு கொண்டு வந்து விடுகின்றது,

தற்போது அதிகாரியாய் இருப்பவன் சம்பளத்திற்கு மேல் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ் ஆசைப்படுபவன்,  அவனை சரிக்கட்ட நினைப்பவன் கருப்பு பணத்தை கட்டிக் கொண்டு தூக்கம் மறந்து தவிப்பவன், 

பணம் என்பது காகிதம் என்பதை மறந்து உலகில் உள்ள அத்தனை கவலைகளையும் போக்கவல்லது என்பதாக நினைத்துக் கொண்டவர்கள் இருக்கும் உலகில் எதை இயல்பாக பேசினாலும் இளிச்சவாயன் பட்டமே மிஞ்சும், அளவான பணத்தைப் பெற்றவன் அவனை அவனே ஆள முடியும்,  அளவுக்கு மிஞ்சிய பணத்தைப் பெற்றவன் பணமே அவனை ஆளத் தொடங்கும்,  பணம் ஆளத் தொடங்கும் போது தான் மர்மக் கதையில் வரும் திடுக்கிடும் திருப்பங்களும் நம் வாழ்வில் நடக்கத் தொடங்குகின்றது, இருப்பதை வைத்து சிறப்பாக வாழ்வோம் என்று எண்ணிக் கொள்பவர்கள் வாழ்க்கை முழுக்க பொம்மையாய் காட்சிகளை கண்டு நகர்ந்து விடுவது உத்தமம்,

டாலர் நகரம் இரண்டாவது அத்தியாயம்,

18 comments:

Paleo God said...

தல, சவுக்கியமா?

ஈமு கோழிக்கு பணத்தக் கட்டி ஏமாந்தவங்களுக்காக ஏன் பரிதாபப்படறீங்கன்னு தெரியல :))

பவுர்ணமி அன்னிக்கு திருட்டு நடந்து வீடு முழுசும் தொடச்சிட்டுப் போச்சின்னா 1000 சவரன் தங்கம் கூரையப் பிச்சிகிட்டு கொட்டும்னா அதையும் செய்யும் பேராசைக்காரங்களுக்கு ஈமு இல்ல எவ்ளோ மாமு வந்து ஆப்பு வெச்சாலும் பத்தாது.

இந்தப் புலனாய்வுப் பத்திரிகைங்கல்லாம் செம காமடி பாஸ் அந்தக் காசுக்கு எதுனா பொற வாங்கிப் போட்டு புண்ணியம் தேடிக்குங்க:))

கிரானைட்டைக் கையிலெடுத்து டாஸ்மாக்கை மூடி அம்மா அடுத்த ஆட்டையைத் துவங்குதான்னு பார்ப்போம். கிடைச்சா ஆட்சி இல்லைன்னா குடி காத்த குமரின்னு தமிழினத்தைக் குடியிலிருந்து காத்த பெருமையாவது அந்த அம்மாவுக்குக் கிடைக்கும்.

வவ்வால் said...

ஜோதிஜி,

ரொம்ப லேட்டு :-))

இப்போ ஈமு பிசினெஸ் கதை முடிஞ்சு அடுத்த பிசினெஸ்சில் முதலீடு செய்ய மக்கள் தயாராயிட்டாங்க :-))

மாஃபியா என்றால் ஆர்கனைசைடு கிரைம் என சொல்லலாம்னு ஒரு வழக்கம் வந்து போச்சு... எனவே சொல்லலாம்.

இது கிரானைட் ஊழல் என சொல்வதை விட திருட்டு ஆகும்.

---------
//வலைதளம் முதல் செய்திதாள்கள் வரைக்கும் அத்தனைக்கும் இப்போது லைட் ரீடிங் என்பதே தாரக மந்திரமாக இருக்கிறது, கடினமான விசயத்தை கொடுத்தால் பக்கத்தை நகர்த்தி சென்று விடுவார்கள்//

ஹி...ஹி நான் போரடிக்கிறாப்போல எழுதுறேன்னு சொன்னதா நியாபகம் :-))

ஜோதிஜி said...

ஷங்கர் இங்கே நல்ல விதமாக "காத்தாடுவதால்" மனமும் உடலும் நலமாக இருக்கிறது, குடி காத்த குமரியா? பேரு பெத்த பேரு நீரு லேது ங்ற வாக்கியத்திற்கு எப்போது போல நம்ம வவ்வால் அர்த்தம் சொன்னா பராவாயில்லை.

திருப்பூரில் பாசி நிறுவனம் பட்டு கேள்விப்பட்டுருப்பீங்க தானே? எனக்குத் தெரிந்த பல நிறுவன முதலாளிகள் கூட ஆசைக்கு அடிமையாகி இழந்த தொகை பல லட்சங்கள். என்ன செய்வது? ஆசை பயமறியாது,

வவ்வால்

கிரானைட் விசயத்தில் அந்தந்த பகுதியில் உள்ள தலையாரிகள், கிராம நிர்வாக அதிகாரி அளவில் உள்ள மக்கள் தான் வெயிலில் ஓய்வெடுக்கக்கூடிய வழியில்லாமல் வலியோடு பாராம் சுமக்கின்றார்கள். ஓய்வு கூட கொடுக்காமல் பெண்டு கழட்டுகிறார்களாம்,

mohamed salim said...அருமையான அலசல் நண்பா!! இன்றைய ஊடகங்கள் பணம் பன்னுவதே குறிக்கோள் !! PRP வரபோகும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அட்சயபாத்திரம்


காரணம் தேவையைப் பொறுத்தே அதிகாரங்கள் பிரயோகிக்கப்படுகின்றது, அவசரங்கள் கருதி அரசியலில் எதுவும் செய்யப்படுவதில்லை, அவசியங்கள் கருதியே இங்கு ஒவ்வொன்று நடைபெறுகின்றது, காரணம் ஜனநாயகத்திற்கு நாம் கொடுக்கும் விலையென்பது இதுவே தான்,

மிகவும் சத்தியமான வார்த்தைகள்

ராஜ நடராஜன் said...

ஷங்கர்!பேருக்கு கூடவா ட்ரேட் மார்க் போடுவாங்க:)

ஈமு கோழி என்று மட்டுமல்ல,மரம் வளர்த்து உங்க கையில் கொடுப்போமென்றோ,சிட்பண்ட்ஸ்ல காசு குட்டி போடுமென்பதோ கூட வாழ்வில் முன்னேறனும்ங்கிற நல்ல எண்ணம்தான்.அதே போல் ஒரு நிறுவனத்தை துவங்கி விளம்பரப் படுத்துவதும் அதே மாதிரிதான்.இதில் பிரச்சினை எங்கே துவங்குகிறதென்றால் கையில் காசு சேர்ந்தவுடன் வேறு முதலீடு செய்து பெருக்குவோம் என்று நினைப்பதோ அல்லது ஏதாவது குஜிலிகள் விசயத்தில் மாட்டிக்கொண்டு பணத்தை தாரை வார்த்து விடுவது போன்று பல காரணங்கள் இருக்கும்.

ஒரு நிறுவனம் அரசாங்க உரிமம் பெற்றே உருவாகிறது.எனவே தனியார் மயமாக இருந்தாலும் கூட ஒரு நிறுவனம் சரியாக செயல்படுகிறதா என்ற மேற்பார்வைக்கான அதிகாரம் அரசு துறைக்கு வேண்டும்.ஒரு நிறுவனத்தின் இழப்பிற்கு காரணமானவர்களை ஜெயில் போட்டு விட்டு தண்டனை தருவது மட்டும் முதலீடு செய்தவர்களின் தீர்வாகி விட முடியுமா?

ஒரு நிறுவனம் துவங்கும் பட்சத்தில் நிறுவன உத்தரவாதத்திற்கு காப்பீட்டு முன்பணம் என வங்கி முதலீடும்,வளர்ச்சியைப் பொறுத்த மறு ஆய்வு தொகை போன்றவைகளையெல்லாம் அமுல் படுத்த வேண்டும்.

இப்ப மல்லையாவுக்கு நஷ்டம்ன்னா அரசு உத்தரவாத கடன் தருகிற போது இதனை ஏனைய துறைகளுக்கும் ஏன் செயல்படுத்துவதில்லை?ஒரு நிறுவனம் உருவான பின் அதன் கட்டமைப்புக்களை நிர்வாகிக்க முடியவில்லையென்றால் அதனை இன்னுமொருவருக்கு மாற்றி விடும் விற்பனை முறைகள் வரவேண்டும்.சுருட்டிக்கொண்டு ஓடி விடலாம் என்பதோ ஜெயில் சோறு திங்கலாம் என்பதோ தவறான அணுகு முறை.தொழில் வளர்ச்சியும் பாதிக்க கூடாது,முதலீட்டாளர்களும் பயன் பெற வேண்டும்.

இவ்வளவு நாட்கள் நல்லா கோழி அடிச்சு சாப்பிட்டுகிட்டுத் தானே இருந்தீங்க எல்லோரும்.ஈமுவுல ஓட்டை ன்னு இப்ப கோழிப் பண்ணையிலும் விவகாரம் என்பது என்ன நடைமுறைப் பொருளாதாரக் கொள்கை என்று தெரியவில்லை.நிறுவன களையெடுப்புக்களை கண்காணிக்காது முதலீடு செய்பவர்களையெல்லாம் துரத்தி விட்டு விட்டு எப்படி பொருளாதார முன்னேற்றாம் காண முடியும்.ஈமு மட்டுமல்ல,சிட்பண்ட்ஸ் உட்பட நொடிஞ்சா ஜெயிலுக்கு அனுப்புவதோடு நிறுவனத்தை அரசு துறை அல்லது செமி நிர்வாக முறைக்கு மாற்ற வேண்டும்.

வவ்ஜி பஜ்ஜி சாப்பிட்டு வருதான்னு பார்க்கிறேன்.

ஊரான் said...

எந்தக் கொள்ளையும் அரசியல்வாதிகள்-அதிகாரிகளுக்குத் தெரியாமல் நடப்பதில்லை. கொள்ளையில் இவர்களுக்கு உரிய பங்கு கிடைக்காத போதுதான் கொள்ளை வெளிச்சத்துக்கு வருகிறது.

நல்ல பகிர்வு! நன்றி‘!

துளசி கோபால் said...

போட்டுத் தாக்கினாலும் இதுகளுக்கு புத்தி வருமா? :(

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com said...

தெளிவூட்டும் பதிவு
பகிர்வுக்குமனமார்ந்த நன்றி

Unknown said...

பேசாம நாம எதுனா கோழி.. இல்ல.. நாய் ..பூனை வளர்ர்பு திட்டம் ஆரம்பிக்கலாம ஜி...

வவ்வால் said...

//வவ்ஜி பஜ்ஜி சாப்பிட்டு வருதான்னு பார்க்கிறேன்.//

ராச நடராசர்,

கடை ஓனர் ஜோதிஜியை கூப்பீடாமல் என்னை கூப்பிடுறிங்களே ,எந்த ஊரு நியாயம் இது?

அப்புறம் நானும் கூப்பிட்டாகளேனு ஏதேனும் கருத்து சொல்லப்போக ஒரு கும்பலே ஓடி வந்து என்னை கும்மும் ,அதை நீங்கி வேடிக்கைப்பார்க்கணும் :-))

இங்கே யாருக்கும் உண்மையை அல்லது மாற்றுக்கருத்தினை வரவேற்க மனதில்லை, ஏதோ ஜோதிஜி, நிஇங்க எல்லாம் மட்டுறுத்தல் வைக்காம இருப்பதால் ஃப்ரீயா வந்து சொல்லிக்கிட்டு இருக்கேன், அது பிடித்த அல்லது பிடிக்காத கருத்தா என்றெல்லாம் யோசிப்பதே இல்லை,அந்த நேரத்தில் அந்த எழுத்து என்ன தூண்டுகிறதோ அதனைப்பொறுத்தே.

சரி உங்க விதி வலியது போல :-))

எந்த திட்டமாக இருந்தாலும் வியாபார விதிகளுக்கு உட்பட்டு லாபம் வருவதாக சொல்லவேண்டும், இல்லாத மதிப்பினை உயர்த்தி சொல்லி முதலீட்டாளர்களை இழுப்பது ஏமாற்று வியாபாரம்.

அரசைப்பொறுத்தவரையில் புகார் வராமல் நடவடிக்கை எடுக்க முடியாது.

இப்போது பாசி நிறுவன மோசடி எப்படி எனில் ஷேர் மார்க்கெட்டில் கிடைக்கும் வருவாயை விட பல மடங்கு வரும் என போலியாக வாக்குறுதி கொடுத்து ,பின்னர் பணம் கொடுக்காமல் ஏமாற்றி இருக்கிறார்கள், அதே போல தான் ஈமுவும் அதன் விற்பனை லாபத்தினை விட போலியாக பலமடங்கு சொல்லி முதலீட்டாளர்களை இழுத்துள்ளார்கள்,ஆரம்பத்தில் வசூலாகும் பணத்தினை குறைவான முதலீட்டாளர்கல் இருக்கும் போது ஒழுங்காக கொடுப்பார்கள், அதிகமாகும் போது கொடுக்க முடியாது ,எனவே வசுலானதை அமுக்கிக்கொண்டு ஓடுவார்கள், எனவே இவை எல்லாம் 420 கேசில் வருபவையே.

இதனை தடுப்பதால் எப்படி வளர்ச்சி குறையும் என சொல்கிறீர்கள். உண்மையான தொழில்வளர்ச்சிக்கான முதலீடு வேறு.

கைத்தறி/விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் எப்படி இயங்குகின்றன.

உறுப்பினர்களுக்கு பாவு நூலை எடைப்போட்டு கொடுத்து அவர்கள் நெய்து கொடுத்தவுடன் மீண்டும் எடைப்போட்டு ஒரு விலை நிர்ணயம் செய்து ,வாங்கிக்கொண்டு நூலின் விலையைக்கழித்துவிட்டு கொடுக்கிறார்கள்.

இதில் குறைவான வருவாயே வருகிறது. தொடர்ந்து இம்முறை நடந்தும் வருகிறது.

இம்முறையில் அரசின் மாநியம்பெருவதில் நடக்கும் மோசடி வேறு. இங்கே சங்கம்,அதில் இருப்பவர்கள் இடையே இருக்கும் வியாபாரம் மட்டும் சொல்கிறேன்.

அதுவே ஒரு நிறுவனம் வந்து நீங்க ஒரு தறிப்போடுங்க, அதுக்கு 1 லட்சம் எங்கக்கிட்டே கொடுத்தா நாங்க தறி அமைச்சு தருவோம், தினம் நூல் தந்து வாங்கிப்போம் நெய்த துணியை வாங்கிப்போம். இதில் மாசம் உங்களுக்கு ஒரு லட்சம் வருமானம் வரும் என சொன்னால் அது மோசடி.

வியாபார நியதிக்குட்படாத முதலீட்டு திட்டங்கள்/வேலைவாய்ப்பு திட்டம் எல்லாமே மோசடி தான், அதனை தடுத்தால் வளர்ச்சி பாதிக்காது.

Anonymous said...

உங்கள் எழுத்தினை ரசித்தேன்.

நட்புடன்
- மலைநாடான்

priyamudanprabu said...

nice

தனசேகர் said...

பத்தில் ஏழு பேர் இதற்கு பணம் கட்டி மீதம் மூவரையும் ஏளனமாய்ப் பார்த்தே பணம் கட்டத் தூண்டியுள்ளனர். பணம் கட்டியோரும் இது ஏமாற்று தொழில்தான், ஆனால் நான் ஏமாறாமல் முதலிலேயே பணம் கட்டி சம்பாதிதுவிட்டால் போதும் என இறங்கினர். இது ஏமாற்று வேலை இல்லை என சொல்லியவர்களிடம் ஒரே கேள்வி தான் கேட்டேன். யாரவது போட்ட பணத்திற்கு மேல் திரும்ப‌ வாங்கி அதையும் ஈமுவில் முதலீடு செய்யாமல் இலாபம் அடைந்தார்களா ? எனக்குத் தெரிந்து ஒருவர்கூட இல்லை. பெருந்துறையில் இதை வெளியே வராமல் தடுக்கவே காவல் நிலையம் , நிருபர்கள் என எனைவருக்கும் பல லட்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம். இதற்கு மேல் இந்த நிறுவனம் 300 கோடிக்கு தங்கம் வாங்கி இருப்பு வைத்திருந்து அது 700 கோடியாக மதிப்புயர்ந்ததாக புரளி வேறு.

நாட்டுக்கோழி வளர்ப்பு நல்ல தொழில் போலவே பலரை ஏமாற்றி இருக்கிறார்கள். என் அண்ணன் ஒருவர், நாட்டுக்கோழி வளர்ப்பும் இலாபகரமானது இல்லை என விலாவாரியாக எடுத்துக் கூறினார். 36 நாளில் வளரும் வெள்ளைக்கோழிக்கே அடக்கம் 42-55 (பெரிய அளவில் தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு) ரூபாய் ஆகுமென்றால், 100 ரூபாய்க்கு (கொள்முதல் விலை) விற்கும் வண்ண மயமான பொங்கு கொண்ட வெள்ளைக்கோழிடின் இனமான‌ இந்தக் கோழிகளுக்கு 3-4 மாதம் வளர்ப்புச் செலவு எவ்வளவு ஆகும் ? நாம் யோசிக்காமல் விளம்பரத்தை நம்பி பணத்தை இழப்பதும் (அது ஒரு போதும் முதலீடு அல்ல) , விளம்பரத்தை நம்பி பத்து ரூபாய் பொருளை முப்பது ரூபாய் கொடுத்து வாங்குவதும் (உங்களின் இன்னொரு பதிவில் சொன்னதுபோல‌) மிகப்பெரிய முட்டாள் தனம்.

நமக்குத் தெரியாமலே இன்னொரு மூட நம்பிக்கையிலும் ஏமாந்துகொண்டிருக்கிறோம். அது நாம் வாங்கும் மருந்துகளில். ஒரே இரசாயனமுள்ள இரு வேறு நிறுவனங்காளின் மருந்து விலையில் 50-100 சதவீதம் விலை வித்தியாசம். இதை எளிதில் நம்ப வைக்க விலை குறைவான மருந்தென்றால் அது பொய் மருந்து, அசுத்தமானது என பொய்ப் பிரசாரம். விலை அதிகம் கொண்ட மருந்து பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு பல சலுகைகள் - வெளிநாட்டு பயணங்கள் உட்பட. இதை வெளிக்கொணர அமெரிக்காவில் புது சட்டம் வருகிறது (Sunshine Act). நாம் எப்போது திருந்தப் போகிறோம் எனத் தெரியவில்லை.

nerkuppai thumbi said...

ஈமு கோழி விஷயத்தில் முதலீடு செய்தார்களா/ டிபாசிட் செய்தார்களா என்பதே கேள்வி.
முதலீடு செய்திருந்தால் செய்யும் பொது அந்த நிறுவனம் எவ்வாறு செயல் படப்போகிறது? சொல்லும் அளவுக்கு லாபம் ஈட்டுமா, நம் முதலீடு திரும்பி வருமா என்று ஆலோசித்து பணம் போட வேண்டும். ஒரு கால் டாக்சி ரண்டு லட்சம் போடுங்கள்; கம்பனியின் எஸ் எம் எஸ் தினமும் வருகிறது: மாத வருமானம் இவ்வளவு; ஐந்து ஆண்டுகள் முடிவில் இந்த பணமும் திரும்பிக் கொடுக்கப்படும் என்று செய்தி. அந்த அளவுக்கு லாபம் வரும் தொழில் எனக்குத் தெரிந்த வரையில் இல்லை. இப்போது அவ்வளவு வருமானம் வந்து கொண்டு இருந்தாலும், போகப்போக போட்டி வந்து மார்ஜின் குறையும். போட்ட பணம் திரும்ப கிடைப்பது கடினமே. ஆனால் இவ்வாறு ஆலோசிக்காமல் பணத்தை போட்டுவிட்டு, ஓரிரு ஆண்டுகள் பணம் வந்து கொண்டு இருக்கும் போது இருந்து விட்டு, பணம் வருவது நின்ற வுடன் குய்யோ, முறையோ, ஊழல், ஊழல், பணத்தை சுருட்டி விட்டான் என்று அலறுவது சரியா?

இரண்டு: டிபாசிட்டாக இருந்தால் ரிசர்வ் பாங்கு விதி முறைகள் உள்ளன. வங்கி அல்லாத கம்பனிகள் டிபாசிட்டுகள் பெறுவதை ஒழுங்கு படுத்துவது நூறு சதவீதம் இல்லை. NBFC என்ற ரீதியில் விதிகள் வேறு; இதர கம்பனிகளுக்கு விதிகள் வேறு. இந்த மேலாண்மையில் பெரியதாக ஓட்டை உள்ளது. இது போன்ற நிறுவனங்கள் அந்த ஓட்டைகளைப் பயன்படுத்தி, எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் நிர்வாகம் செய்கின்றனர்.
தட்டிக் கேட்க ரிசர்வ் வங்கிக்கும் அதிகாரம் சரியாக இல்லை. யார் கேட்பார்கள் என்று தொடர்கிறது.

அடிப்படையில் ஒரு உண்மை: மிக, மிக மிக விரைவில் கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்று கனவு காண்பவர் நூற்றில் ஐம்பது பேருக்கும் மேலே இருக்கலாம் என்று தோன்றுகிறது.

அந்தப் பேராசை மாறாத வரைக்கும் இது போன்ற செய்திகள் வந்து கொண்டே இருக்கும்.

ஜோதிஜி said...

ஊரான் நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. ஈமு விவகாரத்தில் சம்மந்தப்படட முதலாளி காப்பாற்ற அவர் வக்கில் சொன்ன வாசகம் என்ன தெரியுமா? அவர் ஒரு தலித். அவர் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தான் அத்தனை பேர்களும் பழி வாங்குகிறார்கள் என்று சொல்லியுள்ளார். எப்படி? தொடக்கத்தில் அதிகாரிகள் விழித்துருந்தால் இந்த மோசடி தடுக்கப்பட்டுருக்கும்.

டீச்சர் நிச்சயம் எப்படி புத்தி வரும்? முதலீடு போட்டவர்கள் தங்களது புத்தியையும் அடகு வைத்து விட்டு தானே இது போன்ற இடங்களுக்குச் செல்கிறார்கள்? அடுத்து நாட்டுக் கோழி? அடுத்து மாடு? ஒரு வேளை அடுத்து மண்புழு உரமாகக்கூட இருக்கக்கூடும். இருக்கவே இருக்கு விளம்பர உலகம். புதிய ஆசைகளை உருவாக்கி விடாதா?

வாங்க தனபாலன், ரமணி.

வினோத் அது ஒன்னு தான் நமக்கு பாக்கி. செய்துடலாம்.

ஜோதிஜி, நிஇங்க எல்லாம் மட்டுறுத்தல் வைக்காம இருப்பதால் ஃப்ரீயா வந்து சொல்லிக்கிட்டு இருக்கேன், அது பிடித்த அல்லது பிடிக்காத கருத்தா என்றெல்லாம் யோசிப்பதே இல்லை,அந்த நேரத்தில் அந்த எழுத்து என்ன தூண்டுகிறதோ அதனைப்பொறுத்தே

வவ்வுஜி இந்த பெருமை விந்தைமனிதன் ராஜாராமனுக்குத் தான் சேரும். அவர் தான் கதவை திறந்து வைங்க என்றார். இது வரைக்கும் குப்பை கூளங்கள் எதுவும் இல்லத்திற்குள் வந்து விழவில்லை. இனி எப்படியோ?

நன்றி மலைநாடன்.

ஜோதிஜி said...

வாங்க பிரபு.

தனசேகர் ரொம்ப பொறுமையா படிச்சு நிதானமாக விமர்சனம் செய்த பாங்கு அழகு.


பேராசை மாறாத வரைக்கும் இது போன்ற செய்திகள் வந்து கொண்டே இருக்கும்.

இது தான் பதிவின் செய்தி தம்பி.

ஜோதிஜி said...

இப்ப மல்லையாவுக்கு நஷ்டம்ன்னா அரசு உத்தரவாத கடன் தருகிற போது இதனை ஏனைய துறைகளுக்கும் ஏன் செயல்படுத்துவதில்லை?ஒரு நிறுவனம் உருவான பின் அதன் கட்டமைப்புக்களை நிர்வாகிக்க முடியவில்லையென்றால் அதனை இன்னுமொருவருக்கு மாற்றி விடும் விற்பனை முறைகள் வரவேண்டும்.சுருட்டிக்கொண்டு ஓடி விடலாம் என்பதோ ஜெயில் சோறு திங்கலாம் என்பதோ தவறான அணுகு முறை.தொழில் வளர்ச்சியும் பாதிக்க கூடாது,முதலீட்டாளர்களும் பயன் பெற வேண்டும்.

நடாஜி நான் கேள்வி பட்டவரைக்கும் மல்லையா வேண்டுமென்றே செய்யும் தில்லாலங்கடி என்று கேள்விபட்டேன்.