" நாட்டின் நலனை கருத்தில் கொண்டே பெட்ரோல் விலையை உயர்த்தினோம். இனிமேலும் உயராது என்று என்னால் உறுதியளிக்க முடியாது. இது குறித்து எவருடனும் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியமில்லை. "
கடந்த வருடம் நவம்பர் மாத முதல் வாரத்தில் பெட்ரோல் விலை ரூபாய் 1.80 என்று உயர்த்திய போது எதிர்ப்பு தெரிவித்து தன்னை சந்திக்க வந்திருந்த மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்த எம்பிகளிடம் பிரதமர் மன்மோகன் சிங் சொன்னது வார்த்தைகள் இது.
முடிவெடுப்பதில் தயக்கம் காட்டுபவர். சோனியா பின்னால் ஒளிந்து கொண்டிருப்பவர். என்று பிரதமர் மன்மோகன் சிங் குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டிருந்த கவலையை அந்த நிமிடத்தில் தவிடுபொடியாக்கிவிட்டார்.
மன்மோகன் சிங் மிகச் சிறந்த பொருளாதார மேதை. இனி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விரைவாகும் என்று இவர் பிரதமராக வந்தமர்ந்த போது சொன்னவர்களின் வாயில் ஒரு லிட்டர் பெட்ரோலைத்தான் ஊற்ற வேண்டும். வளமான எதிர்கால இந்தியா என்ற கனவை ஒவ்வொரு இந்தியனும் மனதில் மட்டுமே சுமந்திருக்க வேண்டும் என்பதைத் தான் சொல்லாமல் இரண்டாவது முறையாகவும் பிரதமராக வந்தமர்ந்து செயலில் காட்டிக் கொண்டிருக்கிறார்
கடந்த 2004-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற போது, பெட்ரோல் விலை ரூ. 37.84 ஆக இருந்தது. இந்த மாதத்தில் உயர்ந்துள்ள விலை வரைக்கும் நீங்களே ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள். 100 சதவிகிதத்திற்கு அதிகமாகவே உயர்ந்துள்ளது.
ஏழு வருடங்களுக்குள் ஏனிந்த விலை உயர்வு?
இவருக்கு ஒரு படி மேலே போய் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிதியமைச்சர் மந்திரி பிரணாப் முகர்ஜி அந்த சமயத்தில் மேற்கு வங்காள பெர்காம் வந்திருந்த போது நிருபர்களிடம் பொங்கியே தீர்த்துவிட்டார்.
" இது எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த முடிவு. அரசாங்கத்திற்கு சம்மந்தம் இல்லாத விசயம் " என்றார்.
அவர் கூற்றுப்படி இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவிற்கு வெளியே இருப்பது போலவும் அது மத்திய அரசாங்கத்திற்கு கட்டுபடாத தேவதூதன் போலவும் சுட்டிக்காட்டினார். அதென்ன இந்த பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மட்டும் இந்த தன்னாட்சி அதிகாரம்?
ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசுக்கும் இந்த பெட்ரோல் விலை விவகாரம் பெரிய மண்டையடி சமாச்சாரமாக இருந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் கச்சா எண்ணெய் நிலையில்லாத விலை என்று சடுகுடு ஆட்டம் காட்ட மற்றொரு பக்கம் டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு அழிச்சாட்டியம் செய்ய என்ன தான் செய்ய முடியும்.
விலையை உயர்த்த வேண்டுமென்றால் அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் தேர்தல் சமயமென்றால் எப்படா வாய்ப்பு கிடைக்கும்? என்று எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டி தயாராக காத்திருப்பார்கள். அதுதான் ஆளை விட்டால் போதுமென்று "தன்னாட்சி அதிகாரம்" என்ற மந்திர வார்த்தைக்குள் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழியை காட்டி விட்டு ஒதுங்கி விட்டார்கள். நிதிமந்திரி சொன்னதும் ஒரு வகையில் உண்மை தான்.
எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றிய விலையின் அடிப்படையில்தான் ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த எண்ணெய் நிறுவனங்களுக்கு 2010 ஜுன் மாதம் முதல் தன்னாட்சி அதிகாரத்தை கொடுத்ததும் இவர்களே தான். .இதற்குப் பிறகு எட்டு முறை விலையேற்றம் நடந்துள்ளது.
கிரிட் பாரிக் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட மன்மோகன் சிங் அரசாங்கம் இனி எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் கொள்கை முடிவுக்காக அரசாங்கத்தை சார்ந்திருக்க வேண்டியதில்லை என்று பச்சைக் கொடி காட்ட பெட்ரோல் விலை ஒரு பக்கம் சர் சர் என்று உயர விலைவாசிகளும் விண்ணில் பறக்கத் தொடங்கியது. ஆனால் இந்த புத்திசாலிகள் ஒன்றை மறந்து விட்டார்கள். நாட்டில் எண்ணெய் மற்றும் எரிபொருளின் விலைவாசி உயர்வென்பது அதற்கான விலை உயர்வு மட்டுமல்ல. சராசரி மக்களின் அத்தனை அடிப்படை பொருட்களின் விலைவாசிகளையும் பதம் பார்க்கும் என்பதை எளிதாக மறந்து போய்விட்டார்கள்.
சாதாரணமாக சர்வதேச ச்ந்தையின் செயல்பாடுகளை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் 15 நாளைக்கு ஒரு முறை விலையை தீர்மானம் செய்கிறார்கள்.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள் மூலமே நமக்குத் தேவைப்படும் டாலர் கிடைக்கின்றது. இந்த டாலர்கள் நம் கைவசம் இருந்தால் மட்டுமே சர்வதேச சந்தையில் நம் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு நிற்க முடியும்.
காரணம் நமக்குத் தேவைப்படும் 74 சதவிகிதம் கச்சா எண்ணெய் வெளிநாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். இதற்கு அமெரிக்கா டாலர் இருந்தால் மற்ற நாடுகளில் இருந்த கச்சா எண்ணெய் வாங்க முடியும். மீதியுள்ள 26 சதவிகிதம் மட்டுமே உள்நாட்டில் கிடைக்கின்றது. இந்த உள்நாட்டு தயாரிப்பும் தனியார்களான ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் குரூப் நிறுவனங்களின் கைகளில் இருக்கிறது. இவர்களும் இந்தியா முழுக்க பெட்ரோல் நிலையங்களை கடை விரித்தார்கள். இந்த இடத்தில் ஆச்சரியப்பட வேண்டிய விசயம் ஒன்று உண்டு. நிதி ஆதாரத்தைப் பெருக்க பெட்ரோல் மூலம் கிடைக்கும் வரிகளை மக்களிடமிருந்து வசூலிக்கும் நமது அரசாங்கம் இந்த தனியார்களுக்கு எந்த கட்டுப்பாடுகளோ, வரிகளோ இல்லை என்பதை குறிப்பிட்டு சொல்லத்தான் வேண்டும். காரணம் அவர்கள் அரசாங்கத்தை ஆட்டிப் படைக்கும் முதலாளிகள்.
ஆனாலும் அரசாங்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் விலையோடு போட்டி போட முடியாமல் குறிப்பட்ட காலகட்டத்திற்குள் முட்டுச் சந்துக்குள் மாட்டிக் கொண்டு கடையை மூடத் தொடங்கி விட்டார்கள். இவர்கள் கொடுத்த நெருக்கடியே இனி அரசாங்கம் பெட்ரோல் விலையை தீர்மானிக்கக் கூடாது என்பது.
தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு நட்டமென்றால் நம்முடைய பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் எப்படியிருக்கிறது?
இந்தியாவில் முக்கியமான மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்ரேசன், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம். இந்த மூன்று நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவிற்கு தேவைப்படும் எரிபொருள் தேவைகளை கவனித்துக் கொள்கின்றது.
இந்த பெட்ரோல் விலையேற்றம் என்பதற்குப் பின்னால் கச்சா எண்ணெய், பேரல், சர்வதேச சந்தை, இந்திய ரூபாய்க்கான டாலர் மதிப்பு, வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் என்று வெகுஜனத்திற்கு தெரியாத பல விசயங்கள் உண்டு. அத்தனையும் டாலர் அரசியல்.
ஆனால் இவர்கள் சொல்லாத பல விசயங்கள் இதற்குப் பின்னால் உண்டு. உலக மேஸ்திரி அமெரிக்கா எப்படி பெட்ரோல் வளமுள்ள நாடுகளை குறிவைத்து நடத்தப்படும் கேவலமான அரசியலைவிட இந்தியாவில் பெட்ரோல் விலையேற்ற அரசியல் மகா மட்டமானது. .
நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் அப்படியே கிடைத்து விடுவதில்லை. கச்சா எண்ணெய்க்காக, எண்ணெய்ப் படுகைகளில் துரப்பணமிடும்போது, அதை எரிபொருளாகப் பயன்படுத்துகிறோம். அதற்குப் பிறகு கச்சா எண்ணெய் கிடைக்கிறது. அல்லது நேரிடையாக இந்த கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கின்றோம். அதன் பிறகே சுத்திகரிப்பு பணி தொடங்குகின்றது.
அந்தக் கச்சா எண்ணெயில் இருந்து சமையல் எரிவாயு, பெட்ரோல், நாப்தா, கெரசின், விமான எரிபொருளான வெள்ளை பெட்ரோல், டீசல் வகைகள், ஆயில் வகைகள், தார், மெழுகுகள் என பிரித்து எடுக்கப்படுகின்றன. இது ஒவ்வொன்றுக்கும் உண்டான விலையை வைத்து மதிப்பு கூட்டப் படுகின்றதா? இல்லை மொத்தமாகவே சித்தம் போக்கு சிவன் போக்கு என்று விலை என்று பெயரில் கண்க்கு காட்டுகிறார்களா என்பதும் புரியாத மர்மமே?
எதிர்க்கட்சி, எதிரிக்கட்சி எவரும் இது குறித்து அக்கறைப்படுவதில்லை. மம்தாபானர்ஜி கூட அந்த சமயத்தில் ஆதரவை விலக்கிக் கொள்கின்றோம் என்ற ஆயுதம் எடுத்து அடுத்த நாளே அடக்கி வாசிக்க அந்த நாடகமும் முடிவுக்கு வந்தது. இறுதியாக 2011 நவம்பர் 15 அன்று ரூபாய் 2.22 லிட்டருக்கு குறைக்கப்படுகின்றது என்ற அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்கு தேன் தடவியது போலவே இருந்தது. இன்றும் இதே தான் நடந்தது என்பதை நினைவில் கொண்டு வரவும்.
ஏறக்குறைய ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் மாநில மத்திய அரசாங்கங்கள் சேர்ந்து வசூலிக்கும் வரி மட்டும் 50 சதவிகிதம். அதாவது பாதிக்கு பாதி. ஆமாம் இவ்வளவு வரியும் எங்கே போகின்றது.
ஒரு சின்ன விசயத்தைப் பார்த்தாலே உங்களுக்கே உண்மை நிலவரம் புரியும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி எண்ணெய் நிறுவனங்கள் கொடுத்துள்ள வரவு செலவு கணக்கு இது.
இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் 2006 முதல் 2007 வரை வரி கழித்தது போக பெற்ற லாபம் 7,499 கோடி. இதுவே 2009 முதல் 2010 ல் பெற்ற ஆண்டு வருமானம் 10,220 கோடி. இதைப் போலவே இந்துஸ்தான் பெட்ரோலியம் பெற்ற ஆண்டு வருமானம் 2010 முதல் 2011 வரையில் 10,254 கோடியாகும். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் இதே ஆண்டில் பெற்ற லாபம் 1,546 கோடி ரூபாய். ஆனால் நம்முடைய நிதி அமைச்சர் எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்கிறார். எண்ணெய் நிறுவனங்கள் மற்றொரு பக்கம் சொல்லிக் கொண்டிருப்பது என்ன தெரியுமா? நிலையில்லாத கச்சா எண்ணெய் விலையின் காரணமாக ஒரு லிட்டர் டீசலுக்கு ரூபாய் 6,61 ம், ரேசனில் வழங்கப்படும் மண்ணெண்ணெய்க்கு ரூபாய் 24,63 ம், வீட்டு சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 270 நஷ்டம் ஏற்படுவதாக சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.
உள்நாட்டில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கே இத்தனை லாபமென்றால் சர்வதேச எண்ணெய் நிறுவனங்களில் உள்ள லாப நட்ட கணக்கு என்ன சொல்கின்றது?
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஓபெக் 2004-2008 வரையிலான ஆண்டுகளில் தான் விற்பனை செய்த கச்சா எண்ணெயின் மதிப்பு 3,346 பில்லியன் அமெரிக்க டாலர். அதே காலக்கட்டத்தில் ஜி-7 என்னும் ஏழு நாடுகளின் அமைப்பில் அடங்கிய நாடுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீது விதித்த வரிகளின் மூலம் பெற்ற வருவாய் 3,418 பில்லியன் டாலர்கள் என்கிறது. அதாவது எண்ணெய் ஏற்றுமதி செய்த நாடுகளுக்குக் கிடைத்ததைவிட அந்த எண்ணெயின் மூலம் ஜி-7 நாடுகள் திரட்டிய வரி வருவாய் அதிகம்.
கடந்த 2008 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் பேரல் ஒன்றிற்கு 105 டாலராக இருந்தது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூபாய் 49. இதுவே 2009 ஆம் ஆண்டு விற்ற கச்சா எண்ணெய்யின் விலை 69 டாலருக்கு வந்த போதும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைத்தபாடில்லை. இதுவே இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 72 என்கிற ரீதியில் வந்து நின்றுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் கடந்த நான்கு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலையில் மிகப் பெரிய மாற்றமில்லை.
ஆனால் பெட்ரோல் விலையை உயர்த்த பச்சைக் கொடி காட்டும் மத்திய அரசாங்கம் டீசல் விலையை மட்டும் உயர்த்தவிடுவதில்லை. காரணம் உயர்த்தினால் பொதுமக்களின் கோபத்துக்கு உடனடியாக இலக்காக வேண்டுமே என்பதால்.ஒவ்வொரு முறையும் டீசல் விலை உயர்வு மட்டும் தள்ளிப் போடப்பட்டு வந்தது.
ஆனால் இந்த தள்ளிப் போடலின் பலன், அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மொத்தமாக ரூ180208 கோடி அளவுக்கு நஷ்டம் என்று கணக்குக் காட்டியுள்ளன. அதாவது டீஸல், கெரோஸின், சமையல் எரிவாயு போன்றவற்றை மானிய விலையில் தருவதால் ஏற்பட்டுள்ள நஷ்டம் இது என்று கூறுகின்றன. ஆனால் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட மத்திய அரசு கடந்த நிதியாண்டில் 20,911 மட்டுமே அளித்துள்ளது. இப்போது நம் நினைவில் வர வேண்டியது இரண்டு விசயங்கள். எண்ணெய் நிறுவனங்கள் தாங்களே விலையை நிர்ணயம் செய்து கொள்கின்றன. ஆனால் இறுதியில் நட்டம் என்கிறார்கள். இது தவிர மானியமாக வழங்கப்படும் எரிவாயு, மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கும் மத்திய அரசாங்கம் மானியத் தொகையை வழங்கி விடுகின்றது. ஆனாலும் இறுதியில் நட்டம் என்கிறார்கள் என்றால் இந்த பெட்ரோல் அரசியல் உங்களுக்கு புரிகின்றதா?
எண்ணெய் நிறுவனங்களின் ஆடம்பரச் செலவுகளை யாரும் எந்த கேள்விகளும் கேட்டு விட முடியாது. இந்த நிறுவன ஊழியர்களின் சம்பளம் என்பது சொர்ககத்தில் இருப்பதற்கு சமமானது. உதாரணத்திற்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பணிபுரியும் கடைநிலை ஊழியரின் (1976-ல் வேலையில் சேர்ந்த அட்டெண்டர்) தற்போதைய சம்பளம் ஆண்டிற்கு 45,99,234 ரூபாய். அப்படியென்றால் மேற்பதவிகளில் இருக்கும் அதிகாரிகளின் சம்பளத்தை கணக்கிட்டு பார்த்துக் கொள்ளலாம். இது வெறும் சம்பளம் மட்டுமே. இதைத்தவிர அவர்களுக்கென்று வழங்கப்படும் மற்ற வசதிகள் தனியானது. ஆனால் நட்டத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று ஒவ்வொரு முறையம் புலம்பிக் கொண்டிருக்கும் எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளது.
எண்ணெய் நிறுவனங்களின் உண்மையான லாபம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இவை ஒரு எடுத்துக்காட்டு. இது தவிர எண்ணெய் நிறுவனங்கள் தேவையில்லாமல் செய்து வரும் விளம்பரங்கள் என்று அத்தனையும் சாதாரண குடிமகன் தலையில் வந்து விழுந்து கொண்டேயிருக்கிறது. இதைப்போலவே 50 சதவிகிதம் வரியாக மாநில மத்திய அரசாங்கத்தினரால் வசூலிக்கப்படுவதும் இலவசமாக மாறிவிடுகின்றது.
மாநில அரசாங்கம் தங்களின் அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் தன் பாட்டுக்கு இலவசம் என்ற பெயரில் வரிப்பணத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மாநில அரசாங்கங்கள் வாரி வழங்கும் இலவசங்கள் ஒருபுறம் என்றால் மத்திய அரசாங்கம் வசூலிக்காத வராக்கடன்களின் பட்டியல் ஆண்டுக்கு ஆண்டு நீண்டுகொண்டே போகின்றது. மலைத்து விடாதீர்கள். கடந்த 2011 ஜுன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் இந்தியாவில் பட்டியலிடப்பட்ட 36 வங்கிகள் கொடுத்த வராக்கடன்களின் தொகை 14 லட்சத்து 273 கோடி. இதை ஒவ்வொரு வருட கணக்காக கொண்டு வந்தால் நமக்கு தலைசுற்றி விடாதா? அதைத்தான் மன்மோகன் சிங் தெளிவாக சொல்லியுள்ளார்.
இவ்வளவு பெரிய இந்தியாவை ஆட்சி செய்ய வரிகள் அவசியம் தேவை என்கிறார்.
விஜய் மல்லையா குடி கும்மாளம் என்று ஆட்டம் போட்டுக் கொண்டு சாராய தொழில் அதிபர் என்ற போர்வையில் இருந்தாலும் அவருக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் மத்திய அரசாங்கம் எந்த அளவுக்கு கதறி அவரை காப்பாற்ற முன் வந்தது என்பதை பத்திரிக்கையில் படித்து இருப்பீர்கள் தானே? ஏற்கனவே பிரணாப் முகர்ஜி "தொழில் அதிபர்களை காக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை" என்று வேறு சொல்லியிருக்கிறார். நம்முடைய ஆண்டு கொண்டிருக்கும் அமைச்சர் பெருமக்களுக்கு ஆயிரம் வேலைகள் தலைக்கு மேல் காத்துக் கொண்டிருக்கிறது?
கவலையை விடுங்க.
நடைபயிற்சியும் மிதிவண்டியும் நம் உடல் நலத்துக்கு நல்லது.
ஏறிக் கொண்டிருக்கும் பெட்ரோல் விலையை நினைத்துக் கொண்டே உங்கள் வாழ்க்கையை சற்று மாற்றிக் கொள்ளுங்களேன்.
10 comments:
ஜோதிஜி,
நல்லப்பகிர்வு! த.ம.2012
தெளிவான விரிவுரை!
இரண்டு பெரிய ஜாம்பவான்களின் ரத்தினச் சுருக்கமான விமர்சனத்திற்கும் பாராட்டுரைக்கும் நன்றிங்கோ.
விளக்கமான பதிவு ! நன்றிங்க !
நடைபயிற்சியும் மிதிவண்டியும் நம் உடல் நலத்துக்கு நல்லது.
ஏறிக் கொண்டிருக்கும் பெட்ரோல் விலையை நினைத்துக் கொண்டே உங்கள் வாழ்க்கையை சற்று மாற்றிக் கொள்ளுங்களேன்.
அருமை.
ஜி இதினால் அறியப்படும் நீதி உள்நாட்டில் பெட்ரோல் தோண்டும் நிருவனம் எதுனா ஆரம்பிச்சா... லைப்புல செல்ல்டில் ஆகிடலாம்....
என்னா வெளிநாட்டு இறக்குமதி பெட்ரோலியம் 106 விற்ற விலை விட 69 க்கு விக்கும்போது 100% உயர்ந்துள்ளது ....
அந்த 69ம் இல்லாம நம்ம கிணற்றில் பெரோலியம் எடுத்தாலும் 500% லாபத்துக்கு விக்கலாம்....
எவனும் எந்த கேள்வ்யும் கேட்க மாட்டன் அரசும் குடை பிடிக்கும்....
அதனால பெட்ரோல் நிறுவனம் பம்பு இல்ல.. நிறுவனம் ஆரம்பிக்க என்ன வழி....?
VERY GOOD POSTING WE SHOULD AWARE OF THIS
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு. :-)
ஊரெல்லாம் இரண்டு மணி நேரமாக இருபது லிட்டர் பெட்ரோல் செலவிட்டுக் கொண்டு தேடினேனே, அதற்காகவா? அனு: என்னது?
Post a Comment