பணக்காரர்களின் உலகம்
எப்படி இருக்கும் என்று நீங்கள் எப்போதோவது யோசித்து பார்த்ததுண்டா? உங்களைப் போலவே நானும் பத்திரிக்கைகளில் வரும் உலக பணக்காரர்களின் வரிசைகள் முதல், உள்ளூர் பணக்கார்களின் வரிசைகள் வரையிலும்
படித்துக் கொண்டு தான் இருக்கின்றேன்.
மற்ற நாடுகளின்
எப்படியோ? ஆனால் இந்தியாவில் பணக்காரர்
ஆக வேண்டுமென்றால் மிகப் பெரிய புத்திசாலிதனமோ, கடுமையான
உழைப்போ தேவையில்லை. ஆனால் நிச்சயம்
சாமர்த்தியம் என்பது அவசியம் தேவை.
குறிப்பாக தரகு வேலை பார்க்கத் தயாராக இருந்தால் எந்த துறையிலும் எளிதாக ஜெயித்து
மேலே வந்து விடலாம்.
நாம் பேசப் போவது
பணக்கார உலகத்தின் அரசியல்,பண
செல்வாக்கைப் பற்றியல்ல. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு இந்த பணம்
கடத்தப்படுத்துவதும், அதை கையாளும் வாரிசுகளின் வாழ்க்கையைப்
பற்றியுமே பேசப்போகின்றோம்.
சாதாரண நடுத்தரவர்க்கத்தினரின்
வாழ்க்கையின் போராட்டத்தை போல இவர்களின் போராட்டங்கள் எது குறித்து இருக்கும்? எப்படி இருக்கும் என்பது போன்ற பல
கேள்விகளை அடிக்கடி எனக்குள் கேட்டுக் கொள்வதுண்டு. அதை இப்போது மிக அருகில்
இருந்து பார்த்துக் கொண்டிருப்பதால் மனதில் இருக்கும் ஆச்சரியங்களை பகிர்ந்து
கொள்கின்றேன்.
திருப்பூரில் நான்
கடந்து வந்த பாதையில் பார்த்த பல முதலாளிகளின் வாரிசுகளை தொடக்கம் முதலே பார்த்துக்
கொண்டிருக்கும் காரணத்தால் பல விசயங்களை உத்தேசமாகத்தான் மனதில் வைத்திருந்தேன். பத்தாண்டுகளுக்கு
முன்பு எனக்கும் முதலாளிகளின் வட்டத்திற்கும் இடையே பல படிகள் இருந்தன, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நான் அறிந்து
கொள்ளும் முன்பே அடுத்தடுத்து ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் எதையும் மனதில் வைத்துக்
கொள்ள முடியாமல் கடந்து வந்துள்ளேன். ஆனால்
தற்போதுள்ள பதவியின் காரணமாக மங்கலாக பார்த்த பல விசயங்களை என்னால் தெளிவாக புரிந்து
கொள்ள முடிகின்றது.
வியப்பு ஒரு பக்கம். வேதனை மறு பக்கம்.
நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து
வந்த எனக்கு வெளி உலகம் அறிமுகம் ஆனது முதல் இன்று வரை தினந்தோறும் அடுக்கடுக்கான ஆச்சரியங்கள்.
திருப்பு முனைகளை சந்தித்துக் கொண்டே தான் வருகின்றேன். இருந்த போதிலும் பல புதிர்கள்
இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. எதார்த்த வாழ்க்கையின் ஆச்சரியங்களை
வேடிக்கை பார்த்துக கொண்டிருக்கின்றேன்.
இந்தியாவில் உள்ள சொல்லி
மாளமுடியாத ஏற்றத்தாழ்வுகளும் அதை சகித்துக் கொண்டு அதற்கு தகுந்தாற்போல ஒவ்வொரும்
தன்னை மாற்றிக் கொள்ளும் விதமும் என்னை ரொம்பவே ஆச்சரியப்பட வைக்கின்றது. தவறு யார்
மேல்? என்பது போல பல கேள்விகள் எனக்குள்
இருந்தாலும் அதற்கான முழுமையான விடைகள் கிடைத்தபாடில்லை. ஒன்றோடு மற்றொன்று, அதோடு
இன்னோன்று என்று ஒவ்வொரு மனிதர்களின் குறைகளும் நிறைகளும் கண்ணில் தெரிகின்றது. மொத்தத்தில்
உழைக்க விரும்பாதவர்களின் கூட்டம் மட்டும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கின்றது,.
ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கையில்
கல்லூரி வரைக்கும் ஒரு ஆசையும், வேலைக்கு
வந்த பிறகு மற்றொரு விதமாகவும் தங்களை மாற்றிக் கொள்கின்றனர். வாழ்ந்து முடிக்கும்
போகும் ஏக்கத்தை மட்டும் தங்களின் வாரிசுகளுக்கு கடத்தி விட்டு இறந்தும் போய் விடுகின்றனர்.
பல நடுத்தரவர்க்க இளைஞர் கூட்டத்தின் வாழ்க்கையை பணம் படைத்தவர்களின் வாரிகளின் வாழ்க்கையை
ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருக்கின்றேன். மொத்தத்தில் பணக்காரர்களின் குடும்ப வாழ்க்கையென்பது
வேறுவிதமாகவே உள்ளது.
தொடக்கப்பள்ளி வாழ்க்கையில்
பத்து பைசா ஐஸ்க்கு ஏங்கிய காலமும், பள்ளி இறுதியில் எப்படியாவது ஒரு திரைப்படத்திற்கு போய்விட மாட்டோமா என்ற ஏக்கத்தை
கல்லூரியின் இறுதி ஆண்டில் தான் என்னால் நிறைவேற்ற முடிந்தது. கட்டுப்பாடுகள் ஒரு பக்கம். கடைபிடித்தே ஆக
வேண்டிய கட்டளைகளை மறுபக்கம். இத்தனையும் கடந்து வந்து தான் என்னுடைய இன்றைய வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். தனிப்பட்ட என் வாழ்க்கையில் எந்த குறையும் இல்லாத போதும்
கூட லட்சியங்களை எட்ட முடியாதவர்களின் வாழ்க்கையை மறுபக்கம் பார்க்க வேண்டியதாக உள்ளது.
ஆனால் திருப்பூருக்குள்ளும்
சுற்றியுள்ள பல ஊர்களிலும் பல நிறுவன முதலாளிகளின் வாரிசுகள் படிக்கும் பள்ளி வாழ்க்கையென்பது
வெளிநாட்டு கலாச்சார வாழ்க்கைக்கு சரி சமமாகவே இருக்கிறது. கலாச்சார சிதைவு என்று ஒரு சொல்லில் இதை கொண்டு
வந்தாலும் இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பின்னால் இவர்களுக்காக காத்திருக்கும்
ஒரு நிறுவன சாம்ராஜ்ய சரிவுக்கு காரணமாக அமைந்து
விடுகின்றது என்பது தான் உண்மை. பள்ளிக்கூட
படிப்பறிவு உள்ள ஒருவர் தன் கடுமையான உழைப்பால் 30 வருடங்களாக பாடுபட்டு சேர்த்து உருவாக்கிய
ஒரு ஏற்றுமதி நிறுவன சாம்ராஜ்யத்தை வாரிசுகள் பொறுப்புக்கு வந்த நாலைந்து வருடங்களில்
தலைகீழாக மாற்றி நாறடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிறுவனத்தின் நட்ட கணக்கினால்
வாரிசுகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால்
இந்த நிர்வாகத்தை நம்பி நேரிடையாக மறைமுகமாக வாழ்ந்து கொண்டிருககும் அத்தனை குடும்பங்களும்
நடுத்தெருவுக்கு வந்து விடுகின்றது.
பணக்கார வாரிசுகளின் பள்ளி
வாழ்க்கையென்பது வேறு விதமாக உள்ளது. இந்த பள்ளியில் தான் சேர வேண்டும் என்பதிலிருந்து
தொடங்குகின்றது. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொருவிதமான தராதரம். அந்த பள்ளியின் தரம் குறித்த
கவலையை விட சமூக கௌரவம் அல்லது ஸ்டேடஸ் சிம்பல் என்பதாகத்தான் இவர்களின் வாழ்க்கை தொடங்குகின்றது.
நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தங்கள் வாரிசுகளை ஒரு பள்ளியில் சேர்ப்பதற்கு
முன்பும், சேர்த்த பிறகும் மனதில் கொண்டிருக்கும்
கவலைகளை பட்டியலிட முடியாது. கல்வி குறித்த அக்கறை, எதிர்காலம்
குறித்த கவலை, பிள்ளைகள் பெறவேண்டிய மதிப்பெண்களின் அவசியம் போன்ற
எதுவும் பணக்கார வாரிசுகளுக்கு இல்லை என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்...
மொத்தத்தில் இவர்களுக்கு
எது குறித்தும் கவலையில்லை. வாகனம், வண்டி, பாக்கெட் மணி, முதன்மையாகவும்,
கல்வியென்பது இரண்டாம் பட்சமாகவும் இருக்கின்றது. இவர்கள் பிஞ்சில் பழுத்த
பழமாக வாழ்க்கையில் அனுபவித்தே ஆக வேண்டிய சந்தோஷங்களை உடனடியாக அனுபவிக்கும் வேகமும்
என்னை ரொம்பவே யோசிக்க வைக்கின்றது. ஒரு பள்ளியில்
ஆறாவது படிக்கும் பையன் கெட் டு கெதர் பார்ட்டீ என்ற பெயரில் ஷாம்பெய்ன் மற்றும் பீர்
போத்தல்களை பயணிக்கும் வாகனத்தில் கொண்டு போய் மொத்தமாக இறக்கி கொண்டாடிய கொண்டாட்டங்களை
பார்த்த போது கனவா நிஜமா என்பது போலவே இருந்தது. இவர்கள் படிக்கும் பள்ளிகளும் வசூலிக்க
வேண்டிய பணத்தில் மட்டும் குறியாக இருப்பதால் மௌன சாட்சியாகவே அங்கீகாரம் கொடுத்து
இவர்களை கெடுத்துக் கொண்டுருக்கிறது.
இவர்கள் தட்டுத்தடுமாறி
பள்ளி இறுதியை தாண்டி விட்டால் போதும். நிச்சயம் ஏதோவொரு ஒரு வெளிநாட்டில் பணம் கட்டி
அல்லது பணம் கொடுத்து ஒரு டிகிரியை வாங்க வைத்து விட்டால் வாரிசுகளின் கல்வி வாழ்க்கை
முடிவுக்கு வந்து விடுகின்றது. நிச்சயம் ஆங்கிலம் பேசமுடியம். இந்த ஒரு தகுதியே போதும்
என்ற நிலையில் இருப்பதால் சமூக, தொழில்
அங்கீகாரத்திற்குள் எளிதாக நுழைந்து விட முடிகின்றது.
நம்மூர் சாதாரண பி.காம்
பட்டப்படிப்புக்கு அமெரிக்காவில் தனது மகனை படித்து வைக்க ஒரு முதலாளி செலவளித்த தொகை
ஒரு கோடி ரூபாய். பையன் இப்போது நிர்வாகத்திற்கு
வந்து விட்டார். திருபபூருக்கு அருகே உள்ள ஒரு பள்ளியில் 12 வருடமும் குடும்ப வாடையே
இல்லாமல் படித்து, குடும்பத்தினர்
விரும்பியபடி வெளிநாட்டிலும் படித்து முடித்து நிர்வாக பொறுப்புக்கு உள்ளே வந்த முதல்
வருடம் நிறுவனம் இழந்த தொகை சுமார் ஆறு கோடி. குடும்ப பாசமும் இல்லை. அப்பா உழைத்த
உழைப்பின் அக்கறையும் தெரியாமல் அடுத்தது எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற ரீதியில் எடுத்த
முடிவுகளால் நிர்வாகம் தள்ளாடிக் கொண்டு மூடுவிழாவை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது.
இதனால் நிர்வாகத்திற்கு பாதிப்பு என்பதை விட நிர்வாகத்தை நம்பிய பல துணை நிறுவனங்கள்
தெருக்கோடிக்கு வந்து பல பேர்கள் கடனுக்கு பயந்து காணாமல் போய்விட்டார்கள்.
ஆனால் நடுத்தர
வர்க்கத்தினரின் வாரிகளின் எண்ணங்கள் உயர்வாக இருக்கலாம். உழைப்பும், நேர்மையும் கூட அதிகமாக இருக்கலாம். ஆனாலும் இவர்கள் அத்தனை பேர்களும் இது போன்ற நிர்வாக
வாசனை தெரியாத கூமுட்டைகளிடம் தங்களை அடகு வைத்துக் கொண்டு வாழ வேண்டியதாக உள்ளது.
இதிலும் சிலர் மட்டும் உடைக்கப்பட வேண்டிய வளையங்களை உடைத்துக் கொண்டு உன்னதமான இடத்தை
நோக்கிய பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
29 comments:
katturai arumai ulladhai ullapadi ezhudhiyamaikku nandri
surendran
பெற்றோர்களின் கனவாகத்தான் வாரிசுகள் சீரழிகிறார்கள், எனக்கு கிடைக்காதது என் பையனுக்கு கிடைக்கனும் என்பதாக போதை ஊட்டப்பட்டு வாரிசுகள் சீரழிகிறார்கள். கஷ்டப்பட்டு உழைத்து என்ற கேள்வியின் விடையாக அவர்களின் வாரிசுகளின் வாழ்க்கை பணயம் வைக்கப்படுகிறது. திடிர் பணக்காரன் அடுத்த தலைமுறையை சரியாக உருவாக்கத் திணறுவான் என்பது உங்கள் கட்டுரை புரிய வைக்கிறது
ஒய் திஸ் கொல வெறி கொல வெறி டி...
அப்ப்டின்னு தனுஸ் மாதிரி உங்கள கேட்கணும்னு தோனுது.....
நிர்வாகத்தின் 2ம் நிலை பொறுப்புகளில் இருக்கும் என்க்கு இந்த உயர் நிலை வாரிசுகளிடம் பழகும் வாய்ப்பு அதிகம் இல்லை. ஆனால் செயலர் நிலையில் இருக்கும் உஙகளுக்கு அது அன்றாட வாழ்க்கை...
எனவே ஆதங்கத்தை சொல்லி இருக்கீங்க.....
பால் காசு பாலில் தண்ணீர் காசு தண்ணீரில் போச்சு.ன்னு சொல்ல்லுவாங்க இல்ல.. அந்த மாதிரி தான் இது ....
நிருவனத்தை வளர்த்துறேன் பேர்வழின்னு அப்பா தலமுறையினார் பண்ணிய சேட்டைகளை நீங்கள் அவ்வளவு சுலபத்தில் மறந்திருக்க முடியாது ...
விடி நைட் வேலைன்னு காலை 6 மணிவரை வேலை வாங்கிட்டு .. சரி ..சரி .சட்டுபுட்டுன்னு போய் தூங்கியெழுந்திருச்சு குளிச்சுட்டு காலை 8.30 வந்துருங்கப்பா எனபதில் இருந்து....
வேலை செய்தவங்களுக்கு சனிக்கிழமை தரவேண்டிய கூலிய வேலை இருந்தா கொடுக்காமல் ..வைத்து ஞாயிரு இரவு 8 மணிக்கோ. இல்லை திங்கள் காலை 6 மணிக்கோ கொடுத்தது .. அதுவும் பகுதி மட்டும்...
ஆப்பீஸ் பணியில் இருக்கிறவன்க்களுக்கு மாதம் 1, ,2, தேதிகளில் சம்பளம் கொடுத்தா அப்படியே ஓடிடுவாங்கன்னு 15 தேதிக்கு மேல் தான் சம்பளம்.
சம்பளத்தை கொடுக்காமல் அதை வட்டியில்லா கடனாக செலவு செய்தவர்கள் எத்தனை பேர்....
திபாவளி போனஸ் திபாவளீ வரை இழுத்தடித்து திபாவளீ அன்றைக்கு அல்லது அதற்கு அடுத்த நாள் வாங்கி துணி எடுக்க வழியில்லாமல் தீபாவளியை கம்பனிலேயே கொண்டாடிய மக்கள் எத்தனை....
நான் சொன்னது 1% தான் இது உங்களுக்கே தெரியும்...
அப்படி எல்லாம் கட்டி காத்த சாம்ராஜ்யம்....
தன் கண்முன்னால் உடைபடும்போது ஒன்றும் செய்ய இயலாமல் வேடிக்கை பார்க்கவேண்டும் .. என்று இருப்பதற்கு பெயர்.....
விதி
விதி
விதி..
இப்போ திமுக வின் ஐம்பெரும் தலைவர்களை ஓரங்கட்டி.. பலரை ஒன்றும் இல்லாமல் ஆக்கி .. குடும்பத்தை மட்டும் பார்த்து கட்சியை குடும்ப சொத்தாக்கிய கலைஞரின் கண்முன்..... கட்சியும் குடும்பமும் உடைவதை பார்க்த்திருக்க செய்திருப்பதும் அதேவிதி தான்.
மக்களீன் சாபம் விதியாக வந்து வாட்டுது....
நானும் இதை அனுபவித்து இருப்பதால்.....
இந்த சாம்ராஜியங்கள் சரிவதை பார்க்க்க்ம்போது ...
அவ்வளவு பூரிப்பு... அவ்வளவு மகிழ்ச்சி...
இது கொஞ்சம் குரூரமாக இருன்ந்தாலும்....
சம்பந்தபட்ட நிருவனங்களின் பழய ஊழியர்களிடம் நிறுவன சரிவை பற்றி கேட்டுபர்ருங்க...
அவர்களின் பதிலும் இதுவாக தான் இருக்கும்.
அற்புதமான வரிகள் தோழரே....
என்னை போன்ற படித்த ஆனால் தொழில் வசதியற்ற திருப்பூர் மண்ணின் மக்கள் வேறு வழியின்றி இடம்பெயர வேண்டியுள்ளது.
என்னத்தை சொல்ல இந்த கூமுட்டைகளிடம்?
ஒரு டேபிளுக்காக டெம்போ டெரவலரை திண்டுக்கல்லில் இருந்து திருப்பூர் அனுப்பிய லண்டன் எம்பிஏ மேதாவிடம் (பேமானியிடம்) என்ன எதிர்பார்க்க முடியும்?
http://tamiludhayan.blogspot.in
மிக அருமையான கட்டுரை. பாராட்டுக்கள் நண்பரே!
ஜோதிஜி!வணக்கம்.நேற்றுத்தான் நண்பர் வவ்வாலின் பொருளாதாரம்,திருப்பூர் ஆடை நிறுவனங்கள் பற்றிய பதிவுக்கு உங்கள் பெயரை குறிப்பிட்டிருந்தேன்.
கால அவகாசம் கருதி நீண்ட தொடராக சொல்ல முடியாவிட்டாலும் கூட சிறு பதிவுகளாக தொடருங்கள்.
மீண்டும் வாசிப்பதில் மகிழ்ச்சி.
ஹப்பா ஜோதிஜி திரும்ப வந்தாச்சி... நண்பர்களுக்கு எல்லாம் சொல்லணும்
மொதல்ல அந்த போன எடுப்பா
சிறப்பான கட்டுரை, ஜோதிஜி.
அருமையான பதிவு.
படித்து பெருமூச்சு தான் விட முடிகிறது. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.
ஏற்றத் தாழ்வான சமூகம் குறித்து ஆழமான பதிவை வெளிப்படுத்தியுள்ளீர்கள். இத்தகைய விவரங்கள் சமூகம் ஏன் இவ்வாறு இருக்கிறது என்கிற புரிதலை நோக்கி சிந்திக்கத் தூண்டும் என நம்புகிறேன்.
அழுத்தமான தேடலின் விளைவு
ஏன் இப்படி எல்லாம் இருக்கானுக என்ற ஆதங்கம் உங்கள் கட்டுரையில் தொக்கி நிற்கிறது ஜோதிஜி..
நீங்கள் குறிப்பிட்ட வகை வாரிசு முதலாளிகள் அதிகம் தான் திருப்பூரில்....
ஆனால் கட்டுரை சொல்லப்பட்ட விதம் என்னவோ மிஸ்ஸிங்., இன்னும் ஆழமாகவும் நறுக்குத் தெறித்தாற்போலவும் சொல்லி இருக்கனும்னு தோனுது... விவரங்களை சேகரித்து நிருபர் எழுதியது மாதிரி ஃபீலிங் :))
ஃபார்முக்கு வாங்க வாங்க :)))
நம்மைப்போல மிடில் க்ளாஸ்க்கும் ஸ்லம்ல வாழும் மக்களுக்கும் இதே வித்தியாசம்தான்.
தன் மகளை அமரிக்காவில் படிக்க வச்சுப்புட்டு தன் வயது ஏழைப்பெண்ணை இரக்கமே இல்லாமல் வீட்டு வேலைக்காக அடிமையாக வாங்கப்படுகிறார்கள் மிடில்-க்ளாஸ் மக்கள்.
இந்த மிடில் க்ளாஸ், ஹை க்ளாஸ் பற்றி விமர்சிப்பது விசித்திரம்னு சொல்லலாமா?
தன் மகன் படிப்புக்கு ஒரு கோடி செலவழிப்பது, ஒருவர் தனிப்பட்ட பிரச்சினை. அதை நஷ்டக்கணக்காக வருமானவரியில் சேர்க்காதவரைக்கும் தப்பில்லை! அவருடைய நிர்வாகத்தோல்வியால் ஏற்பட்ட 6 கோடி நஷ்டம், அவர் தந்தையை பாதிக்கவில்லை! மற்றவர்களைத்தான் அதிகம் பாதிக்கிது என்கிறீர்கள்! ஏற்றுக்கொள்ள முடியவில்லை! தன் மகனின் தோல்வியில் மிகவும் பாதிக்கப்படுவது தந்தையே!
I usually dont worry about rich or jealous of them ever! But I used to think about poor. I think that I am lucky I did not grow up in Sivananda gurugulam as an orphan or in a slum where my mom has to go work in a middle-class family (and get abused by them) as a maid to make our living!
***தன் வயது ஏழைப்பெண்ணை***
"தன் மகள் வயது ஏழைப் பெண்ணை" என்று வாசிக்கவும்! :)
***இல்லாமல் வீட்டு வேலைக்காக அடிமையாக வாங்கப்படுகிறார்கள் மிடில்-க்ளாஸ் மக்கள்.**
/வீட்டு வேலைக்காக அடிமையாக வாங்குகிறார்கள் மிடில்-க்ளாஸ் மக்கள்./ என வாசிக்கவும்! :)
ஜோதிஜி,
நாணயத்தின் ஒரு பக்கம், அதுவும் முழுசா இல்லையே :-))
வினோத் குமார் சொல்லியிருப்பதைப்பார்க்கவும்.
பின்னாலடைனு இல்லை எல்லாவற்றிலும் சில வாரிசுகள் அழிப்பதும் உண்டு ஆக்குவதும் உண்டு. ஒருவர் நொடிந்துப்போனாலும் புதிதாக இன்னொரு தொழிலதிபர் வரமாலா போயிடப்போறாங்க.
டா டா ,பிர்லானு புழங்கும் போதே அம்பானி வரவில்லையா இன்று அவங்க வாரிசுகளும் வளர்த்துக்கிட்டு தானே இருக்காங்க.
யார் தொழிலதிபராக இருந்தாரோ அவரே இருக்கனும் அப்போ தான் துணை நிறுவனங்கள் பிழைக்கும் என்பதில் லாஜிக்கே இல்லை.
திருப்பூரில் உள்ள பணக்காரர்கள் பெரும்பாலானோரின் வாரிசுகள் ஊட்டி கான்வென்டில் படிப்பதன் காரணம் status தான். அதற்காகவே வாரிசை அங்கு போய் சேர்க்கிறார்கள். வாரிசை ஊட்டியில் கான்வென்டில் சேர்க்கலைன்னா பணம் இல்லையென்று மற்ற பெருந்தனக்காரர்கள் பேசுவார்கள் ;). படிப்பு பற்றி அக்கறை கம்மி, நல்ல கான்வென்டில் சேர்த்துட்டா அவங்களே பார்த்துக்குவாங்க என்ற நினைப்பு. அப்புறம் ஆங்கிலம் பேசும் திறனே அறிவு என்று எண்ணும் மடமை (இதில் மட்டும் வருமானம் அதிகமாக உள்ளவர்கள், குறைவாக உள்ளவர்கள் என்ற பேதம் இல்லை :( ) மற்ற ஊர்களுக்கும் இவர்களை போல் ஊட்டி கான்வென்ட் மோகம் மெதுவா தொத்திக்கிட்டு வருது.
100 % உண்மை !
தொழில்நடத்த அனுபவமும் அதை நடத்தும் இடத்திலுள்ள சுழ்நிலையயும் வேலை செய்யும் தொழிலாளிகளின் அன்பும் ஆதரவும்தான் வெற்றி பெறச் செய்யமுடியுமே தவிர அமெரிக்க கல்வி உதவாது.
படித்தும் பெருமூச்சு தான் விட முடிகிறது. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
///....! அவருடைய நிர்வாகத்தோல்வியால் ஏற்பட்ட 6 கோடி நஷ்டம், அவர் தந்தையை பாதிக்கவில்லை! மற்றவர்களைத்தான் அதிகம் பாதிக்கிது என்கிறீர்கள்! ஏற்றுக்கொள்ள முடியவில்லை! தன் மகனின் தோல்வியில் மிகவும் பாதிக்கப்படுவது தந்தையே!....///
வருண் அவர்களே..... உணர்வு ரீதியில் பாதிப்பு இருக்கலாம்.. இருக்க வேண்டும்.. பொருளாதார ரீதியில் இங்கே நஷ்டம் என்பது கடன் கொடுத்த வங்கிக்கும்.. கடன் கொடுத்த உப தொழி முனைவோருக்கும் ..காப்பீட்டு நிறுவனங்களூக்கும் தான்.
நிறுவனத்தில் போட்ட முதலை போல பல மடங்கை லாபமாக.. மற்றும் இதர வகையில் வெளியெ எடுத்து அசையா சொத்தாக்கி அதிலிருந்தும் வாடகை வருமானங்களை உருவாக்கி... நிருவனம் ஒரு நாள் .. முற்றாக தீயில் எரிந்து போனாலும் அவர்களின் வாழ்க்கையில் ஒரு இம்மியும் குறைவரா வண்ணம் அரசர்களாக இருக்கிற்ன்றனர்.
தொழில் மூடப்பட்டால் இவர்களுக்கு எந்த நட்டமும் இல்லை யென்றே கூறலாம்...
// யார் தொழிலதிபராக இருந்தாரோ அவரே இருக்கனும் அப்போ தான் துணை நிறுவனங்கள் பிழைக்கும் என்பதில் லாஜிக்கே இல்லை. //
கொடுத்த கடனை வசுல் செய்ய வேண்டாமா?
ஒரு நிறுவனம் மூடப்பட்டல் அதற்கு கடன் கொடுத்த நிருவனம் திவால் ஆகும் அல்லவா
அருமையான பதிவு ...
உங்கள் பதிவு மேலும் பலரை சென்றடைய DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ்.DailyLib
we can get more traffic, exposure and hits for you
To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button
உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்
நன்றி
தமிழ்.DailyLib
நிகழ்காலத்தில் சிவா
நீங்கள் சொல்வது உண்மை தான். அவசர கதியில் ஓடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் நண்பர் சுப்ரமணி என்னை தொடர்ச்சியாக தினந்தோறும் அழைத்து எழுத வைத்த கட்டுரை இது. எழுதுவதை விட திருத்துவது மற்றும் கோர்ப்பது தான் நேரமின்மை காரணமாக தவறாக அமைந்து விடுகின்றது. சென்ற தலைப்பிலும் நிறைய எழுத்துப்பிழைகள்.
வினோத்
வாழ்பவர்களுக்கு அதன் வலி தெரியும். உங்கள் விமர்சனம் அப்பட்டமான ஆதங்கத்தின் வெளிப்பாடு.
வாங்க தனபாலன்.
குறும்பன் உங்கள் ஆதங்கம் புரிகின்றது. போகின்ற போக்கில் ராஜ நடராஜன் தொடர் போல எழுதச் சொல்லியிருக்கிறார். பார்க்கலாம்.
வவ்வால் நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் இங்குள்ள நிலவரம் என்பது வேறு. பல விசயங்களைப் பற்றி முழுமையாக எழுத முடியல. ஆனால் ஒரு சில விசயங்களை எழுதலாம் என்று தோன்றுகின்றது.
அவர்கள் உண்மைகள்.
தொழிலாளர்களின் ஆதரவா? இங்கே அந்த வாய்பே இல்லை. மரத்துப் போன எண்ணங்களை உள்ள தொழிலாளர்களை வளர்த்து அவர்கள் அழிந்து அவர்களின் தலைமுறைகள் வந்து அவர்களையும் பழக்கப்படுத்தி வெகுநாளாகி விட்டது.
வருண் நீங்கள் சொல்ல வருவது புரிகின்றது. இங்கே பேசப்படும் விசயம் பணக்காரன் ஏழை என்பதல்ல. மேலும் பொறாமை போன்ற எண்ணங்களினால் உருவாகும் மன உளைச்சலைப் பற்றியுமல்ல. ஒரு நிர்வாகத்திற்கு வருபவர் அதன் நெளிவு சுழிவுகளைப் பற்றி அறியாமல், எதார்த்தமான உண்மைகளை கண்டு கொள்ளாமல், அல்லது அதைப் பற்றி அக்கறை கொள்ளாதவர்களின் கையில் ஒரு பெரிய நிர்வாகம் சிக்கி திண்டாடுவதைப் பற்றியுமே. ஒரு தனி மனிதனின் தவறால் பாதிக்கப்படுபவர்களைப் பற்றி யோசித்த காரணத்தினால் மேலும் நேரிடையாக பார்த்துக் கொண்டிருப்பதால் இந்த கட்டுரை. உங்கள் வருகைக்கு நன்றி.
வாங்க கிருஷ்ணமூர்த்தி... ஊரான்...சத்ரியன்...ரத்னவேல்... அய்யம்பேட்டை சுரேஷ்.......
தமிழ் உதயன் நீங்கள் சொல்வது போல நிறைய கதைகளை பார்த்துக் கொண்டு இருக்கேன். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இது பொறாமை சம்மந்தப்பட்டது போலவே தோன்றும்......
வருக கண்ணன். உங்கள் வரிகளில் இருந்தே....... திடீர் பணக்காரன் என்பதும் உண்மை. திருட்டுப்பணக்காரன் என்பதும் உண்மை. நிறைய இதைப்பற்றி எழுதலாம்...... எழுதுகின்றேன்.
உண்மை சுடுகிறது. அது அனைத்தையும் சுட்டெரிக்கப் போகிறது. குடும்பம், கலாச்சாரம், நேர்மை, பண்பு, உழைப்பு, புறங்கூறாமை அனைத்துமே வெறும் வார்த்தைகளாக மட்டுமே வாழும் இனி எதிர் காலத்தில். இதை எல்லாம் விளக்கி பலர் புத்தகங்கள் எழுதவேண்டி கூட வரலாம். "காசேதான் கடுவுளப்பா"
வளர்மதி உண்மை தான்.. நீங்கள் சொன்னது போல் பலரும் புத்தகம் எழுதி இதை விளக்குவார்கள். யாராவது வாழத் தயாராக இருப்பார்களா என்பது தான் கேள்வி.
நல்ல அலசல்.. விரிவான கட்டுரை..
கலாச்சார சிதைவு என்று ஒரு சொல்லில் இதை கொண்டு வந்தாலும் இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பின்னால் இவர்களுக்காக காத்திருக்கும் ஒரு நிறுவன சாம்ராஜ்ய சரிவுக்கு காரணமாக அமைந்து விடுகின்றது என்பது தான் உண்மை.
உழைக்கும் மக்களின் நிதர்சனங்களை உணராத பண்க்கார வாரிசுகள் சரிவை வேகப்படுத்துகிறார்கள்
நீண்ட நாட்களுக்குப் பிறகு திருப்பூர் பிண்ணனியில் நல்ல கட்டுரை...
Post a Comment