Sunday, July 17, 2011

சமூகம் -- உண்மையான முகம்


தமிழ்நாட்டில் புதிய ஆட்சி பதவிக்கு வந்தவுடன் ஒரு கேள்வி நம் எல்லோருடைய மனதிலும் பலமாக எழுந்துள்ளது.  சமச்சீர் கல்வியை ஏன் இப்படி தடுத்து நிறுத்துகிறார்கள்?  எனக்கே சற்று குழப்பமாக இருந்தது.  சமச்சீர் கல்வி வரமா? சாபமா? என்று எழுதியபோதும் கூட இன்னும் குழப்பம் தீர்ந்தபாடில்லை. 

ஆனால் சமீப காலத்தில் எனக்கு கிடைத்த அனுபங்கள் ஏராளமான அதிர்ச்சியைக் கொடுத்தது.

மூன்று பேர்கள் என்னை வந்து சந்தித்தார்கள்.  அவர்கள் இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தேவைப்படும் அலுவலக ஊழியர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அனுப்பும் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருப்பவர்கள்.  இரண்டு முறை என்னை வந்து சந்தித்த போதிலும் எனக்கு பெரிதான ஆர்வம் உருவாகவில்லை. ஆனால் திடீர் என்று நிறுவனத்திற்கு அனுபவம் இல்லாத மூன்று நபர்கள் தேவைப்படார்கள்.

எந்த அனுபவமும் இல்லாதவர்கள் வேண்டும். ஆனால் தினந்தோறும் 12 மணி நேரம் இடைவிடாது உழைக்கத் தயாராக இருப்பவர்கள் வேண்டும் என்று நிறுவனம் என்னிடம் கோரிக்கை வைத்திருந்தது.

அனுபவம் இல்லாதவர்களை தேர்ந்தெடுக்கும் போது நாம் கொடுக்கும் சம்பளத்தை ஏற்றுக் கொண்டு விடுவார்கள்.

மற்றொன்று தங்குமிடத்தையும் சாப்பாட்டு வசதியையும் நிறுவனமே கொடுத்து விடும் பட்சத்தில் அறிமுகம் இல்லாமல் திருப்பூர் வருபவர்களுக்கு 90 சதவிகித பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும். 

என்னைத் தேடி வந்தவர்களிடம் நிறுவனத்தின் தேவையைச் சொன்னபோது உடனடியாக ஆள் அனுப்பும் வேளையில் இறங்கினார்கள். இப்போது என்னை வந்து சந்தித்தவர்களின் தொழில் ரீதியான செயல்பாடுகளை விட அவர்களுடன் நான் உரையாடியது தான் இங்கு முக்கியம்.

"உங்களுக்கு மூன்று பேர்கள் போதுமா?  இல்லை இன்னும் ஆட்கள் தேவைப்படுமா?"

"இப்போதைக்கு மூன்று பேர்கள் போதும்."

"பெண்கள் வேண்டுமா?"

"வேண்டாம். ஆண்களே போதுமானது."

"பட்டதாரி போதுமா?  இல்லை முதுகலை மற்றும் மேற்படிப்பு படித்தவர்கள் வேண்டுமா?"

"அவர்களுக்கு சம்பளம் அதிகம் தேவைப்படுமா?"

"வேண்டாம் 5000 ரூபாய் போதும்.  நீங்க தான் சாப்பாடு தங்குமிடம் வசதி கொடுத்து விடுறீங்களே?"

"தங்குமிடம் இலவசமாக கொடுத்து விடுவார்கள். ஆனால் சாப்பாட்டுக்கு மாதம் 750 முதல் 1200 வரை பிடித்தம் செய்துவிடுவார்கள். மீதிப்பணம் அவர்களுக்கு போதுமா?"

"என்னங்க உங்க பதவியிலிருந்து இப்படி கேட்குறீங்க?  மற்ற நிறுவனங்களில் 3000 முதல் சம்பளம் என்று தொடங்குகிறார்கள்.  நீங்கள் தான் 5000 முதல் 6000 வரைக்கும் சொல்றீங்க."

"சரி அப்ப உங்களுக்கு நிறுவனம் ஏதும் கொடுக்க வேண்டுமா?"

"வேண்டாங்க.  நாங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நிறுவனத்தில் கொண்டு போய் சேர்க்கும் போதே தலா ஆயிரம் ரூபாய் சம்மந்தப்பட்டவர்களிடம் வாங்கிக் கொள்வோம்."

எனக்கு தலைசுற்றியது. விடாமல் மேலும் கேட்டேன். அப்போது தான் தற்போதைய சமூகத்தில் படித்தவர்களின் உண்மையான சூழ்நிலை புரியத் தொடங்கியது. அவர் விடாமல் தொடர்ச்சியாக பேசிக்கொண்டுருந்தார்.

"எங்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 50 விண்ணப்பங்கள வந்து கொண்டேயிருக்கிறது. நாங்கள் விளம்பரங்கள் கொடுத்து ஆட்களை வரவழைப்பது இல்லை.  எங்களால் பலன் அடைந்தவர்கள் அவர்கள் மூலம் நண்பர்களுக்கு பரவி அதன் மூலம் ஆட்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக ஊனமுற்றவர்கள் அதிகமாக வருகிறார்கள். 

மற்ற மாநிலங்களில் எப்படியோ?  ஆனால் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் பட்டதாரிகள் உள்ளனர். மிக எளிய குடும்பத்தில் பிறந்த மகன் மகள் என்று தொடங்கி குடும்பத்தில் உள்ள அத்தனை பேர்களும் கஷ்டப்பட்டு படித்து பட்டதாரி ஆகிவிடுகிறார்கள்.  ஆனால் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை.   முதல் தலைமுறை பட்டதாரிகள் தான் தற்போது மிக அதிகமாக உள்ளது. இவர்களுக்கு ஊருக்குள் இருக்க வாய்ப்புகளும் இல்லாத காரணத்தால் முடிந்தவரைக்கும் மற்ற இடங்களுக்கு வேலைத் தேடி வரத் தொடங்கி விடுகிறார்கள்.........."  என்று பேசிக் கொண்டே சென்றார்.

இந்த இடத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று உள்ளது.  இங்கே வரக்கூடிய பட்டதாரிகளில் தனிப்பட்ட திறமைகளோ அல்லது வேறு தொழில் சார்ந்த திறமைகளோ இருப்பதில்லை.  பி.எஸ்சி, பி.ஏ, எம்.எஸ்சி, எம்பிஏ என்று தங்கள் பெயருக்குப் பின்னால் மாட்டிக் கொள்ள வேண்டிய ஒரு அங்கீகாரத்துடன் வெறுமனே வந்து இறங்கி விடுகிறார்கள். இது குறித்து பின்னால் பேசுவோம்.

ஆனால் தற்போதைய திருப்பூர் நிறுவனங்கள் சில சவால்களை தொடர்ந்து சந்தித்துக் கொண்டேயிருக்கிறது.  திருவாளர் தயாநிதி மாறன் ஜவுளித்துறைக்கு அமைச்சர் என்ற அந்தஸ்துக்கு வந்து அவர் பதவியை விட்டு துரத்திய இந்த காலகட்டம் வரைக்கும் எதெல்லாம் நடக்கக்கூடாதோ அத்தனையும் நடந்தே முடிந்து விட்டது. பஞ்சு மற்றும் நூல் தொடர்ச்சியாக ஏற்றுமதி, சென்ற ஆட்சியில் உள்ள மின்சார பற்றாக்குறை காரணமாக சிறிய பஞ்சாலை நிறுனவங்கள் தொடர்ச்சியாக மூடல், இதன் காரணமாக நூல் விலை ஏற்றம், இதற்கு மேலாக திருபபூருக்குள் இருக்கும் சாயப்பட்டறை முதலாளிகளின் பேராசைக்கு உச்சநீதி மன்றம் வைத்த ஆப்பு என்று ஒரு பக்கம் இரண்டு பக்கம் என்று இல்லாமல் நான்கு பக்கமும் பிரச்சனைகளும் சூறாவளியாக தாக்கி "உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா" என்கிற அளவிற்கு இந்த தொழிலை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டது.  

70 சதவிகிதம் அரசாங்க கொள்கைகளும், 30 சதவிகிதம் முதலாளிகளின் குணாதிசியங்களுமாகச் சேர்ந்து இன்று திருப்பூர் என்ற நகரம் பரபரப்பு இல்லாத சங்கட வாழ்க்கைக்கு பழகி விட்டது. ஆனால் தொழிலை நடத்தியே ஆக வேண்டும் என்கிற நிலையில் இருப்பவர்கள், பெரிய நிறுவனங்கள், வங்கிகளுக்கு பயந்து கொண்டு தம் கட்டி நடத்திக் கொண்டிருப்பவர்கள் என்று அத்தனை பேர்களும் வட நாட்டில் உள்ள சாயப்பட்டறைகளுக்கு துணியை அனுப்பி அங்கிருந்து சாயமேற்றி இங்கே கொண்டு வந்து தைத்து ஏற்றுமதி செய்து கொண்டு இருக்கிறார்கள்.  பல நிறுவனங்கள் லாபமும் இல்லாமல் நட்டமும் இல்லாமல் கடனே என்று இந்த தொழிலை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.


திருப்பூரில் சாயக்கழிவு, மாசுக்கட்டுப்பாடு, சுற்றுச்சூழல், என்று ஆயிரத்தெட்டு வக்கணையாக பேசும் நீதிமன்றங்களின் பார்வையில் வடநாட்டில் நடந்து கொண்டிருக்கும் இது போன்ற விதி மீறல்கள் கணகளுக்குத் தெரியுமா? என்று தெரியவில்லை. இன்று வரையிலும் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் கனஜோராக அங்குள்ள ஆற்றில் கலந்து கொண்டே தான் இருக்கிறது. . கர்நாடகா ஆந்திரா தொடங்கி குஜராத் உத்திரபிரதேசம் வரைக்கும் சகல மாநிலங்களிலும் இந்த சாயப்பட்டறை தொழில் சக்கைப் போடு போட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அந்தந்த மாநில அரசுகள் அங்குள்ள தொழில் அதிபர்களுக்கு உறுதுணையாக இருப்பதால் இது நீதிமன்றம் வரைக்கும் போகாமல் வெளியாகும் சாயக்கழிவு நீருக்கு லிட்டருக்கு இத்தனை பைசா என்று வசூலித்து அதற்குண்டான ஏற்பாடுகளை அந்தந்த நகராட்சி நிர்வாகமே பார்த்துக் கொள்கின்றது.  ஆனால் கடந்த ஆட்சியில் இது குறித்து எந்த அக்கறையும் இல்லாத காரணத்தால் இத்தனை பெரிய சோகம் பல விதங்களிலும் இங்கே பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு சின்ன சந்தோஷம் இப்போதையை முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட அக்கறையின் காரணமாக இந்த சாயப்பட்டறை பிரச்சனை சீக்கிரம் முடிவுக்கு வந்து விடும் சூழ்நிலையில் இருக்கிறது.  குறிப்பாக அருள்புரம் பொதுசுத்திகரிப்பு நிலையம் விரைவில் செயல்படும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. இப்போது எழுதிக் கொண்டு இருக்கும் இந்த மாலை வேலையில் நண்பர் அழைத்துச் சொன்னபடி பெரும்பாலும் நாளைமுதல் சில பொது சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படும் என்று சொல்லியிருக்கிறார்.

இதை இந்த இடத்தில் இத்தனை விஸ்தாரமாக பேசக்காரணம்?

இந்தப் பிரச்சனைகள் ஒவ்வொன்றும் நிறுவனத்திற்கு ஒரு பெரிய சவாலை கொண்டு வந்து சேர்த்துக் கொண்டேயிருக்கிறது.  துணியை சாயமேற்றும் வரைக்கும் எந்த நிலையிலும் கடனுக்கு செய்ய முடியாது.  பஞ்சு, நூல், சாயமேற்ற என்று ஒவ்வொரு நிலையிலும் மொத்த பணத்தையும் முன்பணமாக கொடுத்து செய்தே ஆக வேண்டும்.  ஒரு மாதத்திற்கு உண்டான ஏற்றுமதி ஓப்பந்தக்களுக்காக மட்டுமல்லாமல் அடுத்த மூன்று முதல் ஆறு மாதத்திற்குண்டான அத்தனை ஏற்றுமதி ஓப்பந்தங்களுக்கும் தேவைப்படும் முன்னேற்பாடுகளுக்காக பெரும் பணத்தை கொட்ட வேண்டியுள்ளது.  இதன் காரணமாக மற்ற சிறு நிறுவனங்களுக்கு எவரும் பணம் கொடுப்பதில்லை.  இது தவிர நிர்வாக செலவில் எந்த அளவுக்கு சிக்கனத்தை கடைபிடிக்க முடியுமோ அந்த அளவுக்கு செயலில் காட்ட வேண்டியுள்ளது.  திறமை இருப்பவர்களுக்கு, அனுபவம் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டியிருப்பதால் ஒருவருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தில் மூன்று பேர்களை அனுபவம் இல்லாதவர்களை வைத்து வேலை வாங்கும் சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

இப்போது புரியுமே?  ஏன் அடிமாட்டு சந்தைக்குச் செல்லும் மாடுகளைப் போல பட்டதாரிகள் இங்கே வந்து மாட்டிக் கொள்ளும் அவலம்?

ஆனால் இந்த பட்டதாரிகளிடம் நான் பார்த்த திறமைகள்?  

அடுத்து அதைப்பற்றி பேசுவோம்..  

13 comments:

Thekkikattan|தெகா said...

சமச்சீர் கல்வியாவது வெங்காயமாவது - ஆடுமாடு கொடுக்கிறோம் மேச்சலுக்கு எடுத்துட்டுப் போயி இயற்கையோடு ஒன்றி வாழுங்கப்பா ;-) ; வேதிக் ஸ்டைல் ஆஃப் லிவிங் :D

jokes apart... தெரிஞ்சே சமச்சீர் கல்வியை மறுத்து, அமெரிக்காவில் மெக்சிகோவின் சீப் லேபருக்கென அந்த நாட்டு மக்களை கண்டும் காணாமல் தனது நாட்டிற்குள் விட்டு அவர்களின் உழைப்பை உறிஞ்சு பிரிதொரு சமயம் இல்லீகல் இமிக்ரண்ட்ஸ் என்று ஏளனப்படுத்துவது மாதிரி, நம் சமூகத்திலும் ஒரு சாரரை அப்படியாக வைத்து கொள்வது இந்த சமச்சீர் கல்வி மறுப்பின் பின்னணினு சொல்ல வாரீங்களா :=0 ?

Ramachandranwrites said...

வலிமை உள்ளது பிழைக்கும் என்று சொன்னால், வலிமைக் குறைந்த மக்கள் வாழ வழி செய்வது சமுதாயத்தின் கடமை. எங்கே போகிறோம் என்பதே தெரியவில்லை என்பதுதான் நிதர்சனம்.

Anonymous said...

சமச்சீ கல்வி இங்கு வேண்டுமென்றே தடுக்கப் படுகிறது. இந்த முறை தடுத்து விட்டால் இன்னும் ௫ வருடங்களுக்கு அது வராது. ஏழைக் குழந்தைகள் தரமான கல்வி பயில முடியாது. முதலாளி எனும் முதலைகள் பள்ளி வியாபாரத்தில் கொழுத்த லாபம் அடையலாம். இது தான் ஜெயாவின் திட்டம்

Avargal Unmaigal said...

உங்கள் பதிவின் மூலம் சமுதாயத்தின் உண்மை நிலமையை அறிய முடிகிறது. மனதை நெகிழ்விக்கிறது

http://rajavani.blogspot.com/ said...

அன்பின் ஜோதிஜி இப்ப உள்ள கல்விய பத்தி பேசவே நா கூசுகிறது. ஒரு ரூம் இருந்தால் நர்சிங் காலேஜ் தொடங்கி விடலாம். நாலைந்து கம்ப்யூட்டர் இருந்தால் போதும் கம்ப்யூட்டர் காலேஜ் தொடங்கிவிடலாம். இதான் இன்றைய தமிழகத்தின் நிலைமை...

Unknown said...

டிப்ளமோ படித்து விட்டு 2009 ஆம் வருடம் திருப்பூரில் ஒரு எக்ஸ்போர்ட் கம்பனியில் 12 மணி நேர க்ஷிப்ட்டுக்கு 190 ரூபாய் என்ற சம்பளத்திற்கு என்ன வேலை செய்தேன் தெரியுமா?பாய்லருக்கு, கட்டை அடித்தல் எனப்படும்,பெரிய பெரிய(ஒரு ஆள் தனியாக ஒரு கட்டையினை தூக்கிவிட முடியாது) மரக்கட்டைகளை நாலு சக்கர வண்டியில் கொண்டு வந்து தள்ளும் இயந்திரதனமான வேலை.அப்போது அங்குள்ள பணி சூழலும்,சூப்பர்வைசர்கள் எனும் மினி எஜமானர்களும்,அவர்களுக்க்கு எஜமானரான முதலாளியும்,தொழிலாளர்களை,ஏதொ ஜந்துக்கள் இங்கு வழியின்றி வந்துள்ளன என்பது போல,நடத்திய விதமும்,வயதில் மூத்தவர்களை கூட,ஏய்,நீ,என கூப்பிட்டு விரட்டி வேலை வாங்குவதும் கண்டு நொந்து புழுங்கினேன்.ஒன்றும் அங்கு பேச இயலாது,6 மாதம் உயிரை கொடுத்து வேலை செய்து விட்டு,செலவு போக 20,000 ரூபாயோடு ஊர் வந்து சேர்ந்தேன்.இவ்வளவுக்கும் நான் படித்தவன்,இண்டெர்னெட்,ஈ மெயில்,பிளாக் என சமகால நவீனங்களை,விபரங்களை அறிந்தவன் என்பதை கொஞ்சம் கூட காட்டிகொள்ளாமல்,பத்தோடு பதினொன்றாக இருந்து,தலை முழுகி வந்து விட்டேன் ஊருக்கு.இன்னும் நிறைய எழுதலாம்.......அதனால் தான் திருப்பூரை ப்ற்றிய உங்கள் செறிவான அலசல் கட்டுரைகள் என் நெஞ்சை தொட்டு செல்கின்றன ஜோதிஜி சார்.

சத்ரியன் said...

ஜோதிஜி,

’அடிமாடாய்’ - இருந்த அனுபவம் இவனுக்கும் உண்டு.

காலமெனும் காற்று - எனது இலக்கின் திசையை நோக்கி பலமாக வீசியதில் மீண்டும் தப்பிப் பிழைத்துக்கொண்டேன்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
படிக்கும்போது மாணவர்களுக்கு எதற்கு படிக்கிறோம், என்ன படிக்கிறோம் என்று தெரிவதில்லை. மற்ற விஷயங்கள் (other than subjects) கற்றுக் கொள்ள வேண்டும் என்று முயற்சிப்பதும் இல்லை. அதனால் தான் இந்த நிலைமை. பரிதாபம் தான்.
வேலை செய்ய வேண்டும் என்ற உணர்வை பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே ஊட்ட வேண்டும். பணத்தின் அருமையை (money's worth) சொல்லிக் கொடுக்க வேண்டும்.
வாழ்த்துக்கள். நன்றி.

siva said...

"ஏட்டு சுரைக்காய்...." பகுத்தறிவற்ற கல்வி கொள்கையின் விளைவு. 15 வயது வரை கட்டாய கல்வி, பின்னர் தனிப்பட்ட விருப்பதின் பேரில் மானவன் எதை விரும்புகிரானோ அதை செய்ய, கற்க சுதந்திரம். இவையே ஆளுமையுள்ள, சுய சிந்தனையுள்ள தலைமுறையை உருவாக்கும். இல்லையேல் கவைக்குதவாத வெட்று காகிதங்களுடன் ஆட்டு மந்தை கூட்டங்களே பல்கி பெருகும்.

கோவி.கண்ணன் said...

// ஒருவருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தில் மூன்று பேர்களை அனுபவம் இல்லாதவர்களை வைத்து வேலை வாங்கும் சூழ்நிலையில் இருக்கிறார்கள்.//

தரம் இருக்காதே உற்பத்திப் பொருளில். சீனா மாதிரி ஆ(க்)கிடுவாங்களோ.

Karthikeyan Rajendran said...

சரிதான் சார் நீங்கள் சொன்னது, பல கனுவுகளோடு படிபவரகள் படிப்பு முடிந்ததும் படும் கஷ்டம் சொல்லி மாளாதது,

ஜோதிஜி said...

கார்த்தி நீங்க சொல்வது முற்றிலும் சரியே.

கண்ணன் அந்த அளவிற்கு மோசம் இல்லை. நம்மவர்கள் பிழிந்து வேலை வாங்குவதில் மன்னாதி மன்னர்கள்.

சரியான வார்த்தைகள் சிவா. இதே தான் என் எண்ணமும்.

ரத்னவேல் அய்யா, முதல் குற்றவாளிகளே பெற்றோர்கள் தான். இரண்டாவது நபர்கள் ஆசிரியர்கள். பாதிக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கந்து வட்டி தொழில் கூட செய்கிறார்கள்.

சத்ரியன் சேம் சேம் பப்பி சேம். சிரித்து விட்டேன்.
நீங்க தப்பி சிங்கப்பூருக்கு போயிட்டீங்க. நாங்க?

ஜோதிஜி said...

R.Elan. said...

நிறைய யோசிக்க வைத்தீங்க. இது குறித்து வேறொரு பார்வையும் உண்டு. அடுத்த பதிவில் பாருங்களேன்.

தவறு

நூறு சதவிகிதம் உண்மைகள் உங்கள் கருத்து. நன்றி.


Avargal Unmaigal said...

நன்றி நண்பரே.

ராமச்சந்திரன் பல முறை பலருக்கும் சொன்ன கருத்தை உங்கள் எழுத்தில் படிப்பதில் சந்தோஷம்.

தெகா

உங்கள் துவைத்து எடுக்கப்போகின்றேன். நாலு பதிவுகள் மொத்தமாக படிக்கும் போது சில எண்ணங்கள் நமக்கு பொதுவாக இருக்கும்.