Sunday, April 24, 2011

மெல்லச் சுழலுது காலம் - (தமிழ்மணம் இரா.செல்வராசு) புத்தக விமர்சனம்

எப்போது நாமும் இந்த சமூகத்தில் நல்ல மனிதராக வாழ வேண்டும் என்று தோன்றக்கூடும்? 

நல்ல மனிதர் என்ற வார்த்தையில் அவரவருக்கு உண்டான புரிதல்களை இட்டு நிரப்பிக் கொள்ளலாம். பெற்றோர்க்கு, மனைவிக்கு, குழந்தைகளுக்கு, பக்கத்து வீட்டுகாரர்களுக்கு, பணிபுரியும் அலுவலகத்தில் என்று பல பாத்திரங்களில் நம்மை இட்டு நிரப்பிக் கொண்டாலும் நமக்கு பூரண திருப்தி வந்து விடுமா? என்னளவில் எனக்குத் தெரிந்தவரையில் என் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்று சொல்பவர்களால் அதை எழுத்தாக கொண்டு வரமுடியுமா?  

முடியும் என்று சொல்லி சாதித்து உள்ளார் இரா,செல்வராசு.


ஒரு முறை செல்வராசு எழுதியுள்ள மெல்லச் சுழலுது காலம் புத்தகத்தை படித்துப் பாருங்களேன். இந்த புத்தகம் வெளிவந்த போது செல்வநாயகி ஒரு பதிவாக வெளியிட்டு இருந்தார். பதிவுலகில் கொஞ்சமாக எழுதும் செல்வநாயகி முன்னுரையில் ஒரு கதக்களி ஆட்டத்தையே ஆடிக்காட்டி ஆச்சரியப்படுத்தியுள்ளார். இது தான் செல்வநாயகி வாழ்வின் மொழியும் கூட.

வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ரசித்து வாழவேண்டியதன் அவஸ்யத்தை அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புகள் என்ற இந்த புத்தகம் உங்களுக்கு உணர்த்தக்கூடும். இவரின் வலைதளத்தை விரும்பி படித்தவன் என்ற முறையில் இந்த புத்தகத்தை தேடி, துரத்தியும் சிக்காத இந்த புத்தகம் எனக்கு நான் வாங்கிய தமிழ்மண விருதின் மூலம் என்னை வந்து சேர்ந்தது. 

ஆத்தாவும் தொலைபேசியும் என்று முதல் தலைப்பில் தொடங்கி 51 ஆவது தலைப்பாக வசந்தம் என்பதோடு முடித்துள்ளார்.  

வாசித்து முடிக்கும் போது நமக்குள்ளும் நாம் வாழ்ந்த வசந்த நினைவுகள் நமக்குள் சுற்றி சுழலத்தான் செய்கின்றது. இவர் வாழ்ந்த ஊர் ஈரோடு அருகே என்ற போதிலும் கூட தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம மனிதர்களின் வாழ்க்கை என்பதும் ஒரே மாதிரி தானே? 

இவர் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்கா வாழ்க்கையை விஸ்தாரமாக விவரிக்காமல் அதன் மூலம் கிடைத்த அனுபவங்களைத் தான் எழுத்தின் மூலம் படமாக காட்டுகிறார். ஆசிரியர் தனது குழந்தைகளுக்கு கொடுத்துள்ள சுதந்திரத்தையும் வாசிக்கும் போது சற்று வியப்பாக உள்ளது. குழந்தை தனது மரணத்தைப் பற்றி இயல்பாக உரையாட முடிகின்றது. வேலை நிமித்தமாக வேறு ஊருக்குச் சென்று வரும் போது உண்டான பிரிவுகளை குழந்தைகளுக்கு உணர்த்தும் விதமும், மகள், நானும் உங்களுடன் மடியில் உட்கார்ந்து கொண்டு வந்தால் டிக்கெட் பிரச்சனையில்லை தானே? என்று திருப்பி கேட்டு திக்குமுக்காட வைப்பதும் என்று அங்கங்கே சின்னச் சினன சிருங்கார சிதறல்கள். கட்டுப்படுத்தாத சுதந்திர எல்லைகளை இவர் தனது குழந்தைகளுடன் உரையாடும் உரையாடல்கள் மூலம் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

ஒரு தலைப்புக்கும் அடுத்த தலைப்புக்கும் தொடர்ச்சி இல்லாவிட்டாலும் கூட இவர் கடந்து வந்த பாதையை, இளமைப் பருவ தாக்கத்தை, ஒவ்வொரு முறையும் அமெரிக்காவிலிருந்து இங்கே வந்து திரும்பி செல்லும் போது, என்று ஒவ்வொரு நிகழ்வுகளில் உள்ள விசயங்களை வியப்புக்குறிகளோடு நம்மை இழுத்துக் கொண்டு செல்கிறார். மொத்தத்தில் சுயசரிதம் என்பது போலில்லாமல், சொறிய கிடைத்த வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளாமல் வயலும் வாழ்க்கையும் போல ஒவ்வொரு தலைப்புக்குள்ளும் கொஞ்சம் கவிதை, சிறிது சுவராஸ்யம், மேலான நகைச்சுவை என்று கலந்து கட்டி ஒவ்வொரு கட்டுரையும் பொங்கல் சோறாக இருககிறது. . 

ஒவ்வொரு தலைப்பிலும் உள்ள விசயங்களை நம்மால் பல இடங்களில் பொருத்திக் கொள்ள முடிகின்றது. நான் வெளிநாட்டு வாழ்க்கையை பார்த்தவன் என்ற முறையிலும் வெளியுலகமே தெரியாத கிராமத்து மனிதர்களின் அப்பாவிகளுடன் பழகிக் கொண்டிருப்பவன் என்ற முறையிலும் இரண்டு எதிர் துருவங்களையும் இயல்பாக ஒரே அச்சில் இவர் எழுத்தின் மூலம் எளிதாக பார்க்க முடிகின்றது. இரண்டுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை சுவையாய் ஆசிரியர் ரசித்து எழுதிய வாசகங்கள் வாசிப்பவனுக்கு தன்னிலை மறக்கச் செய்யும். அவரவர் வாழும் வாழ்க்கையை வாசிப்பவர்களுக்கு கொண்டு வந்து நிறுத்துகிறது. 

சமகாலத்தில் ஆங்கில வார்த்தை கலக்காமல் எழுதுவது ஒரு சவாலாக கருதுபவர்கள், இவரின் பாசாங்கு இல்லாத மொழிநடையை வாசிக்கும் போது  ஆச்சரியப்படக்கூடும். ஒவ்வொரு கட்டுரைகளும் கிறங்கடிக்கும்.துள்ளல் நடையில் அமைந்துள்ளது மெலிதான நகைச்சுவை என்று எல்லா நிலையிலும் அனுபவமிக்க முழு நேர எழுத்தாளர் போலவே நகர்த்தியுள்ளார். ஆனால் அறிமுகத்தில் அவையடக்கமாய் இவர் கூறுவதை நம்ப முடியவில்லை. 

ஒரு தனி மனிதரின் டைரிக்குறிப்புகளை உரிமையோடு அனுமதியோடு படிக்கும் மகிழ்ச்சியை இந்த புத்தகம் தருகின்றது. இது கடந்த 20 ஆண்டுகளாக செல்வராசு எழுதியுள்ள வலையில் எழுதிய அனுபவ பகிர்வுகள். இவரின் எழுத்தின் பிரதிபலிப்பு உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டும். இதன் மூலம் எழுதுபவரின் தனிப்பட்ட வாழ்க்கையை உணர்ந்து கொள்ள முடியும். உங்கள் குழந்தைகள் மீது நீங்கள் அதிக அக்கறை காட்டுபவர் என்றால் அவஸ்யம் இவர் கொடுத்துள்ள பரிந்துரைகளை முரடாய் மிரட்டாதே என்ற தலைப்பில் உள்ள விசயங்களை படித்துப் பாருங்கள்.

கிராமத்து கோவில் திருவிழாக்களின் முஸ்தீபுகள், குழந்தைகளை வளர்க்க முதலில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய உன்னை நீ நம்பு என்ற ஆதார வாக்கியம், கவிதை துணை கொண்டு எழுத்தில் வடித்த வறண்ட குளத்து வாத்துக்கள், உறங்கா நிலவு என்று ஒவ்வொரு கட்டுரையிலும் புதிய நடையில் படைத்துள்ளார். தன் எழுத்தில் எத்தனை விதமாக எழுதிப் பார்க்கமுடியுமோ அத்தனை விதமாகவும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

தான் வாழ்ந்த மணணின் மணத்தை, கிராமத்தை, பெற்றோரை, அவர்களின் சிந்தனைகளை சரம் போல் கோர்த்து மாலையாக மாற்றியுள்ளார். எதையும் விட்டு வைக்கவில்லை. இவர் அம்மா வீட்டு குடிசையில் சொருகி வைத்த கடிதம் முதல் ரயில் நிலையத்தில் அப்பாவுடன் உரையாடும் உரையாடல் வரைக்கும் ஒவ்வொன்றுக்குள்ளும் ஓராயிரம் அர்த்தங்கள்.  உணர்ந்தவர்களுக்கு பொக்கிஷம். 

குறிப்பாக கிராமத்து வாழ்க்கையை அனுபவித்துவிட்டு புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் அடி மனதில் நீக்க முடியாமல் இருக்கும் பொக்கிஷ நினைவுகளை இந்த புத்தகம் சுருதி லயம் மாறாமல் மீட்டெடுக்கின்றது. குறை என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே சில இடங்களில் அச்சுக் கோர்ப்பு எழுத்துப் பிழைகளும், புத்தக அட்டை வடிவமைப்பு என்று எரிச்சல் வரவைக்கின்றது. இப்போதுள்ள நவீன (லே அவுட்) அட்டைவடிவ முன்னேற்றத்தில் பதிப்பக மக்கள் செய்துள்ள வடிவமைப்பு மட்டும் தூங்கி வழிவது போல் இருக்கின்றது. பின் அட்டையில் உள்ள ஆசிரியரின் உருவ இளமையைப் போலவே படித்து முடிக்கும் போது நமக்குள்ளும் ஒரு இளமை பரவக்கூடும். 

இளமையாய் உங்கள் நினைவுகள் மாறக்கூடும். 

உண்மையான உழைப்பும், உறுதியான கல்வியும் கொண்டவர்களின் வாழ்க்கை எப்போதும் தோற்றுப் போனதில்லை. இந்த புத்தகத்தை படிக்கும் போது செல்வராசு உணர்த்துவதும் இதே தான்.  என்னவொன்று உங்கள் கல்வியினால்  நீங்கள் பெற்ற உயர்பதவிகளும், கிடைக்கும் செல்வங்களையும் இயல்பாக எடுத்துக் கொண்டால் உங்களால் கூட உங்கள் பழைய நினைவுகளை இது போல எழுத முடியும்.

புத்தகத்தின் பெயர் -  மெல்லச் சுழலுது காலம் 
(அயலகத் தமிழினின் அனுபவக்குறிப்புகள்)
ஆசிரியர் இரா. செல்வராசு

பக்கங்கள் 208
விலை .:  160.00

54./ 13 10 வது தெரு
டிரஸ்டுபுரம், கோடம்பாக்கம்,
சென்னை 24
தொலைபேசி 044 43 54 03 58
மின் அஞ்சல் sales.vadali.gmail.com

பின்குறிப்பு புத்தக ஆசிரியர் தற்போது அமெரிக்காவில் வாசிங்டன் டிசி அருகே வர்ஜீனியாவில் உள்ள ஃபேர்ஃபேக்சு நகரில் தற்போது மனைவி, இரு மகள்களுடன் வசித்து வருகிறார். ஒரு பன்னாட்டுப் பாறைநெய் நிறுவனத்தின் நடுவண் ஆய்வு மற்றும் பொறியியல் பிரிவில் வேதிப் பொறிஞராகப் பணிபுரிந்து வருகின்றார். 

12 comments:

துளசி கோபால் said...

அட! நம்ம செல்வராஜ்!!!! இவர் எழுத்துக்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

புத்தக விமரிசனம் நடுநிலையா இருக்கு.

வாசிக்க ஆவல் தோணுது.

பகிர்வுக்கு நன்றி ஜோதிஜி.

saarvaakan said...

அருமையான விமர்சன‌ம்.புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள். நன்றி

shanmugavel said...

அவசியம் படிக்க வேண்டும்.அறிமுகத்திற்கு நன்றி ஜோதிஜி.

CS. Mohan Kumar said...

நல்ல அறிமுகம். மகிழ்ச்சி. செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்

Ravichandran Somu said...

நல்ல அறிமுகம்... நன்றி ஜோதிஜி.

நண்பர் செல்வராசுவை நேரில் சந்தித்ததில்லை. ஆனால்... அவருடைய வலைப்பதிவை பல வருடங்களாக படித்து வருகிறேன். புத்தகத்தை உடனே படிக்க வேண்டும் என்ற ஆவல்...

பனித்துளி சங்கர் said...

தங்களின் பதிவு மெல்லச் சுழலுது காலம் புத்தகம் வாங்கி படித்தே ஆகவேண்டும் என்ற ஆவலை தூண்டி இருக்கிறது .பகிர்ந்தமைக்கு நன்றி

ஜோதிஜி said...

நன்றி சங்கர். நாம் கிராமத்து வாழ்க்கையில் வாழ்ந்திருந்தால் இந்த புத்தகம் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை மிக நெருக்கமாக உணர்த்தும். உங்கள் உறவுகளை உங்களுக்கு வேறொரு தளத்தில் உணர்த்தும். உங்களையும் இது போல எழுத வைக்கும்.

நன்றி ரவி. தொடர் வேலைகளில் வந்தமைக்கு மற்றும் விமர்சனத்திற்கு.

வருக மோகன்.

சாவர்கன். அவஸ்யம் படித்துப் பாருங்க.

டீச்சர் முதல் விமர்சனத்திற்கு நன்றிங்கோ.

Thenammai Lakshmanan said...

விமர்சனம் அருமை ஜோதிஜி.. வாழ்த்துக்கள் செல்வராசுக்கும்., தமிழ் மணத்துக்கும்.:))

Bibiliobibuli said...

ஜோதிஜி, நல்லதோர் அறிமுகம்.

Anonymous said...

நல்லதோர் அறிமுகம் சகோ. இப்படியான பதிவர்களையும், அவர்களின் நூல்களையும் படிக்க வேண்டும் என்ற ஆவலை அதிகரிக்கச் செய்துவிட்டீர்கள். அருமை

இராஜராஜேஸ்வரி said...

நல்ல அறிமுகம். மகிழ்ச்சி. செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

ஜோதிஜி, சற்றுத் தாமதமாகவே உங்களின் இந்த விமர்சனப் பதிவைப் பார்த்தேன். அதன் பின்னரும் கணிப்பிரச்சினையும், பிற வேலைகளும் காரணமாய் உடனே எழுத இயலவில்லை. புத்தகத்தை விட உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது :-) மகிழ்ச்சி. நீங்கள் குறிப்பிட்டுள்ள குறைபாடுகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டேன். நன்றி.

ஒரே ஒரு சிறு திருத்தம் மட்டும். இந்த இடுகையில் நான் ஒரு கிராமத்தில் வாழ்ந்ததான ஒரு கருத்து வெளிப்படுகிறது. அது முற்றிலும் சரியல்ல. எனது பெற்றோர்கள் கிராமம் ஒன்றில் வளர்ந்து வாழ்ந்தவர்கள் என்றாலும், கிராமங்களுக்கும் எனக்குமான தொடர்பும் உண்டு என்றாலும், நான் வளர்ந்தது முற்றிலும் ஒரு நகரத்திலேயே.

மற்றபடி இப்புத்தகம் குறித்துக் கனிவான உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி.