Saturday, October 02, 2010

ஒரு வாரிசு உருவாகிறது

மறுநாள் காலை.

தினசரி பத்திரிக்கையின் ஆசிரியர் ரூபன் அறையில் இருந்து முத்து முருகேசனுக்கு அழைப்பு வந்தது.

நேற்று நடந்ததை மறந்து விட்டு ஆசிரியர் அறைக்குள் நுழைகிறார்.

இவ்ர் எப்போதும் ஒரு நிகழ்வு நடந்து விட்டால் அது குறித்து அலட்டிக் கொள்வதும் இல்லை.  கவலைப்படுவதும் இல்லை.  இந்த குணாதிசியமே இவரின் குடும்ப வாழ்க்கையில் நடந்த பல போராட்டங்களை வென்று எடுக்க காரணமாக இருந்தது. 

இந்த இடத்தில் குறிப்பிட வேண்டிய விசயம் ஒன்று உண்டு.

அன்பு,அஹிம்சை, சத்தியம், நேர்மை, தர்மம் போன்ற எந்த காலத்திற்கும் ஒத்து வராத பல குணாதிசியங்கள் இவரிடம் நிறையவே உண்டு. 

எந்த அளவிற்கு முன் கோபம் வருமோ அந்த அளவிற்கு மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் மேஜையில் தயாராக இருக்கும் ஜோல்னா பையை எடுத்துக் கொண்டு அப்பொழுதே வெளியே கிளம்பி விடுவார். பணம், புகழ் குறித்தோ பெரிதாக அலட்டிக் கொள்வதும் இல்லை.  இவருடைய வாரிசுகள் இன்று வரைக்கும் இவர் மேல் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டே இது மட்டும் தான்.

இவரின் பத்திரிக்கையுலக அனுபவத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த விசயங்கள் குறித்து எழுத வேண்டாம் என்று வந்த பல அன்புக்கட்டளைகளை மீறியதும் உண்டு.  அதனால் இழந்த பல விசயங்கள் இவரின் குடும்ப வாழ்க்கையை ஒவ்வொரு முறையும் சூறைக்காற்றில் சிக்க வைப்பது வாடிக்கையாகவே இருந்தது.  

முமு மனைவி இறப்பு வரைக்கும் இவரை ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேசியதில்லை.  புலம்பிக்கூட நான் பார்த்து இல்லை.  மகன் மகள்கள் அத்தனை பேர்களையும் மனைவி தான் வளர்த்தார். மிகப் பெரிய அளவில் ஒவ்வொருவரும் வளராத போதும் கூட நடுத்தரவர்க்க வாழ்க்கையில் இன்று அணைவருமே நல்ல நிலைமையில தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். .

ஆசிரியர் ரூபன் அழைத்து இன்று முதல் நீங்கள் எழுதிக் கொண்டுருக்கும் இரத்தத்தால் நனையும் தமீழீழ கொள்கை கட்டுரையை நிறுத்தி விடுங்கள் என்றதும் இவர் காரணம் கேட்க உருவானது வாக்குவாதம். உரையாடல் முடிந்து இவர் அறையை விட்டு வெளியே வந்த சில நிமிடங்களில் இவரை மீண்டும் அழைக்க முமு சாலையில் இறங்கி வீட்டை நோக்கி நடந்து கொண்டுருக்கிறார்.

பிறகு தான் என்ன நடந்தது என்று  புரிந்து கொள்ள முடிந்தது.

பிரபாகரன் கிறிஸ்துவ மக்களின் மேல் கொண்டுருந்த மரியாதையும், கிறிஸ்துவ பாதிரியார்கள் தொடக்க காலம் முதல் யாழ்பாண வளர்ச்சியில் பங்கெடுத்த விபரங்களும் ஈழம் குறித்து படித்த மற்றும் உள்ளே வாழ்ந்தவர்களுக்கு நன்றாகவேத் தெரியும. 

பிரபாகரன் வளர்ச்சியில் எத்தனை காரணங்கள் இருக்கிறதோ அதில் முதல் பத்து காரணங்களில் இந்த பாதிரியார்களின் ஒத்துழைப்பு அதிகம் உண்டு. இதுவே குறிப்பிட்ட காலம் வரைக்கும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.  பிரபாகரன் சென்னையில் இருந்த முக்கிய பாதிரியாரிடம் தகவல் தெரிவிக்க ஜேம்ஸ்ப்ரெட்ரிக் மூலம் கட்டுரை நிறுத்தப்பட்டாகி விட்டது. 

நாற்பது ஐம்பது ஆயிரங்களை கடந்து கொண்டுருந்த பத்திரிக்கை முமு வெளியேறியதும் சட் என்று பத்திரிக்கையின் விற்பனை நான்கு இலக்க எண்களுக்கு வரத் தொடங்கியது,

மறுபடியும் தினசரி நிர்வாகத்தில் இருந்து அழைப்பு வந்த போதும் கூட கண்டு கொள்ளாமல் ஒதுங்கி விட்டார். இதன் தொடர்ச்சியாக தினமணி அதிபர் மனோஜ்குமார் செந்தாலியாவிடம் அழைப்பு வந்தது.   காரணம் அப்போது நாகபட்டிணம் பதிப்புக்கு ஆள் தேடிக் கொண்டுருந்தார்கள். தினமணி நிர்வாகத்திற்கு தனிப்பட்ட குணாதிசியங்கள் உண்டு. சென்னை அலுவலகத்தில் ஒருவர் தொடக்கத்தில் பணியில் சேர அறிமுகம் ஆகும் போது நடக்கும் நேர்முகத் தேர்வுகள், பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போன்றவை. 

ஆனால் இவர் இது போன்ற சடங்குகளில் கலந்து கொள்ள விரும்ப மாட்டார். 

எனக்கு எழுதத் தெரியும். என்னுடைய உரிமைகள் பாதிக்காத வரைக்கும் எழுதிக் கொண்டு இருப்பேன்.  வேறு என்ன வேண்டும்? “  ஒரே வார்த்தையில் முடித்து  விடுவார். நிர்வாகத்தினர் இவருடைய வார்த்தைகளுக்கு சரி என்று சொன்னால் அந்த நிமிடமே தன்னுடைய கடமைகளை தொடங்கி விடுவார்.

மனோஜ் செந்தாலியாவிடம் அறிமுகம் செய்தவர்கள் இவரின் இந்த குணாதிசியங்களையும் சேர்த்துச் சொல்ல இவருக்காகவே அது எதுவும் வேண்டாம். வந்து சேருங்கள் என்று அழைப்பு விடுத்தார்.  ஆனால் இவருக்கு மதுரையை விட்டுச் செல்ல மனமில்லை.  குடும்பம் மற்றும் இவருடைய ஆராய்ச்சிகள் பாதிக்கப்படும். அதற்கு மேலும் போதுமடா இந்த பொழப்பு என்று மொத்தமாக ஓதுங்கி தன்னுடைய ஆராய்ச்சி சார்ந்த விசயங்களில் முழுமையாக ஈடுபட ஆரம்பித்தார்.

1990 க்குப் பிறகு முழுமையாக இறங்கி சேகரித்த மொத்த தகவல்களை ஆராய்ச்சிகளை அப்துல் கலாம், போன்றவர்கள் தொடங்கி வெளியே இங்கு குறிப்பிட முடியாத பல பிரபலங்கள் பாராட்டினாலும் இவரின் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. அதை காசாக்கி பார்க்க எண்ணம் இல்லாமல் இயல்பான வாழ்க்கையில் ஒன்றிப் போயிருந்தார். இவரை சந்தித்த ஒவ்வொருவரும் உயர்ந்தார்கள். எப்போதும் போல இவர் ஏணிப்ப்டியாக ஆரோக்கியமாக வாழ்வின் இறுதி கட்டத்தில் வாழ்ந்து கொண்டுருக்கிறார். பலரும் சொல்லிப்பார்த்த இவரின் ஆவணங்கள் நிறைந்த கட்டுரைகள் என்றாவது ஒரு நாள் வெளிவரும். தொடக்கத்தில் நான் வாழ்ந்து கொண்டுருந்த வீட்டுக்குள் இவர் வரும் போது இவருடன் சில புத்தக பைகளும் உடன் பயணித்து வரும். 

குறுகிய அறைக்குள் அதுவும் அடைந்து கிடைக்கும்.  இதுவே சற்று வசதியான வீட்டில் குழந்தைகளின் பள்ளிக்காக மாறிய போது திடீர் என்று ஒரு வேனில் வந்து இறங்கினார். அவர் திடீரென்று என்று வந்து இறங்குவது எனக்கு ஆச்சரியமல்ல. 

வந்து விட்டார் என்றால் குடும்பத்தில் ஏதோ நடந்து இருக்கும் என்று அர்த்தம்.  நான் எதையும் கேட்டுக் கொள்வதும் இல்லை. அவருடன் வரும் அத்தனைப் பொருட்களும் என்னை விட என் மனைவிக்கு எரிச்சல் மிகுந்த சமாச்சாரங்கள்.  ஓட்டை ஒடசல் ஈயம் பித்தளைக்கு போட வேண்டிய சமாச்சாரங்கள்.  அத்துடன் பல சாக்குகள் நிறைந்த புத்தகங்கள்.

காந்தி பிர்லா மாளிகையில் இருந்த போது அவர் பயன்படுத்திய கரண்டி கூட ஓட்டையாக இருந்தாலும் அதை கம்பி கட்டி வைத்து பயன்படுத்தியது போலவே இவரிடம் பல வினோதமான சமாச்சாரங்கள் உண்டு.  ஆனால் நான் எதையும் கண்டு கொள்வதில்லை.  அதற்குண்டான இடங்களை ஒதுக்கி கொடுத்து விட்டு  ஒதுங்கி விடுவேன்.

வீட்டில் கோவித்துக் கொண்டு வந்து விட்டீர்கள். இனிமேல் இங்கே தான் இருக்க வேண்டும்.  நான் காலையில் சென்றால் இரவு தான் வருகின்றேன்.  வீட்டில் துணை யாருமில்லை. குழந்தைகள் பள்ளிக்குச் செல்லப் போகிறார்கள். உங்கள் அறிவுரைகள் ஆலோசனைகள் அவர்களுக்குத் தேவை என்று அவர் பாணியில் கெஞ்சி வெற்றிகரமாக 11 மாதங்கள் தொடர்ச்சியாக தங்க வைத்து விட்டேன். 

அதன் பிறகு இரண்டு முறை வெளியேறி சென்னை மதுரை அலைந்து விட்டு வருவார்.  அவருடன் மொத்த பார்சலும் பயணிக்கும். எனக்கு எரிச்சலாகக்கூட வரும். சொன்னாலும் கேட்காதவரை என்ன செய்ய முடியும்.  கடைசி வரைக்கும் அந்த குப்பை போன்ற சமாச்சாரங்களுக்குள் என்ன இருக்கிறது என்று கண்டு பிடிக்கத் தோன்றவில்லை.  காரணம் நான் பணத்தை துரத்திக் கொண்டுருந்த போது அதை கவனித்துப் பார்க்க நேரம் அமையவில்லை. 

அவராக வந்து என்னுடைய முக பாவனைகள் பார்த்து பேசத் தொடங்குவார்.  எப்போதும் நான் கோபமாக உள்ளே வந்தால் சற்று நேரம் வெளியே சென்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு அதன் பிறகே குழந்தைகளிடம் வருவேன். அதன் பிறகு சமயம் பார்த்து என்னிடம் பேச ஆரம்பிப்பார். 

தொழில் வாழ்க்கை உச்சத்தில் ஓடிக் கொண்டு இருந்தது. இடைஇடையே சில அறிவுரைகள் ஆலோசனைகள் தருவார். இருவரும் பேசத் தொடங்கினால் கடைசியில் சண்டையில் தான் முடியும். 

பல முறை இரண்டு நாட்கள் நான் பேசாமல் இருந்து விடுவேன்.  ஆனால் அதிகாலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் முதல் பக்தி பாடல்கள் வரைக்கும் பாடி முடித்து நான் தாமதமாக எழுந்தாலும் திருநீறை வைத்துக் கொண்டு என் முன்னால் நிற்கும் போது வெட்கப்பட்டுக் கொண்டு அப்போது தான் குளிக்க ஓடுவேன்.  என்னுடைய வயதும் அவருடைய அனுபவ வயதும் ஒன்றாக இருக்க அவர் இளைஞர் போல சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டுருப்பார்.

இவருக்கு பயந்து கொண்டே பல பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டியதாகி விட்டது.  திட்டாமல் ஒரு பார்வையில் உள்ளே வரும் போது கொன்று போட்டு விடுவார். மறுபடியும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் தான் இருக்க வேண்டியதாய் இருக்கும்.  ஒவ்வொரு முறையும் ஈழம் சார்ந்த விசயங்களை பேசத் தொடங்கினால் பெரிய ரணகளத்தில் முடியும். அப்போது என்னிடம் கோவித்துக் கொண்டு வெளியேறி சற்று நேரம் கழித்து உள்ளே வருவார்.

நான் என்னுடைய கருத்துக்களை விட்டுக் கொடுப்பதே இல்லை.  ரணில் விக்ரமசிங்கே ஆட்சி முடிவுக்கு வந்த போது அப்பொழுதே என்னிடம் சொல்லிய விஷயம்.  நீ விரும்பும் தலைவரின் இறுதிக் கட்டம் நெருங்கிக் கொண்டுருக்கிறது.  அவர் விரும்பும் சுபாஷ் சந்திரபோஸ் போலவே அவரின் இறுதிக் காலம் மர்மமாகவே இருக்கும். பார்க்கிறாயா? என்றார்.

நான் ஒரு முறை முறைத்து விட்டு நகர்ந்து விடுவேன்.

காலங்கள் மாறிய போது எதிரபார விதமாக எழுதத் தொடங்கிய போது சில கட்டுரைகளை அவருக்கு வரவழைத்து கொடுத்துப் பார்த்த போது உன்னை விட முட்டாள் உலகில் வேறு எவரும் இல்லை. படிப்பவர்களை முதலில் பாமரர்களாக நினைத்து எழுதிப் பழகு என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.

ஈழம் சார்ந்த விசயங்களை நான் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்ட போது அப்போது தான் முழுமையாக அவரிடம் பேசத் தொடங்கினேன்.  அப்போது 3000 வருட தமிழர்களின் வாழ்க்கையை பத்து தலைப்பில் பிரித்து வைத்து எழுதி இருந்த போது படித்து பார்த்து மனம் மகிழ்ந்து அந்த குப்பை போன்ற புதையலை தோண்டி பல புத்தகங்களை கொடுத்தார். வெகுஜனம் அறியாத பல முக்கிய ஆதாரங்கள்.

ஈழப் போராட்டங்களில் பங்கெடுத்த அத்தனை நபர்களின் அவர்களின் நேரிடையான வாக்கு மூலங்கள் பேட்டிகள், ஆதாரங்கள் போன்ற திடுக்கிட வைக்கும் பல சமாச்சாரங்கள் இருந்தது.  பல செல்லறித்து கவனிக்காமல் போய் இருந்தது.  பல ஆண்டுகள் உள்ளே கிடந்த பொக்கிஷங்கள். எனக்கே வெட்கமாக இருக்க மெதுவாக உள்வாங்க ஆரம்பித்தேன். 

அப்போது அவர் சொன்ன அறிமுகம் இப்போதும் பசுமையாக இருக்கிறது.

உன்னுடைய கொள்கை விடுதலைப்புலிகள் இது போன்ற நடவடிக்கைகளில் இறங்காத பட்சத்தில் சிங்களர்களை ஜெயிக்க முடியாது என்கிறாய். நான் அது குறித்து உனக்கு புரியவைக்க முடியாது. உலகில் ஆயுத பலத்தால் எந்த நாடும் தன்னுடைய சுதந்திரத்தை அடைந்ததாக சரித்திரம் எதுவும் சொல்லவில்லை. நீ உனக்குப் பிடித்த விசயங்களை மட்டுமே தேடிப் படித்துக் கொண்டுருக்கிறாய்.  எழுதுபவனுக்கு பிடித்த பிடிக்காத என்று எதுவுமே இருக்கக்கூடாது.  எதிர்மறை நியாயங்களை எப்படி எடுத்து வைக்கிறார்கள் என்பதில் தான் சூட்சுமம் இருக்கிறது.  அதைத்தான் நீ கற்றுக் கொள்ள வேண்டும். அப்படியே தொடக்கத்தில் ஆயுதம் ஏந்தினாலும் மக்களை ஒன்று சேர்த்து அவர்களுடன் ஒன்றிணைந்து வென்று எடுக்க வேண்டும். இதுபோக ஈழத்தில் உள்ள தமிழர்களே பல்வேறு கூறுகளாக பிரிந்து கிடக்கிறார்கள்.

தமிழர்களுக்கு சிங்களர்கள் எதிரிகளாக இருப்பதை விட தமிழர்களே தமிழர்களுக்கு எதிரிகளாக இருக்கிறார்கள். தொடக்க காலத்தில் உருவான தலைவர்கள் தங்களை காப்பாறிக் கொள்ள தமிழர்களை பலி கொடுத்தார்கள். இப்போதும் அந்த பலி மட்டும் தான் நடந்து கொண்டுருக்கிறது. இப்போது மட்டுமல்ல எந்த காலத்திலும் உள்ளே இருக்கும் தமிழர்கள் ஒன்றாக சேராத வரைக்கும் அவர்களுக்கு விமோசனம் என்பதே இல்லை.

இங்கு காந்தி இருந்தார். அணைவரும் ஒன்று சேர்ந்தார்கள். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஈழம் போல் பல குளறுபடிகள் இருந்தாலும் இறுதியில் வெற்றி அடைய முடிந்தது. ஆனால் ஈழத்தில் மட்டும் ஏன் இது நடக்கவில்லை. காரணம் ஈழ மக்களின் முரண்பாடு பழக்கவழக்கங்கள் நோக்கங்களை நன்றாக உள்வாங்கிக் கொண்டு எழுத ஆரம்பி. 
நான் பார்த்தவரைக்கும் பிரபாகரன் போல் ஒரு தனிப்பட்ட ஆச்சரிய மனிதனை நான் பார்த்ததும் படித்ததும் இல்லை. 


என்னை சந்தித்த பலரும் அவருக்கு எதிர்மறையான கருத்துக்கள் கொண்ட நபர்கள் அத்தனை பேர்களும் அவருடைய கொள்கைகளைத்தான் குறை சொல்லி இருக்கிறார்களே தவிர அவருடைய தனிப்பட்ட ஓழுக்கம் சார்ந்த நடவடிக்கைகளை குறை சொன்னதே இல்லை. 


எனக்கே அது தான் கடைசி வரைக்கும் ஆச்சரியமாக இருந்தது. காரணம் நான் சந்திக்காத  அரசியல்வாதிகளே இல்லை.  அவர்களின் அந்தரங்கம் முதல் அநாகரிகம் வரைக்கும் தெரிந்த எனக்கு பிரபாகரன் ஆச்சரியமான நபரே. 


ஏன் இன்று ஜெயிக்க முடியாமல் இத்தனை பெரிய பேரழிவு.


அரசியல் தலைவர்களின் வெற்றி என்பது அந்தந்த தலைவர்களின் கொள்கைகள் தீர்மானிப்பது இல்லை.  எந்த காலத்திலும் எந்த நாட்டிலும் தந்திரமும், சமயோஜிதமும் தான் தீர்மானிக்கிறது. உனக்கு பிடித்தவரை உயர்த்தி எழுதுவதை விட எதிர்மறை நியாயங்களையும் சேர்த்து எழுது. 


புகழ்பாடும் எந்த எழுத்துக்களையும் சரித்திரம் ஏற்றுக் கொள்ளாது

சமீபத்தில் என்னை அழைத்து பெருமைப்படுத்திய நண்பர் சொன்ன விசயத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. காரணம் அவர் சொன்ன விடயங்களை இங்கு எழுதினால் சுயவிளம்பரமாக மாறிவிடும். காரணம் முக்கிய அதிகாரவர்க்கத்தின் பிரதிநிதிகள் தேவியர் இலலம் இடுகைக்கு வாசகர்களாக இருக்கிறார்கள் என்பதை அப்போது தான் புரிந்து கொள்ள முடிந்தது.  

விக்கித்து வியர்த்துப் போனேன். முழுக்க முழுக்க முமுவுக்குத்தான் அந்த பெருமை சேரும். ஒரு வருட இறுதிக்குள் புத்தகமாகவும் மாறிவிட்டது.

பதிப்பகத்தில் இருந்து பிழை திருத்த அனுப்பிய சமாச்சாரங்களை நான் மதிக்கும் சிலருக்கு அனுப்பி விட்டு அதை திருத்தி தர, ஆலோசனை சொல்ல இவரிடம் ஓப்படைத்து விட்டு ஒதுங்கி விட்டேன். 

அவரின் கொள்கைகள் நோக்கங்கள் அஹிம்சை தத்துவங்கள் அத்தனைக்கும் நான் எதிரான கருத்து கொண்டவன். ஆனால் என்னுடைய ஒவ்வொரு கால கட்ட வளர்ச்சியிலும் என் அப்பாவை விட நூறு மடங்கு அக்கறையாய் கொண்டு செலுத்தியவர். முக்கியமாக பிரபாகரன் அவர்களின் கொள்கைகளுக்கு எதிரான கருத்து கொண்டவர். என்ன சொல்லப் போகிறாரோ என்று பயந்து கொண்டு அழைக்காமல் இருந்து மிகுந்த தயக்கத்தோடு சென்று பார்த்தேன்.

அவர் சொல்லி விமர்சனம்

"அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஆவணமாக கருதப்படும்.  இந்த தாக்கம் மறைய எனக்கு இன்னும் இரண்டு நாட்கள் தேவைப்படும்.". 

16 comments:

vinthaimanithan said...

மனசு கனக்கின்றது... முமு போலவே பிரபாகரனும்...! சூழலுக்கேற்ப தம்மை வளைத்துக் கொள்ளத் தெரியாத ஆளுமைகள்!

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும்!" என்பது பொய்யோ?!

வேறேதும் எழுதத் தோன்றவில்லை

Jerry Eshananda said...

//தமிழர்களுக்கு சிங்களர்கள் எதிரிகளாக இருப்பதை விட தமிழர்களே தமிழர்களுக்கு எதிரிகளாக இருக்கிறார்கள்//
உண்மை...

துளசி கோபால் said...

பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது!!!!

லெமூரியன்... said...

.......................!

எஸ்.கே said...

//புகழ்பாடும் எந்த எழுத்துக்களையும் சரித்திரம் ஏற்றுக் கொள்ளாது// நிதர்சனமான உண்மை.
சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மார்றிக் கொள்ளாதவரின் வாழ்வு சுழலில் சிக்கிய ஓடம்தான்!

Unknown said...

///அரசியல் தலைவர்களின் வெற்றி என்பது அந்தந்த தலைவர்களின் கொள்கைகள் தீர்மானிப்பது இல்லை. எந்த காலத்திலும் எந்த நாட்டிலும் தந்திரமும், சமயோஜிதமும் தான் தீர்மானிக்கிறது.///நம் தமிழகத்திலேயே தற்போது இதை காணலாம்.நல்ல பதிவு.அறியாத தகவல்கள்.அடுத்த பதிவுக்கு ஆவாலாக உள்ளேன்.

ஹேமா said...

ஜோதிஜி நீங்களே கேள்வியும் கேட்டு பதில்களும் தந்திருக்கிறீர்கள்.பிறகென்ன சொல்ல இருக்கு.

"தலைவன் ஒருவன் தனது அதிகாரத்தைத் தங்க வைக்க வேண்டுமானால் தனிப்பட்ட அவனுடைய வாழ்க்கையில் அவன் அப்பழுக்கற்ற நடத்தையுடன் இருக்கவேண்டும் என்பதன் சாட்சி இந்தத் தலைவன்."

Unknown said...

அண்ணே கண்டிப்பாக ஈழம் அமைந்தே தீரும்... உங்கள் தலைப்பும் அதனை உறுதி செய்கிறது ,,,

ஜோதிஜி said...

டீச்சர் உங்கள் விமர்சனம் பல விசயங்களையும் யோசிக்க வைத்தது

நூறு சதவிகிதம் உண்மை தான் ஹேமா.

செந்தில் ஆசை தான். ஆனால் யாழ்பாணத்தில் வேட்டைக்காரன் படத்திற்ககு முண்டியடித்துக் கொண்டு கள்ள டிக்கட் வாங்கி தங்கள் இப்போதைய சுதந்திரத்தை எத்தனை சிறப்பாக கொண்டாடிக் கொண்டுருக்கிறார்கள். அதிலும் ஈழத்தில் இருந்து எழுதும் வலைப்பூக்களை நன்று உற்று கவனித்துப் பாருங்கள். அடேங்கப்பா..... புனிதர்கள்......
திரைப்பட விமர்சனத்தைக்கூட தமிழ்நாட்டு தமிழர்களை விட ரசித்து ருசித்து ...... பிழைக்கத் தெரியாதவர் பிரபாகரன். கடைசி தலைப்பில் இது குறித்து பேசலாம் செந்தில்.

நன்றி நந்தா. வந்து கொண்டே இருக்கிறது....

லெமூரியா உன்னோட இம்சை தாங்கல நண்பா.

கோடு போட்டு போயிட்டா நாங்க ரோடு போட மாட்டோமா?

ஜோதிஜி said...

விந்தை ராசா முதல்விமர்சனமே முத்தான விமர்சனம். எனக்கும் வேறு எதுவும் எழுதத் தோன்றவில்லை.

ஆசிரியரே உண்மையைத்தான் டீச்சரும் சொல்லி இருக்காங்க.

அற்புதமான விமர்சனம் எஸ்கே

http://thavaru.blogspot.com/ said...

அன்பின் ஜோதிஜி நட்சத்திரவாரம் முடிவதற்குள் ஏதோ ஒரு செய்தியை தெரிவித்தவிட வேண்டும் என்று அவசரம் தென்படுகிறது. உங்களது அனைத்து இடுகைகளும் மெதுவாக உள்வாங்கி கொண்டால் புரிந்துகொள்ளமுடியும்.இதுதான் ஜோதிஜி என்று ஆனப்பிறகு ஏன் அவசரம்....

ஜோதிஜி said...

தவறு

உண்மைதான். எப்போதும் இடுகையில் எழுதும் எழுத்துக்களுக்கு இடையிடையே ஒரு நீண்ட ஓய்வு கொடுப்பது வழக்கம். மேலும் என்னுடைய எழுத்துக்கள் நீங்கள் சொல்வது போல் மேலோட்டமாக படித்தால் ஒரு தாக்கமும் உருவாகாது. பலரும் தெரிவித்த கருத்தும் இதே தான்.

உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி.

நிச்சயம் ஒய்வு கிடைக்கும் போது வந்து படிக்கக்கூடும். காரணம் மற்றவர்களின் ஓய்வு நேரத்தில் என்னுடைய நேரங்கள் ஓய்வாக இருக்காது.

Unknown said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

ரோஸ்விக் said...

//நிச்சயம் ஒய்வு கிடைக்கும் போது வந்து படிக்கக்கூடும். காரணம் மற்றவர்களின் ஓய்வு நேரத்தில் என்னுடைய நேரங்கள் ஓய்வாக இருக்காது. //

சரி தான். நான் கூட இப்போது வந்து படித்துவிட்டேன்.

பிரமிக்கிறேன். பிரபாகரன் பிழைக்கத் தெரியாதவர்தான். உழைக்கத் தெரியாதவர் இல்லை. அவர் எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி போற்றுதலுக்குரியவர். தோல்வி அடைந்ததால்(?) அவரின் கொள்கைகள் தவறு என சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. தோல்விக்கான காரணங்கள் அவரின் தி(ட்)டப் பார்வை அகலத்திற்குள் விழாமல் போயிருக்கலாம். வரலாறு திரும்பும்.

ரோஸ்விக் said...

//வேட்டைக்காரன் படத்திற்ககு முண்டியடித்துக் கொண்டு கள்ள டிக்கட் வாங்கி தங்கள் இப்போதைய சுதந்திரத்தை எத்தனை சிறப்பாக கொண்டாடிக் கொண்டுருக்கிறார்கள். அதிலும் ஈழத்தில் இருந்து எழுதும் வலைப்பூக்களை நன்று உற்று கவனித்துப் பாருங்கள். அடேங்கப்பா..... புனிதர்கள்......//

நான் கவனித்ததுண்டு. "பெரும்பாலானோர்" சினிமா, கிரிக்கெட், பெண்களுக்கு தரும் முக்கியத்துவத்தை தங்கள் வாழ்விற்கு கூட கொடுப்பதில்ல.

ஜோதிஜி said...

ரோஸ்விக் தாமதமான விமர்சனம் என்றாலும் தரமான உங்களின் உள்வாங்கல் விமர்சனத்திற்கு என்னுடைய நன்றிகள்.