Sunday, January 07, 2018

ஆசிரியர் சம்பளம்? காவல்துறை சம்பளம்? சில குறிப்புகள்


ஒரு பக்கம் அவல முகம். 

சென்ற வாரத்தில் ஒரு நாள் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சந்தின் வழியாக வண்டியில் வந்து கொண்டிருந்தேன். திரும்ப வேண்டிய சந்தின் ஓரத்தில் பலரும் நின்று கொண்டிருந்தனர். உள்ளடங்கிய பகுதியில் ஒரு காவல் துறை வாகனமும் சில காவலர்களும் நின்று கொண்டு எப்போதும் போலச் சோதித்து அவர்கள் வருமானத்தைச் சாதித்துக் கொண்டிருந்தனர். என்னை நிறுத்து என்று அழைக்கவில்லை. ஒரு மணி நேரம் அந்த இடத்தில் நின்று இருந்தாலும் அங்கிருந்த நபர்களில் ஒருவருக்கு 300 ரூபாய் என்று கணக்கு வைத்துக் கொண்டாலும் முப்பது நபர்களின் மூலம் அவர்கள் பெற்ற தொகை பத்தாயிரம் ரூபாய்க்கு அருகே வந்திருக்கும். 

மறு பக்கம் ஆச்சரிய முகம். 

திருப்பூரில் கடந்த ஆறேழு மாதங்களாகச் சாலை பராமரிப்புக் கேவலமாக உள்ளது. தினந்தோறும் அலைய வேண்டிய வேலையில் உள்ளவர்களின் முதுகு நிச்சயம் பெயர்ந்து விடும். தினமும் எதையும் உள்ளே ஊற்றிக் கொண்டோ அல்லது வலிக்குத் தடவிக்கொண்டோ தான் தூங்க முடியும். கவுன்சிலர் இருந்தால் கூட மக்கள் பேச முடியும். இப்போது அதற்கு வாய்ப்பும் இல்லை. ஆனால் இந்தக் கொடுமையில் பல இடங்களில் உருவாகும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கும் பல காவல் துறையைச் சேர்ந்த நண்பர்களைக் கவனித்துக் கொண்டே வருகின்றேன். நான்கு புறமும் காட்டாறு அருவி போல வந்து பாயத் தயாராக இருக்கும் பொது மக்களின் வேகத்தைக் குறைத்து, நிறுத்தி, சீர் செய்யும் தொடர்ச்சியான அவர்களின் பணியும், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை மனதிற்குள் போட்டுப் பார்த்தேன். 

கலைஞர் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கூட ஆசிரியரும் இன்று கோடீஸ்வராக இருக்கின்றார்கள். ஆனால் ஆசிரியர்களை விடப் போக்குவரத்துக் காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் அதே அளவுக்குச் சம்பளம் வழங்கப்பட வேண்டும். நாள் தோறும் மொத்த புகையையும் சுவாசித்து, படிப்படியாக ஆரோக்கியம் இழந்து, வேலை செய்யும் முழுமையான நேரத்தில் ஒரு துளி கூட நகர வாய்ப்பில்லாத வாழ்க்கை அது. 

+++++++++++++

ஒரு துறையைப் பற்றி எழுதும் போது அதனைப் பற்றி விமர்சனப் பார்வையில் தான் அணுக முடியும். நம் குடும்பத்தில், உறவினர்களில், நண்பர்கள் வட்டத்திலும் அதே துறையில் பணியாற்றக்கூடும். அவர்களின் தனிப்பட்ட சங்கடம் என்னை வருத்தமடையச் செய்தாலும் நான் பார்க்கும் சமூகத்தை என் பார்வையில் என் மொழியில் எழுதிவிடவே விரும்புகிறேன். 

விதிவிலக்குகள் இருக்கலாம். 

ஏன் ஆசிரியர்கள் மேல் கோபம்? இது நேற்று என்னை நோக்கி வந்த கேள்வி? 

எங்கள் குடும்பத்தில் ஒருவர் ஆசிரியராக நுழைந்து தலைமையாசிரியராக இந்த மாதம் முடிவில் பணி ஓய்வு பெறப் போகின்றார். நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது அவர் பணியில் சேர்ந்தார். ஆசிரியராகப் பணியில் சேர்ந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உள்ளடங்கிய கிராமத்தில் இருந்தது. பள்ளிக்கூட, கல்லூரி விடுமுறையில் அவர் பணியாற்றிய பள்ளிக்குச் சென்றுள்ளேன். 

தமிழ்நாட்டில் மூன்று இடங்களுக்கு மாறி இன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பணியாற்றி அவர் தலைமையாசிரியராக ஆசிரியர் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சகோதரி என்று நிலையைத் தாண்டி தற்போதைய கல்விச்சூழல், ஆசிரியர்கள், மாணவர்கள் என்று பலவற்றைப் பேசுவோம். 

அவர் இறுதியில் முடிக்கும் ஒரே விசயம் ஆசிரியர்களுக்கு "இவ்வளவு சம்பளம் தேவை இல்லை" என்பார். 

என்னுடன் இளங்கலை படித்த நண்பர் முதுகலை முடித்து அவனும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ப்ளஸ் டூ ஆசிரியராக உள்ளே நுழைந்து இப்போது திருச்சியில் உள்ள அரசுப் பள்ளியில் தான் பணியாற்றி வருகின்றார். அவர் முதுகலை, கல்வியியல் பட்டங்கள் பெற்று வேலை கிடைக்காமல் முதலில் திருப்பூர் வந்து தான் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு நான் வாங்கிக் கொடுத்த வேலையில் தான் இருந்தார். அவர் ஆசிரியர் பணியில் சேர்ந்ததும் முதலில் தனக்குக் கிடைத்த சம்பளத்தைப் பார்த்து திருப்பூர் மீண்டும் வந்து விடலாமா? என்று யோசித்தவர் தான். இப்போதும் வாரம் தோறும் உரையாடிக் கொண்டு தான் இருக்கின்றார். அவர் சென்ற வாரம் சொன்னது "நான் வாங்கும் சம்பளத்திற்கும் என் வேலைக்கும் தொடர்பே இல்லை. உண்மையிலேயே ஆசிரியர்கள் சம்பளம் மிக மிக அதிகம்". 

காரணம் அவருக்குத் தெரியும் திருப்பூரில் பத்தாயிரம் சம்பளத்திற்கு ஒருவர் எந்த அளவுக்குக் கடின உழைப்பு செலுத்த வேண்டும் என்பதனை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார். 

மற்றொரு உறவினர் மத்திய அரசில் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார். அவர் மனைவியும் மேல் நிலைக்கல்வி ஆசிரியராக இருக்கின்றார். தினமும் நாற்பது கிலோமீட்டர் பயணித்துப் பள்ளிக்குச் செல்கின்றார். அவர் இயல்பிலேயே சுகவாசி. பணி குறித்துப் பேசும் போதெல்லாம் டார்ச்சர் அதிகம் என்கிறார். 

வாசிப்பு முதல் கண்டதும் கேட்டதும் பழகியதை வைத்துப் பார்க்கும் போது ஆசிரியர்கள் குறித்த தற்போது என் சிந்தனையில் இருப்பவை. 

1. இராமநாதபுரம், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சித் தலைவராக இருந்தவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுகளால் இந்த மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளியில் புத்துணர்ச்சி பெற்றது. ஆசிரியர்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைத்தது என்று கூறிவிட முடியாது. 

2. குறிப்பிட்ட வகுப்பு வரைக்கும் ஆல் பாஸ் என்ற அரசின் கொள்கை மாணவர்களின் கல்வி அறிவை வளர்க்கவில்லை.. அரசு மூலம் வழங்கப்படும் இலவச பொருட்கள் மாணவர்களை அரசுப் பள்ளிகள் பக்கம் இழுத்துக் கொண்டு வரவில்லை. வராக்கடன் தொகையை அரசு வெளியிடாவிட்டாலும் நாங்களே வெளியிடுவோம். முதலில் வங்கிகளைச் சீரமைக்க வராக்கடன்களை வசூலிக்க வேண்டும். என்று வங்கி பணியாளர்கள் கூட்டமைப்பு போராடிப் பார்த்துள்ளேன். இதுவரையில் ஆசிரியர்கள் போராடிய எந்தப் போராட்டத்திலும் மாணவர்கள் நலன் சார்ந்தோ, மாறாமல் இருக்கும் பாடத்திட்டங்கள் குறித்து அக்கறைப்பட்டுப் போராட்டம் நடத்திப் பார்த்ததாக நினைவில்லை. 

3. மாணவர்களைத் திட்டக்கூடாது. அடிக்கக்கூடாது என்ற கட்டளை ஆசிரியர் மாணவர்கள் உறவில் பெரிய விரிசலை உருவாக்கியுள்ளது. மாணவப் பருவத்தைத் திசைமாற்றியுள்ளது. ஆசிரியர்களின் அக்கறையின்மையை அதிகப்படுத்தியுள்ளது. 

4. ஆசிரியர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் பிற வேலைகள் கூடுதல் பணிச்சுமை என்றால் அதனை விட இன்னமும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள நடைமுறைகளைக் கட்டி அழுது கொண்டிருப்பது கல்வித்துறையை முன்னால் நகர முடியாத அளவுக்கு உள்ளது. கல்வித்துறையில் உள்ள ஊழல் குறித்து எவரும் அக்கறைப்பட்டுக் கொள்வதில்லை. இது அரசியல்வாதிகளை மட்டும் சார்ந்தது மட்டுமல்ல. ஆசிரியர் எடுக்கும் கடன் தொகை பெறக்கூட அதிகாரிகளுக்குக் குறிப்பிட்ட சதவிகிதம் லஞ்சம் கொடுத்த பின்பே அந்தத் தொகையைப் பெற முடியும். கீழ்நிலை வரைக்கும் நாற்றமடிக்கின்றது. 

5. இப்போது ஆசிரியர் மாணவர் உறவென்பது பாசத்துடன் அணுகுவது அல்ல. பயத்துடன் அவரவரை பாதுகாத்துக் கொள்வது போலவே உள்ளது. 

6. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளியில் ஒரே ஆசிரியர் கணிதம், அறிவியல் பாடங்களுக்குப் பாடம் எடுத்து பாதிக்கு மேற்பட்டவர்களை நூற்றுக்கு நூறு எடுக்க வைத்துள்ளார். பல இடங்களில் மாணவர்கள் குறைவாக இருந்தும் அளவுக்கு மீறி ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருக்கின்றார்கள். அதிக மாணவர்கள் இருக்கும் இடங்களில் அரசு, ஆசிரியர்களை நியமிக்காமல் காரணங்களைச் சொல்லி தட்டிக்கழிக்கின்றது. 

7. சம்பளத்தைத்தாண்டி அர்ப்பணிப்பு உணர்வு என்பது ஆசிரியர் பணியில் தலையாயக் கொள்கை. காரணங்கள் எத்தனை இருந்தாலும் எதிர்காலச் சமூகத்தை உருவாக்குபவர்கள் ஒவ்வொரு ஆசிரியருமே. ஆனால் உங்களுடன் பணியாற்றுபவர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள் என்று அவர்களின் தரத்தை பட்டியலிட்டுப் பாருங்கள்? 

தான் வாங்கும் சம்பளத்திற்கு முழுமையாக என் உழைப்பைக் காட்டியுள்ளேன். ஒரு மாணவர் தேர்ச்சி பெறாவிட்டால் கூட என் மனம் வருந்தும். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் நான் பணியாற்றும் பள்ளியில் தான் என் மகன், மகளையும் படிக்க வைக்கின்றேன். எவரையும் தனியார் பள்ளியில் படிக்க வைப்பதில்லை? போன்ற கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். 

உங்கள் மனசாட்சி உண்மையைப் பேசும்?

07/01/2018  (முகநூலில் எழுதிய குறிப்புகள்)

6 comments:

Rathnavel Natarajan said...

ஆசிரியர் சம்பளம்? காவல்துறை சம்பளம்? சில குறிப்புகள் - பல இடங்களில் உருவாகும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கும் பல காவல் துறையைச் சேர்ந்த நண்பர்களைக் கவனித்துக் கொண்டே வருகின்றேன். நான்கு புறமும் காட்டாறு அருவி போல வந்து பாயத் தயாராக இருக்கும் பொது மக்களின் வேகத்தைக் குறைத்து, நிறுத்தி, சீர் செய்யும் தொடர்ச்சியான அவர்களின் பணியும், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை மனதிற்குள் போட்டுப் பார்த்தேன்.- அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஆசிரியர் சம்பளம். நீங்கள் விவாதித்துள்ளது உண்மையே. ஆசிரியர் என்ற மனப்பான்மை பல ஆசிரியர்களுக்கில்லையே என்ன செய்வது? தன் பணியினை பொறுப்போடு செய்பவர் என்று சிந்தித்துப்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

கலியபெருமாள் புதுச்சேரி said...

கீழ்மட்டத்தில் இருப்பவர்களையே குறை சொல்லிப் பழகிவிட்டது நமக்கு...மேல்மட்டத்தில் இருப்பவர்கள் ஒழுங்காக இருந்தால் தானாக எல்லா நிலையும் சரியாகும்..தோல்விக்கு தானே பொறுப்பு ஏற்பவர்கள்தான் உண்மையான தலைவர்கள்..MLA க்கள் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும்போது ஆசிரியர்கள் வாங்கக் கூடாதா? எத்தனை ஆசிரியர்கள் கோடீஸ்வரர்கள்?

ஜோதிஜி said...

நன்றி. நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களின் கடமைகள் குறித்து அவர்கள் வாங்கும் சம்பளம் குறித்து நாம் இங்கே பேசினால் அவற்றை இங்கே விவாதிக்கலாம். ஆனால் நாம் இங்கே பேசுவது ஆசிரியர் குறித்து மட்டுமே. மற்ற எல்லாவற்றையும் மறந்து விடுங்க. இங்கே எத்தனை ஆசிரியர்கள் தன் மகள் மகளை தாங்கள் படிக்கும் பள்ளியில் படிக்க வைக்கின்றார்கள் கலியமூர்த்தி. அதற்கு உங்கள் பதில் என்ன?

கரந்தை ஜெயக்குமார் said...

ஐயா வணக்கம்.
ஆசிரியர்கள் பற்றிய தங்களின் கருத்தில் மாறுபடுகிறேன் ஐயா. பொதுவாகவே எல்லா துறையிலுமே, நேர்மையாகப் பணியாற்றுபவர்கள், பணியாற்றுவதுபோல் நடிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நான் மாணவனாய் இருந்துபோது, கல்வித் துறையானது கல்வியாளர்களின் கையில் மட்டுமே இருந்தது. ஆசிரியர்களுக்கு ஒரு தனி மரியாதை கிடைத்தது. இன்றும் அக்காலகட்டம் போல் அர்ப்பணிப்போடு உழைக்கும் ஆசிரியர்கள், மிகப் பெரும் விழுக்காட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை. இனறைய ஆசிரியர்கள் எவ்வித சுதந்திரமும் இன்றி, கை கால்களும்,ஏன் வாயும் கூட கட்டப்பெற்ற நிலையில்தான் பணியாற்றுகிறார்கள்.
ஒன்பதாம் வகுப்பு வரை, மாணவர்கள் படித்தாலும், படிக்காவிட்டாலும், பள்ளிக்கு வந்தாலும், வராவிட்டாலும் தேர்ச்சி வழங்கியே ஆக வேண்டும்.
ஆனால் பத்தாம் வகுப்பில்,நூறு சதவீத தேர்ச்சி காட்டியாக வேண்டும்.
என்னவொரு முரண்பாடு பார்த்தீர்களா?
மாணவனைக் கண்டிக்கும் உரிமை ஆசிரியருக்குக் கிடையாது,
எதையாவது கண்டித்தால், கல்வித் துறையே அறிவித்திருக்கிறது, 1098 என்ற எண்ணுக்கு அழைத்து, புகார் செய்யலாம். மாணவிகளாக இருந்தால் ஆசிரியர் என்னிடம் தவறாகப் பேசினார், தவறாக நடக்க முயன்றார் என்று புகார் செய்யலாம். உண்மையோ பொய்போ,முதலில் ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப் படுவார்.உலகம் அவரைத் தூற்றத் தொடங்கும். பின் அவர் குற்றமற்றவர் என்று கல்வித் துறை சொல்வது யாரக்கும் தெரியாத ரகசியமாகவே பாதுகாக்கப்படும்.
இன்று கல்வித் துறை அரசியல்வாதிகள் கைவசம் இருக்கிறது.
நீங்களே சொல்லுங்கள், தங்களுக்குத் தெரியும், தாங்கள் ஒரு தொழிற் சாலை வைத்திருக்கிறீர்கள்.
உங்களின் தொழிற் சாலையில் உற்பத்தி செய்யப் பட வேண்டிய பொருட்களுக்கு தாங்கள் ஒரு இலக்கு நிர்ணயிக்கலாம். அவ்விலக்கினை நோக்கி முழுமையாய் பணியாற்றலாம். அது உடல் உழைப்பு சம்பந்தப் பட்டது.
ஆனால் பள்ளிக் கூடம் என்பது அப்படி அல்லவே,
தேர்ச்சி சதவிதம் இவ்வளவு என்று இலக்கு நிர்ணயிக்கிறார்களே, எப்படி முடியும். ஒரு வகுப்பிய்ல நாற்பது மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால், நாற்பது பேரும் ஒரே மாதிரியான அறிவுடன் இருப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். வெவ்வேறு சூழ்நிலையில இருந்து வருபவர்கள், வெவ்வேறு பொருளாதார நிலையில் இருந்து வருபவர்கள், ஆசிரியரால் எப்படி அனைவரையும் தேர்ச்சி பெற வைக்க முடியும்,
இன்றைய ஆசிரியர்கள் எல்லாம் குடும்பம் மறந்து, பள்ளி பள்ளி என்றே ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆசிரியரக்கும் ஒவ்வொரு விலையில்லா பொருட்கள் வழங்குவதற்கானப் பொறுப்பினை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஆசிரியர் மாணவர்களின் விலையில்லா காலணிகளுக்கு பொறுப்பு என்றால் ஒவ்வொரு மாணவரின் காலைப் பிடித்தும், அளந்து பார்த்து, காலணியின் அளவினைக் குறித்துக் கொடுத்தாக வேண்டும்.நானே கடந்த ஆண்டு நூறு மாணவர்களின் காலைப் பிடித்திருக்கிறேன்.
இதுவா கல்வி,
இன்றைக்கு அரசுத் துறையில் இலஞ்சம் வாங்குவதற்கு வழியே இல்லாத அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்தான். அதனால் இலஞ்சம் வாங்க வேண்டுமென்று சொல்லவில்லை. மாணவர்களுக்கு நல் வழியைக் காட்டுபவர்கள்தான் ஆசிரியர்கள். ஆனால் இன்றைய உலகில், மாத ஊதியத்தினை மட்டுமே வைத்துக் கொண்டு பிழைப்பை ஓட்டுபவர்கள், என் போன்ற ஆசிரியரகள்தான்,
அதனால் ஆசிரியரகளுக்கு ஊதியம் அதிகம் என்பது போன்ற கருத்தை முன் வைக்க வேண்டாம் என்று தங்களை அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.
கல்வித் துறை சீரமைக்கப் பட வேண்டும்.

ஜோதிஜி said...

உங்கள் விமர்சனத்தைப் படித்து நெகிழ்ந்து விட்டேன். நீங்க சொன்னது முற்றிலும் உண்மை. ஏற்கிறேன். ஆனால் நீங்க சொன்ன சதவிகிதம் மற்ற சதவிகிதம் தான் மிகப் பெரிய வேறுபாடாக உள்ளது.