சம வயது உள்ளவர்களை இடைவெளி விட்டுச் சந்திக்கும் போது அவர்களின் மாறிய தோற்றங்கள் பயமுறுத்துவதாக உள்ளது. எதை இழந்து எவற்றையெல்லாம் பெற்றார்? என்று கேள்விக்குறியில் வந்து முடிகின்றது. இவனைக் குழந்தையாக பார்த்தோமே? இப்போது நம் முன்னால் நிற்பது இருபது வயது இளைஞன் என்று நம் பார்வையில் தெரியும் போது நம் வயது குறித்து பதட்டம் வருகின்றது. அங்கங்கே தெரியும் நரைமுடிகளைப் பார்த்து யோசித்துக் கொண்டிருக்கும் போது உனக்கு என்னடா? நரைமுடியே இல்லை? என்று கேட்பவர்கள் எதிரியாகத் தெரிகின்றார்கள்.
கஜா புயல் வந்து போய் அடுத்த மூன்று வாரங்களில் பாதிக்கப்பட்ட சில இடங்களுக்குச் சென்றேன். நகரமயமாக்கல் அதன் உருவாக்கிய தாக்கங்களை முழுமையாக இந்த வருடம் பல இடங்களில் பார்த்தேன். சிற்றூர் அதனைச் சார்ந்து இருக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள். வளர்ந்து கொண்டிருக்கும் ஊர்கள், வளர்ந்த ஊர்கள் இங்கே ஒவ்வொரு இடங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, உறவு முறை, எதிர்பார்ப்புகள், மாறிய, மாறிக் கொண்டிருக்கும் மனோபாவங்களை இப்படிச் சுருக்கமாகச் சொல்ல முடியும்.
எல்லாவற்றையும் அடைந்து விட வேண்டும் என்ற ஆசையும் அதற்காக அவர்கள் அடையும் அவஸ்தைகள் என்று இரண்டு பாகப் பெரிய கதையாகவே எனக்குத் தெரிந்தது. குடும்ப உறவுகள் இன்னமும் உள்ளது. ஆனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உடைந்து போய் இருக்கின்றது. மேற்கத்திய நாகரிகத்தை தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்று ஆசை ஒரு பக்கமும் ஆனால் வாழும் சூழலில் விட முடியாத சாதி, மதம், உறவுகள் சார்ந்த பழக்கத்திற்கும் இடையே ஊசலாட்ட வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள்.
எங்கெங்குகாணினும் வாட்ஸ்அப் உருவாக்கிய தாக்கமும், படிப்படியான மாற்றங்களின் விளைவுகளை அடுத்த ஐந்தாண்டுகளில் நாம் முழுமையாகப் பார்க்க முடியும். அதன் தொடக்கம் இப்போது நடந்து கொண்டு இருப்பதாக எனக்குத் தோன்றுகின்றது. காரணம் ஒரு கிராமத்தில் நடக்கும் திருமணத்தில் தகப்பனின் வருமானம் மிகக் குறைவாக இருந்தாலும் மணமகள் விரும்பும் ஒப்பனைச் செலவும் மட்டும் 50.000. ஒரு ஜாக்கெட் தையல்கூலி 3.000. மணமகன் கோட் போட்டுத் தான் வருவேன் என்ற பழக்கமும் உருவாகியுள்ளது. மொத்தத்தில் கடன் குறித்துப் பயந்த சமூகம் அதை வாழ்வில் இயல்பான பழக்கமாக மாற்றியுள்ளது.
இந்த வருடம் வால்பாறை மற்றும் சுற்றியுள்ள இடங்கள் நண்பருடன் சென்று வந்தேன். சென்று வந்த அடுத்த வாரத்தில் கேரளா வெள்ளத்தில் தவித்துத் தலைகீழாக மாறிப்போனது. நாங்கள் சென்று வந்த பாதையெல்லாம் 50 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் அனுபவித்த இன்னல்களை அடைந்தார்கள். என்பதனை புரிந்து கொள்ள முடிந்தது. 30 வருடங்களாகத் திருப்பூரில் வாழ்ந்து நெருங்கிய கேரள நண்பர் மூலம் வெள்ளத்திற்குப் பின்னால் கேரளாவில் நடந்த பல விசயங்கள் காதுக்கு வந்தது.
வழங்கப்பட்ட நிவாரணங்கள் செல்ல வேண்டியவர்களை விட வந்த நிவாரணங்கள் மூலம் வளர்ந்தவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. பொதுச் சமூகம், அரசியல் சமூகம், தொழில் சமூகம் இவை மூன்றும் வெவ்வேறு தளத்தில் இயங்குகின்றது. இந்தியாவுக்கென உள்ள மாற்ற முடியாத அதிகாரவர்க்கத்தினர் மாற்ற விரும்பாத பல அரசியல் சமாச்சாரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிந்தது. காரணம் தற்போது அரசாங்கம் என்பதே ஒரு வணிக நிறுவனத்தின் லாப கணக்கு பார்க்கும் அமைப்பாக மாறியுள்ளது என்பதனையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதனையும் புரிந்து கொண்டேன்.
++++++++++
இரவு, நள்ளிரவு என்று எப்போது வேலை முடிந்து வீட்டுக்கு வந்தாலும் உடனே தூங்கி விடும் பழக்கமும் இயல்பாகவே அதிகாலையில் எழும் பழக்கமும் இன்னும் மாறவில்லை. அதிகாலையில் படிப்பது, பார்ப்பது என்று எத்தனை வேலைகள் செய்தாலும் மீதி இருக்கும் நேரமென்பது அதிகமாக இருக்க இந்த வருடம் நடைபயிற்சி பழக்கம் உருவானது. வட்டம், சதுரம், செவ்வகம் என்ற முறையில் வெவ்வேறு இடங்களைக் குறிவைத்து ஒவ்வொரு நாள் காலைப் பொழுது, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பல இடங்களுக்கு நடந்து சென்ற போது எங்கள் பகுதியில் வசிக்கும் மயில்களும் குயில்களும் அறிமுகம் ஆனது. கூடவே தொப்பையர்கள் உலகமும். .
இரவு, நள்ளிரவு என்று எப்போது வேலை முடிந்து வீட்டுக்கு வந்தாலும் உடனே தூங்கி விடும் பழக்கமும் இயல்பாகவே அதிகாலையில் எழும் பழக்கமும் இன்னும் மாறவில்லை. அதிகாலையில் படிப்பது, பார்ப்பது என்று எத்தனை வேலைகள் செய்தாலும் மீதி இருக்கும் நேரமென்பது அதிகமாக இருக்க இந்த வருடம் நடைபயிற்சி பழக்கம் உருவானது. வட்டம், சதுரம், செவ்வகம் என்ற முறையில் வெவ்வேறு இடங்களைக் குறிவைத்து ஒவ்வொரு நாள் காலைப் பொழுது, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பல இடங்களுக்கு நடந்து சென்ற போது எங்கள் பகுதியில் வசிக்கும் மயில்களும் குயில்களும் அறிமுகம் ஆனது. கூடவே தொப்பையர்கள் உலகமும். .
ஆரோக்கியத்திற்கெனத் தனியான பயிற்சி தேவையில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. உண்ணும் உணவு, மனக்கட்டுப்பாடுகள், நம் அன்றாடப் பழக்கவழங்கள் சார்ந்தே பெரும்பாலும் சாதிக்க முடியும். இயல்பான அன்றாட வேலையில் நடப்பதற்கு உண்டான அத்தனை சாத்தியக்கூறுகளையும் எப்போதும் நான் கடைபிடிப்பதுண்டு. ஒவ்வொரு முறையும் நம் உடம்பே நமக்கு உணர்த்தும். மனம் அதனை எளிதாக அடையாளம் காட்டிவிடும். நீண்ட நேரம் ஓய்வெடுக்காமல் நடந்து முடிந்து, வேர்வைச் சிந்தி 45 நிமிடங்கள் கழித்து வந்தமரும் போது நம் நுரையீரலின் பலத்தையும், இதயத் துடிப்பில் உள்ள வித்தியாசங்களை வைத்தே நம் ஆரோக்கியத்துடன் அளவீடுகளை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
கடந்த இரண்டு வருடங்களாக ஒரு கட்டுரை மீண்டும் மீண்டும் கண்களுக்குத் தென்பட்டுக் கொண்டே இருந்தது. 24 மணி நேரப் பட்டினி. இந்த வருடத்தில் நாலைந்து முறை முயற்சித்து, தோற்று, மகள்கள் மனைவியில் கிண்டலுக்கு ஆளாகி கடைசியாக ஒரு தடவை முயற்சி வெற்றி கண்ட ஆண்டு இது. இதன் தொடர்ச்சியாக வெளியே கண்டதையும் வாங்கித் தின்னும் பழக்கம் அடியோடு நின்று போனது. ருசியைத் தேடி அலைந்த நாக்கு கட்டுக்குள் வந்தது. காலை எழுந்தவுடன் குடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாய பழக்கமாக இருந்த டீ, காபியை ஒதுக்க முடிந்துள்ளது.
நாம் வாங்குவது கோழியா? அல்லது உருளைக்கிழங்கா? இது எத்தனை நாளுக்கு முன்னால் கடலில் வாழ்ந்து இருக்கும் என்ற மீன் ஆராய்ச்சிகளைக் கவனித்து கவனித்து அசைவ விருப்பங்கள் முக்கால்வாசி முடிவுக்கு வந்துள்ளது. ஜனத்தொகை பெருக்கமும், மக்களின் அதீத தேவைகளும் சேர்ந்து கலப்படம் என்ற வார்த்தையை அங்கீகாரமாக மாற்றியுள்ளது.
மக்களின் சமீப காலப் பிரியாணி வெறியும், வீதிக்குப் பலவித வண்ணங்களில் வாங்க முடிகின்ற வறுத்த கோழித்துண்டுகள் ஒவ்வொன்றும் வயிற்றுக்குள் சேர்க்கப்படும் சின்னச் சின்ன வெடிகுண்டுகளாகத் தெரிகின்றது.
நீட் பரிட்சையில் இருந்து தப்பித்து வெளியே வருகின்ற எதிர்கால மருத்துவர்களுக்கு டாஸ்மாக் மூலம் வழங்கப்படும் எரிசாரயம் இங்கே மிகப் பெரிய சந்தையை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் பெயரில் இப்போது சந்தையில் மிகப் பெரிய மோசடி நடந்து கொண்டு இருக்கின்றது. ஆனால் டாஸ்மாக்கில் ஒன்று வாங்கினால் மற்றொன்று வாங்கினால் தான் கொஞ்சமாவது ஏறுகின்றது என்று குடிமக்களின் புலம்பலை அதிகம் கேட்க முடிந்தது.
பெருநகரங்களில் இப்போது மராத்தான் போட்டி பல சங்கத்தின் வாயிலாக ஆர்வமாக நடத்தப்படுகின்றது. மகள்கள் மூலம் அறிந்த திருப்பூரில் நடந்த ஐந்து கிலோ மீட்டர் மராத்தான் போட்டியை இரண்டு மகள்களுடன் இயல்பாகக் கடந்து வர முடிந்துள்ளது.
சில வருடங்களுக்கு முன் யோகா குறித்த விருப்பங்கள் இருந்தது. சந்தர்ப்பங்கள் சரியாக அமையவில்லை. ஆனால் இந்த ஆண்டு மகள்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, இன்னும் கூர்மைப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தியானம் பயிற்சி குறித்து யோசித்து வைத்திருந்தேன். சரியான நபர் அமைந்தார். முழுமையான வெற்றி என்று சொல்லிவிட முடியாது. உடம்புக்கும் மனதுக்கும் உண்டான உண்மையான போராட்டங்கள் எந்த அளவுக்கு உள்ளது என்பதனை முழுமையாக உணர்ந்து கொள்ள முடிந்தது. தொடக்க நிலையில் உள்ளேன். சில மாற்றங்களை மட்டும் உணர முடிந்ததுள்ளது.
அவரவர் வயது பொறுத்து உள்ளே இருக்கும் ஒட்டடைகள், குப்பைகளைத் தியானம் மூலம் நிச்சயம் கண்டுணர முடியும். யோகா, தியானம் போன்றவற்றை ஆன்மீகத்தோடு தொடர்பு படுத்தி , மற்றொருபக்கம் அதனை வருமானம் தரும் தொழிலாக மாற்றிய வினோத சூழல் இப்போது இங்கே உருவாகி உள்ளது என்பதனையும் உணர்ந்து கொள்ள முடிந்தது. என் பார்வையில் மனம் என்பதனை எளிதாகச் சொல்ல முடியும். நம்மால் எவையெல்லாம் இயல்பாக முடியுமோ? அவற்றையெல்லாம் கடினம் என்ற நிலையிலும் எவையெல்லாம் தேவையில்லாத சமாச்சாரங்களோ அவையே நம் நிரந்தர எண்ணங்களாக உள்ளது.
இவற்றில் பெரும்பான்மையாக நம் வெறுப்பும், தோல்விகளும், பயமும் தான் அதிகம் உள்ளது. களைந்து விடலாம் என்று நீங்கள் பயிற்சியைத் தொடங்கினால் பூதத்தை அடக்குவது போலவே கண்ணாமூச்சி தொடங்கும். வேடிக்கை பார்க்க பழகுங்கள். குறிப்பிட்ட இடைவெளி விட்டு தொடர்ச்சியாக கட்டாய பயிற்சியாக செய்து பாருங்கள். கையில் காசு இல்லாவிட்டாலும் நீங்கள் கோடீஸ்வரான இருப்பீர்கள். இளமை நிரந்தரம். மனைவி, குழந்தைகளும் கூட வேடிக்கைப் பொருளாக மாறிவிடுவார்கள். சண்டை, சச்சரவா? மூச்.
ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை நடத்திய ஈரோடு புத்தகத் திருவிழாவில் நடிகர் சிவகுமார், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றிப் பேசிய உரையைக் கேட்கச் சென்ற போது நான் பெரிதும் மதிக்கக்கூடிய அமுதவன் அவர்களுடன் கவிஞர் அறிவுமதி அவர்களுடன் எடுக்கப்பட்ட படமிது. அமுதவன் மற்றும் அறிவுமதி போன்றவர்களெல்லாம் ஆணி வேர்களாக இருந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். பூக்களும், காய்களும், கனிகளும், மரநிழலும் யார் யாருக்கோ கிடைக்க அனைத்தையும் அமைதியாக உளப்பூர்வமாக ஆசீர்வாதப் பார்வையில் பார்க்கும் ஜீவன்கள்.
வருடத்தின் கடைசி மாதத்தில் கோவையில் நடந்த புத்தக அறிமுக விழாவில் நடிகர் சிவகுமார் பேச்சைக் கேட்க சென்று இருந்த போது திரு. கல்யாணம் மற்றும் அமுதவனுடன் எடுத்த படமிது. திரு. கல்யாணம் அவர்களுடன் மூன்று மணி நேரம் பேசி முடிந்து நான் உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பி எடுத்துக் கொண்டேன்.
திரைப்படக் கலைஞர்கள் குறித்து அவர்களின் சொந்த மற்றும் மற்ற வாழ்க்கையைக் குறித்துக் கல்யாணம் போன்றவர்கள் புத்தகமாக எழுதினால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். கடந்த ஐம்பது வருடத் திரைப்பட உலகின் ஆணி வேராக இருந்தவர். இப்போது இயங்கிக் கொண்டு இருக்கின்றார். பல நடிகர் ,நடிகைகள்,இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் கயிற்றில் தொங்கிவிடக்கூடும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்ந்தற்கான கூலியையும் அவர்கள் வாழ்க்கை முடிவதற்குள் பெற்று விடுகின்றார்கள் என்பதே நிதர்சன உண்மை.
அதீத வெளிச்சத்தில் பலரின் கண்ணீர் நம் கண்களுக்குத் தெரிவதே இல்லை என்பது தான் உண்மை. திரைப்பட உலகம், அரசியல் உலகம் இந்த இரண்டுக்கும் பின்னால் (எந்தக் காலத்திலும் தங்களை வெளியே காட்டிக்கொள்ள விரும்பாத) உள்ள பலருடனும் பேசும் போது தான் தொண்டர்கள், ரசிகர்களைப் பற்றிக் கவலைப்பட முடிந்தது.
தமிழகத்தின் உள்ள பெரும்பாலான சுற்றுலாத்தளங்களுக்குச் சென்றவன் என்ற முறையில் என்னால் 35 மதிப்பெண்கள் கொடுக்கக்கூடிய வகையில் இருந்த ஒரே இடம் திருச்சி அருகே உள்ள கறிகாற்சோழன் (கல்லணை) நினைவு பூங்கா. குடும்பத்துடன் சென்று இருந்தேன். தஞ்சாவூர் போலவே இந்த இடமும் என் மனதளவில் நெருக்கமாகத் தெரிந்தது. பல பதிவுகளில் தமிழர்களின் காலடித்தடங்களைப் பல்வேறு கோணங்களில் எழுதியுள்ளேன். மின் நூலாக மாறி பலரும் அதனைப் பற்றி இன்று வரையிலும் அழைத்துச் சொல்லும் வகையில் பலவற்றைக் கற்றுள்ளேன்.
பல புத்தகங்கள் வாயிலாகப் பலவற்றை அறிந்துள்ளேன். ஓரளவிற்குச் சுமாரான ஏற்பாட்டில் பலவற்றையும் அங்கே காட்சிப்படுத்தி உள்ளனர். 1500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் காலடித்தடங்களைப் பலவிதமாக யோசித்துப் பார்த்தேன். என் பேரன் என்னை நினைவில் வைத்திருப்பானா? என்று நினைக்கத் தோன்றியது.
வருடத்தின் இறுதியில் கோவையில் வம்சி பதிப்பகம் நடத்திய புத்தக விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படமிது. நடிகர் சிவகுமார் குறித்து ஒரு பெரிய கட்டுரை எழுத வேண்டும் என்ற எண்ணமுண்டு. அவர் ஒரு ஓவியர், நடிகர், பேச்சாளர், குடும்பத்தலைவர், அவ்வப்போது பலரின் விமர்சனத்திற்கு ஆளானவர் போன்ற அனைத்தையும் கடந்து அவர் வாழும் முறைகளைப்பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் உண்டு. நான் தனிப்பட்ட முறையில் அறிந்த வரையில் அவர் குடும்ப மொத்த வருமானத்தில் 25 சதவிகித தொகையை மற்றவர்களுக்கு உதவிடுவது என்பது மிகப் பெரிய ஆச்சரியம். இவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்துள்ளேன். கூடவே இவர்களுடன் பழகியுள்ளேன் என்ற எண்ணத்தில் இவர் எனக்கு மிக முக்கியமானவராகத் தெரிகின்றார்.
நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள் வாழ நினைக்காத வாழ்க்கையை அவர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இதைப்பற்றி எந்த இடத்திலும் அவர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஆனால் அவரின் இயல்பான கோப குணாதிசியங்கள் பல சங்கடங்களை உருவாக்கி விடுகின்றது. அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. குறைந்தபட்சம் 75 வயதிற்கு மேல் இருபது வயது இளைஞனைப் போல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து விட்டாலே போதுமானது.
காரணம் முதுமையில் வறுமையை விட ஆரோக்கியம் இழந்து வாழ்வது மகா கொடுமை. இந்த வருடம் முழுக்கப் பார்த்த பல குடும்பங்களின் கதை அதைத்தான் திரும்பத் திரும்ப எனக்கு உணர்த்தியது.
மொத்தத்தில் இந்த ஆண்டு எனக்கு நிறையவே வித்தியாசமானது. நிதானம் என்ற வார்த்தையை நம் வாழ்க்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அறிமுகப்படுத்திக் கொண்டேயிருக்கும். இந்த வருடம் நிதானத்துடன் உண்டான பொறுமை கற்றுக் கொடுத்த பாடங்கள் பலப்பல. கற்றுக் கொண்ட பாடங்கள் அடுத்த 25 வருடங்களுக்கு உரமூட்டக்கூடியதாக அஸ்திவாரத்தை பலமூட்டியதாக இருக்கக்கூடும்.
ராஜராஜன் ஆண்டு.