அஸ்திவாரம்

Wednesday, August 08, 2018

மு.க. - வாழ்வும் மரணமும்

அன்றுதான் கருணாநிதி முதன்முறையாகப் பேசப் போகிறார்.

``என்ன கலைஞரே! இன்று என்ன பேசப்போகிறீர்கள்?” என்று கேட்கிறார் நெடுஞ்செழியன். ‘`நங்கவரம் விவசாயிகள் பிரச்னை பற்றிப் பேசப் போகிறேன். ‘நாடு பாதி; நங்கவரம் பாதி’ என்று நிலம் வைத்துள்ளார் அந்த நிலச்சுவான்தார். உள்ளூர் மக்களுக்குக் கூலி அதிகம் கொடுக்க வேண்டும் என்று வெளியூர் ஆட்களை வைத்து வேலை வாங்குகிறார். அவர்களுக்கும் ஒழுங்கான கூலி இல்லை. இதை இந்த அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப் போகிறேன்” என்றார் கருணாநிதி. கையேர் வாரம், மாட்டேர் வாரம் என்ற கூலி முறை பற்றியும், இவர்களுக்காகப் போராடிய கவுண்டம்பட்டி முத்து என்ற விவசாயி பற்றியும் விலாவாரியாகச் சொன்னார்.

சாப்பிட்டு முடித்ததும் வெற்றிலை போட்டுக் கொண்டே தன் அருகில் இருந்த ஏ.வி.பி. ஆசைத்தம்பியிடம் அண்ணா சொன்னார்: ‘`நாவலருக்குக் கருணாநிதி விளக்கம் அளித்தான் என்றா நினைக்கிறாய். கருணாநிதி இன்று சட்டசபையில் பேசப் போகிறான். அதற்காக ஒத்திகை பார்க்கிறான்” என்றார். மொத்தப் பேரும் சிரித்துவிட்டார்கள். ‘`இல்லைண்ணா’’ என்று நெளிந்தார் கருணாநிதி. வாயில் வழிந்த எச்சிலைத் துடைத்தபடி, ‘`சட்டசபையில் பேச இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். தயார் நிலையில் இருந்து பேசும் பேச்சே தரமான பேச்சாக இருக்க முடியும்” என்றார் அண்ணா. புறப்பட்டார் கருணாநிதி.

“கவர்னர் உரையை நான் போற்றவும் வரவில்லை. தூற்றவும் வரவில்லை. என் கருத்துரையை ஆற்றவே வந்துள்ளேன்” என்று ஆரம்பித்து நங்கவரம் விவசாயிகள் பிரச்னைக்கு வந்து... தனது பேச்சை முடித்தார். முடித்ததும் தான் பேரவைத்தலைவர் கிருஷ்ணாராவ் அந்தத் துண்டுச் சீட்டை அனுப்பினார். அது காங்கிரஸ் ஆட்சிக் காலம். காமராஜர் முதலமைச்சர். ‘`நான் கருணாநிதி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று பார்த்து வியந்தேன்” என்று அன்றைய அமைச்சரும், பின்னர் முதலமைச்சராகவும் ஆன பக்தவத்சலம் சொன்னார். முதன்முறை பேசும் போது எப்படி ஒத்திகை பார்த்துப் போனாரோ, அப்படித்தான் ஒவ்வொரு நாளும் போனார்.

“சட்டசபைக்குப் போகும்போது கற்றுக்கொள்ளும் மாணவனாகவும் கற்பிக்கும் ஆசிரியனாகவும் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்” என்றார் கருணாநிதி. அப்படித்தான் இருந்தார் மாணவனாக, ஆசிரியனாக. கருணாநிதி ஒரு சுயம்பு. அதனால்தான் ஒரே நேரத்தில் இரண்டுமாக அவரால் இருக்க முடிந்தது.
மணிக்கணக்கில் பொதுக்கூட்ட மேடையில் பேசலாம். 

ஆனால், சட்டசபையில் வண்டி ஸ்டார்ட் ஆகாது. அது வேறு களம். இரண்டிலும் வென்றவர்கள் ஒரு சிலர்தான். அதில் ஒருவர் கருணாநிதி. கேள்வியை முடிக்கும் முன் பதில் சொல்வதும், பதில் சொன்னதும் எதிர்க் கேள்வி தொடுப்பதும் கருணாநிதி பாணி.

“வெளிநாட்டிலிருந்து வருபவர்கள், எங்களைப் பார்த்து ‘சிறப்பான ஆளுங்கட்சி’ என்று பெருமைப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களைப் பார்த்துக் கேவலமாக நினைக்கிறார்கள்” என்று முதலமைச்சர் பக்தவத்சலம் சொன்னதுமே, ‘`இவ்வளவு கேவலமானவர்களை வென்றது உங்களுக்குப் பெருமையா?” என்று திருப்பி அடித்தார் கருணாநிதி. “தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே” என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, “கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?” என்றார் டி.என்.அனந்தநாயகி. “கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?” என்று துடுப்பைப் போட்டார் கருணாநிதி.

“அடைந்தால் திராவிட நாடு; இல்லையென்றால் சுடுகாடு... என்றீர்களே! இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் கருத்திருமன். அவர் உட்காருவதற்குள் கருணாநிதி பதில் சொன்னார்: ‘`இல்லை. உங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறோம்!”

அன்றைய தினம் வெளியான இதழ் ஒன்றில் கருணாநிதியைக் கிண்டல் செய்து கவிதை ஒன்று வெளியானது.

“தமிழ் எனும் தங்கச் சீப்பு உங்கள் கையில்
இருந்தும் என்ன பயன்?
நீங்கள்தான் ஏற்கெனவே
தமிழர்களை மொட்டையடித்து விட்டீர்களே!” -

இந்தக் கவிதையை தமிழகச் சட்டமன்றத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னார். உடனே எழுந்த கருணாநிதி, ‘`தம்பி! என் கையில் இருப்பது உன்னைப் போன்ற சுருள் முடிக்காரர்களுக்கு சீவி விட” என்று ஐஸ் வைத்தார். பீட்டருக்கு நாக்கு எழுமா அதன் பிறகு? கேள்விக்கு உள்ளே இருந்தே பதிலைச் சொல்வதும், பதிலுக்குள் இருந்து அடுத்த கேள்வியைத் தோண்டுவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை.

அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை எழுத்துக்கு எழுத்து கவனிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின் கடைசி சட்டமன்றக் கூட்டத் தொடர் அது. பக்தவத்சலம் முதலமைச்சர். இன்னும் சில மாதங்களில் நடக்கப்போகும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வரப் போகிறது என்ற நிலைமை. கருணாநிதி பேசும்போது, ‘`ஆண்டவன் என்ற ஒருவன் இருந்து நான் அவனைச் சந்தித்தால் அவனைப் பார்த்து, ‘முதலமைச்சரைப் போன்று சுறுசுறுப்பைக் கொடு’ என்றுதான் வரம் கேட்பேன். அவர் முதலமைச்சராக இருந்து ஓர் ஆளுங்கட்சித் தலைவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்று எங்களுக்கு இதுவரை கற்றுக்கொடுத்தார்” என்றார். காங்கிரஸ் உறுப்பினர்களே மகிழ்ச்சி அடைந்தார்கள். 

கருணாநிதி ரிவர்ஸ் கியர் போட்டார். “அதுபோல் அடுத்த தடவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதை அவர் எங்களுக்குச் சொல்லித் தர வேண்டும்” என்றார். தி.மு.க-வினர் மகிழ்ச்சியில் குதித்தார்கள். சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பே கதை- வசனகர்த்தாவாக இருந்ததால், கருணாநிதிக்கு வாதம் - எதிர்வாதம் இரண்டும் கைவந்த கலையானது.

கருணாநிதியின் அரசியல் மிகக் கடுமையான விமர்சனத்துக்குரியது.அவரது பொதுவாழ்க்கையில் களங்கம் உண்டு. ஆனால் சட்டமன்றத்தில் ஒரு முதலமைச்சர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக அனைவரும் படிக்க வேண்டிய பாடப் புத்தகமாக, 1997-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கு அவர் அளித்த பதிலுரை இருந்தது. தனக்கு முன்னால் பேசிய 40 பேருக்கும் பதில் சொல்லி இரண்டு மணி நேரத்துக்கு மேல் அவர் அளித்த பதில் தான், சட்டமன்ற விவாதத்தை ஒருவர் எப்படி கவனிக்க வேண்டும், மதிப்பளிக்க வேண்டும் என்பதைக் கற்றுத்தந்தது. அதேபோல், ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படிப் பேச வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது கருணாநிதி பேசிய பேச்சு உணர்த்தும். பூம்புகார் நிறுவனத்துக்காக பல்கேரியா பால்டிகா கப்பல் வாங்குவதில் என்னென்ன விதி மீறல் என்பதை 20-க்கும் மேற்பட்ட ஆதாரங்களுடன் ஒவ்வொன்றாக அடுக்குவார் கருணாநிதி. இந்தப் பேச்சுக்குப் பிறகுதான் கப்பல் வாங்குவதை நிறுத்தினார் எம்.ஜி.ஆர்.

1996-2001 அவரது முதலமைச்சர் காலமும், 1980-84 அவரது எதிர்க்கட்சித் தலைவர் காலமும் தி.மு.க-வினருக்கு மட்டுமல்ல; அரசியல் ஆர்வமுள்ள அனைவருக்குமான சட்டசபைப் பாடம். நேர்மறை, எதிர்மறை என எல்லா பாடங்களையும் நடத்திவிட்டு பழுத்த இலையாய்ப் படுத்திருக்கிறார் கலைஞர்.

-ப.திருமாவேலன்
















5 comments:

  1. கலைஞர் மட்டுமல்ல, ஏன் காந்திக்குக்கூட பரிதாப நிலைதான். இவர்களை போற்றுபவர்கள் போக தூற்றுவதுக்கு கோடிக்கணக்கில் இருக்காங்க.

    எல்லோருமே நல்லாத்தான் ஆரமிக்கிறாங்க. முடிக்கிறதுதான் கஷ்டம்..கல்கிகூட பொன்னியின் செல்வனை ஒழுங்காக முடிக்கவில்லை!

    ---------------

    "டேய் கோவில் பூசாரி"

    "யார் யார் அம்பாளா பேசுகிறது?"

    "அம்பாள் எந்தக்காலத்திலடா பேசினாள் அறிவுகெட்டவனே! அது பேசாது கல்"

    கலைஞரின் உண்மைகலந்த அருமையான வசனம்!

    ------------

    இதை எழுதிய காலம் கம்மிட்மெண்ட் இல்லாத காலம். யாரையும் சரிக்கட்ட வேண்டிய கட்டாயம் இல்லாத காலம். நாளடைவில் பதவி, அரசியல், தமிழ்நாட்டு முதல்வர் என்கிற பொறுப்பு, எல்லோரையும் சமாளிக்க வேண்டிய நிலைப்பாடு இவர்களைக் கொன்று விடுகிறது..

    என்னைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழர் பிரச்சினையை ராஜிவ் கொலைக்கு அப்புறம் யாராலும் தீர்த்து இருக்க முடியாது. பார்ப்பனர்கள் போக, ஈழத்தமிழர்தான் கருணாநிதியை பயங்கர குற்றம் சாட்டியது. ஈழத் தமிழர்கள் ஒருபோதும் தம் தவறுகள்தான் தங்கள் தனி ஈழ ஆசையை அழித்தது என்றே உணருவதில்லை.
    அது கருணாநிதியோ இல்லை ஜெயலலிதாவோ இல்லை என்பதை உணருவதே இல்லை. கருணாநிதி சுயநலமா இல்லை ஈழத் தமிழர்கள் சுயநலவாதிகளா? இல்லைனா இதில் யாரு மோசம்? என்பது விவாதத்துக்குரியது. மேலும் கடைசியில் ராஜபக்‌ஷே பக்கம் போனது ஈழத்தமிழர் கருணாதான். அவர் தமிழ்நாட்டுத் தமிழர் அல்ல.

    1991ல இழந்ததுபோல் கருணாநிதி ஆட்சியை (இன்னொரு முறை) இவர்களுக்காக இழந்து இருக்கலாம். அப்படி இழந்து இவர்களிடம் நற்பெயர் எடுத்து இருந்தாலும் இதேபோல் அவர்களிலேயே ஒரு துரோகி அவர்கள் இனம் "கருணா"போல் உருவாகி பிரபாகரனை ஒழித்து இருப்பார்கள். I repeat, they made a fatal error killing Rajiv. That can never be fixed. THEY NEVER UNDERSTAND, that error only destroyed thamiz ezham. It is not MK or JJ!

    எனக்கு கருணாநிதி அவர் குடும்பத்தில் உள்ளவர்களை அரசியல் திமுக வாரிசாக கொண்டு வந்தது பெரிய விசயமாகத் தோனல. நேரு குடும்பம் பண்ணலையா என்ன? யு எஸ்ல புஷ் குடும்பம் பண்ணலையா?

    என்னைப் பொறுத்தவரையில் மூன்று மனைவிகள் என்பதை நியாயப் படுத்துவதுதான் கஷ்டம். அந்த வகையில் ஜானகி இருக்கும்போதே ஜெ ஜெ யை எம் ஜி ஆர் கேர்ள் ஃப்ரண்டு போல் வைத்திருந்தார். அவர் எப்படி பெட்டர் ஆவார்? நடிகை லதாவுடன்கூட அவருக்கு 'உறவு" இருந்ததாக புரளிகள் உண்டு. அதனால எம் ஜி ஆர் அந்த விசயத்தில் கலைஞரைவிட மேல் கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. நிதானமான பக்குவமான ஆழ்ந்த புரிதல் உள்ள விமர்சனம். ஆனாலும் கடந்த 48 ஆண்டுகளில் உருவான உருவாக்கப்பட்ட உணர்ச்சி அரசியல் அதுவும் கடந்த 25 ஆண்டுகளில் உச்சகட்டமாய் வளர்ந்து இன்னமும் அதன் எச்சமும் சொச்சமும் இருப்பதையும், அதனால் வளர்ந்தவர்கள், வீழ்ந்தவர்கள் பற்றியும் நாம் பேச வேண்டும். காரணம் நாம் கடக்க வேண்டிய தூரம் இன்னமும் அதிகம் இருக்கிறது வருண். அதையும் பற்றியும் பேசப் போகின்றேன்.

      Delete
  2. அன்னாரது சொல்லாடலை மிஞ்சுவதற்கு ஆள் கிடையவே கிடையாது...

    ReplyDelete
  3. கருணாநிதி கடுமையான உழைப்பாளி - சிறந்த நிர்வாகி .
    ஜெயா இரண்டும் இல்லை - ராஜீவ் காந்தி இறந்ததால் பதவிக்கு வந்தவர் .

    கலைஞர் மறைந்த போது அவரை பாராட்டி பேசியது குறைவு .
    கலைஞர் மீது அப்படி ஒரு வெறுப்பு வெளிப்பட்டது .

    ஜெயா இருந்தும் கெடுத்தார் , செத்தும் கெடுத்தார் .
    அவரைப் பற்றி யாரும் தூற்றவில்லை .

    என்ன காரணம் ?
    இதைக் கேட்பதற்கு காரணம் இருக்கிறது .
    ஒன்றுமே இல்லாத ஜெயா முதல்வர் ஆகும் போது ,
    ரஜினி , கமல் ஏன் ஆகக்கூடாது ?

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.