அஸ்திவாரம்

Monday, October 28, 2019

5 முதலாளிகளின் கதை


பெரியோர்களே... தாய்மார்களே....

நமக்குத் தெரிந்ததைப் பற்றிப் புனைவு அபுனைவு என்று எந்தப் பார்வையிலும் எழுத முடியும் என்கிற ரீதியில் இருக்கும் ஒரே விசயம் திருப்பூர். தொழில்,

மனிதர்கள், சமூக அமைப்பு, சிறு மீன்கள், விலாங்கு மீன்கள், திமிங்கிலம் என்று சொல்ல ஆயிரம் கதைகள் இங்குண்டு.

கொங்கு பாஷை மறந்து வடகிழக்கு மாநில பாஷை வரைக்கும் திருப்பூரை மாற்றியுள்ளது. இங்குள்ளவர்கள் உருவாக்கிய சட்டதிட்டங்களை வந்து இறங்கிய ஜனத்திரள் மாற்றிக் கொண்டேயிருக்கிறது. உசிலம்பட்டி கருப்பும் மணிப்பூர் வெளுப்பும் ஒன்று சேர்ந்து புதிய தலைமுறையை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது.

இந்தப் பாதை எங்கே செல்லும்? என்பது எனக்குத் தெரியாது?

ஆனால் சாதி மற்றும் பணம் கொண்டு உருவாக்கப்பட்ட சாட்டாம்பிள்ளைத்தனம் இன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை. இன்னமும் மாறும்.

எவர் தப்பிப் பிழைக்கப் போகின்றார்கள்? எப்படி இங்குள்ள சமூகம் தன்னை தக்க வைத்துக் கொள்ளப் போகின்றது? என்பது புரியாத புதிராக உள்ளது.

வலையில் எழுதத் தொடங்கிய போது சோர்ந்து விடாதே என்று என்னை அரவனைத்து என் பலகீனங்களை பொறுத்து இன்று வரையிலும் ஆதரிக்கிக்கும் இராஜராஜன் ஒரு பக்கம்.

இது போன்ற சூழலில் புத்தக ஆசை என்பது ஐந்து சதவிகிதம் இருந்தது. ஆனால் சுவிட்சர்லாந்தில் இருந்து தமிழகம் வந்து இந்தக் கதை உலகம் முழுக்க சென்றே ஆக வேண்டும் என்று வடிவமைப்பு முதல் முதலீடு வரைக்கும் பார்த்துப் பார்த்து தன் குழந்தைகளைக் கவனிப்பது போலச் செய்து வெளிவரச் செய்த 4 தமிழ் மீடியா திரு மலைநாடன் அவர்களின் பங்களிப்பு பற்றி வெறுமனே வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.

அவர் என் வாழ்நாள் முழுக்க தாயுமானவன்.

இன்று தொழில் வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வுக்குக் கூட அவர் தூரத்திலிருந்து கொண்டு உதவுகிறார்.

இன்று கலைஞர் செய்திப்பிரிவு தொலைக்காட்சியின் முதன்மைப் பொறுப்பில் இருக்கும் திருமாவேலன் டாலர் நகரம் புத்தகத்திற்கு வழங்கிய விமர்சனப் பார்வையின் காரணமாகத் திருப்பூரில் உள்ள ஒரு பெரிய குழும நிறுவனம் மொத்தமாகப் புத்தகம் வாங்கி தன் நிறுவனத்தில் உள்ள அனைவரின் பார்வைக்கும் கொண்டு சென்றது போன்ற நிகழ்வுகள் அனைத்தும் என் தகுதிக்கு மீறிய செயலாகவே எனக்குத் தெரிந்தது. 

மனிதர்களின் கருத்துக்களும் கொள்கைகளும் சூழலுக்கு ஏற்ப மாறிக் கொண்டேயிருந்தாலும் ஆழ் மன அன்பு ஏதோவொரு வகையில் நம் வழிப்பாதை துணையாக ஒவ்வொரு சமயத்திலிருந்து வந்துள்ளது.

ஏற்கனவே டாலர் நகரம் என்ற புத்தகம் இங்கு சிவன் மலையில் மேலே நின்று கொண்டு திருப்பூரை நோக்கிப் பார்த்துக் கொண்டு யோசிப்பது போல அமைந்தது. விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சிறப்பான தொடக்கமாக இருந்தது.

2013 டிசம்பர் மாதம் நடந்த டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த கூட்டத்தையும், நண்பர்களையும் பார்த்து விட்டு அய்யா ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மிரண்டு போய் பாராட்டிச் சொன்ன வாசகங்கள் இன்னமும் மனதில் உள்ளது.

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் திருப்பூரில் உள்ள தொழில், அது செயல்படும் விதம், பங்கெடுக்கும் பல விதமான மனிதர்களைப் பற்றிப் பேசியது.

அதனை இலவச மின் நூலாகக் கொடுத்து இருந்தேன். திருப்பூரில் உள்ள உள்ள ஒரு நண்பர் கோஷ்டி ஒவ்வொரு அத்தியாயமும் வெளியாகும் போது அதனை வைத்து நாங்கள் விவாதம் செய்தோம். அந்த அளவுக்கு உளவியலுடன் கூடிய நிர்வாகவியல் என்பதனை தேன் கலந்து கொடுத்து இருந்தீர்கள் என்று ஒரு முறை சந்தித்த போது சொன்னார்கள்.

அதனை இன்னமும் மேம்படுத்தி கிண்டில் வழியாக வெளியிட்டேன்.

2019 அமேசான் கிண்டில் போட்டி ஒன்று அறிவித்துள்ளார்கள்.

மகளும் மனைவியும் நீங்க ரவுடி என்றால் இதில் கலந்து கொள்ளுங்கள் பார்க்கலாம் என்று உசுப்பேற்றி உள்ளனர். இது வரையிலும் 15 நூல்களை அமேசான் கிண்டில் வழியாக வெளியிட்டு உள்ளேன்.

தொடக்கத்தில் சீனிவாசன் மூலமாக இலவச மின் நூலாக வெளியிட்டு வந்தேன். அதனை மேம்படுத்தி பலவற்றைச் சேர்த்து அழகாக கோர்த்து புத்தக வடிவமாக்கி, முழு உழைப்பையும் செலுத்தி கிண்டில் வழியாக வெளியிட்ட போது அள்ளி அனைத்துக் கொண்டனர்.

அதிகமான சுய விளம்பரங்கள் செய்யாத போதும் கூட.

மயிலாடுதுறையில் புகைப்படத்துறையில் இருக்கும் தம்பி கணேஷ் அவர்களுக்குத் தமிழகத்தில் வாழும் நரசிம்மராவ் போல ஆட்சி செய்து வரும் அண்ணன் எடப்பாடி அவர்களிடம் பரிந்துரை செய்து சமஉ அல்லது பாஉ பதவி வாங்கிக் கொடுத்து ஆக வேண்டும் என்ற எண்ணம் உண்டு. காரணம் ஒவ்வொரு அட்டைப்படத்தையும் அவர் வழங்கியது என்பது ரசனையின் உச்சம்.

இன்று வரையிலும் ஞாநி குறித்து எழுதிய அமேசான் பதிப்பு அட்டைப்படத்தைப் பற்றி யாராவது ஒருவர் கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

தொடக்கத்தில் மதுரை தமிழன் செய்து கொண்டு இருந்தார்.

தம்பி கணேஷ் இத்தனை நாள் பொறுத்து இருங்கள் என்று சொல்லிவிட்டுச் சரியாக அனுப்பி வைப்பார். நான் எழுதிய கட்டுரைகள் சோபை இழந்து விடும். அவர் படங்கள் மட்டுமே என் கண்களில் நிற்கும். ஒற்றிக் கொள்ளலாம் போல இருக்கும். அதீத திறமைசாலிகள் தமிழகத்தில் எங்கங்கோ இப்படி வெளியே தெரியாமல் இருக்கின்றார்கள். இந்தப் பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணத்திற்கு நீங்கள் தான் காரணம் தம்பி. உங்களுக்கு வாழ்நாள் முழுக்க நன்றி சொல்ல வேண்டும்.

அவரிடம் தான் சொல்லி உள்ளேன்.

வீட்டில் ஒரே களேபரமாக உள்ளது. கலந்து கொண்டே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கின்றார்கள். வெல்வது என்பது இரண்டாம் பட்சம். ஆனால் போட்டியில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் என்றேன். உடனே அட்டைப்படத்திற்கான தலைப்பு சொல்லுங்கள் என்றார். அப்போது தான் அந்த நிமிடம் தான் என் யோசனையில் வந்தது. நாம் எழுத நினைத்து ஒரு விசயம் இன்னமும் மீதி உள்ளது என்று யோசித்தேன்.

திருப்பூர் பற்றித் தெரியாதவர்கள், மோடி ஆட்சியை எதிர்த்தே ஆக வேண்டும் என்று மனதார விரும்புகின்றவர்கள் எடுக்கக்கூடிய ஆயுதங்களில் (தற்போது) ஒன்று திருப்பூர் வீழ்ந்து விட்டது.

காரணம் ஜிஎஸ்டி மற்றும் தவறான பொருளாதார கொள்கைகளை என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்றார்கள். இது உண்மையாக என்றால் உண்மை தான். இது மட்டும் தான் உண்மையா என்றால் இல்லை. வளர்ச்சி என்பது பரவலாக வளராத எதுவும் எந்த காலத்திலும் நிலைத்து நிற்பது இல்லை. அந்தந்த காலகட்டத்தில் தங்களின் சுயநலத்துக்காக தங்களுக்குத் தேவைப்பட்ட வகையில் உருவாக்கிக் கொண்டு தாங்கள் மட்டும் வளர்ந்தால் போதும் என்று கருதினால் என்ன நடக்கும்? அது தான் இப்போது திருப்பூரைப் பதம் பார்த்துக் கொண்டு இருக்கின்றது.

 இப்போது தான் தொடங்கியுள்ளது. இன்னமும் இதன் வீரியம் அதிகமாகும்.

5 முதலாளிகளின் கதை.

இது தலைப்பு. 

இதைத்தான் தம்பியிடம் சொல்லி உள்ளேன். 

நான் சந்தித்த ஐந்து முதலாளிகளின் வாழ்க்கையைப் பற்றி முழுமையாக இதில் ஆவணப்படுத்தலாம் என்ற எண்ணம் உண்டு. இதில் படிப்பறிவு இல்லாமல், முறையாக நிர்வாக அனுபவம் இல்லாத போதும் வென்றவர்களின் வாழ்க்கைத் தடங்களின் வழியாகக் கடந்து போன அவர்களின் போட்டியில்லாமல் வாழ்ந்த தொழில் வாழ்க்கை மற்றும் சர்வதேச போட்டியாக ஆயத்த ஆடைத்துறை மாறிய போது அவர்கள் இழந்த லாபங்களைப் பட்டியலிட்டுச் சொல்லலாம் என்ற எண்ணமுண்டு.

இது வெறுமனே கருப்பு வெள்ளை என்ற இரண்டு நிறத்தைப் பற்றிப் பேசுவதல்ல. ஒரு தொழிலுக்குப் பின்னால், ஒரு தொழில் அதிபருக்குப் பின்னால் சாதனைகள், வேதனைகள், அடுத்த தலைமுறைக்குத் தொழில் கை மாறும் போது உருவாகும் மாற்றங்கள் என் பலவற்றையும் பேசும்.

பொதுவெளியில் தலைப்பை எழுதி வைத்து விட்டால் நாமே நம்மை ஒன்றுக்குள் சிக்கி வைத்துக் கொண்டால் எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் வந்து விடும் அல்லவா?

சந்தைப் படுத்தலும், விளம்பரங்களும் நம்மை வெற்றிக் கோட்டின் அருகே அழைத்துச் செல்லும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே போலத் தரம் இருந்தால் அது தானாகவே தன்னை சந்தையில் நிலைப்படுத்திக் கொள்ளவும் செய்யும் என்பது உண்மை தானே.

இன்னும் சில வாரங்களில் இந்தப் புத்தகத்தை வெளியிட்டு விடுவேன் என்று நினைக்கிறேன்.  நான் எப்போதும் இலவசமாக அனைவருக்கும் வாசிக்கக் கொடுப்பது என் வழக்கம். ஆனால் கிண்டில் எதிலும் வெளியிட்டுருக்கக்கூடாது என்ற கட்டளையிட்ட காரணத்தால் கிண்டில் வடிவ புத்தமாக வெளியிடுகிறேன்.  நண்பர்கள் ஆதரிக்க வேண்டுகிறேன்.

ஆசிர்வதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதற்கு நேற்று மருத்துவர் சொன்ன வாசகத்தை இங்கே எழுதுவது பொருத்தமாக இருக்கும்?

உங்கள் ஆரோக்கியத்திற்கு நான் தரும் மதிப்பெண் 90. மீதி பத்து வேண்டுமென்றால் வெளியே பொறுக்கித் தின்பதைச் சுருக்கிக் கொள்ளுங்கள் என்றார்.




2019 தீபாவளி



அங்கீகாரம்



Sunday, October 27, 2019

2019 தீபாவளி


2019  தீபாவளி  27/10/2019

சென்ற ஆண்டு தீபாவளி எப்படிக் கொண்டாடினோம் என்று சற்று நேரத்திற்கு முன் பழைய பதிவைத் தேடிப் பார்த்தேன்.  பல மாதங்கள் எழுதாமல் இருந்துள்ளேன்.  காரணம் புயலும், சுனாமியும் தொடர்ந்து அடித்துக் கொண்டேயிருந்தது. இயல்பாக இருப்பது எப்படி? என்பதனையும் எதார்த்தம் என்றால் என்ன? என்பதனையும் காலம் கற்றுக் கொடுத்த ஒவ்வொரு சம்பவங்களும் நினைவுக்கு வந்து போனது.

கள்கள் வளர்ந்து விட்டார்கள். செல்பி தலைமுறையாக மாறியுள்ளனர். ட்ரெண்ட்டிங் என்ன என்று கேட்கிறார்கள். அவர்களிடம் பேச நானே வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், யூ டியுப் ல் இன்றைக்கு எது ட்ரெண்ட்டிங் போன்ற அனைத்தையும் விரும்பாத போதும் கற்றுக் கொண்டுள்ளேன்.

டைவெளி விட்டு இந்த முறை அம்மாவைச் சென்று சந்தித்து வந்தேன்.  விடுமுறை மற்றும் சிறப்புத் தினங்களில் எக்காரணம் கொண்டும் பயணம் செய்வதை விரும்பவே மாட்டேன்.  கோவில்களுக்குச் செல்ல வேண்டும் என்றாலும் கூட்டமே இல்லாத கோவில்களுக்குத்தான் செல்வது வாடிக்கை. 

வீட்டில் தொலைக்காட்சி பெட்டி உள்ளது. ஆனால் கேபிள் இணைப்பை நிறுத்தி ஏழு மாதங்கள் ஆகி விட்டது.  நீங்கள் சன் தொலைக்காட்சி பேக் ம் சேர்த்து வாங்கத்தான் வேண்டும் என்றார்கள். நான் சுடுகாட்டுக்கு ஏன் ராத்திரி போக வேண்டும் என்று கேட்டேன்.  என் சந்துப் பக்கம் வரத் தேவை என்றாலும் கேபிள் பசங்க நான் இருந்தால் வேறு பக்கம் போய் விடுகின்றார்கள். எங்களுக்குத் தேவையானதை யூ டியூப் வாயிலாக மகள்களும் நானும் பார்த்து வருகின்றோம்.  வாழ்க்கை அழகாக அமைதியாக உள்ளது.

மிழ்மணம் குறித்து பலரும் மின் அஞ்சல் வாயிலாக நேரிடையாக சாட் ல் கேட்கின்றார்கள்.  எந்த நம்பிக்கையில் என்னிடம் கேட்கின்றார்கள் என்று தெரியவில்லை. வேறொரு நல்ல செய்தி விரைவில் வரும்.  காத்திருக்கவும்.

லைபதிவில் என்னை ஆச்சரியப்படுத்தியவர், அசரவைத்தவர் சமீப காலமாக நண்பர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.  வயதில் மூத்தவர். வாழ்த்துகள். என் தேவைகளை அவர் தான் தற்போது நிறைவேற்றிக் கொண்டு வருகின்றார்.  உங்களுக்குத்  தேசிய, மாநில, சர்வதேச அரசியல் குறித்து விருப்பம் இருந்தால் அவர் பக்கத்தைத் தொடரலாம்.

நான் அடுத்து நன்றி சொல்ல வேண்டியவர் நண்பர் ராஜாராமன்.

நீச்சல்காரன் என்ற பெயரில் எழுதி வருகிறார். அவரின் தமிழ் பிழை திருத்தி வாணி என்ற ஆன் லைன் மென்பொருள் மூலம் தான் நான் எழுதுவதை திருத்திக் கொள்கிறேன்.  ஒரு வேளை இது இயங்காத பட்சத்தில் நான் எழுதுவதையே நிறுத்தி விடுவேன்.  காரணம் நான் தமிழ் டைப்படிக்கும் வேகம் தெறித்து விழக்கூடியது.  பாதிக்குப் பாதி சந்திப் பிழைகள் வந்து கொண்டேயிருக்கும். அவர் தான் எனக்கு உதவிக் கொண்டு இருக்கின்றார்.  அவருக்கு எழுதித் தீர்க்க முடியாத நன்றியை இந்த சமயத்தில் இங்கே எழுதி வைத்திட விரும்புறேன்.







ஃபீனிக்ஸ் பறவை போல வாழ்க்கை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பாடத்தைத் தந்து போய்க் கொண்டேயிருக்கிறது. சருகு போல என்னை மாற்றிக் கொண்ட காரணத்தால் விளையாட்டு மைதானத்தை வேடிக்கை பார்க்க கற்றுக் கொள்ளும் சராசரி மனிதனாக வாழ முடிகின்றது.

900 பதிவுகளைக் கடந்து வந்ததாகி விட்டது.  தொடர்ந்து எழுத வாய்ப்பு அமையும்பட்சத்தில் அடுத்த வருடத் தீபாவளிக்குள் 1000 பதிவுகளைத் தொட்டு விட முடியும் என்று நம்புகிறேன்.

சில நாட்களுக்கு முன்பு நான் பிறந்த ஊரிலிருந்து ஒரு தகவல் வந்தது. எனக்குக் கிடைத்த உச்சபட்ச அங்கீகாரம் அது.  அந்த நிகழ்ச்சி மார்ச் ல் நடக்கும் என்று நினைக்கிறேன்.  உறுதியான பின்பு அது குறித்த தகவல் தருகிறேன்.

டுத்த 12 மாதத்திற்குள் ஒரு நல்ல பயணம் செல்ல வேண்டும் என்ற எண்ணமுண்டு. நிறைவேறினால் மகிழ்ச்சி. எழுத வாய்ப்பு அமையும்.

ந்த வருடத் தீபாவளி எல்லாவகையிலும் எனக்கு மிக மிகச் சிறப்பானது. உங்களுக்கும் எல்லாவிதமான நலமும் வளமும் பெற வாழ்த்துகிறேன்.

சென்ற தீபாவளி போலவே இந்த தீபாவாளிக்கும் சென்னையில் இருக்கும் என் வாசகர் நண்பர் வீட்டுக்கு சிறப்பு பரிசினை அனுப்பி வைத்திருந்தார். நன்றி அப்துல் காதர்.

சுத்தத் தங்கம், நேர்மையின் சிகரம், தன்னலமற்ற தலைவன், தமிழர்களுக்காகவே அல்லும் பகலும் பாடுபட்டவர், சொந்த வாழ்க்கைக்காக தன் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்த விரும்பாத ப. சிதம்பரம் அவர்களை பாஜக அரசு பழிவாங்கும் நோக்கத்தில் திஹார் சிறையில் வைத்துள்ளதை அனைவரும் அறிவோம். அவருக்கும் பலகாரம் அனுப்ப  வேண்டும் என்று நினைத்து கீழ்க்கண்ட பலகாரத்தை செய்து வைத்துள்ளோம். திஹார் சிறையில் எப்படி அனுமதிப்பார்கள் என்ற நண்பர்களுக்குத் தெரிந்தால் விமர்சனமாக தரவும். நன்றி.









Saturday, October 26, 2019

கணவன் என்ற பதவி

இயற்கையாகவே வரம் வாங்கி வந்து வாழ்கின்றவர்களின் வாழ்க்கை எப்படியிருக்கும் அல்லது வரத்தை நாமே முயன்று பெற்றுக் கொண்டு வாழும் வாழ்க்கை எப்படியிருக்கும்?

பண்டிகை சமயங்களில் ஒரு வாரத்திற்கு முன்பே மொத்த சாமான்களையும் வாங்கிக் கொடுத்து விட வேண்டும். பட்டியலில் எழுதச் சொல்லிவிட வேண்டும். "நான் சொன்னேன். நீங்கள் மறந்து விட்டீர்கள்?" என்ற பஞ்சாயத்து தவிர்க்க இது உதவும். கடைக்குச் செல்லும் போது கையில் கட்டாயம் அலைபேசியை எடுத்துச் சொல்ல வேண்டும். கடைக்காரர் சாமான்கள் போட்டு முடித்ததும் மீண்டும் ஒரு முறை அழைத்துக் கேட்க வேண்டும். சொல்லிவைத்தாற்போல அப்போது சில சாமான்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பார்.

சிரித்துக் கொண்டே சேர்த்துக் கொண்டு அதனையும் சேர்த்து வாங்கி வந்து விட வேண்டும். வீட்டுக்கு வந்தவுடன் மீண்டும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு நாளைக்கு முன்பே பூ, பூஜை சாமான்கள், மாவிலை, தோரணம் கட்ட உதவும் சாமான்கள் என்று எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் சேகரித்து வீட்டுக்குள் கொண்டு வந்து சேர்த்து விட வேண்டும். பண்டிகை கால சிறப்புப் பணம் என்று புதிய நூறு ரூபாயாக மாற்றி உன் கையால் மகள்களுக்குக் கொடுத்து விடு என்று கொடுத்து விட வேண்டும்.

சரி? இப்படியெல்லாம் ரிஸ்க் எடுப்பதால் என்ன ஆகும்?

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது உங்களுக்கு எந்த வேலையையும் மனைவியும் மகள்களும் கொடுக்க மாட்டார்கள். நீங்க கம்யூட்டர போய் நோண்டுங்கள் என்று கட்டம் கட்டி ஒதுக்கி வைத்து விடுவார்கள். கட்டாயம் ஒரு சாமிப்பாட்டை ஒலிக்க வைத்து விட வேண்டும்.

சாமி விளக்கேற்றும் போது அழைப்பு வரும். சாம்பிராணி போட்டுக் குளிர குளிர வீடு முழுக்க பரவும் போது அவர்கள் பின்னால் பவ்யமாகச் செல்ல வேண்டும். மகள்கள் மிரட்டுவார்கள். அவர்களை கட்சித் தாவல் தடைச் சட்டம் ஒன்றும் செய்யாது. காரணம் சபாநாயகர் அனுசரிப்பு பரிபூரணமாக இருக்கும். அவர்களையும் பக்கவாட்டில் அனுசரித்துக் கொள்ள வேண்டும். அரை மணி நேரத்தில் காஷ்மீர் பிரச்சனையை விட அதிக பிரச்சனைகள் உள்ளே நடந்து கொண்டிருக்கும். வாயை மூடிக் கொண்டு உள்ளே நடக்கும் எந்த பஞ்சாயத்துக்களையும் கண்டு கொள்ளாமல் அமைதி காக்க வேண்டும்.

காரணம் இப்போது சிறப்புச் சட்ட அதிகாரத்தின்படி குடும்பத்தின் ஒவ்வொரு முடிவும் அட்மின் எடுத்துக் கொண்டிருப்பார். ஒருவர் மட்டும் உங்களைத் தொடர்ந்து கண்காணிப்பு பட்டியலில் வைத்திருப்பார். சாமி கும்பிடுவதற்கு முன்பு சமையலறை பக்கம் சென்று ஏதாவது எடுக்க முயல்கின்றோமோ? என்று பார்த்து உளவு சொல்லத் தயாராக இருப்பார்.

சரி? இப்படியெல்லாம் இருந்தால் உங்களுக்குக் கிடைக்கும் பலன் என்ன?

உங்கள் இருக்கையைத் தேடி உண்பதற்கு ஒவ்வொன்றாக வந்து கொண்டேயிருக்கும். 😏



Thursday, October 24, 2019

அங்கீகாரம்

அங்கீகாரம்

டாக்டர் பஜிலா ஆசாத்

பொதுவாக எந்த ஒன்றை செய்யும்போதும் அதற்கான அங்கீகாரத்திற்காக மனம் ஏங்கும். வெளியிலிருந்து அங்கீகாரம் கிடைத்தாலே தவிர நீங்கள் செய்வதை உங்களாலேயே அங்கீகரிக்க முடியாமல் மனம் தவிக்கும்.

அங்கீகரிக்கப் படாத எந்த ஒரு செயலுமே உங்களுக்கு சாதனையாகவே தெரிய மறுக்கிறது. ஆனால் அந்த அங்கீகாரத்திற்கான ஏக்கமே, அது கிடைக்காத போது உங்களுக்கு ஒரு சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது தவறல்ல. ஆனால் பிறரது அங்கீகாரமென்பது அவர்களின் விருப்பு வெறுப்பிற்கும் பல் வேறு விதமான கோணங்களுக்கும் உட்பட்டது என்பதை புரிந்து கொண்டால் அங்கீகாரத்திற்காக இல்லாமல் ஆத்ம திருப்திக்காக செயல் படத் தொடங்கி விடுவீர்கள்.

அதனால், எதை செய்தாலும் நீங்கள் செய்யக் கூடிய அந்த விஷயம் முதலில் உங்களுக்கு திருப்தி தரக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை மனதில் எண்ணிக் கொள்ளுங்கள், இது நிச்சயம் வெற்றி அடையும் என்ற தன்னம்பிக்கையோடு செயலைத் தொடருங்கள்.

பிடித்த விஷயத்தை செய்ய முடியவில்லையென்றால் செய்து கொண்டிருக்கும் விஷயத்தை பிடித்தமானதாக உருவாக்கிக் கொள்ள உங்கள் எண்ணத்தை சீர் செய்யுங்கள். எந்த மாதிரியான எண்ணம் உங்கள் ஆற்றலை தூண்டி விட்டு நீங்கள் செய்யும் வேலையை உங்களுக்கு சுவாரஸ்யமானதாக மாற்றக் கூடும் என் சிந்தித்துப் பாருங்கள்.

வெற்றி என்பது பணத்திலோ அல்லது புகழிலோ இல்லை. உங்கள் செயலால் இந்த பிரபஞ்சம் அடையும் பலனில் இருக்கிறது.

அது ஒருவருக்கானதாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு நாட்டுக்கோ இந்த உலகிற்கோ ஆனதாக இருந்தாலும் சரி, அந்த செயலைத் தொடர்ந்து செய்வதற்குப் பெருமைப் படுங்கள்.

பொதுவாக நம் கனவுகளோடும் கற்பனைகளோடும் எப்போதும் நம் வாழ்க்கையை ஒத்து பார்த்து நிறைவில்லாத தன்மையில் பெரும்பாலும் உழல்கிறது மனம்,

அதனால் நாம் செய்து கொண்டிருக்கும் எந்த வேலைக்கும், நம்மிடம் இருக்கும் எந்த பொருளுக்குமான மதிப்பு நமக்கு தெரியாமலே போகிறது.

எத்தனை நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும் நீங்கள் விரும்பி, நடக்காமல் நழுவிப் போகும் அந்த ஒன்றில் உங்கள் முழு கவனமும் தேங்கி, சறுகிய பாறையில் வழிந்தோடும் நீராக மகிழ்ச்சியெல்லாம் வழிந்தோட ஆற்றாமையும் வெறுமையுமாக மனம் பாசி படிந்து போகிறது. எனக்கு எதுவுமே சரியாக அமைவதில்லை நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று இயலாமையாக தோன்றி விடுகிறது. மகிழ்ச்சி அந்த கிடைக்காத ஒன்றில் மறைந்து கொண்டு கண்ணாமூச்சி ஆட, வாழ்க்கை சலிப்பு தட்டுகிறது.

உண்மையில் உங்களுக்கு கிடைத்திருக்கும் எந்த வேலையாக இருந்தாலும் அதை இந்த பிரபஞ்சத்தோடு தொடர்பு படுத்தி பார்த்தால் அதன் மதிப்பு உங்களுக்கு பெரிதாகத் தோன்றும். வாழ்வின் அர்த்தம் புரியும்.

அதாவது, நீங்கள் எது செய்தாலும் ஏதோ என் கடமையை செய்கிறேன் என்றில்லாமல் எதற்காக செய்கிறோம் என்னும் அந்த புரிதல் இருந்தால், அதனோடு ஒரு குறிக்கோளை இணைத்துக் கொள்ள முடிந்தால், அந்த வேலை சலிப்பில்லாத சந்தோஷத்தை தரும்.

ஏனென்றால். எதற்காக ஒன்றை செய்கிறோம் என்று புரிந்து செய்யும் போது, அதை ஈடுபாட்டோடு செய்ய முடியும். தவிர உங்களுக்கு கிடைக்கும் சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் போது, அதில் முன்னேற்றத்தை பார்க்கும் போது, அதன் வெற்றியை தரிசிக்கும் போது வாழ்க்கை தொய்வில்லாமல் struck ஆகாமல் சுவாராஸ்யமானதாக இருக்கும்.

உண்மையில் வாழ்வின் முன்னேற்றம் என்பது எங்கோ கண்ணுக்கெட்டாத தூரத்தை எட்டிப் பிடிப்பது மட்டுமல்ல. உங்கள் அன்றாட செயல்களை அழகான முறையில் அமைத்துக் கொள்வதிலும் இருக்கிறது. அது உங்கள் கைவசமே இருக்கிறது.

உற்சாகமான உழைப்பும், புத்திசாலித்தனமான சிந்தனைகளும் இருந்தால் எதிலும் புதுமை படைக்கலாம். ஒரு மணி நேரம் செய்யக் கூடிய வேலையை பயிற்சியின் மூலம் அதற்கு முன்பாக முடிக்குமளவு செய்ய தேர்ச்சி பெறுவதும் முன்னேற்றம்தான்.

உங்களுடைய எந்த ஒரு வேலையையும் ஒவ்வொரு முறை செய்யும் போதும் அதன் தரத்தை, அதன் வேகத்தை இன்னும் நேர்த்தியாக கூட்டுமளவு செய்வதும் ஒரு சாதனை தான். உங்களை நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளும் சின்ன சின்ன சாதனைகளே பெரிய சாதனைகள் படைக்க உங்களை ஈர்த்து செல்லும்.

உங்களுடைய ஒரு நாள் எப்படி போகிறதென்று சின்ன சின்ன விஷயங்களாக இருந்தாலுமே லிஸ்ட் போட்டு பாருங்கள். நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்று எழுதி பார்க்கும் போது, நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதை விட அதிகமான வேலைகளை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு புலப்படும் அல்லது இன்னும் நேர்த்தியாக பயனுள்ளதாக நேரத்தை செலவிடலாமே என உங்களை productive ஆக சிந்திக்கச் செய்யும்.

அப்படி நீங்கள் உங்கள் அன்றாட செயலை பட்டியலிடும்போது உங்களுடைய ஒரு நாளில் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது நடக்கிறது, உங்களுக்குப் பிடிக்காத விஷயங்கள் எத்தனை செய்கிறீர்கள், அதை உங்கள் மனம் எந்த அளவு ஏற்றுக் கொண்டுள்ளது அல்லது முரண்படுகிறது, என்பதை அலசிப் பார்க்க முடியும். உங்கள் சூழலில் உங்கள் திறமைக்கு தீனி இருக்கிறதா அல்லது திறமை அற்ற விஷயங்களில் உங்கள் நேரம் வீணாகிக் கொண்டிருக்கிறதா என்பதை முடிவு செய்யுங்கள்.

தவிர, உங்களுக்கு பிடித்த சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துப் பார்த்தால் அவர்கள் எந்த வகையில் தங்களை மேம்படுத்திக் கொண்டார்கள் என்பது புலப்படும். அப்படி புலப்படும்போது, உங்களையும் அறியாமல் உங்கள் ஆற்றல் விரிவடையும். உங்களுடைய குறிக்கோளுக்கு ஏற்ப விருப்பத்திற்கு ஏற்ப உங்கள் திறமை அகன்று கொடுக்கும். என்னால் முடியும் எனும் உந்து சக்தி எழும்.

மொபைல் ஃபோன்கள் பயன்பாட்டிற்கு வந்த புதிதில் அவற்றில் பயன்படுத்திய சிம்பியன் ஓ.எஸ் பற்றி அறிவீர்களா? மனிதர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் தொடர்பில் இருக்கும் மொபைல் ஃபோன் இயங்குவதற்கு ஒரு இயங்கு தளம் தேவை என்ற ஒற்றை குறிக்கோளில்தான் அந்த சாஃப்ட்வேரை உருவாக்கினார்கள்.

இன்று உலகையே உள்ளங்கைகளில் கொண்டு வந்து சேர்க்கும் ஸ்மார்ட் ஃபோன்களை உருவாக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்த சிம்பியன் ஓ.எஸ் உருவாக்கியவர்களுக்கு எந்த அங்கீகாரமும் தேவைப் படவில்லை. David Potter ஆரம்பித்த PSION Software Co கொண்டு வந்த அந்த செயலியை இன்று பெரும்பாலானவர்கள் அறிந்திருக்காததைப் பற்றியும் அவர்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் அவர்கள் குறிக்கோள் இந்த உலகை தங்கள் இணைக்க வேண்டும் என்பதுதானே தவிர அதற்கான அங்கிகாரம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதல்ல.

பொதுவாக எது செய்தாலும் என்ன purpose க்காக செய்கிறோம் என்பதை யோசியுங்கள் அல்லது ஒரு ஆக்கபூர்வமான் purpose சை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். அப்படி செய்யும் போது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் சேர்த்தே நீங்கள் உருவாக்கிக் கொள்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள்.

Wednesday, October 23, 2019

ஃபேஸ்புக் Face book என்ற மாய உலகம்

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஃபேஸ்புக் என்ற மந்திரச் சொல் என்னவெல்லாம் கடந்த பத்து வருடங்களிடம் தந்துள்ளது என்பதனை பட்டியல் இட்டுப் பார்த்தால் அதனை பின்வருமாறு பிரிக்கலாம்.

1. என் மதம் தான் பெரிது.

2. என் சாதி தான் பெரிது.

3. என் கட்சி தான் பெரிது

4. பெரியார் மட்டுமே சிறந்த தலைவர்.

5. பிரதமர் நரேந்திர மோடி செய்தது, செய்து கொண்டிருப்பது, செய்ய நினைத்திருப்பது அனைத்தும் மிகச் சரியானது.

6. திரைப்படங்கள் அது சார்ந்த தகவல்கள்.

இதனைத் தவிரத் திராவிடம், ஆரியம், தமிழ்த் தேசியம், சீமான்,  ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரல்கள்.

இதற்குள் தான் நீங்கள் சுற்றிச் சுற்றி வர வேண்டியதாக இருக்கும்.  

மூக்கை பொத்தியே ஆக வேண்டிய துர்நாற்றம் இருக்கும் இடத்தில் வாழும் போது எங்கேயாவது நல்ல வாசனையை முகர்ந்து பார்க்க முடியாதா? என்று ஏங்கும் மனநிலையில் நாம் இருந்தால் எப்படியிருக்கும்?  அப்படித்தான் தற்போதைய ஃபேஸ்புக் உலகத்தை நம்மவர்கள் மாற்றி வைத்துள்ளனர்.  மேலும் மேலும் இதனை மாற்றிக் கொண்டே வந்து கொண்டும் இருக்கின்றார்கள்.

சில நண்பர்கள் அழுத்தம் தாங்க முடியாமல், தங்கள் நேரத்தை ஃபேஸ்புக் திருடிவிடுகின்றது என்று இதனை நிரந்தரமாக மூடி வைத்து விட்டு வெளியேறி விடுகின்றார்கள். சிலரால் முடிவதில்லை. 

கிண்டில் ஒரு போட்டி அறிவித்துள்ளார்கள்.  

கதை, கட்டுரைகள் இது வரை எங்கும் வெளியே பிரசுரம் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்து போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து உள்ளனர்.  நான் இதுவரையிலும் போட்டிகள் எதிலும் கலந்து கொண்டதில்லை.  நான் இதில் கலந்து கொள்கிறேன்.  திருப்பூர் குறித்து ஒரு நான் பிக்சன் வடிவில் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கின்றேன்.  

5 முதலாளிகளின் கதை.  

திருப்பூரில் உள்ள ஐந்து முதலாளிகளின் வாழ்க்கை மூலமாக இங்குள்ள சமூகம், தொழிலாளர்களின் வாழ்க்கை, மாறிக் கொண்டே வந்த சூழல்கள், வீழ்ந்த சாதித்த முதலாளிகளின் தொழில் வாழ்க்கை என்பதனை பதிவு செய்யக் கடந்த ஒரு மாதமாக எழுதிக் கொண்டு வருகின்றேன்.

நான் எப்போதும் எந்தக் காரியத்தில் இறங்கி விட்டாலும் முழுமையாக அதற்குள் என்னைப் பொருத்திக் கொண்டு முழுமையாக அதனுடன் ஒன்றிப் போய்விடுவதுண்டு.  அந்தக் காரியம் முழுமை அடைந்ததும் மட்டுமே அடுத்த வேளையில் கவனம் செலுத்துவேன்.  இதுவரையிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டு வருவதும் இப்படிப்பட்ட குணாதிசயம் இருப்பதால் தான் இங்குள்ள என் தொழில் வாழ்க்கை நிர்ப்பந்தங்களைக் கடந்து என்னால் இந்த எழுத்துலகில் இயங்க முடிகின்றது.

ஆனால் கடந்த ஒரு வருடமாகத் தினமும் ஃபேஸ்புக் உலகில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் எனக்கு ஃபேஸ்புக் என்னைத் தொடர்ந்து எழுத வைத்துக் கொண்டிருப்பதைப் போல என் சிந்தனைகளைத் திருடிக் கொண்டுள்ளது என்பதனை இப்போது தான் என்னால் உணர முடிகின்றது.

ஆழமற்ற வாசிப்பு, அர்த்தமற்ற வாசிப்பு என்று எல்லாவற்றையும் கவனித்து நம் திறமைகளை எப்படி மட்டுப்படுத்துகின்றது என்பதனை என்னால் இப்போது நன்றாக உணர முடிகின்றது.  

5 முதலாளிகளின் கதை குறித்து அடுத்து அறிவிப்பு விரைவில் வெளியே வரும்.

இணைய உலகம் இப்போதைய சூழலில் முக்கியமானது. நமக்கு அவசியமானது.  இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்த செய்திகள் அனைத்தும் ஒரு வருடத்திற்கு முன்னால் நடந்தது போலப் பழசாக மாறிவிடுகின்றது.  ஆனாலும் ஃபேஸ்புக் குறித்து, அதனை உருவாக்கிய அதன் முதலாளி மார்க் குறித்து எனக்கு எப்போதும் தீரா ஆச்சரியமுண்டு.

எழுத்தாளர் என்.சொக்கன் அவர்கள் பேஸ்புக் எப்படி உருவானது? அதனை உருவாக்கிய மார்க் அவர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.  கிண்டிலில் வாசிக்கக் கிடைக்கின்றது.

சொக்கன் இது தவிர கூகுள், அம்பானி, மிட்டல் என்று தொடர்ந்து பல புத்தகங்களும் எழுதி உள்ளார்.  இரண்டு மாதங்களுக்கு முன்னால் இவரின் பல புத்தகங்களை ஒரே வாரத்தில் தொடர்ந்து வாசித்துக் கொண்டே வந்தேன்.  அப்போது தான் என் மனதில் பல ஆச்சரியங்கள் வந்து போனது.

)(

எழுத்தாளர் என் சொக்கன் ஃபேஸ்புக் முதலாளி மார்க் குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அமேசானில் வாசிக்கக் கிடைக்கிறது.

அந்தப் புத்தகத்தில் ஒரு இடத்தில் வரும் விசயங்கள் என்னைப் பல நாட்கள் தூங்க விடாமல் தவிக்க வைத்தது. யோசிக்க வைத்துக் கொண்டேயிருந்தது. மார்க் கல்லூரியிலிருந்த போது கல்லூரி வலைதளத்தில் அனுமதியின்றி உள்ளே நுழைந்து பார்வையிட்டு அதில் உள்ள தகவல்களைத் திரட்டி (நிர்வாக அனுமதியின்றி) பொதுவில் வைத்த போது அது பல பக்க விளைவுகளை உருவாக்கியது. அவரை கண்டித்து பஞ்சாயத்து வரைக்கும் கொண்டு போய் நிறுத்தியது. அப்போது தான் மார்க் யோசித்தார்.

நாம் எடுத்துப் போட்டால் தான் பஞ்சாயத்து வருகின்றது. நம் தளத்திற்கு வருகின்றவர்கள் அவர்களே விருப்பப்பட்டு தங்கள் தனிப்பட்ட தகவலை அவர்களாகவே விருப்பப்பட்டு பதிவேற்றினால் என்ன ஆகும்?

இது தான் இன்றைய ஃபேஸ்புக்கின் ஆதார வெற்றியை அள்ளித் தந்தது. ஒரு யூதரின் மூளை எப்படி யோசித்துள்ளது என்று யோசித்துப் பார்த்தேன்.

இத்தனைக்கும் அப்போது அவரின் வயது நிறையவே ஆச்சரியம் அளித்தது. அதாவது நம் இளையர்கள் பிடித்த நடிகர்களுக்கு கட் அவுட் பாலாபிஷேகம் செய்து தங்களை நிரூபித்துக் கொண்டிருக்கும் வயதை விடக் குறைவு தான்.

அதன் பிறகு தான் ஃபேஸ்புக்கில் தங்களுக்குப் பிடித்த தேவையான இணையர்களைத் தேடும் வசதிகளை உருவாக்கினார். தளம் அதன் பிறகே நூறு குதிரை வேகத்தில் அமெரிக்கா முழுக்க மிக விரைவாகச் சென்று சேர்ந்தது என்று எழுதியிருந்தார்.

நீயே வா. நீயே கொட்டு. நான் உன்னை எதுவும் கட்டாயப்படுத்தவில்லை. உன் பாடு. உன் எதிரிகள் அல்லது நண்பர்கள் பாடு.

போதாதா?

இன்று நடக்கும் அத்தனை பஞ்சாயத்துக்களின் ஆதார விதை அங்கிருந்து தான் உருவானது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

https://www.amazon.com/s?k=n+chokkan&page=2&qid=1571787312&ref=sr_pg_2

)(

இன்றைய சூழலில் ஃபேஸ்புக் நம்மை எப்படிப் பிரித்து வைத்துள்ளது.

1. நீ பெரியாரை, அண்ணாவை, கலைஞரை எதிர்த்தால் முழு முட்டாள்.

2. நம் மதம் முக்கியமானது.  அத்துடன் இஸ்லாம், கிறிஸ்துவத்தை வெறுத்து ஒதுக்கி விடு. அவர்களுடன் பழகுவது கூட பாவம்.

3. நம் நாட்டை நேசிக்க மோடியை ஆதரிக்க வேண்டும்.  மற்றவர்கள் ஆன்டி இன்டியன்.
4. மோடியை ஆதரிப்பவன் நாட்டின் துரோகி.

5. திராவிடம் தான் எனக்கு டவுசர் போடக் கற்றுத் தந்தது. பெரியார் வந்த பின்பு தான் அ ஆ எழுதவே தமிழர்களால் முடிந்தது.  அதற்கு முன்னால் தெருத் தெருவாகச் சுற்றிக் கொண்டிருந்தார்கள். படிப்பு வாசனையே தெரியாது.

இந்த பஞ்சபாண்டவர் தான் உங்களையும் என்னையும் இணைத்துள்ளது. பிரித்துள்ளது. வெறுக்க, விரும்ப வைத்துள்ளது.

உங்கள் தொடர்பில் உள்ள நெருக்கமான பழக்கத்தில் உள்ளவர்கள் எத்தனை நாட்களுக்கு முன்னால் உங்களை அலைபேசியில் அழைத்தார்கள்.  கடைசியாக உங்கள் நண்பரை எத்தனை நாளைக்கு முன்னால் நேரிடையாக சந்தித்தார்கள்?  மனம் விட்டு மாற்றுக் கருத்துடன் எவ்வளவு மணிநேரம் உரையாட முடிந்தது?  இடைவெளி விட்டு அதே நேசத்துடன் மீண்டும் எத்தனை நாட்கள் கழித்து மீண்டும் மீண்டும் உங்கள் நட்பு புதுப்பிக்கப் படுகின்றது என்பதனை நீங்கள் தனியாக இருக்கும் போது யோசித்துப் பாருங்கள்.

உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதா? அர்த்தமற்றதா? என்பது புரியும்.

MY KINDLE PAGE

Tuesday, October 22, 2019

அசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu


மனைவி மகள்களை அசுரன் பார்த்து வாருங்கள் என்று நேற்று அனுப்பி வைத்தேன். நான் இன்னமும் பார்க்கவில்லை. ஒரு மகள் வந்து ஒரு மணி நேரம் மிகவும் சோகமாக இருந்தார். காரணம் கேட்ட போது இப்படியெல்லாம் நம்மைச் சுற்றி நடந்து கொண்டு இருக்கின்றதா? என்று கேட்டார். இனிமேலாவது செய்தித் தாள்களை முழுமையாக படித்தால் உனக்கே புரியும் என்றேன்.

நீண்ட நாளைக்குப் பிறகு காவல்துறை பாதுகாப்பு கொடுத்து திரையரங்கத்தில் கூட்டத்தில் ஒழுங்குபடுத்தி அனுப்பிய படமாக அசுரன் அரங்கு நிறைந்த காட்சியாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

ஆனால் இந்த செய்தி தான் அசுரனுக்கு கிடைத்த உண்மையான அங்கீகாரம்.

காப்பான், நம்ம வீட்டுப் பிள்ளை, சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்கள் தமிழகத்தில் பெரும்பான்மையான திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்ததால் அசுரன் படத்திற்கு குறைவான திரையரங்குகள் கிடைத்தன. சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் மட்டும் முதல் தரமான திரையரங்குகளில் அசுரன் திரையிடப்பட்டது. பிற இடங்களில் C செண்டர் தியேட்டர்கள் தான் இப்படத்திற்கு கிடைத்தது. கடந்த மூன்று நாட்களில் தமிழகத்தில் திரையரங்குகள் மூலம் சுமார் 18 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது அசுரன் திரைப்படம்

()

நீங்கள் ஆகா ஓகோ என்று பாராட்டுங்கள், பாராட்டாமல் இருங்கள்.

சமூகத்தை புரட்டிப் போட்டது. கேவலப்படுத்தியது என்று என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்.

ஆனால்.........

தயாரிப்பாளர் உயிரோடு இருக்கின்றாரா? என்பது தான் முக்கியம்.

தாணு இலக்கியம் அறிந்த தயாரிப்பாளர். தெளிவானவர், சூட்சமம் அறிந்தவர்.

முதலீடு செய்யும் முதலாளியை முதலில் காவு வாங்கும் தமிழ் திரைப்பட உலகத்தில் இன்னமும் இவர் தாக்குப் பிடித்து நிற்பதற்கு தனியாக பாராட்டுச் சொல்ல வேண்டும்.



Monday, October 21, 2019

ஊர்ப்பயணம் அக்டோபர் 2019

சென்ற வாரம் ஊருக்குச் சென்று இருந்தேன்.

@ கோவை பக்கம் பெய்த மழையின் அளவை விடத் தென் மாவட்டங்களில் பெய்த மழை வழியெங்கும் மண்வாசனையுடன் குளிர்ந்த காற்றையும் வாரி வழங்கியது. எப்போதும் காய்ந்த பூமியும், எரிச்சலூட்டும் வெப்பக் காற்றையும் பார்த்த மனதிற்கு இதமாக இருந்தது.

@ ஊருக்குச் சென்றால் சந்திக்கும் முதல் பிரச்சனை எட்டு மணிக்குத் தூங்கத் தொடங்க வேண்டும். பத்து மணி ஆனால் இரண்டாம் ஜாமத்திற்குச் சென்று இருக்க வேண்டும். ஊரே தூங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் பிக்பாஸ் பல குடும்பங்களில் தூக்க நேரத்தை மாற்றியுள்ளது.

@ தனியான வீடுகளில் அமைதியும், பேரமைதியும் ஒன்றாக இருக்க இன்னும் சில நாட்கள் இருந்தால் சோம்பேறியாகி விடுவோமோ? என்ற அச்சம் வந்து கொண்டேயிருக்கின்றது. பொரியல், அவியல், கூட்டு என்பதோடு ஒவ்வொரு முறையும் ரசத்துடன் சம்பார் இறுதியாக மோர் என்று ஒரு கட்டுக் கட்டி எந்திரிக்கும் போது இது உடம்பா? இல்லை வேறு எதுவுமா? என்று கேட்கத் தோன்றுகின்றது. நாள் தோறும் விருந்தோடு வாழ்பவர்களின் வாழ்க்கையில் இப்போது தான் மருந்துகள் எட்டிப் பார்க்கத் துவங்கியுள்ளது.

@ திருப்பூர், ஈரோடு, கரூர் ரயில் நிலையங்களைச் செல்லும் போது பார்வையால் அளப்பதுண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் திருச்சி ரயில் நிலையம் அதிகம் ஆச்சரியத்தைத் தந்து கொண்டே இருக்கின்றது. ஒரு குப்பை இல்லை. ஒவ்வொரு இடமும் பளிச்சென்று துடைத்து சுத்தம் செய்த வீடு போல வைத்துள்ளார்கள். ஏதாவது ஒரு இடத்தில் தவறு கண்டு பிடிக்கலாம் என்று ஒவ்வொரு முறையும் சுற்றி வந்து பார்ப்பதுண்டு. ஆனால் அவர்கள் வியப்பைத்தான் பரிசாக அளிக்கின்றார்கள்.


@ யாரோ ஒரு பொறுப்புள்ள அதிகாரி இதற்குக் காரணமாக இருப்பார் என்றே தோன்றுகின்றது.  இந்திய ரயில்வே துறையின் மூலம் இப்போது தான் சிறிது லாபம் ஈட்டத் தொடங்கி உள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றது.

@ மொத்த இந்தியாவிலும் இதுவரையிலும் தென்னக ரயில்வே மூலம் வரக்கூடிய லாபத்தை வைத்தே இத்தனை நாளும் கண்ணாமூச்சி வித்தைகளைக் காட்டியிருப்பார்கள் என்றே நினைக்கின்றேன். இப்போது தான் வட மாநிலங்களில் உள்ள ரயில் பயணிகள் டிக்கெட் எடுத்தால் தான் பயணிக்க முடியும் என்று கொண்டு வந்திருப்பார்கள் போல.

@ பல ரயில்களில் முன்பதிவு குறிப்பிட்ட இருக்கைக்கு முடிந்து காலியாக இருந்தாலும் பயணிகள் இன்றி தான் பயணம் நடக்கின்றது. நிச்சயம் இதை மாற்றலாம். தனியார் வாகனங்கள் போல ஸ்டாண்டிங் போன்ற திட்டங்களைக் கொண்டு வரலாம். முன்பதிவு இல்லாமல் சதாப்தி ரயிலில் பயணிக்கும் போது இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கின்றார்கள். அரசின் சட்டதிட்டங்கள் வினோதமாக உள்ளது. ஆளே உள்ளே இல்லாவிட்டாலும் பரவாயில்லை? நீ ஏன் ஏறினாய்? உன் சீட்டு வெயிட்டிங் லிஸ்ட் ல் தான் உள்ளது. எடு இரண்டு மடங்கு கட்டணம் என்று கறாராக வசூலிக்கின்றார்கள்.

@ ஒவ்வொரு முறையும் நான் படித்த கல்லூரியைத் தான் கடந்து செல்ல வேண்டும். உள்ளே செல்ல வாய்ப்பு அமைவதில்லை என்ற குறையை இந்த முறை தீர்த்துக் கொண்டு அமைதியாக உள்ளே சென்று ஆசை தீர ஒவ்வொரு பகுதியையும் 30 வருடங்களுக்குப் பின்பு பார்த்தேன். மகிழ்ந்தேன்.

வள்ளல் அழகப்பர் சமாதி எப்போதும் போலப் பத்திரமாகப் பூட்டி வைத்துள்ளனர். ஆனால் அழகப்பா பல்கலைக்கழகம் உருவான பின்பு அவரின் சிலைக்குத் தனியாக மரியாதையும் அங்கே உருவாக்கப்பட்டுள்ள பூங்கா மூலம் சிறப்பான பார்வையும் கிடைத்துள்ளது.

@ இப்போது நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் ஆளுநரின் நேரிடையான பார்வையில் பட்டு உள்ளே வருவதால் பணம் விளையாடுவது நிறுத்தப்பட்டுள்ளது. முன்பு இருந்ததை விட அழகப்பா பல்கலைக்கழகம் பல விசயங்களில் முன்னோடித் திட்டங்களில் கவனம் செலுத்துவதாக அங்கே பணிபுரியும் நண்பர் சொன்னார்.

Sunday, October 20, 2019

திருப்பூர் வாக்கத்தான் ஐந்து கிலோ மீட்டர் Tirupur Walkathan

சென்ற வாரம் காலை சிக்கண்ணா கலைக்கல்லூரியில் இரண்டாவது ஆண்டாக திருப்பூர் வாக்கத்தான் 2019 நடைபெற்றது. சென்ற வருடம் என்னுடன் வீட்டில் இருவர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த முறை மூன்றாவது மகளும் என நாங்கள் நான்கு பேர்களும் ஐந்து கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து வந்தோம்.

சென்றவருடம் ஐந்து கிலோ மீட்டர் என்று சொல்லி பத்து கிலோமீட்டர் தொலைவு வைத்து இருந்தார்கள். மக்கள் தடுமாறிவிட்டார்கள் போல.

இந்த முறை தொலைவைக் குறைத்து விட்டார்கள்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியாளராகப் பொறுப்பேற்ற பின்பு திரு. விஜய கார்த்திகேயன் கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி இது.

விழா ஏற்பாடு சுமார் ரகம். சென்றவருடம் நடந்து செல்லும் பாதை முழுக்க பல முன்னேற்பாடுகள் செய்து இருந்தார்கள். இந்த வருடம் இல்லை. 20 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மயங்கி விழுவதைப் பார்த்தேன். வாழ்நாள் முழுக்க தினசரி வாழ்க்கையில் ஆயிரம் அடிகள் கூட நடக்க வாய்ப்பு இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இளையர்கள் சற்று தடுமாறத்தான் செய்கின்றார்கள். ஆனாலும் மக்களின் ஆர்வம் பாராட்டக்கூடியதாக இருந்தது. எங்கள் டோக்கன் 10500. சாலை முழுக்க மக்களின் தலை வெள்ளம் போலக் காட்சியளித்தது.

விழா தொடங்கும் போது வார்ம் அப் என்று ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். அதில் யோகாவில் உள்ள சில உடற்பயிற்சிகள் உண்டு. ஆனால் நம் மக்கள் யோகா செய்வதற்கு ஜிமிக்கி கம்மல் பாட்டு போட்டால் தான் சுறுசுறுப்பாகச் செய்கின்றார்கள்.

கலந்து கொண்ட ஒவ்வொருவர் கையிலும் கட்டாயம் அலைபேசி உள்ளது. நூறடிக்கு ஒருவர் ஒரு முறையாவது செல்பி எடுத்துக் கொண்டேயிருக்கின்றார்கள்.

பெண்கள் வஞ்சகம் இல்லாமல் சாப்பிடுவார்கள் போல. ஆனால் அவர்கள் ஆசைப்பட்டு அணியும் டைட் ஆன உடைகள் அவர்களை உண்டு இல்லை என்று படுத்தி எடுக்கின்றது. நடந்து கொண்டேயிருப்பவர்கள் பல இடங்களில் பார்வையாளர்களாக மாறிவிடுகின்றார்கள். இனிவரும் காலங்களில் பெண்கள் உடைகளில் அலைபேசி வைக்கத் தனியாக ஏதாவது டிசைன் செய்ய வேண்டும்.

திருப்பூர் ஏற்றுமதியில் முதல் ஐந்து இடத்தில் உள்ள ஈஸ்ட்மென்ட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனர் திரு சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் விளையாட்டுக் காதலன். திருப்பூர் ஜெவாபாய் பள்ளியில் அவர் கட்டிக் கொடுத்த கட்டிடம் மூலம் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த விழாவிற்கும் நன்கொடை அளித்துள்ளார். மேடையில் பேசியவர் இந்த விழாவிற்கு 2 கோடி செலவு என்று சொல்லி இருந்தார். குழப்பமாக இருந்தது.

இந்த வருடம் முதல் முறையாகக் கலந்து கொண்ட மகளிடம் நான் சொல்லி வைத்திருந்தேன். (அவரும் என்னைப் போல உணவுகளின் காதலன்/காதலி.)

நாம் நடந்து முடிந்த பிறகு தூள் பக்கோடா ஒரு இடத்தில் ரொம்ப சுவையாகச் செய்வார்கள். நாம் இருவரும் மட்டும் செல்வோம் என்று.

மற்ற இருவரும் இதைக் கேட்டு மிக உசாராக எங்கேயும் நிறுத்த விடாமல் வண்டி வீட்டுக்கு வந்து சேரும் வரை உச்சபட்ச காவல் கண்காணிப்புடன் நடந்து கொண்டது வருத்தமாக இருந்தது












Saturday, October 19, 2019

இளையராஜா )( வைரமுத்து

அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்குவேன். பலசமயம் ஐந்து மணிக்கு நீண்ட தூர நடைப்பயிற்சியை முடிப்பேன். முக்கிய சாலையின் வழியே கடந்து வரும் போது அரசு மற்றும் தனியார் பேருந்து வாகனங்கள் கோவை மற்றும் ஊட்டி நோக்கிச் சென்று கொண்டிருக்கும். குறிப்பிட்ட இடைவெளியில் ஒவ்வொன்றாக என்னைக் கடந்து செல்லும். கடக்கும் போது தவறாமல் பேருந்தில் ஒலிக்கும் பாடல்கள் காற்றில் கலப்பதோடு என் காதை நிறைக்கும். நாற்பது வயது ஓட்டுநராக இருந்தால் கட்டாயம் இளையராஜாவின் என்பது தொண்ணூறு பாடல்களின் அணிவகுப்பு தொடர்ந்து காதில் வந்து விழுந்து கொண்டேயிருக்கும்.

ஆளரவமற்ற, போக்குவரத்து நெரிசலற்ற தார்ச் சாலையில் தனித்து இருக்கும் போது ஒலித்த இளையராஜாவின் இசை எங்கங்கே அழைத்துச் செல்லும். ஒரு பாடலின் இசை, வரிகள், இடையே வரும் இசைக்கோர்வைகள், கோரஸ் காட்டும் வித்தியாசமான உணர்வு என்று நான்கு புறமும் நம்மை நடக்க வைக்காது. காற்றில் மிதக்க வைக்கும்.

பேசும் ஒவ்வொரு இடத்திலும் உளறிக் கொண்டேயிருக்கும் இளையராஜாவை வெறுத்துப் பல வருடங்கள் அவரின் பாடல்களைக் கேட்பதைத் தவிர்த்ததுண்டு. பாடல் வரிகளைக் கேட்கும் போதெல்லாம் அவரின் சமீபத்திய உளறல் என்ன என்று மனம் இயல்பாக அந்த வார்த்தைகளை மறுபக்கம் தேடிக் கொண்டேயிருக்கும். வாழும் போதே தான் கடவுளாக மாற நினைப்பவன், நான் தான் கடவுள் என்று சொல்கிறவனை நன்றாகக் கவனித்துப் பாருங்கள்.

காரியவாதியாக இருப்பான். ஏதோவொன்றை மறைக்க, மறக்கப் பேசிக் கொண்டே இருப்பான். தன் மன நோயாளித்தனம் வெளியே தெரியாமல் இருக்க முயன்று கொண்டேயிருப்பான். திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருக்கும் போது ஜக்கி போல அங்கீகாரமும் பெற்று விடுவார்கள் அல்லது நித்தி போலக் கோமாளியாக மாறிவிடுவார்கள். ஆனால் காசு விசயத்தில் கனகச்சிதமாக செயல்படுவார்கள்.

ஆனால் இளையராஜாவை என்ன தான் சிலாகித்துப் பேசினாலும் பள்ளிக்கூட சமயங்களில் கேட்ட எம்.எஸ். விஸ்வநாதன் இசையும், பாடல் வரிகளும் இன்று வரையிலும் மனப்பாடமாக உள்ளது. இப்போது கூட மகள்களிடம் பாடி கலவரத்தை உருவாக்குவதுண்டு.

பல பாடல்கள் வார்த்தைகள் மாறாமல் இன்று வரையிலும் பாட முடிகின்றது. ஒரே காரணம் கவிஞர் கண்ணதாசன். தன்னை உருக்கி உருக்கி அவர் ஏற்றிய நெய் தீபம் இன்றும் அணையா விளக்காகச் சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது. எத்தனையோ பேர்கள் உள்ளே வந்து கொண்டேயிருக்கின்றார்கள். ஆனாலும் கண்ணதாசன் நமக்குத் தேவையாக இருந்து கொண்டேயிருக்கின்றார்.

இதைத்தான் கவிஞர் வைரமுத்து சுசீலா 65 விழாவில் பேசினார்.

கலைஞன் சூதுவாது நிறைந்தவன்.

அப்படிப்பட்டவனால் மட்டுமே நல்ல கலைஞனாகத் தன்னை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

ஆனால் கடைசி வரைக்கும் தன்னை தக்க வைத்துக் கொண்டும், குழந்தை மனம் போலவே வாழ்ந்தவர்கள் எம்.எஸ்.வி, கண்ணதாசன், சுசீலா மூவரும் இப்படித்தான் வாழ்ந்தார்கள்.

சுசீலா மட்டும் இன்னமும் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

இந்த விழாவில் கிடைத்த கேப்பில் இளையராஜா உலகில் ஒரே கவிஞன் கண்ணதாசன் என்று ரத்தப்பலியை தொடங்கினார். வைரமுத்து சமானியப்பட்டவரா? கிடா வெட்டி ராஜ்கிரண் விருந்து படைத்து விட்டார்.

கூட்டத்திலிருந்தவர்கள் வைரமுத்து பேசும் போது கை தட்டிய வேகத்தைப் பார்க்கும் போது இளையராஜா கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு சக மனிதர்களைப் புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டாரோ என்று தோன்றுகின்றது.

Friday, October 18, 2019

சீனிவாசன் மற்றும் நித்யாவுக்கு வாழ்த்துகள்


கடந்த பத்தாண்டுகளாக நண்பர் சீனிவாசன் பணிகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.  வாய் வார்த்தைகளில் மட்டும் வீரராக இல்லாமல் எதார்த்த உலகில் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு பல்வேறு விசயங்களைச் சப்தமில்லாமல் செய்து வந்து கொண்டிருக்கிறார்.  

எதையும் விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை.  

எங்கேயும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதும் இல்லை. மனைவி நித்யா மற்றும் அவருடன் ஏராளமான இளையர் கூட்டம் பல்வேறு சரித்திர சாதனைகளைச் செய்து கொண்டு வருகின்றார்கள்.  தமிழ் மென்பொருட்கள், ஒப்பன் சோர்ஸ் தொடர்பான கணினி மென்பொருள் சார்ந்த விடயங்கள் என்று எல்லாப் பக்கங்களிலும் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றார்கள்.    

https://freetamilebooks.com/என்ற தளம் இப்போது  70 லட்சம் பதிவிறக்கங்களைக் கடந்து வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது.  தொடக்கம் முதல் பொருளாதார உதவிகளை வெளியே இருந்து எதிர்பார்ப்பதும் இல்லை.  

நிதி உதவி வரும் போது மறுப்பதும் இல்லை.  என் கடன் பணி செய்து கிடப்பதே என்று தமிழ்மொழிக்குக் கணினி வழியே தங்களால் ஆன கடமைகளைச் செய்து வருகின்றார்கள்.

குழுவில் உள்ள அனைவருக்கும் என் வாழ்த்துகள்.  முதல் முறையாக அரசு அங்கீகாரம் கிடைத்துள்ளது.  மகிழ்ச்சி.


)(

தமிழ் இணைய இணையர் விருது

Published by admin on September 24, 2019

உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் சார்பில் 18 வது தமிழ் இணைய மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செப் 20-22, 2019 ல் நடைபெற்றது.

மாநாட்டை அமைச்சர்கள் மாபா. பாண்டியராஜன், கே.பி.அன்பழகன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முதல் நாள் விழாவில், தமிழ் மென்பொருள் உருவாக்குநர்களான மறைந்த ஆண்டோபீட்டர், மறைந்த தகடூர் கோபி ஆகியோருக்கு ‘தமிழ் கணிமை முன்னேர் விருது’ வழங்கப்பட்டது.

அதேபோல், எனக்கும் (து. நித்யா) என் இணையர் த.சீனிவாசன்-க்கும் ‘தமிழ் இணைய இணையர் விருது’ வழங்கப்பட்டது.

விருது வழங்கிய அமைச்சர்களுக்கும், உத்தமம் அமைப்பிற்கும் எங்கள் நன்றிகள்.

திருவிழாவில், உயரத்தில் உள்ள சாமியை காட்ட, பெற்றோர் குழந்தைகளை தோள் மீது ஏற்றி, சாமியைக் காட்டுவர். நாங்களும் இது போலவே உணர்கிறோம். இவ்விருதையும் மகிழ்ச்சியையும் தமிழ்க் கணிமைக்கும் கட்டற்ற மென்பொருள் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறோம்.

கட்டற்ற மென்பொருளை எமக்கு அறிமுகம் செய்த, சென்னை லினக்ஸ் பயனர் குழு (Indian Linux Users Group Chennai), தமிழ் விக்கிப்பீடியர்கள், FSFTN, PuduvaiGLUG, Villupuram GLUG, KanchiLUG, Open-Tamil பங்களிப்பாளர்கள், கணியம் பங்களிப்பாளர்கள், FreeTamilEbooks.com பங்களிப்பாளர்கள், எழுத்தாளர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகளை தெரிவிக்கிறோம்.

இன்னும் கூடுதலாக தமிழுக்கும் கட்டற்ற மென்பொருளுக்கும் பங்களிப்போம்.

நன்றி !

https://www.youtube.com/watch?v=VfBXY5TxhL8