அஸ்திவாரம்

Monday, October 21, 2019

ஊர்ப்பயணம் அக்டோபர் 2019

சென்ற வாரம் ஊருக்குச் சென்று இருந்தேன்.

@ கோவை பக்கம் பெய்த மழையின் அளவை விடத் தென் மாவட்டங்களில் பெய்த மழை வழியெங்கும் மண்வாசனையுடன் குளிர்ந்த காற்றையும் வாரி வழங்கியது. எப்போதும் காய்ந்த பூமியும், எரிச்சலூட்டும் வெப்பக் காற்றையும் பார்த்த மனதிற்கு இதமாக இருந்தது.

@ ஊருக்குச் சென்றால் சந்திக்கும் முதல் பிரச்சனை எட்டு மணிக்குத் தூங்கத் தொடங்க வேண்டும். பத்து மணி ஆனால் இரண்டாம் ஜாமத்திற்குச் சென்று இருக்க வேண்டும். ஊரே தூங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் பிக்பாஸ் பல குடும்பங்களில் தூக்க நேரத்தை மாற்றியுள்ளது.

@ தனியான வீடுகளில் அமைதியும், பேரமைதியும் ஒன்றாக இருக்க இன்னும் சில நாட்கள் இருந்தால் சோம்பேறியாகி விடுவோமோ? என்ற அச்சம் வந்து கொண்டேயிருக்கின்றது. பொரியல், அவியல், கூட்டு என்பதோடு ஒவ்வொரு முறையும் ரசத்துடன் சம்பார் இறுதியாக மோர் என்று ஒரு கட்டுக் கட்டி எந்திரிக்கும் போது இது உடம்பா? இல்லை வேறு எதுவுமா? என்று கேட்கத் தோன்றுகின்றது. நாள் தோறும் விருந்தோடு வாழ்பவர்களின் வாழ்க்கையில் இப்போது தான் மருந்துகள் எட்டிப் பார்க்கத் துவங்கியுள்ளது.

@ திருப்பூர், ஈரோடு, கரூர் ரயில் நிலையங்களைச் செல்லும் போது பார்வையால் அளப்பதுண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் திருச்சி ரயில் நிலையம் அதிகம் ஆச்சரியத்தைத் தந்து கொண்டே இருக்கின்றது. ஒரு குப்பை இல்லை. ஒவ்வொரு இடமும் பளிச்சென்று துடைத்து சுத்தம் செய்த வீடு போல வைத்துள்ளார்கள். ஏதாவது ஒரு இடத்தில் தவறு கண்டு பிடிக்கலாம் என்று ஒவ்வொரு முறையும் சுற்றி வந்து பார்ப்பதுண்டு. ஆனால் அவர்கள் வியப்பைத்தான் பரிசாக அளிக்கின்றார்கள்.


@ யாரோ ஒரு பொறுப்புள்ள அதிகாரி இதற்குக் காரணமாக இருப்பார் என்றே தோன்றுகின்றது.  இந்திய ரயில்வே துறையின் மூலம் இப்போது தான் சிறிது லாபம் ஈட்டத் தொடங்கி உள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றது.

@ மொத்த இந்தியாவிலும் இதுவரையிலும் தென்னக ரயில்வே மூலம் வரக்கூடிய லாபத்தை வைத்தே இத்தனை நாளும் கண்ணாமூச்சி வித்தைகளைக் காட்டியிருப்பார்கள் என்றே நினைக்கின்றேன். இப்போது தான் வட மாநிலங்களில் உள்ள ரயில் பயணிகள் டிக்கெட் எடுத்தால் தான் பயணிக்க முடியும் என்று கொண்டு வந்திருப்பார்கள் போல.

@ பல ரயில்களில் முன்பதிவு குறிப்பிட்ட இருக்கைக்கு முடிந்து காலியாக இருந்தாலும் பயணிகள் இன்றி தான் பயணம் நடக்கின்றது. நிச்சயம் இதை மாற்றலாம். தனியார் வாகனங்கள் போல ஸ்டாண்டிங் போன்ற திட்டங்களைக் கொண்டு வரலாம். முன்பதிவு இல்லாமல் சதாப்தி ரயிலில் பயணிக்கும் போது இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கின்றார்கள். அரசின் சட்டதிட்டங்கள் வினோதமாக உள்ளது. ஆளே உள்ளே இல்லாவிட்டாலும் பரவாயில்லை? நீ ஏன் ஏறினாய்? உன் சீட்டு வெயிட்டிங் லிஸ்ட் ல் தான் உள்ளது. எடு இரண்டு மடங்கு கட்டணம் என்று கறாராக வசூலிக்கின்றார்கள்.

@ ஒவ்வொரு முறையும் நான் படித்த கல்லூரியைத் தான் கடந்து செல்ல வேண்டும். உள்ளே செல்ல வாய்ப்பு அமைவதில்லை என்ற குறையை இந்த முறை தீர்த்துக் கொண்டு அமைதியாக உள்ளே சென்று ஆசை தீர ஒவ்வொரு பகுதியையும் 30 வருடங்களுக்குப் பின்பு பார்த்தேன். மகிழ்ந்தேன்.

வள்ளல் அழகப்பர் சமாதி எப்போதும் போலப் பத்திரமாகப் பூட்டி வைத்துள்ளனர். ஆனால் அழகப்பா பல்கலைக்கழகம் உருவான பின்பு அவரின் சிலைக்குத் தனியாக மரியாதையும் அங்கே உருவாக்கப்பட்டுள்ள பூங்கா மூலம் சிறப்பான பார்வையும் கிடைத்துள்ளது.

@ இப்போது நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் ஆளுநரின் நேரிடையான பார்வையில் பட்டு உள்ளே வருவதால் பணம் விளையாடுவது நிறுத்தப்பட்டுள்ளது. முன்பு இருந்ததை விட அழகப்பா பல்கலைக்கழகம் பல விசயங்களில் முன்னோடித் திட்டங்களில் கவனம் செலுத்துவதாக அங்கே பணிபுரியும் நண்பர் சொன்னார்.

12 comments:

  1. சூப்பர் படங்கள், திருச்சி ரயில் நிலையம், அந்த காலத்திலேயே முதல் பரிசு வாங்கியதாக நினைவு. நீங்களே பாரட்டுகிறீர்கள் என்றால் , அது நல்ல சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம். வடக்கில் இது மாதிரி எல்லாம் ஸ்டேஷன் பார்க்க முடியாது. தினமும் நடை பயிற்சி செய்ய முடிகிறது உங்களால் .. . கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் ( நான் முந்திக்கிட்டேன், நீங்கள் வழக்கமாக சொல்வது) - , ...தனியாக இருப்பதால் , அதுவும் வெளியில் சாப்பிடுவதை வெறுப்பதால் , சமயல் செய்து , சுத்தம் செய்து , ....அதிலேயே நிறைய நேரம் போகிறது ... ஒரு சைக்கிள் வாங்கினேன் , தற்சமயம் அதை நன்பனிடம் கொடுத்திருக்கிறேன்... In fact I am diabetic , I should do some exercise or walking or jogging regularly – but what ever spare time available, I spend on பூஜை , பஜனை போன்ற சத் காரியங்களில்

    ReplyDelete
    Replies
    1. சுந்தர் திருச்சி ரயில் நிலையத்தைப் பார்க்கும் போது வடிவேல் சொன்ன தலைசீவி பவுடர் அடித்து முகத்தைப் பார்ப்பது போல அத்தனை சுத்தமாக வைத்திருக்கின்றார்கள். இத்தனை ஆயிரம் மனிதர்கள் மணிக்கொருமுறை புழங்கிக் கொண்டேயிருக்கும் இது போன்ற சூழலில் இப்படி வைத்திருப்பது அசாத்தியமான சாதனை. ஆடிட்டர் மந்திரியாக வந்தபின்பு ரயில்வே துறையில் அசாத்தியமான மாற்றங்கள். பாஜக வின் முக்கியமான சாதனையிது.

      Delete
  2. கொஞ்சம் அரசியல் ,..... 100 க்கும் அதிகமான ஸ்டேஷன்களில் , இலவச wifi வசதி உள்ளது , கேரளாவில் ஒரு சுமை தூக்கும் கூலி , கிடைத்த நேரத்தில் wifi மூலம், மொபைல் போனில் , வேண்டியதை படித்து, சர்விஸ் கமிசன் தேர்வு எழுதி, நல்ல வேலை கிடைத்துள்ளது . நிறைய வேக ரயில்கள் , நல்ல இருக்கைகள், பெரிய கண்ணாடி ..இப்படி எத்தனையோ வசதிகள் , ஆனால் மக்களோ , சினிமா தியேட்டரில் சோபா இருக்கைகளை பிளேடால் கிழிப்பது போல், புதிய ரயில்களை உடைத்து , தாக்கி , முதல் நாளே தங்கள் முத்திரையை பதித்து சாதனை செய்த்திருக்கிறார்கள் . இந்த மந்திரி ( கோயல்) , கிட்ட தட்ட 18000 கிராமங்கள் /ஊர்களுக்கு மின் இணைப்பு செய்து சாதனை செய்தார். LED பல்புகள் மில்லியன் கணக்கில் வாங்கி இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்தார், கிட்ட தட்ட உற்பத்தியில் தட்டு பாடு இல்லாமல் பார்த்து கொண்டார். .. ஆனால் தற்சமயம் , அவர் நிறைய காண்பதில்லை , எதோ நடக்கிறது , மோடிக்கு தான் தெரியும் .

    ReplyDelete
    Replies
    1. மோடியின் அரசியல் என்பது கலைஞர் அரசியலைப் போன்றது. அதாவது எழவு வீட்டில் இருந்தாலும் நானே பிணம். திருமணம் வீடு என்றால் நானே மணமகன். சிம்பிள்.

      Delete
    2. ஜோதிஜி! மோடியைத் திட்ட வேண்டுமென்றால் நேரடியாகவே திட்டிவிடலாமே! கருணாநிதியோடு ஒப்பிட்டு எதற்காகச் சிறுமைப் படுத்துகிறீர்கள்? கருணாநிதியுடைய அரசியல் பாணி தனித்துவமானது. வாரிசுகளாலும், 40, 50 ஆண்டுகள் அவருடன் கூடவே இருந்தவர்களாலும் கூடக் காப்பியடிக்க முடியாத மனோன்மணீயக் குடிலன் மாதிரியானது!

      நரேந்திர மோடி தன்னை எங்குமே முன்னிலைப்படுத்திக் கொள்கிற மாதிரி 2002 முதலிருந்தே கவனித்து வருவதில் எங்குமே நான் பார்த்ததில்லை. அவருடைய அரசியல் எதிரிகளே அவருக்கான விளம்பரத்தைச் செய்தார்கள் இன்றும் செய்து வருகிறார்கள்..

      Delete
    3. தலைவரே எனக்கும் மோடி ஆட்சி பிடிக்கும். நடைமுறை மாற்றங்களை மனதார வரவேற்கின்றேன். அவரின் செயல்பாடுகள் ஒகே. ஆனால் வெளியுறவுத் துறை அமைச்சர் செய்ய வேண்டிய வேலைகளை இவர் செய்வதும், ஏற்கனவே சுஷ்மா ஸ்வராஜ் இல்லாமல் உலக நாடுகள் முழுவதும் சுற்று வந்து படம் காட்டியதும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்போது ஜெய்சங்கர் கூட நொந்து போய் தான உள்ளே இருப்பார். ஒரு வேளை பாஜக கட்சியில் சேர்ந்தால் நீங்க சொன்ன மாதிரி கண்களை மூடிக் கொண்டு ஆதரிப்பேன்.

      Delete
    4. ஒரு விஷயத்தை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் கண்ணை மூடிக் கொண்டு செய்வேன் என்பது என்ன மாதிரியான நிலைப்பாடு? எனக்குப் புரியவில்லை.

      நரேந்திர மோடி அல்லது இங்கு எவருமே விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதற்காக? சுஷ்மா ஸ்வராஜ் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்திருந்தால் என்ன சாதித்திருப்பார்? இங்கே முடிவு செய்கிற அதிகாரம் பிரதமரிடம், அவர் பயணம் செய்ததால் இந்தியாவின் மதிப்பு சர்வதேச அரங்கில் உயர்ந்திருக்கிறதே தவிர, குறையவில்லை என்பதை வைத்தல்லவா பயணங்களை விமரிசிக்க வேண்டும்.

      அடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்! அவர் எதற்காக நொந்துபோய்க்கிடக்க வேண்டும்? ஜெய்சங்கருடைய சுற்றுப்பயணங்களை, யூட்யூப் தளத்தில் MEA நமது வெளியுறவுத்துறையின் சேனல் அது, போய்ப் பாருங்கள்! அமைச்சரான இந்த ஐந்து மாதங்களில் எங்கெங்கெல்லாம் பயணம் செய்திருக்கிறார் என்ன பேசியிருக்கிறார் என்ற விவரங்கள் கிடைக்கும்.

      Delete
    5. கடைசியாக ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். ஒரு பிரதமர் இந்த அளவுக்கு தன்னை முன்னிலை படுத்திக் கொள்ள வேண்டுமா? தான் செய்யும் காரியங்கள், நிகழ்வுகள் அனைத்தையும் புகைப்படக்காரரை பக்கத்தில் வைத்துக் கொண்டு உலகத்திற்கு ஒவ்வொரு நிமிடமும் காட்டிக் கொண்டேயிருக்க வேண்டுமா? மற்ற நாட்டு அரசியல்வாதிகள் இப்படித்தான் இருக்கின்றார்களா? இது என்ன மாதிரியான அரசியல்? ஏன் இப்படி? உளவியல் காரணமா? இல்லை தனிப்பட்ட விருப்பம் சார்ந்ததா?

      Delete
  3. எதற்கெடுத்தாலும் மோடியைக் குறிப்பிடுவதே சரியில்லை என்று தோன்று கிறது

    ReplyDelete
    Replies
    1. சந்தைப் பொருளாதாரத்தில் விளம்பரம் மிக மிக முக்கியம். அந்த விளம்பரங்களை நன்கு உணர்ந்தவர் மோடி.

      Delete
  4. ஜோதிஜி நல்ல இனிமையான நினைவுகள் இல்லையா ஊருக்குப் போனது குறிப்பாகக் கல்லூரிக்குள் சென்று வந்தது.

    திருச்சி ரயில் நிலையம் ரொம்பவே சுத்தமாக இருக்கிறது. இங்கு பங்களூரிலும் ரயில் நிலையத்தில் பெருக்கிக் கொண்டே இருக்கிறார்கள். கழிவறைகளையும் அவ்வப்போது சுத்தப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள் பணியாளர்கள் எப்போதும் இருக்கிறார்கள். பொதுவான ரிட்டையரிங்க் ரூமில் ராத்திரி படுப்பவர்கள் சேரில் உட்கார்ந்து கொண்டே தூங்குபவர்கள் அங்கேயே உணவு உண்டு குப்பை போடுகிறார்கள். மக்கள் இன்னும் மாறவேண்டும் சுத்தம் செய்பவர்கள் காலையில் வந்து திட்டிக் கொண்டே ஜன்னலில் இருக்கும் தண்ணீர் குப்பிகளை எல்லாம் எடுத்து, பெண்கள் பூவெல்லாம் அங்கேயே போட்டிருப்பார்கள் எல்லாம் எடுத்து, படுத்து தூங்குபவர்களைத் தட்டி எழுப்பி பெருக்கி சுத்தம் செய்துவிட்டுச் சொல்லிவ்ட்டுப் போவார்கள் இங்கே குப்பை போடாதீங்க குப்பைத் தொட்டியில போடுங்கன்னு...மக்கள்????? மீண்டும் குப்பை...போடத் தொடங்குவார்கல். ஒவ்வொருமுறை சென்னை வரும் போதும் பார்க்கும் காட்சி இது..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் ஆச்சரியம் தான். நம் மக்கள் கோவிலுக்குச் சென்றால் கூட அங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதனை உணர மறுப்பவர்கள். ரயில் நிலையம் நீங்க சொன்ன மாதிரி இந்த அளவுக்கு பராமரிப்பது 100 க்கு 200 மதிப்பெண்கள் கொடுப்பேன்.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.