அஸ்திவாரம்

Saturday, October 26, 2019

கணவன் என்ற பதவி

இயற்கையாகவே வரம் வாங்கி வந்து வாழ்கின்றவர்களின் வாழ்க்கை எப்படியிருக்கும் அல்லது வரத்தை நாமே முயன்று பெற்றுக் கொண்டு வாழும் வாழ்க்கை எப்படியிருக்கும்?

பண்டிகை சமயங்களில் ஒரு வாரத்திற்கு முன்பே மொத்த சாமான்களையும் வாங்கிக் கொடுத்து விட வேண்டும். பட்டியலில் எழுதச் சொல்லிவிட வேண்டும். "நான் சொன்னேன். நீங்கள் மறந்து விட்டீர்கள்?" என்ற பஞ்சாயத்து தவிர்க்க இது உதவும். கடைக்குச் செல்லும் போது கையில் கட்டாயம் அலைபேசியை எடுத்துச் சொல்ல வேண்டும். கடைக்காரர் சாமான்கள் போட்டு முடித்ததும் மீண்டும் ஒரு முறை அழைத்துக் கேட்க வேண்டும். சொல்லிவைத்தாற்போல அப்போது சில சாமான்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பார்.

சிரித்துக் கொண்டே சேர்த்துக் கொண்டு அதனையும் சேர்த்து வாங்கி வந்து விட வேண்டும். வீட்டுக்கு வந்தவுடன் மீண்டும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு நாளைக்கு முன்பே பூ, பூஜை சாமான்கள், மாவிலை, தோரணம் கட்ட உதவும் சாமான்கள் என்று எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் சேகரித்து வீட்டுக்குள் கொண்டு வந்து சேர்த்து விட வேண்டும். பண்டிகை கால சிறப்புப் பணம் என்று புதிய நூறு ரூபாயாக மாற்றி உன் கையால் மகள்களுக்குக் கொடுத்து விடு என்று கொடுத்து விட வேண்டும்.

சரி? இப்படியெல்லாம் ரிஸ்க் எடுப்பதால் என்ன ஆகும்?

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது உங்களுக்கு எந்த வேலையையும் மனைவியும் மகள்களும் கொடுக்க மாட்டார்கள். நீங்க கம்யூட்டர போய் நோண்டுங்கள் என்று கட்டம் கட்டி ஒதுக்கி வைத்து விடுவார்கள். கட்டாயம் ஒரு சாமிப்பாட்டை ஒலிக்க வைத்து விட வேண்டும்.

சாமி விளக்கேற்றும் போது அழைப்பு வரும். சாம்பிராணி போட்டுக் குளிர குளிர வீடு முழுக்க பரவும் போது அவர்கள் பின்னால் பவ்யமாகச் செல்ல வேண்டும். மகள்கள் மிரட்டுவார்கள். அவர்களை கட்சித் தாவல் தடைச் சட்டம் ஒன்றும் செய்யாது. காரணம் சபாநாயகர் அனுசரிப்பு பரிபூரணமாக இருக்கும். அவர்களையும் பக்கவாட்டில் அனுசரித்துக் கொள்ள வேண்டும். அரை மணி நேரத்தில் காஷ்மீர் பிரச்சனையை விட அதிக பிரச்சனைகள் உள்ளே நடந்து கொண்டிருக்கும். வாயை மூடிக் கொண்டு உள்ளே நடக்கும் எந்த பஞ்சாயத்துக்களையும் கண்டு கொள்ளாமல் அமைதி காக்க வேண்டும்.

காரணம் இப்போது சிறப்புச் சட்ட அதிகாரத்தின்படி குடும்பத்தின் ஒவ்வொரு முடிவும் அட்மின் எடுத்துக் கொண்டிருப்பார். ஒருவர் மட்டும் உங்களைத் தொடர்ந்து கண்காணிப்பு பட்டியலில் வைத்திருப்பார். சாமி கும்பிடுவதற்கு முன்பு சமையலறை பக்கம் சென்று ஏதாவது எடுக்க முயல்கின்றோமோ? என்று பார்த்து உளவு சொல்லத் தயாராக இருப்பார்.

சரி? இப்படியெல்லாம் இருந்தால் உங்களுக்குக் கிடைக்கும் பலன் என்ன?

உங்கள் இருக்கையைத் தேடி உண்பதற்கு ஒவ்வொன்றாக வந்து கொண்டேயிருக்கும். 😏



14 comments:

  1. வீட்டு நடப்பைக் கூறிய விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. டம்மி பீஸ் என்ற வார்த்தை ஒவ்வொரு குடும்பத் தலைவனுக்கும் 50 வயதுக்கு மேல் கிடைக்கும் பட்டம்.

      Delete
  2. கொடுத்து வைத்த மகராசன்...!

    ReplyDelete
    Replies
    1. மனமே மயங்காதே. மனமே காரணம்.

      Delete
  3. என் வீடு மதுரை மீனாட்சி வீடு எல்லாம் அவள் பார்த்துக் கொள்வாள்

    ReplyDelete
    Replies
    1. நிம்மதி உங்கள் சாய்ஸ்.

      Delete
  4. மகிழ்ச்சி. தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தீபாவளி வாழ்த்துகள்

      Delete
  5. இனிய தீபாவளி வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
    Replies
    1. தீபாவளி வாழ்த்துகள்

      Delete
  6. ஹா...   ஹா...ஹா... சுவையான வர்ணணை.

    ReplyDelete
  7. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றியும் பிரியங்களும் சுந்தர். வாழ்த்துகள்.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.