" உங்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக தேர்ந்தெடுத்து உள்ளோம். தங்கள் தகுதியின் அடிப்படையில் அதிகபட்ச சம்பளம் கீழ் கண்டவாறு வழங்கப்படும். தங்களது கல்வித் தகுதி சான்றிதழ்களுடன் இந்த தேதியில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். சம்பளம் பன்னாட்டு சட்ட திட்ட அடிப்படையின் கீழ் தங்களுக்கு வழங்கப்படும்."
இதற்கு கீழே கண்களுக்குத் தெரியாத சிறிய எழுத்துக்களில் பஞ்சப்படி பயணப் படி என்று நொந்தபடியாய் எழுதி நோகாமல் நோம்பி கொண்டாடியிருந்தார்கள்.
கருமாதி சடங்குக்கு அச்சடிக்கப்படும் அட்டை யைப் போன்ற ஒன்றை என்னுடைய அலுவலகத் திற்கே கொண்டு வந்த முருகேசு கொடுத்து விட்டு என் மூஞ்சியைப் பார்த்துக் கொண்டுருந்தான். எனக்கே சற்று குழப்பாக இருந்தது. என்னடா? நமக்குத் தெரியாமல் திருப்பூரில் ரிலையன்ஸ் ஏற்றுமதி நிறுவனம் ஆரம்பித்து உள்ளார்களா?
ஏற்கனவே ஒரு ரிலையன்ஸ் என்ற பெயரில் நிறுவனம் உண்டு. அதுவும் அந்த பெயர் முக்கியமாக சாயப்பட்டறைக்கு அல்லவா வைத்து இருந்தார்கள். அது வும் உள்ளூர் வாசிகள். ரொம்பவே குழம்பிப் போய் அதில் உள்ள முகவரியை முழுமையாக படித்த போது அதன் கேப்மாரித்தனம் புரிந்தது.
அமைச்சர் ப சிதம்பரம் ஒரு கூட்டத்தில் பேசும் போது " வேலையில்லை என்று சொல்லாதீர்கள். திருப்பூரில் சென்று பாருங்கள். எங்கு பார்த்தாலும் ஆட்கள் தேவை என்ற அட்டை கட்டி தொங்க விட்டுக் கொண்டுருக்கிறார்கள் " என்றார். அவரைப் பொறுத்தவரையில் உள்ளூர் பகுதியில் வேலை வாய்ப்புகளை உரு வாக்குவதை விட இப்படி துரத்தி அடித்து அனுப்பி விட்டால் போதுமானது என்று யோசிக்கிறார் போலும். அவர் சொன்னதைப் போலவே இந்த அட்டைக் கலாச்சாரம் இங்கு அதிகமாகவே உண்டு.
இங்குள்ள காசு புழக்கத்தை பார்த்து விட்டு, படிக்காத தற்குறிகள் கூட ஜெயித் துக் கொண்டுருப்பதை கண்டு கொண்ட போது பல முறை யோசித்தது உண்டு. ஏன் பெரிய நிறுவனங்கள் எவருமே திருப்பூருக்குள் காலடி வைக்காமல் இருக் கிறார்கள். டாடா,பிர்லா,அம்பானி, கோயங்கா,தாப்பர்,மபத்லால் போன்ற அத்தனை பேர்களுக்கும் ஆடைத் தொழிலில் நல்ல அனுபவம் இருப்பவர்கள். தலைமுறைகள் தாண்டியும் இன்றும் ஜெயித்துக் கொண்டுருப்பவர்கள். ஆனால் எவருமே திருப்பூர் பக்கம் காலடி வைத்தது இல்லை.
இவர்களுக்கு கர்நாடக மாநில தாவண்கெரேவில் இருந்து தொடங்கி குஜராத், மகாராஷ்டிரம் டெல்லி வரைக்கும் மிகப் பெரிய ஆடைத் தொழில் நிறுவ னங்கள் உண்டு. அத்தனையும் பக்கா வடிவமைப்பு. மேல்மட்ட நிர்வாகம் முதல் அடிம்ட்ட பணியாளர்கள் வரைக்கும்
அனுபவத்திற்கும் தகுதிக்கும் மதிப்பளிப்பவர்கள். அறைகுறையாய் ஞானம் பெற்றவர்கள் உள்ளே ஜல்லியடிக்க முடியாது. உள்ளுர் விற்பனை முதல் உலகளாவிய வியாபாரம் வரைக்கும் உள்ள திட்டமிடுதலுடன் கூடிய வியா பாரம் செய்து கொண்டுருப்பவர்கள்.
முக்கியமாக இவர்களின் லாப சதவிகிதமென்பது என்றுமே மூன்று இலக்க சதவிகிதமாகத்தான் இருக்கும். வெறுமனே ஐந்து பத்து என்றால் காத தூரம் ஓடிவிடுவார்கள்.
பி டெக் முதல் பேஷன் டிசைனிங் வரைக்கும் படித்த அத்தனை மேதாவிகளும் பெரும்பாலும் பெங்களூர், மும்பை,டெல்லி பக்கம் சென்று விடுகிறார்கள். அங்கிருந்தபடியே திருப்பூருக்குத் தான் ஓப்பந்தங்கள் வந்து சேரும். ஆனால் நிர்வாகம் முழுக்க அங்கிருந்தபடியே தான் செய்வார்கள். தரம் பார்ப்பவர்கள் மட்டுமே இங்கு வந்து போய்க் கொண்டுருப்பார்கள். அவர்களும் வார இறுதியில் ஓட்டமாய் ஓடி விடுவார்கள்.
இங்குள்ள ஒரே தாரக மந்திரம்.
" நீ உழைத்துக் கொண்டேயிரு. இரவு பகல் பாராமல் உன்னால் உழைக்க முடியுமா? முழு இரவும் முழித்து வேலை பார்த்து விட்டு மறுநாள் டாண் என்று காலை எட்டு மணிக்கு வந்து நிற்க முடியுமா? நீ தான் முதல் தகுதி யாளன். நாளை செத்துவிடப் போகிறாயா? நல்லது. உன் தம்பி யைக் கொண்டு வந்து சேர்த்து விட்டு செத்துப் போ. நிர்வாக அமைப்பா? அது எதற்கு? சொன்னதைச் செய்? சட்ட திட்டங்கள்? அவர்கள் கிடக்கிறார்கள் பன்னாடைகள். அவர்கள் வந்து இறங்கும் போது பார்த்துக் கொள்ளலாம்."
பணம்...பணம்...பணம்...
பணம் மட்டுமே குறி.வீட்டின் உள்ளே ஐந்து கார்கள் பயன்படுத்தாமல் நின்றா லும் நேற்று எந்த கார் சந்தையில் வந்துள்ளது என்ற ஆர்வம் தான் அதிகமாக இருக்கிறது.
15 வருடத்தில் ஒவ்வொருவரும் பெற்ற பணம் என்பது தமிழ்நாட்டில வேறெந்த மாவட்ட மக்களும் பெற முடியாத ஒன்று. சேர்த்த பணம் இன்னும் மூணு தலை முறைக்கு போதுமானது. ஆனாலும் வெளியே கொடுக்கும் காசோலை கழிவு துடைக்கக்கூட பயன்பட முடியாத காகிதமாய் இருக்கிறது.
தொடக்கத்தில் மானம் பெரிது என்று வாழ்ந்த பெரியவர்கள் மறைந்து இன்று பணத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லலாம் என்ற புதிய தலைமுறை பீடு நடை போட்டுக் கொண்டுருக்கிறது.
ஒவ்வொரு குழிபறித்தலையும் தாண்டி முன்னேறிக் கொண்டே இருக்க வேண் டும். பணம் என்பது மாயப் பேய் மட்டுமல்ல. மயக்கும் பிசாசும் கூட. வரும் வரைக்கும் ஆட்டம் காட்டும்.
வந்து சிநேகமாக பழகிவிட்டால் பணம் படைத்தவர்கள் செய்யும் சின்னப்புத்தி களுக்குக்கூட சமூகம் சிறப்பாய் பெயர் சூட்டும். இப்படித்தான் ஒவ்வொருவரும் இன்று வரை இந்த தொழிலை குடிசைச் தொழில் போல நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
பணத்திற்கு அப்பாலும் ஒரு வாழ்க்கை உண்டு என்று வாழ நினைப்பவர்க ளுக்கு நகரமென்பது ஒரு வகையில் நரகம் தான்.
பணத்தை சாக்கு பையில் வைத்துக் கொண்டு கொட்டிக் கொண்டே இருக்க வேண்டும். கொட்டினாலும் ஒவ்வொரு நிமிடமும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும். மிகப் பெரிய தேசிய அளவில் உள்ள வளர்ந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட லாபத்தில் கண்ணாய் இருப்பார்கள்,
ஆண்டு அறிக்கையில் எண்கள் மாறி வந்தாலே பிரச்சனை என்று தெரிந் தாலோ குறிப்பிட்ட பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டார்கள். அப்படியே ஒப்பந்தங்கள் கையில் இருந்தாலும் அதை மற்றவர்கள் மூலம் செய்து அனுப்பத்தான் பார்க்கிறார்கள். துணி சந்தைக்கும், ஆய்த்த ஆடை உலகத்திற்கும் ரொம்பவே வித்யாசம்.
ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி கூட நிறுவனம் தொடங்கிப் பார்த்தார். கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த கூட சில ஆண்டுகள் வெற்றிகரமாக அலுவலகம் மூலமாக நடத்திப் பார்த்தார். ம்ம்ம்....நகர்த்த முடியவில்லை. மண் ராசியா இல்லை வேறு எதுவும் தோஷமா? ஒன்றும் புரியவில்லை.
ஆனால் இந்தியாவில் உள்ள அத்தனை முக்கிய பிரபல்யத்திற்கும் இங்கு ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. காஷ்மீர் முதல் கன்யா குமரி வரைக்கும் குலாம் நபி ஆசாத் முதல் இன்றைய தமிழ் நாட்டு பிரபல்யங் கள் வரைக்கும் அவர்களின் " உழைத்த " பணம் இங்கு பல வகையில் உழைத்துக் கொண்டுருக்கிறது.
இது அந்த நடிகரின் பினாமி நிறுவனம், இது இந்த அரசியல்வாதியின் நிறுவனம்.
இதில் அவருக்கும் பங்குண்டு என்று போகிற போக்கில் சொல்லிக் கொண்டே
செல்வார்கள். சிலருக்கு குறிப்பிட்ட நபர்கள் வந்து இறங்கும் போது நடு இரவு தரிசனம் கிடைக்கிறது. பலருக்கும் பார்த்தவர்கள் சொல்லும் வெறும் வார்த்தைகளில் நம்பக்கூடியதாக இருக்கிறது.
வாழப்பாடி ஒருவரை வளர்த்தார். வாய்தா பார்ட்டி மற்றொருவரை உருவாக்கி னார். முதல் கட்ட ஆட்சியின் போது வந்து இறங்கிய பணமும், கோட்டையில் இருந்து போக்குவரத்தை கவனிக்க சொல்ல அவரின் போக்குவரத்து கோபி வரைக்கும் பாசனமாய் நீண்டது. அவரால் வளர்ந்தவர்கள் இன்று முதன்மை இடத்தில் இருப்பவர்கள். அன்றைய ஒரு நாள் மூதலீடு உயிர் இருக்கும் வரைக்கும் காப்பாற்றிக் கொண்டே இருக்கும்.
முந்தைய ஆட்சியில் மேலே நெடுஞ்சாலையுடன் இலவச இணைப்பாக பல துறைகளை வைத்து இருந்தவர். ஈழத்துக்கு தலைமையேற்றுச் சென்றவர். வெளியே விட்ட பணத்தில் முக்கால் வாசி கோவை மாவட்டத்தில் தான் புழங்கியது. வட்டி வந்து சேர வேண்டும். இல்லாவிட்டால் இடத்தின் பத்திரங்கள் பெயர் மாறி விடும்.
பஞ்சாலை முன்னேற்றத் திட்டங்கள் என்று பஞ்சசை பராரியாக தவித்துக் கொண்டுருக்கும் நிறுவனங்களை அமைச்சர் உள் வட்டத்திற்குள் கொண்டு வந்து கொண்டுருக்கிறார். உங்கள் நிறுவனம் வங்கி கடன் சுமையில் மூழ்கிக் கொண்டுருக்கிறதா?
இது தான் டீல். இங்கே வா. டீலா? நோ டீலா? அடுத்த நிதி வாரிசு ராஜ நடை போட்டு சிகரத்தில் ஏறிக் கொண்டுருக்கிறார்.
இவர்கள் மேல் தவறில்லை. மக்கள் ரொம்பவே மாறிவிட்டார்கள். எங்கள் ஊரில் இத்தனை பேர்கள். மொத்தமாக ஒரு ரேட் பேசிக்கலாம். தலைவரிடம் கொடுத்துடுங்க. நாங்க பிரிச்சுக்கிறோம். அப்புறம் எப்போதும் போல கிடா வெட்டு பிரியாணி அது தனியா நடத்திடுங்க. சிந்தமா சிதறமா வந்து குத்திட்டு வந்துடுறோம். அரிசி விலை உயருதோ இல்லையோ ஓட்டு விலை ரொம்பவே ஒசந்து போச்சு. மக்களுக்கு வழி காட்டியவர்கள் இப்போது முழி பிதுங்கிக் கொண்டுருக்கிறார்கள்.
இப்படித்தான் வாழ வேண்டும். இவ்வாறு தான் யோசிக்க வேண்டும் என்ற ஒரு நடுத்தர சமூக கட்டமைப்பு உருவாக்கி பல காலம் ஆகி விட்டது. உண்ண இலவசம். உடுக்க இலவசம். உறங்க இலவசம் என்று சொல்லிக் கொண்டே வருபவர்கள் நீ தேர்ந்தெடுக்கும் கல்லூரி படிப்பும் இலவசம்ன்னு எவரும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். இந்திய சரித்திரத்தில் மதுவை ஊற்றிக் கொடுப்பவர்களுக்கு காவல் காத்த பெருமை நம் தலைவர்களுக்குத் தான் சேரும்.
காரணம் சரியான முறையில் யோசிக்க கற்றுக் கொண்டால் கேள்வி கேட்ட ஆரம்பித்து விடுவீர்கள்? பள்ளி இறுதி வரைக்கும் வருபவர்கள் எத்தனை பேர்கள் கல்லூரி செல்கிறார்கள்? சென்றவர்களில் முறைப்படி தகுதியான வேலைக்கு எத்தனை பேர்களால் சென்றுவிட முடிகிறது?
சீனாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பே தொழிற்கல்வியில் கவனம் வைத்து வளர்த்த காரணங்களால் இன்று அத்தனை பேர்களுக்கும் வேலை வாய்ப்புகள் உருவாகி உலகை அச்சுறுத்திக் கொண்டுருக்கும் அத்தனை இறக்குமதிகளும் குடிசைத் தொழில் போலவே நடந்து கொண்டுருக்கிறது. இங்கு உள்ளுரிலும் வேலை வாய்ப்பில்லை. பிழைக்கப் போகும் இடங்களிலும் வாய்ப்புகளைத் தேடி அலைய வேண்டிய நிலைமை.
அதனால் தான் ஊர் விட்டு ஊர் சென்று பிழைக்க வேண்டிய சூழ்நிலையை முறைமுகமாக உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்,
திருப்பூரில் இருக்கிறாயா? ஓட்டுப் போடும் சமயத்தில் வண்டி அனுப்புகி றோம். வந்து சேர்.. உள்ளேயிருந்தால் தான் பிரச்சனை. ஊரை விட்டு வெளியேறி விட்டால் அத்தனையும் மறந்து விடுவாய்.
தொழிற் நகரங்களில் வந்து இறங்குபவர்களுக்கு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே நேரம் சரியாக இருக்கும். அப்படித்தான் வந்து இறங்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலின் போது ஒவ்வொரு மாவட்ட மக்கள் வசிக்கும் இடங்கள் பார்த்து வரிசையாக பேரூந்துகள் வந்து நின்று அழைத்துச் செல்லும் ஜனநாயக அமைப்பை நீங்கள் பாராட்டா விட்டால் நீங்கள் எதிரிக் கட்சிக்காரர் என்று அர்த்தம்.
திருப்பூர் பழைய பேரூந்து நிலையத்தில் வந்து இறங்கினால் புரியும். இனி அட்டை கட்ட இடமே இல்லை என்கிற அளவிற்கு எங்கெங்கு காணிணும் அட்டையடா என்று தொங்கிக் கொண்டுருக்கும்.
ஓவர்லாக் பேட்லாக் டைலர் தேவை. கைமடிக்க, பிசிர் வெட்ட ஆட்கள் தேவை, செக்கிங் பெண்கள் தேவை. டையிங் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை. தங்குமிடம் உணவு இலவசம். வண்டி ஓட்டுநர் தொடங்கி மீட்டர் வட்டிக்கு கொடுத்து வராக்கடன்கள் வசூலிக்க தாட்டியான இளைஞர் பட்டாளம் வரைக்கும் இங்கு தேவை அதிகமாகத் தான் இருக்கிறது.
தொடக்கத்தில் இந்த வேலை வாய்ப்புகளைப் பார்த்து புற்றீசல் போல் நிறைய சேவை மையங்கள் உருவானது. அதிகாலையில் வந்து இறங்குபவர்களை கப்பென்று பிள்ளைபிடிப்பவர் போல கவர்ந்து கரைத்து சம்பாரித்துக் கொண்டு இருந்தார்கள்.
சேர்க்க ஒரு காசு. சேர்க்கும் இடத்தில் ஒரு காசு. இதுவே ஒரு சமயத்தில் ஒரு குழுவை வைத்துக் கொண்டு உள்ளே வெளியே என்று ஆடு புலி ஆட்டம் காட்டிக் கொண்டு பல நிறுவனங்களை கவிழ்த்துக் கொண்டுருந்தார்கள், இவையெல்லாம் தெரிந்தும் முருகேசு பொண்டாட்டிக்கு பயந்து போக்கு காட்ட
முடியாமல் போக வேண்டியதாகி விட்டது.
பாதியில் விட்ட படிப்பையும் தொடர முடியாமல் பெண் வேட்டையில் திரிந்து கொண்டுருந்தவனை பொட்டலமாய் கட்டி இங்கே அனுப்பிவிட்டார்கள். ஊரில் சுற்றிக்கொண்டுருந்த மச்சினன் தினந்தந்தியில் வந்த நடிகை படத்திற்கு பக்கத்தில வந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தைப் பார்த்து எழுதி போட்டு இருக்க அழைப்பு அட்டை சென்று விட்டது.
அமெரிக்கா விசா கிடைத்த சந்தோஷத்தில் கேட்ட தொடக்க தொகையையும் மெனக்கெட்டு மணியாடர் மூலமாக அனுப்பியாகி விட்டது. அதற்குப் பிறகு வந்தது தான் இந்த நேர்முக அழைப்பு அட்டை.
மச்சான் திருப்பூரில் இருக்க குடும்பத் தினர் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப் பது போல் ஒரு சுபயோக சுப தினத்தில் பையனை ஏற்றி அனுப்பி வைத்து விட் டார்கள். ராப்பகலா வேலைப்பார்த்துக் கொண்டுருப்பவனுக்கு பொண்டாட்டி கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல் என்னை தேடி வந்து விட்டான். அதில் உள்ள முகவரியைப் பார்த்து விட்டு கிளம்புவதற்கு முன்பே முருகேசிடம் சொன்னேன்.
"இது டூபாக்கூர் பார்டி. நான் வந்தால் பிரச்சனையாகிவிடும். நீயே போய் பேசு. அப்புறம் ஒம் பொண்டாட்டி என்னோட சண்டை வந்து நிற்கும்."
விதி யாரை விட்டது. அதற்குள் அவன் பொண்டாட்டியிடம் இருந்து அழைப்பு வந்தது.
"அண்ணா நல்ல கம்பெனி போலிருக்கு. சம்பளம் பத்தாயிரத்திற்கு மேல் இருக்கும் போல. நீங்க தான் எப்படியாவது சேர்த்து விட வேண்டும்."
"ஏம்மா நான் வேண்டுமென்றால் வேறு நல்ல இடத்தில் சேர்த்து விடுகிறேனே. ஏன் ஆயிரம் ரூபாயைக் கொண்டு போய் கட்ட வேண்டும்?"
"அடப் போங்கண்ணா. மொத மாச சம்பளமே பத்தாயிரம்? " பட்டென்று பதில் வந்தது.
"ஏம்மா பத்தாவது படித்து முடித்து எந்த அனுபவமும் இல்லாமல் ஊர் மேய்ந்து கொண்டுருந்தவனுக்கு எந்த கிறுக்கன் பத்தாயிரம் போட்டு கொடுப்பான். ஒரு வேளை ரிலையன்ஸ் நிறுவனமே இருந்தாலும் அவர்கள் எதிர்பார்க்கும் அனுபவம் இல்லாவிட்டால் கழுத்தை பிடித்து தள்ளி விடமாட்டார்களா?"
தொலைபேசியில் பேசமுடியாமல் அடக்கிக் கொண்டு அவனை அழைதுக் கொண்டு சென்றேன்.
காரணம் ஊரில் மொத்த நபர்களும் என் பெயரைச் சொல்லி உசுப்பேத்தி வேறு அனுப்பி உள்ளார்கள். நான் தான் பொறாமைப்பட்டு கெடுத்து விட்டேன் என்று ஊர் முழுக்க தண்டோரா போட்டு நாஸ்தி செய்து விடுவார்கள் யோசித்தபடியே உடன் இருந்த அவன் மச்சினனையும் அழைத்துக் கொண்டு சென்றேன். சாந்தி திரையரங்கம் எதிரே மேல்மாடியில் அந்த நிறுவனம் இருந்தது.
பத்துக்கு பத்து அறையில் இரண்டு தடுப்புகள் வைத்து அந்த "பிரபல" வேலை வாய்ப்பு நிறுவனம் இருந்தது. வரவேற்பு அறை என்ற பெயருக்கு இருந்த லெக்கடா நாற்காலி அமரும் போது தான் பார்த்தேன். அம்பது பேர்கள் வரிசை கட்டி பணம் கட்டிக் கொண்டு இருந்தார்கள். எவரும் எந்த கேள்வியும் கேட்க வில்லை. எங்கள் முறை வந்தது. முருகேசு கேள்வி எதும் கேட்காமல் மீதி
பணத்தை கொடுக்க முயற்சிக்க அவனிடம் இருந்து பிடுங்கி வைத்துக் கொண்டு கேட்டேன்.
"எந்த கம்பெனின்னு தெரிஞ்சுக்கலாமா?"
"ரிலையன்ஸ் கம்பெனிங்க"
"எந்த இடத்தில இருக்குதுங்க?"
"பின்னால் சொல்வோம்."
"எப்ப சொல்வீங்க?"
"நீங்கள் பணம் கட்டி ஊருக்குச் சென்றவுடன் கடிதம் அனுப்புவோம்."
என்னால் பொறுமையாய் தொடர முடியவில்லை.
"ஏம்மா ரிலையன்ஸ் ங்றது திருப்பூர்ல ஏதும் இல்லையே?"
அப்போது தான் அந்த பெண் என்னைப் பற்றி விசாரித்தார். முழுமையாக கேட்டு விட்டு பக்கத்து தடுப்பு அறையில் இருந்த முதலாளி காதில் ஓத அவர் எங்களை வெளியே வந்து மொத்தமாக அரவனைத்து வேறு பக்கம் அழைத்துச் சென்றார்.
நிறுவனத்தை விட்டு வெளியே வந்த போது எனக்கு ஆயிரம் ரூபாயை காப்பாற்றிய திருப்தி. முருகேசுக்கு பெரிய தலையிடி, மச்சினனுக்கு சாந்தி திரையரங்கத்தில் ஓடிக் கொண்டிருந்த படத்துக்கு பக்கத்தில் இருப்பரிடம் விசாரித்துக் கொண்டுருந்தான்.
இப்போது அத்தனையும் தலைகீழ்.
சமீபத்தில் தெருவோர மின்சார கம்பத்தில் தொங்கவிடப்பட்டுருந்த அட்டையில் படித்த விளம்பரம்.
"இந்த எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்க. முன் அனுபவம் இல்லாவிட்டாலும் பராவாயில்லை. நீங்கள் இருக்கும் இடத்தில் இருக்கும் இட்த்திற்கே வந்து அழைத்துச் செல்கிறோம். தரகர்கள் தவிர்கக வேண்டுகிறோம் எங்கள் நிறுவன முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்............................"