Showing posts with label ராகுல் காந்தி. Show all posts
Showing posts with label ராகுல் காந்தி. Show all posts

Wednesday, December 01, 2010

சுப்ரமணியசாமி போடும் புதிய குண்டுகள்

இங்கு நண்பர்கள் தொடர்ந்து படித்து வரும் தொடர்கதைக்கு ஒரு சின்ன தடங்கல். 

நண்பன் செந்தில் இந்தியாவைப் பற்றி எழுதிக் கொண்டுருப்பதை படித்த போது என்னுடைய பார்வையில் இந்தியாவைப் பற்றி ஒரு ஜனநாயக ஆப்பிரேசன் செய்ய வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் பெண்கள் குறித்த தொடரினால் எந்த பக்கமும் நான் விரும்பியபடி நகரமுடியவில்லை. 

இந்த தளத்தில் யூ டியுப் இணைப்பு மட்டும் கொடுக்காமல் (அந்த தொழில் நுட்பம் பற்றி தெரியாமல்) இருந்த எனக்கு என்னுடைய ஊர்ப்பங்காளி அமெரிக்காவில் இருந்து (அந்த இயற்கை காதலனைப் பற்றி வேறொரு சமயத்தில்(?) ) நிமிட நேரத்தில் புரிய வைத்து இந்த காணொளியை அனுப்பி வைத்தார். இதுவும் ஒரு வகையில் பெண்கள் என்பவர்கள் ஆணாதிக்கத்தை எதிர்த்து வரும் போது எந்த மாதிரியான விசயங்களை தாண்டி வர வேண்டும் ? எத்தனை விமர்சனங்கள் தாக்கும்? என்பதை உணர்த்தும்.

நான் முதல்முறையாக சுப்ரமணிசாமியின் ஆங்கிலப் பேச்சை கேட்கிறேன்.  உள்துறை அமைச்சர் ப சிதம்பரத்திற்குப் பிறகு இவரின் மொழி லாவகம் என்னை மிகவும் கவர்ந்தது. எவருக்கும் எளிதில் புரியும். ஆனால் கேட்கும் பொறுமை மட்டும் வேண்டும்.

என்னுடைய பார்வையில் அதிக புத்திசாலியும், மிகத் திறமையானவரும், சீனாவில் உள்ள ஆட்சியில் இருக்கும், இல்லாத முதல் தலைகளுடன் நேரிடையாக எப்போது வேண்டுமானாலும் உரையாடக்கூடியவருமான இந்த சூனா பானாவுக்கு மற்றொரு பெயரும் விபரம் புரிந்தவர்கள் கொடுப்பார்கள்.   

அரசியல் கோமாளி. 

ஆனால் என்னுடைய பார்வையில் ராஜீவ் காந்தி படுகொலையில் இவருக்கு தெரிந்த பல விசயங்களுக்கு, இவர் சம்மந்தப்பட்ட விசயங்களுக்காகவும் இன்னமும் என்னுடைய தேடலுக்கு முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது. 

தமிழ்நாட்டில் உள்ளவர்களை விஞ்ஞான திருடர்கள் என்று அழைப்பது போல இவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பின்னாலும் சூப்பர் விஞ்ஞான தியரி உண்டு. சிலது சிரிக்க வைக்கும். சிலது இருக்குமோ? என்று யோசிக்க வைக்கும். இவர் பலரின் மர்மங்களை புட்டு புட்டு வைப்பது போல இவரைப்பற்றி எவரும் புட்டு ஆப்பம் பணியாரம் என்று எதுவும் வைக்கமுடியாதபடி இவரின் வாழ்க்கை இருப்பது மிகுந்த ஆச்சரியமே?

இவரால் வளர்ந்தவர்களை விட அழிந்தவர்களும், கதறியவர்களும் அதிகம்.  

ஆனால் இவர் இங்கு பேசும் பல விசயங்கள் உங்களுக்கு புதிதாக இருக்கும். இந்த அளவிற்கு சோனியா காந்தி ராகுல் காந்தி குறித்து இது போன்ற விசயங்களை நான் எங்கும் படிக்கவில்லை. 

எளிய ஆங்கிலத்தில் பேசியுள்ள இந்த காணொளியைக் கேட்டுப் பாருங்கள்.   சில இடங்களில் பிறப்பு குறித்த அநாகரிக விசயத்தை நகைச்சுவையாக நகர்த்தி விட்டு நகர்ந்து போய்க் கொண்டேயிருக்கிறார்.  

வேறு சில புரிதல்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.  

இதில் உள்ள நம்பகத்தன்மை குறித்து நண்பர்கள் உருப்படியான விசயங்களை (விருப்பு வெறுப்புகளை சற்று கடிவாளம் போட்டுக் கொண்டு) பின்னூட்டத்தில் பகிர்ந்து கொண்டால் உங்களுக்கு என் வந்தனம்.

காரணம் வலைதளம் என்பது எதிர்மறை நியாயங்களின் பொக்கிஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.  இன்னும் எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு வந்து படிக்கும் நபருக்கு ஒவ்வொரு விசயங்களும் உங்களின் கருத்துக்களும் ஏதோவொரு விதமாக உதவக்கூடும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

இதில் விடுதலைப்புலிகள் குறித்து சில விசயங்கள் குறித்து பேசியுள்ளார்.  உலக நாடுகளில் இவருக்கு தெரியாத நபரும் இல்லை.  நுழைந்து வராத இடமும் இல்லை.   

ஆனால் எதுவும் இந்திய சாதாரண மக்களுக்கும் இந்தியாவிற்கும் பத்துக் காசுக்கு பய்ன்தராத வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கும் மேல்தட்டு வர்க்க மகாபுத்திசாலி.