டெசோ என்ற வாணவேடிக்கை விளையாட்டை தடைகள் பல கடந்து கலைஞர் வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டார்.
திரைப்பட விமர்சனத்தினைப் போலவே மனம் போன போக்கில் ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் கிழித்து தோரணம் கட்டி தொங்கவிட, கலைஞர் எப்போதும் போல தோல்விகளுடன், விமர்சனங்களுடன் வாழ பழகிவிட்ட காரணத்தினால் அவரை எதுவும் பாதித்ததாக தெரியவில்லை. எப்போதும் போல கலைஞருக்குப் பினனால் அமர்ந்து குறிப்பெழுதும் சண்முகநாதன் குறித்து வைத்திருப்பதை ஒரு வேளை கலைஞர் நெஞசுக்கு நீதிக்காக தயார் செய்து கொண்டிருக்கக்கூடும்.
ஆனால் எனக்கு மட்டும் இந்த கலைஞர் திரைக்கதை தயாரிப்பில் வெளிவந்த டெசோ என்ற வாணவேடிக்கை வைபோகத்தில் சில விசயங்களுக்குப் பினனால் உள்ள உண்மைகள் என்னவாக இருக்கும் தினந்தோறும் ஊடகத்தினை, செய்திதாள்களை பார்த்து குறிப்பெழுத தயாராக இருந்தேன்.
ஆனால் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்ற இருபக்க விசயங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தன. அப்போது தான் ப. சிதம்பரம் என்ற கதாநாயகன் கலைஞரை சந்திக்க மாலையில் கலைஞரிடமிருந்து அந்த அறிக்கையும் வந்தது. அதாவது வாழ்வுரிமை மாநாடு என்பதாக திடீர் பல்டி அறிக்கை வந்தது. மனதிற்குள் அப்பொழுதே மணியடித்தது. இதற்குப் பின்னால் மத்திய அரசாங்க்த்தின் ஏதோவொரு விளையாட்டு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேனே தவிர உண்மையான நிலவரங்களை புரிந்து கொள்ள முடியவில்லை.
இதில் உள்ள (May 17 Sivanthan CEPA) இயக்கம் சார்பாக திருமுருகன் பேசிய காணொளியைப் பார்த்த பிறகு தான் நான் சந்தேகப்பட்டது சரிதான் என்பதாக முடிவுக்கு வந்தேன்.
வெறுமனே ஈழம், ஈழத்தமிழர்கள், அவர்களின் அவலங்கள், இந்தியா ஒதுக்கிய நிதியில் இதுவரை கட்டிய 50 வீடுகள், தமிழர்கள் வாழுமிடங்களில் சிங்கள மயமாக்கம் என்பது போன்ற பல செய்திகளை தினந்தோறும் பார்த்துக் கொண்டே படித்துக் கொண்டே வந்தாலும் இதற்குப் பினனால் உள்ள உண்மையான நிலவரம் தான் என்ன? ஏன் இந்தியா இலங்கை விசயத்தில் இந்த கள்ள மௌனம் சாதிக்கின்றது? எந்த ஊடகமும் இதன் உண்மையான நிலவரத்தினை இதுவரை எடுத்துச் சொல்லவே இல்லை என்று தான் முடிவுக்கு தான் வர வேண்டியுள்ளது.
ஒரு வகையில் பார்க்கப் போனால் கலைஞரும் பகடைக்காய் தான்.
ஆட்டுவிப்பவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள்?.
இவரும் தன் பங்குக்கு மத்திய அரசின் ஆதரவு இந்த சமயத்தில் இல்லாவிட்டால் தன் குடும்ப கதி அதோகதி என்பதாக ஆடு ராமா ஆடு என்பதாக வயதான காலத்தில் நடிகர் போல் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து அவர் எழுதப் போகும் நெஞ்சுக்கு நீதியில் இந்த ஈழ அநீதி குறித்து எழுதுவாரா என்று தெரியவில்லை.?