அஸ்திவாரம்

Thursday, March 19, 2020

1000

2009 ஜூலை  2020 மார்ச்
10 வருடங்கள் 8 மாதங்கள்
1000 பதிவுகள்

10 வருடங்கள் - கற்றதும் பெற்றதும்


முன் கூட்டிய எச்சரிக்கை 

இது பத்து வருடக் கதை. மிக நீண்ட பதிவு. உங்களால் பத்து நிமிடங்களில் வாசிக்க முடியாது. ஆனால் உங்களை விருப்பத்துடன் வாசிக்க வைக்க முயன்றுள்ளேன்.

முன் தகவல் அறிக்கை

(இணையத்தில் தொடர்ந்து செயல்படுவதும், விட்டு விலகியிருப்பதும், வேடிக்கை மட்டும் பார்ப்பது என் வாடிக்கையாக இருப்பதால் அடுத்த முப்பது நாட்கள் எனக்கு வேடிக்கை நாட்கள். வீட்டில் "பெண்கள் நலக் கூட்டணி"க்கு அடுத்த அறுபது நாட்கள் கொண்டாட்ட நாட்கள்.  வீட்டுச் சபாநாயகரும் அப்பாடா என்று காலையில் தாமதமாக எழும் நாட்கள். இருதயம் பலகீனமானவர்கள், மதப்பற்று உள்ளவர்கள், அதி தீவிர கட்சி விசுவாசிகள், மோடி எதிர்ப்பாளர்கள் வாசிப்பதை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது)

நீண்ட நாட்களுக்குப் பிறகு மிக நீண்ட பதிவு)

1000 குறித்து?

மதுரைத் தமிழன், கிருஷ்ணமூர்த்தி, கிரி போன்றவர்கள் பல மடங்கு கடந்து சென்று கொண்டிருக்கின்றார்கள். துளசி டீச்சர் 2000 கடந்து சென்று இருக்க வாய்ப்புண்டு. நான் அவவ்ப்போது வனவாசம் சென்று விடுவதுண்டு. கடந்த பத்தாண்டுகளில் திரட்டி உலகம், திரட்டிகள் இல்லாத உலகம், ஃபேஸ்புக், ட்விட்டர், யூ டியூப் போன்ற தலைமுறைகளைக் கடந்து இன்னமும் எழுத வாய்ப்பு அமைந்துள்ளது. வீட்டுச் சபாநாயகரும், பெண்கள் நலக் கூட்டணியினரும் என்னை  அனுமதித்து உள்ளனர் என்று அர்த்தம். என் ஆர்வம் இன்னமும் மாறாமல் அப்படியே உள்ளது.

ஏன் எழுதுகிறேன்?

கணினி முன்னால் அமர்ந்திருக்க வேண்டிய பணியின் காரணமாகவும், தமிழ் தட்டெழுத்து நல்ல பயிற்சி இருப்பதாலும். 

எழுதும் காரணம்?

சமூக வலைதளங்களில், அன்றாடம் வாசிக்கும் செய்தித்தாளில், வார இதழ்களில் கிடைக்கும் செய்திகள் மூலம் ஏதோவொன்று உத்வேகத்தை உருவாக்கும்.  ஒரு வார்த்தை அல்லது வாசகம் கிடைக்கும். எண்ணங்கள் சிந்தனையில் தத்தளிக்கும். முழுமையாக எழுதி விட முடிகின்றது..

எழுதாமல் இருந்தால்?

ஒன்றும் ஆகாது. பொழுது வெட்டியாய் நகரும். வாசித்த, பார்த்த விசயங்கள் எனக்குள்ளே இருக்கும். மன உளைச்சல் உருவாகும். எழுதுவதால் இரவில் படுத்த சில நிமிடங்களில் தூங்கிவிட முடிகின்றது.



எழுதுவதால் பலன் உண்டா?

சில வருடங்களுக்கு முன்பு 13 வருடங்கள் கடனில் இருந்த நொடித்துப் போன நிலையில் இருந்த பெரிய நிறுவனத்தில் பணியில் சேர்ந்த போது அடுத்த ஆறு மாதங்களில் இத்தனை கோடிகளுக்கு நான் பொறுப்பு என்று சொல்லி மூன்று மாதங்களில் மொத்தமாக அதனை எடுத்துக் கொடுத்தேன். காரணம் தொழிலாளர்களின் உளவியலை நன்றாகப் புரிந்து உற்பத்திக் கொள்ளவை முழுமையாகப் பயன்படுத்தி, இரண்டு பக்கமும் அவரவர் விரும்பிய சாதகங்களை உருவாக்கிச் சாதிக்க முடிந்தது. 

ஒவ்வொரு காலகட்டத்திலும் மனம் மாறிய, மாறும் முதலாளிகள் ஆச்சரியமளிக்கவில்லை. அவர்களின் அழிவைப் பார்த்து அன்றும் இன்றும் ஆச்சரியப்பட்டதுண்டு. அவர்கள் கொள்கையின்படியே வெற்றி பெற முடியாமல் தடுமாறுகின்றார்கள். ஆரோக்கியத்தை இழந்து முடங்கி விடுகின்றார்கள். அடுத்த தலைமுறை உள்ளே வந்து மொத்தமாக மூடுவிழா நடத்தி விடுகின்றார்கள். ஆனால் திருப்பூரில், கோவை மாவட்டத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்பவர்கள் என் எழுத்தைப் படித்து விட்டு மனப்பூர்வமாக உள்ளன்புடன் பேசும் போது, தகவல் அனுப்பும் போது தொடர்ந்து நாம் எழுத வேண்டும் என்ற உத்வேகம் உருவாகின்றது.

பத்து வருட இணைய அனுபவம் குறித்து?


28 வருடத் திருப்பூர் தொழில் வாழ்க்கையில் நெருக்கமான நண்பர்கள் என்று மொத்தம் பத்துப் பேர்கள் இருக்கின்றார்கள். எந்தக் கண்டத்தில் வசித்தாலும் நாம் சென்றால் ஒரு மாதம் தங்கிச் சுற்றிப் பார்க்கலாம் என்கிற வகையில் நெருக்கமான நூற்றுக்கணக்கான நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.  சென்னை முதல் கன்யாகுமரி வரைக்கும் மதிக்கக்கூடிய நண்பர்கள் நெருக்கமான தொடர்பில் உள்ளனர்.

பணத்திற்கு நட்பு முக்கியமில்லை. பணம் மனிதர்களைப் பதட்டம் கொள்ள வைக்கின்றது. தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பக்கூடியவர்கள் கருத்தியல் ரீதியான உரையாடல், பகிர்தல் பரவசப்படுத்துகின்றது. முகம் தெரியாத போதும் கூட நட்பின் ஆழம் வியக்கவைக்கின்றது.

எழுத்தின் மூலம் எதிரிகள் உருவாகி சொந்த வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதா?

இல்லை. எழுத்தின் மூலம் அளவு கடந்த நெருக்கமான நண்பர்கள் அறிமுகமாகி உள்ளனர். கட்சிக் கொள்கைகளைத் தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள் அவவ்போது என் நட்பு பட்டியலிலிருந்து காணாமல் போய்விடுகின்றார்கள். அவரவர் விருப்பத்திற்கேற்ப எழுத முடிவது சொத்துப் பத்திரம் மட்டுமே. அது கூட தற்போது கொலையில் தான் முடிகின்றது.

எழுதுவதால் என்ன பலன்?

ஆங்கிலத்தில் Passion என்ற வார்த்தைக்கு வேட்கை, ஆர்வம், உள்ளார்ந்த ஈடுபாடு, கட்டுக்கடங்கா உணர்ச்சி என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். குடும்பம், தொழில் இவை இரண்டு நம் வாழ்வின் ஆதாரம் என்றாலும் நமக்கு விருப்பமானது எது? என்றே தெரியாமல் இந்தியாவில் 90 சதவிகிதம் வாழ்ந்து மறைந்து விடுகின்றார்கள். கூடவே இதன் மூலம் உனக்குப் பணம் கிடைக்குமா? என்பதனையும் தவறாமல் கேட்கின்றார்கள். உங்கள் நரம்புகள் மூளையோடு பின்னிப் பிணைக்கப்பட்டது. மூளை மனதோடு ஒன்றிணைக்கப்பட்டது.

இவையெல்லாம் உங்கள் விருப்பங்களோடு தொடர்புடையது. மகள் மகன் விருப்பம், மனைவி விருப்பம், சொந்தங்கள் விருப்பங்கள் எதுவும் உங்கள் ஆழ்மனம் வரைக்கும் செல்லாது. கடமை என்கிற ரீதியில் உங்களை இயங்க வைக்கும். விருப்பம் இருந்தும் ஈடுபட முடியாமல் ஏக்கமாக இருக்கும் ஒவ்வொரு ஆர்வமும் உங்களின் கடைசிக்காலத்தில் கழிவிரக்கமாக மாறும். ஆரோக்கியத்தைப் பாதிப்படையச் செய்யும். மற்றவர்கள் மேல் பொறாமை கொள்ளச் செய்யும்.  பொம்மை செய்வது கூட ஒரு ஆர்வம் தான்.

உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் "பணம் தேடும் பறவையாக" இருப்பது தவறில்லை. "கடமைகளைக் காக்கும் கண்ணியவானாக" வாழ்வதும் குற்றமில்லை. உங்களுக்கான ஆழ்மன விருப்பங்களையும் அவ்வப்போது நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.  Passion பணத்தோடு தொடர்புடையது அல்ல. மனத்தோடு தொடர்புடையது. இப்போது "பகவான் கொரானா" வேறு அருள் புரிந்து கொண்டிருக்கின்றார். நாளை என்ன நடக்கும்? என்று தெரியாது அல்லவா?

எழுத்தின் மூலம் மாற்றத்தை உருவாக்க முடியுமா?

முடியாது. ஆனால் யோசிக்க வைக்க முடியும். உண்மைகளை முழுமையாக புரிந்து கொள்ள முயன்றால் போதும். மாற்றமென்பது மாறாதது.

இன்றைய இணைய மொழி என்பது என்ன?

கிறிஸ்துவம், இஸ்லாம் இரண்டையும் ஆதரித்தால் முற்போக்குவாதி. இந்துத்துவத்தை ஆதரித்தால் பிற்போக்குவாதி. மோடியை எதிர்த்தால் மத நல்லிணக்கவாதி. திமுகவை தீவிரமாக எதிர்த்து எழுதினால் சங்கி. மொத்த மதங்களில் உள்ள பிற்போக்குத்தனங்களையும், மதம் மூலம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுபவர்களைக் கணக்கில் எடுத்து பட்டியலிட்டால் மென்சங்கி. வீட்டில் நம்பியுள்ள மனைவியை, குழந்தைகளைக் கவனிக்காமல் இணையத்தில் பொங்கிக் கொண்டிருந்தால் சமூக ஆர்வலர்.

சமூக வலைதளங்களில் செயல்பட்டுக் கொண்டிருப்பவருக்கு இமேஜ் என்பது தேவையா?

திரைப்பட நடிகருக்குத்தான் தன் முகம் மற்றும் ஆரோக்கியம் முக்கியத் தேவை.  இது தான் அவர்களின் முக்கிய இமேஜ் உருவாக்கக் காரணமாக இருக்கும். இது வணிகம் சார்ந்த விசயம். கவனமாக இருப்பவர்கள் 70 வரைக்கும் வெல்ல வாய்ப்புண்டு.  அரசியல், எழுத்துலகம், மற்ற கலைகள் சார்ந்து இயங்குபவர்களுக்கு அது தேவையில்லை.  குடும்பக் கடமைகளை நிறைவேற்றி ஆரோக்கியத்துடன் உண்மைகளை உரக்கச் சொல்ல இமேஜ் தேவையில்லை. விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் சம கால நிகழ்வுகளை துணிச்சலும் தைரியத்துடன் பேச எழுதத் தெரிந்தால் போதுமானது.

இலக்கியவாதி என்றால் என்ன?

சமகாலத்தை தன் எழுத்தில் பிரதிபலிக்க விருப்பம் இல்லாமல் இறந்த காலத்தை தன் விருப்பத்திற்கேற்ப எழுதுபவர்.  சம கால மாற்றங்களை உள்வாங்கி எழுத வேண்டிய தேவை இருந்தாலும் எழுத மறுத்து காரண காரியங்களைப் புரியாத மொழியில் எழுதுபவர். சம கால இளைஞர்களுக்கு அந்நியமானவர். புரியாத நடையில் எழுதிப் புளகாங்கிதமடைவர்.  எளிமை என்பதனை ஏளனமாகப் பார்ப்பவர். வாசிப்பவர்களுக்கு அறிவு குறைவு என்பதனை கடைசி வரைக்கும் ஆணித்தரமாக நம்பி தன்னை கூட்டத்திலிருந்து ஒதுக்கிக் கொண்டு வாழ முயல்பவர். தன்னைச் சுற்றியுள்ள சிறிய கூட்டம் தான் மொத்த உலகம் என்பதனை கடைசி வரைக்கும் நம்புபவர்.

காட்சி ஊடகங்கள் ஆட்சி செலுத்தும் காலகட்டத்தில் இன்னும் எத்தனை நாட்களுக்கு எழுத்து ஊடகம் செல்லுபடியாகும்?.

நான் பிறந்த ஊரில் இன்னமும் வானொலியை மட்டும் கேட்பவர்கள், விரும்புகின்றவர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளனர். விருப்பங்கள் வெவ்வேறு விதமானது. 

இதுவரையிலும் மொத்தம் எத்தனை மின்னூல்கள் வெளியிட்டுள்ளீர்கள்.

24. பொன் விழா நூலுக்கு "வணிகம் பழகு" என்ற தலைப்பில் எழுத வேண்டும் என்ற எண்ணமுண்டு.

22.03.2020 மதியம் 1.30 முதல் இலவசமாக வாசிக்க முடியும்.

எழுதியவற்றைச் சந்தைப்படுத்துவது எப்படி?

வலையில் எழுதியவற்றை இலவச மின்னூல்கள் வழங்கும் தளங்களின் வாயிலாக, அமேசான் மூலம், பிடிஎப் கோப்பாக மாற்றி Telegram App மூலம் இலவசச் சேவை செய்து கொண்டிருக்கும் தன்னலமற்ற தொண்டர்கள் மூலமாக என்று பலவகையில் எழுத்து பலருக்கும் சென்று சேர்ந்து விடுகின்றது. எழுதிய 75 சதவிகிதம் கோப்பாக மாற்றப்பட்டுள்ளது.

எழுதுவதன் மூலம் வருமானம் உண்டா?

அமேசான் மூலம் 100 நாளைக்கு ஒரு முறை ரூபாய் 300 வருகின்றது. அது சேமிப்பு வங்கிக் கணக்குக்கு "குறைந்தபட்ச கையிருப்பு" என்ற மத்திய அரசின் புனிதக் கொள்கைக்கு என்னைப் பலியாகாமல் தடுத்து வைத்துள்ளது. அண்டார்ட்டிகா கண்டம் தவிர்த்து உலகம் முழுக்க வாழும் தமிழர்கள் எனக்களிக்கும் 300 கோடி போலவே எனக்குத் தெரிகின்றது.

எழுத வேண்டும். ஆனால் தெரியாது என்ற துறை ஏதாவது உண்டா?

தொழில் நுட்பம்.

மக்கள் இன்னமும் வாசிக்கின்றார்கள் என்று நம்புகின்றீர்களா?

தேவகோட்டையில் இருக்கும் அக்கா அவர்களைப் பார்க்கச் சென்ற போது அனுராதா ரமணன் , சிவசங்கரி, லஷ்மி, ரமணிச்சந்திரன் போன்ற பழைய எழுத்தாளர்கள் புத்தகங்கள் நூலகங்களில் இன்னமும் படு பயங்கர டிமாண்ட் என்கிற ரீதியில் போய்க் கொண்டே இருக்கிறது. இணையம் பக்கம் வராதவர்கள், விரும்பாதவர்களின் உலகம் இயல்பாகவே உள்ளது.

ஃபேஸ்புக் குறித்து உங்கள் கருத்தென்ன?

90 சதவிகிதம் அலைபேசியில் தான் வாசிக்கின்றார்கள். பார்க்கின்றார்கள். அலைபேசி வாசிக்க உகந்த கருவி அல்ல. ஆழமான விசயங்களைப் பொறுமையாக வாசித்து உள்வாங்கவும் முடியாது. எண்ணம் மாறும். வேறுபக்கம் நம்மை நகர்த்திவிடும். முழுமையாக வாசிக்கக்கூடியவர்கள் குறைவாகவே இருக்கின்றார்கள். தடவிக் கொண்டே செல்பவர்கள் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். அடுத்தவர்களைக் கவனிப்பவர்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். "டோலி உங்கள் பதிவு சூப்பர்" என்று ஜொள்ளு விட்டு நூல் விடக் காத்திருப்பவர்கள் மிக மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். "டோலர் நாம் சமூகத்தைப் புரட்டிப் போட்டே ஆக வேண்டும்" இணையத்தில் கொள்கை பேசும் கூட்டமும் அதிகமாகவே உள்ளது. இவன் எப்போது சிக்குவான்? என்று எண்ணம் கொண்டவர்கள் மிக மிக மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். இவன் நம் கட்சிக்கு எதிரானவன் என்று கட்டம் கட்டும் உளுத்துப் போன பருப்புகளும் அதிகமாக ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

"லைக் அரசியல்" என்றால் என்ன?

தமிழகத்தில் தனி மனித துதி முன்னெடுத்த கட்சி உருவாக்கிய பாணி இன்று ஃபேஸ்புக் வந்து வரைக்கும் நிற்கின்றது. ட்விட்டரில் உச்சமாய் நிற்கிறது. இணையம் வேறு. எதார்த்தக் களம் வேறு. உணர்ந்து கொண்டவர்கள் மனச் சோர்வு அடைய மாட்டார்கள். எதிர்மறைகளை மட்டுமே வைத்து வளர்ந்தவர்கள் இன்று வரையிலும் அதனைக் கொள்கையாகவே கடைப்பிடித்து வருவது வியப்பல்ல. கொடூரமானவர்களின் கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டு உழுது மனதிற்குள் புதைத்து மூடிவிட்டு முன்னேற வேண்டும். எழுதுபவர்களின் பெயர், அவர் ஆதரிக்கும் கொள்கை பொறுத்து இங்கு ஒவ்வொன்றும் விருப்பக்குறியீடு (லைக்) ஆக மாறுகின்றது. இதில் பலரும் சோர்ந்து விடுகின்றார்கள். வலைபதிவில் விமர்சனங்கள் வருவதில்லை என்று எழுதுவதை நிறுத்துவதைப் போல. வாழ்க்கையில் மட்டுமல்ல. எதிர்ப்புகளை, ஏளனங்களை, அவமானங்களை  அடித்து நொறுக்கி முன்னேற கற்றுக் கொண்டால் மட்டுமே நீங்கள்  விரும்பும் பயணத்தின் எல்லையைத் தொட முடியும்.

ட்விட்டர் குறித்து உங்கள் கருத்தென்ன?

95 சதவிகிதம் புனைப் பெயர்கள். தொகுக்கவே முடியாத அகராதி வார்த்தைகள். பிரபல்யங்கள் தங்கள் எழுத்துக்கு வரும் விமர்சனங்களைப் படித்து விட்டு உயிரோடு நடமாட முடிகின்றது என்றால் அவர்கள் நியூரான்களில் சராசரி மனிதர்களிடம் இல்லாத புதிய சக்தி உள்ளது என்று அர்த்தம். அதற்கு நீங்கள் "பணம், பதவிக்காகச் சொரணையற்ற, மானங்கெட்ட பயல்கள்" என்று பெயர் சூட்டக்கூடாது.

Whats App/Telegram/Tik Tok/Instagram/LinkedIn செயலிகள் குறித்து?

தொழில் சமூகத்திற்கு மிகப் பெரிய வரப்பிரசாதம். உலகத்தின் மறுமுனையுடன் பேச, பரிமாற, தொழில் வளர்க்க முழுமையாக உதவுகின்றது. குறைவான உரையாடலில் நிறைவான லாபத்தைத் தந்து கொண்டிருக்கிறது. தமிழர்களுக்குப் போலிச் செய்திகளைப் பரப்ப உதவுகின்றது. வாசிக்கவே தேவையில்லை என்ற புதிய கலாச்சாரத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

Telegram அற்புதமான பாதுகாப்பான செயலி.  மேற்படிப்பு படிப்பவர்கள், யூபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்கள், இலவசமாக மின் புத்தகங்கள் தேவைப்படுபவர்களுக்கு உதவக்கூடிய செயலி. திரைப்படங்களை இலவசமாக இதில் பார்க்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.

Tik Tok எனக்கு இதில் கணக்கு இல்லை. விருப்பம் இல்லை. மகள்களுடன் படிக்கும் சக தோழிகள் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கணக்கு வைத்துள்ளார்கள். ஆண்களை விட நடுத்தரக் குடும்பத்து இளைஞிகள் இதில் காட்டும் ஆர்வமும் அவர்களின் திறமையும் என்னை வியக்க வைக்கின்றது.

Instagram தொடக்கத்தில் இதனைப் பயன்படுத்தினேன். கணக்கு உள்ளது. ஆனால் விருப்பமில்லை.  தன்னை, தன் பொருட்களை விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்புகின்றவர்களுக்கு பிடித்தமான தளம்.

Linkedin கணக்கு உள்ளது. விருப்பத்துடன் செயல்பட்டேன்.  பெரிய நிறுவனங்கள் தங்களின் கௌரவமாகக் கருதுகின்றார்கள். அதிர்ஷ்டம் கட்டாயம் தேவை. நபர்கள் அறிமுகமாக, வாய்ப்புகள் நம்மிடம் தேடிவரப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.  தொழில்நுட்ப அறிவு நன்றாகத் தெரிந்து இருந்தால் இது முக்கியமான தளம். தொடர்புகளை உருவாக்க முடியும்.

பள்ளி, கல்லூரி இளைய சமுதாயம் எவ்விதச் செயலிகளை விரும்புகின்றார்கள்.

Share chart/Hello App/Instagram

நீங்கள் பயப்படுவது யாரைப் பார்த்து?

பார்வோர்டு செய்திகளைச் சலிக்காமல் படிக்காமல் அனுப்பிக் கொண்டிருக்கும் நபர்களைப் பார்த்து தினமும் பயந்து சாகின்றேன். மெல்லவும் முடியவில்லை. ஒரு ஆடிட்டர் பதவியில் இருந்தவரிடம் இப்படிச் செய்யக்கூடாது என்று மெதுவாக மென்மையாக அழைத்துச் சொன்ன போது காச் மூச் என்று கத்தி தீர்த்துவிட்டார்.  "நான் எந்த அளவுக்கு உங்களுக்குச் சேவை செய்கின்றேன். உங்களுக்குப் புரியவில்லை" என்று அரைமணி நேரம் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்.

இணையத்திற்கும் நமக்கும் உண்டான தொடர்பு எந்த நிலையில் உள்ளது என்பதனை எப்படிக் கண்டு கொள்வது? வழி உள்ளதா?

வாரத்தில் ஒரு நாள் உங்களுக்குப் பிடித்த புத்தகம், பத்திரிக்கைகளை எடுத்து ஒரு மணி நேரம் இணையம் இல்லாமல் வாசிக்க முடிகின்றதா? கவனச் சிதறல் இல்லாமல் உங்களால் முழுமையாக வாசிக்க முடிந்தால் உங்களுக்கு 35 மதிப்பெண்கள்.   இரண்டு மணி நேரம் முழுமையாக வாசிக்க முடிந்தால்  50 மதிப்பெண்கள்.  மூன்று மணி நேரம் முடிந்தால் நிச்சயம் முதல் தரம். 60 மதிப்பெண்கள் போட்டுக் கொள்ளலாம்.

இதுவே இரவு நேரம் நீங்கள் விரும்பிய புத்தகம் எடுத்துத் தூக்கத்தை கூட மறந்து முழுமையாகப் படித்து முடித்து விட்டுத் தூங்கினேன் என்று சொல்வீர்கள் எனில் நீங்கள் இணையத்தில் செயல்பட்டாலும் உங்களுக்கு இணையப் போதை இல்லை என்று உறுதியாகப் பிரகடனம் செய்து கொள்ள முடியும்.  இணையம் என்பது உங்கள் கவனத்தைக் களவாடுகின்றது. சிதறலை ஊக்குவிக்கின்றது. தொடக்கத்தில் தெரியாது. கள்ளுண்ட குரங்கு போல உங்கள் செயல்பாடுகள் மாறிவிடும். சராசரி வாழ்க்கை, மனிதர்களுடன் உரையாட வேண்டிய உரையாடல்கள் குறைந்து விடும். எரிச்சல் மிகும். பொறுமை குறையும். கவனத்தில் கொள்ளுங்கள்.

உடல் ஆரோக்கியத்திற்குப் பட்டினி அருமருந்து போல வாரத்தில் ஒரு முறையாவது இணையம் இல்லாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள்.


தொலைக்காட்சி குறித்து உங்கள் கருத்தென்ன?

என் அம்மாவின் வயது 80. அவரை இன்னமும் ஆரோக்கியமாக வைத்திருப்பது தொலைக்காட்சியில் வரும் நெடுந்தொடர்கள். தம்பி மகன், மகளிடம் "ஏன்டா அப்பத்தாவிடம் பேச மாட்டுறீங்க?" என்று கேட்ட போது "அவங்க பேசுறது புரியவில்லை" என்றார்கள். நான் செல்லும் போது பேசுவேன். சிந்தனைகள் முன்னும் பின்னும் மாறி பேச்சுக்கள் குளறி குழந்தைத்தன்மையாக மாறியுள்ளதை உணர்ந்து கொண்டேன். ஆனாலும் தொலைக்காட்சி அவரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

"நீங்கள் எல்லாம் அடிமுட்டாள்கள்". "எங்கள் அடிமைகள்". "உங்கள் நேரத்தை, பணத்தை எங்களால் தைரியமாகத் திருட முடியும்" என்று இன்றைய வாழ்க்கையில் நம்மிடம் மறைமுகமாக, நேரிடையாகவே சொல்பவர்கள் தொலைக்காட்சி சேனல்களை நடத்துபவர்கள், நிகழ்ச்சி தயாரிப்பவர்கள். எங்கள் வீட்டில் தொலைக்காட்சி வெறுமனே பெட்டியாகவே உள்ளது.

குறைவான நேரத்தில் அதிகத் தகவல்களைத் திரட்டுவது சாத்தியமா?

காலையில் அவசரச் செய்திகள் அரை மணி நேரம் நீங்கள் விரும்பும் சேனல்கள் யூ டியூப் ல் தருகின்றார்கள். காத்திரமான கருத்துக்களை எழுதுபவர்கள் ஃபேஸ்புக்கில் இப்போது யாரும் எழுதுவதில்லை. ரிப்போர்ட் அடித்து முடக்கி விடுகின்றார்கள்.  குறிப்பிட்ட காலம் தடை செய்து விடுகின்றார்கள். ட்விட்டரில் தெரிந்து கொள்ள முடியும். முழுமையாக வாய்ப்பில்லை.  வார இதழ்கள், தினசரிகளை இணையத்தின் மூலம் இப்போது படிக்க வாய்ப்பில்லை.  குக்கீஸ் என்ற திருட்டுத்தனத்தை ஒவ்வொரு நிறுவனமும் அங்கீகாரமாய் வைத்து உங்கள் தகவல்களை நாங்கள் திருடவே செய்வோம் என்கிறார்கள்.  இதற்குள் நுழைந்து வருவது உங்கள் சாமர்த்தியம்.

சமூக வலைதளங்கள் "நேரம் கொல்லி" என்கிறார்களே? உள்ளே நுழைந்தால் மீள்வது கடினம் என்பது உண்மையா?

கழிப்பறைக்குச் சென்றால் கூடக் குறிப்பிட்ட நேரத்திற்குள் வெளியே வந்தால் தான் நாம் ஆரோக்கியமாக இருக்கின்றோம் என்று அர்த்தம். தூதர்ஷன் மட்டுமே பார்த்து வந்த தமிழர்கள் இன்று குறைந்தபட்சம் இந்தியாவில் மட்டும் 900 சேனல்களை கண்டு கழிக்கும் வாய்ப்புள்ளது. யூ டியூப் அதன் பங்கு தனி. வாட்ஸ் அப் துண்டுக் காட்சியாகக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டே இருக்கிறது. குடித்துக் கொண்டே இருப்பவனை முதலில் நரம்புகள் எச்சரிக்கும். பிறகு இருதயம் லேசாக மிரட்டும். வயிறு ஒத்துழையாமை இயக்கம் நடத்தும். சிறுநீரகம் சிக்கலை அடையாளம் காட்டும். கடைசியாகத்தான் கல்லீரல் தயவு தாட்சண்யம் பார்க்காமல் காறித்துப்பும்.

அப்படியென்றால் "பாடையைக் கட்டு" என்று அர்த்தம்.  அதே போலத்தான் உங்களின் சிந்தனையும்.

துண்டுக்காட்சிகளை, துக்கடா செய்திகளை விரும்பி, தேடிப் படித்துக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உங்கள் மனம் வெறுமையாக மாறும். உலகமே புதிய பாதையில் போய்க் கொண்டேயிருக்கும்.  நீங்கள் சுடுகாட்டில் இருப்பது போலவே தோன்றும். தோன்றும் போது மீண்டும் வாசிக்கத் துவங்குங்கள். துளிர்விடுவது வசந்தகாலம் என்று அர்த்தம். அனுபவமே ஆசான்.

சமீபத்தில் என்ன புதிதாக கற்றுக் கொண்டீர்கள்?

யூ டியூப் தொடர்பான பல விசயங்கள். நான் படித்த பள்ளியில் பேசிய பேச்சை வலையேற்றிய போது அதன் தொழில் நுட்பங்களைப் பார்த்து வியந்துள்ளேன்.

தொழிலுக்கு இணைய தளம் மூலம் அறிமுகம் ஆகும் நண்பர்கள் மூலம் உதவி கிடைக்க வாய்ப்புள்ளதா?

இல்லை. 90 சதவிகிதம் தொழில் நுட்பம் சார்ந்த பதவிகளில் தான் உள்ளனர்.  சுக வாழ்க்கை பழகிப் போய் வணிகம் தொடர்பான விசயங்களில் எவரும் கவனம் செலுத்த எவரும் விரும்புவதில்லை.

வலையில் சமீபத்தில் உங்களைக் கவர்ந்தவர் யார்?

நல்லாசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள். கலக்குகின்றார். அவர் எழுத்து நடை மிகவும் சுவராசியமாக உள்ளது.

மோடி ஆட்சி குறித்து உங்கள் கருத்தென்ன?

அடுத்து வரப்போகும் அமித்ஷா ஆட்சியை எதிர்பார்க்கிறேன்.

பாஜக செய்த சாதனை என்ன?

இதுவரையிலும் நடந்த இந்தியத் தேர்தலில் எல்லாக் கட்சிகளும் "மைனாரிட்டி ஓட்டு" முக்கியம் என்பதனை வைத்துக் காய் நகர்த்தி வந்து அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். ஆனால் பாஜக அதனை உடைத்து மாற்றியுள்ளது. மைனாரிட்டி ஓட்டுத் தேவை என்கிற கட்சிகளும் "இந்துத்துவ ஓட்டு" நம்மை விட்டுப் போய் விடக்கூடாது என்கிற ரீதியில் பல சமயங்களில் பாஜக கொண்டு வரும் தீர்மானங்களைப் பாராளுமன்றத்தில் ஆதரித்து ஓட்டுப் போடுகின்றார்கள். வெளியே வந்து நாடகம் போடுகின்றார்கள். எதிரிகளைச் சுற்றி வளைத்துத் தாக்குவது ஒரு கலை.

ஆனால் பாஜக தன் அரசியல் எதிரிகளைப் பந்தாடிக் கொண்டிருக்கின்றது. இந்தத் தைரியமே உள்நாட்டு வளர்ச்சியில் முழு ஈடுபாடு என்பதனை விடச் சர்வதேச அரசியலில் நான் ஒரு "கிங் மேக்கர்" என்பதாக மோடி கடந்த ஆறு ஆண்டுகளாகத் தன்னை பிம்பமாக மாற்றியுள்ளார். இதன் காரணமாக எதிர்த்துக் களமாட வேண்டியவர்கள் மௌனியாகவும் இருக்கின்றார்கள். அவவ்போது எதிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்களும் "திஹார்" குறித்த அச்சம் இருப்பதால் அமைதியாகவும் இருக்கின்றார்கள்.

காங்கிரஸ் குறித்து உங்கள் கருத்தென்ன?

ஏழு தலைமுறைகள் முழுமையாக முடியும் போது டிஎன்ஏ, ஆர்என்ஏ மூலம் கடத்தப்படும் பரிணாமச் செய்திகள் முற்றிலும் மாறி புதிய சிந்தனைகள், முந்தைய தலைமுறைக்குத் தொடர்பில்லாத புதிய தலைமுறை உருவாகும் என்று அறிவியல் ஆணித்தரமாகச் சொல்கின்றது.  பிரியங்கா மகன் ரேஹன் வதேரா  பேரன் மூலம் ஏழு தலைமுறை முடிவுக்கு வருகின்றது.

"குடியுரிமைச் சட்டம்" குறித்து உங்கள் கருத்தென்ன?

கலைஞர் ஆட்சியில் இருக்கும் போது இல்லாத போதும் அறிக்கை வெளியிட்டால் பேச வேண்டியதை விட்டு விட்டு மற்ற அனைவரும் வேறு பக்கம் நகரும்படி செய்வார். பாஜக வும் அதனையே பின்பற்றுகின்றது. இன்னமும் இந்த சட்டத்தில் என்ன ஷரத்து, என்ன கொள்கை, எங்கிருந்து நிதி வரும், எப்படி அமல் செய்வார்கள் என்று எதுவும் யாருக்கும் தெரியாது. ஆனால் எல்லோரும் சுறுசுறுப்பாக மாறியுள்ளனர். பாஜ வுக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்கும் தொண்டராக மாறியுள்ளனர்.

பாஜக ஆட்சி எப்படி உள்ளது?

காங்கிரஸ் அதிகாரத்தை எப்படி தங்களுக்கு பயன்பத்திக் கொள்ள வேண்டும் என்று கண்ணும் கருத்தாக இருந்தார்கள். கம்யூனிஸ்ட் தேவை என்பார்கள். வட கிழக்கு மாநிலங்களில் நக்ஸல்களை வேட்டையாடுகின்றோம் என்பார்கள். மதநல்லிணக்கம் என்பார்கள். அழித்து முடித்து குழியைத் தோண்டி மூடுவார்கள்.  எலும்புத்துண்டுகளை யார் யாருக்குப் போட வேண்டும் என்பதில் கச்சிதமாக செயல்படுவார்கள். ஆனால் பாஜக வெளிப்படையாக செயல்படுகின்றது. நிதி ஒரு பக்கம் இழுக்க நீதி வேறொரு பக்கம் இழுக்க மதம் கீழே இழுக்க நிர்வாகம் குடை சாய்ந்து கொண்டிருக்கிறது.  காரணம் நேரு என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விடுகின்றார்கள்.

உங்கள் அரசியல் கொள்கை தான் என்ன?

இந்திய மக்கள் அரசாங்கத்தைச்  சார்ந்து செயல்படுவது குறைவு.  தமிழக மக்கள் என்பவர்களுக்கு அரசாங்கம் என்பது தேர்தல் சமயத்தில் மட்டுமே நினைவுக்கு வரும். யார் அதிகமாக ஓட்டுக்குப் பணம் தருவார்கள்? என்ற நினைப்பில் ஆர்வமாகத் தேர்தலை எதிர்கொண்டு காத்திருப்பார்கள். மாதம் ஒரு முறை ரேசன் பொருட்கள், நல்ல தண்ணீர், உப்புத்தண்ணீர், அரசு மருத்துவமனை செயல்பாடு, பொதுச் சுகாதாரம், சட்டம் ஒழுங்கு சிறப்பு என்பது போன்ற அடிப்படை விசயங்கள் இருந்தால் இங்கே போதும். மக்கள் அரசியல்வாதிகள் யார்? எத்தனை கோடிகள் கொள்ளையடிக்கின்றார்கள்? என்பதனைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள்.  இங்கு அரசியல் என்பது கிசுகிசு. சினிமா என்பது முக்கியப் பேச்சு.

மத்திய மாநில அரசுகள் தாங்கள் வசூலிக்கும் வரிகள் மூலம் பற்றாக்குறை பட்ஜெட் மற்றும் அதீத வீக்கமுள்ள பட்ஜெட் தான் தாக்கல் செய்கின்றார்கள். மொத்தத் தொகையில் 90 சதவிகிதம் அரசின் செலவினத்திற்கும், மீதியுள்ள 10 சதவிகிதத்தில் தான் மக்கள் நலத் திட்டம் என்ற பெயரில் இங்கே கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் மேலைநாடுகள் போல இணையம் என்பது கிராமம் வரைக்கும் பரவி தடையற்ற இணையத் தொடர்பு உருவாகும் பட்சத்தில் அரசின் கொள்கைகள், திட்டங்கள் அனைத்தும் மக்களின் நேரிடையானப் பார்வைக்கும் சென்று விடும். அரசு ஒதுக்கும் குறைந்தபட்ச நிதிகளும் இடையில் உள்ளவர்கள் கொள்ளையடிக்காமல் பயனாளிகள் கைக்கு வந்துவிடும்.

இதுவே தற்போதைய மக்களின் சமூக நீதி, சமத்துவம்,பொருளாதார வளர்ச்சியை உருவாக்க அடிப்படைக் காரணமாக அமைந்து விடும் என்றே நம்புகிறேன்.  காரணம் மக்கள் இப்போது எந்தக் கொள்கைக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லாத வாழ்க்கை வாழத் தொடங்கி விட்டனர். போட்டியில் வெல்ல தன்னால் என்ன முடியும்? என்று பந்தயக்குதிரை போலவே ஒவ்வொருவரும் ஓடத் தொடங்கியுள்ளனர். நுகர்வோர் கலாச்சாரத்தில் கொள்கை எடுபடாது. "விலை குறைவு. தரம் அதிகம்" என்ற தாரக மந்திரமே வெல்லும். அரசாங்கமும் இனி இப்படித்தான் செயல்பட வேண்டியிருக்கும்.

திமுக அடுத்த முறை ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதா?

கடந்த பல வருடங்களாக ஊடகங்களில் ஊழல், லஞ்சம் போன்ற வார்த்தைகளை யாராவது பயன்படுத்துகின்றார்களா? வெளிப்படுத்து கின்றார்களா? என்பதனைக் கவனித்துப் பாருங்கள்.  காரணம் எம்.ஜி.ஆர் தன்னை யார் வந்து சந்திக்க வந்தாலும் "கோபாலபுரம் போய்விட்டு வந்துடுங்க" என்பார். இப்போது எடப்பாடி அந்தக் கொள்கையைத் தெளிவாகக் கடைப்பிடிக்கின்றார். எலும்புத்துண்டு யாருக்கு? சதைக்கறி யாருக்கு என்பதில் கெட்டிக்காரர் என்ற பெயர் எடுத்துள்ளார். இப்போது தமிழகத்தில் அனைவரும் ஒரு வகையில் எடப்பாடிக்கு நன்றிக்கடன் பட்டவர்களாகவே இருக்கின் றார்கள்.

எடப்பாடி ஆட்சி குறித்து உங்கள் கருத்தென்ன?

என் வீட்டுக்கருகே உள்ள ஆறு சந்துகளில் உள்ள சாலையில் கடந்த 12 மாதங்களில் நான்கு முறை நன்றாக இருந்த தார்ச் சாலையில் மீண்டும் சாலை போடுகிறேன் என்று பேட்ச் வேலைகள் செய்துள்ளார்கள். திட்ட மதிப்பைக் கேட்டு மொத்தமாகக் கூட்டிக் கழித்துப் பார்த்தேன். 64 லட்சத்தில் 6 ஆறு லட்சம் செலவழித்துள்ளார்கள். தமிழ்நாடு முழுக்க யோசித்துப் பார்த்தேன். அவர் எப்போதும் பேட்டியில் சொல்லும் "நானொரு விவசாயி" என்பதனை முழுமையாக நம்பினேன்.


ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்தீர்களா?

நிச்சயம் இல்லை. வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று என் நெருக்கமான தொடர்பில் இங்கே இருக்கும் அவரின் அதி தீவிர ரசிகரிடம் சொல்லி சில நாட்கள் என்னுடன் பேசாமல் வேறு இருந்தார். நான் திரைப்பட, அரசியல், ஆன்மீக உலகில் உள்ளவர்களை ஆசபாசம் நிறைந்த சக மனிதர்களாகவே பார்க்கிறேன். அவர்களின் பின்புல இயக்கத்தை முடிந்தவரை திரும்பத் திரும்ப ஒவ்வொருவகையிலும் எனக்குத் தெரிந்த வகையில் உறுதிப்படுத்திக் கொள்வதுண்டு எவரையும் பிம்பமாகப் பார்ப்பதில்லை. அதில் உடன்பாடும் இல்லை.

ரஜினிகாந்த் ன் உடல் மற்றும் மன ஆரோக்கியம் அரசியலுக்கு உகந்தது அல்ல. அவர் பழுத்த அனுபவசாலி. அடித்தள அவமானம், உயர்ந்தபட்ச அங்கீகாரம் இரண்டையும் பார்த்தவர். எல்லாவிதமான பலகீனத்தையும் பார்த்தவர். பத்துத் தலைமுறைக்குத் தேவையான புகழையும், அங்கீகாரத்தையும், செல்வத்தையும் பார்த்தவர். முழுமையாக நேர்வழியில் தன் உழைப்பின் மூலம் சம்பாதித்தவர். தன்னளவில் சரியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். தன் குடும்பத்தினர் மீது அக்கறை கொண்டவர். தன்னால் என்ன முடியுமே அதனைச் செய்து காட்டிக் கொண்டு இருப்பவர்.

உலகம் முழுக்க அறிந்த அமிதாப்பச்சன் பொறாமைப்படும் அளவிற்குப் பெருமையாக இன்னமும் வெற்றிகரமான மனிதராக வாழ்ந்து கொண்டிருப்பவருக்குத் தமிழக அரசியல் களம் ஆகாது என்றே நண்பரிடம் சொன்னேன்.

அரசியல் களம் என்பது ஒருவரின் நல்ல எண்ணத்தால் நடப்பது அல்ல. அதுவொரு குழு மற்றும் கூட்டு மனப்பான்மையில் இயங்குவது.  யார்? எப்போது? எங்கிருந்து? இயக்குவார்கள் என்றே தெரியாது. புரிந்து கொள்ளவும் முடியாது. 24 மணிநேரமும் தன்னை தயார்ப் படுத்திக் கொள்ள தெரிந்திருக்க வேண்டும். எடப்பாடி அதிசயமாகத் தப்பி நிற்பதற்குக் காரணம் ஸ்டாலின் படித்த பள்ளியின் ஹெட்மாஸ்டர் எடப்பாடி ஸ்டாலின் தன்னுடைய காலத்தில் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. கற்றுக் கொள்ளும் காலமும் கடந்து விட்டது. அவர் அப்பாவும் வாய்ப்புகளை வழங்க விரும்பவில்லை. அதற்கான புத்திசாலித்தனமும் அவரிடம் இல்லை. இது எடப்பாடியின் யோகம். இதனை எடப்பாடியாருக்கு காலம் வழங்கிய கொடை எனலாம். ரஜினி பாணியில் மனசாட்சிக்கு, மக்கள் நலனுக்கு விரோதம் என்றும் சொல்ல முடியும். ரஜினி சொல்லும் கருத்து முக்கியமானது. அதற்கான காலமும் சூழலும் இப்போது இங்கே இல்லை.

மக்களுக்கு தற்போது எழுச்சியோ புரட்சியோ தேவையில்லை. யார் பணம் அதிகமாக ஓட்டுக்கு கொடுப்பார்கள் என்பதே முக்கியம். இதற்குப் பெயர் தான் இங்கே மக்களாட்சி என்கிறார்கள்.

ஏன் இங்கே மாற்றம் உருவாக வாய்ப்பில்லை என்று சொல்கிறீர்கள்?

உதாரணம் 1

அதிமுக உறுப்பினர்கள் 1 கோடி
தேர்தல் நேரத்தில் வேலை செய்வோர் 10 லட்சம்.
ஒரு நபருக்கு ஒரு நாளைக்குச் சாப்பாடு சரக்கு போக்குவரத்து பேட்டா என்று ₹500 ரூபாய் வைத்துக் கொள்ளுங்கள்.
10,00,000x₹500 - ₹50,00,00,000 அதாவது ₹50 கோடி.
தேர்தல் ஆரம்பம் முதல் முடிவு வரை 30 நாட்கள் வைத்துக் கொள்ளுங்கள்.
30x ₹50 கோடி - ₹1500 கோடி.
இந்தச் செலவு கொடி, தோரணம், மேடை, சீரியல் செட், ஹோட்டல் தங்கும் செலவு, பேச்சாளர்கள் செலவு, போஸ்டர், பேனர், சுவரொட்டிகள் 
இதெல்லாம் விடப் பெரிய செலவு ஒன்று உண்டு. ஓட்டுக்குப் பிச்சை காசு.
குடுக்காம இருக்கப் போவதில்லை. வாங்காமல் விடப் போறதுமில்லை.
இவ்வளவு காசு நேர்மையாக ஆட்சி செய்தால் எங்கிருந்து வரும்? ஆட்சியில் நேர்மையாக இருந்தும் நிறுவனங்கள் தரும் நன்கொடையை வெளிப்படையாக வாங்கினால் மக்கள் நினைப்பது என்ன? சொல்வது என்ன?


உதாரணம் 2

வரைவு வாக்காளர் பட்டியல் படி தமிழ்நாட்டில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டில் மட்டும் உள்ள தேர்தல் ஓட்டுச் சாவடிகளின் எண்ணிக்கை 65,616
*
ஒரு கட்சியின் சார்பாகக் குறைவாகக் கணக்கிட்டாலும் ஒரு பூத்துக்கு பத்துப் பேர்கள் தேவை. (அனைத்து வேலைகளுக்கும்). ஒருவருக்குத் தினம் ஆயிரம் ரூபாயாவது கொடுக்க வேண்டும். பத்து நாட்கள் கணக்கிட்டு கொள்ளுங்கள்.
*
தமிழ்நாட்டில் வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு மாவட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு மிகப் பெரிய பிரம்மாண்டப் பேரணி நடத்தியே ஆக வேண்டும். மக்களை வரவழைத்து வரவேண்டும். சாப்பாட்டுச் செலவு, வாகனச் செலவு, மாநாட்டு ஏற்பாட்டுச் செலவுகள்.
*
சென்னை முதல் கன்யாகுமரி வரைக்கும் குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆவது சுற்றி வரவேண்டும். ஒவ்வொரு இடத்திலும் சின்னச் சின்ன கூட்டங்கள், கொடியேற்றுதல், பாதுகாப்பு வசதிகள், இதரச் செலவுகள்
*
பத்திரிக்கைகள் (விளம்பரம்)ஒரு மாதச் செலவு
தொலைக்காட்சியில் (விளம்பரம்) ஒரு மாதச் செலவு
நிகழ்ச்சி தயாரிப்பு செலவும்
*
234 தொகுதிக்கு இவை மட்டும் மிக மிகக் குறைவாகக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் ஒரு மாதச் செலவு 3000 கோடி வருகின்றது.
*
அதிமுக பணம் கொடுத்தார்கள். திமுகவும் கொடுத்தார்கள். நீங்கள் எப்போது தரப்போகிறீர்கள்? என்று மக்கள் நிச்சயம் கேட்பார்கள். இந்தச் செலவு தனி.
*
ரஜினி நினைத்தால் ஒரு நாளில் இந்தத் தொகையைத் திரட்டி விட முடியும்.
சும்மா தருவார்களா? கோரிக்கையுடன் தருவார்களா?

இந்த யதார்த்தம் மக்களுக்குப் புரியாத வரை இந்தக் கண்ணாமூச்சி தொடரத்தான் செய்யும்.

வலைபதிவுக்கும் மற்ற சமூக வலைதளங்களுக்கும் உண்டான வேறுபாடு என்ன?

பரம்பரை பணக்காரன் அலட்டிக் கொள்வதில்லை. சிந்தனை ரீதியாக அமைதியாகவே வாழ முயல்வான். திடீர் பணக்காரர்களின் ஆர்ப்பாட்டம் வெளியே தெரியும். எப்போது கவிழ்வான் என்றே தெரியாது. இவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் அதிகம். அவமானப்படுவதும் இயல்பு. இதன் காரணமாகவே தலைமுறை தலைமுறையாகப் பணம் படைத்தவர்கள் திடீர் பணக்காரர்களை அருகே வரவிடுவதில்லை.

இறுதியாக?

பத்திரிக்கைகள், வார இதழ்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் எவரும் மக்கள் நலனுக்காகச் செயல்படவில்லை. அதுவொரு வியாபாரம். அதிகார வர்க்கத்தினர் தங்கள் நலன், தாங்கள் சார்ந்திருப்பவர்களின் நலனுக்காகவே செயல்படுகின்றார்கள்.  விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் நல்ல நேர்மையான அதிகாரிகள் இங்கு உள்ளனர். அவர்களால் மட்டுமே இந்திய ஜனநாயகம் இன்னமும் உயிரோடு உள்ளது. அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள அதன் பொருட்டு தான் ஆட்சியதிகாரத்தை நடத்துகின்றார்கள். மக்கள் நலன் என்பது 0.0001%

இணையத்தில் அதி தீவிரமாகக் கட்சி ரீதியாக செயல்படுபவர்கள் காரண காரியத்தோடு தான் செயல்படுகின்றார்கள். அவர்களைச் சிதறு தேங்காயில் "சில்லுகளை பொறுக்கும் சில்லுண்டிகள்" என்றும் அழைக்கலாம். சிலருக்கும் கிடைக்கும். சிலர் வாழ்நாள் முழுக்க காத்திருந்து வருத்தப்படவும் வேண்டியிருக்கும். கட்சி கொள்கை பின்னால் ஓடி இணையத்தில் எழுதி பதவியைப் பெறுவதற்குள் அவரின் உண்மையான நெருக்கமான அக்கறையான நண்பர்கள் அனைவரையும் இழந்து இருப்பார். வெறி வந்தவனுக்கும் மூர்க்கமானவனுக்கும் வீபரீத பலனே இறுதியில் கிடைக்கும்.

இந்தியா போன்ற சுதந்திரமான அழகான, அற்புதமான நாடு உலகில் வேறெங்கும் இல்லை. அடிப்படை வாழ்க்கை இயல்பாகச் செல்ல அரசாங்கம் பலவற்றை வழங்குகின்றது. நீங்கள் யாரைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம். பேசலாம். அதற்குக் கருத்துரிமை, ஜனநாயகம் என்கிறார்கள். மற்ற நாடுகளில் டவுசரை கழட்டி மறக்க முடியாத அனுபவங்களைத் தந்து விடுவார்கள். இதுவே பலம். இதுவே பலவீனம்.

உங்கள் திறமை,முயற்சி,உழைப்பு, புரிந்து செயல்படுதல் பொருட்டு உங்கள் வளர்ச்சி உங்கள் கண்ணுக்குத் தெரியும். ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள அது தொடர்பான மற்ற விசயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள முயலாதவரைக்கும் நீங்கள் கிணற்றுத் தவளையாகக் கத்திக் கொண்டே வாழ்ந்து முடித்து விட வேண்டியது தான். எவரும் அறிவுரையைக் கேட்பதில்லை. எதிர்பார்ப்பதும் இல்லை. பணம் சம்பாரிக்க என்ன வழி? என்பதனைக் கேட்கிறார்கள்? இந்த சமூகத்திற்குள் தான் நாம் வாழ்ந்தாக வேண்டும். நம் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். தேடுதல் உங்களை உயிர்ப்போடு வாழ வைக்கும். அப்படி நேரமில்லை என்பவர்கள் அவரவர் குடும்பத்தினரைக் காதலித்து இணையம் பக்கம் வர வேண்டாம். தொலைக்காட்சிகளைப் பார்க்க வேண்டாம்.  மன உளைச்சலைத் தவிர்க்க இது ஒன்று தான் வழி.

 மெய்ப்பொருள் காண்பதறிவு.

அனைவருக்கும் நன்றி. வாழ்த்துகள்.

64 comments:

  1. 1000 + வாழ்த்துகள் அண்ணே...

    எனது ஆழ்மன விருப்பங்களை பகிரும் வகையில், நேற்று வலைப்பூ Blog Review பற்றிய ஒரு ஆய்வை எழுதிக் கொண்டிருந்தேன்...

    இப்போது உங்கள் பதிவை படித்தவுடன் வியப்பளிக்கிறது...! இதே போல் தான் கேள்வி பதில்கள்... அரசியல் உண்டு... ஆனால், உங்களைப் போல் அரசியலை எழுத முடியாது...

    அதில் எழுதி வரி ஒன்று :-

    // அப்புறம் வலைப்பதிவர்கள் பலரும் நாணத்தைத் துறக்காமல், கீச்சகத்தில் ஒரு கீச்சு தட்டி விட்டு, பகிரி குழுமங்களில், ↷ Forwarded பகிரிகள் எனத் தாமதமாகப் புரிந்து கொண்டாலும் அங்கிருந்து மடலேறாமல், முகநூலில் தாவி, அலர் மட்டும் பரப்பி மூழ்கிக் கொண்டிருப்பதாக சற்றுமுன் வந்த (Trending) பிரபலமா(க்)கும் செய்தி ...! இதுவும் ஒரு வகை முன்னேற்றம்...! //

    முடித்திருந்தால், அதை இன்று பகிர்ந்திருப்பேன்... ஆனால் "அலர் அதிகாரத்தை முடித்து விட்டு தொடரு" என்று ஐயன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதால், அதையே இன்று தொடர்ந்து விட்டேன்...

    ReplyDelete
  2. என்னது அமித்ஷா ஆட்சியா...? (இப்படி குண்டை போடலாமா...? - மோடி மீது...!)

    ReplyDelete
    Replies
    1. அடுத்தது அமித்ஷா ஆட்சியா? இப்போது நடப்புது அமித்ஷா ஆட்சி என்று அல்லவா நான் நினைத்து கொண்டு இருக்கிறேன். முன்பு ஜனாதிபதி பதவி ரப்பர் ஸ்டாம்ப் பதவி பிரதமட் பதவிதான் அதிகாரம் வாயந்த பதவி என்று எல்லோரும் நினைத்து கொண்டு இருந்த வேளையில் அமித்ஷா அதை அடியோடு மாற்றி ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி ரப்பர் ஸ்டாம் பதவி உள்துறை அமைச்சர் பதவிதான் அதிகாரம் மிக்க பதவி என்று நிருபித்து இருக்கிறார் இருந்து கொண்டு இருக்கிறார்

      Delete
    2. வெவ்வேறு துறைகள். வெவ்வேறு அமைச்சர்கள். ஆனால் பிரதமர் அலுவலகத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் மற்றும் குழுவினர் தான் இப்போது எல்லா முடிவுகளையும் எடுக்கின்றார்கள்.

      Delete
  3. // தெரியாது என்ற துறை - தொழில் நுட்பம் //

    அதைவிட எளிது எதுவும் கிடையாது... இதற்காக யாரையும் அணுகவே வேண்டாம்... வீட்டில் குழந்தைகளே போதும்... அதுவும் பெண் குழந்தைகள் என்றால், உடனே கற்றுக் கொள்ளலாம்... உங்கள் வீட்டில் மூன்று தேவிகள் இருக்கும்போது, இப்படி சொல்லலாமா...?

    ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால், தொழில் நுட்பத்தை எழுத்து வடிவில் சரியாக, மிகச்சரியான கொண்டு வருவது மிகவும் சிரமம்...

    ReplyDelete
  4. // யூ டியூப் - அதன் தொழில் நுட்பங்களைப் பார்த்து வியந்துள்ளேன். //

    வியந்த விஷயத்தில் ஒரே ஒரு நுட்பத்தை மட்டும் எழுத்தாக எழுதிப்பாருங்கள்... நானே வந்து 1000 சந்தேகங்கள் கேட்பேன்...

    எதுவும் முடியும்... ஈடுபாடு மட்டும் இருந்தால்... அதுமட்டுமில்லாமல், எழுதும் நுட்பத்தை சந்தேகம், கிண்டல், அவமானம் என பல விமர்சனத்தை நீங்களே செய்தால் மட்டுமே, அவை எழுத முடியும்...

    அதையும் செய்யுங்கள்... உங்களின் அடுத்த 1000 பதிவுகள் மேலும் மிளிரும்... மீண்டும் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வேண்டாம் தனபாலன். இதுவே போதும். இப்படியே போய்க்கிட்டு இருப்போம். அதுக்குத்தான் நீங்க இருக்கீங்களே, ஒரு சிவாஜி தான் இருக்க வேண்டும். நாங்க எல்லாம் நடிகர் பிரபு வகையரா.

      Delete
  5. மிக விரிவான... விசாலமான பார்வை அண்ணா...
    அரசியல், சமூக வலைத்தளம், எழுத்து, வேலை என அனைத்தையும் ஒரு பதிவுக்குள்...
    வாழ்த்துக்கள் அண்ணா....
    1000 இன்னும் வளரட்டும்.

    ReplyDelete
  6. Replies
    1. நீங்க குத்தாமல் இருந்தால் நான் எழுதியிருக்கவே மாட்டேன். எல்லாப் புகழும் மதுரைக்கே.

      Delete
  7. ஆயிரமாவது பதிவு என்பதால் நிறைய விஷயங்களைக் கேள்வியும் நானே பதிலும் நானே format எழுதிப் பார்த்திருக்கிறீர்களோ? :-)))) கொஞ்சம் வித்தியாசமான முயற்சி என்பதால் இந்த ஆயிரத்துக்கு என் வாழ்த்துக்கள்!

    ஆயிரம் என்பது வெறும் எண்ணிக்கை மட்டும்தான்! மிகப்பல வருடங்களுக்கு முன்னாலேயே 1200 என்ற எண்ணிக்கையை நண்பர் கோவி. கண்ணன் கடந்துவிட்டார். அதுவும் ஒவ்வொன்றும் மிக விரிவான பதிவுகள்! இப்போது பதிவுகளில் எழுதுவதில்லை. முகநூலில் மட்டும் ஆக்டிவாக இருக்கிறார். நீங்கள் குறிப்பிட்டிருக்கிற 3+1 பதிவர்களைத் தவிர எங்கள் Blog சத்தமே இல்லாமல் தினசரி ஒருபதிவு என்கிற குறிக்கோளுடன் சுமார் 3700 பதிவுகளைத் தாண்டிவிட்டார்கள்! ஏதோ ஒரு வருடம்தான் பதிவுகள் 246 என்று குறைந்திருந்ததாக நினைவு. இப்போது archives பகுதி மறைக்கப்பட்டிருப்பதால் சரியாகச் சொல்ல முடியவில்லை! 4000 கடந்திருந்தால், அதுகூட ஆச்சரியமில்லை. இத்தனைக்கும் அங்கே பரபரப்பான அரசியலோ சினிமாவோ கூடப் பேசப்படுவதில்லை, வெட்டி சர்ச்சைகளை வளர்ப்பதுமில்லை!

    மறுபடி சொல்கிறேன், ஆயிரம் என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் தான்! ஏதோ சாதித்து விட்டோம் என்றோ சாதிக்கப்போகிறோம் என்றோ சொல்வதற்கான இடம் நிச்சயமாக வலைப்பதிவுகள் அல்ல. ஒவ்வொருவரும் அவரவர் மனதிருப்திக்காகவே எழுத ஆரம்பிக்கிறார்கள், அந்த மனதிருப்தி எழுதுகிற எல்லோருக்குமே கிடைத்துவிட்டதா இல்லையா என்பதுதான் இன்னமும் விடைதெரியாத இருக்கிறது. நானும் கூட அந்தக் கேள்விக்கான விடையைத் தேடித்தான்எழுதிக்கொண்டிருக்கிறேனோ என்னவோ?

    ReplyDelete
    Replies
    1. 1200 என்ற எண்ணிக்கையை நண்பர் கோவி. கண்ணன் கடந்துவிட்டார்.ஸ்ரீராம் 3700 பதிவுகளைத் தாண்டிவிட்டார்

      அருமை. வாழ்த்துகள்.

      Delete
    2. மிகச் சரியான பதில்

      Delete
  8. //முந்தைய தலைமுறைக்குத் தொடர்பில்லாத புதிய தலைமுறை உருவாகும் என்று அறிவியல் ஆணித்தரமாகச் சொல்கின்றது. பிரியங்கா மகன் ரேஹன் வதேரா பேரன் மூலம் ஏழு தலைமுறை முடிவுக்கு வருகின்றது//

    நான் ஒரு அரசியல்பிரணி என்பதால் அரசியல் தொடர்பான விஷயங்களுக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை! காங்கிரசின் வரலாறு கொஞ்சம் முழுமையாகத் தெரிந்திருந்தால் #வாரிசுஅரசியல் என்பது மோதிலால் நேரு காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது என்பது புரிந்திருக்கும்! ராமச்சந்திர குகா இபின் கால்தூன் என்கிற 14வது நூற்றாண்டு அரேபியச் சிந்தனையாளர் சொல்வதை வைத்துக் கொண்டு நாலாவது தலைமுறையே வலிமையிழந்து விடும் என்று சொல்கிறார். கருணாநிதிக்கு நேர் அடுத்த தலைமுறையே இங்கே தடுமாறிக்கொண்டிருப்பதையும் கூடப் பார்க்கிறோம்.

    அதனால் அறிவியலும் இந்திய அரசியலும் எப்போதும் ஒத்துப்போவதில்லையென்று முடித்துவிடலாமா?

    ReplyDelete
    Replies
    1. ராஜீவ் வரைக்கும் எனக்கு குணம் நாடி குற்றமும் நாடி என்று தான் பார்க்கிறேன். மாஃபியா ராணி தான் பிரச்சனை. மகனும் மகளும் பைத்தியமாகவே மாறிவிட்டனர்.

      Delete
  9. ஜோதிஜி எனது பார்வையில் இன்றைய இணைய மொழி


    மோடியை பாஜகவை எதிர்த்து எழுதுபவர்கள் Anti Indians & மோடியை பாஜகவை ஆதரித்து எழுதுபவர்கள்தான் சங்கிகள்

    இன்றைய இணைய மொழியில் கூறியவைகளில் நீங்கள் எந்த வகையில் சேர்ந்தவர் என்ற விளக்கம் இல்லை..

    ReplyDelete
    Replies
    1. இப்படி இதைத்தான் எழுதுவது என்ற நோக்கம் இதுவரையிலும் உருவாகவில்லை. எது நல்லது என்று அப்போது தோன்றுகின்றதோ அதை அப்படியே எழுதி விடுவதுண்டு. அது தவறு என்றால் அதனை திருத்திக் கொள்வதும் உண்டு.

      Delete
  10. வலைபதிவர்களில் ஒருவருக்கு கோயில் கட்டி வணங்க வேண்டுமென்றால் அதற்கு பெயரை ரெக்கமென்ட் பண்ண வேண்டுமென்றால் தயங்காமல் கரந்தையார் அவர்களைத்தான் சொல்லுவேன்... நான் வணங்க தக்கவர்களில் அவர் ஒருவர்...


    எவ்வளவு பதிவு எழுதுகிறோம் என்பதல்ல எவ்வளவு சிறப்பாக எழுதுகிறோம் என்பதுதான் முக்கியம். அப்படி சிறப்பாக எழுதுபவர்களில் எனக்கு தெரிந்தவர் கரந்தையார், திண்டுக்கல் தனபாலன், ஜம்புலிங்கம் மற்றும் நீங்கள்தான்

    மலம் அதிகமாக இருப்பதால் அது பெருமை அல்ல சந்தணம் குறைவாக இருப்பதால் அது குறையும் அல்ல... நான் மேற்சொன்ன நாலு பெரும் சந்தணமாக வலைத்தளங்களில் மணக்கிறீர்கள் அதுதான் உண்மை ஜோதிஜி

    ReplyDelete
    Replies
    1. நன்றி... திண்டுக்கல் வந்தபின் திருப்பூர் போவோம்... மறந்து விடாதீர்கள்...

      Delete
    2. நிச்சயம் நாம் இரண்டு பேரும் அங்கே போய் நம்ம நண்பர் ஜோதிஜிக்கு நல்ல தர்ம அடி கொடுப்போம்

      Delete
    3. ஆகா, தங்களின் அன்பில் நெகிழ்ந்து போய்விட்டேன் ஐயா
      நன்றி

      Delete
    4. யார் யாரெல்லாம் இங்கே வர்றீங்களோ ஒரு குறும்பாடு, நாலைந்து நாட்டுக் கோழி, ஏழெட்டு கிலோ நண்டு, பத்து கிலோ மீன் வாங்கிட்டு வந்துடுங்க. மத்ததெல்லாம் இங்கே வந்து பேசிக்கிட்டே சாப்பிடுவோம்.

      Delete
  11. வாழ்த்துக்கள் , இன்னும் நிறய எழுத வேண்டும், நிறைய புஸ்தகங்கள் எழுத வேண்டும், அது நிறைய பேரை சென்றடைய வேண்டும் ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வார்த்தைகள் முக்கியமான ஆசிர்வாதம். நன்றி சுந்தர்.

      Delete
  12. உங்களை முழுமையாக புரிந்து கொள்ள உதவும் அருமையான பதிவு..ஆயிரம் ஆயிரமாயிரமாகத் தொடர நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  13. நான் வலைப்பதிவுகள் எழுதும் முன்பு அப்போது தமிழ்மணம் பற்றி அறியாத பொழுது கூகுல் மூலம் சர்ச் செய்து படிக்கும் போது பெரும்பாண்மையாக என் கண்ணில் படுவது ஜோதிஜி எழுத்தும் டோண்டுரங்கண் எழுத்தும்தான்...அப்போது நான் நினைத்தது ஜோதி சமுகத்தில் மிக பெரிய நபர் என்று நினைத்து இருந்தேன் ஆனால் அவரை இணையம் மூலம் அணுகிய போதுதான் அவர் மிக எளிமையான யாதார்த்ததை பேசும் சாதாரண மனிதர் எல்லோரும் எளிதாக நெருங்கி பழககூடிய ஒரு நபர் என்பதை அறிந்தேன்

    இவரிடம் உள்ள ஒரு நல்ல பழக்கமும் கெட்டப் பழக்கமும் ஒன்றுதான் இவருக்கு ஒருவரை மனதிற்கு பிடித்துவிட்டால் அதிகமாக புகழ்ந்துவிடுவார்.

    எனக்கு இவரிடம் பிடித்தது இவர் குழந்தைகளை வளர்க்கும் முறைதான்...

    ReplyDelete
    Replies
    1. பாலர் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது எழுதத் தொடங்கினேன். அவர்களை விட்டு வந்து எழுதுவது கடினமாக இருக்கும். அலுவலக வேலை சூறைக்காற்று சுனாமியாக இருந்த தருணமது. இப்போது வளரிளம் பருவம். எல்லாவற்றையும் படிக்கின்றார்கள். கலாய்கின்றார்கள். ஒருவர் கிண்டில் புத்தகத்திற்கு உதவுகின்றார். ஆனாலும் மூவரில் ஒருவருக்குக்கூட கலைகள் குறித்து ஆர்வம் உருவாகவேஇல்லை. காரணம் புரியவில்லை. நிகழ்கால எதார்த்த வாழ்க்கை வாழவே விரும்புகின்றார்கள்.

      Delete
  14. 1000ஆவது பதிவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். உங்களைப் போல இவ்வளவாக அலசுதல் என்பது வேறு யாராலும் முடியாது. அனைத்துத் துறைகளின் தொடர்பு, அவற்றைப் பற்றிய ஆர்வம் உங்களை பல்துறை வித்தகராக ஆக்கியுள்ளது என்பதை உணரமுடிகிறது. ஆய்வுத்துறையில் ஆழமாக அகலமாக என்று இரு விதங்களைக் கூறுவர். அக்கண்ணோட்டத்தில் நோக்கும்போது நீங்கள் ஆழமாகவும் அகலமாகவும் விவாதித்துள்ளீர்கள். எங்கள் நட்பு வட்டத்தில் இவ்வாறான ஒரு வாசிப்பாளர், எழுத்தாளர் இருப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அனைத்திற்கும் மேலாக ஒரு குறிப்பிட்ட சட்டகத்திற்குள் அமையாமல் பரந்து விரிந்து செல்கின்ற உங்களது பாணியை அதிகம் ரசிக்கிறேன், வியக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துரை சிறப்பு ஐயா...

      Delete
    2. தனபாலன் ஜம்புலிங்கம் அவர்கள் விக்கிபீடியா சாதனைச் செல்வர். நிறைகுடம்.

      Delete
  15. வாழ்த்துகள். 1000 அதிகம் தான் என்றாலும் உங்களைப் பொருத்தவரை குறைவுதான். நானெல்லாம் சமீபத்தில்தான் 500 கடந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை. பல வருடங்கள் பல சமயம் எழுத வாய்ப்பு இருந்தும் எழுதியதில்லை.

      Delete
  16. கரந்தை ஜெயகுமார், ஜம்புலிங்கம் தரமான பதிவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். கரந்தை ஜெயகுமார; அவர்களை முதன்முதலில் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தினேன். வலைநுட்ப உதவியும் செய்திருக்கிறேன். வாரம் ஒரு பதிவுதான் என்றாலும் அதிகம் அறியப்படாத அறிஞர்களைப் பற்றி மிக சுவையாக பதிவிடுவதில் வல்லவர். கரந்தை தமிழ்ச்சங்கம் என்று ஒன்று இருந்ததை அவர் வழியாகத் தான் அறிந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. எனது தளத்தினை தமிழ் மணத்தில் இணைத்துக் கொடுத்ததே தாங்கள்தான்.
      நன்றி ஐயா

      Delete
  17. தொடர்ந்து எழுதுவது என்பது எல்லோருக்கும் வருவதில்லை. சளைக்காமல் பல்வேறு தளங்களில் எழுதிக் குவிக்கிறீர்கள். இன்னும் உயரம் தொட வாழ்த்துகள் ஜோதிஜி சார்.

    ReplyDelete
    Replies
    1. இதென்ன புதுப் பொரளியா இருக்கு முரளி. ஃபேஸ்புக்கில் எழுதுவதை இங்கே கொண்டு வந்து போடுறேன். சில தனிப்பட்ட விசயங்களை மட்டுமே இங்கே எழுதுறேன். இதை அங்கே கொண்டு போய் சேர்ப்பதில்லை. நான் தீனி திங்குற குரூப் க்கு நிரந்தர தலைவர். திங்குற நேரம் தவிர மற்ற நேரம் எழுதுறேன். நீங்களும் திருப்பூர் பக்கம் வாங்க.

      Delete
  18. உண்மைகளை உரக்கச் சொல்ல இமேஜ் தேவையில்லை. விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் சம கால நிகழ்வுகளை துணிச்சலும் தைரியத்துடன் பேச எழுதத் தெரிந்தால் போதுமானது.

    தங்களிடம் எனக்கு மிகவும் பிடித்ததே தங்களின் மேற்குறிப்பிட்ட பண்புதான், தைரியம்தான், துணிச்சல்தான் ஐயா.

    என்மேல் தாங்கள் வைத்துள்ள பாசத்திற்கும் அன்பிற்கும் தலைவணங்குகிறேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. தலையெல்லாம் வணங்க வேண்டாம் ஆசிரியரே. தஞ்சை வரும் போது அங்குள்ள சிறப்பான அசைவ உணவுக்கடையில் நல்லா ஒரு சாப்பாடு வாங்கிக் கொடுங்க.

      Delete
    2. உணவுக் கடை எதற்கு வீட்டிலேயே அருமையான விருந்து வைத்துவிடுகிறேன் ஐயா
      வாருங்கள்

      Delete
  19. தங்களின் ஆயிரமாவது பதிவிற்கு வாழ்த்துகள் ஐயா
    தொடரட்டும் தங்களின் பதிவுகள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆயிரமாவது பதிவுக்கு ஜம்புலிங்கம் அய்யா தலைமையில் வலைச் சித்தர் சிறப்புரையில் தஞ்சை பெரிய கோயிலில் ஒரு விழா நடத்தி விடலாமா ஆசிரியரே.

      Delete
    2. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த கோயிலில், ஆயிரமாவது பதிவிற்குப் பாராட்டு விழா
      பொருத்தமாக இருக்கும்
      நடத்திவிடலாம் ஐயா

      Delete
  20. அரசியல், எழுத்துலகம், மற்ற கலைகள் சார்ந்து இயங்குபவர்களுக்கு அது தேவையில்லை. குடும்பக் கடமைகளை நிறைவேற்றி ஆரோக்கியத்துடன் உண்மைகளை உரக்கச் சொல்ல இமேஜ் தேவையில்லை. விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் சம கால நிகழ்வுகளை துணிச்சலும் தைரியத்துடன் பேச எழுதத் தெரிந்தால் போதுமானது. - 1000
    2009 ஜூலை 2020 மார்ச்
    10 வருடங்கள் 8 மாதங்கள்
    1000 பதிவுகள்

    10 வருடங்கள் - கற்றதும் பெற்றதும் - மிக விரிவான, அவசியமான, அனுபவப் பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் நேரம் ஒதுக்கி ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். நன்றி திரு ஜோதிஜி

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி நன்றி. இணைய உலகில் அடுத்தவர்களுக்காக வாழ்வது நீங்கள் மட்டுமே. உங்கள் தொடர்பில் உள்ள அனைவருக்கும் சரியாக நினைவில் வைத்து பிறந்து நாள் வாழ்த்து சொல்வது முதல் நல்ல எழுத்துக்களை பலருக்கும் அறிமுகம் செய்து வைப்பது வரை அனைத்துக்கும் என் வாழ்த்துகள்.

      Delete
  21. 1000 - பதிவுகள். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    கடந்து வந்த பாதையை சிறப்பாக அலசி இருக்கிறீர்கள். மேலும் பல பதிவுகளை நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் வந்து இருப்பீங்க தானே வெங்கட்.

      Delete
    2. என் பக்கத்தில் எழுதிய பதிவுகளின் எண்ணிக்கையைச் சொல்கிறீர்களா ஜோதிஜி?

      Delete
    3. ஆம். நீங்களும் தினமும் ஒன்று எழுதிக் கொண்டு இருக்குறீங்க தானே?

      Delete
    4. இன்று வரை 2129 பதிவுகள் எனது பக்கத்தில்.... நன்றி ஜோதிஜி.

      Delete
    5. அருமை. வாழ்த்துகள்.

      Delete
  22. அட்டகாசம். உங்கள் பதிவுகள் பலருக்கும் பாடங்கள்.

    தொடர்க உமது அரும் பணி.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் வளர்த்த பிள்ளை நான் சீனி. வயது வேணா உங்களுக்கு கம்மி. ஆனா நீங்க எனக்கு வழிகாட்டி தான். நன்றி சீனி.

      Delete
  23. ஆயிரமாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.    மென்மேலும் வளர வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ராம் எனக்கு நீங்க கொஞ்ச காலமாகத்தான் தெரியும். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொன்ன பிறகு தான் உங்கள் சாதனை புரிந்தது. வாழ்த்துகள்.

      Delete
    2. நன்றி ஜி.  அது இணைந்த முயற்சி.  வாழ்த்துக்கு சொந்தக்காரன் நான் மட்டும் இல்லை.

      Delete
  24. நண்பர்கள் கவனத்திற்கு இன்று வணிகம் பழகு 25 ஆவது அமேசான் தளத்தில் வெளியிட்டு உள்ளேன். 22.03.2020 ஞாயிறு மதியம் 1.30 முதல் இலவசமாக வாசிக்க கிடைக்கும். கீழே உள்ள இணைப்பில் சென்று பெற்றுக் கொள்ளவும். நாளை சுய ஊரடங்கு உத்தரவு என்பதால் நண்பர்களின் வசதிக்காக நாளை கிடைக்கு ஏற்பாடு செய்துள்ளேன். நன்றி.
    வணிகம் பழகு: Welcome to 100 Crores Club (25) (Tamil Edition) by ஜோதிஜி Joth... https://www.amazon.in/dp/B0867BLXSK/ref=cm_sw_r_tw_dp_U_x_I5FDEbSZ89HME via @amazonIN

    ReplyDelete
  25. "Passion பணத்தோடு தொடர்புடையது அல்ல."

    சரியா சொன்னீங்க ஜோதிஜி :-) . இது ஒரு உணர்வு பணத்தால் ஈடு செய்ய முடியாது.

    நீங்கள் கூறியுள்ள பல கருத்துகள் என்னுடைய மனநிலையை பிரதிபலிப்பதாக உள்ளது.

    எழுதுவது அதுவும் நமக்கு விருப்பமானதை எழுதும் போது சலிக்கவே சலிக்காது. தற்போது கால மாற்றத்துக்கு ஏற்ப அளவை குறைத்து இருக்கிறேன் அவ்வளவே.

    உங்களுடைய புத்தகம் எழுதும் வேகம் பார்த்து வியப்படைந்து இருக்கிறேன். ஒன்னு எழுதவே நாக்கு தள்ளிடுச்சு நீங்க என்னடான்னா Blog எழுதற மாதிரி புத்தகம் எழுதிட்டு இருக்கீங்க :-) .

    உண்மையிலேயே மிகப்பெரிய சாதனை தான். உங்களுக்கு எளிதாக இருக்கலாம் ஆனால், அனைவருக்கும் அப்படியல்ல.

    மேலும் பல கட்டுரைகள் புத்தகங்கள் எழுத வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. ஜோதிஜி வணக்கம்.
    பல நாட்களுக்கு பின் கரோனா(கொரோனா?) தயவால் இணையம் பக்கம் வந்துள்ளேன். உடனே பார்க்க எண்ணிய தளம் உங்களதுதான்.
    வந்து பார்த்தால் பிரமிப்பு! ஆயிரமாவது பதிவு.
    ஆனாலும் ஒரு ஏமாற்றம். இந்த பதிவிட்டது 19-3-2020.
    20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் புதியதாக ஒரு பதிவு இடவில்லை என்றால் அதற்கான புரிதல்:
    கடந்த 20 நாட்களாக தங்களுக்கு பிடிக்காத ஒன்றும் நடக்கவில்லை
    அல்லது
    நடந்த எந்த நிகழ்வும் தங்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை
    அல்லது
    நடக்கவில்லை/பாதிக்கவில்லை என்றால் ஏதேனும் ஏமாற்றமா?
    பகிருங்கள் ஜீ.
    பிறகு ஒரு முக்கிய விஷயம்.
    50-க்குத்தான் பொன் விழா
    25-க்கு வெள்ளி விழா!!
    மற்றபடி எழுதாவிட்டால் என்ன நடக்கும்
    எழுதுவதால் என்ன நடந்துவிடும் என்பதெல்லாம் மிகவும் கச்சிதமான விமர்சனம்.
    ஆயிரத்துக்கு வாழ்த்துகள்
    ஆயிரம் பல்லாயிரமாக ஓங்கி வளர மனதார பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இங்கு முப்பது நாட்கள் விடுமுறை. ஃபேஸ்புக்கில் தினமும் எழுதிக் கொண்டு தான் இருக்கிறேன். நன்றி தல. இந்த இணைப்பில் பாருங்க. கொரானா குறித்து தினமும் ஒன்று எழுதிக் கொண்டு வருகிறேன்.

      https://www.facebook.com/jothi.ganesan

      Delete
  27. மோடி ஆட்சி குறித்து உங்கள் கருத்தென்ன?

    அடுத்து வரப்போகும் அமித்ஷா ஆட்சியை எதிர்பார்க்கிறேன்.... ஆஹா அப்படியே உங்கள் வாக்கு பலிக்கட்டும் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.