ஆனால் இப்போது கோவிலுக்குள் நுழைந்த ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் நாடார்களை சமாளிப்பது பெரும் பாடாக இருக்க ஆதிக்க சாதியினர் எடுத்த ஆயுதம் கலவரம் என்பதாகும்.
நாம் இராமநாதபுர மாவட்ட வரலாற்று தொடரில் மேலே சொன்னது வலையை கழட்டி விட வாங்க என்ற தொடரின் நிறைவுப்பகுதி இது.
இந்த தொடரின் ஆரம்ப பகுதிகளை படிக்க விரும்புவர்கள் இங்கே இருந்து பயணிக்கவும்.
1860 ஆம் ஆண்டு ( இதில் உள்ள படங்களும் இந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றிய தொகுப்பு)
ஒருவரின் பொருளாதாரம் என்பது அவரின் மொத்த வாழ்க்கையையும் மாற்றி விடுகின்றது. சமூகத்தில் தனியான மரியாதை முதல் தனித்துவம் வரைக்குமாய் அவரைப் பற்றிய மொத்த கருத்துக்களும் மாற்ற காரணமாக இருந்து விடுகின்றது. நேற்று அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை விட இப்போது அவனால் நமக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே பார்க்கக்கூடிய சமூகத்தில் இது பெரிதான ஆச்சரியமல்ல.
தனி மனிதன் வாழ்க்கை மட்டுமல்ல. ஒரு நாட்டின் சரித்திரமே அந்த நாடு பெற்றுள்ள பொருளாதார வளத்தை வைத்து தான் மாற்றம் பெருகின்றது. நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் நாடார் இன மக்களின் சமூக வாழ்க்கையென்பது என்பது முற்றிலும் மாற உதவியதும் இந்த பொருளாதாரமே. இவர்கள் பெற்ற பொருளாதாரமே பலவகையிலும் உயர உதவியாய் இருந்தது. உயரும் போது உருவான தடைகளையும் தகர்த்தெறிய காரணமாகவும் இருந்தது.
இராமநாதபுர மாவட்டத்தின் சுற்று வட்டாரத்தில் உள்ள நாடார்கள் தங்களை பொருளாதார ரீதியாக வளப்படுத்திக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை என்பது மற்ற இனமக்களுக்கு உறுத்தலாக இருந்ததை விட இவர்களை சமூகத்தில் கீழ்நிலையில் வைத்துப் பார்த்த ஆதிக்க இன மக்களுக்கு பெரும் சவாலாக இருந்ததோடு ஒருவிதமான பொறாமையை உருவாக்கியது. இதில் முக்கியமாக பிராமணர்கள், வேளாளர்கள் கடைசியாக மறவர்கள். நாம் முன்னேற முடியவில்லை என்பதை விட முன்னேறியவர்களை எப்படி தடுப்பது? இது தானே இன்றுவரைக்கும் நடந்து வருகின்ற நிகழ்வாக இருக்கிறது.
இன்றைய தமிழ்நாடு அன்று வெள்ளையர்களின் ஆளுமையில் இருந்த போதிலும் அவர்களுக்கு விசுவாசமான பாளையக்காரர்கள், ஜமீன்தாரர்கள், குறுநில மன்னர்கள் என்று ஒரு அடிமை பட்டாளத்தை வைத்துக் கொண்டு ஆட்சி புரிய அவர்களுக்கு பெரிதான சுமைகள் இல்லை. ஒவ்வொரு கலவரங்களும் கணக்கில்லா பிரச்சனைகள் உருவாக இருந்தாலும் கடைசியில் வெள்ளையர்கள் எடுக்கும் முடிவென்பது யாருக்குச் சாதமாக இருக்கும் என்பதை இங்கே சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒவ்வொரு பகுதிகளிலும் பல கலவரங்கள் உருவாகத் தொடங்கியது.
அருப்புக்கோட்டை,பாலையம்பட்டி பகுதிகளில் தொடர்ச்சியாக காரணமில்லாமல் கலவரங்கள் உருவாகத் தொடங்கியது. 1874 ஆம் ஆண்டு மூக்கன் என்ற நாடார் வழக்கொன்றை தொடுத்தார். நான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் வணங்கச் சென்ற போது என்னை பலவந்தப்படுத்தி கோவிலில் இருந்து வெளியே தள்ளினார்கள் என்று கோவில் ஊழியர்கள் மேல் வழக்கு தொடுத்தார். இதுவொரு தொடக்கமே. ஆனால் இதனைத் தொடர்ந்து மதுரையைச் சுற்றியிருந்த ஒவ்வொரு பகுதியிலும் இது போன்ற பல வழக்குக்ள வெளியே வர ஆரம்பித்தது.
.
1878 ல் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட முன்சீப் பதவியில் இருந்தவர் புதிய சட்டமொன்றை இயற்றினார். நாடார்கள் ஆலயங்களின் நுழையக்கூடாது. தேங்காய் உடைக்கக்கூடாது என்றார். ஆனால் நாடார்கள் சாமி ஊர்வத்தை நடத்திக் கொள்ளலாம் என்று போனால் போகிறதென்று அனுமதி வழங்க இது அடுத்த அக்கப் போர்களை உருவாக்கத் தொடங்கியது. சாத்தூர் (1885) பகுதியில் இது போன்ற ஊர்வலத்தில் கலவரம் உருவாகத் தொடங்கியது. இதற்கென்று தனியாக ஒரு காரணத்தை சுட்டிக்காட்டினார்கள். நாடார்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் மட்டுமே ஊர்வலம் நடக்க வேண்டும். மற்ற பகுதிகளுக்கு கொண்டு வரக்கூடாது என்றனர். இவற்றைப் பார்த்த எட்டையபுரம் ஜமீன்தார் கழுகுமலை (1895) பகுதியில் தேரடித் தெருக்களில் நாடார்கள் ஊர்வலம் நடத்தக்கூடாது என்று தடையுத்தரவை முன்னமே வாங்கி வைத்துக் கொண்டார்.
நாடார் இனமக்கள் ஒவ்வொன்றையும் உடைத்து மேலே வந்துவிட எப்படி துடியாய் துடித்துக் கொண்டிருந்தார்களோ அதைப் போலவே வேளார்களும், மறவர்களும் சேர்ந்து நாடார்களுக்குண்டான எந்த உரிமைகளையும் கொடுத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். எட்டயபுரம் ஜமீன்தாரின் அக்கிரமங்களை பொறுக்கமுடியாத நாடார் இனமக்கள் இந்த பகுதியில் கிறிஸ்துமதத்தை (கத்தோலிக்கம்) தழுவியதோடு வழிபாடு நடத்துவதற்காக என்று தேரடி தெருவில் ஒரு கடையை வாங்கினர்.
காரணம் எட்டபுரம் ஜமீன்தார் மூலம் நடத்தப்படும் தேரோட்ட நிகழ்ச்சிகள் கடைத் தெருவின் வழியே தான் வரும் கிறிஸ்துவத்திற்கு மாறிய நாடார் இன மக்கள் தாங்கள் விலைக்கு வாங்கிய இந்த கடைக்கு முன்னால் பந்தல் போட்டு விட்டால் வரும் தேர் முன்னேறிச் செல்ல முடியாது. இது அடுத்த கலவரத்திற்கு அச்சாரமாய் இருக்க கல்வீச்சு முதல் தொடங்கி பெரிய கலவரத்தில் கொண்டு போய் நிறுத்தியது. உருவான கலவரம் (1899) நாடார்களின் மறக்க முடியாத ஒரு பெரிய நிகழ்வாக முடிந்து விட்டது. சிவகாசியில் முதல் முறையாக களத்தில் நின்று கொண்டு மறவர்களும் நாடார்களும் நேருக்கு நேர் மோத ஆரம்பித்தனர்.
இது போன்ற கலவரங்கள் ஏன் உருவானது? 1890 ஆம் ஆண்டு முதல் சிவகாசி பகுதியில் சமஸ்கிருதமயமாக்கல் சற்று விரைவாக நடந்தேறத் தொடங்கியது. ஒவ்வொரு நாடார்களும் தங்கள் பிராமணர்கள் போலவே மாற்றிக் கொள்ளத் தொடங்கினர். பிராமணர்களைப் போல பஞ்சகஞ்ச வேட்டி முதல் தலையில் குடுமி, பூணூல் வரைக்கும் என்று தங்களை மாற்றிக் கொண்டதுடன் தங்கள் இன மக்களையும் அது போல மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தங்கள் சங்கங்களின் மூலம் அறிவுறுத்தத் தொடங்கினர். குறிப்பாக சிவகாசி நாடார் இனமக்களின் தலைவராகயிருந்த செண்பககுட்டி நாடார் இதை தீவிரமாக முன்னெடுக்கத் தொடங்கினர்.
இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்த வேளார்களின் கண்ணில் கோபம் கொப்பளிக்க வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்க கிடைத்த வாய்ப்பு சிவகாசி கலவரம். ஊரடங்கு உத்திரவு போடும் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியது. இந்த கலவரங்களில் முக்கிய பங்காற்றியவர்கள் மறவர் இன மக்கள். மற்றொரு காரணம் நாடார்கள் தங்களை பல்வேறு விதமாக மாற்றிக் கொள்ள முயற்சி மேற்கொண்டதை விட ஏறக்குறைய இன போதை வந்தவர்களைப் போலவே உச்சக்கட்ட நடவடிக்கைளையும் செய்யத் தொடங்கினர்.
சிவகாசி என்பது நாடார்களின் பூர்விக நகரமல்ல. ஆனால் இதே காலகட்டத்தில் இந்த நகரின் மொத்த ஜனத்தொகையே 12000 பேர்கள் தான். ஆனால் இதே பகுதிகளில் தனியிடங்களில் வசித்த மறவர்களின் எண்ணிக்கை வெறும் 500 பேர்கள் மட்டுமே. பொருளாதார ரீதியாக பின்தங்கியிருந்த மறவர்களுக்கு வேறென்ன செய்ய முடியும்? இவர்களை இதுபோன்ற நடவடிக்கையில் பயன்படுத்திக் கொண்டவர்கள் வேளாளர் இனமக்களே. இவர்களுக்கு பின்புலமாக இருந்தவர்கள் பிராமணர்கள். திட்டம் வகுப்பது ஒருவர். இதை கொண்டு செலுத்துவது மற்றொரு. களத்தில் இறங்குபவர்கள் மறவர்கள். நாடார்களின் பொருளாதார வாழ்க்கையைப் பார்த்து வேளார்கள் எந்த அளவிற்கு எரிச்சல் பட்டார்களோ அந்தஅளவிற்கு பிராமணர்களுக்கும் உள்ளே புகைச்சல் இருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை.
காரணம் நாடார்களின் பொருளாதார வாழ்க்கை பிராமணர்களுக்கு பல சமயங்களில் உதவியாய் இருந்ததும் உண்மை. நாடார்கள் தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நல்ல நேரம் குறிப்பது முதல் பல விசயங்களுக்கு இந்த பிராமணர்களை பயன்படுத்திக் கொண்டனர். இதற்கு மேலாக தங்கள் நிகழ்ச்சிகளில் பல்லாக்கு தூக்குவதற்கு மறவர்களை பயன்படுத்திக் கொண்டனர்.
இதே மற்வர்களைத்தான் வேளாளர்கள் அடிதடிக்கும் பயன்படுத்திக் கொண்டனர். தொடர்ந்து வந்த ஒவ்வொரு கலவரத்தின் மூலம் நாடார்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட போதிலும் ஒவ்வொரு இனமும் இதே நாடார்களிடம் பலவிதங்களிலும் கடன்பட்டிருப்பது புரிய ஆரம்பித்தது.
சமூகத்தின் பொருளாதார வாழ்வில் தங்களை விட நாடார்கள் எல்லா நிலையிலும் உயர்ந்த நிலையில் இருந்த போதிலும் வேளார்களால் ஒரு அளவிற்கு மேல் நாடார்களை பணிய வைக்கமுடியாமல் தோற்க தோற்க மனதில் வெஞ்சினம் உருவாகத் தொடங்கியது. ஒவ்வொரு கலவரமும் உருவாவதும் அதுவே மேலும் மேலும் வளர்வதற்கும் இந்த கோவில்களே முக்கிய காரணமாக இருந்தது.
சிவகாசியில் நடுநாயமாக இருந்த சிவன் கோவிலில் நாடார்கள் நுழைய அனுமதியில்லை. இதற்கென்று நாடார்கள் உருவாக்கியிருந்த பத்ரகாளி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில் மூலமே தங்களை நிலைநாட்டிக் கொள்வதும், தங்களின் கூட்டங்களை இதே கோவிலில் நடத்திக் கொண்டிருந்த போதிலும் நாடார்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
ஆலயங்களில் நுழைய எங்களுக்கும் உரிமை இருக்கிறது என்று அடுத்தடுத்த ஒவ்வொன்றையும் உருவாக்கிக காட்ட நாடார்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் தீராத பகையை, கலவரத்தை உருவாக்கத் தொடங்கியது. கோவில் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டு ஊரடங்கு உத்திரவு போடும் அளவிற்கு பெரிய பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்த்தது. இதுவே நாடார்களை பழிதீர்க்க, அடக்கி வைக்க சரியான தருணமென்று ஒரு பெரும் கூட்டணி உருவானது. இந்த கூட்டணியில் முக்கியமாக இருந்தவர்கள் மறவர் குல ஜமீன்தாரர்கள், பிராமணர்கள், வேளார்கள் தலைமை வகித்தனர்.
இதற்காகவே இவர்கள் மேற்கு இராமநாதபுரம், வடக்கு திருநெல்வேலி, தெற்கு மதுரைப் பகுதிகளில் வேலைவெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த மறவர்கள், கள்ளர்கள், பள்ளர்களை கொண்டு வந்து இறக்கினர். சிவகாசி மற்றும் சுற்றிலும் உள்ள நாடார் வீடுகளை சூறையாடி கொள்ளையடிக்கத் தொடங்கினர். ஒவ்வொரு பகுதிகளாக முடித்து சிவகாசிக்குள் நுழைந்த போது வேளார்களும் மற்ற சமூகத்தினர்களும் சொல்லிவைத்தாற் போல ஊரில் இருந்து வெளியேறி விட நாடார் சமூகத்தினர் மட்டும் தனித்து விடப்பட்டனர்.