அஸ்திவாரம்

Wednesday, April 20, 2011

வெறி தீர்த்த ராஜபக்ஷே உள்ளே சிக்குவாரா?

புது மாப்பிள்ளைபோல உலக நாடுகளை வலம் வந்த இலங்கை அதிபர்

ராஜபக்ஷே, இப்போது மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறார்! ஈழத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான 'ஐ.நா. பொதுச் செயலாளர் குழு’ வெளியிட்டுள்ள அறிக்கைதான் இதற்குக் காரணம்! 
ஈழப் போரின் கடைசிக் காலம் பற்றி விசாரித்து, தனக்கு ஆலோசனை சொல்ல கடந்த ஆண்டு ஜூன் 22-ல்  ஒரு குழுவை அமைத்தார்,

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன். வட கொரியாவுக்கான ஐ.நா-வின் சிறப்புத் தூதரான இந்தோனேஷியாவின் மர்சுகி தருஸ்மன், தென் ஆப்பிரிக்க மனித உரிமை ஆர்வலரான யாஸ்மின் சூக்கா, அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிபுணர் ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் குழுவில் நியமிக்கப்பட்டனர்.

இந்த குழுவின் நியமனத்தையே கடுமையாக எதிர்த்தது இலங்கை அரசு. ''அந்த மூவர் குழு நாட்டுக்குள் வந்தால், அவர்களை அனுமதிக்க மாட்டோம்!'' எனப் பகிரங்கமாகவே சொன்னார் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.
இந்த மிரட்டலுக்கு ஐ.நா. தரப்பில் குறிப்பிடும்படியான பதில் எதுவும் தரப்படவில்லை. இலங்கைக்குள் போகாம​லேயே விசாரணையை முடித்தது மூவர் குழு!

கடந்த 12-ம் தேதி பான் கி மூனிடம் அறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையைப் பகிரங்கமாக வெளியிடு​வதற்கு முன்பே, இலங்கை அரசுக்கு அனுப்பிவைத்​தார் பான் கி மூன். முறைப்படி அறிவிக்கப்படும் முன்பே, கொழும்பு பத்திரிகை மூலம் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானது.

''இலங்கை ராணுவம் செய்தது போர்க் குற்றம்தான்!'' என அடித்துச் சொல்லும் இந்த அறிக்கை, ''2008 செப்​டம்பர் முதல் 2009 மே 19 வரை வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவம் பெரிய அளவிலான குண்டு வீச்சுகளை நடத்தியதில், ஏராளமான பொது மக்களைக் கொன்று குவித்துள்ளது. வன்னியின் 3.3 லட்சம் மக்களை​யும் போரினால் சுருங்கிய குறுகிய பிரதேசத்தில் மொத்தமாக ஒதுங்கச் செய்தனர்.

'தாக்குதலற்ற பகுதி இது’ என்று அறிவித்துவிட்டு, ஒட்டுமொத்தமாக அங்கு குவிந்த மக்கள் மீது கனரக ஆயுதங்களைக்கொண்டு தாக்கினர். 

மருத்துவமனைகள் எனத் தெரிந்தும் அரச படைகள் அவற்றின் மீது குறிவைத்து, எறிகணைகள், மோர்ட்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஐ.நா. அவையின் உணவு, உதவி முகாம்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வாகனங்கள், உதவிக் கப்பல்களும் அரசப் படைகளின் குண்டுவீச்சுகளுக்குத் தப்பவில்லை. சில மருத்துவமனைகள் மீது பல முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலால் படுகாயம் அடைந்த மக்களுக்கு உயிர்த் தேவையான அடிப்படை சிகிச்சைகூடக் கிடைக்கவிடாமல், மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியது இலங்கை அரசு.

2009 ஜனவரி முதல் மே வரை மட்டுமே பத்தாயிரக்​கணக்கில் மக்கள் இப்படி அடையாளம் தெரியாமல் செத்துப்போனார்கள். சண்டைப் பிரதேசத்தில் இருந்து தப்பியவர்​களிடம், அரசுத் தரப்பு மிக மோசமாக நடந்துகொண்டது. விடுதலைப் புலிகள் என சந்தேகப்​பட்டவர்களை எல்லாம் ரகசியமாகக் கொண்டு​போய், கணிசமானவர்களைக் கொன்றுபோட்டது ராணுவம். அவர்களில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாகத் தெரிகிறது. 

தப்பியவர்கள் அனைவரும் முகாம்களில் நெருக்கடியாக அடைக்கப்பட்டனர். விசாரணைக்கு ஆளா​னவர்கள், கடுமையாக சித்ரவதை செய்யப்​பட்டனர். புலி என சந்தேகிக்கப்​பட்டவர்கள் வெளியுலகுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவாறு சொல்லவொண்​ணாத சித்ர​வதைத் துன்பங்களுக்கு ஆளாக்கப்​பட்டனர்!'' எனக் குற்றம் சாட்டும் ஐ.நா. நிபுணர்கள், புலிகள் மீதும் போர்க் குற்றம் சுமத்தியுள்ளனர்.

''போர்ப் பிரதேசத்தில் பொது மக்களைக் கேடயங்களாகப் பிடித்து​வைத்து, விடுதலைப் புலிகள் அங்கிருந்து நகரவிடாமல் செய்தனர். 14 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களையும் அவர்கள் கட்டாய​மாகப் படையில் சேர்த்தனர். பிப்ரவரி மாத காலத்தில் தப்பிச் செல்லும் பொது மக்களையும் அவர்கள் தாக்கினர்'' என்றும் ஐ.நா. நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைக் குற்றச்சாட்டுகளை அடுத்து, நல்லிணக்க ஆணைக் குழு என்ற ஒன்றை இலங்கை அரசு அமைத்தது. சண்டை நிறுத்தம் தொடங்கிய 2002 முதல் 2009 மே வரையிலான இனப் பிரச்னை குறித்து விசாரிப்பதாக அறிவிக்கப்பட்ட இந்தக் குழுவைப்பற்றியும், ஐ.நா. நிபுணர்கள் காட்டமாக விமர்சித்து இருக்கின்றனர். 

''இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக் குழு, சர்வதேச மனித உரிமைச் சட்ட விதிகளின்படி அமைக்கப்படவில்லை. இறுதிக் கட்டப் போரில் உண்மையில் என்ன நடந்தது என்பதுபற்றி நேர்மையாக விசாரிக்கவும் இல்லை. பாதிக்கப்பட்ட துயரத்தில் இருப்பவர்களை மரியாதையாக நடத்தாததுடன், சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பையும் வழங்கவில்லை. ஏற்கெனவே, பான் கி மூனும் ராஜபக்ஷேவும் கூட்டறிக்கையில் ஒப்புக்கொண்டதற்கு மாறாக, இந்த நல்லிணக்க ஆணைக் குழு பெரும் தவறைச் செய்துவிட்டது!'' என்றும் நிபுணர் குழுவினர் குற்றம் சாட்டினர்.
ஆனால், வேதனை என்ன தெரியுமா? போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை அரசே, மனித உரிமை மீறல்கள், மனிதகுல விரோத அத்துமீறல்கள் குறித்து நேர்மையாக விசாரணையைத் தொடங்க வேண்டும். 

இந்த விசாரணையைக் கண்காணிப்பதற்கான சர்வதேச முறை ஒன்றை பான் கி மூன் ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது அறிக்கை.
மேலும், ''இலங்கை அரசு மற்றும் அதனுடன் சேர்ந்து இயங்கும் ஆயுதக் குழுக்களின் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் நிலைமை தொடர்பாக உடனடியாக அரசுத் தரப்பு புலன்விசாரணையை நடத்த வேண்டும். புலி என சந்தேகிக்கப்படுவோர் உள்பட பிடித்துவைக்கப்பட்டு உள்ள அனைவரின் பெயர்களையும் அறிவிக்க வேண்டும். அவர்களின் குடும்பத்தினருடனும், வழக்கறிஞர்​களுடனும் தொடர்புகொள்ள அனுமதிக்க வேண்டும். பிடித்துவைக்கப்​பட்டதை எதிர்த்து சட்ட ரீதியாக வாதாடவும் அனுமதிக்க வேண்டும். 

மக்களைப் பய பீதியில் ஆழ்த்தி, சுதந்திரத்தைத் தடுக்கும் அனைத்து வித அரச வன்முறைகளையும் நிறுத்த வேண்டும். கடைசிக் கட்டப் போரின்போது ஏராளமான மக்கள் படுகொலை செய்யப்பட்டதில் அரசின் பங்குபற்றி பகிரங்கமாக விளக்கம் ஒன்றை வெளியிட வேண்டும். இந்த அறிக்கையின் அடிப்படையில், இலங்கை அரசின் மீதான மனித உரிமை மீறல் தீர்மானத்தை, ஐ.நா. மனித உரிமை ஆணையம் மறு பரிசீலனை செய்யவேண்டும். போரின்போதும், அதன் பின்பும், இலங்கையில் ஐ.நா. அமைப்புகளின் செயல்பாடுகள்பற்றி ஐ.நா. பொதுச் செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும்!'' என்றும் மூவர் குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

தமிழ் மக்களைப் படுகொலை செய்து சிங்களப் படை செய்த போர்க் குற்றத்தை, ஐ.நா. நிபுணர் குழுவினர் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து, ''சர்வதேச விசாரணைக் குழுவை பான் கி மூன் அமைத்து, போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இதைக் கேட்டு ஆவேசமடைந்த ராஜபக்ஷே, ''ஐ.நா-வுக்கு எதிராகப் போராட்டம் நடத்துங்கள்!'' என்று சிங்கள மக்களைத் தூண்டிவிட்டுள்ளார். ''உறுப்பு நாடு என்கிற முறையில் இலங்கையை ஐ.நா. காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால், ஐ.நா. பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகார​முள்ள சீனா, ரஷ்யாவின் உதவியை நாடுவோம்!'' என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார் ராஜபக்ஷேவின் தம்பி கோத்தபய ராஜபக்ஷே.

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் அமைப்புகளோ, ''முக்கியமான சில உண்மைகளை இந்தக் குழு ஒப்புக்​கொண்டுள்ளது. போர்க் குற்றத்தை வேடிக்கை பார்த்த ஐ.நா. அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுபற்றி இதில் எந்தக் குறிப்பும் இல்லையே! எமது மக்களைத் துடிக்கத் துடிக்க சிங்களப் படை கொன்று குவித்தபோது, தடுத்திருக்க வேண்டிய ஐ.நா., இனி மேல் நீதியைத் தரும் என்று நம்பிவிட முடியாது!'' என்று பரவலாகக் கருத்துகளைத் தெரிவித்து உள்ளன.

வெள்ளைக் கொடி ஏந்திச் சென்ற நடேசன் குழுவினரைப் படுகொலை செய்தது தொடர்பாக, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஐ.நா-வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியான பாலித கோகன்ன மீது வழக்கு தொடுத்துள்ளது, சுவிஸ் ஈழத் தமிழர் அவை. அவையின் சட்ட ஆலோசகரும் இந்த வழக்கைத் தொடர்ந்தவர்களில் ஒருவருமான லதான் சுந்தரலிங்கத்திடம் இந்த அறிக்கைபற்றிக் கேட்டபோது, சட்ட நுணுக்கங்களை விவரித்தவர், ''சிங்களப் படை செய்த போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்கள் எம்மிடம் ஏராளமாக உள்ளன. இதைவைத்து, இலங்கை அரசுத் தரப்பை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி சர்வதேச சட்டங்களின் மூலம் நாமே தண்டனை பெற்றுத் தருவதுதான் சிறந்த வழி. கட்டாயம் நம்மால் இதைச் சாதிக்க முடியும். உலகின் எந்த சக்தியாலும் இதைத் தடுத்துவிட முடியாது!'' என்றார் உறுதியுடன்.

அவர்கள் சரி, தாய்த் தமிழகம் இதில் என்ன செய்யப்போகிறது?! 

 நன்றி- இரா.தமிழ்க்கனல்-

23 comments:

  1. //அவர்கள் சரி, தாய்த் தமிழகம் இதில் என்ன செய்யப்போகிறது?//

    தேர்தல் முடிந்துவிட்டதால் இது குறித்த பேச்சு மூச்சு இருக்காது

    ReplyDelete
  2. அறிக்கையையும் செய்தியையும் செய்தியாகவே விடாமல் கிண்டிக் கிளறி வெளிக்கொண்டு வருவது நம்மவரின் ஒற்றுமையில்தான் !

    ReplyDelete
  3. //சிங்களப் படை செய்த போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்கள் எம்மிடம் ஏராளமாக உள்ளன. இதைவைத்து, இலங்கை அரசுத் தரப்பை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி சர்வதேச சட்டங்களின் மூலம் நாமே தண்டனை பெற்றுத் தருவதுதான் சிறந்த வழி. கட்டாயம் நம்மால் இதைச் சாதிக்க முடியும். உலகின் எந்த சக்தியாலும் இதைத் தடுத்துவிட முடியாது//
    இது நடந்தால் மிகவும் நல்லது.இதற்கு துணை போன துரோகிகளை என்ன செய்வது? அவர்களும் தண்டிக்கப் படவேண்டியவர்களே. ஒருவேளை இராஜபக்சே& கோ தண்டிக்கப்பட்டால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு.இதிலாவது தமிழர்கள் ஒன்றுபட்டு போராடினால் நல்லது நடக்கும்.

    ReplyDelete
  4. நடந்தா நல்லாத்தான் இருக்கும். இலங்கையின் மீதான மேற்குலத்தின் அதிருப்தியும், ஐ. நா_வின் மறு தேர்வு பான் கீ மூன் பொருட்டும் காற்று என்னவோ நம்ம திசையில் அடிப்பதனைப் போன்றுதான் இன்றையச் சூழல்... இப்படி ஏதாவது உள் அரசியலைக் கொண்டு ஏதாவது நல்லது நடந்தாத்தான் நமக்குண்டு.

    காலம் கனியும்... ஒற்றுமையுடன் பொறுத்திருப்போம்!

    ReplyDelete
  5. தாய்த்தமிழகம் 'அன்னை சோனியா' செய்வதை ஏற்றுக் கொள்ளும். தங்கபாலு மட்டுமல்ல நாமும் ஒரு வகையில் காமெடி பீஸ் தான்.

    ReplyDelete
  6. " வேதனை என்ன தெரியுமா? போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை அரசே, மனித உரிமை மீறல்கள், மனிதகுல விரோத அத்துமீறல்கள் குறித்து நேர்மையாக விசாரணையைத் தொடங்க வேண்டும். "

    இது எந்தவகையில் நியாயம் அன்பின்....

    ReplyDelete
  7. //ராஜபக்ஷே, இப்போது மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறார்!//

    இப்போதல்ல. இனி எப்போதும்....

    ReplyDelete
  8. இந்தியா இதில் வழமைபோல் சட்டச்சிக்கல் என்று தப்பிவிடும் குள்ள நரி அல்லவா!

    ReplyDelete
  9. //ராஜபக்ஷே, இப்போது மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறார்! //

    மன உழைச்சல்ன்னா என்னங்க!அதாவது தாத்தா கட்டுமரத்துல மிதப்பேன்ங்கிற மாதிரி நாட்டுக்காக மின்சார நாற்காலியிலும் உட்காருவேன்னு சொல்லி உசுப்பி விடறதா?அல்லது விஜயகாந்த் ஸ்டைல்ல 4 ரவுண்டு அதிகமாப் போட்டாத்தான் தூக்கமே வருதுன்னு சொல்லுறாரா?அல்லது இறந்தவங்க அதே நிலையில கனவுல வந்து பயப்படுத்துறாங்களா?

    இந்தாளுக்கும் கோத்தபயலுக்கும் நல்ல சாவு வராது.

    ReplyDelete
  10. வேதனையான பதிவு.
    நம்மவர்கள் வழக்கம் போல் கிடப்பில் போட்டு விடுவார்கள். இவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.

    ReplyDelete
  11. ஜோதிஜி,

    இது குறித்து தாய் தமிழகம் என்ன.... செய்யப்போகிறதா?

    நல்லா கேட்டீங்க. Sorry to say this... தாய்த்தமிழகம் தன் கடமையிலிருந்து தவறியது தான் வரலாறாகிப் போனதே.

    இனிமேல், எங்களுக்காக இல்லை, உங்கள் மீது விழுந்த பழியைப் போக்கவேனும் ஏதாவது செய்ய முடியுமா பாருங்கள்!!!!

    ReplyDelete
  12. இன்னோர் கணக்கு,

    //Based on information from the Kacheris (Local Government Office) of Mullativu and Killinochi about the population in Vanni in early October 2008 and number of people who came to government controlled areas after that, 146,679 people seem to be unaccounted for. According to the Kacheri, the population in Vanni was 429,059 in early part of October 2008. According to UN OCHA update as of 10th July 2009, the total number of people who came out of the Vanni to government controlled areas after this is estimated to be 282,380.

    - Statement in front of LLRC by Bishop of Mannar Rev Fr Rayappu Joseph, Very Rev. Fr. Victor Sosai and Rev. Fr. Xavier Cross//

    http://tamilnet.com/art.html?catid=13&artid=33825

    146, 679 இவ்வளவு பேருக்கு என்ன நடந்து? இது தான் இப்போ உண்மையான கணக்கு என்று நம்பப்படுகிறது.

    இன்னொன்று, ராஜபக்க்ஷே பற்றியது. அவர் இப்பவெல்லாம் மின்சாரக்கதிரை, மரணம் என்று உளறுகிறார் போலை. போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டால் தனக்கு என்ன தண்டனை கிடைக்கலாம் என்பது ஒருவேளை இப்பவே புத்தியில் உறைக்குது போல.

    நிறைய சொல்லலாம். சொல்லும் மனநிலை இல்லை.மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
  13. இப்போதல்ல. இனி எப்போதும்....
    இந்தாளுக்கும் கோத்தபயலுக்கும் நல்ல சாவு வராது.
    நம்மவர்கள் வழக்கம் போல் கிடப்பில் போட்டு விடுவார்கள். இவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.

    இது போல நிறைய சொல்லலாம். சொல்லும் மனநிலை எனக்குக் கூட இல்லை.

    மீண்டு வர வேண்டும். அதர்மம் நீடிக்காது என்பதை நிரூபிக்க யாராவது எவர் ரூபத்திலாவது வந்தே தான் ஆக வேண்டும். நாம் வாழும் காலத்தில் பார்த்த இந்த கோரத்தினைப் போல இவர்கள் படப் போகும் கொடுமையான தண்டனைகளையும் நாம் பார்த்து விட்டால் நல்லதே.

    ReplyDelete
  14. கொன்னப்பவே நாங்க அழல..
    புதைச்ச அப்புறம்..அழவா போறம்..
    கறி சோறு துன்னுட்டு..
    ஐ.பி.எல்..மேச்சுல மலிங்கா எப்டி பந்து வீசரானு பாப்போம்..


    ஏன்னா..
    நாங்க இந்தியர்கள்..!?!

    ReplyDelete
  15. தாய்த்தமிழகம் பெரிதாய் என்ன செய்துவிடும்? பேதையராய், பேடிகளாய் சிந்தை மயங்கிச் சில்லறைச் சுகங்களில் மூழ்கிக் கிடக்கும் :(

    ReplyDelete
  16. பதிவுலகம் வந்த துவக்க காலம் முதல் நூல் இழையாய் ஈழம் குறித்த பார்வையோடு வருபவர்களில் நீங்கள் முதன்மையானவர் என்பதை இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.

    ReplyDelete
  17. தங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
    http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_23.html

    ReplyDelete
  18. http://vinothpakkangal.blogspot.com/2011/04/vs.html

    ReplyDelete
  19. கொலை செய்ய தூண்டுபவன் முதல் குற்றவாளி, அப்போ தற்கொலை செய்ய பயற்சி கொடுப்பவன் ?

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.