நாம் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்த கதையை, அவர்களுக்கு இங்கிருந்த இந்திய சூழ்நிலை எப்படி உதவியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இராமநாதபுரம் மாவட்டத்தை எப்படி ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வந்தார்கள் என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.
14 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களை முகமதியர்கள் வென்றனர். மறுபடியும் போராடி பாண்டியர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினாலும் 16 ஆம் நூற்றாண்டில் தெலுங்கு நாயக்கர்களிடம் தோற்றன்ர். மதுரையை அடிப்படையாக வைத்து ஆட்சி புரிந்த நாயக்கர்கள் இராமநாதபுரம், திருநெல்வேலி சுற்றியுள்ள தென்மாவட்டங்களில் தங்களின் அதிகாரத்தை வலுவாக்கினர், அப்போது கன்யாகுமரி மட்டும் திருவாங்கூருடன் சேர்ந்திருந்தது. ஏற்கனவே ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்களின் சிறப்பான நிர்வாகத்தில் உள்ளேயிருந்த ஒவ்வொரு பகுதியும் "நாடு" என்ற பெயரில் இருந்தது. இந்த நாடு என்ற பெயர் தான் இன்று வரையிலும் இராமநாதபுரம் மாவட்டம் சார்ந்த பல்வேறு இனமக்களிடம் இருந்து வருகின்றது.
தென்மாவட்ட மக்களிடம் நாம் பேசிப்பார்த்தால் அதுவும் முக்குலத்தோர் மக்களிடம் உரையாடினால் இந்த நாடு என்ற வார்த்தை வந்துவிடும். ஒவ்வொரு நாடு என்ற பகுதிகளுக்குள் பல் கிராமங்கள் இருந்தது. நாயக்கர்களின் வரிசையில் வந்த விஸ்வநாத நாயக்கர் (1529 முதல் 1564 வரை) சிறந்த நிர்வாகத்தை உருவாக்கும் பொருட்டு தமது ஆட்சி எல்லைக்கு உட்பட் பகுதிகளை 72 பாளையங்களாக மாற்றினார்.. தனது நம்பிக்கைக்கு பாத்திரமான நபர்களிடம் அந்தந்த பகுதியின் பொறுப்பைக் கொடுத்து பாளைய்த்து தளபதியாக நியமித்தார். இவர்கள் தான் உள்ளே உள்ள கிராமவாசிகளிடம் வரி வசூல் செய்வது முதல் அந்த கிராம மக்களை பாதுகாப்பு வரைக்கும் உள்ள அத்தனை விசயங்களுக்கும் பொறுப்பாக இருந்தனர். இது போன்ற பதவிகளில் தெலுங்கு பேசும் நாயக்கர்கள் முதன்மையாகவும், மறவர் குலத்தில் பிறந்தவர்கள் அடுத்த நிலையிலும் இருந்தனர். காரணம் இன்று வரைக்கும் மறவர் குலத்தில் உள்ளவர்களின் வீரமும் அவர்களின் முன் கோபத்தையும் பழகியவர்கள் நன்றாக உணர்ந்தே இருப்பார்கள்.
18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பல தென்னிந்திய பகுதிகள் கர்நாடகத்தில இருந்த நவாப்பிடம் மாறிய போது பாளையக்காரர்கள் தங்களை காத்துக் கொள்ள ஊரைச்சுற்றி அகழியை வெட்டி வைத்ததோடு பல போர்ப் படைகளை உருவாக்கியும் வைத்திருந்தனர். ஆனால் காலப்போக்கில் பாளையக் காரர்களின் சுயநலமும், ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு சாக குழப்பமும் கூச்சலுமாய் பாளையக்காரர்களின் நிர்வாகம் சீர்கெடத் துவங்கியது. இது போன்ற சமயத்தில் இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கும் முக்குலத்தோரில் ஒரு பிரிவான மறவர் இன மக்கள் தான் ஒவ்வொரு கிராமத்திற்கும் காவல் பணியில் இருந்தனர். இந்த மறவர்களுக்கு தேவைப்படும் ஊதியத்தை நெல்லாக பணமாக கிராம மக்கள் வழங்கிவந்தனர். இந்த மறவர்கள் தான் அந்தந்த கிராம மக்களின் மொத்த உடைமைகளுக்கும் பொறுப்பாக இருந்தனர். காந்தி சொன்ன கிராம சுயராஜ்யத்தியத்தை இது போன்ற சம்பவங்களின் மூலமாக நாம் நன்றாக உணர்ந்து கொள்ள முடியும்.
காவல் பொறுப்பில் இருந்த மறவர் குல இளைஞர்கள் பல முறை தேவையில்லாமல் திருட்டுப் பழியை ஏற்றுக் கொண்டு அதற்கான நஷ்ட ஈடுகளையும் கிராமத்து மக்களுக்கு கொடுத்த பல அதிசயங்களை வரலாற்றுக் குறிப்புகள் போகிற போக்கில் தெரிவிக்கின்றது. மொத்தத்தில் கிராம வாழ்க்கையில் வாழ்ந்த மக்களுக்கு ராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்று வாழ்ந்திருந்தாலும் தங்கள் கிராமத்து வாழ்க்கை உணர்ந்து உண்மையாகவே வாழ்ந்து இருக்கின்றனர். மொத்த பிரச்சனைகளும் மேலேயிருந்த தலைகளால் தான் உருவாகி ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த மாவட்டம் பல மாறுதல்களை பெற்று இருக்கிறது.
தென்னிந்திய பகுதிகளில் உள்ளே வந்த நவாப் தன்னுடைய ஆட்சி பலவீனமாகத் தொடங்கிய போது தங்கள் ஆட்சியில் இருந்த பகுதிகளை மீட்டுத் தருமாறு ஆங்கிலேயர்களிடம் கோரிக்கை வைக்க 1751 ஆம் ஆண்டு திருநெல்வேலிக்கு அருகே உள்ள பாளைங்கோட்டையில் ஆங்கிலேயர்கள் முதன் முதலாக ஒரு நிரந்தர படைப் பிரிவை உருவாக்கி வைத்தனர்.இதன் தொடர்ச்சியாக உள்ளேயிருந்த ஒவ்வொரு பாளையக்காரர்களுடனும் ஆங்கிலேயர்கள் போர் செய்து தங்கள் வழிக்கு கொண்டு வர ஆரம்பித்தனர்.
கடைசியாக 1783 மற்றும் 1799 ஆம் ஆண்டு நடைபெற்ற இரு பெரும் போர்களின் இறுதிக்கட்டமாக கிழக்குத் திருநெல்வேலியிலுள்ள பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரராக இருந்த கட்டமொம்ம நாயக்கரை (வீர பாண்டிய கட்டபொம்மன்) எதிர்த்து நடைபெற்றது..இதுவரைக்கும் ஆங்கிலேர்களுக்கு அடிபொடியாக இருந்த நவாப் உள்ளே உள்ள பகுதிகளில் இருந்து வரி வசூல் செய்து ஆங்கிலேயர்களிடத்தில் கொடுத்து அவர்களின் விசுவாசியாக இருந்தார். நவாப் ஆங்கிலேயர்களுடன் போட்டு வைத்திருந்த ஒப்பந்தமும் 1785 ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்தது.
இதற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் நேரிடையான நடவடிக்கையில் இறங்கி மற்ற பகுதிகளுடன் நவாப் ஆளுமையில் இருந்த பகுதிகளையையும் தங்கள் ஆட்சி அதிகாரத்திற்குள் கொண்டு வந்து சேர்ந்தனர். ஆங்கிலேயர்கள் ஈழத்திலும் இந்த முறையில் தங்கள் ஆட்சியை உருவாக்கினர். ஒருவரை வைத்து உதவி பெற்று கடைசியாக அவரையே அழித்து முடித்துவிடவேண்டியது. காட்டிக் கொடுத்தவனும் சாக, காட்டிக் கொடுக்கப்பட்டவனும் செத்துப் போக ஆங்கிலேயர்களுக்கு பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும்.
1801 ஆம் ஆண்டு கட்டபொம்ம நாயககரின் தோல்விக்குப் பிறகு கர்நாடகப் பகுதி முழுவதும் ஆங்கிலேயர்கள் நிர்வாகத்தின் கீழ் வந்தது. தங்கள் பேச்சை கேட்க தயாராக இருந்த பாளையக்காரர்களை ஆங்கிலேய அரசாங்கம் ஜமீன்தாரர்களாக நியமித்து மற்ற படைகளை கலைத்து விரட்டியடித்தது. இப்போது தான் ஆங்கிலேய அரசாங்கம் முழுமையாக இந்த பகுதிகளில் செயல்படத் தொடங்கியது.
1801 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கத்தில் முதல் கலெக்டர் நிர்வாக பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது இராமநாதபுரம், சிவகங்கை பகுதிகள் இரு வேறு கூறுகளாக இருந்தது. இதன் நிர்வாகம் முழுக்க ஆங்கிலேயர்களின் வசமிருந்தாலும் உள்ளே உள்ள பகுதிகளில் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் பாளையக்காரர்களும் இருந்தனர். இவர்களைத்தான் ஜமீன்தாரர்கள் என்று அழைக்கப்பட்டனர். 1803 ஆம் ஆண்டு மேலே சொன்ன இரண்டு பகுதிகளை இணைத்து கலெக்டர் நிர்வாகத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டம் என்ற பெயரில் உருவானது. ஆனால் இடையில் நடந்த மாறுதலுக்கு அப்பாற்பட்டு இறுதியாக 1910 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் ஆகிய தாலூகாக்களைச் சேர்த்து உள்ளேயிருந்த இரண்டு ஜமீன்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஏழு தாலூகாக்களையும் சேர்த்து இந்த இராமநாதபுரம் என்ற மிகப் பெரிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.
இதற்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் பல முறை மாற்றி அமைக்கப்பட்டு இருந்தாலும் இராமநாதபுரம் மாவட்டம் என்ற ஒரு பெயரில் உருவாக்கப்பட்ட பிறகு நெல்லை மாவட்டம் எட்டு வட்டங்களாக பிரிக்கப்பட்டு இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்று 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டபோது திருவாங்கூருடன் இணைந்து இருந்த செங்கோட்டை வட்டம் நெல்லை மாவட்டத்ததுடன் சேர்க்கப்பட்டது. அதே நேரத்தில் தென் திருவாங்கூரில் உள்ள தமிழ் வட்டங்கள் நான்கையும் சேர்த்து புதிதாக கன்யாகுமரி மாவட்டம் உருவானது.