புதிதாக படிக்கத் தொடங்குபவர்கள் இதை சொடுக்கி படித்து விட்டு தொடர்ந்தால் நலமே விழைவு.
முதல் பகுதி
இரண்டாம் பகுதி
மூன்றாம் பகுதி
நான்காம் பகுதி
ஐந்தாம் பகுதி
பிரிந்து போன மகளுக்கு இறந்து போன அம்மா எழுதியது.
நம் இருவருக்குமிடையே இருக்கும் இடைவெளியை நிரப்பக்கூடியதாய் இந்த கடிதம் இருக்குமென்று நம்பி இதை எழுதத் தொடங்குகின்றேன்.
என்னுடைய விருப்பமில்லாமல் பதினைந்து வயது இடைவெளியை எவரும் பொருட்படுத்தாமல் திருமணம் என்ற அலங்கோலம் நடந்த போது முதல் முறையாக இறந்தேன். ஆண்மையற்ற ஓழுக்கமற்ற கணவனுடன் வாழ்ந்த ஒவ்வொரு இரவுமே செத்துக் கொண்டுருந்தேன். உடலால் மட்டுமே வாழ்ந்த என் வாழ்க்கையில் உன் வருகையும் நீ என்னை புரிந்து கொண்ட பிறகு தான் உண்மையிலேயே வாழத் தொடங்கினேன்.
ஆனால் இதைபடிக்கும் போது இந்த உடல் கூட நெருப்பில் கலந்து சாம்பலாய் மாறிப் போயிருக்கும். ஆனால் நீ சுவாசிக்கும் காற்றில் கலந்து உன்னையே கவனித்துக் கொண்டுருக்கும் உன் அம்மாவை இதை படித்து முடித்த பிறகாவது புரிந்து கொள்ள முயற்சிப்பாயா மகளே?
இன்னும் சில மணி நேரத்திலோ அல்லது சில நாட்களிலோ நான் இருக்கப் போவதில்லை. என்னுடைய நோயின் தாக்கம் எனக்கான விடுதலையை தெளிவாக புரியவைத்திருக்கிறது. என்னுடைய உயிர்ப்பறவை இந்தக் கூட்டிலிருந்து சிறகடிக்கப் போகின்றது.
நீ என்னருகே இல்லை என்ற எந்த வருத்தமும் இல்லை. எவரையும் சார்ந்து வாழாமல் என் உதவி இல்லாமலேயே நீ சென்ற உயரம் என்பது என்னால் நம்ப முடியவில்லை. உச்சியில் இருக்கும் உன்னை உச்சி முகர்ந்து முத்தமிட ஆசை. இந்த அம்மாவின் வார்த்தைகளை படித்து முடித்த பிறகாவது என்னை நினைத்து பார்ப்பாயா மகளே?
இந்த கடிதம் ஏதோவொரு சமயத்தில் உன் கைகளில் கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்குண்டு. ஏராளமான கேள்விகளை சுமந்து கொண்டுருக்கும் உனக்கு என்னுடைய இந்த வார்த்தைகள் சில புரிதல்களை உருவாக்கக்கூடும். இது நான் சேர்த்த சொத்துக்களை இட்டு நிரப்பிய வார்த்தைகள் அடங்கிய உயில் சாசனம் அல்ல.
ஆனால் என் கருவில் சுமந்து உயிர் மூச்சில் வைத்துப் பார்த்த உன்னை இழந்து விட்டேனோ என்ற ஆதங்கத்தில் அவசரமாய் எழுதுகின்றேன், அவசரமாய் என்னை விட்டு நீ பிரிந்தாலும் நான் எதிர்பார்த்ததை விட ஏராளமான ஆச்சரியத்தை எனக்கு தந்துள்ளாய். நான் உன் அப்பாவை முழுமையாக புரிந்து கொண்ட தருணத்தில் கணவன் என்ற மனிதனை எதிர்க்காதே முற்றிலும் புறக்கணித்து விடு என்று வாழத் தொடங்கினேன்.
நான் வாழ்ந்த வாழ்க்கையை போலவே நீயும் அதையே கடைபிடித்து என்னை கலங்க வைத்து விட்டாயே மகளே?
உன் அப்பாவுக்கும் எனக்கும் நடந்த பாதி விசயங்களை உன் பார்வைக்கு படாமல் மறைத்து வைத்தேன். காரணம் பசுமரத்தாணி போல பதிந்து விட்டால் உன் பார்வையும் வாழ்க்கையும் மாறிவிடுமோ என்ற அச்சத்தில் தான் அவ்வாறு செய்தேன். நேர்மறை எண்ணங்களை விட எதிர்மறை எண்ணங்கள் தான் ஏராளமான தாக்கத்தை உருவாக்கும்.
உன் எதிர்கால வாழ்க்கையை முன்னிட்டு தான் என்னுடைய குடும்ப வாழ்க்கையில் சகிப்புத்தன்மையை அதிகமாக வளர்த்துக் கொண்டேன். பலமுறை நீ என்னிடம் கேட்ட வெளியேறிவிடலாமென்ற நோக்கத்தையும் இதனால் தான் புறக்கணித்தேன். இன்றைய உலகம் விஞ்ஞான சமூக மாற்றத்தில் மனித இனம் பெருமையாக வளர்ந்திருந்தாலும் அடிப்படை மனித குணாதிசியங்கள் மாறவில்லை, மிருகங்களை விட கேவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கும் ஆணாதிக்க உலகில் ஒரு பெண்ணால் அத்தனை சீக்கீரம் வெளியே வந்து விட முடியாது. ஒரு பெண்ணின் எல்லைகள் என்பது ஒரு வட்டத்திற்குள் தான் இருக்கும் என்பது போன்ற பல விசயங்களை நான் எப்படி புரியவைத்தாலும் உன்னால் புரிந்து கொள்ள முடியுமா? என்று எனக்குத் தெரியவில்லை மகளே?
ஆனால் உன் அப்பா அறுபது வயது கிழவனுக்கு பணத்துக்கு ஆசைப்பட்டு உன்னை தாரை வார்க்க நினைத்த போது தான் எனக்குள் இருந்த அத்தனை தயக்கத்தையும் உடைத்துக் கொண்டு உன்னையும் அழைத்துக் கொண்டு திருப்பூருக்குள் நுழைந்தேன். நம் இருவரையும் இனிதே வரவேற்ற திருப்பூர் நீ என்னை விட்டு பிரிந்து போவதற்கும் காரணமாக இருந்து விட்டதடி மகளே?
திருப்பூர் ரயில் நிலையத்தில் நம்மை நோக்கி வந்த காவல்துறையினர் கையில் சிக்கினால் விசாரனையில் தொடங்கி விபரமாக கையாண்டு விடுவார்கள் என்ற நோக்கத்தில் கதர்ச்சட்டை ஆசாமியிடம் வலிய சென்று பேசினேன். அவர் சட்டை மட்டும் தான் கதராக இருந்தது. உள்ளே இருந்த இதயம் காமுகனாக இருந்தது. உன்னை அமர வைத்து விட்டு அவர் அறைக்குச் சென்ற போது அவர் போட்ட ஒப்பந்தத்தை நீ கேட்டால் துவண்டு விடுவாய் என்று மறைத்தேன்.
அடுத்த மூன்று மாதத்தில் நான் வேலை தேடிச் சென்ற நிறுவனங்களில் வேலை கிடைத்தது. ஆனால் பார்த்த வேலைகளோடு நான் எதிர்பார்க்காத வேலைகளும் செய்ய வேண்டியதாக இருந்தது. அவர்கள் மேல் தவறில்லை. என்னைக் காத்துக் கொள்ள வெளியேறிய போதும் கல்வி அறிவு இல்லாமல் தகுதியான வேலைகளில் அமர முடியாது என்பதை புரிந்து கொண்டேன். பல பெண்களின் வாழ்க்கையும் ஒவ்வொரு இடத்திலும் அலங்கோலமாகத்தான் இருக்கிறது மகளே?
சிலர் விருப்பம் இல்லாத போது கூட நிர்ப்பந்தம் மூலம் மாற்றப்படுகிறார்கள். குறிப்பிட்ட காலத்தில் பலருக்கும் வேறு வழியில்லாமல் இதிலும் ஒரு விதமான சகிப்புத்தன்மையை கடைபிடிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் இயல்பாக வாழும் பெண்களும் பலரும் இருக்கிறார்கள். ஆனால் நான் பார்த்தவரைக்கும் அவர்களுக்கு கிடைக்கும் மன உளைச்சல் வேறு வழியே வந்து தாக்கிக் கொண்டே தான் இருக்கிறது. மொத்தத்தில் தொழில் நகரங்களில் ஒவ்வொரு பெண்ணுமே நரக வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.
அழகு கவர்ச்சி போன்ற சொல்லுக்கு தகுதியான பெண்களின் உண்மையான திறமைகள் சமூகத்தில் இரண்டாம் பட்சமாகி விடுகின்றது என்பதை அப்போது தான் முழுமையாக புரிந்து கொண்டேன்.
ஜாதி,மதம், நாடு, மொழி, இனம் என்ற பாகுபாடு பார்க்காத ஒரு சொல் இந்த பாலூணர்வு உணர்ச்சிகள் தான். பருவநிலை பொறுத்து புணர்ந்து விட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்து விடும் மிருகத்தையும் மனித இனத்தையும் என்னால் ஒப்பிட்டு பார்க்கவே முடியவில்லை. வெவ்வேறு ஆசைகளுக்கு அடிபணிந்து அலங்கோல வாழ்க்கை வாழும் பெண்கள் ஒரு பக்கம்.
வெறியை மனதில் வைத்துக் கொண்டு வெளிவேஷம் போடும் ஆண்கள் மறுபக்கம். இரண்டுக்கும் நடுவில் வாழும் எண்ணிக்கை சொற்பானது.
என் அழகும், இளமையும் உன் அப்பாவுக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியது. ஆனால் என்னுடைய தொழில் வாழ்க்கை போராட்டத்தில் அதுவே என்னை பலவிதங்களிலும் படாய் படுத்தி எடுத்தது. பல காமாந்த ஆண்களிடம் தப்பி வந்த எனக்கு மூச்சு வாங்கத் தொடங்கியது. வேறுவழியே தெரியாமல் மீண்டும் அந்த கதர்ச்சட்டையிடம் தான் அடைக்கலம் தேடிப் போனேன் மகளே?
நான் எதிர்பார்த்ததை விட என்னை நன்றாகவே வைத்துக் கொண்டார். உன் அப்பா எனக்கு பிரச்சனையாக இருந்ததைப் போல அவர் குடும்ப வாழ்க்கையில் தொடக்கம் முதலே அவர் மனைவியே அவருக்கு எதிரியாக இருந்து தொலைக்க அவரும் ஏதோவொன்றை தேடிக் கொண்டுருப்பதை புரிந்து கொண்டேன். எங்களுக்குள் உருவான தொடர்பில் உன்னுடைய அடிப்படைத் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடிந்தது. அதுவே உன் சிறகுகளை பலப்படுத்த உதவியது. நீ அவருடன் சேர்த்து என்னை நம் வீட்டில் வைத்துப் பார்த்த போது கூட நான் வெட்கப்படவில்லை.
நீ எந்த நோக்கத்தில் எங்களைப் பார்த்து இருப்பாய் என்பதைப் பற்றி கூட நான் கவலைப்படவில்லை. தியாகம் என்ற வார்த்தையை இந்த இடத்தில் நான் எழுதிவைத்தால் நீ சிரித்து விடுவாய். ஒழுக்கம் தவறிய பாதையில் நான் வாழ்ந்த வாழ்க்கையில் எந்த வார்த்தைக் கொண்டு எழுதி வைத்தாலும் படிப்பவர்களின் பார்வையில் நான் ஏளனமாகத்தான் தெரிவேன். ஆனால் என் நோக்கமென்பது உன்னைச் சுற்றியே இருந்ததால் என் எல்லையை தீர்மானித்துக் கொண்டு அவரையே சார்ந்திருக்கத் தொடங்கினேன். சரி தவறு என்ற வார்த்தைகளோ, விவாதம் செய்யவோ எனக்கு விருப்பமில்லை. உன் அப்பா என்ற ஆண் தொடங்கி வைத்த பயணம். ஆனால் மற்றொரு ஆண் மூலம் அது முடிவடைந்ததாக கருதுகின்றேன். எல்லோருமே இந்த பாதையை தேர்ந்தெடுக்கலாமா என்ற கேட்பாய்? அவரவர் சூழ்நிலை? அவரவர் அனுபவம்? அதற்கான பலன்களையும் அவர்களே தான் அனுபவிக்க வேண்டும். மற்றொரு பெண்ணின் சாபமா? அல்லது என்னுடைய விதி முடிய வேண்டிய நேரமா தெரியவில்லை. அதையும் நான் உணர்ந்து கொண்டேன்.
ஆனால் இந்த உலகில் நமக்கு முன்னால் வாழ்ந்த பலரின் தியாகத்தால் தான் நீயும் நானும் இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுருக்கிறோம் என்பதை நீ உணர்வாயா மகளே?
அம்மா நேர்மையாக வாழ்ந்திருந்தால் எப்படியிருக்கும்? என்பது நீ யோசிப்பது புரிகின்றது. வேறொன்றும் நடந்திருக்காது. நீயும் என்னைப் போலவே ஏதோவொரு நிறுவனத்தில் அடிமட்ட ஊழியராக உள்நுழைந்து உன்னை நீ நிரூபித்துக் காட்டுவதற்குள் உன்னையே இழந்துருக்கக்கூடும். நான் பார்த்த தொழில் வாழ்க்கை அனுபவத்தில் ஒரு பெண்படும் பாடுகளை வைத்தே இந்த முடிவுக்கு வந்தேன். எந்த வகையில் பார்த்தாலும் பெண்களுக்கு கல்வி தான் முதல் ஆயுதம். அதற்குப் பிறகு தான் மற்றது எல்லாமே என்பதை புரிந்து கொண்டேன். அதனால் தான் நான் உன்னுடன் பேசுவதை குறைத்துக் கொண்டு உன் பாதையைக் காட்டி ஒதுங்கிக் கொண்டேன். நீ என்னைப் பற்றி, என் வாழ்க்கையைப் பற்றி யோசித்தே மன உளைச்சல் அடைந்தால் உன் இலக்கை நீ எப்படி அடைவாய் மகளே?
பேசாத வார்த்தைகளும், மௌனமும் உருவாக்கும் சக்தி என்பதை ஒரு பெண் புரிந்து கொண்டால் எப்படி மாறுவாள் என்னைப் போலவே நீயும் உதாரணமாய் தெரிகின்றாய். ஆனால் அவற்றை நேர்மறை எண்ணமாக மாற்றிக் கொண்ட நீ எனக்கு மகள் அல்ல. என தாய் போலவே மாறி என்னை தவிக்க வைத்து விட்டாய் மகளே?
உன்னுடைய பார்வையில் நான் ஆசை நாயகியோ அல்லது வாழ்க்கையின் அசிங்க நாயகியோ எதுவாகயிருந்தாலும் நான் கவலைப்படவில்லை. என்னைப் பொறுத்தவரையிலும் ஆத்மார்த்தமாக வாழ்ந்து அமைதியாக இப்போது உன்னிடமிருந்து நான் விடைபெறுகின்றேன். என்னுடைய இலக்கென்பது நான் பட்ட துன்பங்கள் உன்னை வந்து சேரக்கூடாது. உன் வாழ்க்கையாவது சிறப்பாக இருக்க வேண்டும். அதனால் தான் விட்டுப் போன உன் கல்வியில் உன்னை கவனம் வைக்கச் சொன்னேன். ஆனால் படிக்கும் கல்வி மட்டும் ஒழுக்கத்தை தந்து விடாது. வளர்ப்பு, சூழ்நிலை என்ற பல காரணிகள் உண்டு. இதற்கு மேலாக சுய சிந்தனைகள் கூர்படுத்தப்பட வேண்டும். ஆனால் இவற்றை நான் புரியவைக்க வாய்ப்பு கொடுக்காமலேயே நீயே சுயம்புவாய் மாறி இன்று உயரத்தில் இருப்பதை நினைத்து பெருமையாய் இருக்கு மகளே?
என்னுடைய அசிங்க பக்கங்களை உன்னிடம் காட்டாமல் அமைதி காத்தேன். உனக்குள் இருக்கும் கோபங்கள் நியாயமானது தான். ஆனால் எல்லா நியாயங்களுக்குப் பின்னாலும் ஒரு சிறிய அளவு அநியாயமும் கலந்து தான் இருக்கும் மகளே? உள்ளூர் பார்வையில் நான் உணர்ந்த வாழ்க்கையில் நான் எழுதும் இந்த எழுத்துக்கள் உலகப் பார்வையை பார்த்துக் கொண்டுருக்கும் உனக்கு புரிவதில் சிரமம் இருக்காது., சரி தானே மகளே?
நேர்மை, உண்மை, சத்தியம், ஒழுக்கம் போன்ற பல வார்த்தைகள் இன்று வலுவிழந்து கொண்டுருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் காரணங்கள். அவசர உலகில் ஆறுதல் சொல்லக்கூட கூலி கேட்கும் உலகில் நான் அடைக்கல்ம் புகுந்த கதர்ச்சட்டை என்னை கண்ணியமாகவே வைத்துக் கொண்டார். ஆனால் அவருக்கு உருவான குடும்ப, தொழில் வாழ்க்கை சூறாவளியை பொருட்படுத்தாமல் என்னை கவனமாக பாதுகாத்தார்.
என்னை விட உன் வளர்ச்சியில் அக்கறை காட்டினார். அவையெல்லாம் நீ அறியாதது. ஆனால் இந்த அன்பு தான் அவருக்கு இறுதியில் வினையாக மாறியது. வாகன விபத்தில் மாட்டிய அவரை "செத்து தொலையட்டும்" என்று புறக்கணித்த அவர் மனைவியை விட நான் பெருமைபடக்கூடியவள் தான். தகவல் கிடைத்த நான் அவசரமாய் அரசாங்க மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது தான் எங்களின் விதியின் விளையாட்டு நேரமும் அங்கிருந்து தான் தொடங்கியது. அவசர உதவிக்காக நுழைந்த அவருக்கு சுத்தம் செய்யாத ஊசியை அவசரமாய் குத்தி இலவசமாய் எய்ட்ஸ் என்ற உயிர்க் கொல்லியை வழங்கியவர்களை என்ன சொல்வாய்?
அவருடைய ஆள் அம்பு சேனைகள், பணபலம் என்று பின்னால் வந்து நின்றாலும் அவர் அறியாமல் எனக்குக் கொடுத்த அந்த உயிர்க் கொல்லியை சுமந்தபடி வாழும் சூழ்நிலையில் மாறிப் போனேன். அவர் சில மாதங்களுக்கு முன் உலகை விட்டு சென்று விட்டார். இதே இப்போது நானும் அவர் சென்ற காலடி தடத்தை நோக்கி சென்று கொண்டுருக்கின்றேன் மகளே?
நான் இதுவரைக்கும் உனக்கு அறிவுரை என்று எதுவுமே சொன்னதில்லை. நீயும் அதுபோன்ற சூழ்நிலையை உருவாக்கியதும் இல்லை. நீ சென்று கொண்டுருக்கும் உயரங்களை பலர் மூலம் நான் கேட்டறிந்து என் துயரங்களை மறந்த நாட்கள் பல உண்டு. உன்னுடைய ஒழுக்கமும், அயராத உழைப்பும் பணத்தைக் கொடுத்தது. நீ பெற்ற வசதிகளை அனுபவிக்கும் பொருட்டு நான் உன்னைத் தேடி வரவில்லை. என் நோய் குறித்து உன்னிடம் சொல்லி மன்னிப்பு கேட்கவே வந்தேன். ஆனால் உன்னுடைய புறக்கணிப்பை சந்தோஷமாகவே ஏற்றுக் கொண்டு திருமபி வந்தேன். உனக்கு வாழ்த்த வார்த்தைகளை தேட வேண்டிய அவஸ்யமில்லாமல் உன் ஆளுமையைப் பார்த்து அதிசயமாய் திரும்பி வந்தேன். உன்னை சுமந்த இந்த வயிற்றுக்கு வாலிப சந்தோஷத்தை தந்தது மகளே?
இறைவன் உன்னோடு இருந்து உன்னை காக்க வேண்டும் என்று வாழ்த்த மாட்டேன். கட உள் என்பது உள்ளே தான் இருப்பது. நீ அதை உணர்ந்ததோடு உன்னையும் அறிந்து உலகத்தையும் புரிந்து நீ வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கை நான் நினைத்துப் பார்க்காத ஒன்று.
நீ அடுத்த ஜென்மத்தில் எனக்கு அம்மாவாக வர வேண்டும் மகளே? உன் வயிற்றில் நான் பிறக்க வேண்டும் தாயே?
இதற்கு மேல் எழுத என்னால் எழுத முடியவில்லை. எழுதாத வார்த்தைகள் ஆயிரம் பக்கத்தில் சொல்ல வேண்டியதற்கு சமமடி மகளே.
விடைபெறுகின்றேன்.
உன் அம்மா. (இந்த உறவை இன்னமும் மனதில் வைத்திருப்பாய் தானே?)
ரயில் வெளிச்சத்தில் படித்து முடித்து விட்டு அந்த காகிதத்தை அவரிடம் கொடுத்தேன்.
இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. திருப்பூர் ரயில் நிலையம் மூன்று மொழிகளில் எங்கள் இருவரையும் வரவேற்றது. அவருக்கான வாகனம் வந்து நின்றது. என் வாகனத்தை நோக்கி நகர்ந்த போது என் பெயர் சொல்லி அழைத்தார்.
அடுத்த அரைமணி நேரம் ஆள் அரவமற்ற அந்த ரயில் நிலைய முகப்பில் வேறு சில விசயங்களையும் பேசினார். நான் வீட்டுக்கு என்னுடைய வாகனத்தில் வந்து கொண்டுருந்த போது அவர் என்னிடம் பேசிய விசயங்களை நினைத்துப் பார்த்தேன்...........
"ஆண் என்பவன் எல்லா இடங்களிலும் அவனுக்கு பிடித்த சூழ்நிலை அமைந்திருந்தால் தன் பாரத்தை இறக்கி வைத்து விடுவான். அறிமுகம் இல்லாதவர், அச்சப்படக்கூடியவர் என்பதைப் பற்றி பிறகு தான் யோசிப்பான். ஆனால் பெண் என்பவள் அத்தனை சீக்கிரம் எந்த இடத்திலும் வெளியே காட்டிக் கொள்வதில்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண்கள் குறித்த அச்சமும் சமூகம் குறித்த பயமும் இன்னும் பல காரணங்களால் தன்னை அத்தனை சீக்கிரம் வெளியே காட்டிக் கொள்வதில்லை".
"ஆனால் பெண் என்பவளை எந்தவிதமாக பார்த்தாலும் எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் ஒவ்வொரு பெண்ணுமே அன்புக்கு ஏங்குபவளாகத்தான் இருக்கிறாள். தன்னை புரிந்து கொள்ள எவராவது கிடைக்க மாட்டார்களா? என்ற எண்ணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. தன்னை குறுக்கிக் கொண்டு வாழும் ஆணோ பெண்ணோ ஏதோவொரு சமயத்தில் மொத்தமாக தன்னைப் பற்றி எவரிடமோ கொட்டிவிடுவதுண்டு."
"ஆனால் எனக்கு அதற்கான சந்தர்ப்பந்தங்கள் அமைந்ததுமில்லை. உருவாக்க விடுவதுமில்லை. நீங்கள் ரயிலில் ஏறி அமர்ந்ததும் உங்கள் மனைவியிடம் குழந்தைகளிடம் பேசிய வார்த்தைகளை உங்களை அறியாமல் கவனித்த போது என் மனோரீதியான கவனம் உங்கள் மேல் விழுந்தது. "
"நான் சார்ந்திருக்கும் பல நிறுவனங்கள் என்னை பல விதங்களிலும் கண்காணித்து இருக்கிறார்கள். எந்த இடத்திலும் சிறு இடைவெளி கூட இல்லாமல் என்னை இட்டு நிரப்பி விடுவதுண்டு."
"எந்த நிறுவனத்தில் நுழைந்தாலும் என் உள்ளாடை முதல் தெரியும் இடுப்பு வரைக்கும் அளவெடுக்கும் வரைக்கும் ஆண்கள் பலரையும் பார்த்திருக்கின்றேன்.
நீங்கள் நல்லவரா? என்று எனக்குத் தெரியாது. ஆனால் முயற்சித்துக் கொண்டுருப்பது மட்டும் புரிகின்றது."
"அம்மா இறந்து ஒரு வருடம் ஆகி விட்டது. பல நிறுவனங்களில் நான் பார்க்கும் பெண் குழந்தைகளுக்கு மட்டும் கல்விக்கான கட்டண வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்துக் கொண்டுருக்கின்றேன். காரணம் ஆண்கள் என்பவர்களுக்கு எந்த சூழ்நிலையும் சாதகமாக அமையும் அல்லது உருவாக்கிக் கொள்ளலாம். "
"ஆனால் பெண்களுக்கு சற்று கடினம் தான். இது இந்தியா மட்டுமல்ல. நான் பார்த்த வெளிநாடுகளிலும் இப்படித்தான் இருக்கிறது. பெண்கள் எழுதலாம், ஆடலாம், பாடலாம், படிக்கலாம். பிடிக்காத கணவன் என்றால் வெளியேறி தனக்கான வாழ்க்கையை வாழலாம். ஆனால் எத்தனை லாம் போட்டாலும் அவர்களின் முழுமை என்பது ஏதோவொரு வகையில் ஆண்களைச் சார்ந்து தான் இருக்கிறது. "
"ஒரு பெண்ணின் தனிப்பட்ட சாதனைகள் என்பது குறைவு. உலகை புரட்டிப் போட்ட புரட்சியாளர்கள் முதல் உலகை அச்சுறுத்தும் விஞ்ஞானம் வரைக்கும் அத்தனையும் இந்த உலகத்திற்கு தந்தவர்கள் ஆண்கள் தான். தன்னை உணர்ந்து தனிமையில் சாதித்த பெண்கள் வரிசையில் ரேடியம் கண்டுபிடித்த பெண்மணியைத் தவிர எனக்கு வேறு யாரும் நினைவில் வரவில்லை. "
"எழுத்தாளராக, விஞ்ஞானியாக, அதிகாரியாக, அரசில் உயர்பதவியிலும் கூட இருக்கலாம். ஆனால் அவருக்கு பினனாலும் முன்னாலும் ஒரு ஆண் பார்வை இருந்து கொண்டேதான் இருக்கிறது. உடல் வலிமை மட்டுமல்ல உள்ளத்தின் வலிமையும் என் பார்வையில் ஆண்களிடம் தான் அதிகமாக இருக்கிறது. ஆண்கள் எத்தனை ஆபத்தானவர்கள் என்பதையும் நான் அறிவேன். இவ்வளவு அறிவீலிகளா? என்பதையும் பல இடங்களிலும் பார்த்து இருக்கின்றேன். "
"ஒரு ஆண் தன்னை எந்த சூழ்நிலையிலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும். அதற்கான வாய்ப்புகளையும் அவர்களால் உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால் பெண்கள்?
ஒவ்வொரு பெண்ணுமே தன்க்கு பிடித்த சூழ்நிலை, தான் விரும்பும் குணாதிசியம் உள்ள கணவன் காதலன் என்று ஆசைகளால் அவஸ்த்தைப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். அமைதியைக் கையாண்டு கவிழ்த்து விடும் ஆண்களைப் போலவே அத்தனையும் இழந்தாலும் திருந்தாத பெண்களையும் நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன்."
"நான் சந்திக்கும் நபர்களில் ஆண், பெண் என்ற பேதம் பார்த்து பழகுவதில்லை. ஆனால் சூழ்நிலையை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதை வைத்து தான் அவர்களை மதிப்பீடு செய்கின்றேன்."
மரணத்தினால் பாவங்கள் அழியும் அந்த
மரணத்தினால் பல சாபங்கள் தீரும்...
நாகமணியின் அம்மா குறித்து யோசித்த போது நான் சமீபத்தில் கோவை மின் மயானத்தில் கேட்ட பாடல் என் நினைவுக்கு வந்தது. யோசித்தபடியே வீட்டுக்குள் நுழைந்த போது தூங்கிக் கொண்டுருந்த என் குழந்தைகளின் மேல் பார்வையை ஓட விட்டேன். சில எண்ணங்களும் ஒரு சில வைராக்கியமும் எனக்குள் உருவானதை என்னால் உணர முடிந்தது.
முற்றும்