அதிகாலை வேளையில் வந்து நின்றவனை பார்த்ததும் குழப்பமாய் இருந்தது. குரல் நினைவில் இருந்தாலும் முகம் மாறியிருந்தது.
"அண்ணே நாந்தான்னே கருணாகரன்" என்று உரிமையாய் என்னுடைய அழைப்பு இல்லாமல் வீட்டுக்குள் உள்ளே நுழைந்தான். எப்படி கண்டு பிடித்து உள்ளே வந்தானோ தெரியவில்லை? பரபரப்பாய் தான் கொண்டு வந்த மஞ்சள் பையில் இருந்து அவனின் திருமணப் பத்திரிக்கையை எடுத்து நீட்டினான்.
ஏற்கனவே எழுதி வைத்துருந்த பெயர். நான்கு புறமும் மஞ்சள் தடவி பவ்யமாய் திசை பார்த்து நின்று கொடுத்து வணங்கி நின்றான். திகைப்பாய் இருந்தது. பத்து வருடத்திற்குள் மொத்தமும் மாறியிருந்தான். உற்பத்தித் துறையில் உயர் பொறுப்பில் இருந்த போது டவுசர் சட்டையோடு நிறுவனத்தின் வாசலில் வந்து நின்றவன். நிறுவன உள்நுழைவு வாயில் காவலாளியின் எச்சரிக்கையைம் மீறி திமிறலோடு உள்ளே வர முயற்சித்துக் கொண்டுந்தவனை தூரத்தில் இருந்து பார்த்து உள்ளே அழைத்தேன். பேசிய போது உள்ளே காஜா பட்டன் அடிப்பதற்காக வேலை கேட்டு வந்தவன் என்று புரிந்து கொள்ள முடிந்தது. ஆய்த்த ஆடை ஏற்றுமதிக்கான வளர்ந்த மிகப் பெரிய நிறுவனங்களில் இது போன்ற சிறிய ஒவ்வொரு வேலைகளுக்கும் தனித்தனி நபர்கள் வெளியே இருந்து அழைக்கப்படுவார்கள். மாத, தினசரி சம்பளம் அல்லது ஒவ்வொரு ஆடைகளுக்கும் உண்டான கூலி என்பதாக பேசிக் கொள்வர். இதற்கென்று வருபவர்கள் தங்கள் படை பரிவாரங்களுடன் வந்து காரியத்தை கண்ணும் கருத்துமாய் முடித்துக் கொடுப்பர். சில நிறுவனங்கள் முறைப்படி அந்த வார சனிக்கிழமையில் வேலை முடிந்தவரைக்கும் கூலியை கொடுத்து விடுவர். பலர் இவர்களையும் ஏறி மிதிக்க எத்தனை திறமைகள் காட்ட வேண்டுமோ அத்தனையையும் காட்டுவர்.
ஒவ்வொரு துறைகளுக்கும் தேவைப்படும் எந்திரங்கள் ஒவ்வொன்றும் நிறுவனத்தில் உள்ளே வைத்து இருப்பார்கள். சொந்தமாக வைத்துக் கொள்ள முடியாதவர்கள் இதற்காக வெளியே தனியாக வைத்து இருப்பவர்களை நாடிச் செல்வர். ஓப்பந்த அடிப்படையில் இது போன்ற பல வேலைகளுக்கு நிறுவனத்திற்குள் ஒருவர் உள்ளே நுழைந்து விட்டால் அடுத்தவர் நுழைய முடியாத அளவிற்கு அத்தனை புரிந்துணர்வுகளையும் மிகத் தெளிவாக உருவாக்கி இருப்பார்கள். இது போன்ற பணிகளுக்கு உள்ளே வருபவர்களை கண்கொத்தி பாம்பாக நிறுவனங்கள் கவனித்துக் கொண்டு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே மிகப் பெரிய பிரச்சனைகள் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தி விடும். தொழில் வாழ்க்கை என்பது கத்தி போலத்தான். எப்படி எங்கு எவரை கையாள் கிறோம் என்பதை பொறுத்து தான் விளைவுகள் உருவாகும்.
குழந்தைகள் முதல் பெரியவர் வரைக்கும் போடக்கூடிய எந்த வகையான ஆடைகளாக இருந்தாலும் அந்த ஆடை முழுமையாக உருவாக பல இடங்களுக்குச் சென்று திரும்ப வேண்டும். இடையில் திருடப்பட்டு விடும். தவறாக உருவாக்கம் அடைந்து விடக்கூடாது. இதற்கெல்லாம் மேல் வெள்ளை ஆடை என்றால் அழுக்கு எண்ணெய் பிசுக்கு இல்லாமல் கற்பு மாறாமல் உள்ளே வந்து சேர வேண்டும். இல்லாவிட்டால் கற்பு இழந்த பெண் விடும் கண்ணீர் போல் நிறுவன முதலாளி பெட்டி போடும் சமயத்தில் குமைந்து கொண்டு குமுற வேண்டியதாய் ஆகிவிடும். நீக்கவே முடியாத பிரச்சனைகள் உள்ள ஆடைகள் இறுதியில் குறைபிரசவ குழந்தை போல் கேட்பார் இன்றி மூலையில் போய் முடங்கி நட்டக்கணக்கை அதிகப்படுத்தி விடும்.
இது போன்ற ஆடைகளுக்குண்டான தரத்தை கவனிக்க ஒவ்வொரு நிறுவனத்திலும் உழைக்க (QUALITY CONTROL) தனியாக ஒரு கூட்டம் உண்டு. அவர்களின் பாடு இரண்டு பக்க மத்தளம் போலத்தான் இருக்கும். ஆடைகளின் சரியான எண்ணிக்கையும் இறுதியில் வந்து வேண்டும். அதே சமயத்தில் நிறுவனம் எதிர்பார்க்கும் அத்தனை அவசர கதிகளையும் சமாளிக்க வேண்டும். மொத்தத்தில் கடல் தாண்டி சென்றதும் அங்கிருந்து ஓலை வராமலும் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் இதற்கென்று ஓராயிரம் மனிதர்கள் வெளியே தெரியாமல் ராத்திரி பகலாக உழைத்துக் கொண்டுருக்கிறார்கள். கூலி உலகத்தில் உள்ள முதலாளிகள் படும்பாடுகள் மொத்தத்திலும் கொடுமை யானது. தொழிலாளர்களை மேய்ப்பது முதல் பணத்துக்கு டிமிக்கி கொடுக்கும் நிறுவனங்கள் வரைக்கும் கடந்து வரவேண்டும். இவர்கள் இரவு பகல் பாராமல் முறைப்படி உழைத்தால் தான் மறுநாள் நிறுவனத்தில் மற்ற வேலைகள் நடந்து ஆடைகள் முழுமையடையும். தொடர் ஓட்டத்தில் ஓரே ஒரு இடத்தில் தவறி பின்தங்கியிருந்தாலும் மறுநாள் நிறுவனத்தில் குறிப்பிட்ட துறையில் பணிபுரியும் அத்தனை பேர்களுக்கும் வேலை இருக்காது. பணி நேரத்திற்கான சம்பளம் மீட்டர் வட்டி போல் ஓடிக்கொண்டுருக்கும்.
சமீப கால கட்டங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் விரும்பிய "மொத்தமும் ஒரே கூரையின் கீழ்" என்ற தத்துவம் வந்த பிறகு (VERTICAL SETUP) இந்த கூலி உலகமும் கலகலக்கத் தொடங்கியது. வளர்ந்த பெரிய நிறுவனங்கள் அறவு எந்திரம் முதல் அட்டைப் பெட்டி முதல் எல்லாத் துறைகளையும் தாங்களே உருவாக்கி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளார்கள்.
இறக்குமதியாளர்கள் இது போன்ற பெரிய நிறுவனங்களை தேர்ந்தெடுக்க ஒரே காரணம் விலையை எந்த அளவுக்கு வேண்டுமென்றாலும் குறைக்க முடியும். நூல் முதல் அட்டைப் பெட்டி வரைக்கும் ஒவ்வொரு இடத்திலும் உள்ள லாபங்கள் அறவே நீக்கப்படுகின்றது. நிறுவனம் நடந்தால் போதும் என்று பெரிய நிறுவனங்கள் வேறு வழியே இல்லாமல் சகித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை.
அறவு எந்திரம் (KNITTING MECHINES), சாயப்பட்டறைகள்( DYEING & BLEACHING), துணிகளை விரும்பிய அளவிற்கு வெட்டி மட்டும் கொடுப்பவர்கள்(CUTTING UNIT) , வெறுமனே தைத்து கொடுப்பவர்கள் (SITCHING UNIT) என்று தொடங்கி கப்பலில் (FREIGHT & FORWARDERS) ஏற்றுவதற்கு உதவுபவர்கள் வரைக்கும் கண்ணீர் விடும் சூழ்நிலையில் தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். தொழிலில் நிலவக் கூடிய ஆரோக்கியமற்ற போட்டியில் கடல் கடந்து இருப்பவர்களுக்கு இங்கு இருப்பர்களே பலவற்றையும் தாரை வார்த்துக் கொடுத்து விடுவதால் உட்கார்ந்த இடத்தில் அவர்களால் உல்லாச வாழ்க்கை வாழ முடிகிறது. உழைப்பவர்களின் ஒவ்வொரு இரவுகளும் உளறல் மொழியில் முடிந்து விடுகிறது.
ஒவ்வொரு ஆடைக்கும் தேவைப்படும் அத்தனை உள் மற்றும் வெளி அலங்காரங்களையும் செய்து கொடுக்க கருணாகரன் போன்றவர்கள் தினந்தோறும் இங்கு உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆடைகளும் நூலில் இருந்து ஒரு நீண்ட பயணம் தொடங்கி ஒவ்வொரு படிகளும் கடந்து கடைசியில் அடைக்கப்பட்ட பெட்டியில் உள்ள ஆடைகளாக கடல் கடக்க தங்கள் பயணத்தை சாலை வழியாக தொடங்குகிறது.
இங்குள்ள ஏற்றுமதி நிறுவனம் என்பது பத்துக்கு பத்து அறையில் இருந்து கொண்டு ஒரு கணிணி, ஒரு தொலைபேசி இணைப்போடு அலுவலகமாகவும் இருக்கலாம். அல்லது 50,000 சதுர அடி உள்ள வானளாவிய கட்டிடத்திற் குள்ளும் இருந்து கொண்டு ஒரு ராஜ்யமாகவும் நடத்தலாம். ஆனால் எந்த ஊர் ராஜாவாக இருந்தாலும் இந்தக் கூலிப்படை இல்லாமல் ஒன்றையும் நகர்த்த முடியாது. தூத்துக்குடி கப்பல் துறைமுகமோ, சென்னை விமான நிலையமோ ஒவ்வொன்றுக்கும் ஏதோவொரு கூலி உலகம் தான் உதவிக் கொண்டுருக்கிறது.
தொடக்கத்தில் வண்ண வண்ண ஆடைகள் உருவாவதற்கு உண்டான வசதிகளை விட வெள்ளை நிறத்திற்கு அதிக மரியாதையும் செய்வதற்கு மிக எளிதாகவும் இருந்தது. இன்றைய நவீன எந்திரங்கள் எதுவும் இல்லாத போது வெள்ளை நிறத்திற்கென்று ஒரு தனியான வழிமுறை தான் இருந்தது. தொட்டி மூலம் வெள்ளையாக்குதல். இன்னும் சுருக்கமாகச் சொல்லப்போனால் ஊரில் துவைத்துத் தருபவர்கள் வெள்ளாவி மூலமாக நமது ஆடைகளை மொட மொடவென்று கொண்டு வந்து தருவார்களே? அதைப் போலத் தான் இங்கும் இருந்தது. ஊருக்கு வெளியே துணிகளை வெள்ளை ஆடையாக மாற்றுவதற்கு தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டிகள் வைத்து இருந்தார்கள். இதில் பணி புரிவ தெற்கென்றே தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் கோவணத்தோடு அந்த தொட்டித் தண்ணீரில் முழங்கால் அளவிற்கு வந்து இறங்கும் துணிகளை காலால் மிதித்து தங்களுடைய கடமைகளை செய்து கொண்டுருப்பார்கள். மூடப்பட்ட மிகப்பெரிய சூளையில் வேக வைக்கப்பட்டு, தண்ணீரில் கலந்த குளோரின் பொடிகள் முதல் கடைசியில் சல்பியூரிக் ஆசிட் வரைக்கும் இந்த ஆடைகள் கலந்துயடித்து அவர்கள் காலால் மட்டும் மிதிபட்டு உதைபட்டு கடைசியில் உஜாலா வெள்ளை போல் கொடியில் காய்ந்து கொண்டுருக்கும்.
பணிபுரிந்து கொண்டுருக்கும் நபர்களின் கால்களில் உள்ள முடிகள் உதிர்ந்து போயிருக்கும். கால் விரல்களில் சரியான கவனிப்பு இல்லாவிட்டால் புண்ணாகிப் போயிருக்கும். அவர்களுக்கு இருக்கும் ஒரே அருமருந்து சைபால் தான். பூசிக் கொண்டு உடம்பில் மொழுகிக் கொண்டு தினந்தோறும் இரவு பகல் பாராமல் வெள்ளை மனத்தோடு இந்த வெள்ளை ஆடைகளுக்காக உழைத்துக் கொண்டுருந்தார்கள். ஆனால் இன்று அந்தக்கூட்டம் எவருமே இல்லை. இந்த முறையும் வழக்கொழிந்து விட்டது. அத்தனைக்கும் இன்று நவீன எந்திரங்களின் பிடிக்கு வந்து விட்டது. கிடைத்த குறைவான கூலியில் தினந் தோறும் குடித்தது போக கொண்டு போய்ச் சேர்த்த உழைத்துக் களைத்தவர் களின் தலைமுறைகளும் மாறிவிட்டார்கள். சமூக விழிப்புணர்வும், தலை முறைகளுக்கு கிடைத்த படித்த வாய்ப்புகள் என்று எல்லாவிதங்களிலும் முன்னேறி உள்ளார்கள்.
துணியை சாயமேற்றுதல் என்பதில் தொடங்கிய இந்த கூலிகளின் உலகம், தைப்பது, தரத்தை சோதித்து தரம் வாரியாக பிரித்துக் கொடுப்பது வரைக்கும் உள்ள இந்த கூலி உலகத்திற்கு கிடைக்கும் நிரந்தர வருமானம் என்பது மிகக் குறைவே. சாறு முழுவதும் பிழியப்பட்டு கொடுக்கும் சக்கையைக் கூட கொடுக்க மனம் இல்லாமல் கொண்டாடி வாழ்பவர்களையும் தாண்டி தினமும் பலரும் முன்னேறிக் கொண்டு தான் இருக்கின்றனர். காரணம் இயல்பான இந்தியர்களின் வாழ்க்கை முறையே காரணமாகும். அதிக ஆசையை விட இந்த உலகத்தில் உள்ள அத்தனை பேர்களும் அதிக உழைப்புக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள். ஏதோவொரு சமயத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை கனகச்சிதமாக பயன்படுத்திக்கொண்டு மேலேறி வந்து விடுவார்கள். அதைப் போலத்தான் கருணாவின் வாழ்க்கையும்.
புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடிக்கு செல்லும் வழியில் முக்கிய சாலையில் இருந்து கீழே பிரிந்து செல்லும் மண்சாலையில் மூச்சு வாங்க நடந்து சென்றால் கருணாவின் கிராமத்துக்கு செல்லமுடியும். படிக்க வேண்டிய பாடத்தில் ஆங்கிலம் என்பதை துரத்தும் பேய் போல் பார்த்து குடும்பத்தினரிடம் சொல்லாமலே குருட்டு நம்பிக்கையில் திருப்பூருக்கு ஓடி வந்தவன். வாங்கி வந்த நண்பர்களின் முகவரிக்கு கையில் காசு இல்லாமல் நடந்தே சென்று அந்த ஓண்டுக்குடித்தனத்தில் உள்ளே தன்னை அடைத்துக் கொண்டவன். வந்து இறங்கிய நேரத்தில் தொழில் குறித்து எதுவுமே தெரியாது. டவுசர் போட்ட வயதின் காரணமே தையல் கடைக்கு கொண்டு போய் நிறுத்தினார்கள். இரண்டு மாதங்கள் கூட முழுமையாக எதையும் கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் திருப்பூர் பற்றியும், உள்ளே உள்ள நிறுவனங்களின் சூட்சுமத்தையும் பற்றி வந்து போனவர்களுடன் பேசிப் பேசி எப்படியோ ஒரு நிறுவனத்தில் உள்ளே நுழைந்து விட்டான்.
அந்த நிறுவனத்தில் இருந்த உள்நாட்டு தயாரிப்பு எந்திரத்தின் மூலம் தினக்கூலிக்கு காஜா பட்டன் அடித்து கொடுத்துக் கொண்டுருந்தவரிடம் போய்ச் சேர ஆறு மாதத்தில் பெற்ற பட்டறிவும் அவமானங்களும் தனியாக வேறொரு நிறுவனத்தை தேட வைத்தது. இரண்டு வருடங்களில் மாறிய நிறுவனங்களும் பெற்ற அனுபவங்களும் தனியாக கையூண்டி கரணம் போட வைக்க நிறுவன காவலாளியை தள்ளி விட்டு உள்ளே நுழைய தைரியம் தந்தது.
ஊர் பாசமும் அவனின் முரட்டு சுபாவமும் ஒன்று சேர்த்துப் பார்க்க நினைத்தது எதுவும் வீணாகிப் போய்விடவில்லை. காரணம் உழைப்பவர்களிடம் இருக்கும் முன்கோபம் இயல்பான ஒன்று. சுய கௌவரம் அளவிற்கு இடைவிடாத உழைப்பும் ஒன்று சேர அவனை விட்டால் ஆளே இல்லை என்கிற அளவிற்கு அவனின் ராஜபாட்டை தொடங்கியது. தொடக்கத்தில் ஒரு பட்டன் காஜா அடிக்க 16 பைசா. ஆனால் பத்து வருட இடைவெளியில் இன்று அதுவே 40 பைசா அளவிற்கு இந்த துறை வளர்ந்துள்ளது. காஜா பட்டன் எந்திரங்கள் வைத்திருக்காத நிறுவனங்கள் அத்தனை பேருமே இது போன்ற தனி நபர்கள் வைத்திருக்கும் இந்த உலகத்தைச் சார்ந்தே இருந்தாக வேண்டிய சூழ்நிலை.
சூட்டிகை என்று சொல்வார்களே அதற்கு மொத்த உதாரணமே இந்த கருணாகரன் தான். நிறுவனத்தில் உள்ளே நடக்கும் வேளைக்கு கூட்டிக் கொண்டு வந்த ஆளை வைத்து விட்டு வேலை தொடங்கியதும் அருகில் உள்ள நிறுவனங்களில் நுழைந்து அடுத்த வாய்ப்புகளை தேடத் தொடங்குவான். கொண்டு வந்த நபர்களால் வேலை எதுவும் தடைபடாத காரணத்தினால் இவனை எவரும் தேடுவதும் இல்லை. இன்றைய சூழ்நிலையில் அவனது கையில் சிறிய பெரிய 60 நிரந்தர நிறுவனங்கள் உள்ளது. தன்னிடம் வேலை செய்வதற்காகவே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஊரில் இருந்து அழைத்து வந்த மாமன்,மச்சான்,சகலை,பங்காளி,மைத்துனர் என்று தொடங்கி விட்ட குறை தொட்ட குறையாக பள்ளிப்பருவத்தில் காதலித்த பெண் வரைக்கும் திருப்பூர் கொண்டு வந்து சேர்த்து விட்டான்.
ஆனால் இதையெல்லாம் விட மற்றொரு மகத்தான் சாதனை ஒன்று உண்டு. இன்று கருணாகரனிடம் இன்றைய நவீன காஜாபட்டன் BROTHER. JUKI போன்ற எந்திரங்கள் பதினைந்து வைத்துள்ளான். ஒவ்வொன்றும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ளது. தொடக்கத்திலேயே நகர் வளர்ச்சியை உணர்ந்து நல்ல புரிந்துணர்வோடு நகரின் வெளியே வாங்கிப்போட்ட ஆயிரம் சதுர அடி நிலத்தில் போடப்பட்ட எளிய கூரையாக இருந்த கட்டிடம் இன்று மாடிப்பகுதியில் அலுவலகம் போல் செயல்படும் அளவிற்கு வளர்க்க முடிந்துள்ளது. ஒவ்வொன்றையும் சொல்லச் சொல்ல வியப்பாய் இருந்தது.
வருடாந்திர வரவு செலவு 10 கோடி என்று முதல் வருடம் கணக்கு காட்டி விட்டு அடுத்த வருடம் போட்ட ஆட்டத்தில் அதோகதியாகப் போன எந்த நாதாரித்தனமும் அவன் வாழ்க்கையில் இல்லை. வாழ்க்கை என்பதை கிராமத்து கலாச்சாரமாக பார்த்தவன். கருணாவின் வாழ்க்கையில் வெளியுலகம் எப்படி இயங்கிக் கொண்டுருக்கிறது எதுவும் தெரியாத வாழ்க்கை. யார் ஆள்கிறார்கள்? எவர் என்ன செய்கிறார்கள்? பதவியை வைத்துக் கொண்டு எத்தனை கோடி அடித்தார்கள்? எது குறித்தும் அக்கறையில்லை. தன்னுடைய வாழ்க்கை என்பது நம் கையில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவன். உழைப்பின் மூலம் கிடைத்த ஒவ்வொரு பைசாவையும் கிராமத்தில் முதலீடு செய்து விவசாயம் பார்த்துக் கொண்டுருக்கும் அண்ணனுக்கு உதவியாய் ஒரு பக்கம். மற்றொரு பக்கம் மாதச் சீட்டில் கவனம். உணர்ந்து வாழும் வாழ்க்கையை முழுமையாக உள்வாங்கி வாழ்ந்து கொண்டுருப்பவன்.
(4 Tamil Media)
இந்தியா முழுக்க வாழ்ந்து கொண்டுருக்கும் கருணா போன்ற நபர்களால் தான் இன்றும் பணக்காரர்களால் ஆளப்படும் இந்திய ஏழை ஜனநாயகத்திற்கு உயிர் இருந்து கொண்டே இருக்கிறது.