அஸ்திவாரம்

Saturday, June 12, 2010

பஞ்சு முதல் பஞ்சமாபாதகம் வரை

திருப்பூருக்குள் நுழைந்த புதிதில் உடன் பணிபுரிந்து கொண்டுருக்கும் உள்ளூர்வாசிகளுடன் பேசினால் " எங்கப்பா பஞ்சு மில்லில் வேலைபார்த்தவர்" என்பார்கள்.  எனக்கு அப்போது புரியவில்லை. அதென்ன பஞ்சுமில்?  அரசி ஆலைகளையும், எண்ணெய் ஆலைகளையும் பார்த்தவனுக்கு இந்த வார்த்தை புதிதாக இருந்தது.  பின்னால் புரிந்தது.  பல்லடம், ஊத்துக்குளி சாலைகளில் இருந்த நூற்பாலைகளில் பணிபுரிந்து நடந்த வேலை நிறுத்த பிரச்சனைகளினால் பணி இழந்தவர்கள். கடைசியில் அந்த ஆலைகளும் மூடுவிழா நடத்தப்பட்டு கட்டாய வெளியேற்றத்தால் நிர்கதியாய் போனவர்கள்.  கடந்த 15 ஆண்டுகளில் இது போன்ற எத்தனை ஆலைகள் மூடப்பட்டு அதன் முடிவு என்னவென்று தெரியாமல் காலம் கடந்தும் போய்விட்டது. 
ஒன்று தாமதிக்கப்பட்ட நீதியில் உழன்று கொண்டுருக்கும்.  அல்லது ஜனநாயகத்தை பணநாயகம் வென்று இருக்கும். இறுதியில் அந்த ஆலைகள் இருந்த இடம் இன்று வணிக வளாகமாக மாறிப் போயிருக்கும். நூற்பாலைகளை நம்பி வாழ்ந்தவர்கள்? அடுத்த தேர்தலுக்கு ஓட்டுப் போட தினசரி பத்திரிக்கைகளை டீக்கடையில் படித்து விவாதம் செய்து கொண்டுருப்பார்கள்.  இன்று வரையிலும் மக்கள் சிந்தனையிலும் எந்த மாற்றம் இல்லை.

ஒவ்வொருமுறையும் உருவாகும் அரசாங்கமும் இது குறித்து எந்த முன்னேற்பாடுகளிலும் அக்கறை செலுத்துவது இல்லை.ஆலைகள் மூட ஒரு பேரம். மூடிய ஆலைகளைத் திறக்க ஒரு பேரம். கடைசியில் பேரன் பேத்தி எடுத்தாலும் தீர்வு மட்டும் வந்தபாடாய் இருக்காது.   காரணம் நாம் ஜனநாயகத்திற்கு கொடுக்கும் விலை.

எப்போதும் இந்திய குடிமகனின் முதல் தகுதியே இந்த சகிப்புத்தன்மைதான். அதுவே இன்று பயமாக மாறி எல்லாவற்றையும் மாற்றி விட்டது.

தொடக்கத்தில் திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனங்கள் முன்னங்கால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டுருந்த நேரங்களில் ஒவ்வொரு வருட தீபாவளியின் முந்தைய நாட்களில் சாலைகளில் நடந்து சென்றால் விடாமல் ஒரு குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.அற்புதமான குரல் வளத்தில் கேட்பவர்களின் நாடி நரம்புகள் முறுக்கேறும் அளவுக்கு ஒலிப்பெருக்கியில் இருந்து வரும் கணீரென்ற குரல் நம் செவியைத் தாக்கும். " உழைக்கும் வர்க்கமே ஒன்றுபடு.  தொழிலாளர்களே போனஸ் உடன்படிக்கையை இன்னமும் அமுல்படுத்தாமல் இழுத்துக் கொண்டுருக்கும் முதலாளி வர்க்கத்திற்கு பாடம் புகட்ட பேரணியில் பங்கெடுப்பீர்"

சிறிய, பெரிய தொழிற் சங்கங்கள் அங்கீகாரம் பெற்றவர்கள் முதல் சந்து முனையில் கீற்றுக் கொட்டகையில் சங்கம் என்று பெயர் வைத்துருப்பவர்கள் வரைக்கும் தீபாவளிக்கு முந்தைய ஒரு மாத காலகட்டத்தில் மிகுந்த சுறுசுறுப்பாய் தங்கள் கடமைகளில் கண்ணும் கருத்துமாய் இருப்பர்.  ஆனால் இப்போது? கடந்த இரண்டு மூன்று வருடங்களில் அது போன்ற குரல்கள் அதிகம் ஒலிப்பதாக தெரியவில்லை. 

தொடக்கத்தில் முதலாளிவர்க்கமும் ரொம்பவே பிகு பண்ணிக்கொண்டு "ஆரம்புச்ட்டானுங்கப்பா..."  என்று புலம்புவார்கள். அந்த ஒரு மாத காலமும் முட்டலும் மோதலுமாய் நகரும். இரண்டு பக்கமும் திகிலூட்டும் மஞ்சுவிரட்டு போலவே இருக்கும்.

தொழிற் சங்கங்களின் கடைசி அஸ்திரமான கால வரையற்ற வேலைநிறுத்தம் வந்து சேர இரண்டு பக்கமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும். கண்ணும் காதுமாய் காரியங்கள் நடக்கும். மீண்டும் வேலைகள் எப்போதும் போலவே தொடங்கும்.

அன்று முதலாளிகளிடம் அள்ளிக் கொடுக்க காசு இருந்தது. மனம் மட்டும் இருட்டாய் இருந்தது. இன்றைய சூழ்நிலையில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கிள்ளிக் கொடுக்கக்கூட முடியாமல் கடைசியில் கந்து வட்டியில் காணாமல் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.   

பனியன் தொழில் என்பது முதலில் தோன்றிய இடம் கல்கத்தா.  ஆனால் திருப்பூர் வளர்ச்சியில் அறுபது ஆண்டுகளில் கல்கத்தா கொல்கத்தா என்று கொல்லைப்புறமாக காணாமல் போய்விட்டது.  நம்மவர்கள் விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டு இன்று வரைக்கும் முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.  இந்திய ஜவுளித்துறையில் மூன்று இடங்கள் தான் முக்கியமானது. அகமதாபாத் (குஜராத்), பம்பாய் (மகாராஷ்ட்ரா)  இதற்கு அடுத்தபடி நம்முடைய கோயமுத்தூர்.  ஒரு வரி கேள்வி பதிலில் எளிதாக தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று எழுதி மதிப்பெண்கள் வாங்கியதை இப்போதைக்கு நீங்கள் நினைவு படுத்திக்கொள்ளலாம்.  

இந்தியாவிற்கு உருவான நெருக்கடி தான் இந்த ஜவுளித் துறையை தொடக்கத்தில் உருவாக்கியது. 1931 ஆம் ஆண்டு நம்ம காந்தி தாத்தா வெளிநாட்டு ஆடைகளுக்கு எதிராக சுதேசி இயக்கத்தை பலப்படுத்திய நேரம்.  இதற்கு முன்னால் 30 ஆண்டுகளுக்கு முன்னால் இதன் வளர்ச்சி தொடங்கப் பெற்றாலும் இதே காலகட்டத்தில் தான் அங்கங்கே பஞ்சாலைகள் உருவாகத் தொடங்கியது.  1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் தொடங்க உள்ளுர் நூற்பாலைகள் முதல் மற்ற அத்தனை தொழில் சார்ந்த அமைப்புகளும், பிற சமூகங்களும் இந்த வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்திக்கொண்டனர். உள்நாடு, வெளிநாடு என்று இரண்டு பக்கத்திலும் சந்தைக்கான நல்ல வாய்ப்பு.  அடித்தது பம்பர் லாட்டரி.

தொடக்கத்தில் நீராவி மூலம் உருவாக்கப்பட்ட, கிடைத்த சக்தியை வைத்துக் கொண்டு பஞ்சாலைகள் செயல்பட்டுக் கொண்டுருந்தன.  நீராவி சக்தியால் ஓடிக்கொண்டுருந்த பஞ்சாலைகள் மின்சாரம் மூலம் மாற சற்று வேகமாக இந்த பயணமும் மாறியது.

1940 ஆம் ஆண்டு பிரிட்டனின் இராணுவ தேவைகளுக்கு அதிகப்படியான ஜவுளிகள் தேவைப் பட அதே சமயத்தில் இங்கு நூற்பாலைகளின் நிர்வாகமென்பது கல்வி கற்றவர்கள் கைக்கு மாறியது. ஒற்றையடி பாதையில் இருந்து ஒழுங்கான சுமரான சாலைக்கு வந்து சேர்ந்தது.

உடனே இது போன்ற வளர்ச்சிக்கெல்லாம் காரணம் அரசாங்கம் தானே என்று அவசர தீர்மானத்தை மனதிற்குள் உருவாக்கிக் கொள்ளாதீர்கள்.   அன்றைய வெள்ளை அரசாங்கம் நேரிடையாக இந்திய வளத்தை கொள்ளை அடித்து, அடித்த கொள்ளையை கப்பல் மூலமாக இங்கிலாந்து கொண்டு சென்றது. இப்போது வரைக்கும் ஆண்டு கொண்டுருக்கும் ஜனநாயக அரசாங்கத்தில் உள்ள அரசியல் வியாதிகள் ஒன்று சேர்ந்து கொள்ளை அடிப்பதுடன் மற்றொரு காரியத்தையும் இன்று தைரியமாக செய்து கொண்டுருக்கிறார்கள். கொள்ளைப்புறமாக வர யோசித்தவர்களையும் முன் பக்கமாக கூவிக் கூவி அழைத்து உள்ளே வரவழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் உழைப்புக்குண்டான கூலியும் வங்கிக் கணக்காக ஸ்விஸ்க்கு கடல் தாண்டி போய்க் கொண்டுருக்கிறது.

என்ன பெரிதான வித்யாசம்? 

இதுவே இறுதியில் மொத்த இந்திய தொழிற்துறைகளும் மூழ்க காரணமாக இருக்கிறது. தொடக்கத்தில் உருவான அத்தனை நூற்பாலைகளும் தனி மனிதர்களின் முயற்சிகள்.  அவர்களின் உழைப்பினால் உருவான சாதனைகள்.  பெரிய மனிதர்கள், பணம் வைத்திருந்தவர்கள் ஒன்று சேர பயந்தார்கள்.  பெரிதான எந்திரங்களைக் கண்டு யோசித்தார்கள்.  உள் நாட்டில் நிதி ஆதாரம் திரட்டித்தர ஆள் இல்லை. முட்டி மோதி ஜெயித்தார்கள்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் மதுரைப் பக்கம்.  முதலுக்கு பங்கம் வராமல் பணத்தை பெருக்கியவர்கள் இந்தப் பக்கம்.

அதனால் தான் இன்று வரையிலும் தமிழ்நாட்டின் அத்தனை பாடசாலைகளிலும் படித்து விட்டு இன்று வரைக்கும் கோவை பக்கம் படையெடுத்துக் கொண்டுருக்கிறார்கள்.  காரைக்குடியில் அழகப்பச் செட்டியார் கட்டியுள்ள அழகப்பா கல்விக்கூடங்கள் அத்தனையும் அவர் இந்த பஞ்சு தொழிலில் ஈடுபட்டு திரட்டிய சொத்துக்கள்.

கோடி கொடுத்து குடியிருந்த வீடும் கொடுத்த கொடைவள்ளல் அழகப்பர்
இந்தியாவில் ஒன்பது லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பில் 41 லட்சம் டன் பருத்தி விளைவிக்கப்படுகிறது. ஆனால் இன்று இந்த மொத்த நிலப்பரப்பையும் இன்று தங்கள் கைகளுக்குள் கொண்டு வந்து இருப்பவர்கள் யார் தெரியுமா?  அமெரிக்காவில் உள்ள மான்சாண்டோ. 

இவவர்கள் கொடுத்த மரபணு மாற்றப்பட்ட விதைகளே இந்தியா முழுக்க ஆட்சி செய்கிறது.  எப்படி பிடி கத்திரிக்காயைத் தான் நீங்கள் உண்ண வேண்டும் என்றார்களோ அதைப்போலவே இந்த ஜவுளித்துறையின் தொடக்க அஸ்திவாரமான பஞ்சில் கையை வைத்த அவர்களின் திறமையை பாராட்டுவதா?  இல்லை அவங்க நம்ம நல்லதுக்குத் தான் தருவாங்க. பயப்படாதீங்கப்பூ......... என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கும் மத்திய அமைச்சர்களை பாராட்டுவீர்களா?

விதை முதல் உடை வரைக்கும் அத்தனை இடங்களிலும் மேலை நாட்டு கணவான்களின் விருப்பம் தான் இங்கு மேலோங்கி நிற்கிறது.  அவர்கள் சொல்வதை அட்சரம் பிறழாமல் கடைபிடித்து நிறைவேற்றிக் கொடுக்க நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த களவாணிப் பய கூட்டம் அங்கங்கே பாரபட்சம் இல்லாமல் கை கோர்த்து நிற்கிறார்கள். ஒவ்வொரு தாவரத்திலும் மரபணு மாற்றம் செய்து காசு பார்க்கும் மேலைநாட்டினர்கள் இவர்களின் மரபணுகளை ஆராயந்து பார்த்தால் என்ன?  எந்த மூலக்கூறில் இந்த பண வெறி இருக்கிறதோ அதை மட்டுமாவது நீக்கச் சொல்லிப் பார்க்கலாம்.

பங்களாதேஷ் நாட்டில் நூற்பாலைகள் குறைவு.  சொல்லப்போனால் அவர்கள் எல்லாவிதங்களிலும் மற்ற நாடுகளைச் சார்ந்தே வாழவேண்டிய சூழ்நிலை.  அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாதது ஒருபுறம். இந்த நிமிடம் வரைக்கும் தன்னிறைவு என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்பதே தெரியாத தலைவர்களைப் பெற்ற நாடு ஆனால் இன்று அவர்கள் இந்திய ஜவுளித்துறைக்கு மிகுந்த சவாலாக இருக்கிறார்கள். அங்குள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களும், நிறுவனங்கள் வைத்திருக்கும் முதலாளிமாருகளும்  போட்டுருக்கும் ஜட்டியே போதுமானது என்று நினைப்பார்களா?  இல்லை தினந்தோறும் கிடைக்கும் மூணு வேளை ரொட்டியே அதிகம் என்று யோசிப்பார்களா? என்பதை யோசித்துப் பார்க்கக்கூட முடியவில்லை.  இறக்குமதியாளர்களுக்கு அவர்கள் கொடுக்கும் விலை என்பது நமது லாபம் இல்லா அடிப்படை விலையை விட கீழானது.

காரணம் பங்களாதேஷ் அரசாங்கம் தாங்கிப் பிடித்து அவர்களை காத்துக்கொண்டுருக்கிறது.  இதற்கு மேல் அந்த நாட்டிற்கு மற்றொரு ஆதாயம்.  "பாவம்ப்பா ஏழை மக்கள்" என்று ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் கொடுத்துள்ள சலுகைகள். 

பக்கத்தில் உள்ள பாகிஸ்தான் மனித வெடிகுண்டுக்கு ஆள் தேவைப்படாத சமயத்தில் தொழிற்சாலைக்கு போவர்கள் போல.  அதை வைத்துக்கொண்டே இன்று கண்ணாமூச்சி காட்டுகிறார்கள்.  இவர் நமக்கு இரண்டாவது பங்காளி.   

வியட்நாம் பற்றி பெரிதாக சொல்லத் தேவையில்லை.  நிறையும் இல்லாமல் குறையும் இல்லாமல் தானூண்டு தாங்கள் பிழைக்க தொழில் உண்டு இலவசமாக உழைக்க தயாரான மக்களை உருவாக்கிய மேலாதிக்க சக்திகளைத் தான் பாராட்ட வேண்டும். இலங்கையை இதில் கணக்கில் சேர்த்துக் கொள்ளவே வேண்டாம். ஐரோப்பிய யூனியன் கொடுத்துள்ள ஆப்பு இப்போது ஆட்டிப் படைத்துக்கொண்டுருக்கிறது.  இத்துடன் இவர்கள் அத்தனை பேர்களையும் தூக்கி சாப்பிட்டு ஏப்பமிட்டதோடு இன்று இந்தியாவையும் எல்லாவிதங்களிலும் விழுங்க நினைக்கும் மொத்த பூதமான சீனா.

இந்த ஐந்து பேர்களுக்கும் தேவையான பஞ்சும் நூலும் பெரும்பான்மையாக எங்கிருந்து போகிறது?  வேறெங்கே? எல்லாம் காந்தி தேசத்தில் இருந்து தான்.  கிளையில் ஏறி அமர்ந்து கீழே உள்ள தூர் பகுதியில் சுடுதண்ணி ஊற்ற கட்டளை கொடுத்துக் கொண்டுருப்பது யார்?

 எல்லாமே நம்முடைய ஆக்ஸ்போர்டு, ஹாவார்டு பல்கலைக்கழக மேதைகள். நண்பர் எழுதிய வார்த்தைகள் மனதில் வந்து போகின்றது.  "ஏழைகளே இல்லாத இந்தியா நாடு" என்று உருவாக என்ன செய்ய வேண்டும்?.  ஏழைகள் அத்தனை பேர்களை துடைத்து ஒழித்து அழித்து விட வேண்டும்.  அதைத்தான் இப்போது சுருதி சுத்தமாக நம்முடைய தலைவர்கள் செய்து கொண்டுருக்கிறார்கள். 
பஞ்சை நம்பி வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் மொத்த மக்களின் தலைமுறைகளின் வாழ்க்கையையும் இந்த அரசியல் வியாதிகள் பஞ்சத்தில் கொண்டு போய் விட்டுத் தொலைச்சுருவாங்களோ? 

29 comments:

  1. அருமையான பதிவு.. அவசியமும் கூட..
    கடைசியில் உள்ள படம் மனதை நொறுக்கிவிட்டது ...
    ஒரு கேவலமான தேசத்தில் வாழும் உணர்வை அந்தப் படம் எனக்கு தந்திருக்கிறது...

    நாம மனுசங்கதானா?

    ReplyDelete
  2. மிகவும் அருமையான கட்டுரை ஜோதிஜி,அதிலும் நையாண்டிகள் மிகவும் அருமை.

    ReplyDelete
  3. இவர்கள் கொடுத்த மரபணு மாற்றப்பட்ட விதைகளே இந்தியா முழுக்க ஆட்சி செய்கிறது. எப்படி பிடி கத்திரிக்காயைத் தான் நீங்கள் உண்ண வேண்டும் என்றார்களோ /

    ரொம்ப நாள் கழித்து உங்க பக்கம் வருகிறேன் ஜோதிஜி.. உங்கள் அநீதி கண்டு பொங்கும் குணம் அப்படியே இருக்கிறது.. அருமையான பகிர்வு,, எனக்கும் இந்த மரபணு மாற்ற விஷயங்களில் தீவிரமான எதிர்ப்புணர்வு உண்டு நண்பரே

    ReplyDelete
  4. // கிளையில் ஏறி அமர்ந்து கீழே உள்ள தூர் பகுதியில் சுடுதண்ணி ஊற்ற கட்டளை கொடுத்துக் கொண்டுருப்பது யார்? //

    ஒருத்தரா, இரண்டு பேரா... எல்லாம் கூட்டு சேர்ந்துகிட்ட இல்ல செய்யறாங்க.

    இன்னொரு கர்மவீரர் வரவேண்டும் ... அவர் வந்தாலும், அவரையும் இவங்க எல்லாம் சேர்த்து கவுத்துடுவாங்க... காணம போயிடுவாரு..

    ReplyDelete
  5. //மரபணு மாற்றம் செய்து காசு பார்க்கும் மேலைநாட்டினர்கள் இவர்களின் மரபணுகளை ஆராயந்து பார்த்தால் என்ன? எந்த மூலக்கூறில் இந்த பண வெறி இருக்கிறதோ அதை மட்டுமாவது நீக்கச் சொல்லிப் பார்க்கலாம்.//

    ஜோதிஜி எப்போதுமே எந்த விஷயத்தைப் பற்றித் தேடத் தொடங்கிகிறீர்களோ அங்கு ஒரு முழுமை.
    தேடலும் அலசலும் சிந்திக்க வைக்கிறது வாசிப்பவர்களை.நன்றி.

    ReplyDelete
  6. செந்தில் ஒவ்வொருமுறையும் நீங்கள் தான் தொடங்கி வைத்து புதிய பாதையை உருவாக்குவதற்கு நன்றி....

    என்ன செய்வது கார்த்திகேயன், ஒவ்வொரு விசயமுமே இப்போது நக்கலும் நகைச்சுவையுமாகவே பார்க்கவேண்டி உள்ளது. பாருங்கள் மிதித்து படியுங்கள் என்பது காறி உமிழ்ந்த உங்கள் கோபத்தை எந்த அமைச்சர் மேல் காட்டுவது. காரணம் பட்டியல் நீளம்.

    நீங்கள் சொல்வது உண்மை தான் இராகவன். இப்போது கர்மவீரர் என்றால் அர்த்தமே வேற. இங்கு திருப்பூருக்குள் கட்டப்பஞ்சாயத்து கலாச்சரத்தை தொடரில் எங்கேயாவது தொட்டுச் செல்லும் போது அதன் மொத்த வீச்சு உங்களுக்குப் புரியம். உற்பத்தியாளர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் இப்போது இங்கு முழுமையாக அரசியல் புகுந்து வாழ்க்கை அழுகிக்கொண்டுருக்கிறது. என்று மாறும்?

    நன்றி ஹேமா. இந்த தேடல் தான் இன்றும் பல பிரச்சனைகளுக்கிடையே வாழ வைத்துக்கொண்டுருக்கிறது.

    ReplyDelete
  7. வணக்கம் தேனம்மை. மரபணுவில் ஒரு ஆச்சரியம். செடியில் உற்பத்தியாகும் விதையைக்கூட ரிமோட் கண்ட்ரோல் போல் மீண்டும் விவசாயிகள் பயன்படுத்த முடியுமா முடியாதா என்று மூலக்கூறில் கட்டளைப் போட்டு காசு பார்க்கும் மேலைநாட்டு விஞ்ஞான புத்திசாலிகளை எந்த வார்த்தைகளில் நாம் பாராட்ட முடியும்?

    ReplyDelete
  8. அன்பின் கணேசன்

    நல்லதொரு இடுகை - மனத்துயரம் வெடித்து வெளிக்கிளம்பி - ஆய்வுக் கட்டுரையாக மாறி இருக்கிறது. என்ன செய்வது - காலம் இப்படித்தான் செல்கிறது.

    அருமை அருமை

    நல்வாழ்த்துகள் கணேசன்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  9. சீனா ஐயாவுக்கு நன்றியும் வணக்கமும்.

    நீங்கள் சொல்லியிருப்பது உண்மையும் கூட.

    ReplyDelete
  10. அருமையான நிதர்சனமான உண்மையை வெளிப்படுத்திய பதிவு...

    இந்த நிலையில் சில தகவல்கள்

    1. பங்களாதேஷ், பாகிஸ்தான், வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு ஐரோப்பிய யூனியனில் இறக்குமதி வரி இல்லை ஆனால் இந்தியாவிற்க்கு உண்டு.
    2. சீனாவிற்க்கு இறக்குமதி அளவு கட்டுப்பாடு உண்டு ஆனால் வரிசலுகை இல்லை.
    3. இந்தியா தரும் அன்னிய செலாவனி சலுகையான டூயூட்டி ட்ரா பேக் எனப்படும் எற்றுமதி மீதான பொருளின் உள்நாட்டு மற்ற வரிகளை திருப்பி தருதல் 10 சதவிதம் அதுவே பங்களாதேஷ்ல் 25 சதவிதம்.
    4. திருப்பூரில் சாய செலவு ஒரு கிலோவிற்க்கு சராசரி ரூ.75/- ஆனால் பங்களாதேஷ்ல் ரூ.20/- காரணம், சாயம் செய்தபிறகு அப்படியே ஆற்றில் திறந்து விட்டுவிடுவார்கள். இங்கு அதை சுத்திகரிக்க ஆகும் செலவு அதிகம்.
    5. தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் மிக மிக பிரமாண்டமான அளவில் நூல் மில் தொடங்க உள்ளார், அவர்கள் (கவனிக்க அவர்கள்) கொள்கையே ஒரு தொழில் தொடங்க நினைத்தால் அதற்கு முன் அந்த தொழிலை சுத்தமாக அழித்துவிட்டு புதிதாக தொடங்குவார்கள் இதன் மூலம் போட்டி போட ஆள் இல்லாமல் செய்துவிடுவார்கள்...

    மேற்கண்ட விஷயங்களும் இந்த தொழில் மெல்ல இறந்துவர காரணம்

    நன்றிகளுடன்

    தமிழ் உதயன்

    ReplyDelete
  11. வலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

    ReplyDelete
  12. அருமையான பதிவு ஜோதிகணேசன்,

    1) முடிந்து போன "மில்" வாழ்வை நேர்த்தியாக இனி பஞ்சே வராத நிலை விரைவில் வரும் "மான்சான்டோ" வுடன் இணைத்தவிதம் சிறப்பு.
    2) போனஸ் என்பது ஏப்ரல் தொடங்கி மார்ச்சில் முடிவடையும் நிதி ஆண்டின் லாபத்தில் அந்த லாபம் உருவாக காரணமாகும் தொழிலாளிக்கு அளிக்கப்படும் மிகைஊதியம் என்ற நிலைமாறி தீபாவளி இனாம் என்று மாறிப்போனதன் அவலம் திருப்பூரில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் ஒரு கோரிக்கை மேளா நடத்தி முதலாளிகள் நினைத்ததையே முடிவாக வரும் வரை பேச்சுவார்த்தை நாடகம் நடத்தி தொழிற்சங்கங்களுக்கு சந்தா, நன்கொடை வசூலுக்கான சடங்கு என மாறிவிட்டது காலத்தின் கோலம்.
    3) திருப்பூரில் நான்கு இயந்திரம் வாங்கிப்போட்டு பனியன் தொழில் செய்வதைவிட ஒரு டாஸ்மாக் கடை முன்பாக நான்கு சைக்கிள் சக்கர தள்ளு வண்டி ஒன்றில் 3 சுண்டல், ஒரு வடை, 2 கிரேடு முட்டை (அனைத்தும் முதலீடு இல்லாமல் காலையில் கடன் வாங்கி மறுநாள் காலை கொடுத்து விடுகிறேன் என்ற முறையில்)யுடன் மாலை 5 முதல் 11 மணிவரை நின்று வியாபாரம் பார்த்தால் ஒரு வருடத்தில் 4 பனியன் கம்பெனிகளுக்கு finance நிதி அளிக்கலாம் என்ற நிலையில் உழைக்கும் பணத்தில் 30 முதல் 40 சதம் சாராயத்திற்கு செல்வது கொடுமையிலும் கொடுமை
    தோழமையுடன்
    சித்திரகுப்தன்

    ReplyDelete
  13. தமிழ் உதயன், நீங்கள் சுட்டிக்காட்டும் அமைச்சர்ப் பற்றி ஓரளவிற்கு புரிகிறது. படிப்பவர்களுக்கும் புரியும்.

    சின்காசிட்டி நண்பர்கள் பகுதி என்பது போல் ஏதாவது ஒரு வசதியை உருவாக்குங்கள். நன்றி.

    தோழர் சித்ரகுப்தன். நீங்கள் சொல்லியுள்ளது அத்தனையும் உண்மை. இந்த வண்டி வியாபாரத்திற்கென்று ஒரு தனியான ஒரு இடுகை. நம்பிக்கை இல்லாமல் வாழ்பவர்கள் கூட தன்னுடைய உழைப்பின் மேல் நம்பி கை கோர்த்து, வைத்து உழைத்தால் முன்னேறி விடலாம் என்று இங்கே உணர்த்திக்கொண்டுருப்பவர்கள் இந்த வண்டி வியாபார மக்கள்.

    நேற்று பழைய பேரூந்து நிலையத்தின் பின் உள்ளே மிகுந்த நெருக்கடியான டாஸ்மார்க் தாண்டி குழந்தைகளுக்கு குடை வாங்கச் சென்ற போது பார்த்த காட்சி

    முக்கால் நிர்வாணத்தில்
    முழு போதையில்
    உருண்டு கிடந்தவனை தாண்டி
    வரிசையாக நின்று கொண்டுருந்தார்கள்
    டாஸ்மார்க் முன்னால்.

    ReplyDelete
  14. திருப்பூர் சாதாரண தொழிலாளியில் இருந்து தொழிலதிபர்கள் வரை, அரசியல்வாதிகள் வரை அனைவருக்கும் சில பாடங்கள் கற்று தந்துள்ளது. எந்த வளர்ச்சியை நினைத்து பெருமை பட்டு கொள்ள முடியாது. இன்றைய IT நகரங்களுக்கும் நாளை இந்த நிலை வரலாம். சரி எதற்கு என்ன செய்வது. சாமானியனில் இருந்து பெரு முதலை வரை அனைவருக்கும் தொலை நோக்கு பார்வை வேண்டும். எந்த தொழிலாக இருந்தாலும், அந்த தொழில் அதீத வளர்ச்சியில் இருக்கும் போது அதீதமாகவாகவே சம்பாதிக்கிறார்கள். எதிர்காலம் குறித்து சிந்திக்காமல், இப்படியே வருமானம் வரும் என்று செலவு பண்ணுகிறார்கள். விளைவு தேக்கம் வரும் போது கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் ஆகும். கொஞ்சமேனும் சிந்தித்து வாழ்ந்தால் தலைக்கு வந்தது தலைபாகையோடு போகும்.

    ReplyDelete
  15. எதிர்காலம் குறித்து சிந்திக்காமல், இப்படியே வருமானம் வரும் என்று செலவு பண்ணுகிறார்கள்

    இது தான் முழுமையான உண்மை.

    ReplyDelete
  16. அருமையான பதிவு, அள்ளி எடுத்து அதை விட அள்ளி கொடுத்து, கை சிவந்த வள்ளல்களையும் , சும்மா வாய் பேச்சு பேசியே, ஆட்சிக்கு ஆட்சி மாறி மாறி சவாரி செய்து, தன இருப்பை தக்க வைத்து கொள்ளும் சிவந்த வீரர்களையும் அலசி இருக்கிறீர்கள்...

    இந்த காசு ஒரு பெரிய மாயை , ஆனால் அது போதும் என்ற அளவுக்கு வந்தால் தான், மற்ற விஷயங்களை பார்க்கப் போகும்....

    இந்த பவார் நம்ம அம்மாவுக்கும் ரொம்ப அருகில் என்று கேள்வி, ???!!!!. அவரு அவரோட சொந்த மாநிலத்தையே தற்கொலைக்கு தள்ளி விட்டு விட்டார். நம்மை பத்தி கவலையா படப் போறார் ??.

    பாகிஸ்தான் பற்றி ...ரொம்ப சரி, இங்கு டாக்ஸி ஒட்டுபவர்களிட்ம் பேசினால் , எப்படி எங்க வீட்ல ஏ. கே .47 இருக்கு , அதே அப்படியே கலட்டி திருப்பி மாட்றது தான் எங்கள் பொழுது போக்கு ... அப்படின்னு அளந்து விடுவார். ஓரளவுக்கு உண்மை இருக்கு போல , இப்ப தான் தெரியுது.

    ReplyDelete
  17. பாரம்பரிய விதை நெல்லை காக்க முடியாமல் பறிகொடுத்துக் கொண்டே இருக்கிறோம் நமது உணவு உற்பத்தியினை.....அந்நியனிடம்...நிலத்தடி நீரை உறிஞ்சி விலை நிலங்களை பாழ் செய்தாகிவிட்டது.....கோலா கம்பனிகள் ஆற்று படுகைகளை குத்தகைக்கு எடுத்துக் கொண்டன.....ஆற்று மணலை வேசி மகன்கள் கூவி விற்கிறார்கள்....ஏற்கனவே சுயமரியாதை மற்றும் தன்மானம் பிடுங்கப் பட்டு அடிமை அவதாரம் எடுத்தாகிவிட்டது....முழுமையாக அந்த நிலைக்கு இப்போது சென்றுகொண்டிருக்கிறோம்....

    அருமையான பதிவு ஜோதிஜி...

    ReplyDelete
  18. நேர்மையான பகிர்வு, தெளிவான பார்வை...
    மிக கடின உழைப்பு தெரிகிறது
    //ஒவ்வொரு தாவரத்திலும் மரபணு மாற்றம் செய்து காசு பார்க்கும் மேலைநாட்டினர்கள் இவர்களின் மரபணுகளை ஆராயந்து பார்த்தால் என்ன? எந்த மூலக்கூறில் இந்த பண வெறி இருக்கிறதோ அதை மட்டுமாவது நீக்கச் சொல்லிப் பார்க்கலாம்.//
    ஆமாங்க அத ஒருக்கா செய்து பார்க்கலாமே!

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  19. சுந்தர், ஒவ்வொரு முறையும் இங்குள்ள பள்ளிகள் வாங்கிக் கொண்டுருக்கும் கொள்ளைகளையையும் அழகப்பா கல்லூரிகளில் உள்ள வசதிகளையும் அவரின் தன்னலமற்ற சேவைகளையும் யோசித்துப் பார்க்கும் அவர் பொருட்டு பெய்யும் மழை என்பது தான் நினைக்கத் தோன்றுகிறது. அரசியல்வாதிகளின் எண்ணங்கள் என்பது திடீர் என்று பார்த்த பணம் பார்த்தவர்களுக்கு வாழ்க்கை கொடுக்கும் உத்வேகமும். முடங்கிப்போய் கிடக்கும் பல அரசியல் வாதிகளைப் பார்க்கும் போது தோழர் நல்லகண்ணு சொன்னது போது ஏற்றத்தைப் போலவே அந்த அரசியல் மிகப் பெரிய அழிவையும் தந்து விடும் என்பது போல் இருக்கிறது. உணரத்தான் யாரும் இல்லை.

    உரையாடலுக்கும் கருத்துக்கும் நன்றி லெமூரியன்.

    செய்து பார்க்கலாம் கருணாகரசு. எப்போது யார் மூலம் என்பது தான் என்று தெரியவில்லை. தடுமாற்றம் என்பது போல மாற்றமும் வரத் தான் வேண்டும்.

    ReplyDelete
  20. detailed article on spinning mills. I would like to mention two comments. The personal attack on Mr. Pawar on health grounds should have been avoided in such good article. Secondly all the mill owners are still behind minting money and you can see women from southern districts are employed for meagre salary in the name of sumangali thittam and are aksed to work two shifts a day.

    ReplyDelete
  21. sumangali thittam

    கிராமத்தில் வேறு எந்த வாய்ப்பும் இல்லாதவர்களும் வேறு எங்கே போகமுடியும். மூன்று வருடங்கள் அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டு குடும்ப வாழ்க்கை என்ற விதிக்குள் செல்ல வேண்டிய கட்டாயம்.

    நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  22. Mr. Jothiji
    I am jeyachandran and I am new to bolgs and have started to read through vikatan.com. In fact the review of the article with a mention of sumangali thittam was written by me. I will be thankful if you can guide me how to type in tamil while writing in blogs. My mail id is jeyachands@yahoo.com. thank you regards jc

    ReplyDelete
  23. தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

    http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

    ReplyDelete
  24. மீண்டும் வாழ்த்துக்கள் ஜோதிஜி... எடுத்துகிட்ட விசயத்துக்கு இவ்வளவு சிரத்தையெடுத்து முழுமைபடுத்துவது உங்களைப்போல் சிலரால்தான் முடிகிறது.. பொருளாதாரம் வணிகம் தொடர்பான பிரிவில் இந்த கட்டுரை வெற்றிபெறவேண்டும்.. வாழ்த்துக்கள் ஜோதிஜி..

    ReplyDelete
  25. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    தோழமையுடன்

    ஊரான்.

    ReplyDelete
  26. நன்றி ஊரான் உங்கள் அக்கறைக்கு புரிந்துணர்வுக்கு.

    பாலாசி நீங்களும் ஜெயிச்சு இருக்கீங்க. வாழ்த்துகள்.

    நன்றி ரவி.

    ReplyDelete
  27. தமிழ்மண விருது நிகழ்ச்சியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. உருக்கமான படைப்பு, உணர வேண்டிய படைப்பு, நான் பதிவுலகத்திற்கு புதியவன் உங்கள் பதிவை பார்க்கும் போது இது போல பதிவிட முடியுமா என எனக்கே சந்தேகமாகிறது, ஆழ மனதை தட்டி எழுப்பும் இது போன்ற பதிவுகள் உங்களிடமிருந்து நிறைய வரவேண்டும். அது அனைவரையும் தட்டி எழுப்ப வேண்டும், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. it is very very excelent and emotional in this data and detailles .we will proude of this my state and district coimbatore and tirupur and also main part in this aspects peoples hard woking day and night
    by.
    pandy . tirupur

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.