அஸ்திவாரம்

Tuesday, June 15, 2010

சின்ன நூல் கண்டா நம்மை சிறைபடுத்தும்?

உள்ளே நுழைந்த போது முதலில் அறிமுகமானது நூல் கடையே.  திருப்பூரைப் பற்றியோ நூல்களில் இருக்கும் எந்த வகைகளையும் தெரியாமல் பயணம் தொடங்கியது. அப்பொழுதெல்லாம் தெரிந்த அதிகபட்ச நூல்கள் என்பது,  படித்த நூல்களும் அவ்வவ்போது டவுசர் பின்னால் தபால் பெட்டி போல் கிழித்துக்கொண்டு வந்து நிற்கும் போது அக்காக்கள் திட்டிக் கொண்டு தைத்து கொடுக்க வாங்கி வரச் சொன்ன ஒரு ரூபாய வெள்ளை நூல் கண்டு மட்டுமே தெரியும்.  அழைத்து வந்தவருக்கு அசாத்தியமான தைரியம்.  மொத்த பொறுப்பையும் வழங்கி வானளாவ வாழ்த்தி மற்றொருமொரு புதிய வாழ்க்கையை தொடங்கி வைத்தார். புதிதாக பார்க்கத் தொடங்கிய சமூக வாழ்க்கையைப் போலவே இந்த நூல்களும் அதிக ஆச்சரியத்தை தந்தது.  ஒவ்வொன்றாக நூல் உலகம் பற்றிய புரிதல்கள் அன்று தான் தொடங்கியது.

இன்று திருப்பூரில் முதன்மையாக இருக்கும் பல நிறுவனங்களுக்கு சொந்தமாகவே நூற்பாலைகள் உண்டு.  அதிபர்கள் வைத்துருக்கும் வெளிநாட்டு வாகனங்களைப் போலவே அவர்கள் வைத்துருக்கும் நூற்பாலைகளில் உள்ள கதிர்கள் (SPINDLES) என்பது அவர்களின் தொழில் வாழ்க்கையில் உள்ள கௌரவம் சார்ந்த விசயம்.  5000 கதிர்கள் முதல் ஒரு லட்சம் கதிர்கள் வரைக்கும் அவரவர் வாங்கி இருக்கும் கடன்கள் பொறுத்து இருக்கும்.  இந்த நூற்பாலைகள் உற்பத்தி செய்யும் நூல்களை எவரும் நேரிடையாக விற்பனை செய்வது இல்லை.  இடையில் ஒருவர் இருப்பார்.  திண்டுக்கல் மாவட்டத்தில் அப்போது தான் நூற்பாலைகள் வளரத் தொடங்கிய நேரம்.  இது போக உடுமலைப் பேட்டையில் ஜீவிஜி மூலம் நூல் பைகள் வந்துகொண்டுருந்தது. விட்ட குறை தொட்ட குறையாக அங்கங்கங்கே இத்துப் போன மில்கள் என்று தனியாக இருந்தது. இன்றைய இறக்குமதியாளர்கள் எதிர்பார்க்கும் உச்சகட்ட தரம் என்பதெல்லாம் அன்று எவர் மனதிலும் இல்லை. கடனில் தொடங்கி கடனுக்கே வாங்கி செய்த வேலைகளையும் கடனுக்கே என்று செய்து காசு பார்த்த காலமது.

ஒவ்வொரு தொழிலுக்கும் இருக்கும் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் போல் ஒவ்வொரு நூல் வியபாரிகளும் குறிப்பிட்ட நூற்பாலைகளின் பிரதிநிதிகளாக இருப்பார்கள்.  நூற்பாலையில் வாங்கும் பைகளுக்கு முன்னமே பேசியபடி மாதம் ஒரு முறை அல்லது இரு மாதம் ஒரு முறை என்று மொத்த பணத்தையும் வங்கி மூலமாக கட்ட வேண்டியிருக்கும்.  விற்பர்களுக்கு 60/50/40  கிலோ பைக்கு ஊக்கத் தொகையாக பத்து ரூபாய் நூற்பாலைகள் வழங்குவார்கள். இதில் தான் நடத்தும் அலுவலகம் முதல் பணியாளர் சம்பளம் வரைக்கும் எல்லாவற்றையும் சமாளித்துக்கொள்ள வேண்டும். ஒரு மாதத்தில் 3000 பைகள் விற்றால் கிடைக்கும் தொகை முப்பதாயிரம். ஆனால் சூழ்நிலையைப் பொறுத்து தினம் 500 பைகளை விற்பவர்களும் உண்டு.  மாதம் 5 கோடி சம்பாரிப்பவர்களும் உண்டு. உள்ளூர் முதல் வெளியூர் வரைக்கும் தேடி வந்து வாங்குபவர்களிடம் நம்பிக்கையைப் பொறுத்து முன் தேதியிட்ட காசோலையை அல்லது நம்பிக்கை அடிப்படையில் பேச்சின் மூலம் நூல் பைகள் ஏற்றி அனுப்பப்படும்.

வாங்கும் நூலை ஆடைகளுக்காக பயன்படுத்தும் உற்பத்தியாளர்களுக்கும நூற்பாலைகளுக்கும் எந்த தொடர்பும் இருக்காது.  நூலில் தரம் குறித்து எந்த பிரச்சனையாவது உருவானால் நூற்பாலைகளில் இருந்து வந்து பார்ப்பார்கள்.  பயன்படுத்திய பஞ்சில் கழிவுத் தரமான பஞ்சும் கலந்திருந்தால் அறவுத் துணியை (GREY CLOTH) உண்டு இல்லை என்று மாற்றி அவஸ்த்தைக்குள் தள்ளி விடும்.  அறவு எந்திரத்தில் (KNITTING MECHINE) இருந்து துணியாக வெளியே வந்து கொண்டுருக்கும் போதே கூர்ந்து கவனித்துப் பார்த்தால் பல் இளித்து சிரிப்பது தெரிந்து விடும். துணியை வெள்ளை நிறமாக மாற்றும் போது பெரிதான பிரச்சனைகள் வெளியே தெரியாது.  மற்ற வண்ண ஆடைகளுக்கு பயன்படுத்தும் போது அதன் முழுமையான பிரச்சனைகள் நமக்கு புரியக்கூடும். ஓரே நிறமென்பது இரண்டு வித நிறமாகத் தெரிந்து துணியை பயன்படுத்த முடியாத நிலைமைக்கு கொண்டு போய் தள்ளிவிடும். தவறு என்றால் வேறு நூல்கள் மாற்றிக் கொடுத்து விடுவார்கள்.  அத்தோடு முடிந்து விடும்.  ஆனால் இதில் மிகுந்த ஆச்சரியம் என்னவென்றால் எவரும் கையில் காசு வைத்துக்கொண்டு இந்த தொழிலில் இறங்குவதில்லை.  நூற்பாலைகள் ஆந்திராவில் வாங்கும் பஞ்சு முதல் உற்பத்தியாளர்கள் வாங்கும் நூல் வரைக்கும் கடனில் தான்.  முப்பது நாட்கள் முதல் அறுபது நாட்கள் வரைக்கும் சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும். ஆனால் சில புண்ணியவான்கள் வாங்கியவுடன் மொத்தத்தையும் மறந்து தொலைத்து 90 நாட்கள் ஆனாலும் கொடுக்க மனம் இருக்காது.  சொந்த ஊர் வரைக்கும் துரத்திக் கொண்டு செல்லும் அவஸ்த்தையெல்லாம் நடக்கும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் வரைவு காசோலை எடுத்துக் கொடுத்தாலும் நூல்கள் கிடைப்பது இல்லை.  கிடைத்தாலும் அது தரமாக இருப்பது இல்லை.  காரணம் உள்ளூரில் கொடுத்தால் ஒரு லாபம் மட்டும் தான்.  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து விட்டால் வங்கி பரிவர்த்தனைகள் முதல் அரசாங்க ஊக்கத் தொகை வரைக்கும் எத்தனையோ வகைகளில் நூற்பாலைகளுக்கு லாபங்கள்.

இந்த இடத்தில் இந்திய ஜனநாயக காவல் தெய்வங்களை சற்று உணர்ந்து கொள்ளுங்கள்.  அரசாங்கம் வெளிநாட்டுக்கு பஞ்சை ஏற்றுமதி செய்யலாம் என்றவுடன் நூற்பாலைகளுக்கு திண்டாட்டம்.  எதிர்ப்பு அடங்க நாளானது.  பிறகு நூல் ஏற்றுமதி செய்யலாம் என்றவுடன் ஆடைத் தொழிலில் உள்ளவர்கள் பாடு திண்டாட்டமானது.  எதிர்ப்பு அதிகமாக அரசாங்கம் செய்த காரியம் என்ன தெரியுமா?  தடையை முற்றிலும் நீக்கவில்லை.  பல்வேறு போராட்டத்திற்குப் பிறகு நூல் ஏற்றுமதி செய்தால் முதலாளிகளுக்கு அரசாங்கம் கொடுக்கும் ஊக்கத்தொகையை சிறிது குறைத்தது மட்டுமே. ஊக்கத் தொகையை முற்றிலும் நீக்கி விடுங்கள் என்று நாயாக மக்கள் திருப்பூரில் இருந்து கத்திக்கொண்டுருக்கிறார்கள்.  பாவம் டெல்லி தூரத்தில் இருப்பதால் இந்த குறைப்பு மட்டும் எட்ட மாட்டேன் என்கிறது.  ஏற்றுமதி செய்தால் அந்நியச் செலவாணி இருப்பு அதிகமாகும் என்பது ஒரு பக்கம் இருப்பது போல உள்நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்தால் இருப்பவர்கள் அத்தனை பேர்களும் வேலையில்லா திண்டாட்டத்தினால் களவாணியாக மாறி விடுவார்களே என்று அந்த மேதைகளுக்கு எப்போது புரியும்?

ஊடகங்கள் நடிகையை அவர்களின் அவயங்களை எண்களால் சுட்டிக்காட்டுவதுப் போலவே நூல்களும் எண்களால் தான் வகைப்படுத்தப் படுகின்றன.  இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம்.

முதல் பகுதி, எண்ணிக்கை 2 ல் தொடங்கி 20 ல் முடிந்து விடுகின்றது. சுருக்கமாக புரிய வேண்டுமென்றால் நூல் தடிமன் பொறுத்து எண்ணிக்கை ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். எண்ணிக்கை ஏற ஏற பயன்படுத்தும் துணிகளில் தரம் மிளிரும். நூல் மெல்லிய கம்பி போல இருக்கும். போட்ட பனியன் சும்மா ஜம்முன்னு உடம்போடு ஒட்டியிருக்கிற மாதிரி இருக்கிறது என்றால் அது 40 வகை நூலில் செய்து இருக்கலாம்.  காசுக்கேத்த தோசை. உருவாகும் ஒவ்வொரு ஆடைக்கும் ஒவ்வொரு சூத்திரம்.  அத்தனையும் பயன்படுத்தும் நூலில் தான் தொடக்கம் பெறுகிறது. நீங்கள் போடும் ஜட்டி போர்வை போல கடினமாக இருந்தால் உங்கள் உறுப்புகள் உண்டு இல்லை என்று படுத்தி எடுத்தி விடாதா?  குளிர் காலத்தில் போடக்கூடிய ஆடைகள் உள் உறுப்புகள் தெரியும் அளவிற்கு இருந்தால் எப்படியிருக்கும்?  குளிர் நடுங்க வைத்து விடாதா? 

இருபது எண்ணிக்கைகளுக்குள் இருக்கும் நூல்கள் மொத்தமும் போர்வை, படுக்கை விரிப்புகள் முதல் தொடங்கி பள்ளி ஆடைகள், மற்ற கனமான ஆடை வகைகள் என்று வரிசையாக விதவிதமான உள் அலங்கார துணிகள் வரைக்கும் மாற்றம் பெறுகின்றது.  பெரும்பாலும் உள்நாட்டுச் சந்தையை சார்ந்து இருப்பதும், கைத்தறி, தறி ஓட்டுபவர்கள் என்று தொடங்கி இந்த நூல்களை நம்பி திருப்பூர், அவிநாசி, பல்லடம், அன்னூர், சோமனூர், ஈரோடு, பவானி, பள்ளிபாளையம், திருச்செங்கோடு,சென்னிமலை ,கரூர், குமாரபாளையம் மற்றும் இதைச் சார்ந்து சுற்றியுள்ள அத்தனை பகுதிகளும் என்று ஏறக்குறைய சேலம் வரைக்கும் பல லட்சக்கணக்கான குடும்பங்களின் ஜீவாதார வாழ்க்கையே இதை நம்பித்தான் இயங்கிக் கொண்டுருக்கிறது.  ஆய்த்த ஆடைகள் போல் இந்த உலகத்தில் மெத்தப் படித்தவர்கள் எவரும் இல்லை.  மேலாண்மை கல்வியைப் பற்றிக்கூட எதுவும் தெரியாது.  உழைத்தே ஆக வேண்டிய சூழ்நிலை.  டகடக என்ற சப்தம் அந்தியூர் வரைக்கும் நீங்கள் போனால் உங்கள் காதில் அந்த நடு இரவில் கூட ஒலித்துக் கொண்டே இருக்கும்.  

20 முதல் 60 எண்ணிக்கை வரைக்கும் உள்ள நூல்கள் ஆய்த்த ஆடைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.  20,24,25,30,34,40,45,50,60 வரைக்கும் என்று உங்கள் குடும்பத்தினர் விரும்பும் அத்தனை ரக ஆடைகளின் விருப்பங்களும் இங்கிருந்து தான் தொடங்குகிறது.  சமூகத்தில் உள்ள ஏழை மற்றும் பணக்காரன் என்பது போல் இந்த நூல்களிலும் CARDED மற்றும் COMED  என்று இரண்டு வகையாக பிரிக்கிறார்கள்.  குறைவான தரத்திலுள்ள பஞ்சின் மூலமாகவும், நல்ல தரமான பஞ்சின் மூலமாகவும் இந்த இரண்டு வகைகளும் நமக்கு கிடைக்கிறது.  திருவாளர் நடுத்தர வர்க்கம் போலவே இங்கும் ஒரு அரைக்கிறுக்கன் உண்டு.  அவர் பெயர் தான் SEMI COMED.  ஏறக்குறைய இடுகையில் உலவும் அனானியார்கள் போல. 

ஒரு வருடத்திற்கு முன்பு 20 வகை நூல் ஒரு கிலோ நூறு ரூபாய் இருந்தது.  இப்போது அதன் விலை 180 வரைக்கும் உயர்ந்து உள்ளது.  அப்படி என்றால் தயாரிக்கும் ஆடைகளின் விலையும் உயர்ந்து இருக்க வேண்டுமே? என்று நீங்கள் கேட்டால் விபரம் புரியாதவர் என்று அர்த்தம்.  அடுத்த நாடுகளின் அடிதடி போட்டிகளில் இறக்குமதியாளர்கள் கொடுக்கும் விலை என்பது வீழ்ச்சி என்ற வார்த்தையை விட வேறு எதுவும் இருக்குமா என்று தேடித் தான் கண்டு பிடிக்க வேண்டும்.  மற்ற நாடுகளுக்குச் செல்பவர்கள் அவர்கள் இறுதியாக கொடுக்கும் அல்வாவை வாங்கிக்கொண்டு மறுபடியும் அடுத்த பருவம் தொடங்கும் போது திருப்பூருக்கே வந்து விடுவார்கள்.  வந்து கொண்டும் இருக்கிறார்கள். உள் நாட்டில் உள்ள தலைவர்கள் செய்யும் அடாவடியால் பாதிப்படையும் இந்த தொழிலுக்கு மற்றொரு சவாலும் உண்டு.  புரியாத விளையாட்டான வெளிநாட்டு வர்த்தக பண மதிப்பு ஏற்ற இறக்கத்தினால் தற்கொலைக்கு அருகில் சென்றவர்கள் பல பேர்கள்.

ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த தொழிலில் எதுவும் வீணாகிப் போய்விடுவதில்லை.  நூற்பாலைகளுக்கு வரும் பஞ்சு நூலாக மாறும் போதும் உருவாகும் கழிவுப் பஞ்சுகள் வேறொரு பயணத்தை தொடங்குகிறது. குறைந்த எண்ணிக்கை உள்ள நூல்களுக்கு (LOW COUNTS) உதவுகின்றது.  இதை தயாரிக்கும் குறு ஆலைகளுக்கு ஓ.இ என்று (OPEN END MILLS) என்று அழைக்கிறார்கள். தறிகள் ஓடும் போது கவனித்துப் பாருங்கள்.  மேலே ஒன்று குறுக்கே ஒன்று என்று இரண்டு நூல்கள் நடத்தும் பரதநாட்டியத்தின் மூலம் ஒரு புதிய ஆடை கலையை அற்புதமாக அரங்கேற்றிக் கொண்டுருக்கும்.  அந்த நூல்களை வார்ப் (WARP) வெப்ட் (WEPT) என்கிறார்கள்.  தறியில் மாற்றி ஓட்டினால் ஓட்டுபவரின் ஜாதகமும் மாறிப்போய்விடும்.

தரமான பஞ்சை குறி வைத்த வெளிநாட்டினருக்கு இதன் மேலும் ஆசை வந்தது.  அப்புறமென்ன? இங்கு நிறைவேற்றி வைக்க ஆள் இருக்க கழிவுப் பஞ்சும் கடல் கடக்கத் தொடங்கியது.  விசைத்தறியாளர்களின் வாழ்க்கையும் ஜலதரங்கம் போட்டு நாட்டியமாடத் தொடங்கியது. இதனை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டுருக்கும் வெள்ளக்கோவில், உடுமலை, பல்லடம், சோமனூர் மக்கள் வாழ்க்கையும் திண்டாடத் தொடங்கியது. ஒரு ஆண்டுக்கு உள்நாட்டு உற்பத்திக்கு தேவைப்படும் நூல்களின் கணக்கு எத்தனை கிலோ என்ற கணக்கை தெரிந்து கொள்ள விரும்பாத மத்திய அரசாங்கம் செய்த வேலை என்ன தெரியுமா?   "ஐயாமாருங்களா.... யார் யாரெல்லாம் வெளிநாட்டுக்கு நூல் ஏற்றுமதி செய்ய விரும்புகிறீர்கள்?  உடனடியாக பதிவு செய்யுங்கள்" என்று அறிக்கை விட மொத்த வண்டவாளமும் தண்டவாளத்தில் ஏறத் தொடங்கியது.

பருத்தி விளைவித்தல், பயன்பாடுகளில் உள்ள வேலைகள், ஏற்றுமதி, இது தொடர்பான வர்த்தகம், பருத்தியை பதப்படுத்துதல் போன்ற இந்த துறைகளில் மட்டும் இந்தியாவில் நேரிடையாக மறைமுகமாக ஐந்து கோடி மக்கள் இருக்கிறார்கள். பருத்தியை வைத்து பயன்படுத்தும் தொழில் என்பதில் உலகளவில் இந்தியாவின் பங்களிப்பு மட்டும் 17 சதவிகிதமாக இருக்கிறது. ஆனால் பருத்தி முதல் நூல் வரைக்கும் உள்ள தொழிலில் இடைத்தரகர்கள் தான் அதிக வளமாய் வாழ்க்கிறார்கள். உழைத்தவன் எப்போதும் கிழக்கு பக்கமாக நின்று காலை சூர்யநமஸ்காரம் செய்ய வேண்டியது தான்.

1,596 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,10,885 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்ய தயாராய் இருக்கிறோம் என்று முண்டியடித்துக்கொண்டு நூற்பாலை அதிபர்கள் வரிசையில் போய் நின்று பதிந்து காத்து இருக்கத் தொடங்கினர். இதற்காக மும்பையை தலையிடமாகக் கொண்டு அவசரம் அவசரமாக பத்து பதிவு மையங்கள் உருவாக்கப்பட்டது. உள்ளுரில் நூலை விற்று மொத்த பணமும் வருமா? இல்லை காந்தி கணக்கா என்று பயந்து காத்துக்கொண்டுருக்கும் நூற்பாலை முதலாளிகள் நாட்டுக்கு சேவை செய்கிறோம் என்று தயாராய் இருப்பார்களா? 

தொடர் மின் வெட்டால் ஏற்கனவே ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்து இரண்டு மடங்கு செலவு செய்து அக்கப்போர் வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு மத்திய அரசாங்கம் காட்டியது பச்சை விளக்கென்பது கலங்கரை விளக்காக காட்சி அளித்தது. ஏற்கனவே பஞ்சு ஏற்றுமதியினால் பாதிப்பு ஒரு பக்கம்.  நூல் ஏற்றுமதியால் மறுபக்கம். நடுவில் திண்டாடி திக்குத் தெரியாத திசையில் மாட்டிக் கொண்டவர்கள் இந்த தொழிலை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டுருக்கும் குறு சிறு முதலாளிகளும் தொழிலாளிகளும். இந்தியாவில் சிறிய பெரிய என்று ஏறக்குறைய 3,300 நூற்பாலைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் திண்டுக்கல், வேடசந்தூர், உடுமலை,  கோயமுத்தூர் பகுதிகளில் தான் மிக அதிக அளவில் இந்த நூற்பாலைகள் இருக்கின்றன.  கடன் மூலமாகவே நடத்தப்பட்ட பஞ்சு மற்றும் நூல் தொழில்கள் இப்போது காசோலை, வரைவோலைகள் என்பதெல்லாம் தாண்டி இப்போது வங்கி மூலமாக RDGS என்று நேரிடையான பணமாற்றம் வரைக்கும் கொண்டு வந்து விட்டுள்ளது.

கை நிறைய பணம் இருக்க வேண்டும்.  ஆனால் போட்ட முதல் திரும்பி கைக்கு வருமா என்று தெரியாது. காரணம் உற்பத்தி செய்து முடித்துருக்கும் வேலையில் என்ன மாறுதலை அரசாங்கம் உருவாக்கியிருக்கும்? சந்தைப் பொருளாதரத்தின் ஏற்ற இறக்கம் என்பது எவ்வாறு ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பை உருவாக்கியிருக்கும் என்பது எவருக்கும் தெரியாது. இதற்கெல்லாம் மேல் இறக்குமதியாளர்கள் இருக்கும் நாட்டில் எந்த அக்கப்போரும் நடக்காமல் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் இந்தியப் பகுதியில் இயங்கும் நூற்பாலைகளுக்கு ஆண்டுக்கு 90 லட்சம் பேல் பருத்தி தேவை.  இருந்தால் தான் முழுமையான வேலை நேரத்தை தொழிலாளர்களுக்கு நூற்பாலைகளால் கொடுக்க முடியும். ஆனால் விளைந்த பருத்தியின் அளவு 25 லட்சம் பேல்கள் மட்டுமே. ஆனால் தமிழ்நாட்டில் விளைந்த பருத்தி தரமாகவும், அதிக அளவும் கிடைத்த காரணத்தால் விவசாயிகளுடன் நூற்பாலைகளும் மகிழ்ச்சியில் இருந்தனர். தேவை அளவுக்கு ஈடுகட்ட முடியாவிட்டாலும் ஏற்றுமதியை நிறுத்தியிருந்தால் எத்தனையோ நல்லது நடந்து இருக்கும்.

அரை நிர்வாண பக்கிரி என்ற பெயரைப் பெற்ற மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி  யை இங்கிலாந்து மன்னர் வரவேற்று உள்ளே அழைத்துச் செல்லும் அளவிற்கு அவருடைய ஆளுமை அன்று கடல் தாண்டி கொடி கட்டிப் பறந்தது.  அவர் அப்போது உடுத்தியிருந்த ஆடை என்பது மானத்தை மறைக்க மட்டுமே. இன்றைய அரசியல்வாதிகள் போல கொளுத்தும் வெயிலில் கூட கோட் சூட் போட்டுக் கொண்டு கணவான் போல் காட்சியளிக்கவில்லை.  அவரின் தரமே அங்கு ஒரு தராதரத்தை உருவாக்கியது. காந்தி கதர் கிராம சர்வோதய சங்கம் என்று சாலையில் செல்லும் வழியில் நீங்கள் பார்த்து இருக்கலாம்.  கதர் என்பது உங்களுக்கு வேண்டாத ஆடையாக, கௌரவம் குறைச்சலானதாக இருக்கலாம்.  ஏறக்குறைய அரசாங்கமும் இவர்களை அப்படித்தான் நடத்துகிறது.  மற்றவர்களின் மானத்தை மறைக்க உழைக்கும் நெசவாளிகளின் வாழ்க்கையை அரசாங்கம் கடந்து மூன்று ஆண்டுகளாக உண்டு இல்லை என்று படுத்தி எடுத்துக் கொண்டுருக்கிறது.  உற்பத்தி செய்யப்படும் கதர் துணிகளுக்கு 20 சதவிகிதம் தள்ளுபடி அரசாங்கத்தால் வழங்கப்பட்டு அந்த தொகையை மானியமாக வழங்கப்படும். ஆனால் இந்த மானியம் தேவையில்லை என்று மத்திய அரசாங்கம் முடிவு எடுத்ததோடு, 2007 ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய மானியத் தொகையையும் தராமல் இழுத்தடித்துக்கொண்டு மெது மெதுவாக உழைப்பவர்களின் வாழ்க்கை நிலையை இருட்டுக்குள் தள்ளிக்கொண்டு இருக்கிறது. 

கடந்த மே மாதம் நம்முடைய நிதியமைச்சர் பிராணப் முகர்ஜி தலைமையில் கூட்டப்பட்ட உணவு பாதுகாப்புச் சட்டத்திற்கான கூட்டம் கூட்டப்பட்டது.  அப்போது சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி சொன்ன ஒரு வாசகத்தைப் படித்து நாம் நல்ல தலைவர்களை பெற்ற இந்தியர்கள் என்ற விதத்தில் பெருமை கொள்ளலாம்.

2005 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் உள்ள ஏழைகளின் எண்ணிக்கை 37 கோடி.  இது 2011 ஆண்டு 40.5 கோடியாக உயரும்.

இவர்கள் மக்களுக்ககாக என்று சொல்லிக் கொண்டு புதிதாக எந்த திட்டங்களையும் கொண்டு வரத் தேவையில்லை, உள்ளே இருக்கும் அடிப்படை வளத்தை இவர்களின் சுயலாபத்துக்காக ஏற்றுமதி செய்யாமல் இருந்தாலே போதுமானது. இயல்பாகவே இந்தியா நிஜமான வல்லரசு ஆகி விடும். 

26 comments:

  1. மிகவும் ஆழமான, விரிவான கட்டுரை. ஒரு தொழிற்சாலை உள்ளே சென்று பார்த்த உணர்வைத் தந்தது. அதன் கஷ்டங்களும் புரிந்தது. மின்வெட்டு ஒரு பெரிய பிரச்சினை. பார்போம். திருப்பூர் இல்லை என்றால் வேறு ஊரில் ஓட்டு இருக்குமே. கவலையில்லை.

    அப்புறம், திருப்பூரில், டி-ஷர்ட்கள் எல்லாம், எடை போட்டு விற்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையா ?

    ReplyDelete
  2. 2005 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் உள்ள ஏழைகளின் எண்ணிக்கை 37 கோடி. இது 2011 ஆண்டு 40.5 கோடியாக உயரும்.///

    அரசு TARGET வைத்துள்ளதா. நாட்டிலுள்ள ஏழைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று.///

    "சின்ன நூல் கண்டா நம்மை சிறைப்படுத்துவது" என்று எழுத்தாளர் சிவசங்கரி முன்பு ஒரு நூல் எழுதி இருந்தார். உங்கள்
    தலைப்பை பார்த்ததும்அந்த நூல் ஞாபகம் வந்தது.///

    மெது மெதுவாக உழைப்பவர்களின் வாழ்க்கை நிலையை இருட்டுக்குள் தள்ளிக்கொண்டு இருக்கிறது.

    இது எங்கே போய் முடியும். ///

    ஆன்லைன் வர்த்தகத்தின் காரணமாக ஒவ்வொரு தொழிலையும் குழி தோண்டி புதைப்பதில் குறியாக உள்ளது அரசு.

    ReplyDelete
  3. தலைவரே,
    அருமையான தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி,நான் விடுமுறையில் குனால் என்னும் ஸ்பிண்டில் செய்யும் கம்பெனி அம்பத்தூரில் இருந்தது,அங்கே ஹவுஸ்கீபிங் செய்திருக்கிறேன்.அவை முழுக்க திருப்பூர் சப்ளை என கேட்டிருக்கிரேன்.

    உள்ளே இருக்கும் அடிப்படை வளத்தை இவர்களின் சுயலாபத்துக்காக ஏற்றுமதி செய்யாமல் இருந்தாலே போதுமானது. இயல்பாகவே இந்தியா நிஜமான வல்லரசு ஆகி விடும்.

    சரியான முடிவு.
    அரிய கனிமங்கள் கொண்ட பூமியை அங்கு வசிக்கும் ஏழைகளை காலிசெய்யவைத்து எலக்‌ஷன் செலவுக்கு பணம் எடுக்கும் அந்நிய ஏடிஎம் மெஷின்களுக்கு தாரை வார்க்கின்றனர்.

    இவரின் இந்த கட்டுரையை படித்தால் மகிழ்வேன்.,
    http://vijayarmstrongcinematographer.blogspot.com/2010/06/blog-post.html

    உங்களின் ஊக்கம் இவருக்கும்தேவை.

    ReplyDelete
  4. என்ன ஆழமான கட்டுரை? உங்கள் உழைப்புக்கு மிக்க நன்றி!

    கதிர்களைப் பார்த்ததும் எனக்குப் பழைய நினைவுகள்... இழை உருளிகளும் கதிர்களும் படைத்த கைகள் அல்லவா எம் கைகள்??

    ReplyDelete
  5. அருமையான இடுகை !!!

    ReplyDelete
  6. நன்றி ரவி
    மணிவாசகம் மனதில் கொசுவர்த்தி சுருள் சுழன்று கொண்டுருக்கும் போல(!)...... நன்றி,

    என்னுடைய வகுப்புத் தோழன் கோவிந்தராஜன் இப்போது தென்னக ரயில்வேயில் உயர் பதவியில் இருக்கின்றார். கார்த்திக் உங்களைப் போலவே அவனும் இந்த பதவிக்கு முன்னால் அம்பத்தூரில் 150 ரூபாய் சம்பளத்துக்கு பட்ட கஷ்டம் நான் அறிந்ததே.

    உங்கள் முன்னால் வாழ்க்கையும் ஏறக்குறைய அத்தனை தடைகளையையும் தாண்டி வந்தது போல் இருக்கிறது.

    ReplyDelete
  7. இரண்டு ரமேஷ்களுக்கும் நன்றி.

    எழுத்தாளர் சிவசங்கரிக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு.

    திருப்பூர் T shirt எடை போட்டா? பழைய ஓதுக்கப்பட்ட பொருட்களுடன் சில சமயம் தரம் குறைவான துணிகள் அவ்வாறு எடை போட்டு பார்த்து இருக்கின்றேன். ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி டி சர்ட்டுடன் மொத்தப் பொருட்களையும் எடைக்குப் போட்டு விட்டு துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடக்கூடிய நிலைமை வராது இருக்கும் மத்திய அரசாங்க காவல் தெய்வ பூசாரிகளை வேண்டிக்கொள்வோம்.

    ReplyDelete
  8. அருமையான இடுகை.

    வாசித்து முடித்ததும்மனம் கனத்ததென்னவோ உண்மை.

    கொரட்டி(கேரளா)யில் நாங்கள் இருந்தபோது(அது ஆச்சு 35 வருசம்) அக்கம் பக்கத்து வீட்டுத் தம்பதிகள் அனைவரும் வேலை செய்துவந்தது மதுராகோட்ஸ் நூல் பிரிவில்தான். இங்கே அதை ஜமுனாகோட்ஸ் என்று சொல்வார்கள். அப்போது நூல்களைக் கதிரில் ஏற்றும்போது அறுந்துபோனால் ஒருவிதமான் முடிபோட்டு அதை இணைப்பார்கள் என்று சொல்லி அதை எனக்கும் சொல்லிக்கொடுத்தார்கள். அது இன்றுவரை துணி தைக்கும்போது பயன்படுகிறது.

    அந்த கம்பெனி மூடப்பட்டது என்று கேள்வி:(

    நூல் என்றதும் மனம் எங்கெல்லாமோ போய்விட்டது.

    ReplyDelete
  9. அடுத்த திருப்பூர் தொழில்கள் வரலாறா...ஆச்சரியமாய் இருக்கிறது...உங்கள் உழைப்பு....எழுதுங்க..எழுதுங்க...

    ReplyDelete
  10. மிக விரிவான இடுகை.நிறைய் விஷயங்கள் தெரிந்துக் கொள்ள முடிந்தது.நன்றி...

    ReplyDelete
  11. வணக்கம் டீச்சர். நீங்கள் நூலாசிரியராக மாறி கலக்கிக்கொண்டுருக்கிறீர்கள். இங்கு பின்னலாடைகளுடன் விழும் முடிச்சை அவிழ்த்துக்கொண்டுருக்கின்றேன்.

    கண்ணகி, திருப்பூர் தொழில்கள் வரலாற்றை சொல்லத்தான் நினைக்கின்றேன். நன்றி.

    மிக நல்ல எழுத்தாற்றல் உள்ள அமுதா கிருஷ்ணன் உங்கள் தொடர் வாசிப்புக்கு நன்றி.

    ReplyDelete
  12. உங்கள் கருத்து முற்றிலும் சரியே.

    ஜவுளி துறையின் இந்த தள்ளாட்டதுக்கு அரசின் கொள்கைகளே காரணம். அமெரிக்க டாலர் சில ஆண்டுகளுக்கு முன் வீழ்ந்த பொழுது (சாதாரண தள்ளாட்டம் இல்லைங்க, கிட்ட திட்ட 20 % சதவிதீம்) இதே அரசாங்கம் தான் Packing Credit கடனுக்கான வட்டியை முறை படுத்தியும், அதற்க்கு மேலே Interest subvention குடுத்தும் ஏற்றுமதியாளர்களை காப்பாற்றியது. நம்மை விட சிறிய இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகள் நமக்கு கடும் போட்டியை தரும் இந்த வேளையில், அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. அதே போல பதுக்கலும் ஒரு காரணம் என்பது என்னோட கருத்து.

    (ஒரு சின்ன திருத்தம்: அது RDGS அல்ல. RTGS . Real Time Gross Settlement என்பதின் சுருக்கம் ஆகும்)

    ReplyDelete
  13. யுவராஜ்

    பூகம்பத்திற்குப் பிறகு பூ போல் வந்தமைக்கு நன்றி.

    பதுக்கல் உண்மை தான். RTGS மிகச் சரியே. நன்றி.

    ReplyDelete
  14. பின்னோக்கி யோசித்தால், முன்னெல்லாம் நூற்பாலைகள் தங்களின் மாதாந்திர மின்கட்டண பாக்கியைச் செலுத்துவதற்கு, நூல் மூட்டையை என்ன விலைக்கு வேண்டுமானாலும், தரத் தயாராய் கெஞ்சி நிற்பார்கள்.

    இப்போது நூலுக்கான மொத்தத் தொகையை வங்கி வரைவோலை எடுத்துக் கொண்டு, நூற்பாலைகள்/முகவர்களின் வாசலுக்கு சென்று கொடுக்க வேண்டியதிருக்கிறது. அதுவும், ஒரு மாதத்திற்கு பிந்தைய நூல் விநியோகத்துக்கு. :(

    ReplyDelete
  15. ரமேஷ் ரெண்டு நாளைக்கு முன்னால் ஒரு நிறுவனத்தில் நடந்த சமாச்சாரம். 100 பைகளுக்கு தேவையான மொத்த பணத்தையும் கொடுத்து விட்டு எங்கேப்பா பை? என்றால் நேற்று கொடுத்த விலையில் தர முடியாது. இன்று பத்து ரூபாய் அதிகம், கொடுத்தால் தருகின்றேன். இல்லாவிட்டால் பணத்தை திருப்பி வாங்கிக் கொள்ளுங்கள் என்றாராம்?

    ReplyDelete
  16. தோழர் ஜோதிகணேசன்-

    நூல் கண்டை வைத்து ஒரு சிக்கலில்லாத சிறப்பான பதிவு, வாழ்த்துக்கள். ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் பணிபுரிந்துவிட்டு 2 தினங்களுக்கொரு முறை இடுகையும் விரிவாக எழுத முடிந்துவிடுவது கண்டு வியப்பாக உள்ளது, குறிப்பாக வலைதளத்தில் தமிழ் வளர்ந்துள்ளது. பலருக்கு பல செய்திகள் போய்ச் சேருகிறது. ஒவ்வொரு இடுகை மூலமும் ஒரு message செய்தியை பதியவைக்கும் சிறப்பும் தங்களின் பதிவுகளில் பார்க்க முடிகிறது,

    "இவர்கள் மக்களுக்ககாக என்று சொல்லிக் கொண்டு புதிதாக எந்த திட்டங்களையும் கொண்டு வரத் தேவையில்லை, உள்ளே இருக்கும் அடிப்படை வளத்தை இவர்களின் சுயலாபத்துக்காக ஏற்றுமதி செய்யாமல் இருந்தாலே போதுமானது. இயல்பாகவே இந்தியா நிஜமான வல்லரசு ஆகி விடும்."

    எனக்கு அடுத்த வாரம் முழுவதும் வெளியூர் பயணங்கள் உள்ளது, அதனால் எனது வலைதளத்தில் அடுத்த பதிவு இம்மாத இறுதியாகிவிடும் என நினைக்கிறேன். சித்திரகுப்தன்

    ReplyDelete
  17. சித்திரகுப்தன்........

    புரிந்துணர்வோடு தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. அலுவலக பணி நிமித்தமாக தமிழ்நாடு முழுக்க சுற்றி வந்தாலும் விடாமல் என் எழுத்தை தொடரும் உங்கள் அன்புக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. இன்றைய நிலையில் இந்த தொழிலை காப்பார் யாரும் இல்லை... அப்படியே காத்தாலும் அதை வைத்து பாடம் கற்று பிழைப்பார் யவரும் இல்லை...

    ReplyDelete
  19. தமிழ் உதயன்

    பாடம் கற்று பிழைப்பார் யாருமில்லை.

    உண்மையும் கூட.

    ReplyDelete
  20. மிக மிக அருமையான கட்டுரை ஜோதிஜி ..என் நண்பர்கள் இருவர் இந்தத் தொழிலில் இருக்கிறார்கள் அவர்கள் சொல்லும் போதெல்லாம் விளங்காதது இப்போது நீங்கள் சொல்லும் போது விளங்கி விட்டது..அவர்களிடம் சொன்ன போது சந்தோஷப் பட்டார்கள்

    ReplyDelete
  21. தேனம்மை உரையாடும் போது இந்த ரகஸ்யத்தை ஒளித்த காரணம் என்ன? உணர்வு பூர்வமாய் இந்த தொழிலில் இருப்பவர்களுக்கு இது வெறும் எழுத்தல்ல. ரத்த காயங்கள். சீக்கிரம் ஆறி விடும். கவலைப்படாதீர்கள்.

    ReplyDelete
  22. ஜோதிஜி ரொம்ப ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க

    எனக்கு இதைப்படித்த பிறகு பல விஷயங்கள் புரிந்து கொண்டேன். தொடர்ந்து சிறப்பாக எழுத என் வாழ்த்துக்கள்

    இத்தனை விஷயம் எப்படித்தான் எழுதறீங்களோ! கலக்கங்க

    ReplyDelete
  23. உங்கள் அக்கறைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி கிரி.

    ReplyDelete
  24. அருமையான‌ ப‌திவு.இந்த‌ விப‌ர‌ங்க‌ள் எல்லாம் என‌க்கு புதுசு.

    ReplyDelete
  25. அன்புடன் ரமணனிடமிருந்து....
    தேவியர் இல்லம் வலப்பூவில் தங்கள் எழுத்துக்களைப் படித்துவருகிறேன். நெசவுத்தொழில் பிரச்சனை பற்றிய கட்டுரை
    சிறப்பாக இருந்தது. இந்த பிரச்சனை பற்றி தமிழ் பத்திரிகை ஒன்றில் சிறிய அளவில் எழுதவிருக்கிறேன். விசைத்தறியிட்டு இப்போது பாதிக்கபட்டிருக்கும் ஒரு சிறுநெசவாளி/குடும்பம் பற்றிய விபரம் தேவைப்படுகிறது. உதவ முடியுமா? படங்களுடன் சிலவிபரங்கள் கிடைத்தால் நல்லது அல்ல்து தொடர்பு கொள்ள வேண்டியவர்களை பற்றி தெரிவியுங்கள்.
    நன்றி
    அன்புடன்
    ரமணன்

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.